அரிசி சோறு ஆபத்தா? ஒரு சிறப்பு பார்வை Benefits of Rice

அரிசி சோறு ஆபத்தாபுறநானூறு தொல்காப்பியம் எல்லாம் பாடிச் சிறப்புற்ற அரிசி, உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. அரிசி என்றதும் நாம் அனைவரும் நெல்லரிசி மட்டும் தான் நினைவில் கொள்கிறோம். வாரம் மூன்று நாட்கள் தினையரிசி, கம்பரிசி சோறு சாப்பிடுவதும் சிறப்பு.

தினை ஒரு சிறுதானியம். கண்ணுக்கு வன்மை தரும் பீட்டா கரோட்டின்கள் நிறந்தது. அதிக புரதம் கொண்டது. கம்பரிசி இரும்பு சத்து நிறைந்தது. மறந்து போன இந்த சிறுதானியங்கள் நலம் பயக்கும் functional foods என்கிறது நவீன உணவு அறிவியல்.

இன்னும் மிகச் சரியாக அரிசி எப்போதிலிருந்து நம் பசியாற்றி வருகிறது என்று திட்டவட்டமாகத் தெரியாது. இந்தியாவின் அஸ்ஸாம், சீன எல்லை, திபெத் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உண்டு. கிமு 2400 சமயங்களிலேயே வட நாட்டில் வேதங்களிலும், சீன இலக்கியங்களின் கதைகளிலும் அரிசி குறித்த அடையாளம் அதிகம் உண்டு. கிடைத்திருக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது மொத்தத்தில், கிட்டத்தட்ட 12000 ஆண்டுகளாக அரிசி நம் அடுப்பங்கரையில் ஆட்சி செய்து வருவதை மறுக்க முடியாது.

புறநானூறு தொல்காப்பியம் எல்லாம் பாடிச் சிறப்புற்ற அரிசி, இன்று பலருக்கும் ‘ஆகாத’ உணவு ஆகி வருகிறது. மெல்லிடை தேடும் எவரும், தூர நின்று பார்க்கும் சோறு- இப்போது வீண் பழி பெற்று வரும் அமுது! ஜிம்னாஸியங்கள் வெறுத்து ஓதும் பொருள். ‘அரிசியா? ஐ டோண்ட் டேக் இட்.. பா’ என நவ நாகரீக, இளமைப் பட்டாளம் இளக்காரம் செய்யும் பொருளாகவும் ஆகி வருகிறது.

அரிசி தான் உடல் எடை கூட்டிடும் என்றால், 10,000 ஆண்டுகள் வரலாறு எத்தனை குண்டர்களைச் சந்தித்திருக்கும்? சித்தன்ன வாசல் குகை ஓவியங்களிலோ.. எந்த கோயில் சிற்பங்களிலோ உழைக்கும் கூட்டம் செல்லத் தொப்பையுடன் இருப்பதை பார்த்திருப்போமா? சர்க்கரை வியாதி குறித்த சங்கதிகள் இலக்கியத்தில் ஏராளம் இருந்ததுண்டா?.பின் எப்போது வந்தது இந்த தொப்பை?

’ஸில்க்கி பாலிஷ்’ போட்ட வெளுத்த அரிசியைனை அளவறியாமல் தின்று, டி-20 மேட்ச் போன்ற பரபரப்பு வாழ்க்கையில் கனவில் மட்டுமே கடும் உடற்பயிற்சி செய்யும் கனவான்கள் மெல்ல வளர்க்கும் தொப்பைக்குக், கடைசியில் கண்டறிந்த முட்டாள் காரணம் அரிசி! பிரச்னை நம் வாழ்வியலிலும், பரபரப்பிலும் உள்ளதே ஒழிய அரிசியில் ஒளிந்திருக்கவில்லை என்பதை அவர்கள் இன்னும் அறியவில்லை.

ஆனால் இன்றைய நிலைமையோ.. அரிசியா? அய்யயோ..சுகர் வரும்.. தொப்பை வரும்… குண்டாயிடுவோம்.. என்ற பீதி! இதில் எந்த அளவு உண்மை? அரிசி ஆபத்தானதா? அவசியமில்லாததா?

