சங்கம் மருவிய காலம் – சிலப்பதிகாரம் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 40

சங்கம் மருவிய காலம் (300-700)
கி.பி 300-கி.பி 700 வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே பெளத்த சமண தமிழ்க் காப்பியங்கள் தோன்றலாயின.

பெளத்த தமிழ்க் காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி

சமண தமிழ் காப்பியங்கள்
சீவக சிந்தாமணி
வளையாபதி

இவை தவிர ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசி தமிழில் எழுந்த முதல் தர்க்க நூலாகக் கருதப்படுகிறது.

சங்க மருவிய கால இலக்கியப்பண்புகள்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்தனர். நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன. களப்பிரர் பாளி மொழியையும், பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர்.

இவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்மொழி, தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ் மொழியில் பெருமளவிலும் சிறப்பான முறையிலும் நூல்கள் தோன்றவில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக்காலப் பகுதியினை சங்கம் மருவிய காலம் அல்லது “இருண்ட காலம்” எனக் குறிப்பிடுவர். இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின.

இந்த இருண்ட காலப்பகுதியிலேயே காரைக்காலம்மையாரும் திருமூலரும் வாழ்ந்தனர். காரைகாலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு என்பவற்றை இயற்றினார்.

சங்க காலப் புலவர்கள் 473 பேர். சங்கம் மருவிய காலப் புலவர்கள் 18 பேர்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பாடிய புலவர்களைச் சங்கம் மருவிய காலப் புலவர்கள் என்று குறிப்பிடுகிறோம்.

கபிலர் என்னும் புலவர் சங்க காலப் புலவர் பட்டியலிலும், சங்கம் மருவிய காலப் புலவர் பட்டியலிலும் உள்ளார்.

புலவர்களின் பெயர்களும் நூல்களும்
கண்ணங்கூத்தனார், மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் – திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார் – கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்- களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் – ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை

சங்க மருவிய கால இலக்கியங்களின் பண்புகள்
சங்கமருவிய காலத்தில் தமிழ்நாட்டிலே களப்பிரரது ஆட்சி நிலைபெற்றிருந்தது. இக்காலத்திலேயே சமண, பௌத்த துறவோர்கள் அதிகளவிலே தமிழ்நாட்டிற்குள் புகுந்து கொண்டார்கள். மக்களின் வாழ்வு இருள் சூழ்ந்ததாகக் காணப்பட்டது. இதன் அடிப்படையில் பல இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின.

சங்கமருவிய காலத்தில் தோன்றிய தமிழ்இலக்கியங்களின் பண்பியல்புகள்
இக்காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களின் பிரதானமானதொரு பண்பு அறத்தையே பொருளாகக் கொண்டிருப்பதாகும். சமண, பௌத்த துறவோர்கள் பெரு வாரியாக வந்து அறப்போதனைகள் மூலம் சமண, பௌத்த மதங்களைப் பரப்பினார்கள். திருக்குறள், நாலடியார் போன்ற அறம் கூறுகின்ற இலக்கியங்கள் அதிகளவில் தோன்றின.

அறத்தைப் பொருளாகக் கொண்டிருப்பதும் இக்கால இலக்கியங்களின் பண்பாகும். அறத்தை மடடுமன்றி பக்தியையும் பொருளாகக் கொண்டிருப்பதும் இக்கால இலக்கியங்களின் பண்பாக அமைகின்றது.

சமண, பௌத்த துறவோர்கள் அறப் போதனைகள் மூலம் தமது சமயத்தை வளர்த்தார்கள். இதனால் சைவ, வைணவ சமயங்கள் வளர்ச்சி குன்றின. சைவத்தை வளர்க்க காரைக்கால் அம்மையாரும், வைணவத்தை வளர்க்க பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரும் முயன்றார்கள்.

காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகியவற்றையும் முதலாழ்வார் மூவர் முதலாம், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகளையும் பாடியுள்ளார்கள்.

சங்கமருவிய கால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு அகம், புறத்தைப் பொருளாகக் கொண்டிருப்பதாகும். சங்ககால இலக்கியங்களின் பொருள் மரபுகளாகிய அகமும், புறமும் சங்கமருவியகால இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளன.

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது முதலான இலக்கியங்கள் அகத்திணை பற்றிக் கூறுவனவாகவும், களவழிநாற்பது புறத்திணை பற்றிக் கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது.

சங்கமருவிய கால இலக்கியங்கள் வெண்பா, கலிப்பா யாப்புக்களிலேயேஅமைந்துள்ளன. இருப்பினும் வெண்பா யாப்பே அதிகளவில் கையாளப்பட்டிருக்கின்றது.

பேசுவோனை முன்னிலைப்படுத்தி வினாவிற்கு ஏற்ற விடை இறுக்கும் பாங்கில் போதனைக்குகந்த யாப்பாக வெண்பா கொள்ளப்படுகின்றது. இது செப்பலோசையுடையதாகக் காணப்படுகின்றது. ஆதனாலேயே அறக் கருத்துக்களை வெண்பா யாப்பில் கூறினர்.

சங்கமருவிய கால இலக்கியங்கள் இவ்வாறு வெண்பா யாப்பினாலும், கலிப்பா யாப்பினாலும் அமைந்திருப்பது இக்கால இலக்கியங்களின் பண்பாகும். வெண்பா, கலிப்பா மட்டுமல்ல அகவல், வஞ்சி யாப்புகளும் பயன்படுத்தப்பட்டன.

சங்ககால இலக்கியங்களின் தாக்கத்தினால் சங்கமருவிய கால இலக்கியங்களிலும் சங்ககால யாப்புக்களாகிய அகவல், வஞ்சி கையாளப் பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. சங்கமருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்திலே இந்த அகவல், வஞ்சி கையாளப்பட்டுள்ளமையைக் காணலாம்.

இக்காலத்தில் இன்னுமொரு இலக்கியப் பண்பு தொடர்நிலைச் செய்யுட்களாகக் காணப்படுவதாகும். சங்க காலத்திலே ஒரு தனி விடயத்தை ஒரு பாடலில் பாடுகின்ற தனி நிலைச் செய்யுட்கள் சிறப்புப் பெற்றிருந்தன.

ஆனால் சங்கமருவிய காலத்திலோ ஐந்து அகத்திணைகளையும் தொடர்ந்து பாடுகின்ற தொடர்நிலைச் செய்யுட்கள் சிறப்புப் பெற்றுக் காணப்பட்டன. ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது முதலான இலக்கியங்கள் தொடர்நிலைச் செய்யுட்களாகவே காணப்பட்டன.

இக் கால இலக்கியங்களில் பெரும்பாலானவை காவிய வடிவம் சார்பானதாகப் பொருட்களை வெளிப்படுத்தி தன்னிகரற்ற தலைவனின் வாழ்க்கை வரலாற்றை இயற்கை வர்ணனைகளின் பின்னணியில் கூறுவது காவியமாகும். அத்தகைய காவியங்கள் சங்கமருவிய காலத்திலேயே முதன்முதலாக தமிழில் தோன்றியது. இவ்வாறு சிலப்பதிகாரம் முதலில் தோன்ற அதனைத் தொடர்ந்து மணிமேகலை தோற்றம் பெற்றது.

சங்கமருவிய கால இலக்கியங்கள் சிலஉரைநடைப் பண்புகளையும் கொண்டிருந்தன. தமிழின் உரைநடையின் தோற்றக்காலமாகவும் சங்கமருவிய காலத்தைக் கொள்வார்கள்.

சங்கமருவிய காலத்தில் தோன்றிய உரைநடைப் பண்பினை சிலப்பதிகாரத்தில் காணலாம். சிலப்பதிகாரத்தில் உரையும், பாட்டும் மாறி மாறி வருவதனால் இதனை ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனவும் அழைப்பர். சிலப்பதிகாரத்தில் வருகின்ற கானல்வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை ஆகிய பகுதிகளில் இவ்வுரைநடையின் சாயலைக் காணலாம்.

ஆய்ச்சியர் குரவையில் வருகின்ற, ‘கயலெழுதிய இமயநெற்றியின் அயலெழுதிய புலியும் வில்லும்’ என்கின்ற அடிகளை இங்கு எடுத்துக்காட்டலாம். தமிழில் தொடக்க கால உரைநடை இதுவாதலால் எதுகை, மோனை என்கின்ற செய்யுட்குரிய பண்புகளைக் காணமுடிகின்றது.

இக்கால இலக்கியங்கள் பெரும்பாலும் வடமொழிக் கலப்புமிக்கவையாகக் காணப்படுகின்றன. இக்காலப் பகுதியிலேதான் வடநாட்டிலிருந்து ஆரியர்கள் பெருவாரியாகத் தமிழ்நாட்டிற்குள் புகுந்துகொண்டார்கள். ஆரியர்களின் வரவோடு அவர்களுடைய வணக்க வழிபாடுகள் மட்டுமன்றி அவர்களின் மொழியாகிய வடமொழியும் தமிழோடு கலந்தது. வட சொற்களும், வட சொற்றொடர்களும் தமிழோடு கலந்தன.

திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை முதலான நூல்களின் பெயர்களும் வடமொழியிலேயே அமைந்திருந்தன. இவ்வாறாக வடமொழிக் கலப்புடையதாகக் காணப்படுவதும் சங்கமருவிய கால இலக்கியங்களில் தவிர்க்கமுடியாத ஒரு பண்பாகும்.

சங்கமருவியகால இலக்கியங்களிலே உவமை, உருவக அணிகள் மட்டுமன்றி சிறப்பாகத் தற்குறிப்பேற்ற அணிகளும் கையாளப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.

