உருவகம் – உவமை – படிமம் : சிறீ சிறீஸ்கந்தராஜா

%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b5%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-1படிமம் என்றால் என்ன?? தொடர்- 1

கவிதை என்றால் என்ன?? யானையைப் பார்த்த குருடர்களைப் போலவே தடவிப்பார்த்தே… “இதுதான் கவிதை” என்று இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றோம். வேறொன்றுமல்ல…

நெற்கொழுதாசனின் “வெளிச்சம் என் மரணகாலம்” என்ற கவிதைத் தொகுப்பு… எப்படியோ என் விலாசம் தேடிக்கண்டுபிடித்து வந்து சேர்ந்துவிட்டது. புரட்டினேன்… ஒன்றுமே புரியவில்லை!! இது என்னடா… பாண்டி நாட்டுக்கே வந்த சோதனையா?? ஒற்றைக்காலில் கடுந்தவமிருந்தேன்… வரமாகக் கிடைத்தவற்றை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

படிமம் என்றால் என்ன என்பதை அறியாமலேயே நாமும் கவிதை எழுதி கொண்டிருக்கிறோம். நம்மையும் அறியாமல் நம் கவிதையில் சிலநேரங்களில் படிமங்கள் படிந்துவிடுகிறன என்பது என்னவோ உண்மைதான். இப்படி படிமவடிவில் எழுதப்படும் கவிதைகள் எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை. அப்படி புரிந்து கொண்டாலும் அது அவர்களின் புரிதல் என்னவோ அதுதான் கவிதையிலும் சொல்லப்படும் விடயமாக கருதுகிறார்கள்.

ஒன்றைப் போல் ஒன்று இல்லாத இரண்டு பொருள்களை ஒப்பிடப் பல சமயங்களில் உருவகமும் உவமையும் பயன்படுத்தப்படுகின்றன. உவமையில் போல, போன்று, மாதிரி என்றவாறு ஏதேனும் ஒரு சொல்லினால் (உவம உருபு) ஒப்புமை உணர்த்தப்படுகிறது.

உருவகத்தில் ஒப்புமை உட்குறிப்பாக உள்ளது அல்லது உட்பொதிந்துள்ளது. உருவகச் சொல் நேர்ச் சொல்லுக்குப் பதிலாகப் பதிலீடு (substitution) செய்யப்படுகிறது. வாழ்க்கையில் நாம் உருவகங்களைத்தான் மிகுதியாகப் பயன்படுத்துகிறோமே ஒழிய உவமைகளை அபூர்வமாகத்தான் பயன்படுத்துகிறோம்.

உருவகம் என்பது ஒரு சொல்லுக்கு பதிலாக இன்னொரு சொல்லைப் பாவிக்கின்ற பதிலீடுதான். உருவகத்தைப் பண்புத்தொகையின் இன்னொரு வடிவமாகப் பார்த்தார்கள்.

“சுதந்திரம்” என்பதற்கு பதிலாக “விடியல்” என்கிறோம். மகிழ்ச்சியை “பூபாளம்” என்கின்றோம்.
“எழுச்சி” என்பதற்கு பதிலாக “அக்கினி” என்கிறோம்
கவிஞனின் மொழி சாதாரண மொழியைவிட
அதிகம் உணர்வு சார்ந்ததாக இருக்கவேண்டும்.
அதில் படிமத்தன்மை காணப்படவேண்டும்
என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b5%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-2படிமம் என்றால் என்ன?? தொடர்- 2

வண்ணமயமான அனுபவங்களை எழுப்புவதில் படிமத்தன்மை சிறப்பாகப் பயன்படுகிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், சிந்தனைகளைக் குறிப்பாக உணர்த்தவும், உணர்வுகளை மனத்தில் மீளாக்கம் செய்யவும் பயன்படுவதால் கவிஞனுக்கு ஒரு விலைமதிப்பற்ற மூலவளம் இதுதான்.

கவிஞர்கள் அருவமான, படிமத்தைக் கொள்ளமுடியாத வார்த்தைகளை விரும்புவதில்லை. மாறாக உருவத்தன்மை கொண்ட, பருமையான, படிமத்தை ஏற்கக்கூடிய வார்த்தைகளையே மிகவும் விரும்புகிறார்கள்.

