சங்கம் மருவிய காலம் – பதினென்கீழ்கணக்கு நூல்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை –  பழந்தமிழிசையில் பண்கள்

சங்கம் மருவிய காலம் (300-700)

பதினென்கீழ்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா
%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-38“நாலடி, நான்மணி, நா நாற்பது, ஐந்திணை,
முப்பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
இன்னிலைய காஞ்சியோடு,ஏலாதி என்பவே,
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு.”

கி.பி 300-கி.பி 700 வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது.

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும்.

சங்ககாலச் சான்றோர்களின் அனுபவ உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துக்களாகப் போற்றினர். நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.

திருக்குறளும் நாலடியாரும்
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன.

திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.

திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.

திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.

நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி;
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

“சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது”

“பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்” ஆகிய கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.

பதினொரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.

%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-40நீதி நூல்கள் (11)
1. நாலடியார்
2. நான்மணிக்கடிகை
3. இன்னா நாற்பது
4. இனியவை நாற்பது
5. திருக்குறள்
6. திரிகடுகம்
7. ஏலாதி
8. பழமொழி நானூறு
9. ஆசாரக்கோவை
10. சிறுபஞ்சமூலம்
11. முதுமொழிக்காஞ்சி

நாலடியார்
நான்கு அடிகளை உடையது.
சமண முனிவர்கள் 400 பேர் எழுதிய பாடல்கள்
காலம் – 7ஆம் நூற்றாண்டு
அறம் – 13 அதிகாரங்கள்
பொருள் – 24 அதிகாரங்கள்
இன்பம் – 3 அதிகாரங்கள்
மொத்தம் – 40 அதிகாரங்கள்
நிலையாமையைப் பற்றிய பாடல்கள் மிகுதி.
டாக்டர் ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

நான்மணிக்கடிகை

நான்கு நவமணிகளாக ஆகிய மாலை.
ஆசிரியர் – விளம்பி நாகனார்
மணியான கருத்துக்களைக் கொண்ட பாடல்கள்.

இன்னா நாற்பது
தீயன தரும் நாற்பது என்பது பொருள்.
துன்பத்தைத் தருவன என்று கூறும் பாடல்களை கொண்டது.
41 பாடல்களையுடையது
ஆசிரியர் – கபிலர். (இக்கபிலர் சங்க கால கபிலர் அல்லர்).
கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமையை
வற்புறுத்திக் கூறியுள்ளார்.
4ஆம் நூற்றாண்டினர் என்பது பொது கருத்து.

இனியவை நாற்பது
இனிய கருத்துக்களை கூறும்
40 வெண்பாக்களை உடையது.
ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்

திருக்குறள்
குறள் வெண்பாவால் இரண்டு அடிகளில், முதல் அடியில் 4 சீர்களும் இரண்டாம் அடியில் 3 சீர்களும் அமைத்துப் பாடுவது குறள்.
இயற்றியவர் – திருவள்ளுவர்
அறத்துப்பால் – 38 அதிகாரங்கள்
பொருட்பால் – 70 அதிகாரங்கள்
இன்பத்துப் பால் – 25 அதிகாரங்கள்
1330 பாடல்களைக் கொண்டது.

திரிகடுகம்
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் அரைத்து கடுகு போல் அமைந்த மருந்திற்கு திரிகடுகம் என்று பெயர். உடல் வளர்ச்சிக்கு இம்மருந்து உதவுவது போல உள்ள வளர்ச்சிக்கு இந்நூல் உதவும்.
3 கருத்துக்களை ஒவ்வொரு பாடலிலும் கூறுவதால் திரிகடுகம் என்ற பெயரைப் பெற்றது.
101 வென்பாக்களை உடையது
ஆசிரியர் – நல் ஆதனார்.

