பழந்தமிழ் இசை – தமிழிசைப்பண்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம்  
பழந்தமிழ் இசை -நான்காம் பாகம்

தமிழிசைப்பண்கள்

“பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழ் அவையும்
உண்ணின்றதோர் சுவையும் உறுதாளத்து ஒலி பலவும்
மண்ணும் புனல் உயிரும் வருகாற்றும் சுடர் மூன்றும்
விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிம்மிழலையே”
(முதலாம் திருமுறையின் பதினொராம் பதிகத்தின் நான்காவது தேவாரம்- திருஞானசம்பந்தர் – பண் : நட்டபாடை)

தொடர் – 51தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றான திருவீழிமிழலைப் பதிகத்தில் பண் பற்றியும், பண்ணிசை பற்றியும், பண்மூலம் எழும் பல்வேறு ஓசைகள் பற்றியும், அப்பண்ணின் மூலம் எழும் சுவை பற்றியும், அவைகளின் ஊடே அமையும் தாள ஒலி பற்றியும் குறிப்பிடுகிறார்.

இசையைப் பண் என்ற பெயரால் குறிப்பிடுவர். பண் என்ற சொல்லும் காரணப்பெயர்ச் சொல்லாகும். பண்ணுதல் என்ற தொழிலடியாகத் தோன்றிய பெயர்ச் சொல்லாகும்.

பெருந்தானம் எட்டு (தானம் = இடம்)
பெருந்தானங்களைப் பேச்சுறுப்புகள் என்பர். இதனைப் பேச்சுத்தானங்கள் என்றும் கூறுவர். தொல்காப்பியர் பிறப்பியலில் இவ்வுறுப்புகள் எட்டு என்பர். இவற்றை காற்றறை, செயற்கருவி என மேலும் இரண்டு வகையாகப் பிரிப்பர்.

காற்றறை என்பது காற்றுத்தங்கி வெளிப்படும் உறுப்பாகும். தலை, மிடறு, நெஞ்சு என்பனவாகும். நெஞ்சு என்பது நுரையீரலையும், மிடறு என்பது கண்டத்தையும், தலை என்பது கண்டத்தின் மேல்பகுதியையும் குறிக்கும்.

செயற்கருவி ஐந்தாகும். பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என்ற ஐந்து உறுப்புகளுமாகும். காற்றறையில் தங்கிய காற்றினால் இச்செயற்கருவிகள் தொழிற்படுதல் காரணமாக வெவ்வேறு வகையான ஒலிகள் பிறக்கும் என்பதனைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இசை நூலார் இதனைப் பெருந்தானங்கள் எட்டு எனக் கொள்வர்.

வினைகள் எட்டு
பெருந்தானத்தால் தோற்றி வைக்கப்படும் ஒலி, இசைஒலிகள் ஆவதற்கு எட்டு விதமான வினைகள் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. இவற்றைக் கிரியைகள் என்பர். இவை எடுத்தல், படுத்தல், நலிதல் முதலிய எட்டு ஆகும்.

எழுப்பிய குரலை உயர்த்தி ஒலித்தல் எடுத்தலாகும். எழுப்பிய குரலைத் தாழ்த்தி ஒலித்தல் படுத்தலாகும். எழுப்பிய குரலைப் படிப்படியாகக் தாழ்ந்து ஒலித்தல் நலிதலாகும்.

இவ்வாறு பெருந்தானம் எட்டாலும், எட்டுவகைக் கிரியைகளாலும் பண்ணிப் படுத்தமையால் “பண்” எனப்பெயர் பெறுகின்றது.

பண் வகை
பண்ணாவது இனிமையைத் தருவதும், தனியோசை உடையதும், ஆலாபித்தற்கு இடந்தருவதுமான, ஒரு சுரக்கூட்டமாகும். அது நால்வகைப்படும். அவை பண் (7சுரம்), பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்), திறத்திறம் (4 சுரம்) என்பனவாகும். இவற்றை முறையே, சம்பூரணம், ஷாடவம், ஒளடவம், சுவராந்தம் என வடசொல்லால் தற்காலத்தில் வழங்குகின்றனர். பண்ணை இக்காலத்தில் ராகம் என்கின்றனர். அது அராகம் என்பதன் முதற்குறை.

பண்களைத் திரிக்கும் முறைகளில் மிக விரிவானது பாலையெனப்படும். ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோண(முக்கோண)ப் பாலை, சதுர(நாற்கோண)ப் பாலை என நால்வகை. இந் நூல்வகையும், ஏழிசைகளையும் முறையே 12 ஆகவும் 24 ஆகவும் 48 ஆகவும் 96 ஆகவும் பகுக்கும் என்பர்.

ஆயப்பாலையினின்று,
செம் பாலைப்பண் (தீரசங்கராபரணம்),
படுமலைப் பாலைப்பண் (கரகரப்பிரியா),
செவ்வழிப் பாலைப்பண் (தோடி),
அரும் பாலைப்பண் (கல்யாணி),
கோடிப் பாலைப்பண் (அரிகாம்போதி),
விளரிப் பாலைப்பண் (பைரவி),
மேற்செம் பாலைப்பண் (சுத்த தோடி) என்னும் ஏழுபண்கள் பிறக்கும்.

பெரும் பண்கள் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நால்வகைப்படும். இவை யாழெனவும் பண்ணெனவும் பெயர் பெறும். ஏழ்-யாழ் = ஏழிசையுடையது. இனி குல(ஜாதி)ப் பண்கள் என நான்குண்டு. அவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்பன. இவற்றைப் பெரும்பண்களோடுறழப் பதினாறாகும்.

பண்கள் மொத்தம் 103 வகைகளாகும்.

தொடர் – 52கி.பி. 2-ம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரம் ஒரு இசைச்சுரங்கம். இதில் இசை மற்றும் நாட்டியம் பற்றிய நுணுக்கங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பல நூற்றாண்டுகளின் பின்னர் சிலப்பதிகாரத்திற்குப் பொருள் கண்ட அடியார்க்கு நல்லாரும் அரும்பதனாரும் இசை நாட்டியம் பற்றி ஏராளமான குறிப்புகளை அளித்திருக்கின்றனர்.

“நரப்படைவாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால் (சிலப். 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை ஒருவாறுணரலாம்.

பிங்கலத்தில் 103 பண்கள் கூறப்பட்டுள்ளன. தேவாரத்தில் 24 பண்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

பிங்கல நிகண்டு – கருவிநூல்
நிகண்டு என்ற பிரிவில் திவாகரத்துக்குப் பின் தோன்றியது பிங்கலந்தை நிகண்டு ஆகும். பிங்கல எனும் முனிவரினால் இது பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருகிறது. திவாகரத்தைப் பார்க்க இது விரிவானது. ஒரு சொல் பல்பொருள் என்பதுதான் இன்றைய அகராதி. இது ஒரு சொல்லுக்குரிய பலவகைப் பொருளையும் ஒரே இடத்தில் தொகுத்துத் தருகிறது. பிங்கலர் சோழநாட்டினர். சைவர். சோழ நாட்டு ஊர்கள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

கணபதி பெயரை வைத்துத் தொடங்கும் வானவர் வகைப் பகுதியில் சிவனுக்கு 96 பெயர்கள் சொல்லப்பட்டுள்ளதால் இவர் சைவர் என்பர். இதனுள் 14700 சொற்கள் சொல்லப்பட்டுள்ளன.

தொல்காப்பியர் சொல்லும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற நால்வகைச் சொற்கைளையும் இந்நூல் நன்கு ஆராய்ந்து தொகுத்துச் சொல்கிறது. முழுவதும் நூற்பாக்களால் ஆனது. பத்துப் பகுதிகளைக் கொண்டது. 4181 சூத்திரங்கள் உள்ளன. நூற்பகுதி ஒவ்வொன்றும் ‘வகை’ என்று சொல்லப்பட்டுள்ளது. திவாகரத்தில் ‘பெயர்’ என்று அழைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய பிங்கல நிகண்டு என்ற நூலில் 103 பண்களின் பெயர்கள் தரப்படுள்ளன.

பிங்கல நிகண்டு (பக்கம் 170, 171).

1375. நால்வகைப் பண்ணின் பெயர்கள்
“பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென
நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே”
நால்வகைப் பண்ணின் பெயர்கள் : பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி.

1376. பாலையாழ்த் திறத்தின் பெயர்கள்
“அராக நேர்திற முறுப்புக் குறுங்கலி
யாசா னைந்தும் பாலையாழ்த் திறனே”
பாலையாழ்த் திறத்தின் பெயர்கள் : அராகம், நேர்திறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான்  ஆகிய ஐந்தாகும்.