சிறீ சிறீஸ்கந்தராஜா
14/09/2016

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை –பழந்தமிழிசையில் பண்கள்

சங்கம் மருவிய காலம் (300-700)

%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-44 சிலப்பதிகாரம் 1
சிலப்பதிகாரத்தில் தமிழிசை
மணிமேகலை
சீவக சிந்தாமணி
காரைக்கால் அம்மையார் பாடல்கள்
குடுமியான்மலை கல்வெட்டு
திருமந்திரம்

சிலப்பதிகாரம் என்னும் பெயரே சிலம்பு என்னும் தமிழ்ப்பெயரும் அதிகாரம் என்னும் வடசொல்லும் இணைந்து உருவானதுதான்.சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.

சமண சமயப் பற்று உடையவராகிய இளங்கோவடிகள், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் வாயிலாகக் கேட்டறிந்த கண்ணகியின் வரலாற்றில் கண்ணகியின் சிலம்பு முதன்மை பெற்றிருப்பதால் சிலம்பு தொடர்பான சிலப்பதிகாரம் என்னும் பெயரிட்டு இந்நூலை இயற்றினார்.

இரும்பு + பாதை = இருப்புப்பாதை, கரும்பு + வில் = கருப்புவில் என்பனபோல, சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் என்றாயிற்று.

அதிகரித்தல் என்பது, தொடர்ந்து வளர்தல் விருத்தியடைதல் எனப் பொருள்படும். அதிகாரம் என்னும் சொல்லுக்கு நூல் என்னும் பொருள் பிங்கல நிகண்டில் கூறப்பட்டுள்ளது. சிலம்பு தொடர்பான நூல் சிலப்பதிகாரம் எனப் பெயர் சூட்டப் பெற்றது. இது சிலம்பு எனச் சுருக்கமாகவும் வழங்கப்பெறும்.

தமிழிலக்கியத்தில் சமணமும் பௌத்தமும்
தமிழிலக்கிய வளர்ச்சி சங்க காலத்திலிருந்து நோக்கப்படுகின்றது. சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் வியந்து போற்றின.

சங்கப் பாடல்கள் பெரும்பாலும் சமயசார்பற்றவையாகக் காணப்பட்டன. திருமுருகாற்றுப்படை மட்டும் முருகனின் அற்புதத்தைக் கூறும் சமயப்பாடலாக விளங்குகிறது. கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ள சில பாடல்கள் பிற்காலத்தில் பெருந்தேவனார் என்பவரால் பாடப்பெற்றவையாகும்.

திருக்குறள் சமய சார்பற்ற நூலாகக் கருதப்படுகிறது. அதனால்தான் அனைத்து சமயத்தவரும் ஏற்றுக்கொள்ளும் இலக்கியமாக அது போற்றப்படுகிறது.

சங்கமருவியகாலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் அறநெறிக் கருத்துக்களை எடுத்துக் கூறுபவையாகக் காணப்படுகின்றன. சங்கமருவிய கால இலக்கியங்கள் பலவும் சமணபெளத்த அறிஞர்களால் எழுதப்பட்டவை.

கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணையெழுபது என்னும் நூல்களை எழுதியவர்கள் சமண அறிஞர்களேயாவர். அவர்கள் தம் சமயக்கருத்துக்களை தாம் எழுதிய இலக்கியங்களில் புகுத்தியுள்ளனர்.

சங்க காலத்தில் காதலும் போரும் என வாழ்ந்த மக்களுக்கு உலகியலில் மனச்சலிப்பு தோன்றியது. இந்த விரக்தி நிலையிலிருந்து விடுபடும் வகையில் சங்கமருவிய கால இலக்கியங்களின் தோற்றம் காணப்படுகிறது.

கள்ளுண்டு களித்துக் காதலில் ஈடுபட்டு போர்புரிந்து வாழ்ந்த மக்கள் மனமாற்றத்தை வேண்டிநின்றனர். இப்படித்தான் வாழ வேண்டும் என அறக்கருத்துக்களை போதிப்பனவாக சங்கமருவிய காலத்து இலக்கியங்கள் விளங்கின. இதனால் இந்த இலக்கியங்களை எழுதிய சமண பெளத்த அறிஞர்கள் மீது அக்கால மக்கள் பெரும் மதிப்பைக் கொண்டிருந்தனர்.

சிலப்பதிகார நூலாசிரியராகிய இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர். அவர் படைத்த கோவலனும் அவர்களுக்குத் துணைவந்த கெளந்தி அடிகளும் சமண சமயத்தவராக சித்தரிக்கப்படுகிறார்கள். எனினும் ஏனைய தெய்வ வாழ்த்துப் பாடல்களும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன.

சிலப்பதிகார காப்பியத்தையொட்டிய கண்ணகி வழிபாடு தமிழகத்திலும் இலங்கையிலும் காணப்படுகிறது. இந்துக்களும் பெளத்தர்களும் கண்ணகியைப் பெண்தெய்வமாகப் போற்றி வழிபடுகின்றனர்.

நல்லைஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்கு முற்பட்ட காலத்தில் வடபகுதியில் பல கண்ணகிஅம்மன் ஆலயங்கள் காணப்பட்டன. சமண சமயத்தைச் சேர்ந்த சீமாட்டிக்கு கோயில் கட்டி வழிபடுவது தவறு என நல்லைஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவர் வலியுறுத்தினார். வடபகுதியில் காணப்பட்ட பல கண்ணகிஅம்மன் ஆலயங்கள் முத்துமாரி அம்மன் ஆலயங்களாக மாற்றம் பெற்றன.

சைவ சமயத்தை நிறுவுவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆற்றிய பங்களிப்பு பிறிதாக நோக்கப்படவேண்டிய தொன்றாகும். ஆனாலும் இன்றளவும் தமிழ் மக்கள் மத்தியில் கண்ணகி வழிபாடு காணப்படுகின்றது.

தமிழில் எழுந்த காவியங்கள் பெரும்பாலும் சமண சமயத்தை அடிப்படையாகக் கொண்டுவிளங்கின. சிந்தாமணி, வளையாபதி என்னும் பெருங் காப்பியங்களும், ஐஞ்சிறுகாவியங்களும் சமண சார்புடையன. தமிழ் இலக்கண நூல்கள் பெரும்பாலும் சமணப் புலவர்களாலேயே எழுதப்பட்டன.

நம்பிஅகப்பொருள் எழுதிய நாற்கவிராச நம்பியும், யாப்பருங்கல விருத்தியும், காரிகையும் எழுதிய அமிதசாகரரும், நேமி நாதமும் வச்சணந்தி மாலையும் எழுதிய குணவீர பண்டிதரும், நன்னூல் எழுதிய பவணந்தியாரும், உரையாசிரியர்களுள் இளம்பூரணரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

இவர்கள் தாங்கள் இயற்றிய நூல்களில் கடவுள் வாழ்த்திலேனும் கருத்துரையிலேனும் தம்சமய சார்பைப் புலப்படுத்தியுள்ளனர். இவ்வாறு இலக்கிய இலக்கணங்களை எழுதி சமணர்கள் பெரும் புலவர்களாகவும் பேராசிரியர்களாகவும் தமிழுக்கு தொண்டாற்றியுள்ளனர்.

சமண பெளத்த இலக்கியங்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் ஒழுக்க நெறியை எடுத்தியம்பும் நூல்கள் தமிழில் காணப்படவில்லை. சங்கமருவிய காலத்தில் எழுதப்பட்ட சமண பெளத்த இலக்கியங்களே மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என ஒரு நெறிமுறையை வகுத்தன.

கொல்லாமையை முதன் முதலில் வலியுறுத்திய சமயங்களாக சமண பெளத்த சமயங்களை குறிப்பிடலாம்.

சமண பெளத்த இலக்கியங்கள் உயிர்க்கொலையை வெறுத்தன. எல்லா உயிர்கள் மீதும் அன்பு கொள்ள வேண்டும் என்ற அறக் கருத்தைப் போதித்தன. பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு அபயம் அளித்தவர் புத்தபிரான். அந்த வகையில் பெளத்த இலக்கியங்கள் உயிர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதை அதிகம் வலியுறுத்தின.

அவ்வாறே சமண இலக்கியங்களும் கொல்லாமையை வலியுறுத்தின. அத்தோடு கள்ளுண்டு மகிழ்வது பாவம் என்பதையும் பெளத்த சமண இலக்கியங்கள் சுட்டிக்காட்டின.

சமண பெளத்த கருத்துக்கள் அக்காலத்து மக்களை மிகவும் கவர்வதாக அமைந்தது. இந்துசமயத்தில் யாகங்களும் யாகங்களோடு இணைந்த உயிர்ப்பலியும் அதிகளவில் காணப்பட்டது. இதனால் மக்கள் சமண பெளத்த போதனைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டினர்.

சங்கமருவிய காலத்தில் சமணமும் பெளத்தமும் தளைத்தோங்கின. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் சமண பெளத்த சமயத்தை சார்ந்தவர்களாக காணப்பட்டனர். வைதீக சமயங்களான சைவமும் வைணவமும் வீழ்ச்சியுற்று காணப்பட்டன.

உயிர்க்கொலையை சைவ, வைணவ சமயங்கள் வெறுத்தன. உயிர்க்கொலை செய்வது பாவமென்று போதித்தன. அவ்வாறே மதுவருந்துவதும் கண்டிக்கத்தக்க செயலாக வைதீக சமயங்களால் கூறப்பட்டது.

சங்கமருவிய காலத்து தமிழ் இலக்கிய செழுமைக்கு பெளத்தமும் சமணமும் பெரும்பங்காற்றின.