ஏலாதி
ஏலக்காய் போன்ற 6 பொருட்களைக் கொண்டு மருந்து தயாரிக்கப்படுகிறது. ஏலம், இலவங்கம், சிறு நாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு, இந்த பொருட்களை இடித்து சூரணம் செய்வர். உடல் நோயைப் போக்கும் ஏலாதி மருந்தைப் போல உள்ள நோயைப் போக்க வல்லது.
ஒவ்வொரு பாடலிலும் 6 உண்மைகள் கூறப்பட்டுள்ளது.
81 பாடல்கள்
ஆசிரியர் – கணி மேதாவியார்

பழமொழி நானூறு
பழமையான சொல்.
ஒவ்வொரு பாடலும் பழமொழியால் முடிக்கப்பட்டுள்ளது.
முது மொழி என்ற பெயரும் உண்டு.
ஆசிரியர் – முன்றுறை அரையனார்

ஆசாரக்கோவை
ஒழுக்கம், வாழும் ஒழுக்க விதிகளைக் கூறும் நூல்.
100 வெண்பாக்களை உடையது.
ஆசிரியர் – கயத்தூர் பெருவாயில் முள்ளியார்

சிறு பஞ்சமூலம்
சிறிய ஐந்து வேர்கள். சிறிய வழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி இவற்றின் வேர்களால் ஆன மருந்து.
ஒவ்வொரு பாடலிலும் 5 கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
102 பாடல்கள்.
ஆசிரியர் – காரியாசான் சமணர்.

முதுமொழிக் காஞ்சி
பழமொழி என்பது பொருள்.
காஞ்சி, பெண்கள் இடையில் அணியும் ஒரு அணிவகை.
பல கருத்துக்களை கூறும் நூல்.
100 குறள் வெண் செந்துறைப் பாக்களாக கொண்டது.
ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்
5ஆம் நூற்றாண்டினர்

அகத்திணை நூல்கள் (6)
1. ஐந்திணை ஐம்பது
2. திணைமொழி ஐம்பது
3. ஐந்திணை எழுபது
4. திணைமாலை நூற்றைம்பது
5. இன்னிலை
6. கார் நாற்பது

ஐந்திணை ஐம்பது
ஐந்து நில ஒழுக்கங்களுக்கும் பத்து பத்து பாடல்களாக 50 பாடல்களை உடையது.
இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற முறையில் பாடப்பெற்றது.
ஆசிரியர் – மாறன் பொறையனார்

திணை மொழி ஐம்பது
அகத்திணைப் பற்றிக் கூறும் 50 பாடல்கள்.
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற முறையில் அமைந்துள்ளது.
ஆசிரியர் – கண்ணஞ்ச்சேந்தனார்

ஐந்திணை எழுபது
ஐந்து நில ஒழுக்கங்களையும் பாடிய 70 பாடல்கள் கொண்ட நூல்.
குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற முறையில் ஒவ்வொரு நிலத்திற்கும் 14 பாடல்கள் உள்ளன.
4 பாடல்கள் கிடைக்கவில்லை.
ஆசிரியர் – மூவாதியார் (ஐந்தாம் நூற்றாண்டு)

திணை மாலை நூற்றைம்பது
அகத்திணைப் பற்றி மாலையாக பாடிய 150 பாடல்களைக் கொண்டது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலம் பற்றி அந்நிலத்திற்குரிய புணர்தல், பிரிதல் முதலிய ஒழுக்கங்கள் பாடப்பெற்றது.
153 பாடல்கள் உள்ளன.
ஆசிரியர் – கணிமேதாவியார் (ஏலாதியின் ஆசிரியரும் இவரே)

இன்னிலை
பதினெண்கீழ்க்கணக்கு வெண்பாவில் இன்னிலை, கைந்நிலை என்பதையும் சேர்க்கும் போது 19 நூல்களாகின்றன.
அறம் – 10, பொருள் – 9, இன்பம் – 12, வீட்டுப்பால் – 14, இல்லியல் – 8, துறவியல் – 6 என அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் – பொய்கையார்

கைந்நிலை
கை என்பது அகத்திணை ஒழுக்கத்தை குறிக்கும் சொல்.
திணைக்கு 12 பாடல்களாக 60 பாடல்களைக் கொண்டது.
நூல் முழுதும் கிடைக்கவில்லை.
ஆசிரியர் – புல்லங்க்காடனார்.

