சங்கம் மருவிய காலம் – சிலப்பதிகாரம் 2 : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழின் தொன்மை - 52தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 52

பழந்தமிழிசையில் பண்கள்

சங்கம் மருவிய காலம் (300-700)

சிலப்பதிகாரம் – 9

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

கானல் வரி
கானல் வரி என்பது கடற்கரைச் சூழலில் பாடப்படும் இசைப்பாடல்களாகும். கடற்கரை வந்த கோவலனும், மாதவியும் யாழிசையுடன் சேர்த்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர். இறுதியில், கோவலன் மனம் மாறி மாதவியை விட்டு பிரிகிறான்

வசந்தமாலையிடம் இருந்த யாழை, மாதவி தொழுது வாங்கி, சரி செய்து, கோவலனிடம் தருகிறாள்.

“சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப்
பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று
இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுது வாங்கிப்
பண்ணல் பரிவட்டணை யாராய்தல் தைவரல்

கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய
எண்வகையால் இசையெழீ இப்
பண்வகையாற் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தண் மெல்விரல்கள்

பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருட னுருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏருடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்

பட்டவகைதன் செவியினோர்த்து
ஏவலன்பின் பாணியாதெனக்
கோவலன் கையாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்”.

வசந்தமாலை கையிலிருந்த யாழ், சித்திரங்கள் வரைந்த உறையினுள்ளே வைக்கப்பட்டிருந்தது. அதன் அழகிய கோடுகளில் பூக்கள் சூட்டப்பட்டிருந்தன. மைதீட்டிய பெரிய கண்களையுடைய மணமகள் ஒருத்தியின் ஒப்பனைக் கோலத்தைப் போலப் புனைந்த அழகினை உடையது அந்த யாழ்!

பத்தர், கோடு, ஆணி, நரம்பு முதலான யாழ் உறுப்புகளிலே, எவ்விதக் குற்றமும் குறையும் இல்லாத அந்த நல்ல யாழினை, மாதவி தொழுது, தன் கையிலே வாங்கிக் கொண்டாள்.

“பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், கண்ணிய செலவு, விளையாட்டு, கையூழ், நுண்ணிய குறும்போக்கு” என்னும் எட்டுவகையான கலைத்தொழிலாலும், இசை எழுப்பினாள் மாதவி.

பண்வகையில் குற்றங்கள் ஏதும் இல்லாமல், மரகதமணி மோதிரங்கள் அணிந்த அவளின் மென்காந்தள் விரல்கள், பாடுகின்ற வண்டினம்போல யாழின் பல நரம்புகளின் மேலாகத் தடவித் தடவி வந்தன.

“வார்த்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை”, என இசைநூலோர் வகுத்த எட்டுவகையான இசைக்கரணத்தால் உண்டாகிய இசையின் கூறுகளைத், தன் செவியால் நன்கு ஆராய்ந்து சீர்தூக்கி அறிந்தாள். பின், செம்மைப் படுத்தப்பட்ட யாழினை தன் காதலனான கோவலன் கையிலே நீட்டினாள்.

“நான் வாசிக்க வேண்டிய பாணியை, தாங்கள் வாசித்துக் காட்டி, ஆணையிடுங்கள்”, என்று மிகவும் பணிவுடன் கேட்டாள். அவனும் யாழினை இசைத்து, காவிரி குறித்தும், கடற்கானல் குறித்தும் மாதவி மனம்மகிழப் பாடத் தொடங்கினான்.

வாழி காவேரி

கோவலன் காவேரியை வாழ்த்திப் பாடுகிறான்
“திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி காவேரி.

மன்னு மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோ லதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி காவேரி.

உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவ ரோதை வளவன்றன்
வளனே வாழி காவேரி”.

புகழ் மாலை சூடிய திங்களைப் போல, புகழ்பெற்ற வெண்கொற்றக் குடையை உடையவன் சோழ மன்னன். அவன், தன் செங்கோலினைச் செலுத்திக் கங்கை நதியிடம் சென்று கூடினாலும், நீ அவனை வெறுக்கமாட்டாய், ஆகையால்,

காவேரியே நீ வாழ்க!

கயலாகிய கண்ணை உடையவளே! கங்கை என்னும் பெண்ணுடன் உன் கணவன்(சோழன்) சேர்ந்தாலும் நீ அவனை வெறுக்காமல் இருக்கக் காரணம், உன் போன்ற மாந்தரின் பெருமைமிக்க உயர் கற்புநெறி என்பதை நான் அறிந்து கொண்டேன்.

காவேரியே நீ வாழ்க!

பெருமைபொருந்திய புகழ்மாலையினை அணிந்த, வெண்கொற்றக் குடையை உடையவன் உன் கணவன் (சோழ மன்னன்). அவன் தனது வளையாத செங்கோலினைச் செலுத்திக் குமரியையும் கூடினான். அதனாலும் நீ அவனை வெறுக்க மாட்டாய். ஆதலினால்,

காவேரியே நீ வாழ்க!

கயலாகிய கண்ணை உடையவளே! கன்னியாகிய குமரியுடன் சோழன் அவ்வாறு சேர்ந்தாலும், நீ அவனை வேறுக்காதிருத்தல், மாந்தரின் பெருமை வாய்ந்த கற்புநெறியால் தான் என்பதை நான் அறிந்தேன்.

காவேரியே நீ வாழ்க!

ஆற்றினில் புதுப்புனல் கண்ட உழவர் மகிழ்ந்து ஆர்க்கும் ஓசையும், மதகுதனில் நீர் நிறைந்து வடிகின்ற ஓசையும், வரப்புக்களை உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும், புதுப்புனல் விழாக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் மிகுதியாக இருபக்கமும் ஆர்ப்பரிக்க,

நடந்து செல்லும் காவிரியே நீ வாழ்க!

நீ அவ்வாறு சிறந்து நடக்க, காவல் புரியும் வீரமறவர்களின் போர்முழக்கத்தை உடைய சோழனது ஆட்சிப் பயனே காரணம். இதை நீ அறிவாயாக…

காவேரியே, நீ வாழ்க!

இசைத்தமிழின் தொன்மை - 53சிலப்பதிகாரம் – 10

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

கானல் வரி
“கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணீர்
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கண்ஏர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே.

எறிவளைக ளார்ப்ப இருமருங்கு மோடுங்
கறைகெழுகயற் கண்ணோ கடுங்கூற்றங் காணீர்
கடுங்கூற்றங் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடங்கெழு மென்சாயல் மகளா யதுவே.

புலவுமீன் வெள்உணங்கற் புள்ளோப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்கிதுவோ காணீர்
அணங்கிதுவோ காணீர் அடும்பமர்தண் கானற்
பிணங்குநேர் ஐம்பாலோர் பெண்கொண் டதுவே”.

கோவலன் யாழிசையுடன் பாடும் இப்பாடல், தனியாக எதிரே வந்த ஒரு பெண்ணை நோக்கி தலைவன் கூறுவதுப் போல அமைந்துள்ளது.

கண்ணாகக் கயலையும், புருவமாக வில்லையும், கூந்தலாகக் கார்மேகத்தையும் வரைந்து, இவற்றுடன் எதிரே வந்த என்னைக் காமத்தால் வாட்டுகின்ற கொடுந்தொழிலையும் எழுதி வைத்துள்ள இவள் முகம் திங்கள் தானா? பாருங்கள்!

அழகு படர்ந்த வானத்தில் இருந்தால் பாம்புகள் வந்து தன்னை விழுங்கிவிடும் என்று பயந்து, மீன்பிடிக்கும் படகுகள் கொண்டு வாழ்க்கை நடத்திவரும் பரதவர் வாழும் சிற்றூரில் திங்கள் வந்து வாழ்கிறதோ?