தமிழகத்திற்கு மிக அருகில் இருக்கும் இலங்கையின் வடபகுதியிலும் இந்த மதங்களின் செல்வாக்கு அன்றைய காலத்தில் மிக அதிகமாகக் காணப்பட்டது. சமணமும் பெளத்தமும் வளர்ச்சியுற்றிருந்த சங்கமருவிய காலத்தில் நீதி நூல்கள் பல எழுதப்பட்டன.

எனவே சைவ வைணவ அறிஞர்களுக்கு முன்னராகவே சமண பெளத்த அறிஞர்கள் தமிழிலே சிறந்த இலக்கியங்களை எழுதியுள்ளனர் என்பதை வரலாற்றில் இருந்து அறிய முடிகின்றது.

சமணபெளத்த இலக்கியங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக அமைந்துள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-45சிலப்பதிகாரம் – 2

சிலம்பு – அறிமுகம்

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்”
பாண்டிய – பல்லவ மன்னர்கள் சமணர்களாக இருந்த காலத்தில்தான் சிலப்பதிகாரம் தோன்றியுள்ளது. முதன் முதலில் நன்னூல் உரைகாரராகிய மயிலைநாதர் தான் (இவர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவர்) “ஐம்பெருங்காப்பியம்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

இதுபற்றி கி.பி. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தணிகை உலாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் கதைக்கூறுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. பேகன் மனைவி கண்ணகி கதை சங்க இலக்கியத்தில் வருகிறது.

வள்ளல் பேகன், தன் மனைவி கண்ணகி என்பாளை விட்டுவிட்டு நல்லூர்ப் பரத்தை ஒருத்தியோடு வாழ்ந்தான் என்ற செய்தியும், அவனுக்குப் புலவர்கள் அறிவுரை கூறித் திருத்தினார்கள் என்ற செய்தியும் நமக்குக் கிடைக்கின்றன.

ஒரு முலையறுத்த திருமாவுண்ணி என்பவளின் கதையையும் நாம் அறிவோம். இளங்கோவடிகளுக்குக் கண்ணகி என்ற கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கி, அவள் கதையை அடிப்படையாக வைத்துத் தம் சமகாலத்து வடமொழி நெறியையும் தமிழ்நெறியையும் சமரசப் படுத்திப் படைக்கும் நோக்கம் இருந்தது.

சிலப்பதிகாரம் என்னும் பெயரே சிலம்பு என்னும் தமிழ்ப்பெயரும் அதிகாரம் என்னும் வடசொல்லும் இணைந்து உருவானதுதான். காப்பியம் முழுவதும் நாம் இப்படிப்பட்ட தமிழ்நெறி – வடவர்நெறி இரண்டையும் சமரசப்படுத்தும் போக்கையே காண்கின்றோம்.

தமிழ் மண்ணின் கூறுகளான வரிப்பாடல்கள் குரவைகள் முதலிய பலவற்றை எடுத்துக்கொண்ட அவர், இறுதியில் தமிழ்ப்பெண் கோயில் கொண்டதை விட மாடலமறையோனின் வைதிகநெறி மேம்படுவதையே காட்டிக் காப்பியத்தை முடிக்கின்றார்.

நூல் குறிப்பு
சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று. “இசை நாடகமே” சிலப்பதிகாரக் கதையின் உருவம்.
ஆசிரியர் = இளங்கோவடிகள்
காலம் = கி.பி. 2ஆம் நூற்றாண்டு
அடிகள் = 5001
காதைகள் = 30
காண்டங்கள் = 3
பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
சமயம் = சமணம்

உரைகள்
அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர்
அரும்பத உரைகாரர்.
அடியார்க்கு நல்லாரின் உரை
ந.மு.வேங்கடசாமிநாட்டார் உரை

ஆசிரியர் குறிப்பு
பெயர் = இளங்கோவடிகள்
பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
சோழன் மகள் நற்சோனை
அண்ணன் = சேரன் செங்குட்டுவன். இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில தங்கினார்.

நூலின் வேறு பெயர்கள்
தமிழின் முதல் காப்பியம்
உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
முத்தமிழ்க்காப்பியம்
முதன்மைக் காப்பியம்
பத்தினிக் காப்பியம்
நாடகப் காப்பியம்
குடிமக்கள் காப்பியம் (தெ.பொ.மீ)
புதுமைக் காப்பியம்
பொதுமைக் காப்பியம்
ஒற்றுமைக் காப்பியம்
ஒருமைப்பாட்டுக் காப்பியம்
தமிழ்த் தேசியக் காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
வரலாற்றுக் காப்பியம்
போராட்ட காப்பியம்
புரட்சிக்காப்பியம்
சிறப்பதிகாரம் (உ.வே.சா)
பைந்தமிழ் காப்பியம்

நூல் அமைப்பு
காண்டங்கள் = 3
புகார்க்காண்டம்,
மதுரைக்காண்டம்,
வஞ்சிக்காண்டம்
காதைகள் = 30
புகார்க்காண்டம் = 10 காதை
மதுரைக்காண்டம் = 13 காதை
வஞ்சிக்காண்டம் = 7 காதை
முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்
இறுதி காதை = வரந்தருகாதை

புகார் காண்டம்
புகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10
முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல் காதை
பத்தாவது காதை = நாடுகாண் காதை

மதுரைக் காண்டம்
மதுரைக் காண்டத்தில் உள்ள காதை = 13
11வது காதை = காடுகாண் காதை
23வது காதை = கட்டுரைக் காதை

வஞ்சிக் காண்டம்
வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதை = 7
24வது காதை = குன்றக்குரவை காதை
30வது காதை = வரந்தருகாதை

நூல் எழுந்த வரலாறு
மலைவளம் காண சென்ற இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், சீத்தலை சாத்தனார் ஆகியோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர். சீத்தலை சாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறி, அக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார்.
சீத்தலைச் சாதனார், இளங்கோவடிகளை
“முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது;
அடிகள் நீரே அருளுக” என வேண்டிக்கொண்டார்.
இளங்கோவடிகளும், “நாட்டதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்” எனக் கூறி சிலப்பதிகாரத்தை படைத்தார்.

நூற்கூறும் உண்மை
– அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
– உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
– ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்

கதை மாந்தர்கள்
கோவலனின் தந்தை மாசாத்துவான்
கண்ணகியின் தந்தை மாநாய்கன்
கோவலனின் தோழன் மாடலன்
கண்ணகியின் தோழி தேவந்தி
மாதவியின் தோழி சுதமதி, வயந்தமாலை
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் = மணிமேகலை
கண்ணகி கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன்
கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம் (குமுளி)
சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்

சிறப்புகள்
“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என பாரதியார் கூறுகிறார். “சிலபதிகாரச் செய்யுளைக் கருதியும்……..தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்” என கூறுகிறார் பாரதியார்.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை” என்றார் பாரதியார்
“முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்” – மு.வரதராசனார்
பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்

மேற்கோள்
“மாசறு பொன்னே, வலம்புரி முத்தே
காசறு விரையே, கரும்பே, தேனே
அரும்பெறல் பாவாய், ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!!”

புகார் காண்டம் கானல் வரிகள்
திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னி, செங்கோல்-அது ஓச்சி,
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று
அறிந்தேன்; வாழி, காவேரி!
மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல்-அது ஓச்சி,
கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!

%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-46சிலப்பதிகாரம் – 3

சிலம்பு – அறிமுகம்

கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தோன்றிய நூல் சிலப்பதிகாரமாகும். சேர இளவல் இளங்கோ அடிகளால் படைக்கப் பெற்றது. இயல், இசை, நாடகம் என்றும் முத்தமிழ் நூல். ஆடல் பாடல் அழகு என்றும் மூவகைத் திறன்களும் நிறைந்த மாதவியின் மூலம் நாட்டியத்தமிழ் வளத்தை உலகு அறியச் செய்த நூல். சேர சோழ பாண்டியர்கள் மீது வரிப்பாடல் பாடி மூவரையும் ஒருங்கிணைத்த நூல்.

கி.பி.10 நூற்றாண்டளவில் தோன்றிய அரும்பத உரை கி.பி.12 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய அடியார்க்கு நல்லார் உரை வாயிலாக இசைத்தமிழின் வளமும் திறமும் அறிவித்த நூல். இந்நூலிலுள்ள 30 காதைகளுள் மூன்று வரியாலும் இரண்டு குரவையாலும் பெயர் பெற்றுள.

கானல் வரி இசைத்தமிழ் வளம் உரைக்கும் காதையாகும். வேட்டுவ வரி கூத்துத் தமிழின் வளம் கூறும் காதையாகும். ஊர்சூழ் வரி இயல் தமிழின் வளம் கூறும் காதையாகும். கண்ணகியின் துயரை வருணித்துக் கூறும் காதையாக ஊர் சூழ் வரி உள்ளது.

ஆய்ச்சியர் குரவை முல்லை நிலத்து மக்களின் இசை கூத்துப் பற்றி உரைக்கும் காதையாகவும், குன்றக்குரவை குறிஞ்சிநில மக்களின் இசை, கூத்து வளங்களை உரைக்கும் காதையாகவும் அமைந்துள.

அரங்கேற்று காதை மாதவியின் ஆடல் அரங்கேற்றம் பற்றி உரைக்கும் காதையாகும்.

இப்பகுதி மூலம் ஆடலாசான் அமைதி மற்றும் இசையோன், நாட்டிய நன்னூற்புலவன், தண்ணுமை அருந்தொழில் முதல்வன், குழலோன், யாழோன், தலைக்கோல், அரங்கு அமைதிகள் கூறப்பட்டுள்ளன.

அரங்கு புகுந்து ஆடும் இயல்பு, தலைக்கோலிக்கு அரசன் அளித்த வெகுமதி கூறப்பட்டுள்ளன.