பலவேறு துறைகளில் படிமம் என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. சொல்லோவியம் என்று படிமத்தைச் சொல்லலாம். மனக்காட்சி என்ற அர்த்தத்தில் சாதாரணமான மக்களும் பயன்படுத்துகிறார்கள்.

இலக்கியப் படிமங்கள் என்றால், சொற்களால் உணர்வுச் சித்திரமாக அமைந்திருக்கும். ஓரளவு உருவகத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். அவ்வுருவகத்தின் அடித்தளத்தில் மனிதஉணர்வு ஒன்று தொக்கிநிற்கும். வாசகரை இழுத்துப் பிடித்து, அவர்கள் மனத்தில் தைக்கின்ற வேகம் அதனுள் இருக்கும். தான் உணர்த்தவரும் பொருளோடுமெய்யான நெருக்கம் கொண்டதாக இருக்கும்.

தமிழில் படிமம் பற்றிய சிந்தனை பழங்காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. தொல்காப்பியம் “பல்புகழ் நிறுத்த படிமையோனே” என்று ஆண்டுள்ளது. ஏறத்தாழ எழுபதுகளிலிருந்து படிமம் என்ற சொல் மிகுதியாகத் தமிழில் வழங்கிவருகின்றது. தொடக்கத்தில் உருக்காட்சி என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல், படிமத்தின் இயல்பைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.

கவிஞர் சொற்களால் வருணிக்கின்ற ஒரு காட்சி வாசகர் உள்ளத்தில் தெளிவான காட்சியாக உருப்பெறுவது படிமம் ஆகும். புதுக்கவிதை புகுந்தபிறகு கற்பனை என்ற சொல்லின் போதாமை கருதிப் போலும், படிமம் என்ற சொல்லை சுவீகரித்துக் கொண்டனர்.

எனவே படிமம் என்பது (கவிதையில்) கற்பனையின் விளைவான காட்சிப்படுத்தும் ஒரு சொற்கோவையையும், அச்சொற்கோவை உருவாக்கும் மனச்சித்திரத்தையும் ஒருங்கே குறிக்கின்றது.

சங்க இலக்கியத்தில் அருமையான படிமங்கள் பலப்பல காணக்கிடக்கின்றன. இன்றைய படிமம், சங்க இலக்கியத்தில் உவமை, உருவகம், உவமப்போலி போன்ற பலவற்றைத் தன் கூறுகளாகக் கொண்டு இயங்கி வந்திருக்கிறது.

படிமம் என்பது கவிதையின் அடிப்படை இயல்பு.  எனவே எக்காலக் கவிதையிலும் படிமம் உண்டு. இன்றுதான் படிமம் தோன்றி விட்டது என்று கருதுவது தவறாகும்.

‘‘படிமங்கள் தன்னுணர்வற்ற நிலையில் மனத்தில் சேகரிக்கப்பட்டு வகைப் படுத்தப்பட்ட அனுபவங்கள்’’ என்று ஒரு வரையறை சொல்கின்றது. அறிவாலும் உணர்ச்சியாலும ஆன ஒரு மன பாவனையை ஒரு நொடிப் பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிமம். இக்காலத்தில் உருவகத்தையே படிமம் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு அருவப் பொருள்களுக்கிடையிலான ஒப்புமை, படிமத்தை உருவாக்க இயலாது. எனவே எல்லா உருவகங்களையும் ஒப்புமைகளையும் படிமம் எனல் கூடாது.

ஐ.ஏ. ரிச்சட்ஸ் தமது நூலான “The Philosophy of Rhetoric” என்பதில் ஓர் ஒப்புமைப்படிமத்தில் மூன்று உறுப்புகள் உள்ளன என்று குறிப்பிடுகிறார். அவை களம் அல்லது பொதுத் தன்மை (Ground); ஊர்தி (Vehicle), கருத்து (Tenor) என்பன ஆகும்.

ஊர்தி என்பதை உவமானம் என்றும், கருத்து என்பதை உவமேயம் என்றும் ஏறத்தாழக் கூறலாம். ஒப்பீட்டிற்குத் தேவைப்படுவன இருபொருள்களோ, எண்ணங்களோ, உணர்வுகளோ ஆகும்.

