வீட்டுத்தோட்டம்

தண்டுக்கீரை வளர்ப்பு தண்டுக்கீரை.thamil.co.uk
கீரைகளில் தண்டும் கீரையும் தனித்தனியாக சமையல்களில் பயன்படுத்துவது தண்டுக்கீரையை மட்டும்தான். ஆனால் தண்டுக்கீரை ஆடி மாதங்களில் மட்டுமே மார்க்கெட்டுகளில் கிடைக்கும். மற்ற கீரைகளை 1 முதல் 2 மாதங்களில் அறுவடை செய்யலாம். தண்டுக்கீரை அறுவடைக்கு கூடுதலாக சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். அதனால் வியாபார நோக்கத்தில் அது உதவாது. அதனால்தான் ஆடிமாதங்களில் கூழ் சமைக்கும்போது கூட சமைக்கப்படும் காரக்குழம்பில் போடுவதற்காக தண்டுக்கீரை விற்பனை செய்கிறார்கள். ஆனால் வீடுகளில் தொட்டிகளில் வளர்க்க ஏற்ற கீரை வகையில் இதற்கு முதலிடம் தரலாம்.

தண்டுக்கீரை-thamil.co.ukசிறுகீரை, முளைக்கீரை உள்ளிட்ட கீரைகள் முளைத்து வளர்ந்தவுடன் அறுவடை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இவற்றின் பயன்பாடு ஒரே ஒரு முறை மட்டுமே. இலைகளைக் கிள்ளிக் கொண்டு, தண்டை விட்டால் பெரிதாக இலைகள் முளைத்து பயன்தராது. ஆனால் நன்கு வளர்ந்த தண்டுக்கீரை இலைகளை பறித்துக் கொண்டு, தண்டை மட்டும் விட்டால் ஒரே வாரத்தில் இலைகள் முளைத்து செழித்து வளர்ந்து நிற்கும். இப்படி ஒரே செடியில் ஆறு முறைக்கும் குறையாமல் இலைகளைப் பறிக்கலாம்.

தண்டுக்கீரையின் இலைகள் பெரிதாக இருக்கும் என்பதால் நான்கைந்து செடிகள் வைத்தாலே போதுமானது. மூன்று பேர் அடங்கிய குடும்பத்திற்கு வாரம் ஒருமுறை தண்டுக்கீரை மசியல் செய்யுமளவிற்கு தண்டுக்கீரைச் செடியில் அறுவடை செய்யலாம்.

தண்டுக்கீரை விதைகளை வாங்கி, நல்லமண் உரமிட்ட தொட்டிகளில் விதைத்தால் இரண்டு நாட்களில் விதைகள் முளைவிட ஆரம்பித்திருக்கும். ஒரே மாதத்தில் அவை செடிகளாக வளர்ந்து பலன் தர ஆரம்பிக்கும். காலை, மாலை மிதமான தண்ணீர் ஊற்றினால் போதும். போதிய வெளிச்சம் இருப்பது நலம்.

முதல் மாதத்திலிருந்து இலைகளை மட்டும் பறிக்கலாம். அடுத்த இரண்டு மாதத்திற்கு வாரம் ஒரு முறையென இலைகளைப் பறிக்கலாம்.

புதினா-thamil.co.ukபுதினா – Mint-வளர்ப்பு  மணமும் குணமும் மிக்க ஒரு கீரை புதினா.  நகரங்களிலும் கிராமங்களிலும் புதினாவை எளிதாக வளர்க்கலாம்.

தொட்டிகளில் வளர்ப்பதாயின் மண் தொட்டி/ சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, இலைகள் கிள்ளிய புதினா கீரையின் காம்பு என்பன தேவை. முற்றிய கீரைகளின் தண்டுகள்தான் முளைப்பு திறன் உள்ளவை.

நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை கொத்தி சீர் செய்ய வேண்டும். பிறகு இயற்கை உரத்தை தூவி விடுங்கள்.  சீர் செய்த மண்ணில் புதினா காம்புகளை 2 அங்குலத்திற்கு நட்டுவிட்டு முளைப்பதற்கு ஏதுவாக நீர் தெளித்து விடுங்கள்.  பராமரிப்பு என்று பெரிதாக நீங்கள் மெனக்கெட தேவையில்லை. காலை, மாலையில் நீர் ஊற்றி வந்தால் போதுமானது.

சரியான நிழலும் சூரிய ஒளியும் தண்ணீரும் கிடைக்கும் பட்சத்தில் மூன்று வார காலத்தில் புதினாவை அறுவடை செய்ய முடியும்.  4 தொட்டிகளில் வைத்தால் 2 வாரத்துக்கு ஒரு முறை, 2 கட்டு கீரைகளை அறுவடை செய்யலாம். நிலத்தில் நட்டால் அறுவடை இன்னும் கூடுதல் ஆகும்.