கார் நாற்பது
கார் காலம் பற்றிய 40 பாடல்களைக் கொண்ட நூல்.
தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோரை வைத்து ஒரு நாடகம் போல் அமைந்த நூல்.
ஆசிரியர் – மதுரை கண்ணங்கூத்தனார்

புறத்திணை நூல் (1)
1. களவழி நாற்பது

களவழி நாற்பது
போர்க்களத்தின் நிலையைக் கூறும் நூல்.
40 பாடல்களை உடையது. இது புறத்திணை நூல்.
ஆசிரியர் – பொய்கையார்.

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் – நீதி நூல்கள்  (11)

நாலடியார் நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.

இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். “வேளாண் வேதம்” என்ற பெயரும் உண்டு.

பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.

வாழ்க்கையின் எளிமையான விடயங்களை உவமானங்களாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1
அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்)
பொருட்பால் : 260 பாடல்கள் (26 அதிகாரங்கள்)
காமத்துப்பால் : 10 பாடல்கள் (1 அதிகாரம்)
மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)

‘குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு’.
(2. பொருட்பால், 2.14 கல்வி, 131)

‘உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் – புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.’
(2.25 அறிவுடைமை, 247)

ஆங்கிலத்தில் போப்பையரால் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடைத்து இந்நூல்.

நான்மணிக்கடிகைபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் – நீதி நூல்கள் (11)

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது.

இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்மணிக்கடிகை எனப்பெயர் பெற்றது.

கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் கூற்றம் ஆகின்றன.

வாழைமரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத்தகாதவற்றைச் செய்பவர்களுக்குஅறமே கூற்றம். ஒரு குடும்பத்துக்கு, தீய ஒழுக்கம் கொண்ட பெண்ணே கூற்றமாவாள் என்ற பொருள்கொண்ட, நான்மணிக்கடிகைப் பாடலொன்றைக் கீழே காண்க.

“கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்”

இன்னா நாற்பதுபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் – நீதி நூல்கள் (11)

இன்னா நாற்பது

கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூலாகும்.

நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற் தொகுதியுள் அடங்குகிறது.

உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல்.

அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அறிவில்லாத ஒருவன் புகுவது துன்பத்தைத் தரும்.

இருட்டிய பின்னர் வழியிற் செல்வது பெரிதும் துன்பம் விளைவிக்கும்.

விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆறல் இல்லாதவர்களுக்குத் தவம் துன்பம் தரும்.

தன்னைப் பெற்ற அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவதும் துன்பமாகும்.

என்று மனித வாழ்வில் துன்பத்துக்குரிய நான்கு விடயங்களைக் கூறி நீதி புகட்டும் கீழ்க்காணும் பாடல் இந் நூலில் வருகிறது.

“ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விட”

நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை.

இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன.

இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன.

நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட “இன்னா”, “இனிதே” என்னும் சொற்கள் அமைந்துள்ளன.

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் “இன்னா” என எடுத்துக் கூறுதலின் “இன்னா நாற்பது” எனப் பெயர்பெற்றது.

இந்நூலை இயற்றியவர் கபில தேவர். ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.

இன்னா நாற்பதுபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  – நீதி நூல்கள் (11)

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது ஆகும். இது நாற்பது வெண்பாக்களினால்ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்றாகும்.

உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம்மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.

ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது.
கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று.
சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது.

“சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது”.
இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும்.

இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும்.

இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.

இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது.

இவற்றுள், ‘ஊரும் கலிமா’ எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன (1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன.

இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் இன்னொரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து “இனிது” என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது “இனியவை நாற்பது” எனப்பட்டது.

கடவுள் வாழ்த்து
“கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது”.