கிட்டத்தட்ட 4 லட்சம் அரிசி வகைகள் உலகில் இருந்தன. சில மட்டும் இன்னும் இருக்கின்றன. கருப்பு, சிவப்பு, பழுப்பு, பச்சை என பல வண்ணங்களீலும் குட்டை மத்தியம் நெட்டை என வடிவிலும் இருக்கும் அரிசியில் இன்றைய அறிவியல் கலோரிக் கணக்கு என்ன தெரியுமா? 70% கார்போஹைட்ரேட் 6-7% புரதம் 1-2% நார் சத்து 12-13% நீர் மற்றும் சில நுண்ணிய அளவிலான கல்சியம், மக்னீசியம் முதலான கனிமங்கள். கிட்ட்த்தட்ட கோதுமை, சோளம் முதலான பிற தானியங்களிலும் இந்த அளவில் தான் சத்து விஷயங்கள். புரத அளவில் கொஞ்சம் தூக்கலாகவும் கார்போஹைட்ரேட் அளவில் லேசான மந்தமும் கோதுமைக்கும் சோளத்திற்கும் உண்டு. இந்த ஒரு விஷயத்தை வைத்து வடனாட்டு கோதுமைக்கும் வெளி நாட்டுச் சோளத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் போக்கு வளர்ந்து வருவது வேதனை.

இங்கு ஒரு விஷயம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தட்டைப்போட்டு அரிசியை குவித்து யாரும் சாப்பிடப் போவதில்லை. அரிசியுடன் பருப்போ, குழம்போ, காயோ, கீரையோ சேர்த்துத் தான் சுவைக்கிறோம். அப்போது அரிசியுடன் சேர்ந்து பருப்பின் புரதமும், காய்கறிகளின் கனிமமும், குழம்பின் சீரணத்தை சீராக்கி, இன்னும் அதன் சத்துக்கள் அனைத்தையும் சிறப்பாக குடலுறிஞ்சிகளால் கொண்டு செல்லும் தன்மையும் கிடைப்பது தான் அரிசி கூட்டணியின் அற்புத சிறப்பு அம்சம்.. ஒருவேளை நீங்கள் கார்ன் ஃப்ளேக்ஸில் காரக் குழம்பும் புடலங்காய் பொரியலும் போட்டு சாப்பிட்டாலோ, சப்பாத்திக்கு சாம்பார் ஊற்றி பருப்பு உசிலி சேர்த்து சாப்பிட்டால் அரிசிப் பயனை கொஞ்சம் அடையலாம்.

அரிசி நம் மரபணுக்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பரிச்சயமான ஓர் உன்னத உணவு. புதிய உணவுகள் எது வந்தாலும் உடலைப் பொறுத்த மட்டில் எல்லை தாண்டிய ஊடுருவலாக மட்டுமே நம் உடல் கண்காணிக்கும். பெரிய வில்லன் இல்லை என்று தெரிந்த உடன் மட்டுமே அதற்கு இடமளிக்கும். அப்படித்தான் நாம் புது புது உணவுகளை எப்போதாய்ச் சாப்பிட்டாலும் பெரிதாய் எதுவும் துன்பப்படுவதில்லை. அதே சமயத்தில் நமக்கு அன்றாடம் பரிச்சயமான உணவுகளில் இருந்து முற்றிலும் விலகிப் போகும் போது உடம்பு சற்று கலவரப்படும். அரிசி விஷயத்தில் அப்படித்தான் நிகழ்ந்து வருகிறது. பரம்பரை அரிசி ரகங்கள் தொலைந்து போய், கூடுதல் மகசூல் என்ற கொள்கையுடனும், நீடித்த சேமிப்பிற்கென்றும் சொல்லி இந்த பாலிஷ் ரகங்கள் வந்ததில் தான் பிரச்னை துவங்கியது. பூ வச்சி, பொட்டு வச்சி, ஸில்க்கி பாலிஷ் போட்டு அழகுபடுத்த அரிசி என்ன சினிமாவில் நடிக்கவா வந்தது? அப்படித்தான் வணிகர்கள் அரிசி வணிகத்தை வசப்படுத்த, அதனை பட்டை தீட்டி வெண்ணிற முத்தாக்க முயன்றதில், அதன் சத்துக்களில் பல வீணாகி, வெறும் சர்க்கரைச்சத்தை மட்டும் அதிகம் தரும் உணவாக மாறியது அரிசியின் தற்கால அவலம்.