1377. குறிஞ்சியாழ்த் திறத்தின் பெயர்கள்.
“நைவளங் காந்தாரம் படுமலை மருளொடு
வயிர்ப்புப் பஞ்சுர மரற்றுச் செந்திற
மிவ்வகை யெட்டுங் குறிஞ்சியாழ்த் திறனே”
குறிஞ்சியாழ்த் திறத்தின் பெயர்கள் எட்டு : நைவளம், காந்தாரம், படுமலை, மருள், அயிர்ப்பு, பஞ்சுரம், அரற்று, செந்திறம்.

1378. மருதயாழ்த்திறத்தின் பெயர்கள்.
“நவிர்வடுகு வஞ்சி செய்திற நான்கு
மருத யாழ்க்கு வருந்திற னாகும்”
மருதயாழ்த்திறத்தின் பெயர்கள் : நவிர், வடுகு, வஞ்சி, செய்திறம் ஆகிய நான்காகும்.

1379. செவ்வழியாழ்த் திறத்தின் பெயர்கள்.
“நேர்திறம் பெயர்திறஞ் சாதாரி முல்லையென
நாலுஞ் செவ்வழி நல்யாழ்த் திறனே”
செவ்வழியாழ்த் திறத்தின் பெயர்கள் : நேர்திறம், பெயர்திறம், சாதாரி, முல்லை என நான்காகும்.

பெரும் பண்கள் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நால்வகைப்படும். இவை யாழெனவும் பண்ணெனவும் பெயர் பெறும். ஏழ்-யாழ் = ஏழிசையுடையது. இனி குலப் பண்கள் என நான்குண்டு. அவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்பன. இவற்றைப் பெரும்பண்களோடுறழப் பதினாறாகும்.

1380. பெரும்பண்ணின் வகைகள் (16).
“ஈரிரு பண்ணு மெழுமூன்று திறனு
மாகின் றனவிவை யிவற்றுட் பாலையாழ்
செந்துமண் டலியாழ் பவுரி மருதயாழ்
தேவ தாளி நிருபதுங் கராகம்
நாக ராக மிவற்றுட் குறிஞ்சியாழ்
ஆசாரி சாய வேளர் கொல்லி
கின்னராகஞ் செவ்வழி மௌசாளி சீராகஞ்
சந்தி யிவைபதி னாறும் பெரும்பண்”

பெரும்பண்ணின் வகைகள் : பாலையாழ், செந்து, மண்டலியாழ், பௌரி, மருதயாழ், தேவதாளி, நிருபதுங்கராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி, கின்னராகம், சாயவேளர்கொல்லி, செவ்வழி, மௌசாளி, சீராகம், சந்தி எனப் பதினாறாகும்.

1381. பாலையாழ்த்திறன் வகையின் பெயர்கள் (20).
“தக்க ராக மந்தாளி பாடை
அந்தி மன்றல் நேர்திறம் வராடி
பெரிய வராடி சாயரி பஞ்சமம்
திராடம் அழுங்கு தனாசி சோமராகம்
மேக ராகந் துக்க ராகங்
கொல்லி வராடி காந்தாரம் சிகண்டி
தேசாக் கிரிசுருதி காந்தா ரம்மிவை
யிருபதும் பாலை யாழ்த்திற மென்ப”

பாலையாழ்த் திறத்தின் வகையின் பெயர்கள் : நட்டபாடை, அந்தாளிபாடை, அந்தி, மன்றல், நேர்திறம், வராடி, பெரியவராடி, சாயரி, பஞ்சமம், திராடம், அழுங்கு, தனாசி, சோமராகம், மேகராகம், துக்கராகம், கொல்லிவராடி, காந்தாரம், சிகண்டி, தேசாக்கிரி, சுருதிகாந்தாரம் என இருபதாகும்.

1382. குறிஞ்சி யாழ்த்திறன் வகையின் பெயர்கள் (32).
“நட்ட பாடையந் தாளி மலகரி
விபஞ்சி காந்தாரஞ் செருந்தி கௌடி
உதய கிரிபஞ் சுரம்பழம் பஞ்சுரம்
மேக ராகக் குறிஞ்சி கேதாளி
குறிஞ்சி கௌவாணம் பாடை சூர்துங்கராக
நாக மருள்பழந் தக்க ராகம்
திவ்விய வராடி முதிர்ந்த விந்தள
மநுத்திர பஞ்சமந் தமிழ்க்குச்சரி யருட்
புரிநா ராயணி நட்ட ராக
மிராமக்கிரி வியாழக் குறிஞ்சி பஞ்சமம்
தக்க ணாதி சாவகக் குறிஞ்சி
யாநந்தை யெனவிவை முப்பத் திரண்டுங்
குறிஞ்சி யாழ்த்திற மாகக் கூறுவர்”

குறிஞ்சியாழ்த்திறன் வகையின் பெயர்கள் : நட்டபாடை, அந்தாளி, மலகரி, விபஞ்சி, காந்தாரம், செருந்தி, கௌடி, உதயகிரி, பஞ்சுரம், பழம் பஞ்சுரம், மேகராகக் குறிஞ்சி, கேதாளி, குறிஞ்சி, கௌவாணம், பாடை, சூர்துங்கராகம், நாகம், மருள், பழந்தக்கராகம், திவ்வியவராடி, முதிர்ந்த விந்தளம், அநுத்திர பஞ்சமம், தமிழ்க்குச்சரி, அருட்புரி, நாராயணி, நட்டராகம், ராமக்கிரி வியாழக்குறிஞ்சி, பஞ்சமம், தக்கணாதி, சாவகக்குறிஞ்சி, ஆநந்தை என முப்பத்தியிரண்டாகும்.

1383. மருதயாழ்த்திறன் வகையின் பெயர் (16).
“தக்கேசி கொல்லி யாரிய குச்சரி
நாகதொனி சாதாளி யிந்தளந் தமிழ்வேளர்கொல்லி
காந்தாரங் கூர்ந்த பஞ்சமம் பாக்கழி
தத்தள பஞ்சம மாதுங்க ராகம்
கௌசிகஞ் சீகாமரஞ் சாரல் சாங்கிமம்
எனவிவை பதினாறு மருதயாழ்த் திறனே”

மருதயாழ்த்திறன் வகையின் பெயர்கள் : தக்கேசி, கொல்லி, ஆரியகுச்சரி, நாகதொனி, சாதாளி, இந்தளம், தமிழ்வேளர்கொல்லி, காந்தாரம், கூர்ந்த பஞ்சமம், பாக்கழி, தத்தள பஞ்சமம், மாதுங்க ராகம், கௌசிகம், சீகாமரம், சாரல், சாங்கிமம் என பதினாறாகும்.

1384. செவ்வழியாழ்த் திறன் வகையின் பெயர்கள் (16).
“குறண்டி யாரிய வேளர் கொல்லி
தனுக்காஞ்சி யியந்தை யாழ்பதங் காளி
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர்
பாணி நாட்டந் தாணு முல்லை
சாதாரி பைரவம் காஞ்சி யெனவிவை
பதினாறுஞ் செவ்வழி யாழ்த்திற மென்ப”

செவ்வழியாழ்த் திறன் வகையின் பெயர்கள் :  குறண்டி, ஆரியவேளர் கொல்லி, தனுக்காஞ்சி, இயந்தை, யாழ்பதங்காளி, கொண்டைக்கிரி, சீவனி, யாமை, சாளர், பாணி, நாட்டம், தாணு, முல்லை, சாதாரி, பைரவம், காஞ்சி எனும் வகையில் பதினாறாகும்.

1385. மற்றுந்திறத்தின் பெயர்கள் (3).
“தாரப் பண்டிறம் பையுள் காஞ்சி
படுமலை யிவைநூற்று மூன்று திறத்தன”
மற்றுந் திறத்தின் பெயர்கள் : தாரப்பண்டிறம், பையுள்காஞ்சி, படுமலை இம்மூன்றும் நூற்று மூன்று வகைப்படும்.

சங்க இலக்கியங்களில் பண்கள்

சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. ஆம்பல் பண், காஞ்சிப்பண்,  குறிஞ்சிப்பண்,  நைவளம் போன்ற பண்களைப் பற்றிய குறிப்புகள் உள.

ஆம்பல்பண்
ஆம்பல் என்பது ஒருவகைப் பண்ணாகும். இப்பண்ணைப் பற்றிய செய்திகள் நற்றிணை (123 : 10),  ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப் பாட்டு (221-222) ஆகிய பாடல்களில் காணப்படுகின்றன. கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர். தட்டை, தண்ணுமை போன்ற இசைக்கருவிகளுடன் மாலைக்காலத்தில் இசைத்து மகிழ்ந்திருக்கின்றனர்.

