தர்ப்பைப்புல் Halfa Grass

தர்ப்பைப்புல்-thamil.co.uk

தர்ப்பை ஒரு வகைப்புல். இதை எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம் என்று எண்ணுவது தவறு. இது தானாக வளர வேண்டும். அனேகமாக இந்தியா முழுவதும் இது விளைகிறது.

ஒரு புல்லைக் கொண்டு செய்யும் தர்ப்பம் இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டு செய்யப்படும் தர்ப்பம் தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள் கொண்டு செய்யப்படும் தர்ப்பம் அமாவாசை தர்ப்பணம் போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட தர்ப்பம் கோயில் நடைமுறைகளுக்கும் பயன்படுகின்றது. அக்னி குண்டத்துக்கு நாலுபக்கமும் தர்ப்பை வைக்கப் படுகிறது.

சுத்தி புண்யாஹவாசன நேரத்தில் கையில் பிடித்துள்ள தர்ப்பையின் நுனி தண்ணீர் பாத்திரத்தில் பட்டு அதிர்வுகளை மந்திர உச்சாடணத்தோடு சேர்ந்து நீக்குகின்றன. தர்ப்பைப்புல்லை எடுப்பதற்கும் சில மந்திரங்கள் உண்டு. பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையன்றுதான் இந்த புல்லை சேகரிக்க வேண்டும். தர்ப்பையைக் கொண்டே வேத காலங்களில் தவறான அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தினார்கள் என்பது இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு தெரிய வேண்டிய ஒன்று.

தர்ப்பைதர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது.

சூரிய கிரகணத்தின்போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்று நோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம்.

இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம்.

தர்ப்பை.சுபகாரியங்களோ அல்லது மற்ற காரியங்களோ எது செய்ய வேண்டுமானாலும், தர்ப்பை அணிவது இந்துமதத்தின் மரபு.

தர்ப்பையை வலதுகை மோதிர விரலில் அணியவேண்டும். இதற்காக தர்ப்பையில் மோதிரம் போன்ற வளையம் செய்யப்பட்டிருக்கும். தர்ப்பையின் நுனிப்பகுதிதான் முக்கியமானது. இது மின்காந்தப் பாதையில் வரும் தடைகளை நீக்குகிறது. ஒரு டாக்டர் தர்ப்பையை பரிசோதித்தபோது அது அறுபது சதவிகித எக்ஸ்ரே கதிர் வீச்சுகளை வாங்கிக் கொள்வதைக் கண்டாராம். ஆகவே, தர்ப்பை மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தர்ப்பை அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது.

தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.

மருத்துவகுணங்கள்

* தர்ப்பைப்புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
* பாலும், சிறுநீரும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
* சிறுநீரக வலிக்குக் குணமளிக்கிறது.
* பாம்புக் கடி விஷத்தை அகற்றுகிறது.
* தர்ப்பை புல் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை சுத்தம் செய்கிறது.
* சிறநீரக கற்களைக் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.
* உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது.

தர்ப்பைப்புல்இது சிறுநீரக நோய் நிவாரணி என்று வேதங்கள் கூறுகின்றன. உயிரைக் குடிக்கும் நோய்களில் சிறுநீரகங்கள் செயலிழப்புதான் – kidney failure  மோசமானது. ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தர்ப்பை புல்லை பதப்படுத்தி மருந்தாகத் தருகின்றனர். அதனால் டயாலிஸிஸ் (இந்த அழுக்கை செயற்கை முறையில் எந்திரம் மூலம் இரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் டயாலிஸிஸ் எனப்படும்) செய்யத் தேவையில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.

50 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் இறைவனை வணங்கிவிட்டு வைத்தியர் தரும் தர்ப்பைப்புல் மருந்தைத்தான் பயன்படுத்தியதாக வேதங்கள் கூறுகின்றன. இந்து சமுதாயத்தில் நன்றியைச் செலுத்தும் பழக்கம் அதிகளவில் இருப்பதால் தனக்கு வாழ்வளித்த தர்ப்பைப்புல்லை வணங்கும் பழக்கம் உள்ளது.

தர்ப்பையின் மகிமை, இந்துக்களின் நம்பிக்கை
தர்ப்பையை தேவகாரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்கள். தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள்.

தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள். எல்லா விதமான ஆசனங்களையும்விட தர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள்.

பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், கப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும்.

இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் முதலியவற்றில் கையில் தர்ப்பை மோதிரம் போட்டுக் கொள்ளாமல் செய்வது உரிய பலனைத் தராது என்பார்கள்.

கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடமாமலிக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள். தர்ப்பை மோதிரத்தை அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்
‘தருப்பை’ என்பது ஒருவகையான நீளமான புல் ஆகும். இதனைக் கொண்டு கூரைவேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனா. பெரும் பாணாற்றுப்படை என்னும் நூலில் சங்க இலக்கியப் பெயராக தருப்பை எனவும், உலக வழக்குப் பெயராக தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல் எனவும் வழங்கப்படுகிறது. இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும்.

தர்ப்பண வழிபாடு
முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் வந்து சேரும் என்றும் அந்த வழிபாட்டை மறந்து விட்டால் ‘மறந்ததை மானயத்தில் விடு’ என்றும் சொல்மொழிகள் இந்த மாதத்தில் வரும் மகாளய பட்ச அமாவாசையின் சிறப்பை எடுத்துரைக்கின்றன. மகா+ளயம்- என்பதற்கு மகா-பெரியவர்கள், மூத்தவர்கள் உயிர்நீத்தவர்களாகி விட்டவர்கள் லயம் – நினைவு கூறும் நாட்கள் என்று பெயர்.