இன்னும் தொலைந்து போகாமல் பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆங்காங்கே இருந்து தான் வருகிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கும் மாப்பிள்ளைச் சம்பா எனும் சிகப்பரிசி தெற்கத்தி மாவட்டங்களில் பிரபலம். பிரசவத்திற்குப்பின் பால் சுரப்பிற்கு அதிகம் பயன்படும் நீலச்சம்பா, குழியடிச்சான் அரிசி ரகங்கள் இன்னும் இங்கு உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள மணப்பாறை ஊரின் முறுக்கும் அதன் மொறு மொறு ருசிக்கும் அந்த ஊரின் கல்லிமடையான் ரகம் தான் காரணம்.

கைக்குழந்தை பாலில் இருந்து திட உணவிற்கு மாறும் தருவாயில் உடைத்த அரிசிக் குருணை, பாசிப்பருப்பு சேர்த்த குழைந்த கஞ்சி இவற்றுடன் தேங்காய் எண்ணெய் இட்டுக் கொடுப்பது குழந்தை உடல் எடை சீராகஏறப் பெரிதும் உதவும். அதுவும் குறைபிரசவத்தில் ஏழாம் மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் இந்த கஞ்சி மிகச் சிறப்பக உதவிடும். குழந்தைக்கு கொடுக்கும் போது பச்சரிசியாகவும் இளையோருக்கு புழுங்கலரிசியாகவும் முதியோருக்கு அவலாகவும் கொடுப்பது அரிசியின் சீரணத்தை தேவைக்கேற்றபடி நெறிப்படுத்தும்.

பொதுவாக புழுங்கல் அரிசி தான் அன்றாட உணவாக எல்லோருக்கும் சிறந்தது. அரிசியின் வெளிப்புறத்தில் உள்ள சத்துக்களை, கனிமங்களை, அதன் தவிட்டில் உள்ள விட்டமின்களை, உமியில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் தன்மையுள்ள எண்ணெயை எல்லவற்றையும் அரிசிக்குள் திணித்து பூட்டிவைத்த அற்புத வித்தை புழுங்கல் செய்யும் முறை. எப்படி இந்த Food Processing technology வித்தையை நம் முன்னோர் செய்திருந்தனர் என்று இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும்.

சிகப்பரிசியின் ’லைகோபின்’- எனும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சத்து அன்றாடம் உடலில் சேர்ந்தால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. சிகப்பரிசியை அவலாகவோ அல்லது புட்டு செய்தோ குழந்தைகளுக்கும் முதியவருக்கும் அவ்வப்போது கொடுப்பது அவர்கள் நோய் எதிர்ப்பாற்றல் கூட மிக மிக நல்லது.

ஞவரை என்று ஒரு அரிசி ரகம் கேரள அரிசி வகையில் உண்டு. ஆயுர்வேதத்தில் மிக மிக சிறப்பாகப் பேசப்படும் இந்த அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட மூட்டுவலி வாத நோய்களுக்கு மிக நல்லது. கொஞ்சம் ரொம்பவே விலை அதிகமாக விற்கப்படும் இந்த அரிசி கூடுதல் பலனிருப்பதால் விருந்துக் இந்த ஞவரை அரிசிக்கஞ்சியை விசேஷமான நாட்களில் பயன்படுத்தலாம்.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகளில் அரிசி மீதான பழி அதிகம். சோற்றைத் தின்று தின்று இந்த வியாதி வந்திடுச்சு-ன்னு சொல்வது பிரபலமாகி வருகிறது. தவறு அரிசியில் கிடையாது, அதன் அளவிலும், அதற்கேற்ற உடலுழைப்பும் இல்லாதது தான். நல்ல உடல் பயிற்சி, நடைப்பயிற்சி அவற்றுடன் கீரை காய்கறி அதிகம் சேர்த்து அளவான புழுங்கல் அரிசி சாதம் சர்க்கரையை தடாலடியாக உயர்த்திடாது, முழுகட்டு கட்டி சாதம் சாப்பிட்டுவிட்டு மதியம் 2 மணி நேரம் உறங்குவதும், எப்போதும் டென்ஷனில் அதிகம் நொறுவலுடன் கூடவே வயிறுபுடைக்க சாப்பிடுபவர்களுக்கும், ”நடையா? அதுக்கெல்லாம் நேரமே இல்லை”, எனும் சோம்பேறிகளுக்கும்தான் அரிசி ஆபத்து. அப்படிப்பட்டவருக்கு, அரிசி என்ன பாற்கடல் அமிர்தம் தந்தாலும் வியாதி நிச்சயமே!