கரையில் அலைகள் எறியும் சங்குகளின் முழக்கத்துக்கு அஞ்சி, இருபக்கமும் மிரள ஓடும் குருதிக் கறை உடைய, வேல்போன்ற கண்களை உடையவள், கொடிய கூற்றமா எனப் பாருங்கள்!

கடலை நம்பி வாழும் இந்தச் சிற்றூரில், அழகான மென்மையான பெணின் சாயலில் அந்தக் கூற்றம் தான் வந்துள்ளதோ!

புலால் நாற்றமுடைய மீனின் வெள்ளிய வற்றலைக் கொத்தவரும் பறவைகளை விரட்டி, தன்னைக் காண்போரை எல்லாம் மனம் தடுமாறச் செய்து, காமநோய்க்கு வசப்படுத்தி, வருத்தி நிற்கும் அணங்கு இவள் தானா ? பாருங்கள் !

அடும்ப மலர்கள் அடர்ந்து விளங்கும் குளிர்ந்த கானலில், செறிந்த மெல்லிய கூந்தலுடன், பெண் வடிவம் கொண்டு, ஓர் அணங்கு வந்துள்ளதோ?

“பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே.

திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே.

வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளையவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனையிடர் செய்தவையே”.

தோழனே!
பூம்பொழில் தருகின்ற நறுமணமுடைய மலர்,
அம்மலர்களின் புதுமணம் பரந்து விரியும் மணல்,
அதில் நின்ற தலைவியின் பழுதில்லாத இனிமை பேச்சு,
பருத்த இளமையான அழகிய மார்புகள்,
முழுமதி போன்ற முகம்,
வளைந்த புருவமாகிய இரண்டு வில்,
எழுத இயலாத மின்னல் போன்ற இடை,
இவை அனைத்தும் என்னைத் துன்புறச் செய்தன!

தோழனே!
அலைகள் பரந்த நீர்த்துறை,
அழகிய மணல் நிறைந்த கடற்கரை,
மணம் வீசும் மலர்கள்,
மரங்கள் நெருங்கிய கானற்சோலை,
அங்கே நின்றிருந்த தலைவியின்
மணம் பரந்த சுருண்ட கூந்தல்,
மதி போன்ற அவளின் அழகு முகம்,
இரு கயல் போன்ற இணைந்த விழிகள்,
இவை யாவும் என்னைத் துன்புறச் செய்தவை!

தோழனே!
சங்குகள் வளர்கின்ற துறை,
மணம் பரந்த கானற்சோலை,
கட்டவிழ்ந்த நறுமண மலர்,
அவள் தனித்து உலாவுகின்ற இடம்,
முளை போல வளரும் பல்வரிசை,
முழுமதி போன்ற முகம்,
இளமைப் பருவம் கொண்ட அவளின்
இணைந்த மார்புகள்,
இவை அனைத்தும் என்னைத் துன்புறச் செய்தன!

“கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக் கடங்காத வெம்முலையோபாரம்
இடர்புக் கிடுகும் இடைஇழவல் கண்டாய்.

கொடுங்கண் வலையால் உயிர்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்கொல்வை மன்நீயும்
வடங்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்பிழவல் கண்டாய்.

ஓடுந் திமில்கொண் டுயிர்கொல்வர் நின்ஐயர்
கோடும் புருவத் துயிர்கொல்வை மன்நீயும்
பீடும் பிறரெவ்வம் பாராய் முலைசுமந்து
வாடுஞ் சிறுமென் மருங்கிழவல் கண்டாய்”.

உன் மூத்தோராகிய தமையன்மார், கடலுக்குள் சென்று அங்குள்ள உயிரினங்களைக் கொன்று வாழ்பவர்!

நீயோ என் உடலுக்குள் புகுந்து என் உயிரைக் கொன்று வாழ்கின்றாய்!

வலிமையான கச்சையினுள் இருந்தும் அடங்காது என்னை வாட்டும் உன் விருப்பத்தக்க மார்புகளின் சுமையால் வருந்தித் தளர்கிறது உன் இடை!

அவ்விடையை நீ இழந்து விடாதே!

கொடுமையான கண்களையுடைய வலையால் உயிர்களைப் பிடித்துக் கொல்பவன் உன் தந்தை.

நீயோ உன் நெடுங்கண் வலையால் என் உயிரைக் கொல்கிறாய்!

முத்துவடம் தாங்கிநிற்கும் உன் மார்புகளின் சுமையால் மழைமேகத்தின் மின்னலைப் போல அசைந்து தளர்கின்றது உன் இடை! அதை நீ இழந்திடாதே!

கடலில் ஓடுகின்ற படகினைக் கொண்டு, உயிர்களைக் கொன்று வாழ்பவர் உன் தமையன்மார். நீயும் உன் வளைந்த புருவம்கொண்டு என்னை கொல்வாயோ!

உன் பெருமையையும், உன்னால் பிறர்படும் துன்பத்தையும் நீ எண்ணி பார்!

உன் மார்புகளின் பாரம் சுமந்து வாடுகிறது உன் சிறிய மெல்லிடை!

அதனை நீ இழந்து விடாதே!

தலைவியுடன் சேர்ந்த பின் பிரியும் தலைவன் பாடுவது போல இவ்வரிகள்.

“பவள உலக்கை கையாற் பற்றித்
தவள முத்தங் குறுவாள் செங்கண்
தவள முத்தங் குறுவாள் செங்கண்
குவளை யல்ல கொடிய கொடிய.

புன்னை நீழற் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய கூற்றங் கூற்றம்.

கள்வாய் நீலங் கையி னேந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய.

சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடவன்னம் சேரல் நடையொவ்வாய்”.

பவளத்தால் செய்த உலக்கையைக் கையால் பிடித்துக் கொண்டு, வெண்மையான முத்துக்களைக் தாக்குகிறாளே!

அவளுடைய செவ்வரி படர்ந்த கண்கள், குவளை மலர்களோ? அல்ல! அல்ல! குவளை மலர்கள் அல்ல! அவை மிகவும் கொடியவை!

புன்னை மரத்தின் நிழலிலே, புலால் நாறும் அலைதனில், அன்னப் பறவை நடப்பது போல அசைந்து அசைந்து நடக்கிறாளே!

அவளின் சிவந்த கண்கள், கண்கள் அல்ல! மிகவும் கொடியக் கூற்றமே!

தேனைத் தன் வாயிலே கொண்ட நீல மலரைக் கையில் ஏந்தி, மீன் வற்றலைத் தின்ன வரும் பறவைகளை ஓட்டுகிறாளே!

அவளின் சிவந்த கண்கள், இரத்தக் கறை பற்றாத வேல்களோ? அல்ல! அல்ல! அவை அதனினும் கொடிது ! கொடிது !

மென்மையான அன்னமே! நீ அவளுடன் சேராதே! அலைகள் சூழும் கடலினை வேலியாக உடைய உலகை எல்லாம், தனது அழகால் கலக்கித் திரிகின்றவள் அவள் !

அவள் நடைக்கு உன் நடை ஒப்பாகாது! அதனால் அவளோடு நீ நடந்திடாதே!

மாதவி,கோவலன் பாடிய பாடல்களைக் கேட்டுக் காதலால் மகிழ்ந்தவள்போல நடித்து, அவனிடமிருந்த யாழை வாங்கி, கோபத்துடன் கானல் வரி பாடத் தொடங்குகிறாள்.

இசைத்தமிழின் தொன்மை - 54பழந்தமிழிசையில் பண்கள்

சிலப்பதிகாரம் இசைத்தமிழ் நூல்தான் என்பதற்குரிய சிறப்பான ஆதாரங்கள்
1 – அரங்கேற்றுக்காதை,
2 – கானல்வரி,
3 – வேனிற்காதை,
4 – ஆய்ச்சியர் குரவை,
5 – குன்றக்குரவை,
6 – வேட்டுவவரி என வரும் ஆறு காதைகளும் சான்றாகும்.

