நத்தைச்சூரி – மருத்துவ குணங்கள்

நத்தைச்சூரிமூலிகையின் பெயர்  –  நத்தைச்சூரி
வேறு பெயர்கள் –  குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி, தொலியாகரம்பை
ஆங்கிலப் பெயர்    –   Shaggy button weed
தாவரவியற் பெயர் – Spermacoce hispida

வளரும் தன்மை –  இவை இந்தியா முழுவதும் காணப்படும் மூலிகையாகும். குறிப்பாக தமிழகத்தில் மணற்பாங்கான இடங்களில் அதிகம் வளர்கின்றது. இது பூண்டு வகையைச் சார்ந்தது.

நான்கு பட்டையான தண்டுகளையும் எதிரடுக்கில் அமைந்த காம்பற்ற இலைகளையும், மிகச் சிறிய பூக்களையும் கொண்டதுதான் நத்தைச்சூரி.

பயன்படும் உறுப்புக்கள்  –  வேர் மற்றும் விதை

வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது

விதை, உடல் சூட்டைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். சீதபேதி, பெருங் கழிச்சலைப் போக்கும்.

நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டு உடல் தேற நத்தைச்சூரியின் விதையைப் பொடித்து தினமும் 1 கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும். இதனால் நோயின் தாக்கம் குறைவதுடன் உடலும் வலுப்பெறும்.

நத்தைச்சூரி-thamil.co.ukநத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1கரண்டிஅளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேற்றி, சிறுநீரகக் கல்லலைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். வெள்ளைப்படுதலைக் குணமாக்கும்.

நத்தைச் சூரியின் விதையைப் பொடியாக்கி சமஅளவு கற்கண்டுப்பொடி கலந்து காலையும், மாலையும் 1கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் வெப்பத்தினால் உண்டான வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் நீங்கும்.

10 கிராம் நத்தைச் சூரி வேரை காயவைத்து பொடியாக்கி பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.

நத்தைச்சூரி வேரை இடித்து 200 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி தினமும் 50 மி.லியாக நாள் ஒன்றுக்கு மூன்றுவேளை குடித்துவர காய்ச்சல் மற்றும் நோயின் தாக்கம் குறையும்.

நத்தைச்சூரி தைலம்
நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னிவேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளாவேர், பாகல் வேர், வேப்பம்பட்டை, கடுக்காய், மிளகு, வெள்ளுள்ளி, வசம்பு, திப்பிலி, குப்பைமேனி, துத்திவேர் இவற்றை சம அளவு எடுத்து இடித்து 1 லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு அடிக்கடி உடலில் தேய்த்து வந்தால் சரும பாதிப்பு நீங்குவதுடன் உடல் சூடு தணியும். தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

 

எதிரிகள் அஞ்சி நடுங்கி மிரண்டு ஓட மூலிகை காப்பு ரட்சை (நத்தைச்சூரி மூலிகை)

Spermacoce hispidaஉனக்கென்ன சூரிய கிரணந்தன்னில்
உதயமாம் சூரிவேர் காப்புக் கட்டி
எனக்கென்ன உபசரித்து வேரை வாங்கி
எந்திரமாய் வெள்ளி செம்பில் பொதித்து
தனக்கென்ன எதிரி வந்து தாக்கும் போது
தாக்குவாய் மணிகட்டிச் சிங்கம் போல்
உனக்குமவன் தோற்றோடிப் போவான்
உனைக் கண்டால் சர்ப்பம் போல் ஒடுங்குவானே
மச்சமுனி – 800

சூரிய கிரகணம் அன்று கிரகணம் பிடிக்கும் போது நத்தைச்சூரி மூலிகைக்கு காப்புக் கட்டி, சாப நிவர்த்தி செய்து, பலி கொடுத்து வேரை பறித்து வெள்ளி, செம்பு இரண்டையும் சேர்த்து உருக்கி தாயத்து போல் செய்து அதனுள் நத்தைச்சூரி வேரை வைத்து மூடி வலதுகை புஜத்தில் காப்பு ரட்சையாக கட்டிக் கொள்ளவும்.

நம்மைக் காணும் எதிரிகள் அஞ்சி நடுங்குவர்.பருந்தைக் கண்ட பாம்பைப்போல் அடங்கி ஒடுங்குவர்.சண்டை செய்ய நேரிட்டால் சிங்கத்தைக் கண்டது போல் மிரண்டு ஓடிப் போவான்.

-சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்

 

நத்தைச்சூரியில் இரண்டு வகைகள் உண்டு. அவை நத்தைச்சூரி மற்றும் நத்தைவராளி. இவை ஆண் மற்றும் பெண் செடிகள் ஆகும். நதைச்சூரியின் அருகில் ஒரு நத்தையை வைக்கும் போது அந்த செடி நத்தைச்சூரி என்றால் நத்தையும் ஓடும் தனித் தனியாக கழன்றுவிடும். அதுவே நத்தைவராளி எனில் நத்தையின் ஓடு சில்லு சில்லாக உடையும். சித்தர்கள் பயன்படுத்தியது நதைச்சூரியே, நத்தைவராளி அல்ல.

நதைச்சூரியின் காய் நத்தை வடிவில் இரு கொம்புகளை கொண்டது. இலை ஒரு அங்குல நீளத்தில் அரை அங்குல அகலத்தில் வட்டமான சுனையுடன் அதில் முள்களும் இருக்கும். இது ஒரு குத்து செடி வகையாகும்.

நதைச்சூரியை வெள்ளி அல்லது தங்க தாயத்தில் அடைத்து கட்டிக்கொள்ள நாம் செய்யும் அனைத்து காரியங்களும் உடனே வெற்றியாகும். தொழில் வியாபாரங்களின் மூலம் மிகப் பெரிய தன வசதிகளை உண்டாக்கும். வாழ்வில் வெற்றி மேல் வெற்றிகளை தரும்.