புழுங்கல் கைகுத்தல் அரிசி low glycemic தன்மை கொண்டது. Oryzinal எனும் ஆன்ட்டி-ஆக்ஸிடண்ட் பொருளை தன்னுள் கொண்டது. Vitamin B சத்து நிறைந்தது. லோ கிளைஸிமிக் தன்மை புழுங்கல் அரிசியில் கிடைப்பதால், அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். பல நீரிழிவு நோயாளிகள் இன்று அரிசியைத் தவிர்த்து கோதுமை சப்பாத்திக்கு குடியேருகின்றனர்.

கோதுமைக்கும் அரிசிக்கும் கலோரி கணக்கில் பெரிய வேறுபாடு இல்லை. சொல்லப் போனால் அரிசி குளிர்ச்சி. தமிழனுக்கு ஏற்றது. தமிழ் மண்ணில் வாழும் நபருக்கும் ஏற்றது. புரதப் பயன்பாட்டு (PER- Protein Efficiency Ratio) அளவில், கோதுமையைக் காட்டிலும் சிறந்ததென உணவியல் அறிஞர்களே கூறுவர். பிரச்சனை அளவு தானே ஒழிய அரிசியில்லை. அளவைக் குறைத்து புழுங்கல் அரிசி சாப்பிட்டலே நீரிழிவை கட்டுப்பாடாக வைத்திருக்க இயலும். இன்னும் சொல்லப்போனால், அரிசியை நாம் அப்படியே சாப்பிடப் போவதில்லை. ஊற்றும் குழம்பு, கீரையின் மூலம் அதன் சர்க்கரை சீரணிக்கும் வேகத்தையும் பெருவாரியாகக் குறைக்க முடியும் என பல ஆய்வுகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

மாறாக அதிகம் கோதுமை உணவை மட்டுமே உடம்பைக் குறைக்கிறேன், சர்க்கரையைக் குறைக்கிறேன் என சாப்பிடும் நம்ம ஊர்க்காரருக்கு மூலம், மலச்சிக்கல் தோல் நோய் வரும் வாயுப்பு அதிகம். அதற்காக கோதுமை கெடுதி இல்லை. அது வட நாட்டவரின் (குளிர் அதிகமுள்ள) பிரதான உணவு. நம்மைப் பொறுத்த மட்டில் அரிசியைக் குறைத்து ராகி, கம்பு, தினை என சிறு தானியங்களின் பயன்பாட்டை கூட்டுவது நல்லது.

இனி நீங்கள் ஆரோக்கியம் கருதி அரிசி வாங்கச் சென்றால், இரசாயன உரமிடாமல் வளர்த்த ஆர்கானிக் பட்டை தீட்டாத பிரவுன் அரிசி, புழுங்கல் அரிசி, கைக்குத்தல் அரிசி, சிகப்பரிச் சம்பா, இன்னமும் கொஞ்சம் தேடிப்பிடித்து பாரம்பரிய அரிசி ரகங்களான மாப்பிள்ளைச் சம்பா முதலான அரிசி ரகங்கள் என வாங்கிச் சமையுங்கள். அரிசி உங்கள் வீட்டு அமிர்தமாகும்!