இக்காதையின் 175 பாடல் அடிகளுள் 12 அடிகள் தவிர 163 அடிகள் இசை, ஆடல் நிகழ்கலை இலக்கணப் பகுதிகளாக அமைந்துள்ளன.

சிலப்பதிகாரத்தில் உள்ள ஆற்றுவரி, முகவரி, முகமில்வரி, சார்த்து வரி, திணைநிலைவரி, மயங்குதிணை நிலைவரி, முரிவரி, கந்துகவரி, அம்மானைவரி, ஊசல் வரி, போன்ற அகம்புறம் பற்றிய 116 வரிப் பாடல்கள் உள.இவை மிகவும் தொன்மையான இசைப் பாடல்களாகும்.

பிற்காலத்தில் தோன்றிய தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், திருப்புகழ்ப் பாடல்களின் முன்னோடிப் பாடல்களாகும்.தெய்வ விருத்திப் பாடல்களின் முன்னோடிப்பாக்களாகவும், ஆடல் இலக்கிய இசைப்பாக்களாகவும் இவை உள.

அரும்பத உரை அடியார்க்கு நல்லார் உரையோடு கூடிய சிலப்பதிகாரத்தை 1892 இல் உ.வே.சா. வெளியிட்டார்.இவ்வுரைகள் பண்டைய இசைத்தமிழ் வளங்களை எடுத்துரைக்கின்றன.

இவை கூறும் இசை வளங்களை வெளிப்படுத்தும் நிலையில் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம், விபுலானந்தரின் யாழ்நூல், க.வெள்ளைவாரணாரின் இசைத்தமிழ் நூல்கள் உள்ளன.

சிலப்பதிகாரம் இசை, நாட்டியம், நாடகத்தமிழின் உயிர்ப்பு நிலைகளை உலகறியச் செய்த நூலாக விளங்குகிறது.

சிலப்பதிகாரம் இசைத்தமிழின் பண்வளம், கருவிகள் பற்றி எடுத்துரைக்கின்றது.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமும், அதன் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக் கூறி நிற்கின்றன.

சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதியில், வார்த்தல், வடித்தல், உந்தல், உறத்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்று யாழை மீட்டுனின்ற எட்டுவகைத் திறன்பற்றி எடுத்தியம்பப்படுகிறது.

ஏழிசைபற்றியும், நான்குவகைப் பாலைகள் பற்றியும், முப்பது வகையான தோற்கருவிகளைப் பற்றியும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் காலத்திலே கிடைக்கப்பெற்று, அதன்பின்னர் அழிவுற்ற இசை நூல்கள் பல.

முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம், சிகண்டி முனிவர் எழுதிய இசை நுணுக்கம், யாமளேந்திரர் எழுதிய இந்திர காவியம், ஆதிவாயிலார் எழுதிய பரதசேனாபதீயம், மதிவாணன் எழுதிய நாடகத் தமிழ்நூல் ஆகியவை அவற்றிற் சில என அறியக்கிடக்கின்றது.

சங்க கால ஐந்து நிலப்பாங்கு முறை இக்காப்பியத்தில் இடம் பெறுகிறது.

அந்தந்த மக்களின் வாழ்வியல் முறையையும் பண்பாட்டுப் பதிவையும் சிலம்பில் அறிய முடிகிறது.
குறிஞ்சி – குன்றக்குரவை
முல்லை – ஆய்ச்சியர் குரவை
மருதம் – நாடுகாண் காதை
நெய்தல் – கானல் வரி
பாலை – வேட்டுவ வரி ஆகிய ஐவகை நிலப்பாகுபாடும் சிலம்பில் இடம்பெற்றுள்ளது.

சிலம்பு கூறும்பதினொரு வகை ஆடல்கள் சிலப்பதிகாரத்தின் கடலாடு காதையில் 11 வகை ஆடல்கள் சுட்டப்படுகின்றன.
(1) கொடுகொட்டி
(2) பாண்டரங்கம்
(3) அல்லியம்
(4) மல்லாடல்
(5) துடிக்கூத்து
(6) குடைக்கூத்து
(7) குடக்கூத்து
(8) பேடி ஆடல்
(9) மரக்காலாடல்
(10) பாவைக்கூத்து
(11) கடையம்
என்பதாக அவை அமைகின்றன.

நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கம் சிலப்பதிகாரம் மக்கள் இலக்கியமாகிய நாட்டுப்புறப் பாடல்களை மதித்துத் தன்னகப் படுத்திய காப்பியமாகத் திகழ்கிறது.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வேட்டுவவரி, கானல்வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கந்துகவரி, அம்மானை வரி போன்றன நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கத்தோடு அமைகின்றன.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் அரங்கேற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற இசைக் கருவிகள் பண்டைத் தமிழரின் மறைந்தொழிந்த யாழ்களான முளரி யாழ்,
சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டி வீணை முதலானவையாகும்.

யாழினை “நரம்பின் மறை” (தொல்.1:33 2-3) எனத் தொல்காப்பியரும், “இசையோடு சிவணிய யாழின் நூல்” எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்டுள்ளனர்.

சிலம்பு மிகவும் அற்புதமாகவும் மிகவும் ஆழமாகவும் விரிகின்றது!! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-47சிலப்பதிகாரம் – 4

சிலம்பு – அறிமுகம்

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றியுள்ளன எனினும் மற்ற நூல்களுக்கு இல்லாத சிறப்புக்கூறுகள் பல சிலப்பதிகாரத்திற்கு உண்டு.

இந்நூலை முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என இதன் பொருண்மையுணர்ந்து பெயரிட்டு அழைப்பது உண்டு.

இதன் காவியச்சுவையில் மயங்கி நெஞ்சையள்ளும் சிலம்பு எனப் பாராட்டுவதும் உண்டு.

இவ்வாறு பலவகையில் சிலம்பைச் சுவைத்து மகிழ்ந்து பாராட்டினாலும் சிலப்பதிகாரக்கடல் முழுவதையும் நீந்திக் கரை கண்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

இசைமேதை வீ.ப.க.சுந்தரம் அவர்கள் பத்தாண்டுகள் சிலப்பதிகாரத்தைத் தொடர்ச்சியாகக் கற்ற பிறகே சிறிதளவு விளங்கிற்று எனவும், அறுபது ஆண்டுகள் கற்ற பிறகும் இன்னும் பல இடங்கள் விளங்கவில்லை எனவும் கூறியகூற்றுகள் (கட்டுரையாளர் இசைமேதை அவர்களின் உதவியாளர்) சிலப்பதிகாரத்தின் ஆழ அகலங்களைக் குறிப்பிடும் சான்றுகளாகும்.

சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். அதன்படி இன்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலாகக் கருதலாம். அக்காலத்தில் தமிழ்மொழியில், தமிழ்இசையில், தமிழ்நாடகத்தில், தமிழ்ப்பண்பாட்டில் அயலவரின் ஆதிக்கம் மிகுதியாக இல்லை.

எங்கும் தூய தமிழ்ச்சொல்வழக்குகளே புலவர்களால் ஆளப்பட்டுள்ளது (ஓரிரு அயற்சொற்கள் கலந்துள்ளமையை விலக்காகக் கொள்க) அத்தூய தமிழ்ச்சொல் வழக்குகள் கொண்டு அமைந்த, ஒப்புமை சொல்ல முடியாத உயர்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இசையுண்மைகளைக் குறிப்பிடும் சொற்கள் பலவற்றிற்கு இற்றை அறிஞர்களால் தெளிவான பொருள் காணமுடியாதபடி இசைத்துறை நமக்குத் தொடர்பில்லாத துறையாக ஆகிவிட்டது.

இசைத்துறை வல்லார் தமிழறிவு இல்லாமலும் தமிழறிவு உடையார் இசையறிவு இல்லாமலும் ஆனமை சிலப்பதிகாரம் போன்ற நூலின் முழுத்தன்மையும் உணரமுடியாமல் போனமைக்குக் காரணங்களாகும்.

சிலப்பதிகாரத்தில் இசை முதன்மை. சிலப்பதிகாரம் தமிழர்களை ஒன்றிணைக்க எழுந்த காப்பியம். இதன் கதையமைப்பு, காண்டங்களின் பகுப்பு முதலியவற்றைக் கொண்டு அறிஞர்கள் குறிப்பிடுவர். இக்கருத்து உண்மை என்பதற்கு வலிவான சான்றுகள் உள்ளன.

எனினும் இந்நூல் இளங்கோவடிகளின் இசை, கூத்து அறிவினை வெளிப்படுத்திக்காட்டவும், தமிழர்களின் இசை, கூத்து மரபுகளின் அறிவுச் செழுமையை நிலைநாட்டவும் எழுதப்பட்டது.

கோவலன் கண்ணகி கதையை மட்டும் கூறுவது அடிகளாரின் நோக்கம் என்றால் பல்வேறு இடங்களில் இசை, கூத்து பற்றிய செய்திகளை மேலோட்டமாகச் சொல்லியிருக்கலாம்.

அவ்வாறு இல்லாமல் இசைக்கருவிகள் பற்றியும், இசைக்கலைஞர்களைப் பற்றியும், இசைக்கருவிகளை இயக்கும்முறை பற்றியும், இயக்கும்பொழுது ஏற்படும் நிறை, குறை பற்றியும் பதியவைத்துப் பொறுப்புள்ள சமூகக்கலைஞராக அடிகளார் விளங்குகிறார். காப்பியவோட்டத்தில் இசையிலக்கணச் செய்திகளைப் பதிவுசெய்த ஓர் இலக்கிய ஆசிரியனை உலக இலக்கியங்களில் காண இயலவில்லை.

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து நிலங்களில் வாழும் மக்கள் அவரவரும் தத்தம் நிலம்சார்ந்த இசைக்கருவிகளையும், பண்ணையும் பயன்படுத்தினர்.