சங்கம் மருவிய காலம் (300-700)
சிலப்பதிகாரத்தில் தமிழிசை
மணிமேகலை
சீவக சிந்தாமணி
காரைக்கால் அம்மையார் பாடல்கள்
குடுமியான்மலை கல்வெட்டு
திருமந்திரம்

அகத்தியர் காலத்தில் 108 பண்கள் இருந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

பண்டைத் தமிழகத்தில் 11,999 பண்கள் இருந்தமையை அடியார்க்கு நல்லார் உரை பதிவுசெய்திருக்கின்றது.

முன்னூற்றுக்கும் குறைவான பண்களே இப்போது இசைக் கலைஞர்களின் அறிவுக்கு எட்டுவனவாக உள்ளன.

பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசைநூல்கள் தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக அமைகின்றன.

தெள்ளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் பன்னிரு திருமுறைகளில் உள்ள 18,350 பாடல்களும், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்களாகும்.

பண்களுக்கு ஆதியில் யாழ் என்றும் பின்னர் பாலை என்றும் இன்று மேளகர்த்தா இராகம் என்றும் பெயரும் வழங்கி வருகின்றது.

ஏழ் பெரும் இராகங்களே பழந்தமிழ் இசையில் 2000 ஆண்டுகட்கும் முன்னர் தோன்றிய ஆதி ஏழ்பெரும் இராகங்கள் ஆகும்.

தமிழ் இசையின் சிறப்பான பாலைகளான ஏழ்பெரும் பாலைகள் முறையே,
1. செம்பாலை (அரிகாம்போதி)
2. படுமலைப்பாலை (நடபைரவி)
3. செவ்வழிப்பாலை (இருமத்தி மத்தோடி)
4. அரும்பாலை (சங்கராபரணம்)
5. கோடிப்பாலை (கரகரப்பிரியா)
6. விளரிப்பாலை (தோடி)
7. மேற்செம்பாலை (கல்யாணி)
எனச் சிலம்பு அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன.

ஆம்பல் பண், காஞ்சிப் பண், காமரம், குறிஞ்சிப் பண், செவ்வாழி பண், நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன.

பண்டைய தமிழகத்தில் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொரு இசைகளிருந்ததாக (ராகம்) சிலப்பதிகாரம் கூறுகிறது.

பிங்கலந்தையில் 103 தாய்ப்பண்களும் (மேளகர்த்தா இராகங்கள்) பன்னீராயிரம் பண்களும் குறிப்பிடப்படுகின்றன.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்தனர். நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன.

களப்பிரர் பாளி மொழியையும், பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி, தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக்காலப் பகுதியினை சங்கம் மருவிய காலம் அல்லது “இருண்ட காலம்” எனக் குறிப்பிடுவர்.

இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின. காரைக்காலம்மையாரும் திருமூலரும் இக்காலப் பகுதியில் வாழ்ந்தனர்.

சங்கமருவிய கால இலக்கியங்கள் பக்தியைப் பொருளாகக் கொண்டிருப்பதும் இக்கால இலக்கியங்களின் பண்பாக அமைகின்றது. அதாவது சங்கமருவிய கால முற்பகுதியிலே சமண, பௌத்த துறவோர்கள் அறப் போதனைகள் மூலம் தமது சமயத்தை வளர்த்தார்கள். இதனால் சைவ, வைணவ வளர்ச்சி குன்றியது.

சைவத்தை வளர்க்க காரைக்கால் அம்மையாரும், வைணவத்தை வளர்க்க பொய்கையாழ்வார், புதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரும் முயன்றார்கள்.

காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை,திருவாலங்காட்டுமூத்த திருப்பதிகம் ஆகியவற்றையும் முதலாழ்வார் மூவர் முதலாம், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகளையும் பாடியுள்ளார்கள்.

இவ்வாறு பக்தியைப் பொருளாகக் கொண்ட இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றமையும் சங்கமருவிய கால இலக்கியங்களின் பண்பாகும்.

தமிழர் வழிபாட்டு முறையை இசையிலிருந்து பிரிக்க முடியாது என்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாத சேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராசஇராச சோழனின் பெரு முயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டளவில் வெளிக் கொணரப்பட்டவையே.

அவற்றில் பண்ணிசை ஏதென்று அறியாத பதிகள் இருக்கக் கண்டு, அச்சோழன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த மதங்க சூளாமணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படிப் பணிக்க, அவர் வரையறுத்தப் பண் வரிசையிலேயே அவைகள் இன்றும் பாடப்படுகின்றன.

பத்து பத்தாகப் பாடல்களைப் பாடும் பதிகங்கள் என்ற முறையின் முன்னோடியாகச் சொல்லப்படுபவர் காரைக்காலம்மையார் என்று போற்றப்படும் புனிதவதியார் ஆவார்.

இவர் பாடிய பதிகங்கள் “மூத்த திருப்பதிகங்கள்” என்று அழைக்கப்படும்.

அம்மையார் வாழ்ந்த காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும். இவர் தெய்வத்தைப் பண்ணிசையில் பாடி வழிகாட்டினார்.

இவர் பாடிய பதிகங்கள் “மூத்த திருப்பதிகங்கள்” என்று அழைக்கப்படும்.

இவரைத் தொடர்ந்து சைவ சமயத்தின் நான்கு தூண்களாக சொல்லப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களில் முதல் மூவர் பல பதிகங்களைத் தமிழ்ப்பண்ணிசையில் பாடியிருக்கின்றனர்.

தேவாரப்பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராசராச சோழன் தொடங்கி பல அரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட ஓதுவார் என்னும் இசைக்கலைஞர்களை நியமித்தனர்.

இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது.

சைவ நாயன்மார்களால் தமிழ் இசை முறைப்படி தேவாரப் பாடல்கள் காலந்தோறும் இசைக்கப்பட்டன.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறு இசைக்கருவியோடு இணைந்து அமைந்தது ஆகும்.

கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம் ஓதப் பெற்றததையும் தஞ்சைப் பெரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.

பிற்காலத்து அருணகிரி நாதர் தம் திருப்புகழ் முழுவதாயும் பல்வேறு சிவத்தலங்களில் இசைமழைப் பொழிந்து கொட்டியதை அவர்தம் திருப்புகழ் வரலாறு எடுத்துரைக்கிறது.

திருநாவுக்கரசர் அருளியத் தமிழ்ப் பதிகமான தேவாரத்தில் அதிகமாக இருபத்தோரு பண்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

சிலர் இருபத்துநான்கு என்றும், இன்னும் சிலர் இருபத்தேழு என்றும் கூறுகின்றனர்.

எப்படியாயினும் தேவாரம் முழுதுமே ஒரு முறையான பண்ணிசை வரிசையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஒன்பதாவது திருமுறையில் சொல்லப்படும் “சாளராபாணி” என்னும் பண் மற்ற திருமுறைகளில் பயன்படுத்தப்படவில்லை.


இசைத்தமிழின் தொன்மை - 56இசைத்தமிழின் தொன்மை – 56

காரைக்கால் அம்மையார்

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
திருவாலங்காட்டில் சிவபெருமான் நடனமாடுவதைக் கண்டு காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகும். பதிக முறையில் பாடப்பெற்ற முதல் பாடல்கள் என்பதால் இதனை ஆதிப்பதிகம் என்றும் அழைப்பர்.

முதன் முறையாக இறைவனை இசையால் பாடியதால் காரைக்கால் அம்மையாருக்கு தமிழிசையின் தாய் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.