நாம் சாப்பிடும் உணவின் மீதுதான் அத்தனை உண்மையும் நாம் அறிந்திருப்பது நம் கடமை. மெக்ஸிகோ சோளத்தில் தயாரான corn flakes, எங்கோ எதுவோ எப்போதோ பீச்சிய பால்(?), சண்டிகர் கோதுமையின் சப்பாத்தி, ஐரோப்பா ஆப்பிளில் சாலட், வளர்ந்துவிட்ட நாடுகள் கழித்து ஒதுக்கிய junk foods –இல் மாலைச் சிற்றுண்டி என நம் வீட்டு அடுப்பங்கரையும் மெல்ல gloabalise ஆகி வருகிறது. வணிக உத்திகளில் வசப்பட்டு, பரபரப்பு வாழ்வில் பிடிபட்டு, உணவின் மீதான அக்கறையைத் தொலைப்பது ஆபத்தானது.. ”எதை தின்றால் பித்தம் தெளியும்” என்ற நிலை வராதிருக்க, “எதை தின்கிறோம்?” என்ற அக்கறை அவசியம் தானே!

நன்றி Dr.G.சிவராமன்
சென்னை, தமிழ் நாடு

 

அரிசிக் கஞ்சிகள்அரிசிக் கஞ்சிகள்

கொதிகஞ்சி
உலையில் அன்னம் முக்கால் பாகம் வெந்ததும், கஞ்சியுடன் ஒரு கரண்டி எடுத்து, ஆறியதும், அதில் வெண்ணை, நெய் கலந்து சாப்பிட, குடல் வரட்சை, நீர் சுருக்கு, சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் வலி நீங்கும்.

வடிகஞ்சி
சாதத்தை வடித்தெடுத்த கஞ்சி ஆறியதும் இதனுடன் மோர் சேர்த்து குடிக்கலாம். உடலின் மேல் தேய்த்துக் குளிக்க தோல் வரட்சி நீங்கும். தோல் மென்மையுறும். ஆனால் ப்ரஷர் குக்கரை அதிகமாக சமைக்க உபயோகிப்பதால் வடிக்கஞ்சி கிடைப்பது கடினம்.

புழுங்கலரிசி கஞ்சி
தமிழகத்தில் நோயாளிகளுக்கு கொடுப்பது புழுங்கலரிசி கஞ்சிதான். நோய் வாய்படும் போது தான் இதை குடிக்க வேண்டும். என்றில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே புழுங்கலரிசி கஞ்சியை சாப்பிடலாம்.

புழுங்கலரிசியை ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உடைக்காமல், பெரிய துணுக்குகளாக உடைத்துக் கொள்ளவும். இளந்தீயிலிட்டு பொறுமையாக, புழுங்கலரிசி ரவையை தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும். இந்த கஞ்சியில் பால், சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இல்லை, மோர், உப்பு சேர்த்து பருகலாம்.

நோயாளிகளுக்கு மற்றும் சுரம் உள்ளவர்களுக்கு, புழுங்கலரிசி கஞ்சி கொடுப்பது, அநேகமாக எல்லா வீடுகளிலும் சகஜம்.
புழுங்கலரிசியுடன் கோதுமை, பச்சைப்பயிறு சேர்த்து வறுத்து, குருணையாக்கி 60 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கால் லிட்டராக குறையும் வரை காய்ச்சி கஞ்சியாக்கவும். புஷ்டியை தரும் கஞ்சி இது. தவிர சளியால் அவதிப்படுபவர்களுக்கு திப்பிலி, வயிற்றுக் கொதிப்பிருப்பவர்க்கு. சீரகம், மல்லிவிதையும், மலச்சிக்கலுக்கு திரா¬க்ஷ, ரோஜா மொட்டும் சேர்த்து புழுங்கலரிசி கஞ்சியை தயாரித்துக் கொள்ளலாம்.

பேதி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாறு, மாதுளம் பிஞ்சு, வில்வப்பிஞ்சையும் சேர்த்து கஞ்சி தயாரித்து கொடுக்கலாம்.

