பழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழின் தொன்மை – 61தமிழிசைப்பண்கள்

உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 61

பழந்தமிழிசையில் பண்கள்

“பண்ணும்பத மேழும்பல வோசைத் தமிழவையும்
உண்ணின்றதொர் சுவையுமுறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம் மிழலையே”

(பண் : நட்டபாடை, திருஞானசம்பந்தர்)பொழிப்புரை:
இசையும், அதற்கு அடிப்படையான ஏழு சுரங்களும் வல்லோசை, மெல்லோசை முதலியனவற்றையுடைய தமிழும் உள்ளத்துணர்வாகிய சுவையும், பொருந்திய தாள வேறு பாட்டு ஒலிகளும், மண், புனல், உயிர், காற்று, நெருப்பு, சூரியன், சந்திரன், விண் ஆகிய எண்வகை வடிவங்களும் ஆகிய இறைவனது இடம் திருவீழிமிழலை.

* தமிழ் மொழி பக்தி மொழி. உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ்.

* சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங் காலமாகப் பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.

 * தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை என்பதே தமிழின் தனிசிறப்பு.

* வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் “தமிழ்’ எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு விழித்தனர்.

“விட்டுச் சித்தன் விரித்த தமிழ்,
தேனாரின் செய்தமிழ்,
சொல்லில் பொலிந்த தமிழ்,
சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ்,
கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ்,
நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ்,
சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ்,
நா மருவு தமிழ், பாவளருந் தமிழ்,
இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ்,
நற்றமிழ், நல்லிசைத் தமிழ்,
ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்”
எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பனவாகும்.

* நமது நாட்டிற்குச் “செந்தமிழ் நாடு’ என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் “செம்மை’யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

* ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’, தமிழ், தமிழ் எனக் கூற அது “அமிழ்ந்து’ என ஒலிக்கும்

“தமிழுக்கும் அமுதென்று பேர்;
அது எங்கள் உயிருக்கு நேர்” எனவும் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.

தமிழர் வழிபாட்டு முறையை இசையிலிருந்து பிரிக்க முடியாது என்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாத சேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராசஇராச சோழனின் பெரு முயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டளவில் வெளிக் கொணரப்பட்டவையே.

அவற்றில் பண்ணிசை ஏதென்று அறியாத பதிகங்கள் இருக்கக் கண்டு, அச்சோழன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த மதங்க சூளாமணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படிப் பணிக்க, அவர் வரையறுத்தப் பண் வரிசையிலேயே அவைகள் இன்றும் பாடப்படுகின்றன.

பத்து பத்தாகப் பாடல்களைப் பாடும் பதிகங்கள் என்ற முறையின் முன்னோடியாகச் சொல்லப்படுபவர் காரைக்காலம்மையார் என்று போற்றப்படும் புனிதவதியார். இவர் பாடிய பதிகங்கள் “மூத்த திருப்பதிகங்கள்” என்று அழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்த காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும். இவர் தெய்வத்தைப் பண்ணிசையில் பாடி வழிகாட்டினார்.

இவரைத் தொடர்ந்து சைவ சமயத்தின் நான்கு தூண்களாக சொல்லப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களில் முதல் மூவர் பல பதிகங்களைத் தமிழ்ப்பண்ணிசையில் பாடியிருக்கின்றனர்.

தேவாரப்பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராசராச சோழன் தொடங்கி பல அரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட ஓதுவார் என்னும் இசைக்கலைஞர்களை நியமித்தனர். இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது.

சைவ நாயன்மார்களால் தமிழ் இசை முறைப்படி தேவாரப் பாடல்கள் காலந்தோறும் இசைக்கப்பட்டன.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறு இசைக்கருவியோடு இணைந்து அமைந்தது ஆகும்.

கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம் ஓதப் பெற்றததையும் தஞ்சைப் பெரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.

பிற்காலத்து அருணகிரி நாதர் தம் திருப்புகழ் முழுவதாயும் பல்வேறு சிவத்தலங்களில் இசைமழைப் பொழிந்து கொட்டியதை அவர்தம் திருப்புகழ் வரலாறு எடுத்துரைக்கிறது.

திருநாவுக்கரசர் அருளியத் தமிழ்ப் பதிகமான தேவாரத்தில் அதிகமாக இருபத்தொரு பண்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. சிலர் இருபத்துநான்கு என்றும், இன்னும் சிலர் இருபத்தேழு என்றும் கூறுகின்றனர்.

எப்படியாயினும் தேவாரம் முழுதுமே ஒரு முறையான பண்ணிசை வரிசையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஒன்பதாவது திருமுறையில் சொல்லப்படும் “சாளராபாணி” என்னும் பண் மற்ற திருமுறைகளில் பயன்படுத்தப்படவில்லை.

இசைத்தமிழ் தெய்வத்தமிழாக இக்காலத்தில் வளர்ந்துள்ளது. அருளாளர்கள் பலர் தோன்றி இறைவனை இசைத்தமிழால் வழிபாடு செய்த காலம் பாசுரக் காலம் என்று அழைக்கப் பெறுகிறது.