காஞ்சிப்பண்
காஞ்சிப்பண் துயருறும் மக்களின் துயரம் போக்கப் பயன்படுத்தப் பட்டு்ள்ளது. விழுப்புண் பட்டவர்கள், பேய்பிடித்தவர்களின் வருத்தம் தீர இப்பண்ணினைப் பாடிய குறிப்பு, புறநானூறு 296இல் காணப் பெறுகிறது.

குறிஞ்சிப்பண்
மலையுறை தெய்வங்களை மகிழ்விக்க, கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியதாக மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது.

நைவளம்
நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு (146), சிறுபாணாற்றுப்படை (36-38), பரிபாடல் (18-20-21) வரிகளில் குறிப்புகள் உள்ளன.

இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகின்றது. மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப் பற்றிய குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

இப்பண்கள் இசைக்கும் காலம், நிலம், அவை தரும் உணர்வுகள் பற்றியும் அறிய முடிகிறது.

பண் – ஆம்பல்,
காலம் – மாலை, முன்னிரவு
நிலம் – முல்லை, உணர்வு – ஏக்கம்

பண் – காஞ்சி
உணர்வு – துன்பம்

பண் – காமரம்
நிலம் – மருதம், உணர்வு – இன்பம்

பண் – குறிஞ்சி
காலம் – நள்ளிரவு
நிலம் – குறிஞ்சி, உணர்வு – அச்சம்

பண் – செவ்வழி
காலம் – மாலை
நிலம் – முல்லை, நெய்தல்
உணர்வு – இரக்கம்

பண் – நைவளம்
காலம் – பகல்
உணர்வு – இன்பம்

பண் – பஞ்சுரம்
நிலம் – பாலை, உணர்வு – அச்சம்

பண் – படுமலை
உணர்வு – இன்பம்

பண் – பாலை
காலம் – நண்பகல்
நிலம் – பாலை, உணர்வு – இன்பம்

பண் – மருதம்
காலம் – காலை
நிலம் – மருதம், உணர்வு – இன்பம்

பண் – விளரி
நிலம் – நெய்தல், உணர்வு – ஏக்கம்

நாயன்மார்கள்தேவாரத்தில் 24 பண்கள் காணப்படுகின்றன. 4ம் நூற்றாண்டிலிருந்த மாணிக்கவாசகராலும். 7ம் நூற்றாண்டிலிருந்த அப்பர், சம்பந்தராலும், 9ம் நூற்றாண்டிலிருந்த சுந்தரமூர்த்திகளாலும் அருளிய தேவார, திருவாசகமும் பண்களைக் கொண்டு அமைந்தன.

பன்னிரு ஆழ்வார்களின் திவ்வியப்பிரபந்தப் பாடல்களும் பண் முறைகளில் அருளிச் செய்யப் பெற்றவையே. தேவாரப் பாடல்கள்  பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டு வருகின்றன.

உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளனவென்றால் அவை தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே எனலாம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர், சுந்தரர், ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.

தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. பக்தி இலக்கியங்களான தேவாரப்பாடல்கள் யாவும் பண்சுமந்த பாக்களாகவே உள்ளன. தெய்வம் சுட்டிய வாரப் பாடல் தேவாரம் என்றழைக்கப் படுகிறது. இதனைத் தேவபாணி எனவும் கூறுவர்.

இறைவனைத் தேவாரத்தேவர் என்றும், தேவாரப்பாடல் பாடுவதனைத் திருப்பதியம் விண்ணப்பித்தல் என்றும், தேவாரம் பாடுபவரை பிடாரர், ஓதுவார் என்றும் கூறுவர்.


தமிழிசைப் பண்கள் 

இசை--thamil.co.ukஇனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்றபோது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன.

இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி, ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பதும் சமயங்கள் உணர்த்தும் உண்மை. இவ்வுலகமே ஓங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது. ஏழ்நரம்பிலிருந்து எழும் ஓசையே ஏழிசையாக அமைகிறது. இசைக்கலையே ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் சிறப்புடைய சுவையாகும்.

மொழியறியாது வாழ்ந்த மனிதன் இனம் புரியாத மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் எழுப்பிய ஓசையும் ஒலியுமே இசையாயிற்று. மகிழ்ச்சி மற்றும் துன்பப் பெருக்கின் உச்சக் கட்டமாக அவன் கைதட்டி எழுப்பிய ஆரவாரமே தாளமாயிற்று.

சிலை வளைத்துக் கணை தொடுத்து வேட்டையாட முற்பட்ட போதுஎழுந்த நாதமே இசைக்கருவிகளின் தோற்றத்திற்கும் மூலமாயிற்று.

பரிபாடல்
பரிபாடல்இன்று நமக்கு கிடைத்திருக்கும் இசை பற்றிய குறிப்புகளில் பழமையான இலக்கியமாகத் திகழ்வது பரிபாடல் ஆகும். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான இது கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும். 70 பாடல்களைக் கொண்ட இந்நூலில் கழிந்தன போக இன்று எஞ்சியுள்ளவை 22 பாடல்களாகும்.

இவற்றுள் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும், அதற்கு இசை அமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ், செந்துறை, தூக்கு வண்ணம் முதலியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம்தமிழிசை இலக்கணம் கூறும் பெருங்கடலில் சிலம்பு ஓர் ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கமாகும். சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவரசருமான இளங்கோவடிகளை இந்திய நாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறையில் அமைத்துத் தந்துள்ள இசை இலக்கணத் தந்தை என்று கூறினும் அது மிகையன்று!

இளங்கோவின் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வழிவழி வந்த இசை இலக்கண மரபுகள் பல சிலம்பில் காணப்படுகின்றமையினால் தொல்காப்பிய இசைக் குறிப்புகளையும் நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது.

தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி,  ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை, எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக்களின் தொகுதிகளாகும்.

பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம், பண் எனப்படும்.

நரம்பு என்பது ஏழு சுரங்களைக் குறிக்கும். இந்த ஏழு சுரங்களை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும்.

இவ்விசைகளின் ஓசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனி, ஆடு ஆகியவையும், இவற்றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி, ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளது.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்காரைக்கால் அம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகின்றார்கள். மேலும் இறைவனை இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர் ஆவார். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயருடனேயே இணைந்து “காரைக்கால் அம்மையார்” என்று அறியப்படுகின்றார்.

இவர் இயற்றிய பாடல்கள் அற்புதத் திருவந்தாதி – 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு – 22 பாடல்கள், திரு இரட்டை மணிமாலை – 20 பாடல்கள் ஆகும்.

தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம், தேவாரப் பதிகங்கள் அமைந்தன. தனது பாடல்களில் இறைவனுக்கு பல பெயரிட்டு வழங்குகிறார்.

அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், என் நெஞ்சத்தான், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன் என்பனவாகும்.

தேவாரத்தில் 24 பண்கள் காணப்படுகின்றன.

திருஞானசம்பந்தர் தேவாரம்
திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைத் திருமுறையாக வகுத்தவர்கள் பண் அடிப்படையில் முதல் மூன்று திருமுறைகளாக வகுத்தனர். இவை பின்வருமாறு:

முதலாம் திருமுறை
நட்டபாடை 1-22
தக்கராகம் 23-46
பழந்தக்க ராகம் 47-62
தக்கேசி 63-74
குறிஞ்சி 75-103
வியாழக் குறிஞ்சி 104-128
மேகராகக் குறிஞ்சி யாழ்முரி 129-135 136
மொத்தமாக – 136 பாடல்கள்

இரண்டாம் திருமுறை
இந்தளம் 1-39
சீகாமரம் 40-53
காந்தாரம் 54-82
பியந்தைக் காந்தாரம் 83-96
நட்டராகம் 97-112
செவ்வழி 113-122
மொத்தமாக – 122 பாடல்கள்

மூன்றாம் திருமுறை
காந்தாரபஞ்சமம் 1-24
கொல்லி 25-41
கொல்லிக் கௌவாணம் 42
கௌசிகம் 43-56 117
பஞ்சமம் 57-66
சாதாரி 67-99
பழம் பஞ்சுரம் 100-116
புறநீர்மை 118-123
அந்தாளிக் குறிஞ்சி 124-125
மொத்தமாக – 125 பாடல்கள்.

தொடர் – 55பண்டைத் தமிழிசை அறிஞர்கள் ஏழுவகை இசைக் குறியீடுகளைக் கொண்டு, நூற்றுக் கணக்கான பண்களைக் கண்டு கொண்டனர். பல நூற்றாண்டுகளாக அவற்றைப் பயன்படுத்திப் பாதுகாத்து வந்தனர். பன்னாட்டு மக்களும், இசை ஆர்வலர்களும் அவற்றை அறிந்து வியந்தார்கள். கற்று மகிழ்ந்தார்கள்.