பொன்னாங்காணி கீரை-thamil.co.ukபொன்னாங்காணி கீரை வளர்ப்பு

பொன்னாங்காணி வளர தண்ணீர் அதிகமாகத் தேவை என்பதால், மழைக்காலத்தில் நிரம்பி வழியும் கண்மாய், ஏரிக் கரைகளில் இந்தக் கீரை வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கிராமங்களில் கிணற்றைச் சுற்றிலும் இந்தக் கீரை வளர்ந்திருக்கும். பொன்னாங்காணி மிகுந்த மருத்துவ குணம் உள்ளது. கண்பார்வைக்கும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது நல்லது. இத்தனை குணம் மிகுந்த இதை நம் வீட்டிலேயே வளர்க்கலாம்.

பொன்னாங்காணி கீரை--thamil.co.uk

பொன்னாங்காணி கீரையை வாங்கி, கீரைகளை கிள்ளிக் கொண்டு, தண்டை மட்டும் எடுத்து வையுங்கள். சற்றே பெரிய தண்டுகளைத் தேர்ந்தெடுத்து மண் நிரப்பிய தொட்டிகளில் நட்டு வையுங்கள். மூன்று நாட்களில் தண்டுகளில் வேர் பிடித்து இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும்.

சற்று கூடுதலாக தண்ணீர் விடுங்கள். சூரிய ஒளி நன்றாக விழுந்தால் தண்டு நன்றாக துளிர்க்கும். ஒரு மாதத்தில் கீரைகளை கிள்ளி சமைக்கப் பயன்படுத்தலாம். கீரைகள் கிள்ள கிள்ள துளிர்த்துக் கொண்டே இருக்கும். குறைந்தது 10 முறை இப்படி பயன்படுத்தலாம். இதுவே நிலத்தில் நட்டால் இன்னும் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

மிளகாய்ச் செடி-thamil.co.ukமிளகாய்ச் செடி வளர்ப்பு

மிளகாய் தேவை இல்லாத சமையலே இல்லை எனலாம். சமையலுக்கு ஒன்றிரண்டு மிளகாய்கள் தான் தேவையாக இருக்கும். அந்தத் தேவையை நாமே நம் வீட்டில் மிளகாய்ச் செடி வளர்ப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.

உரங்கள் இட்டு வைத்திருக்கும் தொட்டி(நடுத்தரமான அளவு தொட்டி) மண்ணைக் கிளறி, 35-40 விதைகளைத் தூவுங்கள். விதைகள் 5 நாட்களில் முளைத்து, வளர ஆரம்பிக்கும். 45 நாட்களில் மிளகாய் நாற்றுகள் தயாராகி விடும். அந்த நாற்றுக்களைப் பிடுங்கி உரமிட்ட தொட்டிகளில் ஒரு மிளகாய்ச் செடி--thamil.co.ukதொட்டியில் இரண்டு செடிகள் வீதம் நடவேண்டும். சரியான நிழலும் சூரிய ஒளியும் தண்ணீரும் கிடைக்கும் பட்சத்தில் நட்ட 30 நாட்களுக்குள் பூக்கள் வர ஆரம்பிக்கும். அடுத்த 15 நாட்களில் மிளகாய் காய்க்க ஆரம்பிக்கும்.

மிளகாய் செடிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும்போது 1 லிட்டர் தண்ணீரில் 30 மில்லி லிட்டர் வேப்பெண்ணெய், சிறிதளவு சவர்க்காரம் கலந்து இலைகள் மீது தெளித்துவிடுங்கள். இதுதவிர காலை, மாலையில் நீர் ஊற்றி வருவது அவசியம்.

தொட்டியில் நட்ட நாற்று வளர்ந்து 60 நாட்களில் மிளகாய் காய்க்க ஆரம்பிக்கும். 3தொட்டிகளில் நட்ட செடி மூலம் 145 நாட்களுக்கு மிளகாய் பறிக்கலாம்.

கத்தரிச்செடி-thamil.co.ukகத்தரிச்செடி வளர்ப்பு
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான உணவுகளையும் கத்தரிக்காயை வைத்து சமைக்கலாம். இரும்புச் சத்தும் கல்சியமும் கொண்டது கத்தரிக்காய். வழுதுணங்காய் என்று சங்க இலக்கியங்களில் எழுதப்பட்ட இந்தக் காய், நம் மண்ணுக்கே உரித்தான காய் வகை.