சிற்றூர் மக்கள் தங்கள் நாட்டுப்புற இசைவடிவங்களைப் பயன்படுத்தினர்.

இவற்றையெல்லாம் திட்டமிட்டவாறு அடிகளார் உரிய இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.

இளங்கோவடிகள் குறிப்பிடும் இசைக்கருவிகள், இசைக்கருவிகளை வரிசைப்படுத்தி இயக்கியமுறைகள், இசைகுறித்த சொற்கள் யாவும் தமிழ்நெறி சார்ந்தன.

அண்மை நூற்றாண்டுகளில் இசை, நாட்டியத்துறைகளில் புகுந்த அயலவர்களின் செல்வாக்கால் நம் தமிழ்ப்பண்கள், அடவுமுறைகள் முதலியவற்றில் எல்லாம் பயன்படுத்தப்பட்ட தமிழ்ச்சொற்களை அழித்து, அதற்கு வடமொழிப்பெயர்களை இட்டு வழங்கியதால் இப்பொழுது உண்மையை இனங்காண முடியாதபடி சூழல் உள்ளது.

இத்தெளிவின்மையை மாற்றிப் புத்தொளி பாய்ச்சி சிலம்பை விளங்கவைக்க முயன்றவர்களுள் ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர், இராமநாதனார், குடந்தை ப.சுந்தரேசனார், சிலம்புச்செல்வர், வீ.ப.கா.சுந்தரனார், ச.வே.சு, இரா.திருமுருகனார் முதலானவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

காரைக்காலம்மையார், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார், அருணகிரியார், திரிகூடராசப்ப கவிராயர், மாரிமுத்தாபிள்ளை, கோபாலகிருட்டிண பாரதியார் வரை வளர்ந்து வந்த தமிழிசைமரபு இன்று இடையீடுபட்டுள்ளதையும் தெலுங்கிசை அந்த இடத்தில் பரப்பப்படுவதையும் யாவரும் அறிவோம்.

அதுபோல் கோயில்களில் நாட்டியமாடத் தேவரடியார்களாக இருந்து நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்த தமிழகத்துப் பெண்களிடத்திருந்து, நாட்டியத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் பரதமுனிவர்தான் (கி.பி.நான்காம் நூற்றாண்டு) வடமொழியில் நாட்டியத்தை முதன்முதல் இலக்கணமாக எழுதியுள்ளார் என்று ஆங்கில நூல்கள் வழி உலகிற்குப் பொய்யுரை புகலும் கூட்டத்தினர் தமிழகத்தில்பரவலாக உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிலம்பின் இசைநுணுக்கம் உணரத்துணைபுரிபவர்கள் சிலப்பதிகாரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுந்த நூல் என்பதால் அதனை உரையாசிரியர்களின், இசையாய்வு அறிஞர்களின் துணைகொண்டே முழுமையாக உணரமுடியும்.

அவ்வகையில் அரும்பதவுரைகாரர் (11-ஆம்நூற்றாண்டு) அடியார்க்கு நல்லாரின் உரைக்குறிப்புகள் (11ஆம் நூற்றாண்டு), ஆபிரகாம்பண்டிதரின் விளக்கங்கள், குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா.சுந்தரனார், இராமநாதனார் முதலானவர்களின் விளக்கங்களின் துணைகொண்டே சிலப்பதிகார இசைநுட்பங்களை உணரமுடியும்.

இவற்றுள் அரும்பதவுரை என்பது சில இடங்களில் அரிய உண்மைகளை எடுத்துரைக்கிறது. அரும்பதவுரையைத் தழுவியதாகவே பல இடங்களில் அடியார்க்குநல்லார் உரை உள்ளது.

அடியார்க்குநல்லார் உரை கிடைக்காத சில இடங்கள் அரும்பதவுரையின் துணைகொண்டே உணரமுடிகின்றது.

அரும்பதவுரைகாரர் மேற்கோள்வரிகளைத் தொடக்கம் முடிவு மட்டுமே தருவார்.

பஞ்சமரபு முதலான பழந்தமிழ்இசை இலக்கண நூல்களைக் கற்றவராக அரும்பதவுரைகாரர் விளங்குவதை வீ.ப.கா.சுந்தரம் எடுத்துரைப்பார்.

அரும்பதவுரைகாரர் உரையைக் குறிப்புகளாக வரைந்துள்ளார். இவர்காலத்தில் பல இசையிலக்கண நூல்கள் இருந்துள்ளமையை இவர்தம் உரையை ஆழ்ந்து கற்கும்பொழுது உணரமுடிகிறது.

சிலப்பதிகாரம் இசைபற்றிய பல உண்மைகளை எடுத்துரைப்பது போல அதற்கு உரையெழுதிய அரும்பதவுரைகாரர், அடியார்க்குநல்லார், நூல்பதிப்பித்த உ.வே.சா முதலானவர்கள் பல இசைச்செய்திகளைத் தெளிவுபடுத்துகின்றனர்.

சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள இசைச்செய்திகளை ஒவ்வொரு அறிஞர்களும் விளக்கபுகுந்து, அவரவர்களுக்குக் கிடைத்த சான்றுகளின் துணைகொண்டு விளக்கியுள்ளனர்.

உ.வே.சாவால் விளக்கமுடியாத இடங்கள் ஆபிரகாம் பண்டிதராலும், விபுலானந்தராலும், குடந்தை ப.சுந்தரேசனாராலும், வீ.ப.கா.சுந்தரம் அவர்களாலும் விளக்கம் பெற்றுள்ளன.

பஞ்சமரபு என்னும் நூல் 1972,1991 இலும் இருமுறை பதிப்பு கண்டுள்ளது.

இரண்டாம்முறையாக (1991) பஞ்சமரபு வீ.ப.கா.சுந்தரம் உரையுடன் வெளிவந்தபொழுது சிலப்பதிகாரத்தின் பல இடங்கள் விளக்கம் பெற்றன.

பேராசிரியர் மு.அருணாசலம்பிள்ளை அவர்கள் பஞ்சமரபு வெண்பாக்கள் 24 சிலப்பதிகாரத்தில் உள்ளது எனச்சிலம்பு ஏழாம் பதிப்பில் இணைப்பாகத் தந்துள்ளார்.

ஆனால் வீ.ப.கா.சுந்தரம் 31 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டுகிறார்.

வீ.ப.கா.சு காட்டும் எண்ணிக்கையில் மிகுந்து பஞ்சமரபு வெண்பாக்கள் சிலம்பில் இடம்பெற்றுள்ளன.

பஞ்சமரபு நூல் கிடைக்காமல் போயிருந்தால் சிலம்பு இசையின் உண்மைவரலாறு உணரமுடியாமல் போயிருக்கும். அடியார்க்குநல்லார் பஞ்சமரபு வெண்பாக்களைக் காட்டும்பொழுது எந்தவகையான குறிப்பும் இல்லாமல் பாடலை மட்டும் காட்டுவதால் இது பஞ்சமரபுவெண்பா எனஉணரமுடியாமல் போகின்றது.

பஞ்சமரபு நூலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது உண்மை வரலாறு உணரமுடிகிறது.

சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் இலக்கணம் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் அவ்விலக்கணத்திற்குப் பொருந்தும்படியான இசை உருப்படிகள் பலவும் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு கதையின் ஊடே இசையின் இலக்கணமும், இசைப்பாடலும் கொண்ட ஒரு நூல் தமிழிலும் பிற மொழிகளிலும் இல்லை எனலாம்.

சிலப்பதிகார நூலில் தமிழர்கள் பிரித்துப்பார்த்த ஐந்து நில மக்களின் வாழ்க்கை, அவர்தம் இசைமுறைகளை முறையாக இளங்கோவடிகளார் பதிவுசெய்துள்ளார்.

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து நிலமக்களின் இசையை முறையே
ஆய்ச்சியர்குரவையிலும் (முல்லையாழ்),
நடுகற்காதை, குன்றக்குரவையிலும் (குறிஞ்சி),
வேனிற்காதையிலும் (மருதயாழ்),
கானல்வரியிலும் (நெய்தலுக்குரிய விளரி,செவ்வழி),
புறஞ்சேரியிறுத்தகாதையிலும் (பாலையாழ்) விளக்கியுள்ளார்.

சிலப்பதிகார நூலுள் இசையிலக்கணச் செய்திகள் கொட்டிக்கிடப்பது போன்று அடியார்க்குநல்லார் வரைந்த பதிகவுரை மிகப்பெரும் இசைவரலாறுகளை உறுதிப் படுத்துகின்றது.

அடியார்க்குநல்லார் உரைவழியும் அவ்வுரையின் துணைகொண்டு இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் வரைந்துள்ள இசைக்களஞ்சிய விளக்கங்கள்வழியும் தொடர்ந்து கற்றல் முயற்சியில் ஈடுபடும்பொழுது தமிழரின் இசைக்கருவூலம் சிலப்பதிகாரம் என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்தலாம்.

சிலப்பதிகார ஆசிரியர் மங்கலவாழ்த்துப் பாடலிலும் பிற காதைகளிலும் சிறுதொடர்கள் வழியாகக்கூட மிகப்பெரும் இசை உண்மைகளைப் பதிவு செய்துள்ளார். அத்தொடர்களில் உள்ள உண்மைகளை இன்றுவரை முற்றாக வெளிப்படுத்த இயலாதவர்களாய் உள்ளோம்.

முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை அரசெழுந்ததொர் படியெழுந்தன வகலுண்மங்கல வணியெழுந்தது (46-47) என்னும் சந்த நயமிக்க தொடர்களைப் படிக்கும்போது கோவலன் கண்ணகி திருமணத்தில் முழங்கிய பல்வேறு இசைக்கருவிகள் இன்றும் நம் காதுகளில் ஒலித்தவண்ணம் உள்ளன.