அகத்தியர் காலத்தில் 108 பண்கள் இருந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். பண்டைத் தமிழகத்தில் 11,999 பண்கள் இருந்தமையை அடியார்க்கு நல்லார் உரை பதிவு செய்திருக்கின்றது. முன்னூற்றுக்கும் குறைவான பண்களே இப்போது இசைக் கலைஞர்களின் அறிவுக்கு எட்டுவனவாக உள்ளன.

சிலப்பதிகாரத்தின் இசை நுணுக்கங்களை ஆராய்ந்த முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட இணையற்ற மகுடமெனத் திகழ்கிறது.

தெள்ளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் பன்னிரு திருமுறைகளில் உள்ள 18,350 பாடல்களும், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்களாகும்.

தேவார திருவாசகங்கள் பல்வேறு பண்களுடனும், தாளங்களுடனும் அமைந்து, தமிழிசையின் மேன்மையைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கின்றன. இவை தோன்றிய பக்தி இலக்கிய காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே இலங்கிநின்றது தமிழ் இசை மட்டுமேயாகும்.

பன்னீராழ்வார்கள் பாடியருளிய அழகான பிரபந்தங்கள், அருணகிரியாரின் திருப்புகழ், சித்தர் பாடல்கள், கும்மி, சிந்து, குறவஞ்சி, பள்ளு, தெம்மாங்கு, நாட்டுப் பாடல்கள், கீர்த்தனைகள், நல்ல தழிழில் வல்ல புலவர்களால் கொள்ளை கொள்ளையாக எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன.

இவை எல்லாமே இசைத்தமிழுக்கு என்றென்றும் இனிமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஆயிரம் ஆயிரமான இசைப்பாடல்கள் தமிழ்மொழியில் குவிந்து கிடக்க, அவை மறந்து, நிலைகுலைந்து தமிழ் இசை மேதைகளும், நாட்டியக் கலை மேதைகளும் கருத்துத் தெரியாத வேற்று மொழிகளிலே பாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

கர்நாடக இசையென்றால் அது கன்னட மொழிக்கே சொந்தமானது என்றும் கர்நாடக நாட்டுக்கே உரியது என்றும் எண்ணுகின்றார்கள். வடமொழியே அதன் மூலம் என்று பொய்யான வாதங்களைப் புனைகின்றார்கள்.

கர்நாடக இசை தமிழ் இசையே. அது தமிழ் மொழிக்கே சொந்தமானது. தமிழ் மொழியிலேயே தோன்றியது. தமிழ் மொழியிலேயே வேர் ஊன்றியது. தமிழ் மொழியிலேயே தழை விட்டது, இலை விட்டது, கிளை விட்டது. தமிழ் மண்ணிலே பூத்து மணம் பரப்பியது.

வட நாட்டார் மணம்வந்த திசைநோக்கிப் பார்த்தார்கள். தென்திசையிலிருந்து வந்தமையால் கர்நாடக தேசத்திலிருந்தே அது வருவதாக எண்ணி அதனைக் கர்நாடக இசை என்று அழைத்தார்கள்.

தென்னாடு முழுவதுமே தமிழ்நாடாக இருந்த காலத்திலே செழிப்புற்று இருந்தது தமிழ் இசை. தமிழ் மொழியிலிருந்து கன்னடமும், தெலுங்கும் பிறந்த பின்னரும், தனித்தனி நாடுகளாய்ப் பிரிந்த பின்னரும் தமிழ் இசை தழைத்தோங்கி வளர்ந்தது.

சிலப்பதிகார உரையில் 11991 பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தோன்றிய -பிங்கலநிகண்டு கூறும் 103 பண்களின்  அட்டவணை “கருணாமிர்தசாகரம்” என்ற தமது நூலில் ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தருகின்றார்

பெரும்பண்ணின் வகை 16
பாலையாழ்
செந்து
மண்டலியாழ்
பௌரி
மருதயாழ்
தேவதாளி
நிருபதுங்கராகம்
நாகராகம்
குறிஞ்சியாழ்
ஆசாரி
சாயவேளர் கொல்லி
கின்னராகம்
செவ்வழி
மௌசாளி
சீராகம்
சந்தி

பாலையாழ்த்திறன் வகை 20
தக்கராகம்
அந்தாளிபாடை
அந்தி
மன்றல்
நேர்திறம்
வராடி
பெரிய வராடி
சாயரி
பஞ்சமம்
திராடம்
அழுங்கு
தனாசி
சோமராகம்
மேகராகம்
துக்கராகம்
கொல்லிவராடி
காந்தாரம்
சிகண்டி
தேசாக்கிரி
சுருதி காந்தாரம்

குறிஞ்சியாழ்த்திறன் வகை 32
நட்டபாடை
அந்தாளி
மலகரி
விபஞ்சி
காந்தாரம்
செருந்தி
கொளடி
உதயகிரி
பஞ்சுரம்
பழம் பஞ்சுரம்
மேகராகக் குறிஞ்சி
கேதாளி
குறிஞ்சி
கௌவாணம்
பாடை
சூர்துங்கராகம்
நாகம்
மருள்
பழந்தக்க ராகம்
திவ்விய வராடி
முதிர்ந்த விந்தளம்
அநுத்திர பஞ்சமம்
தமிழ்க் குச்சரி
அருட்புரி
நாராயணி
நட்டராகம்
ராமக்கிரி
வியாழக்குறிஞ்சி
பஞ்சமம்
தக்கணாதி
சாவகக் குறிஞ்சி
ஆநந்தை

செவ்வழியாழ்த்திறன் வகை 16
குறண்டி
ஆரிய வேளர்கொல்லி
தனுக்காஞ்சி
இயந்தை
யாழ்பதங்காளி
கொண்டைக்கிரி
சீவனி
யாமை
சாளர்
பாணி
நாட்டம்
தாணு
முல்லை
சாதாரி
பைரவம்
காஞ்சி

மற்றுந்திறன் 3
தாரப்பண்டிறம்
பையுள்காஞ்சி
படுமலை
தொடர் – 56

அராகம் என்ற தமிழ்ச் சொல் – இராகமாயிற்று.
செம்பாலை – அரிகாம்போதி ஆயிற்று.
படுமலைப்பாலையை – நடனபைரவி என்றார்.
கோடிப்பாலையைக் – கரகரப்பிரியா எனக்கூறினர்.

விளரிப்பாலையை – தோடி என்றழைத்தனர்.
செவ்வழிப்பாலை – இருமத்திமத் தோடியானது.
முல்லைத் தீம்பாணி – மோகனம் ஆனது.
செந்துருத்திக்கு – மத்தியமாவதி என்று பெயரிட்டார்.

இந்தளம் என்பதை – மாயாமாளவ கௌளை என்று மாற்றினார்.
கொன்றையந் தீங்குழலை – சுத்தசாவேரி என ஆக்கினர்.
ஆம்பலந் தீங்குழலை – சுத்த தன்யாசி என்றனர்.
அரும்பாலைக்குச் – சங்கராபரணம் எனப்பெயர் சூட்டினர்.

மேற்செம் பாலையைக் – கல்யாணி என்றழைத்தார்.
செவ்வழியை – யதுகுலகாம்போதி என்று மாற்றினர்.
புறநீர்மைக்குப் – பூபாளம் என்றார்கள்.
தக்கேசிக்குக் – காம்போதி எனக்கொண்டனர்.

இவ்வாறு தமிழ் இசையின் பெயர்களையெல்லாம் மாற்றிவிட்டு, ஆராய்ச்சிக் குறிப்பும் எழுதி வைத்தார்கள்.