புனர்பாகம் – இரு முறை வடித்த கஞ்சி
ஏற்கனவே சமைத்து வைத்த அன்னத்தை கஞ்சியை மறுபடியும் நீர் சேர்த்து வடிக்க வேண்டும். இதன் வடிநீரை எடுத்து ஒரு தேக்கரண்டி பழச்சாறு சேர்த்து கொடுக்க வேண்டும். இதை புனர்பாகம் புன: மறுபடியும், பாகம் – சமைத்தல் என்பார்கள். எளிதில் ஜூரணாகும். சுரம், தட்டம்மை, நீர்ச்சுருக்கு, கடுமையான அக்னி மந்த நிலை இவற்றுக்கு ஏற்றது. குடிப்பதற்கு சுவையான, உடலுக்கு ஊட்டம் தரும்.

அரிசிமா
அரிசியை பொடித்து செய்யப்படும் மாவு பல வித பலகாரங்கள் பட்சணங்கள் செய்ய உதவும். அரிசி மாவு, உளுந்து சேர்த்து செய்யப்படுபவை, தோசை, இட்லி, ஆகும். தோசை பித்தத்தையும், வாய்வையும் போக்கும். இட்லியும் திரிதோஷங்களை பெருக்காது. ஆவியில் வேக வைக்கப்படும் இட்லி மற்றும் இடியாப்பங்களை எளிதில் ஜூரணமாகும் எனப்பட்டாலும், இவை பத்திய உணவு ஆகாது. அரிசிமாவால் பணியாரங்கள், நல்ல ஜீரண சக்தி உடையவர்களுக்கே ஏற்றவை.

சில ஆயுர்வேத மருத்துவர்கள், வயிற்றில் வாய்வு இருந்தாலும், தோலில் சொறி, சிரங்கு இருந்தாலும் இட்லி, தோசை, இதர அரிசிமாவு தயாரிப்புகள் ஏற்றவையல்ல என்கின்றனர்கள். அரிசி மாவால் செய்யப்படும் பிட்டு உடலுக்கு வன்மை தரும். பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

முறுக்கு, கொழுக்கட்டை, தேன்குழல் போன்றவை வாய்வை அதிகரிக்கும், பசியை மந்தப்படுத்தும் என்கிறது சித்த வைத்தியம்.

சத்துமா
அரிசியை வறுத்து இடித்த மாவு இது. கோதுமை, பார்லி, கடலை இவைகளாலும் சத்துமா செய்வது உண்டு. இந்த மாவை நீருடன் சேர்த்து பிசைத்து சாப்பிட பசியடங்கும். மோருடன் சேர்த்து உண்டால் வயிற்று வாய்வு நீங்கும். சத்துமா எளிதில் சீரணமாகும். களைப்பு நீங்கும்.

அரிசி மாக்களி
அரிசியை நீரில் ஊறவைத்து எடுத்து, இடித்து மாவாக்க வேண்டும். இதை தீப்புண்கள், கொப்புளங்கள் மேல் தூவ, புண்கள் ஆறும் வேர்க்குரு, கரப்பானால் ஏற்படும் சினப்பு, அரிப்பு இவற்றின் மேலும் அரிசி மாவை தூவலாம். நீர்க்கசிவும் அரிப்பும் அடங்கும்.

தேவையான மாவை வாயகன்ற சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி, சிறிது தண்ணீர் விட்டு களியாக கிண்டிக் கொள்ளவும். இதை வெள்ளைத் துணியில் 1 அங்குல கனத்திற்கு தடவி, கொஞ்சம் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்ணையை அதன்மேல் பூசி, கட்டிகள், சீழ்க்கட்டிகள் இவற்றில் மேல் வைத்து கட்டவும். கட்டிகள் பழுத்து உடைந்து போகும். வலிமிகுந்த கட்டிகளுக்கு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கொள்ளலாம்.

கிண்டும் போது கால் பங்கு கடுகுத் தூள் சேர்த்து, இறக்கி, வேப்பெண்ணைய் சேர்த்து மார்பிலும், முதுகிலும் 1-2 மணி நேரம் கட்டி வைத்தால் கரையாத மார்புச் சளியும் கரையும்.

அவல்
நெல்லை சிறிது நனைத்து உலர்த்தி, சிறிது வறுத்து, லேசாக இடித்தால், தட்டையாகி அரிசி வேறு, உமி வேறாக பிரியும். தட்டையான அரிசிக்கு அவல் என்று பெயர். அவலை ஊறவைத்து வெல்லத்துடன் சாப்பிடலாம். குழைய வேகவைத்த அவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

அவலுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ண உடல் பலம் பெறும். அரிசி அன்னத்தை விட அவலால் வலிவு அதிகம் உண்டாகும்.