அம்மையாரைப் பின்பற்றியே இறைவனை இசையால் பாடி தேவாரம் பாடியுள்ளார்கள் தேவார மூவர்.

இந்நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான பதிகம் முறையில் பாடப்பெற்றது.

திருவாலங்காடு என்னும் ஊர்க் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்ட நூல் இது.

இதனைப் பாடியவர் காரைக்கால் அம்மையார். இவர் காலம் 7ஆம் நூற்றாண்டின் பிற்பாதி. இந்த நூலில் 10 பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடலாக அடைவுப்பாடல் ஒன்றும் உள்ளது.

ஆதிப்பதிகம்
பதிகம் என்றால் பத்து பாடல்களின் தொகுப்பாகும். இதன் இறுதியில் திருக்கடைகாப்பு எனும் பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூறப்படும்.

காரைக்கால் அம்மையார் இரண்டு பதிகங்களைப் பாடியுள்ளார். காரைக்கால் அம்மையார் பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும்.

அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது.

திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.

இப்பதிகங்களில் புனிதவதி என்று தன்னுடையப் பெயரைக் குறிப்பிடாமல் காரைக்கால் பேய் என்றே அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.

முதற்பதிகத்தில் நைவளம் எனும் பண்ணில் காரைக்கால் அம்மையார் பாடியுள்ளார்.

இரண்டாம் பதிகம் இந்தளம் எனும் பண்ணில் பாடப்பெற்றதாகும். இசையோடு இறைவனைப் பாடும் மரபு இந்த மூத்த திருப்பதிக பாடல்களிலிருந்தே தோன்றியதாகும். அதனால் காரைக்கால் அம்மையாரை தமிழிசையின் தாய் என்று போற்றுகின்றனர்.

கொங்கை திரங்கி, எட்டி இலவம் ஆகியவற்றில் தொடங்கும் பதிகங்கள் மூத்த திருப்பதிகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இறைவனை பத்துப் பாடல்களைக் கொண்ட தொகுதியால் போற்றுவதை பதிகம் என்கின்றனர்.

இந்த முறையைப் பின்பற்றியே தேவார மூவரும் பாடியுள்ளனர். “செடித்தலைக் காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவரே” என்று இந்த அடைவுப்பாடல் குறிப்பிடுகிறது.

“ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே” என்னும் தொடரோடு 10 பாடல்களும் முடிகின்றன.

திருவிரட்டை மணிமாலை
திருவிரட்டைமணிமாலை என்பது காரைக்கால் அம்மையாரால் பாடப்பெற்ற நூலாகும். இந்நூல் சைவ சமய பதினோராம் திருமுறையைச் சேர்ந்தது. இந்நூல் தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான இரட்டைமணிமாலையைச் சேர்ந்ததாகும்.

காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் சிறப்புகளைப் புகழ்ந்து இந்நூலில் எழுதியுள்ளார். காரைக்கால் அம்மையார் பேயுருவம் பெற்றதும் திருவிரட்டை மணிமாலை எனும் நூலைப் படைத்தார். அதில் பேயுருவம் பெற்றதைப் பற்றி பாடியுள்ளார்.

அடுத்ததாக இறைவனின் புகழைத் திருவிரட்டை மணிமாலையில் குறிப்பிடுகிறார்.

அற்புதத் திருவந்தாதி
அற்புதத் திருவந்தாதி என்னும் நூல் சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.

இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார்.

இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப்பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப் படுகிறது.

அற்புதத் திருவந்தாதி அந்தாதி முறையில் பாடல்பெற்றது. இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது.

இதன் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு. இந்நூல் 101 வெண்பாப் பாடல்களைக் கொண்டது.

இவ்வந்தாதியில் சைவ நெறியைப் பற்றியும், சிவபெருமானை முழுமையாகச் சரணடைவதைப் பற்றியும் கூறுகின்றன.

சிவபெருமானின் திருஉருவச் சிறப்பும், திருவருட் சிறப்பும், இறைவனின் குணம் ஆகியவற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது.

இதில் காரைக்கால் அம்மையாரின் சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது.

அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன.

இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள.

இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன.

இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் (தூற்றுவது போலும் போற்றும் பாக்களும்) உள.

அற்புதத்திருவந்தாதியில் ஒரு பாடல்:

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினால் காரைக்கால் பேய்சொற் – பருவுவார்
ஆராத அன்பினோடு அண்ணலைச்சென்(று) ஏத்துவார்
பேராத காதல் பிறந்து.

இசைத்தமிழின் தொன்மை - 57

இசைத்தமிழின் தொன்மை – 57

திருமூலர் அல்லது திருமூல நாயனார்
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.”

“சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளஃன் றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற அங்கணனே”

சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் இவரும் ஒருவராவர்.இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும்.

இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

திருமூல சித்தர்

திருமூலர் பெயரில் 12-க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. இவை யாவும் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

இவர் திருமூலர் அல்லர். திருமூல சித்தர்.

வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை.

திருமூலர் திருமந்திரம் கலிவிருத்தம் என்னும் யாப்பினால் ஆன நூல்.

பிற்காலத்தில் கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர். இப்படி உருவான ஒரு புலவரின் பெயர்தான் திருமூல சித்தர்.

*******************

திருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் ஒருவர்.

அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார்.

செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாத் கோவில், அவிமுத்தம்(காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப் பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார்.

பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார்.

எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார்.

பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.

தில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்து, உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருவாவாடு துறையை அடைந்தார்.

திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத்திருப்பதியினை விட்டு நீங்காதொரு கருத்தும் தம் உள்ளத்தே தோன்ற அங்கே தங்கியிருந்தார்.

ஆவடுதுறையிறைவரை வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார்.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் விடம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனமாகி வருந்தின.

மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் ‘இப்பசுக்கள் உற்ற துயரத்தினை நீக்குதல் வேண்டும்’ என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது.

‘இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா’ எனத் திருவுளத்தெண்ணிய தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலான தோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு எழுதலும் பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களைப்பினாலே வாலெடுத்து துள்ளிக்கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன.

திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்றாக மேய்த்தருளினார்.

வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.

சூரியன் மேற்றிசையை அணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைவனவாயின.
அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின்சென்ற சிவயோகியார். பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனியே நிற்பாராயினர்.

அந்நிலையில், மூலனுடைய மானமிகு மனையறக் கிழத்தியாகிய நங்கை, ‘என் கணவர் பொழுது சென்ற பின்னரும் வரத் தாழ்ந்தனரே அவர்க்கு என்ன நேர்ந்ததோ’ என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தையடைந்தாள்.

தன் கணவது உடம்பிற் தோன்றிய உள்ளுணர்வு மாற்றத்தைக் கண்டு ‘இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்’ என்று எண்ணி அவரைத் தளர்வின்றி இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடுவதற்கு நெருங்கினாள்.

திருமூலராகிய சிவயோகியார், அவள் தம்மைத் தீண்டவொண்ணாதவாறு தடுத்து நிறுத்தினார்.

தன் கணவனையன்றி மக்கள் முதலிய நெருங்கிய சுற்றத்தார் ஒருவருமின்றித் தனியாளாகிய அவள், அவரது தொடர்பற்ற நிலைகண்டு அஞ்சி மனங் கலங்கினாள்.

‘உமது அன்புடைய மனைவியாகிய எளியோனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்கு எத்தகைய பெருந் துன்பத்தைச் செய்து விட்டீர்’ என்று கூறிப்புலம்பி வாட்டமுற்றாள்.