இந்த புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலமாக வருவதால் எம லோகத்தில் இருக்கக் கூடிய பித்ருக்களை எமதர்மன் 15 நாட்களுக்கு தற்காலிகமாக விடுவித்து அவரவர்களின் குடும்பத்தினருடன் தங்கி விட்டு வரும்படி அனுப்புவதாக ஐதீகம். இந்த புனித தினங்கள் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாளான தேய்பிறை பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரை வருகிறது.

அப்பா, அம்மா இல்லாதவர்கள் அவர்களுக்கான திதி அன்று தர்ப்பண பூஜையை எளிய முறையில் செய்யலாம். பொதுவாக, எல்லா அமாவாசை திதி நாளிலும் தர்ப்பணம் தருபவர் அளிக்கும் எள் மற்றும் நீரை அக்னி தேவனின் மனைவியாகிய ஸ்வதா தேவி பெற்றுக் கொண்டு வானத்தில் உள்ள அவரவர்களது பித்ருக்களுக்கு கொடுக்கிறாள்.

மகாளய பட்ச அமாவாசையில் மட்டும் சூரியன் சந்திரன் சஞ்சரிக்கும் உலகுக்கு வருவதால் ஸ்வதா தேவி எல்லாரது முன்னோர்களையும் சந்திக்கும்படி ஆகிறது. ஒருபட்சம் என்பதற்கு 11 திதிகள் உடைய நாட்கள் என்று பெயர்.

தர்ப்பண பூஜையில் எள் தர்ப்பை பயன்படுத்துவது ஏன்?
இந்த உலகத்தில் ஆயிரம் வகை புற்கள் இருக்கின்றன. ஆனால், தர்ப்பை புல்லை மட்டும் வழிபாட்டிற்குப் பயன்படுத்துவது ஏன் என்று அறிதல் வேண்டும். எள் என்னும் கருமை நிற விதை திருமாலின் வியர்வைத் துளியிலிருந்து வெளிவந்த பரிசுத்தமான தானியம் என்பது வேதக்கூற்று. பித்ருக்களுக்கு செய்யப்படுகிற தர்ப்பன வழிபாட்டில் கருமைநிற எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மாளய பட்சம் வருவதற்கு 15 நாட்கள் முன்னதாகவே ஒரு வீட்டின் பானையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள எள்ளானது பித்ரு வருவதைச் சொல்ல நிமிர்ந்து நிற்பதாக நம்பப்படுகிறது. தர்ப்பை புல் ஆகாயத்தில் தோன்றியது என்று கூறுவர். இதில் ஒரு முனையில் பிரம்மாவும், மறு முனையில் சிவபெருமானும், நடுப்பகுதியில் திருமாலும் வாசம் செய்வதாகக் கூறுவர்.

தர்ப்பைக்குக் குசம், திருப்புல், தெய்வப்புல் அமிர்த வீர்யம் என்ற பெயர்கள் உண்டு. நிலத்தில் வாடாமல் நீரில் அழுகாமல் விதை, செடி, பதியம் இல்லாமல் சுயமாகத் தோன்றுவதே தர்ப்பை. ஆன்மா தோற்றம் போன்று புதிரான தர்பை தானே தோன்றி வளர்வதால் தர்ப்பையில் ஆன்மாவை ஆவாகனம் செய்து வழிபடுவர்.

உஷ்ணம் மிகுந்த தர்ப்பை அமாவாசையிலும் கிரகண காலத்திலும் அதிக வீர்யம் உடையதால் தர்ப்பணம் இட பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் தர்ப்பண பூஜைக்கு இதை பயன்படுத்துவர். மகாளய தர்ப்பண நாட்களில் நடுவில் வரும் பரணி நட்சத்திர நாளை மகா பரணி என்று சிறப்பித்து பித்ரு வழிபாடு செய்வர்.

புரட்டாசி மாத மக நட்சத்திரம், திரயோதசி சேர்ந்து வரும் புனித நாளை சுஜச்சாயை என்பர். இதுவும் பித்ருக்களுக்கு விசேஷ நாளாகிறது. நடுவில் வருகின்ற அஷ்டமி திதியை மத்யாஷ்டமி என்பர். துர் மரணம் வழியில் மறைந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றதாகச் சொல்லப்படுகிறது. சன்னியாசியாகி இறந்தவர்களுக்கான சன்னியாஸ்த மகாளயம் அக்டோபர் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்று அவர்களை வழிபட்டால் நிறைந்த பலன்கள் கிடைக்கும்.

மகாளய தர்ப்பண வழிபாடு
தன் வீட்டில் உயிர் நீத்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து படத்தில் குறிப்பிட்டபடி தர்பை சட்டம் போட வோண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க!

தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்த பவருக்கு தர்பணம் செய் கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.

மூன்றாவதாக எனது பாட்டனார்க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்குத் தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவ ருலக வாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக; என்று 3 முறை கூறுக. இது தான் எளிய மாயை தர்ப்பண பூஜை முறை.பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றுக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு நெற்றி கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து என்னை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டு வரவேண்டும்.

-Meera Tharshan