தேவாரத்தில் வழங்கி வருகின்ற 24 பண்கள் 
செவ்வழி = யதுகுல காம்போதி
சதாரி = காம வர்த்தினா
வியாழக் குறிஞ்சி = சௌராஷ்டிரம்
பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி
இந்தோளம் = மாய மாளகௌளம்
புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி
நட்டராகம் = பந்துவராளி
நட்டபாடை = நாட்டை
கொல்லி = பிலஹரி
கொல்லி கவ்வாமை = நவரோகி
தக்கேசி = காம்போதி
தக்கராகம் = ஏகதேச காம்போதி
நேரிசை = சிந்து கன்னடா
குறிஞ்சி = மலகரி
கௌசிகம் = பைரவி
காந்தார பஞ்சமம் = கேதார கௌளம்
பழம்பஞ்சுரம் = சங்கராபரணம்
மேகராக குறிஞ்சி = நீலாம்பரி
குறுந்தொகை = நாதநாமக்கிரியை
அந்தாளிக் குறிஞ்சி = சாமா / சைலதேசாட்சி
செந்துருத்தி = மத்யமாவதி
திருத் தாண்டகம் = ஹரிகாம்போதி
பஞ்சமம் = ஆஹிரி
ஏகாமரம் = புன்னாக வராளி
சீகாமரம் = நாதநாமக்கிரியை
கொல்லி, கொல்லிக்கௌவாணம் = சிந்து கன்னடா

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பண்கள்
நட்டபாடை
தக்க ராகம்
பழந்தக்க ராகம்
தக்கேசி
குறிஞ்சி
வியாழக் குறிஞ்சி
மேகராகக் குறிஞ்சி
இந்தளம்
சீகாமரம்
பியந்தைக் காந்தாரம்
நட்டராகம்
செவ்வழி
காந்தார பஞ்சமம்
கொல்லி
கௌசிகம்
பஞ்சமம்
சாதாரி
புறநீர்மை
அந்தாளி

திருநாவுக்கரசர் பாடிய தேவாரப்பண்கள்
நேரிசை
குறுந்தொகை
தாண்டகம்

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரப்பண்கள்
இந்தளம்
தக்க ராகம்
நட்டராகம்
கொல்லி
பழம்பஞ்சுரம்
தக்கேசி
காந்தாரம்
காந்தார பஞ்சமம்
நட்டபாடை
புறநீர்மை
சீகாமரம்
குறிஞ்சி
செந்துருத்தி
கௌசிகம்
பஞ்சமம்

3-ஆம் நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரும், 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளில் திருஞானசம்பந்தர் – திருநாவுக்கரசர் (அப்பர்) – சுந்தரர், மணிவாசகர் அருளிய தேவார, திருவாசகமும் பண்களைக் கொண்டு அமைந்தன. பன்னிரு ஆழ்வார்களின் திவ்வியப்பிரபந்தப் பாடல்கள் பண் முறைகளில் அருளிச் செய்யப்பெற்றவையே.

திருக்குறுந்தொகை, திருநேர்ச்சை திருவிருத்தம், திருத்தாண்டகம் ஆகிய தேவாரப் பாடல்கள் ஒரு பாட்டின் வடிவமைப்பினைக் குறிப்பதாகத் தெரிகின்றமையால், இவை எந்தப் பண்ணிலும் பாடலாம். ஆயினும் வழக்கமாகச் சில பண்களால் மட்டுமே பாடப்படுகின்றன. மேலும் காலையிலிருந்து இரவு வரை ஒரு வரிசை முறையில் பாடக்கூடிய தமிழ்ப் பண்ணிசைகள் இருந்ததாக பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

காலையிற் பாடும் பண்கள் 
புறநீர்மை
காந்தாரம்
பியந்தைக் காந்தாரம்
கௌசிகம்
இந்தளம்
திருக்குறுந்தொகை
தக்கேசி
காந்தார பஞ்சமம்
பஞ்சமம்

மாலையிற் பாடும் பண்கள்
தக்கராகம்
பழந்ததக்க ராகம்
சீகாமரம்
கொல்லி
கொல்லிக் கௌவானம்
திருநேர்ச்சை
திருவிதானம்
வியாழக் குறிஞ்சி
மேகராகக் குறிஞ்சி
குறிஞ்சி
அந்தாளிக் குறிஞ்சி

எந்தக் காலத்தும் பாடும் பண்கள்
செவ்வழி
செந்துருத்தி
திருத்தாண்டகம்


பண்ணியலும் திறமும்

“பண்ணோர் பதினேழாம் பண்ணியல் பத்தேழாம்
எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப – நண்ணிய
நாலாந் திறத்திற மோர் நான்கு முளப்படப்
பாலாய பண் நூற்று மூன்று”
(பஞ்சமரபு – ஆசிரியர் அறிவனார்)

பண் வகைகள் – (சம்பூர்ண இராகம்) – 17
பண்ணியல்கள் – (ஷாடவ இராகம்) – 70
திறங்கள் – (ஒளடவ இராகம்) – 12
திறத்திறங்கள் – (சுராந்தரம்) – 04
ஏழிசைகளையும் பழந்தமிழர் இவ்வாறு வகுத்துக் கொண்டனர்.

சைவத் திருமுறைகள்திருமுறையில் தமிழிசைப் பண்கள்

சைவத் திருமுறைகள்
சைவ சமயத்தின் முதன்மை நூல்களைச் சைவத் திருமுறைகள் என்று கூறுவது மரபு. அவற்றைப் பன்னிரண்டாகப் பகுத்துள்ளனர். திருமுறை என்பதன் விளக்கம் திருமுறைகளின் பெருமை அவை ஓதப்படும் முறைகள் பற்றி பார்ப்போம்.

சைவத் தமிழ் இலக்கிய வரலாற்றில் திருமுறைகள் வகிக்கும் இடம், மற்றும் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், யாப்பு, இசை ஆகியவற்றிற்குச் சைவத் திருமுறைகள் ஆற்றியுள்ள பங்களிப்பு பற்றியும் நோக்குவோம்.

சைவ சமய அருளாளர்கள் பலர் வெவ்வேறு இடங்களில் சென்று இறைவனைப் பாடிய அரும்பாடல்கள் ஆங்காங்கே பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு காலத்தில் இவற்றை எல்லாம் திரட்டி வகுத்து வைத்தனர். அவ்வாறான பல சைவசமய நூல்களின் தொகுப்பினையே சைவத்திருமுறைகள் என்று பெயரிட்டு வழங்கினர்.

திருமுறைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள தனிப்பாடல்களுக்கும் சிறுநூல்களுக்கும் தனித்தனியே பெயர்கள் அமைந்துள்ளன. ஆயினும் இவை அனைத்தையும் உள்ளடக்கி நிற்கும் ஒரு பொதுக் குறியீடாகத் “திருமுறை” என்ற சொல் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டிருந்த பிற்காலச் சோழர்களில் ஒருவன் அபயகுலசேகரன் ஆவார். இவரின் அரிய முயற்சியால், நம்பியாண்டார் நம்பிகள் என்ற சிவ வேதியர் திருமுறைகளைத் தொகுத்து அளித்தார் என்று கூறப்படுகிறது.

தில்லைத் திருக்கோயிலில் திருமுறை ஏட்டுச் சுவடிகள் இருந்தன. அவற்றுள் கரையானால் அழிக்கப்பட்ட ஏடுகள் போக மீதமுள்ள ஏடுகளே தொகுத்து வைக்கப்பட்டன.

ஒன்று முதல் பதினொன்று வரையிலான திருமுறைகளை நம்பி தொகுத்தார் என்றும், அவர் காலத்துக்குப்பின் சேக்கிழாரின் பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாக இணைத்துக் கொள்ளப்பட்டது என்றும் தெரிகிறது. இவற்றுக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த பெண் ஒருத்தி பண்முறை கண்டு இசை அமைத்தார். சோழர்கள், திருமுறைகள் அழியாது இருக்க அவற்றைச் செப்புப் பட்டயங்களில் பொறித்துப் பாதுகாத்தனர் என்றும் அறிய முடிகிறது.

திருமுறைகளின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். திருமுருகாற்றுப்படை கடைச்சங்க காலத்தது. காரைக்கால் அம்மையார் தேவார ஆசிரியர்களுக்கு முற்பட்டவர். மாணிக்கவாசகர், திருமூலர் ஆகியோர் காலம் குறித்துச் சர்ச்சைகள் உள்ளன.

திருமுறைகளின்பெருமை
திருமுறைகளுக்குப் பெருஞ்சிறப்பு உண்டு. சைவர்கள் இவற்றை இறைநூல் என்றும், தமிழ்வேதம் என்றும் கருதிப் போற்றி வருகின்றனர். வேதம் மற்றும் சைவ ஆகமங்களின் சாரமாகவே திருமுறைகள் அமைந்துள்ளன.

சைவ சித்தாந்த சாத்திரங்கள் தோன்றுவதற்கு அடிப்படையான இறை, உயிர், தளை (பதி, பசு, பாசம்) இவற்றின் இயல்புகள் திருமுறைகளுள் விரித்துரைக்கப் பட்டுள்ளன.

சில பதிகங்கள் அற்புத நிகழ்வுகளோடு இணைந்தவை. (பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது) அவற்றைப் பக்தியோடு ஓதினால் உரிய நன்மையை அவை தரும் என்ற நம்பிக்கை சைவர்களிடையே நிலவி வருகிறது.

தமிழ்நாட்டின் 500 ஆண்டுக்காலச் சமய-சமூக வரலாற்றை அறியத் திருமுறைகள் துணையாகின்றன. தமிழ், இசை, கலை, பெண்மை ஆகியவை உயர்ச்சி பெறத் திருமுறைகள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.

சிவன் சந்நிதிகளில் பூசைக்காலங்களில் திருமுறை ஓதி வழிபடும் வழக்கம் நிலவுகிறது. சிவன் சந்நிதியில் நின்று திருமுறை பாடுவோரை ஓதுவார் என்று கூறுவர். கல்வெட்டுகள் இவர்களைப் “பிடாரர்கள்” என்று குறிக்கிறது.

