இசைத்தமிழின் தொன்மை – அகத்திய முனி : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 13

அகத்தியர் : பாகம் 1

கமண்டலத்துடன் அகத்திய முனி!!

கமண்டலத்துடன் அகத்திய முனி!!

அகத்தியர் தோற்றம் : இவரது தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகின்றது.

தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார்.

கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.

தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.

அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.

தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான்.

ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள்.

அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.

இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.

தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார்.

எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது.

அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர்.

இவரே “அகத்தியம்” எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை.

அகத்தியர் பற்றி கம்பரின் பதிவுகள் வருமாறு
என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான் – 47

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் -36

தழற்புரை சுடர்கடவுள் தந்த தமிழ் தந்தான். 41

கடலெல்லாம் உண்டு அவர்கள் பின்னர் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – 37

வாதாபிகன் வன்மைக் காயம் இனிது உண்டு அலகின் ஆரிடர் களைசைந்தான் – 38

விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39

வடாது திசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40

குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46

முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கினான். 56

சிறப்புப் பெயர்கள்
தமிழ் முனிவன் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
மாதவ முனிவன் (அதிக தவம் செய்ததால்)
மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)
குறுமுனி (குட்டையான உருவமைப்பு)
திருமுனி (உயர்வுக்குரியவர்)
முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)
அமரமுனிவன் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)
பொதியவரை முனிவன் (பொதிகைமலை)
குடமுனி (குடத்தில் பிறந்தவர்)

சித்த மருத்துவ அகத்தியர்
அகத்திய முனிவர் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது பாடல்களில் பயின்று வந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன.

அகத்தியர் எழுதிய நூல்கள்
அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 14

அகத்தியர் : பாகம் 2

agtiyarஅகத்தியர் பெருமானின் பூசை முறைகள்
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். பின் பின்வரும் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூற வேண்டும்.

தியானச் செய்யுள்
ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்

பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

நிவேதனம்
இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை பூசை செய்யவும்.

நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

அகத்திய முனிவரின் பூசா பலன்கள்
1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2. கல்வித்தடை நீங்கும்.
3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4. முன்வினை பாவங்கள் அகலும்.
5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும்.
9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

அகத்தியம்
அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது.

முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.

இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது.

தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும்.

அகத்தியரின் மாணவர்கள்
1. செம்பூண்சேய்
2. வையாபிகன்
3. அதங்கோட்டாசான்
4. அபிநயனன்
5. காக்கை பாடினி
6. தொல்காப்பியர்
7. வையாபிகன்
8. பனம்பாரனார்
9. கழாகரம்பர்
10. நத்தத்தன்
11. வாமனன்
12. துராலிங்கன்

அதங்கோட்டாசான்
முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில், புலி, மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப்புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்.

தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு.

இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.

அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு.  இவ்விடத்தின் அருகில் “பக்றுளி ஆறு” என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது.

தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த ‘கபாடபுரத்தில்’ நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள்.

கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக்குறுமுனி என்று அழைக்கப்பட்ட “அகத்தியர்” தலைமைதாங்கி நடத்தி வந்தார். கபாடபுரத்தில் “அகத்தியர்” தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு, முதல் தமிழ் இலக்கண நூலக இருந்தது “அகத்தியம்” என்னும் இலக்கண நூல் ஆகும்.

தமிழிசைப்பண்கள் : தொடர் 13,14
சிறீ சிறீஸ்கந்தராஜா
07/04/2016 – 08/04/2016

தொகுப்பு – thamil.co.uk