இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக தமிழர்களை துரத்திக்கொண்டிருக்கும் பேயை தேடி ஒரு பயணம்!…

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக தமிழர்களை துரத்திக்கொண்டிருக்கும் பேயை தேடி ஒரு பயணம்!…/em>

விழுதுகள் பரவி. காய்ந்த சருகுகள் உதிர்ந்து, அடர்ந்து படந்திருந்த அந்த ஆலங்காட்டில் ஒரு குளத்துக்கு அருகே சிவனுக்கும் காளிக்கும் நடனப் போட்டி துவங்கியது. வானத்தில் தோன்றும் இடி மின்னலைப் போல் இருவரும் மிக பயங்கரமாக ஆடிக்கொண்டே இருக்க, ஒரு இடத்தில் இடது காதில் சிவன் அணிந்திருந்த குண்டலம் கழன்று கீழே விழ, நடனத்தை நிறுத்தாமல் சிவன் தன்னுடைய ஒரு காலால் அதனை எடுத்து காதில் மாட்டிய அந்த நிகழ்வை பார்த்த காளி, ஒரு நிமிடம் திகைப்புற்று நின்று சிவனைப் பணிந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள். சிவன் இருக்கும் இடத்தை காலால் மிதிக்கக்கூடாது என்பதற்காக தன்னுடைய தலையால் இந்த இடத்திற்கு நடந்து வந்து இந்த நடனத்தை காண வந்தார் 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் “காரைக்கால் அம்மை”. தமிழக கோயில்களில் மட்டுமல்லாமல் வியட்நாம்,கம்போடியா, ஜாவா போன்ற பெரும்பாலான நாடுகளில் இருக்கும் நடராஜரின் அனைத்து சிலைகளிலும் அவரின் காலுக்கடியில் கையில் தாளக் கருவியை இசைத்தவாறு தவறாமல் இடம் பிடித்திருப்பார் இந்த அம்மை . சிவன் நடனமாடிய பஞ்ச சபைகளில் இரத்தின சபையான “திருவாலங்காடு” (திரு+ஆலங்காடு) என்ற ஊருக்கு தான் கடந்த வாரம் சென்றிருந்தோம். தேவார பாடல் பெற்ற கோயில்களில் மூவர் பாடிய கோயில் இது.

இறைவனை வணங்கிவிட்டு பூதகணம், கோஷ்ட தெய்வங்களை தேட ஆரம்பித்தோம், ஏமாற்றமே மிஞ்சியது, பைரவர் மட்டும் தான் சோழர்! மற்ற அனைவரும் புதியவர்கள், உள்ளிருக்கும் கட்டுமானம் சமீபத்திய நகரத்தார் கால கோயிலை போன்று இருந்தது, பழைய கோயில் கட்டுமானம் முழுவதும் அழிக்கப்பட்டு, கருவறையில் முன்பிருந்த கல்வெட்டுகள் தாங்கிய கற்கள் அனைத்தும் வெளிச் சுவரில் பதிக்கப்பட்டிருந்ததை காண வேதனையாக இருந்தது, அதுவும் வரிசையாக கூட அடுக்கப்படவில்லை. கோயிலை விட்டு வெளியே வந்து நாங்கள் முக்கியமாக காண வந்த “பழையனூர்” என்ற ஊருக்கு வழி கேட்டோம், நடந்து போகும் தொலைவு தான் என்று கைகாட்டிய திசையில் நடக்கத்துவங்கினோம்.
“பழையனூர் நீலியை” தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது, சிறு வயதில் நாம் திகிலுடன் கேட்ட பேய் கதைகளில் நீலிப் பேயும் முக்கிய பங்கு வகிக்கும், அனைத்து பேய் கதைகளும் வாய் வழிக் கதைகள் தான், ஆனால் இந்த பழையனூர் நீலி பேய் குறித்து தமிழ் நூல்கள் கூட குறிப்பு வழங்குகின்றது என்பது எவ்வளவு ஆச்சர்யமான செய்தி!. அப்படி என்ன தான் நடந்தது இந்த பழையனூரில்?
1508132_238493093022675_1925307934_n
அந்த இடத்தை நோக்கி நடந்தோம், உச்சி வெயில் தலை மீது தக தகக்க நடந்து சென்றுகொண்டே இருந்த அந்த பாதையின் இரு புறமும் , தான் நினைத்த அந்த காரியம் நல்லபடியாக நிறைவேறவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு தன்னுடைய தலையை தானே அரிந்து காணிக்கையாக்கும் “நவகண்ட’ சிலைகளை காண முடிந்தது. ஒரு கிலோ மீட்டர் நடந்த பிறகு அந்த இடத்தை வந்தடைந்தோம். நாங்கள் வந்து சேர்ந்த அந்த இடத்தில் தான் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அந்த பயங்கர சம்பவம் நடந்தேறியதாக அந்த பெயர்ப் பலகை அறிவித்தது.