முதலில் தோன்றுவது சிந்தனையால் உருவாகும் கருத்து (டெனர்). அதன் பயனாக ஒப்பீடு தோன்றுகின்றது. ஒப்பீட்டின் விளைவாகத் தோன்றும் சொல்வடிவம் கருத்தினை ஏற்றிச்செல்லும் ஊர்தியாக வெளிப்படுகிறது. அதாவது சிந்தனையில் தோன்றிய கருத்து, சொல்லின் மூலமாகக் காட்சிப்பொருளையோ, கருத்துப் பொருளையோ குறித்த படிமமாக வெளிப்படுகிறது. இவ்வாறு படிமம் உருவாகும்போது கவிதையில் வெற்றுச் சொற்கள் அமைவதில்லை.

இலக்கிய வெளிப்பாட்டு முறைகளில் சிறந்ததாகவும், படைப்போருக்கும் படிப்போருக்கும் இடையில் நெருக்கமான மனத்தொடர்பை ஏற்படுத்துவதாகவும் படிமம் அமைகிறது.

படிமம் என்பது அடிப்படையில் சொல்ல வந்ததைக் காட்சிப்படுத்திக் கூறுவது தான். கண்ணால் காணமுடியாத அருவப்பொருள்களையும் கருத்துகளையும் உணர்வுகளையும் காட்சிப் படுத்தவல்லது படிமம் எனலாம். அவ்வாறு காட்சிப்படுத்துவதற்காகக் கவிஞன் சொற்றொடர்களையும், உவமைகளையும், உருவகங்களையும், வேறுபலவித அணிகளையும் பயன்படுத்துகின்றான்.

இவ்வகையில் படிமம் என்பது இலக்கியக் கருவிகளின் கூட்டுக் கலப்பாக இருப்பதால் இதனை உவமை உருவகம் போன்ற அணிவகையாக வரையறுப்பது இயலாது. உதாரணமாக விடியல் பூபாளம் என்று கூறிவிட்டாலோ அக்னிவீணை என்று சொல்லிவிட்டாலோ படிமம் வந்துவிடாது. இவை உருவகங்கள்தான்.

ஆனால் “வானம் காயம் பட்டுக்கிடந்த காலைப் பொழுது” என்று கூறும்போது, விடியற்கால வானம் மட்டுமன்றி, காயம்பட்டுக்கிடக்கும் ஆண் அல்லது பெண் ஒருவரின் வடிவமாகவும் அந்த வானம் காட்சி தருகின்றது. இது படிமமாகின்றது.

படிமங்கள் புதிதாக உருவாவதற்கு ஒப்பீட்டில் புதுமை, தெளிவு, பொருத்தம், பொருட்தன்மை (Thinginess) வெளிப்பாடு, கூறவந்தவற்றை வெளிப்படையாகச் சொற்பெருக்கத்தால் விளக்கிவிடாதிருத்தல், குறித்த தன்மையை வெளியிடல், அறிவார்த்தத் தன்மை, சுருக்கம், உணர்ச்சி ஆகிய தன்மைகள் பயன்படுகின்றன.

படிமம் கவிதைக்கு அழகூட்டும் அலங்காரப் பொருளன்று. ஒரு படைப்பின் உள்ளடக்கம், உருவம், ஆத்மா என்னும் அளவிற்குப் படிமங்கள் செயல்படுவதுண்டு. படிமங்களை மிகச் செறிவாகப் பயன்படுத்தும் நிலையில் அவை இருண்மைப் பண்பு உடையனவாக மாறிவிடும் அபாயம் உருவாகின்றது.

பல சமயங்களில் தமிழில் எழுதப்படும் கவிதைகள் இருண்மை கொள்ளாவிட்டாலும், முயன்று பொருள்காண வேண்டிய அளவில் உள்ளன. எனினும் கூறவந்ததை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவதில் படிமம் உறுதியான பங்குவகிக்கின்றது.

“அள்ளிக்
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்.
ஆகாயம் அலைபுரளும் அதில்.
கைநீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?”
இக்கவிதைப் பொருளைப் படிமப்பயன்பாடின்றி வெளிப்படுத்துவது கடினம். அருவமான விஷயங்களையும் படிமம் காட்சிப்படுத்தி எளிதில் மனத்தில் தைக்கச் செய்கின்றது.