முதல் பகுதியில் சைவ சமய அருளாளர்கள் இடம் பெறுகின்றனர். இவர்கள் பாடிய பாடல்கள் தொகுப்பு திருமுறைகள் என்று அழைக்கப் பெறுகின்றன.

இவை பன்னிரண்டு ஆகும். இவைகளில் 11 ஆம் திருமுறைகள் வரையுள்ளனவற்றே நம்பியாண்டார் நம்பி அவர்கள் தொகுத்துள்ளார்.

12ஆம் திருமுறையாகச் சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம் இடம் பெற்றுளது.

இசைத்தமிழில் பெரிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த இசைப்பாடல்கள் இக்காலத்தில் தோன்றின. இன்றும் இவை இசைக்கப் பெற்று வரும் பாடல்களாக உள்ளன.

திருமுறை பாடிய அருளாளர்கள் 27 ஆவர். பாடிய பாடல்கள் 18326. இவர்களுள் காலத்தால் முன் வாழ்ந்தவர்களாக காரைக்கால் அம்மையாரும் திருமூலரும் உள்ளனர்.

காரைக்கால் அம்மையார் காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டாகும். இவ்வம்மையாரின் காலம் முதல் பாசுரக் காலம் தொடங்குகிறது. இவரே தெய்வத்தமிழிசை பாடிய முதல் இயலிசைப் புலவராக உள்ளார்.

இவர் பாடிய இரண்டு பதிகங்கள் மூத்தத்திருப்பதிகங்கள் என்று பெயரிடப் பெற்றுள்ளன.

1. நட்டபாடைப் பண்ணிலும்,
2. இந்தளப் பண்ணிலும் அமைந்துள.

இப்பண்களே ஒன்றாம் இரண்டாம் திருமுறைகளின் தொடக்கப் பண்களாக உள.

பண்ணோடு அமைந்த பாடல்களின் முன்னோடியாகவும், பதிக அமைப்பின் முன்னோடியாகவும் இவரின் திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகங்கள் உள.

பண் சுமந்த பாக்கள் பாடும் மரபில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பதிகங்கள் தோறும் தொடர்ந்து வருகின்றன.

இவர்களைத் தொடர்ந்து இன்றுவரை ஏராளமான இயலிசைப் புலவர்கள் தமிழில் தோன்றி வருகின்றனர்.

ஏழிசை அலகுகளின் தமிழ் பெயர்களைத் துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி என்று அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிதம் என்கிற 12 இசைக் கருவிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

இவரைத் தமிழிசை உலகம் தென்னக இசையின் தாய் என்று போற்றுகிறது. தென்னக இசையின் மறுபெயர் கருநாடக இசை என்பதாகும். (இது தனி ஆய்விற்குரியது).

திருமூலரின் திருமந்திரம் ‘பண்ணகத்தின்னிசை பாடல் உற்றோனே’ என்று இறைவனைக் குறிப்பிடுகின்றது. இந்நூலுள் இறைவன் நிகழ்த்திய திருக்கூத்துத் தரிசன நிலை சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளன.

தேவார மூவர்
திருஞானசம்பந்தர் (கி.பி. 635 – 651)
திருநாவுக்கரசர் (கி.பி.575-656)
சுந்தரர் (கி.பி.690-708) உள்ளனர்.

இவர்கள் பாடிய பாடல்கள் பண்முறையிலும் யாப்பு முறையிலும் நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப் பெற்றுள்ளன. இவையனைத்தும் பண்சுமந்த பாடல்களாகும்.

திருஞானசம்பந்தர் (கி.பி. 635 – 651)

சம்பந்தர் பாடிய பதிகங்களுள் இன்று வரை கிடைத்துள்ளவை 386 பதிகங்களாகும். இவை 22 பண்களில் அமைந்துள.

யாழ் மூரியையும் பண்ணாகச் சிலர் கணக்கிடுவர். இதனையும் சேர்ப்பின் 23 பண்களாகும். யாழ்மூரி என்பது பண் பெயரல்ல பதிகப் பெயராகும்.

ஞானசம்பந்தர் இப்பதிகங்களை 221 தலங்கள் மீது பாடியுள்ளார். பழைய கணக்கீட்டின் படி 384 பதிகம் 219 தலங்கள் என்பர்.

புதிதாகக் கிடைக்கப் பெற்ற இரு தலங்களையும் சேர்த்தால் 386 பதிகங்கள் 4180 பாடல்கள் 229 தலங்கள் என்று கணக்கிடலாம்.

இவை பண்முறையால் முதல் மூன்று திருமுறைகளாக அமைக்கப் பெற்றுள்ளன.

நட்ட பாடையில் தொடங்கி யாழ்மூரியில் முதல் திருமுறை முடிகிறது.

இந்தளப் பண்ணில் தொடங்கி செவ்வழிப் பண்ணில் இரண்டாம் திருமுறை முடிவடைகின்றது.

மூன்றாம் திருமுறை காந்தார பஞ்சமப் பண்ணில் தொடங்கி அந்தாளிக் குறிஞ்சிப் பண்ணில் முடிகிறது.

இவையனைத்தும் பாடும் முறைகளுக்கேற்ற வகையில் கட்டளைகளைப் பெற்றுள.

திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைத் திருமுறையாக வகுத்தவர்கள் பண் அடிப்படையில் முதல் மூன்று திருமுறைகளாக வகுத்தனர். இவை பின்வருமாறு:

முதலாம் திருமுறை
நட்டபாடை 1-22
தக்கராகம் 23-46
பழந்தக்க ராகம் 47-62
தக்கேசி 63-74
குறிஞ்சி 75-103
வியாழக் குறிஞ்சி 104-128
மேகராகக்குறிஞ்சியாழ்முரி 129-135 136
மொத்தமாக – 136 பாடல்கள்

இரண்டாம் திருமுறை
இந்தளம் 1-39
சீகாமரம் 40-53
காந்தாரம் 54-82
பியந்தைக் காந்தாரம் 83-96
நட்டராகம் 97-112
செவ்வழி 113-122
மொத்தமாக – 122 பாடல்கள்

மூன்றாம் திருமுறை
காந்தாரபஞ்சமம் 1-24
கொல்லி 25-41
கொல்லிக் கௌவாணம் 42
கௌசிகம் 43-56 117
பஞ்சமம் 57-66
சாதாரி 67-99
பழம் பஞ்சுரம் 100-116
புறநீர்மை 118-123
அந்தாளிக் குறிஞ்சி 124-125
மொத்தமாக – 125 பாடல்கள்

இசைத்தமிழின் தொன்மை – 63இசைத்தமிழின் தொன்மை – 62

பழந்தமிழிசையில் பண்கள்

தேவாரம்
“சைவத்திருமுறைகள்”

திருமுறைகள் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.

முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது.

தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர்.

திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.

திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். “பித்தா பிறைசூடி” என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.

10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.

இதில் முதலேழு திருமுறைகளும் தேவாரங்களாகும். இவற்றின் விபரங்கள்

முதலாம் திருமுறை
திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் – 1469

இரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் – 1331

மூன்றாம் திருமுறை
திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் – 1346

நான்காம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார் – 1060

ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார் – 1015

ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார் – 980

ஏழாம் திருமுறை
சுந்தரமூர்த்தி நாயனார் – 1026
மொத்தம் – 8227

சம்பந்தர் பாடல்களைத் “திருக்கடைக் காப்பு” என்றும்,
நாவுக்கரசர் பாடல்களைத் “தேவாரம்” என்றும்,
சுந்தரமூர்த்தி பாடல்களைத் “திருப்பாட்டு” என்றும் சுட்டுவது வழக்கம்.

தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன.

சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும்,பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

எட்டாம் திருமுறை “திருவாசகம்” என அழைக்கப்பெறுகின்றது. திருவாசகம் மாணிக்கவாசக நாயனாரினால் அருளிச் செய்யப் பெற்றவையாகும்.

“திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது அதன் சிறப்பு.

முதல் ஒன்பது திருமுறைகள் ’தோத்திரம்’ என்றும்,
பத்தாவது ”சாத்திரம்” என்றும்,
பதினொன்றாவது ”பிரபந்தம்” என்றும்
பன்னிரண்டாவது ”புராணம்” என்றும் வழங்கப்படும்.

ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்று பெயர் பெறும்.

திருவிசைப்பா மாலை என்றும் அழைக்கப் பெறும்.

இத் திருமுறையில் 29 பதிகங்கள் உள்ளன. தற்சமயம் 301 பாடல்களே கிடைத்துள்ளன.

தேவாரத்தைப் போன்று இதற்கும் பண் வகுக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் திருமுறையை
திருமாளிகைத் தேவர்,
சேந்தனார்,
கருவூர்த்தேவர்,
பூந்துருத்தி நம்பி காடநம்பி,
கண்டராதித்தர்,
வேணாட்டடிகள்,
திருவாலிஅமுதனார்,
புருடோ த்தம நம்பி,
சேதிராயர்
என்னும் ஒன்பதின்மரால் அருளிச் செய்யப் பெற்றனவாகும். இத்திருமுறையில் உள்ள 29 பதிகங்களில் 16 தில்லையம்பதிக்கு உரியன.

ஏனைய 13 பதிகங்கள்
திருவீழிமிழலை,
திருவாவடுதுறை,
திருவிடைக்கழி,
திருக்களந்தை ஆதித்தேச்சரம்,
திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்,
திருமுகத்தலை,
திரைலோக்கிய சுந்தரம்,
கங்கை கொண்ட சோளேச்சரம்,
திருப்பூவணம்,
திருச்சாட்டியக்குடி,
தஞ்சை இராசராசேச்சரம்,
திருவிடைமருதூர்,
திருவாரூர்
ஆகிய 13 தலத்துக்கு ஒரு பதிகமாக அமைந்துள்ளன.

 

இசைத்தமிழின் தொன்மை – 64இசைத்தமிழின் தொன்மை – 63

பழந்தமிழிசையில் பண்கள்

தேவாரம்
“சைவத்திருமுறைகள்”

சம்பந்தர் (கி.பி. 635 – 651)

சோழ நாட்டில் சீர்காழி என்னும் ஓர் ஊரில் அந்தணர் குலத்தில் சம்பந்தர் பிறந்தார். தந்தையார் பெயர் சிவபாதவிருதயர். தாயார் பெயர் பகவதி அம்மையார். சம்பந்தருக்குப் “பிள்ளையார்” என்று பெயரிட்டனர்.