அந்நிலையில் நிறைதவச்செல்வராகிய திருமூலர், அவளை நோக்கி ‘நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவேதும் இல்லை’ எனக் கூறிவிட்டு, அவ்வூரில் அருந்தவர் பலரும் தங்கியிருந்தற்கென அமைந்துள்ள பொதுமடத்திற் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்திருந்தார்.

தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ட மூலன் மனைவி, அது பற்றி யாரிடத்தும் சொல்லாமலும், தவ நிலையினராகிய அவர் பால் அணையாமலும் அன்றிரவு முழுவதும் உறங்காதவராய்த் துயருற்றாள். பொழுது விடிந்ததும் தன் கணவர் நிலையை அவ்வூரிலுள்ள நல்லோரிடம் எடுத்துரைத்தாள்.

அதுகேட்ட சான்றோர், திருமூலரை அணுகி அவரது நிலைமையை நாடி, ‘இது பித்தினால் விளைந்த மயக்கமன்று’ பேய் பிடித்தல் முதலாகப் பிறிதொரு சார்பால் உளதாகியதும் அன்று; சித்த விகாரக் கலக்கங்களையெல்லாம் அறவே களைந்து தெளிவு பெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்து உடையவராய் இவர் அமைந்துள்ளார்.

இந்நிலைமை யாவராலும் அளந்தற்கரியதாம்’ எனத் தெளிந்தனர். முற்றுணர்வுடையவராக விளங்குகின்றார்.

ஆகவே முன்னை நிலைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய வாழ்வில் ஈடுபடுவார் அல்லர்’ என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள்.

சாத்தனூரில் பொதுமடத்தில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர், யோகம் கலைந்து எழுந்து முதல் நாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தம் உடம்பினைச் சேமமாக வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார்.

அங்கு அதனைக் காணாதவராகி, அதுமறைந்த செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.

அந்நிலையில் தம்மைப் பின் தொடர்ந்து வந்த ஆயர்குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதை அவர்கட்கு விளங்க அறிவுறுத்தருளினார்; அவர்கள் எல்லாரும் தம்மைவிட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விட்டத்தை விட்டகன்று திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்.

அத்திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் அம்மையப்பராகிய இறைவரை வணங்கி அத்திருக்கோயிலின் மேற்கில் மதிற்புறத்தேயுள்ள அரச மரத்தின்கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்து அமர்ந்து, உள்ளக் கமலத்தில் வீற்றிருந்தருளும் அரும்பொருளாகிய சிவபுரம் பொருளோடு இரண்டறக்கூடி ஒன்றியிருந்தார்.

இங்கனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலநாயனார் ஊனோடு தொடர்ந்த இப்பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து விளங்கும் நல்ல திருமந்திரமாலையாகிய நூலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே

என்னும் திருப்பாடலைத் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்கள் அருளிச் செய்தார்.எல்லாம் வல்ல பரம்பொருள் அன்பே உருவானவர் என்பதை தம் பாடல் மூலம் விளக்குகிறார்.

அப்பாடல் பின் வருமாறு

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
இவ்வாறாக தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரத் திருமுறையினை நிறைவுசெய்து சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலை அடைந்து அம்முதல்வனுடைய திருவடி நீழலில் என்றும் பிரியா துறையும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்று இனிதிருந்தார்.

”குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளஃன் றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற அங்கணனே” என்று திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார்.

 

இசைத்தமிழின் தொன்மை - 58இசைத்தமிழின் தொன்மை – 58

திருமந்திரம் – நூல் வரலாறு
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே” (திருமந்திரம் : 81)

“உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே”.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் முதன்முறையாக அயலவர்க்கு அடிமையாயிற்று.

பாண்டிய நாடும் சோழநாடும் களப்பிரர் என்ற கூட்டத்தார்க்கு அடிமைப்பட்டன. நடுநாடும் தொண்டைநாடும் பல்லவர்க்கு அடிமைப்பட்டன.

இவர்கள் இருவரும் வேற்றுமொழியினர். பிராகிருதம் இவர்களின் ஆட்சிமொழியாயிற்று.

பாலிமொழியும் வடமொழியும் இவர்களால் பேணப்பட்டன. தமிழ் வளர்ச்சி இதனால் தடைப்பட்டது.

சமணமும் பௌத்தமும் வைதீக மதத்தை எதிர்த்துப் போராடிய காலம் இதுவாகும்.

காஞ்சியில் வடமொழிக் கல்லூரி செயல்பட்டது. அது கடிகா எனப்பட்டது.

புதுச்சேரியை அடுத்த பாகூரிலும், தொண்டை நாட்டுச் சோழ சிங்கபுரத்திலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன.

தமிழ் மொழிக்கு இத்தகைய வாய்ப்புச் சிறிதும் இல்லை. மாறாக மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கம் வீழ்ச்சியுற்றது.

இத்தகைய இருண்ட சூழ்நிலையில், சமணர், பௌத்தர், சைவர், வைணவர் ஆகிய சமயத்தவர் தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் நூல்கள் இயற்றினர்.

அவர்களுள் சைவ சமய முன்னோடிகளாகத் திகழ்ந்தோர் இருவர். அவர்கள் காரைக்கால் அம்மையாரும், திருமூலநாயனாரும் ஆவர்.

இவ்விருவரும் களப்பிரர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஆண்ட இருண்ட காலப்பகுதியில் வாழ்ந்து, சைவ சமயத்தின் எழுச்சிக்கு அடிக்கல் நாட்டினர்.

இவர்கள் காலத்தில் வாழ்ந்த சமணச் சான்றோர் சிலர் எலி விருத்தம், கிளி விருத்தம், நரி விருத்தம் என்ற பெயர் கொண்ட நூல்களை இயற்றியுள்ளனர்.

சமயச் சார்பற்ற நூல்கள் பல இயற்றப்பட்டிருப்பினும் அவை கிட்டாது மறைந்தன.

திருமந்திரம் தமிழ் ஆகம நூல். வேதம் பொது நூல் என்றும், ஆகமம் சிறப்பு நூல் என்றும் சைவர் கூறுவர்.

திருமந்திரத்தில் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தந்திரம் என்பது பெயர். இதில் 232 அதிகாரங்கள் உள்ளன. இப்பொழுது இதில் 3100 செய்யுட்கள் உள்ளன.

“மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்” என்பதனால் இதற்கு உரியவை 3000 செய்யுட்களே என்று அறியலாம்.

எஞ்சியவை பிற்சேர்க்கையாம். ஆசிரியர் இதற்கு இட்ட பெயர் திருமந்திர மாலை.

தமிழ் மூவாயிரம் என்றும் இதனைக் கூறுவர். தமிழில் தோன்றிய ஒன்பது ஆகமங்களே ஒன்பது தந்திரங்களாக இயற்றப்பட்டன என்பது அறிஞர் கருத்து.

இதற்கு வடமொழியில் மூலநூல் இல்லையென்பர்.

முழுத்தமிழில் பாடினார் திருமூலர் என்ற நம்பியாண்டார் நம்பியின் வாக்கினை இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

சுந்தர மூர்த்தி நாயனார், “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” என்று தம் பேரன்பு தோன்றக் கூறினார்.

மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்தார். ஆண்டுக்கு ஒரு செய்யுளாக 3000 செய்யுட்களை இயற்றினார்.

அங்ஙனம் இயற்றப்பட்டதே திருமந்திரம் என்னும் ஆகம நூல் என்பார் பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார்.

சுந்தரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டினர். அவர் திருமூலருக்கு வணக்கம் சொல்வதனால் திருமூலர் காலத்தால் முந்தியவர்.

அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடல்களில் திருமூலரின் செல்வாக்குக் காணப்படுவதால், அவர்களின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர் திருமூலர் என்று தெரிகிறது.

திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்பர் அறிஞர்.