%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b5%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-3படிமம் என்றால் என்ன?? தொடர் – 3

“இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொழிக் கண்ணகிகள்” இங்கே கால்வைப்பது மிகவும் ஆபத்தானதாகும். படிமம் என்பது இங்கு உத்தி அல்ல. காட்சி அனுபவம். அனுபவ சத்தியம். படிமம் என்பது சம்பிரதாயமாக ஓவிய, சிற்ப வழி அனுபவம் ஆகும்.

1961ம் வருட “எழுத்து” 36வது இதழில் வெளிவந்த கவிதை “விடிவு”
பூமித் தோலில்
அழகுத் தேமல்.
பரிதி புணர்ந்து
படரும் விந்து.
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ.
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி.
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி.
இங்கு ஒரே காட்சி ஐந்து ரூபங்களில் ஐந்துவித தோற்றங்களில் ஒன்றையழித்து மற்றொன்றாகத் தோன்றி மறைகிறது. இதுவே தமிழில் வெளிவந்த முதன் முதல் படிமக் கவிதையாகும்.

சொற்களால் நெஞ்சத் திரையில் வரையும் ஓவியம்தான் படிமம் என்பது. வெறும் வருணனை கூடப் படிமம்தான். ஆனாலும் உவமை, உருவகம், தொன்மம் அடங்கிய சொற்களால் உருவாக்கப்படும் சொல் ஓவியம் சிறந்த படிமமாகும்.

பல சொற்கள் மரபில் இருந்து எடுக்கப்பட்டு மறுஅர்த்தம் அளிக்கப்பட்டன. பலசொற்கள் புதியதாக உருவாக்கப்பட்டன. தொன்மம் என்றால் Myth என்ற சொல்லுக்கான கலைச்சொல் ஆகும். விழுமியம் என்றால் values. படிமம் என்றால் image. மொழி நேரடியாகச் சுட்டுவதன் மூலம் பொருள் அளிக்கின்றது.

பலசமயம் அந்த முறை போதாமலாகும்போது இன்னும் குறியீட்டுத்தன்மை தேவையாகின்றது. தமிழில் இவற்றை நாம் ஒட்டுமொத்தமாக அணிகள் என்கின்றோம்.

அனைத்தையும் ஒன்றாகச் சுட்டும் ஒரு கருத்துருதான் படிமம் என்பதாகும். உவமை உருவகம் எல்லாமே ஒட்டுமொத்தமாக கவித்துவப் படிமங்களே.

ஒன்றைச்சொல்லி அது உணர்த்தும் பொருளைக் கேட்பவன் கற்பனைக்கே விட்டுவிடுவதே படிமம் என்றும் சொல்லாம்.

கவிதையியலில் படிமம் என்பது கறாரான பொருள் கொண்டது. உணர்த்தப்படும் பொருளை முழுக்க முழுக்க வாசகனின் கற்பனைக்கே விட்டுச் செல்லும் பண்பு கொண்டது. கவிதை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொரு விதமாக வளர்சசிப் பெற்றோ அன்றி மாற்றம் அடைந்தோ வந்துள்ளது.

மரபு என்னும் பெயரில் கட்டுப்பட்டிருந்தது. இலக்கணத்துக்கு உட்பட்டிருந்தது. பாரதியின் வருகைக்குப் பிறகே கவிதையில் மாற்றம் ஏற்பட்டது.  மரபிலிருந்து விடுதலை பெற்றது. புதுக்கவிதையின் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. படிமம், குறியீடு என ஓர் அலங்காரத்தை ஏற்படுத்திக் கொண்டு அவைகளுக்குள் சிக்கிக் கொண்டது. சிறப்பும் பெற்றது.

குறியீட்டின் ஒரு வடிவமே படிமம் என்றாலும் படிமத்துக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. படிமம் கவிதையை ஒரு படி உயர்ததியது என்று திடமாகக் கூறலாம். படிமம் என்பது புதுக்கவிதைக்கு உரியது எனினும் மரபிலுள்ள உருவகமே புதுக்கவிதையில் பெயர் மாறித் தொடர்கிறது.

“உவமை உருவகங்களின் பரிணாம வளர்ச்சியே படிமம்” என கைலாசபதி கூறியுள்ளமை கவனிப்பிற்குரியது. மெய், உரு என்பவை படிமப் பண்புகள் என தொல்காப்பியமும் கூறுகின்றது.