சம்பந்தர் இம்மண்ணில் வாழ்ந்த 16 ஆண்டு காலத்துள் 16,000 தேவாரப்பதிகங்கள் பாடினார்.

தேவார மூவருள் அதிகப் பண்களிலும் பலவகைத் தாளங்களிலும் பாடல்கள் பாடியவர் சம்பந்தர்.

சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் சம்பந்தரை, “இசைஞானி” என்றும் ‘கானத்தின் எழு பிறப்பு’ என்றும் போற்றி மகிழ்ந்தார். (கானத்தின் எழு பிறப்பு = இறைவன் புகழைப் பாடுவதற்கென்றே தோன்றிய தெய்வப்பிறவி என்பது இதன் பொருள்)

திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைத் திருமுறையாக வகுத்தவர்கள் பண் அடிப்படையில் முதல் மூன்று திருமுறைகளாக வகுத்தனர். இவை பின்வருமாறு :

முதல் திருமுறை
01 – நட்டபாடை – 1-22
02 – தக்கராகம் – 23-46
03 – பழந்தக்க ராகம் – 47-62
04 – தக்கேசி – 63-74
05 – குறிஞ்சி – 75-103
06 – வியாழக் குறிஞ்சி – 104-128
07 – மேகராகக் குறிஞ்சி யாழ்முரி – 129-135, 136

இரண்டாம் திருமுறை
01 – இந்தளம் – 1-39
02 – சீகாமரம் – 40-53
03 – காந்தாரம் – 54-82
04 – பியந்தைக் காந்தாரம் – 83-96
05 – நட்டராகம் – 97-112
06 – செவ்வழி – 113-122

மூன்றாம் திருமுறை
01 – காந்தார பஞ்சமம் – 1-24
02 – கொல்லி – 25-41
03 – கொல்லிக் கௌவாணம் – 42
04 – கௌசிகம் – 43-56 117
05 – பஞ்சமம் – 57-66
06 – சாதாரி – 67-99
07 – பழம் பஞ்சுரம் – 100-116
08 – புறநீர்மை – 118-123
09 – அந்தாளிக் குறிஞ்சி – 124-125

இக்காலத்திலும் இப்பண்ணமைவோடே பாடப் பெறுகின்றன. பண்களைப் பற்றித் தேவாரப் பாடல்களில் பல செய்திகள் காணப்படுகின்றன.

பண்ணுடைய பாடல் நன்று என்றும், அத்தகைய பாடல் தவழும் ஊர் நல்ல ஊர் என்றும், இத்தகைய இசை வல்லவர்களைப் பண்ணார் என்றும், பண்ணினைப் பாடி ஆடினால் இறையருளை எளிதில் பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றான திருவீழிமிழலைப் பதிகத்தில் பண்பற்றியும், பண்ணிசை பற்றியும் பண்மூலம் எழும் பல்வேறு ஓசை பற்றியும், அப்பண்ணின் மூலம் எழும் சுவை பற்றியும், அவைகளின்ஊடே அமையும் தாள ஒலி பற்றியும் குறிப்பிடுகிறார்.

பண் – நட்டபாடை,
இராகம் – கம்பீர நாட்டை
மேளகர்த்தா – 29 (சங்கராபரணம்)

“பண்ணும்பத மேழும்பல வோசைத் தமிழவையும்
உண்ணின்றதொர் சுவையுமுறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம் மிழலையே”

சிவஞானம் வரப்பெற்ற குழந்தையான ஞானசம்பந்தர் அம்மையும் அப்பனும் என் உள்ளத்தைக் கவர்ந்த இறைவன் என்ற பொருள்படத் “தோடுடைய செவியன்” எனத் தொடங்கிப் பாடி மூன்று வயதுக் குழந்தை நட்டபாடைப் பண்ணில் பாடிய முதல் தேவாரம்.

பண் – நட்டபாடை,
இராகம் – கம்பீரநாட்டை
மேளகர்த்தா – 29 (சங்கராபரணம்)

“தோடு உடைய செவியன் விடைஏறி ஓர் துவெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள் செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே”

சம்பந்தர் தேவாரப் பதிகங்கள் பாடினார். மக்களுக்கு இனிய இசையால் இறைவழி காட்டினார். இம் மண்ணில் நல்லவாறு வாழலாம் என்று பாடினார். பிறவிப்பிணி தீர்க்கலாம் என்று பாடினார்.

பண் – தக்கராகம்
இராகம் – கம்பீரநாட்டை
மேளகர்த்தா – 28 (அரிகாம்போதி)

துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம்எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ! மங்கையை வாட மயல் செய்வதோ இவர்
மாண்பே?

பண் – காந்தாரம்
இராகம் – நவரோசு
மேளகர்த்தா – 29 (சங்கராபரணம்)

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே!.

பண் – புறநீர்மை
இராகம் – பூபாளம்
மேளகர்த்தா – 15 (மாய மாளவ கெளளை)

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.