உரங்கள் இட்டு வைத்திருக்கும் தொட்டி(நடுத்தரமான அளவு தொட்டி) மண்ணைக் கிளறி, 35-40 விதைகளைத் தூவுங்கள். விதைகள் முளைத்து, வளர ஆரம்பித்த 30 நாட்களில் கத்தரி நாற்றுகள் தயாராகி விடும். அந்த நாற்றுக்களைப் பிடுங்கி உரமிட்ட தொட்டிகளில் ஒரு தொட்டியில் இரண்டு செடிகள் வீதம் நடவேண்டும்.

கத்தரிச்செடி--thamil.co.ukசரியான நிழலும் சூரிய ஒளியும் தண்ணீரும் கிடைக்கும் பட்சத்தில் நட்ட 30 நாட்களுக்குள் பூக்கள் வர ஆரம்பிக்கும். அடுத்த 30 நாட்களில் கத்தரிக்காய் காய்க்க ஆரம்பிக்கும்.

கத்தரி நோய்தாக்குதலுக்கு உள்ளாகும். நோயுள்ள செடிகள் தோட்டத்தில் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது நல்லது. வெள்ளைப்பூச்சி தாக்குதல் இருக்கும் இதற்கு இயற்கை முறையில் தீர்வு காணுங்கள். இதுதவிர காலை, மாலையில் நீர் ஊற்றி வருவது அவசியம்.

தொட்டியில் நட்ட 2 மாதத்தில் கத்தரி காய்க்க ஆரம்பிக்கும். 4 தொட்டிகளில் நட்ட செடி மூலம் 3 பேர் அடங்கிய குடும்பத்துக்கு வாரம் இருமுறை குறைந்தது 5 காய்கள் பறிக்கலாம்.

தக்காளி செடி-thamil.co.ukதக்காளி செடி வளர்ப்பு

அத்தியாவசிய உணவாகிவிட்ட தக்காளியை வீட்டிலேயே வளர்க்கலாம். இரண்டு தக்காளிச் செடிகள் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மூன்று பேர் அடங்கிய ஒரு குடும்பத்தின் தக்காளி தேவையை தீர்த்து வைக்கக்கூடியவை. முதலீடு என்று சொன்னால் தொட்டி வாங்க ஆகும் செலவு மட்டுமே. அதையும் மறுபடி மறுபடி பயன்படுத்த முடியும். உண்மையான முதலீடு உங்களுடைய நேரம்தான். ஒரு நாளின் சில நிமிடங்களை ஒதுக்கி, உங்கள் வீட்டின் தேவைக்கான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்யலாம். மனஅமைதியைத் தேடி நீங்கள் எங்கேயும் போக வேண்டாம் என்பது இதில் கிடைக்கும்

தொட்டிகளில் வளர்ப்பதாயின்  மண் தொட்டி/ சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, தக்காளி விதைகள் என்பன தேவை.  நிலத்தில்வளர்ப்பதாயின் வைக்கும்முன் நிலத்தை கொத்தி சீர் செய்ய வேண்டும். பிறகு இயற்கை உரத்தைத் தூவி விடுங்கள்.

தக்காளி விதைகளை இயற்கை விதை அங்காடிகளில் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது நன்றாகப் பழுத்த நாட்டுத் தக்காளிகளை வாங்கி அதிலிருக்கும் விதைகளைப் பயன்படுத்துங்கள். மண்கலந்து சீராக்கிய ஒரு தொட்டியில் மண்ணைக் கீறி விதைகளைத் தூவி விடுங்கள். தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுங்கள். செடிகள் முளைத்து நான்கைந்து நாட்களில் முளைக்க ஆரம்பித்துவிடும்.

தக்காளி செடி--thamil.co.ukதக்காளிச் செடிகள் முளைத்து அரை அடி வளர்ந்ததும் செடிகளை மண்ணோடு பறித்து, இரண்டு இரண்டு செடிகளாக சேர்த்து தனித்தனி தொட்டிகளில் வைக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் செடிகள் நன்றாகக் கிளைத்து மொட்டுக்கள் வைக்க ஆரம்பிக்கும். அடுத்த மாதத்தில் பூக்கள் காய்களாக மாற ஆரம்பிக்கும். மூன்றாவது மாதத்திலிருந்து தக்காளிகளை அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு என்று பெரிதாக நீங்கள் மெனக்கெட தேவையில்லை. காலை, மாலையில் நீர் ஊற்றி வந்தால் போதுமானது. 4 தொட்டிகளில் வைத்தால் 3 மாதத்திலிருந்து வாரம் அரை கிலோ தக்காளியை அறுவடை செய்யலாம். நிலத்தில் நட்டால் அறுவடை இன்னும் கூடுதலாக கிடைக்கும்.

-FOURLADIESFORUM