திருமந்திரத்தின் பாடுபொருள்

சைவ சமயத்தின் தத்துவத்தைச் சைவசித்தாந்தம் என்பர். பதி, பசு, பாசம் என்ற மூன்றும் இச்சித்தாந்தத்தின் அடிப்படைக் கூறுகள்.

(பதி – இறைவன்; பசு – உயிர்கள்; பாசம் – ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள்).

திருமந்திர நூலின் பெரும் பகுதி சைவ சமயத் தத்துவங்களை விளக்குவது.

அத்துடன், எல்லாருக்கும் பொதுவான அறக் கருத்துகளும் இதில் உள்ளன.

அன்புடைமை, அருள் உடைமை, நிலையாமை, கொல்லாமை, புலால் மறுத்தல் முதலானவை இவற்றுள் சிலவாகும்.

இந்நூலின் முதல் நான்கு தந்திரங்கள் சிவஞானத்தைப் பெற விரும்புவோர் அதற்குத் தம்மைத் தகுதியாளராக்கிக் கொள்ளுதற்கு உரிய வழிகளை விளக்குகின்றன.

ஐந்தாவது தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகளை விவரிக்கின்றது.

ஆறு முதல் ஒன்பது இறுதியான தந்திரங்கள் ஞானம் பெறும் நிலையில் உணர்ந்து பெறத்தக்கனவாக உள்ள நல்ல பயன்கள் பற்றி உணர்த்துகின்றன.

ஆசனம், பிராணாயாமம், தியானம், சமாதி முதலியன பற்றியும், எண்பெரும் சித்திகள் பற்றியும், உடம்பைப் பேணிக் காக்கும் வழி பற்றியும் இந்நூல் விளக்கியுள்ளது.

சைவ சமயத்தின் நான்கு பிரிவுகள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகள், அந்த நெறிகளில் நிற்பார் அடையும் நான்கு நிலைகள் ஆகியன ஐந்தாவது தந்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன.

இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, பாசத்தின் பண்பு, குருவின் இன்றியமையாமை, நல்வினை தீவினைகள், இவற்றின் நீக்கம், ஞானம் கைவரப்பெற்ற சிவயோகிகளின் பெருமையும், தன்மைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

திருமந்திரம் கூறும் தத்துவங்களில் சிலவற்றை இங்கே பார்த்தோம்.

திருமந்திரச் சிந்தனைகள்

திருமந்திரம் உலகுக்கு வழங்கும் உயர்ந்த கருத்துகள் மிகப் பல. சான்றுக்குச் சில மட்டுமே இங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன

“அன்பும் சிவமும் ஒன்றே”

அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறிவில்லாதவர் என்றும், அன்பும் சிவமும் ஒன்று என்பதே உண்மையென்றும், இதனை உணர்ந்தார் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பர் என்றும் கூறுகின்றார் திருமூலர்.

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.

இரு கோயில்கள்
உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர். அவை, 1. படமாடுகின்ற கோயில் 2. நடமாடும் கோயில். நடமாடும் கோயிலாவது உயிர்கள்.

குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது.

ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்”
சிவஞானம் பெற்றுப் பிறவியை நீக்குவதற்கு உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்று வற்புறுத்துகிறார் திருமூலர்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடம்பு என்பது இழிவானதன்று.
அது இறைவனுக்கு உரிய திருக்கோயில் என்பார் அவர்.

ஆசை அறுமின்
ஆசையே துன்பத்திற்கு அடிப்படை என்பர்.
ஆசை அற்றால் அனைத்துத் துன்பங்களும் அழிந்துபோகும்.
எஞ்சி நிற்பது பேரானந்தமே.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!

ஒன்றே குலம் ஒருவனே கடவுள்

தமிழர் என்றும் எண்ணிப் பெருமைப்படத்தக்க பொதுமைத் தத்துவத்தை வழங்கியவர் திருமூலர்.

சாதி, மதம், நாடு, மொழி என்று பல தடைச் சுவர்களால் சிதறிக்கிடக்கும் மனித குலத்தை நோக்கி,

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை

என்றும் நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் பின்பற்றத்தக்க உயர்ந்த நெறிகள் பலவற்றை உள்ளடக்கியது திருமந்திரம் என்று குறிப்பிட்டோம். சில பகுதிகள் வருமாறு:-

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் (85)

ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் (250)

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் (1823)

மரமும் யானையும் உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது.

மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை, .

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே
(திருமந்திரம் : -2290)

திருமந்திரச் சொல்லாட்சிகள்:

வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் தெளிந் துணர்ந்த சிவஞானச் செல்வராகிய திருமூலர், தாம் சிவயோக நிலையிலிருந்து சிந்தித்துணர்ந்த சிவாகம உண்மைகளை இந்நாட்டவர் யாவரும் ஓதியுணர்ந்து உய்தல் வேண்டும் என்னும் அருள்நோக்குடன் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தமையால், அவரருளிய பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம்; ஆணவம், கன்மம், மாயை; சித்து, அசித்து; சரியை, கிரியை, யோகம், ஞானம்; சத்து, அசத்து, சதசத்து; வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்; நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம்; சத்தாதி வாக்கு மனாதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம் விஞ்ஞானர், பிரளயாகலத்து அஞ்ஞானர்; இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி; கவச நியாசங்கள் முத்திரை; பத்மாசனம், பத்திராசனம், சிங்காதனம்; பூரகம், கும்பகம், ரேசகம் என்பன முதலாகவுள்ள வடசொற்களும் சொற்றொடர்களும் அக்காலத்துப் பொது மக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன.

இசைத்தமிழின் தொன்மை – 59இசைத்தமிழின் தொன்மை – 59

பழந்தமிழிசையில் பண்கள்

அகத்தியர் காலத்தில் 108 பண்கள் இருந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.பண்டைத் தமிழகத்தில் 11,999 பண்கள் இருந்தமையை அடியார்க்கு நல்லார் உரை பதிவுசெய்திருக்கின்றது.

முன்னூற்றுக்கும் குறைவான பண்களே இப்போது இசைக் கலைஞர்களின் அறிவுக்கு எட்டுவனவாக உள்ளன.

பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசைநூல்கள் தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக அமைகின்றன.

தெள்ளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் பன்னிரு திருமுறைகளில் உள்ள 18,350 பாடல்களும், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்களாகும்.

தேவார திருவாசகங்கள் பல்வேறு பண்களுடனும், தாளங்களுடனும் அமைந்து, தமிழிசையின் மேன்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

இவை தோன்றிய பக்தி இலக்கிய காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே இலங்கிநின்றது தமிழ் இசை மட்டுமேயாகும்.

பன்னீராழ்வார்கள் பாடியருளிய அழகான பிரபந்தங்கள், அருணகிரியாரின் திருப்புகழ், சித்தர் பாடல்கள், கும்மி, சிந்து, குறவஞ்சி, பள்ளு, தெம்மாங்கு, நாட்டுப் பாடல்கள், கீர்த்தனைகள், நல்ல தழிழில் வல்ல புலவர்களால் கொள்ளை கொள்ளையாக எழுதிக் குவிக்கப்பட்டுள்ள தனிப்பாடல்கள், முறையான பண்ணோடு அழகாகப் புனையப்பட்டுள்ள தொகையான பண்ணிசைப் பாடல்கள், நித்தமும் தோன்றிக்கொண்டிருக்கும் புத்தம் புதிய இசைப் பாடல்கள், ஆகிய எல்லாமே இசைத்தமிழுக்கு இனிமை சேர்த்துக்கொண்டிருக்கின்றன.

சிலப்பதிகாரத்தின் இசை நுணுக்கங்களை ஆராய்ந்த முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட இணையற்ற மகுடமெனத் திகழ்கிறது.