திருமுறை ஓதப்படும் முறைகள்
திருமுறைகளை ஓதுவதில் சில நெறிமுறைகளைச் சைவம் வகுத்துள்ளது. சிவ தீட்சை பெற்றவர்களே, நீராடித் தூயஆடை உடுத்து, வெண்ணீறு அணிந்து, உரிய பண் அடைவோடு இறைவன் முன்பு திருமுறை ஓதுதல் வேண்டும். ஒவ்வொரு காலப் பூசையிலும் திருமுறை ஓதப்பட வேண்டும். அந்தத் தலத்துக்குரிய பாடல்களைப் பாடுவது சிறப்பு.

திருமுறை விண்ணப்பிக்கத் தொடங்கும் முன்பும், நிறைவு செய்த பின்பும் ‘திருச்சிற்றம்பலம்’ என உச்சரித்தல் வேண்டும். தேவாரமாயின் பதிகம் முழுவதையும் பாடவேண்டும். காலம் கருதி இயலாதபோது பதிகத்தின் முதற்பாடலையும், நிறைவுப் பாடலையும் பாடலாம். ஒவ்வோர் திருமுறையிலிருந்தும் குறைந்தது ஒரு பாடலையாவது பாடுதல் நலம்.

ஒரு தேவாரப்பாடல், ஒரு திருவாசகப்பாடல், திருவிசைப்பாவிலிருந்து ஒருபாடல், திருப்பல்லாண்டில் ஒன்று, பெரியபுராணப் பாடல் ஒன்று என ஐந்து பாடல்களைப் பாடும் மரபு உண்டு. இதற்குப் “பஞ்சபுராணம்” பாடுதல் என்று பெயர்.

சிவன் திருவீதி உலா வருகையில் திருமுறைகள் முன்னாகவும், வேதங்கள் பின்னாகவும் ஓதப்படும் மரபு நிலவி வருகிறது.

நாயன்மார்கள்பன்னிரு திருமுறைகள்

நாயன்மார்களாகிய மூவர் முதலிகளும், மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர். சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல்களும் தேவாரம் எனப் பொதுப்பெயரால் அழைக்கப்பெற்றன. சம்பந்தர் பாடியவை 4158 பாடல்கள், நாவுக்கரசர் பாடியவை 3066 பாடல்கள், சுந்தரர் பாடியவை 1026 பாடல்கள்.

திருஞானசம்பந்தருடைய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாக இடம்பெற்றன.

திருநாவுக்கரசருடைய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாக வைக்கப்பட்டன.

சுந்தரர் பாடல்கள் ஏழாம் திருமுறையாக எண்ணப்பட்டது. இவ் ஏழு திருமுறைகளும் தேவாரம் என்று குறிப்பிடப்பட்டன.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை ஆகும்.

ஒன்பதாம் திருமுறை ஒரு தொகுப்பு நூல். இது திருவிசைப்பா, திருப்பல்லாண்டு எனப்படும். இதில் ஒன்பது அடியார்கள் பாடிய பாடல்கள் அடங்கும்.

திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறை.

நம்பியாண்டார் நம்பி இப்பத்துத் திருமுறைகளையே தொகுத்தார் என்றும் பதினொராம் திருமுறை அவர் காலத்துக்கு பின்னால் தொகுக்கப்பட்டது என்றும் கூறுவார்கள். பதினொராம் திருமுறையும் ஒரு தொகுப்பு நூலே ஆகும். காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் முதலியவர்களுடைய நூல்களோடு நம்பியாண்டார் நம்பியின் நூல்களும் இதில் அடங்கும்.

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகும்.

தேவாரப்பண்கள்
தேவாரத்தில் இடம் பெற்றுள்ள பண்கள் இருபத்து ஒன்று. இதனைப் “பந்தத்தால்” என்று தொடங்கும் திருக்கழுமலம் (சீகாழி) பதிகத்தில் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார். பின்வந்தோர் பண்களை இருபத்து நான்கு என்றும் இருபத்துஏழு என்றும் பிரித்துக் கூறினர். தேவாரப்பண்களை மூன்றாக வகைப்படுத்தினர்.
பகற்பண்கள் – 10
இராப்பண்கள் – 08
பொதுப் பண்கள் – 03

பகற்பண்கள் – 10
புறநீர்மை
காந்தாரம் – பியந்தைக் காந்தாரம்
கௌசிகம்
இந்தளம் (திருக்குறுந்தொகை)
தக்கேசி
நட்டராகம் (சாதாரி)
நட்டபாடை
பழம் பஞ்சுரம்
காந்தார பஞ்சமம்
பஞ்சமம்

இராப்பண்கள் – 08
தக்கராகம்
பழந்தக்கராகம்
சீகாமரம்
கொல்லி கௌவாணம் திருநேரிசை திருவிருத்தம்
வியாழக்குறிஞ்சி
மேகராகக் குறிஞ்சி
குறிஞ்சி
அந்தாளிக்குறிஞ்சி

பொதுப் பண்கள் – 03
செவ்வழி
செந்துருத்தி
திருத்தாண்டகம்
இவற்றுள் செவ்வழிப்பண் திருஞான சம்பந்தரால் மட்டுமே பாடப்பட்டுள்ளது. செந்துருத்தியைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மட்டுமே பாடியுள்ளார். திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் என்பவை திருநாவுக்கரசரால் மட்டுமே பாடப்பட்டுள்ளன.

முதலாம் திருமுறை
திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்களுள் இன்று நமக்குக் கிடைத்துள்ளவை 384 பதிகங்கள். பாடல் தொகை 4158. முதல் திருமுறையுள் 136 பதிகங்களும், 1469 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
நட்டபாடை (22)
தக்கராகம் (24)
பழந்தக்கராகம் (8)
தக்கேசி (12)
குறிஞ்சி (24)
வியாழக்குறிஞ்சி (25)
மேகராகக் குறிஞ்சி (7)
ஆகிய 7 பண்களும், “யாழ்மூரி” என்ற ஒரு பதிகமும் முதல் திருமுறையுள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் திருமுறை
இரண்டாம் திருமுறையுள் 122 பதிகங்களும் 1331 தேவாரப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
இந்தளம் (34)
சீகா மரம்(14)
காந்தாரம் (24)
பியந்தைக் காந்தாரம் (14)
ஒட்டராகம் (16)
செவ்வழி (10)
என ஆறு பண்கள் இரண்டாம் திருமுறையுள் இடம் பெற்றுள்ளன. “மந்திரமாவது நீறு” என்று தொடங்கும் “திருநீற்றுப் பதிகமும்”, “வேயுறு தோளிபங்கன்” என்று தொடங்கும் “கோளறு திருப்பதிகம்” இரண்டாம் திருமுறையுள் இடம் பெற்றுள்ளன.

மூன்றாம் திருமுறை
மூன்றாம் திருமுறையுள் 126 பதிகங்களும், 1358 தேவாரப் பனுவல்களும் இடம்பெற்றுள்ளன.
காந்தார பஞ்சமம் (23)
கொல்லி (18)
கொல்லிக் கௌவாணம் (1)
கௌசிகம்(15)
பஞ்சமம் (10)
சாதாரி (33)
பழம் பஞ்சுரம் (17)
புறநீர்மை (6)
அந்தாளிக் குறிஞ்சி (2) முதலிய ஒன்பது பண்களில் பதிகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

நான்காம் திருமுறை
திருநாவுக்கரசர் அருளியனவாக இன்று கிடைத்துள்ள பதிகங்கள் 312. தேவாரப் பாடல்களின் எண்ணிக்கை 3066. திருநாவுக்கரசரின் நான்காம் திருமுறையில் இடம்பெற்றுள்ள பதிகங்களைத் திருநேரிசை என்றும் குறிப்பர். இத்திருமுறையுள் இடம் பெற்றுள்ள பதிகங்கள் 113. பாடல்கள் 1070.

கொல்லி (1)
திருநேரிசை (58)
திருவிருத்தம் (34)
இவ்விருவகைப் பாடல்களும் (62)
காந்தாரம் (6)
பியந்தைக்காந்தாரம் (1)
சாதாரி (1)
காந்தார பஞ்சமம் (21)
பழந்தக்கராகம் (2)
பழம் பஞ்சுரம் (21)
சீகாமரம் (2)
குறிஞ்சி (1)
என நான்காம் திருமுறையுள் 10 பண்கள் இடம்பெற்றுள்ளன. இத்திருமுறையில் அற்புதத் திருப்பதிகங்கள் ஒன்பது இடம் பெற்றுள்ளன. சைவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் இத்திருப்பதிகங்கள் குறித்த விளக்கங்களைக் கீழே உள்ள அட்டவணை விளக்கி நிற்கிறது.

ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசரின் ஐந்தாம் திருமுறையுள்இடம் பெற்றுள்ள பதிகங்களைத் திருக்குறுந்தொகை எனக் குறித்துள்ளனர். இத்திருமுறையுள் இடம் பெற்றுள்ள பதிகங்கள் 100. பனுவல்கள் 1015 ஆகும். இத்திருமுறைப் பாடல்களை இயல் தமிழ்ப் பாடல்களாகவே கொள்ளவேண்டும். ஆயினும் நடைமுறையில் இவை இந்தளப் பண்ணில் பாடப்பெற்று வருகின்றன.

ஆறாம் திருமுறை
ஆறாம் திருமுறையைத் திருத்தாண்டகம் எனக் கூறுதல் வழக்கு. இதில் 99 பதிகங்களும் 981 திருத்தாண்டகங்களும் இடம்பெற்றுள்ளன. தாண்டகம் என்பது ஒவ்வோர் அடியிலும் அறுசீர்களோ அல்லது எட்டுச்சீர்களோ அமையக் கடவுளையோ அல்லது ஆண் மக்களையோ நான்கு அடிகள் அமையப்பாடும் அமைப்புடையது.

அறுசீரான் அமைவது குறுந்தாண்டகம். எண்சீரான் அமைவது நெடுந்தாண்டகம். 65 சிவத்தலங்களில் பாடப்பட்ட பதிகங்களும், பல பொதுப் பதிகங்களும் இதனுள் இடம் பெற்றுள்ளன.

ஏழாம் திருமுறை
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையுள் 100 பதிகங்களும் 1026 அருட்பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இவர் 17 பண்களில் பாடியுள்ளார். இவர் அவதரித்த நோக்கமே திருத்தொண்டத்தொகை என்ற அடியார் வரலாறு கூறும் பதிகம் பாடுவதற்கென்று சேக்கிழார் குறிக்கிறார்.

எட்டாம் திருமுறை
எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம். இவரே இயற்றியதாகக் கருதப்படும் திருச்சிற்றம்பலக் கோவையாரும் எட்டாம் திருமுறையாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாசகம்
திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. முதற்கண் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கு பெரும் பகுதிகள் அமைந்துள்ளன.
திருச்சதகம் 100 பாடல்களைக் கொண்டது.
நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது.
திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது.
திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள்கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.

இருபத்து நான்கு தமிழிசைப் பண்கள் பற்றியும் அவற்றின் விரிவான விளக்கங்கள், மாதிரிகள் பற்றியும் நாம் அறிந்துகொள்வதற்கு முன்னர், ஏழு தமிழிசைச் சுரங்கள் எப்படி 72 மேளகர்த்தா இராகங்கள் ஆயின என்பதனை மிகச்சுருக்கமாக நோக்குதல் பொருத்தமுடைத்தேயாகும்.

 

தமிழிசைப் பண்கள்“ச ரி க ம ப த நி யென்று ஏழெழுத்தால் தானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை”
சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் இந்தப்பாடல் உள்ளது. ஏழு சுரங்களுக்கு தமிழிசையில் நமக்கு கிடைத்த முதல் வாக்கியங்கள் இவையேயாகும்.

பழந்தமிழன் கண்ட குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகிய ஏழு சுரங்களும், சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வடமொழிச் சொற்களாக மாறின என்பதனை சிலப்பதிகாரம் உறுதிப்படுத்துகிறது. இந்த ஏழு சுரங்களும் பிரக்ருதிஸ்வரம், விக்ருதிஸ்வரம்  என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன

பிரக்ருதிஸ்வரம் – குறையில்லாதவை`
சட்சம்
பஞ்சமம்

விக்ருதிஸ்வரம் – குறையுடவை
ரிஷபம்
காந்தாரம்
மத்யமம்
தைவதம்
நிஷாதம்

குறை, நிறை உள்ளவையென இவ்வாறாகப் பாகுபடுத்தி அவற்றை மேலும் 12 சுரங்களாக விரித்தனர்.

ச – ஷட்ஜம் – குறை, நிறை இல்லை
ரி – சுத்தரிஷபம் – குறை
ரி – சதுசுருதிரிஷபம் – நிறை
க – சாதாரண காந்தாரம் – குறை
க – அந்தரகாந்தாரம் – நிறை
ம – சுத்தமத்யமம் – குறை
ம – பிரதிமத்யமம் – நிறை
ப – பஞ்சமம் – குறை, நிறை இல்லை
த – சுத்த தைவதம் – குறை
த – சதுசுருதி தைவதம் – நிறை
நி – கைசிகி நிஷாதம் – குறை
நி – காகலி நிஷாதம் – நிறை

மேளகர்த்தா இராகங்களின் மிகநுட்பமான அமைப்பு முறைகளை நோக்குவோம். இத்தகைய பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான். இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன. 1550 இல் ராமாமாத்தியா இயற்றிய “சுவரமேளகலானிதி” என்னும் நூலில் இருந்து இதன் வரலாறு தொடங்குகின்றது.

தொடர்ந்து, கோவிந்த தீட்சதரின் மகன் வேங்கடமகி, 17ம் நூற்றாண்டில் எழுதிய “சதுர்த்தண்டிப் பிரக்காசிகை” என்னும் நூலில்தான் தற்பொழுது பரவலாக அறியப்படும் மேளகர்த்தா இராகம் அமைப்பு கூறப்பட்டுள்ளது.

கருநாடக இசையில் 72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. இந்த அமைப்பைக் கொண்டு எந்தவொரு இலக்கம் உள்ள மேளகர்த்தா இராகத்தின் அடையாளப் பண்பையும் (இராக லட்சணத்தையும்) எளிதில் அறிந்து கொள்ளலாம்.

வேங்கடமகி என்பவர் தமது “சதுர்த்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலில் 12 சுருதித் தானங்களையே 16 ஆக மாற்றி (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு) 72 மேளகர்த்தா இராகங்களாக ஆக்கினார். இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன.

12 சுரத்தான அடிப்படையில், 16 பெயர்களுடன்(துணைச்சுரங்களோடு), 72 மேளகர்த்தாக்களும் அமைந்துள்ளன.

16 சுரங்கள் வருமாறு (துணை)
ச – சட்சம் – வேறுபாடில்லை
————————-
ரி1 – சுத்த ரிஷபம்
ரி2 – சதுஸ்ருதி ரிஷபம்
ரி3 – ஷட்ஸ்ருதி ரிஷபம்
————————-
க1 – சாதாரண காந்தாரம்
க2 – அந்தர காந்தாராம்
க3 – சுத்த காந்தாரம்
————————-
ம1 – சுத்த மத்தியமம்
ம1 – பிரதி மத்தியமம்
————————-
ப – பஞ்சமம் – வேறுபாடில்லை
————————-
த1 – சுத்த தைவதம்
த2 – சதுஸ்ருதி தைவதம்
த3 – ஷட்ஸ்ருதி தைவதம்
————————-
நி1 – கைஷகி நிஷாதம்
நி2 – காகலி நிஷாதம்
நி3 – சுத்த நிஷாதம்
————————-

சில சுரங்களை வேறு சுரங்களாக நினைத்துக் கொண்டு அதாவது அந்த சுரஸ்தானத்தில் பாடுதல் கருநாடக சுர வகைக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு அம்சமாகும்

ரி3 = க1
க3 = ரி2
த3 = நி1
நி3 = த2

இந்த 72 மேளகர்த்தா ராகங்களை, பனிரெண்டு குழுக்களாக பிரித்துள்ளனர். ஆக மொத்தம் 12 சக்கரங்கள். ஒவ்வொன்றிலும் ஆறு ராகங்கள் இருக்கும். 72 மேளகர்த்தாச் சக்கரம் இரு சரிசமமான பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு பூர்வ மேளகர்த்தாக்கள் என்றும், இரண்டாம் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு  உத்தர மேளகர்த்தாக்கள் என்றும் பெயர்.

1-36 மேளகர்த்தாக்களில் சுத்த மத்திம சுரமும், 37- 72 மேளகர்த்தாக்களில் பிரதி மத்திம சுரமும் வருவதால் பூர்வ மேளகர்த்தாக்களை சுத்த மத்திம மேளகர்த்தாக்கள் என்றும், 72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு சக்கரத்திலும் இருக்கும் ராகங்களில் தைவதமும், நிஷாதமும் மட்டுமே மாறுபடும்.

இந்தப் பன்னிரண்டு சக்கரங்களுக்கும் கீழ்க்கண்டவாறு பெயர்கள் இடப்பட்டுள்ளன.