ஆடல் அரங்கையும் திரைச் சீலைகளின் அமைப்பையும் அடிகளார் தம் காப்பியத்தில் நிலையான வகையில் காட்சிப்படுத்தியுள்ளார்.


சிலப்பதிகாரம் – 5

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-48“மங்கல வாழ்த்துப் பாடல்”

போற்றுவோம் (சிந்தியல் வெண்பாக்கள்)
“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்”

யாம் திங்களைப் போற்றுவோம்!
திங்களைப் போற்றுவோம்!
தாது பரந்த மாலையையுடைய சோழனது
குளிர்ச்சியையுடைய வெண்குடை போன்று,
இந்த அழகிய இடத்தையுடைய உலகிற்கு,
பொதுவற அளி செய்தலால்.

“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்”

யாம் ஞாயிற்றைப் போற்றுவோம்!
ஞாயிற்றைப் போற்றுவோம்!
பொன்னி நாட்டையுடைய சோழனது ஆழிபோல்,
பொன்னாலாய கொடுமுடியை யுடைய
மேருவை வலமாகத் திரிதருதலால்.

“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்”

யாம் மாமழையைப் போற்றுவோம்!
மாமழையைப் போற்றுவோம்!
அச்சத்தைத் தருகின்ற கடல்சூழ் உலகிற்கு,
அவன் அளி செய்யு மாறுபோல,
மேலாகி நின்று தன் பெயலால் வளஞ்சுரத்தலால்.

“பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு
ஓங்கிப் பரந்தொழுக லான்”

யாம் பூம்புகாரைப் போற்றுவோம்!
பூம்புகாரைப் போற்றுவோம்!
கடலை வேலியாக வுடைய உலகின்கண்,
தொன்றுதொட்டு அவன் குலத்தோடு பொருந்தி
உயர்ந்து பரந்து நடத்தலால்.

சிலப்பதிகாரம் இசைத்தமிழ் நூல்தான் என்பதற்குரிய சிறப்பான ஆதாரங்கள்
1 – அரங்கேற்றுக்காதை
2 – கானல்வரி
3 – வேனிற்காதை
4 – ஆய்ச்சியர் குரவை
5 – குன்றக்குரவை
6 – வேட்டுவவரி என வரும் ஆறு காதைகளும் சான்றாகும்.

அரங்கேற்றுக்காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மாதவி நாட்டியம் பயின்றாள்

“தெய்வ மால்வரைத் திருமுனி யருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்றிக்
கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல்
ஏழாண் டியற்றியோர் ஈரா றாண்டிற்
சூழ்கழன் மன்னற்குக் காட்டல் வேண்டி”

தெய்வ மலையான பொதிகை மலையில் இருந்த அகத்திய முனிவரின் சாபமேற்று, விண்ணுலகை விடுத்து மண்ணுலகில் பிறந்தனர் இந்திரன் மகன் சயந்தனும், ஊர்வசியும்.

மாதவியாக மண்ணுலகில் பிறந்த ஊர்வசி, தன் நடனத் திறமையை அரங்கேற்றி “தலைக்கோல்” பட்டம் பெற்றாள்.

வேணுவாக பிறந்த சயந்தனும் அவளுக்கு துணை நின்றான். அந்த நடன அரங்கிலே அகத்தியர், அவர்களுக்குச் சாபம் நீங்க செய்தார்.

நாடகத் தொழிலில் மாறுபாடுகள் இல்லாத சிறப்பினை உடையவர், மாதவியாக பிறந்த ஊர்வசி போன்ற வானமகளிராகிய நடன மாதர். அவர் போல குன்றாத தொழில் சிறப்போடு பிறந்தவள் இந்த மாதவி!

சித்திராபதியின் மகளாக பிறந்த இவள், அழகிய பெரிய தோள்களை உடையவள். தாது அவிழ்கின்ற மலர்கள் சூடிய, சுருள் கூந்தலை உடையவள்.

“கூத்து”, “பாட்டு”, “ஒப்பனை” என்று நாடக மகளிர்க்கு உரிமையாக சொல்லப்படும் மூன்றினுள் ஒன்றினும் குறைவில்லாமல் ஏழாண்டு காலம் மாதவி இவற்றில் முறையாக  பயிற்சி பெற்றாள்.

தான் பயின்ற நடனகலையை அரங்கேற்ற நினைத்து, தன் பன்னிரண்டாவது வயதில், வீரர்கள் படை சூழ்ந்த, கழலணிந்த சோழமன்னன் அவைக்கு செல்ல விரும்பினாள்.

நாட்டிய ஆசான்
“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு

ஆடலும் பாடலும் பாணியுந் தூக்குங்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையுந் தொழிற்கையுங்
கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்

வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற் கமைந்த ஆசான் தன்னொடும்”

மாதவியின் ஆடல் ஆசான் “அகக்கூத்து”, “புறக்கூத்து” என்ற இருவகைக் கூத்தின் இலக்கணமும் நன்றாக அறிந்தவன் ஆவான்.

அவற்றின் பல்வகைப் பகுதிகளான கூத்துக்களையும், விலக்கு உறுப்புக்களுடன் இணைந்த பதினொரு வகையான ஆடல்களும், அவற்றிகிசைந்த பாடல்களும், கொட்டும், இவற்றின் கூறுகளையும் விதிக்கப்பட்ட மரபுகளின்படி விளக்கமாக அறிந்தவனாக இருந்தான்.

ஆடலும், பாடலும், தாளங்களும், தூக்கும் ஒன்றாக முறையே நெறிப்பட அமைய செய்வதில், அவன் வல்லவன்!

அவ்வாறு செய்யும்போது, பிண்டி, பிணையல், எழிற்கை, தொழிற்கை என்று சொல்லப்படும் அபிநய வகைகளை அறிந்து கூத்து நிகழும் இடத்திலே, கூடை என்னும் ஒன்றைக் கைத்தொழில் செய்யும்போது, வாரம் என்னும் இரட்டை கைத்தொழில் புகாமலும், அதுபோல வாரம் செய்த கை கூடையிற் புகாமலும்; ஆடலும், அபிநயமும் தம்முள் ஒன்றுடன் ஒன்று கலவாமல் பார்த்து கொள்ளவும் தெரிந்தவன்.

குரவைக்கூத்தும், வரிக்கூத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்திடாது, பயிற்றுபவர் ஆடுமாறு கற்பிக்கக் கூடியவன். இவ்வாறு ஆடலுக்கு ஏற்ற எல்லா தகுதிகளையும் உடையவனாகிய மாதவியின் ஆடல் ஆசானும், சோழன் அரங்கிற்கு வந்தான்.

இந்த ஆசானைத் தொடர்ந்து நாமும் சோழனின் அரங்கிற்கு வருவோம்….

இசைத்தமிழின் தொன்மை - 49 சிலப்பதிகாரம் – 6

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

அரங்கேற்றுக்காதை

இசை ஆசான்
“யாழுங் குழலுஞ் சீரும் மிடறுந்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொ டிவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்
தேசிகத் திருவின் ஓசை யெல்லாம்
ஆசின் றுணர்ந்த அறிவினனாகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலுங் கொளுத்துங் காலை
வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையொன் றானும்”

யாழ் இசையும், குழல் இசையும், தாளக் கூறுபாடுகளும், வாய்ப்பாட்டும், தாழ்ந்த சுரத்தில் இசைத்திடும் மத்தளமும், ஆகிய இவற்றால் வரும் இசையை கூத்திற்கு பொருந்துமாறு இசைக்கத் தெரிந்தவன்;

பாடல் வரிக்கும், ஆடலுக்கும் உரிய பொருள்களானநான்கு இயக்கங்களையும் இயக்கி, “இயற்சொல்”, “திரிச்சொல்”, “திகைச்சொல்”, “வடச்சொல்”, ஆகிய தேசிகச் சொற்களின் ஓசையை சரியாகக் கடைப் பிடிப்பவன்;

சொற்களின் ஓசை குறிக்கும் பொருள்களெல்லாம் குற்றமறத் தெரிந்த அறிஞன்;

ஆடல்களின் தொகுதிக்கேற்ப, நாடங்களின் பகுதிக்கேற்ப இசைப்பொருத்தம் உணர்ந்து இசைக்கும் பாங்கினை தெரிந்தவன்;

குற்றமற்ற இசைநூல் வழக்குகளை நன்கறிந்து, அவற்றை வகுக்கவும், விரிக்கவும் செய்யும் திறன் கொண்ட வல்லவன்; தளராத மனம் கொண்டவன்;

இத்தகைய பெருமை உடைய ஒருவன், மாதவிக்கு இசை ஆசிரியனாக அமைந்திருந்தான்!

 தமிழ் புலவர்
“இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி
வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து

இசையோன் வக்கிரித் திட்டதை யுணர்ந்தாங்கு
அசையா மரபி னதுபட வைத்து
மாற்றோர் செய்த வசைமொழி யறிந்து
நாத்தொலை வில்லா நன்னூற் புலவனும்”

ஆரவாரமுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் உள்ளதமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியுமாறு,தமிழ் மொழியின் தன்மை முழுதும் தெரிந்தவனாகபுலவன் இருத்தல் வேண்டும்;

“வேத்தியல்”, “பொதுவியல்”, என்றிரு நாட்டிய நூல்களின் மரபுகளை நன்கறிந்து, அவற்றை கடைபிடித்து,இசை ஆசிரியரின் பண்ணின் திட்டத்தை உணர்ந்து,சிறிதும் பிறழாமல், அத்தாள நிலையிலே பொருந்தச் சொற்களை அமைக்க வல்லவனாக இருத்தல் வேண்டும்;

மரபுகளுக்கு மாறுபட்டோர் செய்த வசைமொழிகளை அறிந்து, தாம் இயற்றும் கவிதனில் அவ்வசைமொழிகள் வாராமல் செய்யவல்ல நாவன்மையும், நல்ல நூலறிவு மிக்கவனாகவும் இருத்தல் வேண்டும்;

அத்தகைய தன்மை கொண்ட புலவன் ஒருவனும் மாதவிக்கு தமிழ் ஆசிரியனாக இருந்தான்.