திருமருகலும் – திருச்செங்காட்டங்குடியும்

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ
மங்குன் மதி தவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கயலார் புனற் செல்வ மல்கு சீர்கொள்செங் காட்டங் குடிய தனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பண் – புறநீர்மை
இராகம் – பூபாளம்
மேளகர்த்தா – 15 (மாய மாளவ கெளளை)

நிரைகழ அரவம் சிலம்பொலி அலம்பு
நிமலர் நீறணி திருமேனி
வரைகெழு மகளோர் பாகமாய்ப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்
அளப்பரும் கனமணி வரன்றிக்
குரைகட ஓதம் நித்திலங் கொழிக்குங்ம்
கோணமா மலைஅமர்ந் தாரே.

பண் – பியந்தைக்காந்தாரம்
இராகம் – நவரோசு
மேளகர்த்தா – 29 (சங்கராபரணம்)

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பண் – காந்தாரம்
இராகம் – நவரோசு
மேளகர்த்தா – 29 (சங்கராபரணம்)

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பண் – கொல்லி
இராகம் – நவரோசு
மேளகர்த்தா – 29 (சங்கராபரணம்)

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. 

பண் – கௌசிகம்
இராகம் – பைரவி
மேளகர்த்தா – 20 (நடபைரவி)

(மூன்றாம் திருமறை, 3320)
இதுவே ஞானசம்பந்தர் பாடிய கடைசித் தேவாரத் திருப்பதிகமாகும்.

காதல் ஆகிக் கசிந்து, கண்ணீர் மல்கி,
ஒதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது,
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

இசைத்தமிழின் தொன்மை – 62இசைத்தமிழின் தொன்மை – 64
பழந்தமிழிசையில் பண்கள்

தேவாரம்
“சைவத்திருமுறைகள்”

திருநாவுக்கரசர் (கி.பி.575-656)

“தமிழோடிசை பாடல் மறந்தறியேன்…”

“சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே”.

திருஞானசம்பந்தரை பல்லக்கில் சுமக்கும் அப்பர்
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில் தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். இவர் திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால், அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர். நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர்.

“மருணீக்கியார்” – இயற்பெயர்

“தருமசேனர்” – சமண சமயத்தை தழுவிய போது கொண்டு பெயர்.

“நாவுக்கரசர்”, “திருநாவுக்கரசர்” – தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற பெயர்.

“அப்பர்” – திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்.

“உழவாரத் தொண்டர்” – சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்.

“தாண்டகவேந்தர்” – தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் பெற்ற பட்டப்பெயர்.

திருநாவுக்கரசர் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.

தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார்.

அதனால் தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது.

சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் “கூற்றாயினவாறு விலக்ககலீர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது.

அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார். பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார்.

அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர்.

பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார்.

இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான்.அத்துன்பங்களை திருநாவுக்கர் இறைவன் அருளால் வென்றார்.

இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டு இறைவன் அருளால் மீண்டதை, “கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே” எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார்.

இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தை தழுவினான்.தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார்.

மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன.

சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81வது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார்.

சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்.

சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்.

சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது.

சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.

சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.

வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.

காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.

திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களப் பாடியுள்ளார்.

இவற்றில் சில பதிகங்களை தாள அமைப்பினைச் சேர்ந்ததாக குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு தாள அமைப்புடன் பாடப்பட்டவையை பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் அழைக்ப்படுகின்றன.

திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள்.

திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது.

இவருடைய பாடல்களில் கீழ்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன.
1. கொல்லி
2. காந்தாரம்
3. பியந்தைக்காந்தாரம்
4. சாதாரி
5. காந்தார பஞ்சமம்
6. பழந்தக்கராகம்
7. பழம் பஞ்சுரம்
8. இந்தளம்
9. சீகாமரம்
10. குறிஞ்சி

நான்காம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார் – 1060

ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார் – 1015

ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார் – 980

திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் 4, 5,6 திருமுறைகளாக அமைக்கப் பெற்றுள்ளன. இவை 312 பதிகங்களையும் 3066 பாடல்களையும் கொண்டுள.

திருநாவுக்கரசர் பாடிய தேவாரப்பண்கள்
நேரிசை
குறுந்தொகை
தாண்டகம்

திருநாவுக்கரசர் தேவாரம்
திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களை நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாக வகுத்துள்ளனர்.

நான்காம் திருமுறை பண் அடிப்படையிலும், ஐந்து, ஆறு திருமுறைகள் யாப்பு அடிப்படையிலும் பெயரிடப் பெற்றுள்ளன.

நாவுக்கரசர் பாடியவைகளில் பத்துப் பண்கள் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு :
கொல்லி
திருப்பதிகம் திருநேரிசை – 22 முதல் 79 வரை (58)
திருவிருத்தம் – 80 முதல் 113 வரை (34)
காந்தாரம் – 2 முதல் 7 வரை (6)
பியந்தைக் காந்தாரம் – 8 (1)
சாதாரி – 9 (1)
காந்தார பஞ்சமம் – 10-11 (2)
பழந்தக்கராகம் – 12-13 (2)
பழம்பஞ்சுரம் – 14-15 (2)
இந்தளம் – 16-18 (3)
சீகாமரம் – 19-20 (2)
குறிஞ்சி – 21 (1)
மொத்தமாக – 113 பாடல்கள்

சம்பந்தர் பாடல்களைத் “திருக்கடைக் காப்பு” என்றும், நாவுக்கரசர் பாடல்களைத் “தேவாரம்” என்றும், சுந்தரமூர்த்தி பாடல்களைத் “திருப்பாட்டு” என்றும் சுட்டுவது வழக்கம்.