எஸ்ரா பவுண்டு, அமி லோவல், லாரன்ஸ், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் போன்ற மேலைநாட்டுக் கவிஞர்கள் படிம உத்தியைக் கையாண்டு படிமக் கவிதைகளை எழுதி வளர்த்து வந்தனர்.

படிமத்துக்கு பல விளக்கங்கள் உண்டு. “சொற்களால் வரையப்படும் ஓவியம்” என சி,டே, லூயில் கூறுவார். கவிதையைச் செம்மைப்படுத்துவதும் செறிவுபடுத்துவதும் சிறப்புப் படுத்துவதும் படிமமேயாகும். கவிதையைக் காட்சியாகத் தோன்றச்செய்வது படிமம் எனப்படும். மனத்திற்கும் அறிவிற்கும் கவிப் பொருளை உணர்த்துவதும் படிமமே.

படிமம் புதுக்கவிதைக்கு வெறும் அலங்காரமல்ல. அதன் ஜீவநாடி சத்து ஏற்றும் சாதனம் என்று விளக்கியுள்ளார் சி,சு, செல்லப்பா. மொழியைக் கவிதையாக்கும் ஓர் அருமையான கருவியே படிமம் என்றும் குறிப்பிடலாம். மிக முக்கியமாக படைப்பாளனின் அனுபவத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றதே படிமம். குறிப்பாக “தீப்பந்து போன்ற சூரியன்” என்னும் உவமத்தை “தீப்பந்துச் சூரியன்” என்று சுருக்கி எழுதினால் அது படிமம் ஆகின்றது.

படிமத்திற்கு சுருக்கமே தேவை. “போன்ற” சொற்கள் தேவையற்றது.
ககனப் பறவை நீட்டும் அலகு,
கதிரோன் நிலத்தில் எறியும் பார்வை,
கடலுள் வழியும் அமிர்தத் தாரை,
கடவுள் ஊன்றும் செங்கோல். என “மின்னல்” என்ற தலைப்பில் மின்னலைப் பிரமிள் வருணித்ததை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தலைப்பை வைத்தே ஒவ்வொரு வரியையும் படிமமாக்கிக் காட்டியுள்ளார். விடுகதைத் தன்மையும் ஒவ்வொரு படிமத்திலும் காண முடிகின்றது.

படிமம் எனப் பொதுவாக சொல்லப்பட்டாலும் அதிலும் பல வகை உள்ளன. அவை அழகியல், கொள்கை முழக்கம், அங்கதம், நிகழ்ச்சி, முரண் பொருள், புதுமையியல், தொன்மவியல், மிகை நவிற்சி, தத்துவம், இளிவரல் என வகைப்படுத்துகிறார் கவிஞர் மித்ரா.

சமயம், தொன்மம், மூலம், அடிக்கருத்து, இயற்கை, தன்னியல்பு என்கிறார் கவிஞர் சிற்பி.

ஆயினும் மனப்படிமம், அணிப்படிமம், குறியீட்டுப்படிமம் என மூன்று பிரிவுகளிலே அனைத்தும் அடங்கியுள்ளன.

மனப்படிமத்தை ஜம்புலன்களால் எழும் காட்சி என்றும், அணிப்படிமத்தை இலக்கிய மொழிநடை வாயிலாகத் தோன்றுவது என்றும், குறியீட்டுப் படிமத்தை புரியாத உண்மைகளைப் புரியச் செய்வது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கவிதை மரபைத் தோற்றுவித்தவர் பாரதி எனினும் ந.பிச்சமூர்த்தியே புதுக்கவிதையை முழுமையாக எழுதியவர். படிமத்திலும் சில எழுதியுள்ளார்.
“இழைப்புளி சீவிய
மரச்சுருள் ஒன்று
கால் மீது காற்றில்
உருண்டு சிரிக்கிறது”
இக்கவிதை ஒலி நயப்படிமத்துக்குச் சான்றாகின்றது. உருண்டது என்பது காட்சி. சிரித்தது என்பது ஒலி நயம்.

உருவகம் – உவமை – படிமம்
சிறீ சிறீஸ்கந்தராஜா
15/09/2016