அவல் ஊறவைத்த நீரை மட்டும் பருகினால், வயிற்றில் வாய்வு உண்டாகி, வலி கூட ஏற்படலாம்.

நெற்பொரி
நெல்லை பொரித்து, உமியை நீக்கி எடுத்தால் நெற்பொரி கிடைக்கும். இதை கஞ்சியாக தயாரித்து. வயிற்று நோய், சுரம், நீர்ச்சுருக்கு உள்ள நோயாளிகளுக்கு கொடுக்கலாம். சூடான பால் அல்லது தயிர், பழச்சாறு இவற்றில் ஊறவைத்து சாப்பிடலாம். நாவரட்சி, வாந்தி, வயிற்றுப்புண், விக்கல் மயக்கம், பேதி இவற்றுக்கும் நெற்பொரி கஞ்சி பயன்படும்.

இதில் பாகு சேர்த்து உருண்டையாக பிடித்து சாப்பிடுவது குமட்டல், வாந்தி இவற்றுக்கு நல்லது. பண்டிகை காலங்களில் பொரி உருண்டை செய்வது நம் நாட்டு வழக்கம்.

பழைய சாதம் – நீராகாரம்
முதல் நாள் இரவில் சமைத்த அன்னத்தில் நீருற்றி வைத்திருந்து மறுநாள் காலை அந்த நீருடன் சேர்த்து அன்னத்தை உண்ணுவது உடல் உழைப்புக்கு தேவையான வலிமையை கொடுக்கவும். ஆண்மை பெருகும். இந்த அன்னம் மிகப் புளிப்பாக இருக்கக்கூடாது. சிறிதளவே புளித்திருக்க வேண்டும். அதிகம் புளிக்காத பழையதுடன், மோரும், தயிரும், வெங்காயம் அல்லது மாவடு, ஊறுகாய் இவற்றுடன் சேர்த்து உண்ணுவது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். இதன் சுவையை மறக்க முடியாது. அதுவும் கோடைக்காலங்களில் உடலை குளிர்வித்து, தெம்பூட்டும் தேவாமிர்தம் இந்த பழைய அமுது.

அரிசியை சமைக்கும் போது
அரிசியை நன்றாக வெந்திருக்கும்படி சமைக்க வேண்டும். அரிசி சரியாக வேகாவிடில் அது சரியாக செரிக்காது. வயிற்றுக் கோளாறுகளை உண்டாக்கும். அதே சமயம் மிகவும் குழைந்து போய், அதிகமாக வேகவிடப்பட்டு குழைந்து போன சாதமும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. புது அரிசியில் சமைத்தால் சாதம் குழைந்து விடும். குழைந்த சாதத்தால் இருமல், வயிற்று உப்புசம் அதிகமாகும்.

அரிசியை சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி எண்ணை நெய் அல்லது எலுமிச்சம் சாறை விட்டால், சாதம் பொல பொல வென்று மல்லிகைப்பூ போல் அமையும்.

வேகாத அரிசி, அதிகம் வெந்த அரிசி இவற்றால் வரும் வயிற்று கோளாறுக்கு சுக்கு தட்டிப் போட்ட வெந்நீரை குடிக்கலாம்.

ஆயுர்வேதம், அரிசி சாதத்தை உண்ணும் போது நெய் சேர்த்து உண்டால், கண் குளிர்ச்சி, சரியான ஜீரணம் ஏற்படும் என்கிறது.

நல்லெண்ணை சேர்த்து உண்டால் வயிற்றின் வரட்சி அகலும். நல்ல பசியெடுக்கும்.

பாலும் அன்னமும்

பாலமுது எனும், பாலும் அன்னமும் சேர்ந்த உணவு மற்றும் பாயசம், பித்தத்தை குறைக்கும். நீர் வேட்கை விலகும். ஆனால் அதிகமாக உண்டால், உடல் பருமன் கூடும். மற்றபடி இதை குழந்தை முதல் பெரியவர் வரை உண்ணலாம்.