தண்ணுமை ஆசிரியர்
“ஆடல் பாடல் இசையே தமிழே
பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றிவை ஆசி னுணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவின்று மிகுத்தாங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி

வாங்கிய வாரத்து யாழும் குழலும்
ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூருகிர்க் கரணங் குறியறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணஞ் சிதைவின்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழின் முதல்வனுஞ்”

ஆடல், பாடல், இசை, பண், பாணி, தூக்கு, இவற்றில் உண்டாகும் குற்றங்கள், தமிழில் வழங்கும் சொற்கள் ஆகியவற்றை தெளிவுடன் உணர்ந்தவன் இவன்;

ஓர் உருவை இரட்டிக்கு இரட்டி சேர்த்தல் கூடையாகும். நடனத்தில் அவ்வாறு வரும் இடத்திக் குறைவின்றி ஆவர்த்தனங்கள் துரிதமாக அமைய வாசிக்க வல்லவன்;

வாய்ப்பாட்டும், யாழும், குழலும் இசைந்து இசைக்க, கேட்பவர் செவிதனில் இன்பம் சேர்க்குமாறு வாசிப்பவன்;

நிகழ்கின்ற கூத்தின் குறிப்பினை அறிந்து, விரல்நுனிகளை மத்தளத்திலே சேர்த்து இதமாக வாசிக்க தெரிந்தவன்;

பிற கருவிகளின் குறைந்த ஒலியை நிரப்பியும், மிகுந்த ஒலியை அடக்கியும் ஈடுகள் செய்திடும் திறன் உடையவன்;

இத்தகைய தண்ணுமை என்னும் தொழிலுக்கே தலைசிறந்தவனாக விளங்கும் ஓர் ஆசிரியனும் மாதவிக்கு அமைந்து இருந்தான்!

குழல் ஆசிரியர்
“சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயலறப் பெய்தாங்கு
ஏற்றிய குரலிளி என்றிரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வின னாகிப்

பண்ணமை முழவின் கண்ணெறி யறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு
இசையோன் பாடிய இசையி னியற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி

இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடின்று வளர்த்தாங்கு
ஈர நிலத்தின் எழுத்தெழுத் தாக
வழுவின்று இசைக்குங் குழலோன் றானும்”

நூல்களில் சொல்லிய முறைப்படி, “சித்திரப் புணர்ச்சி” , “வஞ்சனைப் புணர்ச்சி” என்னும் இருவகைக் கூற்றினையும் அறிந்து இசைப்பவன்;

இசை ஆசிரியருக்கு நிகரான அறிவு திறன் வாய்த்தவன்; நான்கு வகையான வர்த்தனைகளையும் மயக்கமின்றி இசைத்து,

அவ்விடத்தே ஏறிய “குரல்”, “இளி” என்று சொல்லப்படும் இருவகை நரம்பின் இசைக்கும் ஒத்துக் கேட்குமாறு இசைக்கும் திறமையினை உடையவன்;

சிறப்பாய் பொருந்திய பண்ணை சரியாய் அமைத்து, முழவின் இருகண் நெறிகளுடன் தாள இயல்புகளின் திறம் அறிந்து, தண்ணுமை ஆசிரியனுக்கும் தக்கவாறு பொருந்தி இசைக்க வல்லவன்.

இளநரம்பை முதலாவதாக, யாழின்கண் நிரல்படவைத்து, பண்ணில் வரும் சுரங்கள் குறைவுபடாது வளர்த்து, பண்ணுக்குரிய சுரங்கள் தவிர வேற்றுச் சுரங்களின் கலப்பேதுமின்றி அவற்றோடு ஒற்றியிருந்து, இன்புற இயக்கி, இசையின் பண் இலக்கணத்துடன் பொருந்திட வைத்துக் குழல் இசைக்க வல்லவன்;

வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்த வல்லவனாகவும் இருப்பவன்.

அவ்விடத்தும் சொல் நீர்மைகளின் எழுத்துக்கள் ஒவ்வொரு எழுத்துமாக வழுவின்றி இசைக்கும் ஆற்றல் உடையவன்; அத்தகைய தன்மை உடைய ஒருவன் மாதவிக்கு குழல் ஆசிரியனாக அமைந்திருந்தான்!

இசைத்தமிழின் தொன்மை - 50சிலப்பதிகாரம் – 7

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

அரங்கேற்றுக்காதை

மாதவி நடனம் ஆடப்போகும் அரங்கம்

“எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூனெறி மரபின் அரங்கம் அளக்குங்
கோலள விருபத்து நால்விர லாகஎழுகோ லகலத் தெண்கோல் நீளத்
தொருகோல் உயரத் துறுப்பின் தாகி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப்
பூதரை யெழுதி மேனிலை வைத்துத்
தூண்நிழற் புறப்பட மாண்விளக் கெடுத்தாங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியுங்
கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்தாங்குஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்”

நாடக நூலோர் சொல்லிய அரங்க அமைப்பு இயல்புகளில் சிறிதும் மாறாது, அரங்கம் அமைப்பதற்குத் தகுதியான ஒரு இடத்தை முதலில் தேர்வு செய்தனர். பொதிய மலை போன்ற உயர்ந்த புண்ணிய மலைகளிலே உயரமாக வளர்ந்த மூங்கில்களிலே, கணுவுக்கு கணு ஒரு சாண் தூரம் உள்ளதாக வளர்ந்திருக்கும் மூங்கில் ஒன்றை வெட்டி வந்தனர். அதனை, நூல்கள் உரைத்த முறைக்கு ஏற்றவாறு, நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் கைபெருவிரலில் இருபத்தி நான்கு வரும்படி அளந்து ஒரு கோல் நறுக்கினர்.

ஏழு கோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும், ஒரு கோல் உயரமுமாக நடன அரங்கம் அமைக்கப்பட்டது.

நாற்புறமும் தூண்களை நிறுத்தி, அவற்றின்மேல் உத்திரப் பலகைகளைப் பொருத்தினர்.

உத்திரப் பலகைகளுக்கும் நடனமேடைக்கும் இடையே நான்கு கோல் அகல இடைவெளி இருந்தது.

அரங்கத்தின் உள்ளே போவதற்கும் வருவதற்குமாக இரண்டு வாயில்கள் அமைக்கப்பட்டன.

அரங்கின் மேல்நிலை மாடத்தில், யாவரும் தொழுது போற்றுமாறு, நால்வகை வருணபூதங்களின் உருவங்களை எழுதி வைத்தனர்.

தூண்களின் நிழல் அரங்கத்தில் விழாதவாறு ஒளிவிடும் நிலை விளக்குகளை வைத்தனர்.

ஒருபக்கமிருந்து மறுபக்கம் செல்லுமாறு அமைக்கப்பட்ட திரையையும், இரண்டு பக்கமிருந்தும் நடுவே நோக்கி வருமாறு அமைக்கப்பட்ட திரையையும், மேலிருந்து கீழிறங்கி வரும் திரையையும் பாங்குடன் அமைத்தனர்.

அதன்பின், ஓவிய வேலைப்பாடுகளுடன் மேல்விதானத்தைக் கட்டினர்.

புகழ்பெற்ற முத்துமாலை வகைகளான “மாலை”, “தாமம்”, “வளை” மாலைகளை அரங்கம் முழுதும் தொங்கவிட்டனர்.

இவ்வாறு, புதுமையான அரிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பெற்றது மாதவியின் ஆடல் அரங்கம்!

தலைக்கோலின் வரலாறு
“பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த
சீரியல் வெண்குடைக் காம்புநனி கொண்டு
கண்ணிடை நவமணி யொழுக்கி மண்ணிய
நாவலம் பொலந்தகட் டிடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்த னாகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி
மண்ணிய பின்னர் மாலை யணிந்து
நலந்தரு நாளாற் பொலம்பூண் ஓடை
அரசுவாத் தடக்கையிற் பரசினர் கொண்டு
முரசெழுந் தியம்பப் பல்லிய மார்ப்ப
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவுந்
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலஞ் செய்து புகுந்துமுன் வைத்தாங்கு”

பெரும்புகழ் பெற்ற மன்னவர், பகையரசருடன் நடந்த போரில் வென்று, அப்பகையரசர் புறமுதுகிட்ட வேளையிலே, அவருடைய வெண்கொற்றக் குடையின் காம்பினைச் சிதைவின்றி எடுத்துக்கொண்டு வருவர்.

அதன் கணுக்களை தூய்மை செய்து, நவமணிகளை கட்டி அலங்கரிப்பர். கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியைச் “சாம்பூநதம்” என்னும் பொன் தகட்டால் பொதிவர்.

நாட்டினை தன் வெண்கொற்ற குடையின் கீழ் காக்கும் மன்னனின் அரண்மனையிலே அக்கோலை வைத்து, “இந்திரனின் மகன் சயந்தனாக இக்கோல் விளங்குக” என அதற்கு வந்தனை, வழிபாடுகள் முதலியன செய்து போற்றுவர். அதுவே “தலைக்கோல்” என்பதாகும்.

