ஆரோக்கியம் தரும் மூலிகை குடிநீர்

மூலிகை குடிநீர்ஆவாரம்பூ குடிநீர்
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்
“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”  என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்
சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும். சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

இது உடற் சூட்டைத் தணிக்கும். பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, இரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்
மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்
நெல்லி மரப்பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க்காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் குடிநீர்
ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால் சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர் போன்றவை அடங்கும்.

மூலிகை தண்ணீர்வீட்டிலேயே மூலிகை குடிநீர் 

வீட்டிலேயே சுவைமிகுந்த மூலிகை குடிநீரை தயாரித்து அருந்த முடியும். இதற்கு பெரிதாக செலவும் இல்லை. இந்த மூலிகை குடிநீரை தயாரிக்க நீங்கள் உருவாக்கும் அமைப்பை பார்த்து உங்களை தேடி வரும் விருந்தினர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லாம் அதிசயித்துப் போவது உறுதி.

மூலிகை குடிநீரை தயாரிக்க உங்களுக்கு தேவைப்படுவது சாதாரண அழகு செடிவளர்க்கும் மண் தொட்டிகள் அல்லது தண்ணீர் நிரப்ப பயன்படும் மண்பானைகள் தான். உங்களுக்கு நாளொன்றுக்கு எவ்வளவு மூலிகை குடிநீர் தேவைப்படும் என்பதை பொறுத்து, அதற்கேற்ப தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தொட்டியை வாங்கி வந்த பிறகு இந்த தொட்டிகளின் கீழ்பகுதி முழுக்க கூழாங்கற்களை போடுங்கள். இதற்கடுத்து இந்த கூழாங்கற்களின் மேல் பெருமணலை நிரப்புங்கள். இந்த இரண்டு அடுக்குகளை அடுத்து இதன் மீது மிகச்சிறிய கண்ணுள்ள நைலான் வலையை (வடிகட்டியில் இருக்கும் வலை) விரித்து விடுங்கள். இப்படி நைலான் வலையை விரிக்கும் போது இந்த அடுக்குக்கு மேல் நாம் நிரப்பப்போகும் பொருட்களில் இருந்து வெளியேறும் தூசு, தும்புகள் வடிகட்டப்பட்டு விடும்.

இதற்கடுத்து இந்த நைலான் வலைக்கு மேல் மண், மணல், மக்கிய எரு ஆகியவை கொண்ட எருவை போட்டு மூலிகை செடிகளை நடவு செய்யுங்கள். அதாவது வீட்டில் இஞ்சியை பயன்படுத்துவோம். அளவுக்கு அதிகமாக இஞ்சியை வாங்கி வந்து வீட்டில் வைத்திருக்கும் போது, மீதமுள்ள இஞ்சியை சில அம்மணிகள் மணலில் போட்டு ஈரமாக இருக்கும்படி வைத்திருப்பார்கள். சில நேரங்களில் இந்த இஞ்சி தளிர்விட தொடங்கி விடும். இதுதான் மூலிகை செடி தொட்டி எனலாம். இதேபோல் மஞ்சள், வசம்பு, தூதுவளை, செம்பருத்தி போன்ற செடிகளை நடவு செய்யலாம். இந்த செடிகளை நட்டவுடன், நடவு செய்யப்பட்ட தொட்டிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும்படி செய்ய வேண்டும். அதற்கு இந்த தொட்டிகளில் உள்ள செடிகளுக்கு ஊற்றப்படும் தண்ணீர் எஞ்சி வெளியேறும் போது அது ஒரே இடத்தில் சேகரிக்கும்படி ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதாவது, இந்த தொட்டிகள் அனைத்தும் சீமெந்தால் ஆன ஒரு பாத்தியில் வரிசையாக இருக்கும்படி அமைத்துக் கொண்டால் இந்த தொட்டியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஒரு இடத்தில் சேரும்படி வழிந்தோடும்.

இந்த அமைப்பை உருவாக்கிக் கொண்டபின் முதல் மூன்று நாட்களுக்கு இந்த தொட்டிகளில் இருந்த வெளியேறும் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். காரணம், இதில் ஏராளமான மாசுக்கள் கலந்திருக்கும். பிறகு இதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தலாம். இந்த மூலிகை தொட்டியிலிருந்து கிடைக்கும் தண்ணீரை குளிக்கும் தண்ணீருடன் கலந்து குளிநீராக பயன்படுத்தலாம். இதில் ஒரு விசேடம் என்னவென்றால், உங்களுக்கு எந்த மூலிகை பிடிக்கிறதோ, அந்த மூலிகை செடியை வாங்கி வந்து ஒரு தொட்டியில் நட்டு இந்த அமைப்பில் இணைத்து விடலாம்.

உதாரணமாக கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முடக்கத்தான் என்று சொல்லப்படும் மூலிகை தாரளமாக வீதிகளின் ஓரத்தில் கூட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ந்து கிடக்கிறது. இந்த மூலிகை செடியை வேருடன் எடுத்து வந்து தொட்டியில் நட்டு அந்த தொட்டி வழியாக வெளியேறும் மூலிகை தண்ணீரை நன்றாக கால் மூட்டுகளில் படும்படி குளிக்கலாம். இதனால் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இது போல் பிரண்டை, இஞ்சி போன்ற செடிகளைப் பயன்படுத்தினால் பித்தம் நீங்கும். குழந்தைகளை நல்ல மூலிகை தண்ணீரில் குளிப்பாட்ட விரும்புபவர்கள் துளசி போன்ற செடிகளை தொட்டிகளில் வளர்த்து அதன் வழியாக வெளியேறும் நீரை குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். தும்பை, நொச்சி செடிகளை சளியால் அவதிப்படுபவர்கள் மூலிகை குடிநீராக, குளியல் நீராக பயன்படுத்தினால் வெகுவிரைவில் சுகமான நிவாரணம் கிடைக்க காணலாம். வீட்டை சுற்றி தோட்டம் போட அதிக அளவு இடம் இருப்பவர்கள் அதிக அளவு மூலிகை செடிகளை வளர்த்து பயன்படுத்தலாம்.

இந்த தொட்டிகளில் இருந்து வெளியேறும் நீரை குளுக்கோஸ் டியூப் போன்ற குழாய் மூலம் அனைத்து தொட்டிகளையும் இணைத்து இதன் வழியாக நீரை பிடித்தும் பயன்படுத்தலாம். இந்த நீரிலும் நுண்கிருமிகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் நிலக்கரி துண்டு ஒன்றை நீர் சேகரிக்கப்படும் கடைசிப் பாத்திரத்தில் போட்டு வையுங்கள். இந்த நிலக்கரி நீரிலுள்ள நுண்கிருமிகளை எல்லாம் கொன்று விடும். பிறகென்ன…காடு மலைகளில் கிடைக்கும் அதே மூலிகை தண்ணீர் உங்கள் வீட்டிலும் அன்றாடம் கிடைக்கும்.

-மணற்கால் அய்யம்பேட்டை
-தமிழ் உழவன்