எட்டாம் திருமுறை “திருவாசகம்” என அழைக்கப்பெறுகின்றது.

 

இசைத்தமிழின் தொன்மை – 65இசைத்தமிழின் தொன்மை – 65

பழந்தமிழிசையில் பண்கள்

தேவாரம்
“சைவத்திருமுறைகள்”

திருநாவுக்கரசர் (கி.பி.575-656)

“தமிழோடிசை பாடல் மறந்தறியேன்…”

பண் – கொல்லி
இராகம் – நவரோசு
மேளகர்த்தா – 29ஆவது இராகம் சங்கராபரணம்

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

பண் – கொல்லி
இராகம் – நவரோசு
மேளகர்த்தா – 29ஆவது இராகம் சங்கராபரணம்

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

பண் – காந்தாரம்
இராகம் – நவரோசு
மேளகர்த்தா – 29ஆவது இராகம் சங்கராபரணம்

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்
சுடர்த் திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை.

பண் – காந்தாரம்
இராகம் – நவரோசு
மேளகர்த்தா – 29ஆவது இராகம் சங்கராபரணம்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.

பண் – சாதாரி
இராகம் – பந்துவராளி
மேளகர்த்தா – 51ஆவது மேள இராகம்

தலையே நீவணங்காய் – தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

பண் – காந்தாரபஞ்சமம்
இராகம் – கேதாரகௌளை
மேளகர்த்தா – 28ஆவது இராகம் அரிகாம்போதி

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

 

இசைத்தமிழின் தொன்மை – 66

இசைத்தமிழின் தொன்மை – 66

பண்ணிலிருந்து எழுந்ததுதான் இராகம்.

இது மிகவும் வடமொழி மோகத்துடன், நூற்றுக்கணக்கான உண்மைகளை மறைத்து, ஒருதலையாக எழுதப்பட்டுள்ளது.

கருநாடக இசை கடந்த 100 ஆண்டுகளில் தமிழிசையில் இருந்து ஓரளவு திர்க்கப்பட்ட இசை, எனினும் ~80% தமிழிசை தான்.

ஏறத்தாழ எல்லா அடிப்படைகளும் தமிழிசையில் இருந்து எழுந்தவை. ஸங்கீத ரத்தினாகரம், மற்றும் வேங்கடமஹியின் (மேளகர்தா இராகத்தின் ஆசிரியர்) படைப்பு எல்லாம் மிகப் பிற்காலத்தது (சில குற்றமுடையதும்).

தேவார இசையில் 18000க்கும் அதிகமான பாடல்கள் பண், தாளத்துடன் அமைக்கப்பட்டு, சுமார் 1000 ஆண்டுகளாக வழி வழியாய் வந்துள்ளன.

இசை பற்றிய கட்டுரைகள் அனைத்துமே இந்திய இசை முழுமைக்குமே வேத, சமஸ்கிருத அடிப்படையையே காரணம் என்று பேசி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் தற்கால இசைக் கலைஞர்களுக்கே தமிழ் இசையைப் பற்றித் தெரிந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.

தமிழிசை பற்றிச் செய்யப்பட்ட மிகச்சில ஆய்வுகள்கூட பலரின் பார்வைக்குக் கிடைக்கக்கூடிய வசதிகள் கிடையாது.

தமிழிசை, தமிழ் மக்கள் இசை, இன்றைய இந்திய இசையில் தமிழர் இசைப் பண்பாட்டுக் கூறுகள் போன்ற தலைப்புக்களில் கட்டுரைகள் பல எழுதப்படவேண்டும்.

இசைத் துறையில் மட்டுமன்றி, சமயம், கட்டிடக்கலை, சிற்பம் போன்ற இன்னோரன்ன பல மரபுவழித் துறைகளில் இந்தச் சிக்கல் இருக்கத்தான் செய்கின்றது.

இதற்குக் காரணம் ஒர் காலத்தில் சமஸ்கிருதம் தமிழ்நாட்டிலும் கற்றோர் மொழியாகக் கோலோச்சியதுதான்.

இந்தியக் கட்டிடக்கலை பற்றிய முன்னணி நூல்களான மயமதமும், மானசாரமும் தமிழ்நாட்டில் எழுதப்பட்டவைதான்.

அவற்றில் சொல்லப்பட்டவை தொடர்பான எடுத்துக்காட்டுகள் பலவும் தமிழ் நாட்டில் உள்ளன.

ஆனாலும் இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதால் தொடர்பான பல சொற்களும் வடமொழியாகவே காணப்படுகின்றன என்பதுடன் இதனை அடியொற்றி முழுக்கலைக்குமே அடிப்படை வேதமே என்று சொல்லிவிடுகிறார்கள்.

முக்கியமான சிக்கல் என்னவென்றால் இத் துறைகளிலே தமிழ் மரபின் பங்கு பற்றிய முறையான ஆய்வுகள் கிடையாது.