புண்ணிய நதிகளில் இருந்து பொற்குடங்களால் முகந்து வந்த நல்ல நீரைக் கொண்டு தலைக்கோலை நீராட்டி, மாலை சூட்டி, நன்னாள் ஒன்றில் பொன் பூண் மற்றும் பொன் “முகபடாம்” என்னும் அலங்கார துணி பூண்டிருக்கும், பட்டத்து யானையின் பெரிய துதிக்கையிலே வாழ்த்தொலிகளுடன் அந்த தலைக்கோலை வழங்கினர்.

அந்த யானையை அழைத்துக் கொண்டு வீதி உலா வரும்போது, மூவகை முரசுகள் முழங்கின, பல்வேறு வாத்தியங்கள் ஒலித்தன, அரசனும் அவனுடன் சேர்ந்த ஐம்பெரும் குழுவினரும் அதனுடன் வீதிவலம் வந்தனர்.

யானை தேர்வீதியை சுற்றி வந்த பின் தன் கையிலிருந்த தலைக்கோலை கவிஞனிடம் அளித்தது.

அவ்வாறு வந்து சேர்ந்த தலைக்கோலைக் கவிஞன் மாதவியின் நடன அரங்கிலே கொண்டு போய், அவையோர் அறியுமாறு ஒரு இடத்தில் வைத்தான்.

வாரப்பாடல்
“இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொன்னெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீரியல் பொலிய நீரல நீங்க
வாரம் இரண்டும் வரிசையிற் பாடப்
பாடிய வாரத்து ஈற்றின்நின் றிசைக்குங்
கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங்…”

அரசன் முதலிய அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப அமைத்த இருக்கைகளில் முறையாக அமர்ந்தனர். இசைக்கருவிகளை இசைப்பவர் அவர்களுக்குரிய இடத்தில் அரங்கில் முறைப்படி நின்றனர்.

நடனம் ஆட வந்த மாதவியும் தன் வலதுகாலை முன் வைத்து அரங்கில் ஏறினாள். அரங்கத்தின் வலது பக்கத் தூணின் அருகே ஆடுபவள் நிற்கவேண்டும் என்னும் வழக்கப்படி, மாதவி அவ்விடத்தே சென்று நின்றாள்.

பழைய முறைகளின் இயற்கைகள் அனைத்தும் அறிந்த அனுபவமுள்ள நடன மகளிர், முறைப்படி இடத்தூண் அருகே சென்று நின்றனர்.

நன்மைகள் பெருகவும், தீமைகள் அறவே நீங்கவும், ஓரொற்று வாரப்பாடல்களும் ஈரொற்று வாரப்பாடல்களும் முறையாக பாடினர். வாரப்பாடல்களின் இறுதியில், இசைக்கும் இசைக்கருவிகள் அனைத்தும் முழங்கின.

இசைத்தமிழின் தொன்மை - 51சிலப்பதிகாரம் – 8

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

அரங்கேற்றுக்காதை

இசை முழக்கம் – இசை கருவிகள் முழங்கிய விதம்
“எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் — மண்ணின்மேற்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கின் வந்து”

“குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை
ஆமந் திரிகையோ டந்தர மின்றிக்
கொட்டிரண் டுடையதோர் மண்டில மாகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி
வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்…”

குழலிசை எழுகின்ற வழியே யாழ் இசைத்தது; யாழின் வழியே தண்ணுமை இசைத்தது; தண்ணுமையின் வழியே முழவு இசைத்தது; முழவோடு கூடிநின்ற ஆமந்திரிகை இசைத்தது,இவ்வாறு ஆமந்திரிகை என்னும் இடக்கை வாத்தியமும் மற்ற எல்லா இசைக்கருவிகளும் கூடி இடைவெளியின்றி ஒன்றாக ஒலித்தன.ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக, பஞ்சதாளப் பிரபந்தம் கட்டப்பட்டது.அத்துடன் தீர்வு ஒரு பற்றும் சேர்ந்து பற்று பதினொன்று ஆனது.

இங்ஙனம் பதினொன்று பற்றாலே முடிப்பது “தேசிக் கூத்து” என்பது நாடக நூல்கள் சொல்லும் மரபு. இவ்வாறு விதிமுறைகள் யாவும் வழுவாமல் அந்தரக் கொட்டுடன், இசை முழக்கமும் ஒன்றாக ஒலித்தது.

தேசிக் கூத்து – மாதவி ஆடிய தேசிக் கூத்தின் வருணனை
“மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து

மூன்றளந் தொன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தாற் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை…”

பலைப்பண் என்னும் பண்ணின் மேல் அளவு குன்றாதபடி ஆலாபனை செய்து, நான்கு உறுப்பும் சேர்ந்த செய்திகளை நன்றாக அறிந்து, தேசிக் கூத்தின் முறைப்படி மூன்று ஒத்து (மட்டதாளம்) உள்ள அளவில் ஆரம்பித்து, ஓர் ஒத்து (ஏகதாளம்) உள்ள தாளத்தில் முடித்து, அழகிய மண்டில நிலைமையாலே கை குவித்தல் அவிநயம் எல்லாம் செய்து காட்டி, வாரப் பாடல்களுக்கு மாதவியும் நடனம் ஆடினாள்.

மார்க்கக் கூத்து – மாதவி ஆடிய மார்க்கக் கூத்தின் வருணனை
“ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப்
பின்னையும் அம்முறை பேரிய பின்றைப்
பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக்
காட்டினள் ஆதலிற் காவல் வேந்தன்”

பஞ்ச பிரபந்தங்களாகக் கட்டப்பட்ட வடுகில் ஒத்து, தேசியில் ஒத்து காட்டி, இரண்டிரண்டாக, மட்டதாளம் முதல் நிலையாக, ஏகதாளம் இறுதி நிலையாக,  “வைசாக” நிலையில் நடனம் ஆடினாள்.

பொன்னின் இயல்புகள் அமைந்த பூங்கொடி அரங்கத்தில் வந்து நடனமாடியது போல, நாட்டியம் பற்றிய சிறந்த நூல்களில் கூறப்படும் தகுதிகளெல்லாம் நன்றாக கடைபிடித்து, அனைவரும் காண மாதவியும் அரங்கிலே ஆடினாள்.

தலைக்கோலி – சோழ மன்னன் மாதவிக்கு“தலைக்கோலி” பட்டம் வழங்கினான்
“காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினின் வழாமைத்

தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே…”

மாதவி நடனத்தை கண்டு சோழ மன்னன் மகிழ்ந்தான். அந்நாட்டு நடைமுறை இயல்பு வழுவாமல், அவன் அணிந்திருந்த பச்சை மாலையையும், “தலைக்கோலி” என்ற பட்டத்தையும் மாதவி பெற்றாள்.

முதன்முதலாய் மேடையேறி சிறந்து விளங்கிய நாடக கணிகையர்க்குரிய பரிசின் அளவு இது. நூலோர் விதித்த முறைப்படி, அரங்கின் முன் ஆயிரத்து எட்டுப் கழஞ்சுப் பொன்னையும் பெற்றாள் மாதவி.

கோவலன் மாதவியின் மனை புகுந்தான்
“அதுவே
நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுயர் பசும்பொன் பெறுவதிம் மாலை

மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென
மானமர் நோக்கியோர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகிற்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுத லறியா விருப்பின னாயினன்
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்தென்”.

பத்துப் பத்தாய் அடுக்கிய நூறுடன் எட்டையும் இணைத்த உயர்ந்த சிறப்பு பெற்று பசும்பொன்னால் ஆனது அரசன் மாதவிக்கு பரிசு அளித்த மாலை.

இதை அதிகம் பணம் கொண்டு வாங்குபவன் மாதவிக்கு மணமகனாக ஏற்றவன் என்று எண்ணினாள் மாதவியின் தாய் சித்ராபதி.

இந்த எண்ணத்துடன் மான் போன்ற மிருட்சியுடைய பார்வையைக் கொண்ட கூனி ஒருத்தி கையில் அம்மாலையை கொடுத்தாள்.

நகரத்து இளைஞர்கள் பலரும் திரிந்து கொண்டிருக்கும் பெரிய தெருவிலே அம்மாலையை விற்பவள் போல கூனி நின்றாள்.

பெரிய தாமரை போன்ற நெடிய கண்களையுடைய மாதவியின் அந்த மாலையை கோவலன் வாங்கி, கூனியுடன் மாதவியின் மணைக்கு சென்றான்.

மாதவியுடன் கட்டி தழுவி மகிழ்ந்து மயங்கினான். அவளை ஒருபோதும் நீங்கிட முடியாத பெரும்விருப்பம் உடையவன் ஆனான்.

குற்றங்கள் ஏதுமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியின் நினைவே தன் உள்ளத்தில் சிறிதும் இல்லாதவனாய், தன் வீட்டை, கண்ணகியை அறவே மறந்தான்.

“எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் – மண்ணின்மேற்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கின் வந்து”.

புகார்நகரிலே பொன்னாலாகிய வளை அணிந்த மாதவியானவள், தலைஅரங்கிலே வந்து, எண்ணும், எழுத்தும், இயல்ஐந்தும், பண்நான்கும், பண்ணுக்கிசைந்த பதினொரு வகையான கூத்தும், உலகம் முழுதும் உள்ளோரெல்லாம் புகழ்ந்து பேசும்படியாக, ஆடியும் பாடியும் காட்டி, அதனால் உலகு போற்றும் சிறப்பும் பெற்றாள்.

அரங்கேற்று காதை முற்றிற்று.

தமிழிசைப்பண்கள் : தொடர் 40 & 44 -51
சிறீ சிறீஸ்கந்தராஜா
07/10/2016 – 08/12/2016

தொகுப்பு – thamil.co.uk