இவ்வாறு பல்லாயிரம் பல்லாயிரமாக இசைப்பாடல்கள் தமிழ்மொழியில் குவிந்து கிடக்க, அவை மறந்து, நிலை குலைந்து தமிழ் இசை மேதைகளும், நாட்டியக் கலை மேதை களும் கருத்துத் தெரியாத வேற்று மொழிகளிலே பாடுகிறார்கள், பாட்டுக்கு ஆடுகிறார்கள், தமிழ் மொழியைச் சாடுகின்றார்கள், தமிழ் இசைக்குத் திரையை மூடுகின்றார்கள்.

தெலுங்கிலே பாடிக்கொண்டு கர்நாடக இசை என்றால் அது தெலுங்கு மொழிக்குச் சொந்தமானதுதான் என்று எண்ணுகின்ற தமிழர்களுக்கோ எண்ணிக்கையில்லை.

தமிழ் மொழியிலேயே வேர் ஊன்றியது.
தமிழ் மொழியிலேயே தழை விட்டது, இலை விட்டது,
கிளை விட்டது. தமிழ் மண்ணிலே பூத்து மணம் பரப்பியது.

அந்த மணத்தினால் கவரப்பட்ட வட நாட்டார் மணம்வந்த திசையைப் பார்த்தார்கள். அந்தத் திசையிலே தமக்கு அண்மையில் இருந்தது கர்நாடக தேசம். எனவே கர்நாடக தேசத்திலிருந்தே அது வருவதாக எண்ணி அதனைக் கர்நாடக இசை என்று அழைத்தார்கள்.

தென்னாடு முழுவதுமே தமிழ்நாடாக இருந்த காலத்திலே செழிப்புற்று இருந்தது தமிழ் இசை. தமிழ்மொழியிலிருந்து கன்னடமும், தெலுங்கும் பிறந்த பின்னரும், தனித்தனி நாடுகளாய்ப் பிரிந்த பின்னரும்தமிழ் இசை தழைத்தோங்கி வளர்ந்தது.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின.

அப்பரும், சம்பந்தரும், சுந்தரரும், மணிவாசகரும், பன்னீராழ்வார்களும், அருணகிரிநாதரும் பாடிய பல்லாயிரக்கணக்கான பக்தி இலக்கியங்களிலே தமிழிசையின் புகழ் இந்திய துணைக் கண்டத்தையும் தாண்டி எல்லை விரிந்து பரவியது.

12ஆம் நூற்றாண்டில் கி.பி. 1116 முதல் 1127 வரை மகாராட்டிர நாட்டினை சோமேஸ்வர புல்லோகமால் என்ற அரசன் ஆட்சிசெய்தான். இசையிலே மிகுந்த ஈடுபாடு கொண்ட அவன் ‘மானச உல்லாசம்’ என்ற நூலை எழுதியவன்.

தென்னிந்தியாவில் சிறப்புற்றோங்கிய செந்தமிழ் இசையால் கவரப்பட்ட அவன் அங்கிருந்து இசைவாணர்களை அழைப்பித்து அந்த இசையின்பத்திலே மூழ்கி இன்புற்றான்.

அவனது நாட்டுக்குத் தெற்குத்திசையிலேயுள்ள தென்னிந்தியாவிலே வளர்ந்து பரவிநின்ற தமிழிசையை, அவனுக்குத் தென்திசையிலே அருகேயிருந்தது கர்நாடகம் என்பதாலும், கர்நாடகத்திலும், தெலுங்கு தேசத்திலும்கூட அக்காலத்தில் தமிழிசையே வழக்கத்தில் இருந்தமையாலும் அந்த இசைக்குக் கர்நாடக இசையென்று பெயரிட்டு அழைத்தான்.

தென்னாடுகளெல்லாம் அந்நாளிலே திகழ்ந்திருந்தது தமிழிசை ஒன்றுதான் என்பது அந்த மன்னனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் கர்நாடக இசையென்று அவன் அழைத்த பெயரோடு, தென்னாட்டு இசை வடநாட்டாருக்கு அறிமுகமானது. கர்நாடக சங்கீதம் என்று வடநாட்டில் விளங்கியது.

தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம்.

3 அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்களும்

தமிழரின் வாழ்வியலக்கணமான திருக்குறள் 3 பால்கள், 133 அதிகாரங்கள்,1330 குறள்களையும்,

சிலப்பதிகாரம் 3 காண்டம், 30 காதைகள் 5001 வரிகளையும்,

மணிமேகலை 30 காதைகள், 4755 வரிகளையும்,

சீவகசிந்தாமணி 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்.

பெரிய புராணம் 2 காண்டங்கள், 13 சருக்கங்கையும், 4286 பாடல்களையும்,

கம்பராமாயணம் 6 காண்டங்கள், 118 படலங்கள், 10589 பாடல்களையும்,

நல்லாப்பிள்ளை பாரதம் 18 பருவங்கள், 11000 பாடல்களையும்.

கந்தபுராணம் 6 காண்டம், 135 படலங்கள், 10345 பாடல்களையும்,

திருவிளையாடற்புராணம் 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்களையும்.

சீறாப்புராணம் 3 காண்டங்கள், 92 படலங்கள், 5027 பாடல்களையும்,

இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள், 47 படலங்கள்,3776 பாடல்களையும்,

இராவண காவியம் 5 காண்டம், 57 படலங்கள், 3106 விருத்தங்களையும்,

ஏசு காவியம் 5 பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகளையும் கொண்டுள்ளது.

*தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.

*தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ்.

* சைவம் பன்னிரு திருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப் பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.

* தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக் கீர்த்தனைகள், இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை என்பதே தமிழின் தனிசிறப்பு.

பன்னிரு திருமுறைகள் பற்றி அடுத்துவரும் தொடர்களில் விரிவாகப் பார்ப்போம்.

இசைத்தமிழின் தொன்மை – 60இசைத்தமிழின் தொன்மை – 60

பழந்தமிழிசையில் பண்கள்

பக்தியின் தோற்றம்

வேதம் இந்திய மண்ணில் தோற்றம் பெற்று ஒரு சமய நெறியாக வளர்ச்சியுற்ற காலத்தைக் கணிப்பது கடினம். இந்நெறி இந்தியா முழுவதும் தொன்று தொட்டு இருந்து வந்ததை தமிழின் மிகத்தொன்மையான தொல்காப்பியச் செய்யுள் சுட்டுகிறது.

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(தொல்காப்பியம் – பொருள் – அகத்திணை – 05)

[உரை]:
மாயோன் மேவுவது காடுடைய நிலம்.

சேயோன் மேவுவது மேகம் சூழ்ந்த மலை உள்ள நிலம்.

தேவர் குல மன்னன் மேவுவது மிகுதியான நீர் உள்ள நிலம்.

வருணன் மேவுவது மணல் நிறைந்த நிலம்.

இந்த நான்கு நிலங்களும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர் சொன்ன முறைப்படி சொல்லப்படும்.

தமிழ் முனிவராகிய அகத்தியரின் மாணாக்கர் என்று அறியப்படும் தொல்காப்பியர் இங்கு வேத நெறித் தெய்வங்களை ஐந்திணைக் கடவுளாராகச் சுட்டுவதிலிருந்து, இவர் காலத்திற்கும் முற்பட்ட காலத்திலேயே வேத நெறி தமிழ் மக்களால் விரும்பி மேற்கொள்ளப்பட்டது என்பது நன்கு விளங்கும்.

“சமய உணர்வையும் தமிழையும் பிரிக்க முடியாது” என்ற பேருண்மையை முதன்முதலாக எடுத்தியம்பும் நூல் தொல்காப்பியம். குறிப்பாக, தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழகத்தின் பண்டைய இந்து சமய வழிபாட்டு உணர்வை சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளது.