பொங்கல் வகைகள் இதர சோறுகள்
அரிசியினால் செய்யப்படும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் போன்ற உணவு வகைகள் பிரசித்தி பெற்றவை. சர்க்கரை பொங்களை மிதமாக உட்கொள்ள வாந்தி நிற்கும்.

மிளகு சேர்த்த வெண் பொங்கல், வயிற்றுப் பொருமல், வாய்வு, மார்புக்கபம், பசியின்மை இவற்றை போக்கும்.

புளிச்சோறால் வாந்தி, சுவையின்மை போகும்.

எள்ளுப்பொடி அன்னம் வாய்வை நீக்கி வலிமை தரும்.

மாமிசம் சேர்த்து சமைத்த உணவு தாதுபுஷ்டி தரும். பசியை மந்தப்படுத்தும்.

அரிசியின் இதர உபயோகங்கள்
அரிசியிலிருந்து ஒரு வகை ஓயின் எடுக்கப்படுகிறது. அரிசி மது ஜப்பானில் பிரசித்தம்.

அரிசியை தீட்டி புடைத்தெடுக்கும் தவிட்டில் பி 1 வைட்டமின் அதிகம் உள்ளது. கால் நடை தீவனமாக பயன்படுகிறது.

100 கிராம் அரிசியில் உள்ள சத்துக்கள்:  காபோஹைடிரேட்-79கி, கொழுப்பு-0.6கி, புரதம்-7கிராம், விட்டமின் B6-15கி, ஈரம்-13கி.

-நன்றி உணவு நலம் மாத இதழ்

 

Benefits of RiceBenefits of Rice

Rice is the staple food in southern Asia and South East India, China Vietnam and Tailand, Taiwan, Jaban Where rice forms the major source of calories, the nutritive value of the diet depends on the processing undertaken before it is marketed. Depending on the mode of processing, different parts of the rice grain may be removed.

Rice is easily digested. When properly chewed, digestion begins with ptyalin in the mouth and is completed by the pancreatic and intestinal juices. Smaller feeds, of a couple of tablespoons of rice with milk or milk products, are easily digested even during an acute illness.

Almost all the rice is completely absorbed from the intestine, as the polished grain is not covered with cellulose. The low phosphorus content of rice allows better absorption of the minerals calcium and iron, which partly compensates for the low content of these elements in rice. Iron absorption is considerably increased on a rice-based diet when 40 g (or even less) of fish is also eaten.

Great Energy Source: As rice is rich in carbohydrates, it acts as fuel for the body and aids in normal functioning of the brain.

Cholesterol Free: Eating rice is extremely beneficial for health, just for the fact that it does not contain harmful fats, cholesterol or-sodium. It forms an integral part of balanced diet.

Rich in Vitamins: Rice is an excellent source of vitamins and minerals like niacin, vitamin D, calcium, fiber, iron, thiamine and riboflavin.

Resistant Starch: Rice abounds in resistant starch, which reaches the bowel in undigested form. It aids the growth of useful bacteria for normal bowel movements.

High Blood Pressure: As rice is low in sodium, it is considered best food for those suffering from high blood pressure and hypertension.

Cancer Prevention: Whole grain rice like brown rice is rich in insoluble fiber that can possibly protect against many types of cancers. Many scientists believe that such insoluble fibers are vital for protecting the body against cancerous cells.

Dysentery: The husk part of rice is considered as an effective medicine to treat dysentery. A three month old rice plant’s husks is said to contain diuretic properties. Chinese people believe that rice considerably increases appetite, cures stomach ailments and indigestion problems.

Skin Care: Medical experts say that powdered rice can be applied to cure some forms of skin ailments. In Indian subcontinent, rice water is duly prescribed by ayurvedic practitioners as an effective ointment to cool off inflamed skin surfaces.

Alzheimer’s Disease: Brown rice is said to contain high levels of neurotransmitter nutrients that can prevent Alzheimer’s disease to a considerable extent.

Heart Disease: Rice bran oil is said to have antioxidant properties that promotes cardiovascular strength by reducing cholesterol levels in the body.

-siddhavaithiyan.blogspot.com