அருஞ்சொற்பொருள்
கண்மூன்றுடையான்- சிவபெருமான்;
துழாய்மாலையான்- திருமால்/பெருமாள்;
முகநான்குடையான்- பிரமன்; ஏத்தல்-போற்றித்துதித்தல்.
“பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகவினிதே
நற்சவையில் கைக்கொடுததல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு”.
அருஞ்சொற் பொருள்:
நற்சவை- நற்சபை/நல்அவை;
கைக்கொடுத்தல்- உதவுதல்;
சாலவும்- மிகவும்;
தெற்றவும்- தெளிவாக;
மேலாயார்- பெரியோர்கள்/ மேலானவர்;
சேர்வு- சேர்ந்திருத்தல்/துணைக்கொள்ளுதல்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  – நீதி நூல்கள் (11)

திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  – நீதி நூல்கள் (11)

ஏலாதி
பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி. சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே.

ஏலாதியில் 80 பாடல்கள் உள்ளன. இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது.

இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் ஒழுக்கக்குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் பெற்றது.

இடையின் அழகோ, தோளின் அழகோ அல்லது ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா.

எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல் இது:
“இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு”

அகத்திணை நூல்கள் (6)

திணைமொழி ஐம்பது
கண்ணன் சேந்தனார் என்னும் புலவர் பாடிய ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்டது இந்நூல். சங்கம் மருவிய காலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கியது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப் பட்டுள்ளது. இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப் பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.

“புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்
பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்
வருநசை பார்க்கும்என் நெஞ்சு”.

அகத்திணை நூல்கள்(6)

திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார்என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே.

இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன.
1 குறிஞ்சி 1 தொடக்கம் 31 வரை 31 பாடல்கள்
2 நெய்தல் 32 தொடக்கம் 62 வரை 31 பாடல்கள்
3 பாலை 63 தொடக்கம் 92 வரை 30 பாடல்கள்
4 முல்லை 93 தொடக்கம் 123 வரை 31 பாடல்கள்
5 மருதம் 124 தொடக்கம் 153 வரை 30 பாடல்கள்

“பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? – காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்
மொழிக்குநையும் இடமறிந்து நாடு”.

அகத்திணை நூல்கள் (6)

கைந்நிலை
இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று. இது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார் எனும் புலவராவர்.

அகத்திணை நூல்கள் (6)

%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-43கார் நாற்பது
பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது ஆகும். அகப் பொருள் சார்ந்தது.

மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.

கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந் நூலில் எடுத்துக் கூறப்படுகின்றது.

கார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழாவின்போது மக்கள் ஏற்றி வைத்துள்ள விளக்குகளைப் போல, வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாகத் தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக மழை வந்துள்ளது என்னும் பொருளில் வரும் இந் நூற் பாடல் இது:
“நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை”

 

புறத்திணை நூல் (1)

களவழி நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது ஆகும். சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந் நூல்.

இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவராவர். இவர் சேர மன்னனுடைய நண்பன். நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல் எனக் கருதப்படுகின்றது.

இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றியும் கவி நயத்துடன்  எடுத்துக் காட்டுகின்றன.

இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது எனலாம்.
“கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் – தச்சன்
வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்
சினமால் பொருத களத்து”

சினங்கொண்ட சோழன் செங்கணான் போர் புரிகின்ற களத்திலே, தச்சனுடைய தொழிற்சாலையில் பொருட்கள் இறைந்து கிடப்பதைப்போல, கொலைவெறி கொண்டு பாய்கின்ற யானைகள் புகுந்த இடமெல்லாம் பிணங்கள் விழுந்து கிடக்கின்றன என்னும் பொருள்தருவது இப் பாடலாகும்.

நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது “ஏரோர் களவழி” ஆகும்.

பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது “தேரோர் களவழி” ஆகும்.

களவழி நாற்பது பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே தருகிறது. கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் செய்கிறது.

சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையைவென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறுகின்றது.

தமிழிசைப்பண்கள் : தொடர் 38,39 & 41-43
சிறீ சிறீஸ்கந்தராஜா
16/09/2016-29/09/2016

தொகுப்பு – thamil.co.uk