தொல்காப்பியர், மாயோன் – சேயோன் – வேந்தன் – வருணன்; என்று நான்கு கடவுளரைப் பற்றி முதலில் கூறி, அக்கடவுளர் நெறியைப் போற்றி வணங்கிய நிலங்களைக் குறிப்பிடுகிறார்.

இந்த நூற்பாவின் படி,
– காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தின் கடவுளாக மாயோனாகிய திருமாலும்

– மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாக சேயோனாகிய முருகப்பெருமானும்

– வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் கடவுளாக “வேந்தன்” ஆகிய இந்திரனும்

– கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கடவுளாக வருண பகவானும் குறிக்கப்பட்டுள்ளனர்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து காணப்பெற்ற பாலைப் பகுதியில் “கொற்றவை” வழிபாடு நிகழ்ந்ததாகவும் சங்க நூல் வழியும், சங்கம் சார்ந்தசிலப்பதிகாரம் போன்ற நூல் வழியும் அறிய முடிகிறது.

நில இயற்கை அமைப்பை ஒட்டி, இயற்கையோடு இயைந்த தெய்வ வழிபாட்டு நெறியைத் தொல்காப்பியம் மூலம் அறிகிறோம்.

தொல்காப்பியர் காலத்திலேயே தமிழக மக்கள், பாரத தேசிய ஒருமைப்பாட்டு உணர்வைச் சமயத் துறையில் கண்டுள்ளனர் என்பது பேருண்மையாகும்.

சூரியனையும், இந்திரனையும் புகழும் “ரிக்வேதம்” போல, தொல்காப்பியமும் சூரியன், இந்திர வழிபாட்டைக் குறிப்பிடுகிறது.

சூரிய வழிபாடு தமிழக மக்களிடம் நிலவியது என்ற உண்மையை தொல்காப்பியம், புறத்திணை இயலில் “கொடிநிலை வள்ளி” என்ற நூற்பா நன்கு விளக்குகிறது.

இறையனார் களவியல் உரை நக்கீரனார் இயற்றியது.

இவ்வுரை மூலம், சிவபெருமானே தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்தார் என்பது பெறப்படும் செய்தியாகும்.

திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெரிந்த முருகவேளும் தமிழ்ச்சங்கம் வளர வழிகாட்டினர்.

கடவுள் உணர்வுடன் தான், கடவுள் வழிகாட்டுதல் படிதான் சங்க இலக்கியங்கள் மலர்ந்தன என்பதை இறையனார் களவியல் உரை மூலம் நாம் தெளியலாம்.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத் தமிழக மக்கள், நானிலங்களிலும் தெய்வ வழிபாட்டைப் போற்றினர் என்பதையும் தொல்காப்பிய இலக்கண நூலும், அதனைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் தெளிவுறுத்தும்.

சங்கப் பனுவல்களுள் பத்துப்பாட்டுள் ஒன்றான “திருமுருகாற்றுப்படை” தான் முதன்முதல் முருகப்பெருமானைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும்.

முருகப்பெருமானைப் பாராட்டும் நக்கீரர், பிற தெய்வங்களை இகழாமல், அவற்றையும் போற்றுவார். வைணவக் கடவுளான திருமால் அழகனையும் பாராட்டுகிறார் நக்கீரர்.

“பாம்பு படப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புல் அணி நீள் கொடிச் செல்வன்”

வேற்றுச் சமயக் காழ்ப்பின்றி, அனைத்துச் சமய உணர்வையும் மதிக்கும் சமய ஒருமைப்பாட்டு நெறிக்கு திருமுருகாற்றுப்படை வழிகாட்டுகிறது.

முருகப் பெருமானைப் பற்றி முதன்முதலில் எழுதப்பட்ட நூலாகிய திருமுருகாற்றுப்படை “உலகம்” என்றே தொடங்குகிறது.

நிலப்பகுப்பைக் கூறும் தொல்காப்பியம்,

– காடுறை உலகம் – மைவரை உலகம் – தீம்புனல் உலகம் – பெருமணல் உலகம் என்றே குறிப்பிடும்.

– திருக்குறளும் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்றே கூறும்.

– சங்கநூல் வழி, சமய வளர்ச்சி மேற்கொண்ட கம்பர் “உலகம் யாவையும்” என்றும்,

– சேக்கிழார் பெருமான் பெரியபுராண தொடக்கத்தில், “உலகெலாம்” என்றும் கூறியமை சமய வளர்ச்சி நிலைகளையும், அதன்வழி சமுதாய நெறிமுறை வளர்ந்த பாங்கையும் புலப்படுத்தும்.

ரோமன், கிரேக்கம், பாரசீகம், ஹீப்ரு. சமஸ்கிருதம், தமிழ், சீனம் ஆகியவை உலகத்தின் பழைய மொழிகள் ஒவ்வொரு மொழியும் தனியாக இலக்கண இலக்கிய நூல்களைக் கொண்டுள்ளன.

தமிழின் பண்டைய நூல்களில் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்து இல்லை.

ஆயினும் கடவுள் வாழ்த்துப்பற்றி குறிப்பிடுகின்றது.
“கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே”– (புறத்திணையியல் – சூத்திரம் 27)

தொல்காப்பியத்தில் சமயம், மதம் என்ற சொற்கள் இடம்பெறவில்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் குறிப்பிடப்படவில்லை. உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் எந்தக் குறிப்பும் இல்லை.

நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும், கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவை யாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று. எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியலை அன்றே கூறியிருக்கின்றார்.

“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”– (தொல். மரபியல் 1589)

ஆகவே பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை எனலாம். முதலில் இயற்கை என்பது நடுகல்லானது. தொல்காப்பியர் காலம் போலவே சங்க காலத்திலும் தமிழ் மக்களிடையே நடுகல் வழிபாடு இருந்திருக்கின்றது.

ஊருக்குப் புறத்தே இருந்த திடலில் வேங்கை மலர்களை வெள்ளிய பனந்தோட்டோடு விரவித் தொடுத்து மலையை அணிவித்து கோவலர் ஒரு வீரனுக்கு கல் நட்டதைக் கூறுகிறது.- புறப்பாடல் – 265.

இக்கற்களில் வீரனின் பெயரும், பெருமிதமும் எழுதப்பட்டு அணிமயிற் பீலியும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டன என அகப்பாடல் ஒன்று (67) சுட்டுகின்றது. மறக்குடி பிறந்த மக்கள் விழுப்புண்பட்டு வீழ்ந்த வீரனது பெயரும் பீடும் எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுதலன்றி நெல் சொரிந்து வழிபடும் தெய்வங்கள் வேறு இல்லை என்று புறம் 335 கூறுகின்றது.

“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே” – புறநானூறு – 335

இந்த நடு கல்லுகளுக்கு சில சக்திகள் இருப்பதாகக் கருதிய சங்க கால மக்கள் அதை வழிபட்டனர். இதுவே தென்னிந்தியாவின் லிங்க வழிபாட்டிற்கு நுழையப்பட்டுள்ளதாகவும் கருத முடிகிறது. நாளடைவில் நடுகல் சிறுதெய்வ, பெருந்தெய்வ வழிபாடாக வளர்ச்சி பெற்றது.

ஆரியக்கலப்புக்கு பின்னர்…
முருகன் – சுப்பிரமணியன் ஆனார்.
திருமால் – விஷ்ணு ஆனார்.
சிவன் – ருத்திரன் ஆனார்.
கொற்றவை – பார்வதி, துர்க்கை ஆனாள்.

தமிழிசைப்பண்கள் : தொடர் 52 – 60
சிறீ சிறீஸ்கந்தராஜா
08/12/2016 – 23/04/2017

தொகுப்பு  – Thamil.co.uk