சுத்த மத்திம இராகங்கள் (பூர்வ மேளகர்த்தாக்கள்)
01 – இந்து (நிலவு , ஒரே நிலவு)
02 – நேத்ரம் (இரு கண்கள்)
03 – அக்னி (மூன்று வகை வேள்வித் தீ, முத்தீ).
04 – வேதம் (நான்கு வேதங்கள்)
05 – பாணம் (மன்மதனின் ஐந்து பாணங்கள்)
06 – ருது (ஆறு ருதுக்கள், அதாவது பருவ காலங்கள்)

பிரதி மத்திம இராகங்கள் (உத்தர மேளகர்த்தாக்கள்)
07 – ரிஷி (சப்த ரிஷிகள்)
08 – வசு (அஷ்ட வசுக்கள்)
09 – பிரம்மா (நவ பிரம்மாக்கள்)
10 – திசி (பத்து திசைகள் – எட்டுடன் மேல் கீழ் சேர்ந்து)
11 – ருத்ரர் (ஏகாதச ருத்ரர்கள்)
12 – ஆதித்யர் (துவாதச ஆதித்யர்கள்).
தமிழிசைப் பண்கள்பாடல் – விநாயகர்துதி
ராகம் – நாட்டை
தாளம் – ஆதி

தத்தனதனதனதத்தனதனதன
தத்தனதனதன …… தனதான

கைத்தலநிறைகனிஅப்பமொடவல்பொரி
கப்பியகரிமுகன் …… அடிபேணிக்

கற்றிடும்அடியவர்புத்தியில்உறைபவ
கற்பகம்எனவினை …… கடிதேகும்

மத்தமுமதியமும்வைத்திடும்அரன்மகன்
மற்பொருதிரள்புய …… மதயானை

மத்தளவயிறனைஉத்தமிபுதல்வனை
மட்டவிழ்மலர்கொடு …… பணிவேனே

முத்தமிழ்அடைவினைமுற்படுகிரிதனில்
முற்படஎழுதிய …… முதல்வோனே

முப்புரம்எரிசெய்தஅச்சிவன்உறைரதம்
அச்சதுபொடிசெய்த …… அதிதீரா

அத்துயரதுகொடுசுப்பிரமணிபடும்
அப்புனமதனிடை …… இபமாகி

அக்குறமகளுடன்அச்சிறுமுருகனை
அக்கணமணமருள் …… பெருமாளே.

பொதுவாகப் பாடல்கள் வடிவம், உள்ளீடு, அணி நலன்கள், உணர்ச்சி நிலைகள் என்ற நான்கு நிலைகளைக் கொண்டு விளங்கும். வடிவ அமைதியை ஒலிவடிவம், பொருள்வடிவம் என்று பிரிக்கலாம்.

பாடலில் காணப்படும் ஓசை ஒழுங்கைச் சந்தம் என்பர். இந்த ஓசை ஒழுங்கு ஒவ்வொரு பாடலுக்கும் அடிநாதமாக விளங்கும். படைப்போன் இவ்வோசை ஒழுங்கினை முறைப்படுத்திக்கொண்டு, பொருளோடும், உணர்ச்சிப்பாங்கும் கற்பனை வளமும் கலந்து தரும்போது ஓசைகளுக்கேற்பச் சொற்கள் அமையும். அப்பொழுது சொற்கள் கவிஞனிடத்தில் நடனமாடும். இந்த அரிய, இனிய கலையை இன்றைய தமிழ் உலகம் மெல்ல, மெல்ல இழந்து வருகிறது.

சந்தம்
சந்தம் என்ற சொல்லுக்கு அழகு, ஒலியின் வண்ணம் என்று பொருள் குறிப்பிடப்படுகின்றது. ஓசை அலை போல் மீண்டும் மீண்டும் சந்திப்பதால் இதற்குச் சந்தம் என்ற பொருள் வந்தது போலும். “சந்தஸ்” என்ற வடசொல்லின் திரிபாகவும் இருக்கலாம். இதனைத்தான் தொல்காப்பியர் “வண்ணம்” என்று வரையறை செய்கின்றார்.

வண்ணம்
வண்ணம் என்பது ஓசையின் நிறம் (Tonal Colour) என்று பொருள்படும். இது இருபது வகைப்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் கூறிய செய்யுள் உறுப்புகள் 34இல் வண்ணமும் ஒன்று என்று வகைப்படுத்தியுள்ளார். இவ்வண்ணங்கள் மூன்று வகைப்படும். நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம்.

குறில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வருவதனைத் குறுஞ்சீர் வண்ணம் என்கின்றார்.
“பொழில் தரு நறுமலரே புதுமணம் விரிமணலே” -(சிலம்பு 7:14)

நெடில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வருதனை நெடுஞ்சீர் வண்ணம் என்கின்றார்.
“வாராயோ தாயே – பாதம் தாராயோ நீயே” – (கீர்த்தனை)

நெட்டெழுத்தும், குற்றெழுத்தும் சார்ந்து வருவதனைச் சித்திர வண்ணம் என்று குறிப்பிடுகின்றார். “பாதி மதிநதி போது மணிசடை” – திருப்புகழ்

மேலும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த எழுத்துகள் அதிகம் பயின்றுவரும் தன்மையை வைத்து வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம் எனவும் வகைப்படுத்துகின்றார்.

எழுத்தளவு
தமிழ்ச் சந்தங்கள் எழுத்தளவு கொண்டவை.
ஈரெழுத்து அளவுச் சொற்கள்:
மூவெழுத்து அளவுச் சொற்கள்:
நான்கெழுத்து அளவுச் சொற்கள்:
தமிழிசைக் களஞ்சியம் இவற்றில் மூன்று எழுத்தளவும் நான்கு எழுத்தளவும் தென்னக இசையின் அடிப்படை எனக்குறிப்பிடுகின்றது. அதிகளவிலான சந்த வண்ணச் சொற்கள் தேவாரத்தில் காணப்படுகிறது. “தென்னா” என்று அழைக்கப்படுகின்றன. இச்சொற்களின் திரிபாக, தன, தானா என்ற சொற்கள் சந்த இசைச் சொற்களாக மருவி வந்திருக்கின்றன எனலாம்.

கட்டளை
தேவாரப் பாடல்களை இன்ன கட்டளையில் பாட வேண்டும் என்று உமாபதி சிவாசாரியார் திருமுறை கண்ட புராணத்தில் கூறுகிறார். இங்கு கூறப்படும் கட்டளையைச் சந்தம் என்று கூறலாம். பாடலில் வரும் எழுத்தோசை அளவுக் கூறுகளைக் கட்டளை என்பர். இயல் தமிழில் கட்டளைக் கலித்துறை, கட்டளைக் கலிப்பா என்ற பாவகைகள் உள்ளன. இவை எழுத்து எண்ணிப் பாடப்படும் பாடலாகும். இயல் தமிழில் வரும் கட்டளை எழுத்து எண்ணிக்கை உடையது.

இசைத்தமிழில் வரும் கட்டளை எழுத்தோசை பற்றியதாகும்.

செய்யுளில் வரும் கட்டளை யாப்புப் பற்றியது. இசையில் வரும் கட்டளை தாளம் பற்றிய சந்தமாகும்.

இசைத்தமிழில் கட்டளைய கீதம் என்ற இசை உருப்படி பற்றி அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். (சிலம்பு 3:10-11) தாளத்திற்கு ஏற்ப எழுத்தசைவுகளை அமைத்துக் கட்டிய சிறு பாடலைக் கட்டளைய கீதம் என்பர்.

தற்காலத்தில் இதனைக் கீதம் என்று அழைக்கின்றனர். இது தாளத்திற்கேற்ற எழுத்தளவு உடைய உருப்படியாகும். இவ்வாறு தாள அனுமானத்துடன் எழுத்துகளைக் காட்டும் பொழுது நெடிலைக் குறிலாகவும் குறிலை நெடிலாகவும் ஒலிக்கும் சூழலும் தோன்றும். இங்கு, தாளச் சந்த அமைதியே முக்கிய இடம் பெறும்.

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதான
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணி
இதில் கைத்தல என்ற சொல்லின் முதலில் வரும் கை என்பது நெடிலாகும். ஆனால் சந்தத்தில் இரு மாத்திரை பெறும் நெடிலாக இடம் பெறாமல் ஒரு மாத்திரை பெறும் குறிலே சந்தமாக வந்துள்ளது. இசை மரபில் எழுத்துகள் தத்தமக்குரிய மாத்திரை அளவிலிருந்து மாறி ஒலிப்பதும் ஒற்றெழுத்துகள் நீட்டி ஒலிப்பதும் ஆகிய மரபுண்டு என்று தொல்காப்பியரும் கூறியுள்ளார்.

அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல்.எழுத்து. 33)

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் : தொடர் 51-60
சிறீ சிறீஸ்கந்தராஜா
16/01/2015 – 20/03/2015

தொகுப்பு – thamil.co.uk