இந்தியக் கலாச்சாரத்தில் தமிழரின் பங்களிப்புக்கான உரிய மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் அதனைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கும் இது பற்றி ஆர்வம்கொண்ட தமிழர், நியாயமான அளவுக்கும்மேல் பலமடங்கு அதிகமாக உழைக்கவேண்டிய நிலைதான் இன்றும் உள்ளது.

இசைத் துறையில் வெளிவரும் எழுத்துக்கள் முழுப்ப்பூசணிக்காயை மறைப்பதாகும்.

உலகிலே எந்த மொழியிலும் 7-9 ஆம் நூறாண்டுகளில் தொடங்கி 9295 பாடல்கள் பண் அமைத்து (அதற்கு இணையாக ராகம், melody என்று எதுவும் கொள்ளலாம்) தொடர்ந்து இன்றுவரை பாடப்பட்டது கிடையாது.

அதுவும் பொருள் இளைத்த பாடல்கள் அல்ல, மெய்ப்பொருள் செறிந்தது. இந்த 9295 பாடல்கள் என்பது தேவாரம் மட்டுமே. இவை எல்லாம் 10 நூற்றாண்டுகளுக்கு முன்னர் உள்ள இசை வளர்ச்சி. யாரும் மறுக்க முடியாதது.

அதுமட்டுமல்ல 2500 ஆண்டுகளுக்கு மேலாக முறைப்படி சுரங்களைக் கொண்டு ஆய்வு செய்து வந்திருக்கிறார்கள்.

கடந்த 70-80 ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவிற்காக, ஒருதலை சார்பு போக்குகளுக்காக, உண்மைகளை மறைத்தல் தவறு. மூலத்தை அழிப்பது ஒரு உத்தி.

இதில் சமசுகிருதம் தமிழ் என்பது அல்ல, இசை உண்மைகளை, இசை வரலாற்று உண்மைகளை முற்றுமாய் மறைப்பதாகும்.

மேளகர்தா ராகம் 72லும் எராளமான தில்லு முல்லுகள் உண்டு.

இவை தமிழர்களின் பெருமை மட்டுமல்ல, உலகத்தவர் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய பெரும் சாதனைகள், மெய்ப்புகழ் ஈட்டங்கள். மேலும் ஒன்று.

சமசுகிருதம் வளர்ந்ததும், அம்மொழியில் உள்ள மிகப்பெரும் ஆக்கங்களில் மிகப்பெரும்பாலனவையும் தமிழகத்தில் நிகழ்ந்ததே. தமிழர்களாலேயே ஆக்கப்பட்டன.

இவையெல்லாம் எழுதப் புகின் மிக வளர்ந்துவிடும்.

தமிழின் இயல்பும், இனிமையும், பொருட்செறிவும் பன்முக வளர்ச்சியும் மிகவும் பாழ்படுகின்றதென்றே நினைக்க வேண்டியுள்ளது.

13 ஆம் நூற்றாண்டில் வெளியான சங்கீத ரத்னாகரமும் அதன் பின்னர் 14-15 நூற்றாண்டுகள் வரை இன்னும் பல நூல்களும் சமசுகிருதத்தில் வெளியாகியுள்ளன.

அவற்றில் இராகத்தோடு அமைந்த பாடல்கள் எத்தனை என்று கேட்டுப்பாருங்கள்.

சமசுகிருதத்தில் தாலாட்டு ஒப்பாரிப் பாடல்கள் ஏதும் உண்டா ?? ஏன் ஒரு சில தாலாட்டுகூட இல்லை ? சமசுகிருத நூல்களில் அலசிய ராகம், இசை பற்றியதெல்லாம் பெரும்பாலும் தமிழ்ப் பாணர்கள் பாடியதும், தமிழ் இசைவாணர்கள், வல்லுனர்கள் எழுப்பிய இசையைக் கேட்டும், கற்றும் தாங்கள் உணர மொழிபெயர்த்து எழுதிக்கொண்டதும்தான்.

வங்காளி ஜயதேவர் தமிழ் நாட்டுக்கு வந்து ஆழ்வார்கள் பாடல்களைப்பார்த்து, தமிழ் நாட்டு பத்தி (பக்தி) எழுச்சியைப் பார்த்து அவர் அறிந்தவாறு ஆக்கியது (12 ஆம் நூற்றாண்டில்).

இதுவும் உறுதிகொள்ளும் வழியாக எவ்விசை வடிவில் இருந்ததென கூறமுடையாது.

தமிழ் இசை வரலாற்றுக்கு இணையான முந்திய புகழ்வரலாறு உலகிலே எங்குமே கிடையாது.

 

இசைத்தமிழின் தொன்மை – 67

பழந்தமிழிசையில் பண்கள்

தேவாரம்
“சைவத்திருமுறைகள்”
சுந்தரமூர்த்தி நாயனார் (கி.பி.690-708)
திருபாண்டிக்கொடுமுடி பண் – பழம்பஞ்சுரம்

மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர்கறையூரிற் பாண்டிக்கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.1

ஏழாம் திருமுறை
சுந்தரமூர்த்தி நாயனார் – 1026
மொத்தம் – 8227

இசைத்தமிழின் தொன்மை – 67சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இவர் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது சிவபெருமான் கிழவனாக சென்று தடுத்தார்.

பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள்.

இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர்.

திருமணத்தினை தடுத்து சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை திருமணம் செய்துவைத்தார்.

இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன.

இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார்.

அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றார்களான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 என கையாண்டார்.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர்.

இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர்.

இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.

தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே.

தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை “திருப்பாட்டு” என்று அழைப்பது மரபு.

இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் – இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர்.

இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையார் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார்.

திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், “பித்தா பிறை சூடி” என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார்.

பாடல்களின் மூலமாக இறைவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார்.

இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

“நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.

சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு சங்கிலியார் எனும் அழகியப் பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார்.

அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.

சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார்.

திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார்.

சுந்தரர் “கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்….” எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானை சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.

இடரினும் தளரினும் இறைவனை என்றும் மறவாதவர். சிவயோகம் என்னும் ஒருமைநெறி இவரால் உலகிற்கு உணர்த்தப்பட்டது. இதனைத் தோழமை நெறி என்றும் கூறுவர்.

‘என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி’ (தேவாரம், 7751) என்ற தொடர்க்கு ஏற்ப இவருடைய செயல்கள் அமைந்திருந்தன.

இவருடைய பாடல்கள் ஏழாம் திருமுறையாக அமைக்கப்பட்டுள்ளன. இவர் பாடல்கள் 1026.

இவை நூறு பதிகங்களாக அமைந்தவை;  17 பண்களில் அமைந்தவை.

இவர் பாடிய அற்புதப் பதிகங்கள் 27. ஒவ்வொரு பதிகத்தின் பத்தாவது பாடலும், பதிகம் பாடப்பட்ட தலத்தின் பெயர், பாடியவர் பெயர், கற்போர் பெறும் பயன் ஆகியவற்றைக் கூறுவன. திருஞானசம்பந்தரைப் போல இவரும் ‘முத்திரைக் கவி’ எனப் போற்றப்பெற்றவர்.

ஏழாம் திருமுறையாகச் சுந்தரர் பதிகங்கள் உள. . இவை திருஞானசம்பந்தர் பதிகங்கள் போல் பண்சுமந்தபாக்களாகும்.

100 பதிகங்களும் 1026 பாடல்களும் உள.  17 பண்களில் அமைந்துள.

ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பாடாத செந்துருத்தி பண்ணில்  ஒரு பதிகத்தைச் சுந்தரர் பாடியுள்ளனர். இப்பண் சுமந்த இப்பதிகம் இசைத் தமிழுக்குக் கிடைத்த அரிய சொத்தாகும்.

சுந்தரர் தேவாரம்

சுந்தரர்பாடிய பாடல்களைத் திருப்பாட்டு என்பர். தேவாரம் என்ற பெயராலும் அழைப்பர். இவர்பாடிய பாடல்கள் யாவும் பண் சுமந்த பாடல்கள்ஆகும்.

100 பதிகங்கள் கிடைத்துள்ளன.
இவை பதினேழுபண்களில் அமைந்துள்ளன.
இந்தளம் – 12 ( 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 )
காந்தாரபஞ்சமம் – 1 (77)
காந்தாரம் – 5 (71, 72, 73, 74, 75)
குறிஞ்சி – 4 (90, 91, 92, 93)
கொல்லி – 7 (31, 32, 33, 34, 35, 36, 37)
கொல்லிக்கௌவாணம் – 9 (38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46)
கௌசிகம் – 1 (94)
சீகாமரம் – 4 (86, 87, 88, 89)
செந்துருத்தி – 1 (95)
தக்கராகம் – 4 (13, 14, 15, 16)
தக்கேசி – 17 (54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70)
நட்டபாடை – 5 (78, 79, 80, 81, 82,)
நட்டராகம் – 14 (17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30)
பஞ்சமம் – 5 (96, 97, 98, 99, 100)
பழம்பஞ்சுரம் – 7 (47, 48, 49, 50, 51, 52, 53)

சுந்தரர் பாடிய பண்களில் செந்துருத்திப்பண் மிகவும் சிறப்பானதொரு பண்ணாகும்.

இப்பண்ணை ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பாடவில்லை. மீளாஅடிமைஎன்று தொடங்கும் பாடலில் (பதி-95) இப்பண்இடம் பெறுகிறது.

இது ஒரு மங்கலகரமான பண்ணாகும். அரங்கிசை இறுதியில் இப்பண் இசைக்கும் மரபு இருந்துள்ளது. தேவாரப் பண்இந்தியத் திருநாடு முழுவதும், போற்றப் பெற்றது.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரப்பண்கள்
இந்தளம்
தக்க ராகம்
நட்டராகம்
கொல்லி
பழம்பஞ்சுரம்
தக்கேசி
காந்தாரம்
காந்தார பஞ்சமம்
நட்டபாடை
புறநீர்மை
சீகாமரம்
குறிஞ்சி
செந்துருத்தி
கௌசிகம்
பஞ்சமம்

தமிழிசைப்பண்கள் : தொடர் 61 – 67
சிறீ சிறீஸ்கந்தராஜா
28/04/2017 – 01/06/2017

தொகுப்பு  – Thamil.co.uk