பல இடங்களில் இந்த கதை பலவிதமாக சொல்லப்படுகின்றது. அதில் ஒரு கதையை மட்டும் நான் இங்கு சொல்கிறேன், காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. வணிக விஷயமாக வட நாட்டிற்கு செல்லும் போது அங்கு ஒரு பெண்ணை மணந்துகொள்வதால் தன் முதல் மனைவி நீலியை கொன்றுவிடுகிறான் அந்த வணிகன். நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். தன்னுடைய மறு ஜென்மத்தில் ஒருநாள் இந்த பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் வந்த போது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பிக்கிறாள். பயந்து ஓடி வந்த அவனை 70 பேர் கொண்ட பழையனூர் வேளாளர்கள் சபை அன்று இரவு அவர்கள் ஊரில் பத்திரமாக தங்க அவனுக்கு அடைக்கலம் அளித்தது, பழிவாங்கியே தீர வேண்டும் என்றெண்ணிய நீலி அழகான பெண் உருவமாக தன்னை மாற்றிக்கொண்டு கையில் ஒரு குழந்தையையும் ஏந்திக் கொண்டு அந்த ஊரை வந்தடைந்தாள் “இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று “நீலிக் கண்ணீர்” விட்டு கதறினாள் .(போலியாக அழுபவர்களை “நீலிக் கண்ணீர் வடிக்காதே” என்று கூறுவது இது தான்). அந்த 70 வேளாளர்கள் சபை அந்த இரவு அவனோடு அவளை தங்க சம்மதித்தது.

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. இவள் ஒரு பேய்! என்னை பழி தீர்ப்பதற்காக வந்திருக்கிறாள் என்று கூறி கதறினான்” ஆனால் அந்த ஊர் சபை கேட்கவில்லை, உங்கள் உயிரை காக்க நாங்கள் 70 பேர் இருக்கிறோம். உங்கள் உயிருக்கு நாங்கள் உத்திரவாதம், உனக்கு ஏதேனும் நேர்ந்தால் எங்கள் உயிரை விட்டு விடுகிறோம் என்று அங்கிருந்த கோயில் ஒன்றில் இறைவன் முன் சத்தியம் செய்து தந்து அவர்களை ஒரே வீட்டில் தங்கவைத்தனர், விடிந்ததும் வணிகன் பிணமாகக் கிடந்ததை பார்த்த வேளாளர்கள் வந்தது பேய் என்பதை அப்போது தான் உணர்ந்தனர். அவனது உயிர் போவதற்கு காரணமாக இருந்த தாங்கள் உயிரோடு இருக்ககூடாது என்றெண்ணி எழுவது பேரில் 69 பேர் தீயில் பாய்ந்து உயிரை விட்டனர்! வயல் வேலையாக கழனிக்கு சென்ற ஒருவன் இந்த செய்தி கேட்டு ஏர் கலப்பையால் கழுத்தை அரிந்து கொண்டு அங்கேயே உயிரை விட்டுவிடுகிறான்.

அந்த வணிகன் உயிரைக் காப்பதாய் அவர்கள் நின்று சத்தியம் செய்து கொடுத்த “சாட்சி பூதேஸ்வரர்” கோயில் இன்றும் உள்ளது, அதற்கு நேர் எதிராக 20 அடி தூரத்தில் தங்களின் வாக்கை காப்பாற்ற முடியாமல் தீப்பாய்ந்த அந்த 69 வேளாளர்களின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு பழங்காலத்தில் எழுப்பப்பட்ட நினைவு மண்டபம் ஒன்று உள்ளது, சிற்பங்களைப் பார்க்கும் போது அதில் சோழர் சாயலோ, பல்லவர் சாயலோ இல்லை, அது காலத்தால் முற்ப்பட்டதாகவே தோன்றுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த மண்டபமும் கோயிலும் சிதிலமடைந்து கிடந்த போது அதை சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி ஒருவர் சரி செய்து இருக்கிறார், அதை அன்றைய முதல்வர் “பக்தவச்சலம்” திறந்து வைத்திருக்கிறார்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தீப்பாய்ந்த அந்த 69 பேரையும் புகழ்ந்து சோழன், சேரன், பாண்டியன் ஆகிய மூன்று பேரும் இங்கு வந்து அவர்களின் தியாகத்தை போற்றி பாடியிருகிறார்கள் (யார் என்பதற்கு வரலாற்று சான்று இல்லை), திருஞானசம்பந்தர் தம் பதிகத்தில் “முனை நட்பாய் வஞ்சப்படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்டு அஞ்சும் பழையனூர்” என்று இந்த இடத்தை குறிப்பிட்டுள்ளார். பெரிய புராணம் எழுதிய சேக்கிழாரும் தன்னுடைய நூலில் இந்த நீலிக் கதையை விரிவாக எழுதி இருக்கிறார். எழுத்துச் சித்தர் பாலகுமாரன் இந்த கதையை தழுவி “புருஷவதம்” என்று நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார். “Haunted” என்ற வார்த்தையை விளக்கி காபி ஷாப்பில் அய்யன் பாலகுமாரன் பேசும் போதே இந்த தேடல் விதை போடப்பட்டது.

பழையாறை அரண்மனையின் மேல் மாடியில் தன்னுடைய அறையில் ராஜேந்திர சோழன் தங்கி இருந்த போது, திருவாலங்காடு கோயிலுக்காக இந்த பழையனூர் கிராமத்தை நிவந்தமாக கொடுத்தார் என்று திருவாலங்காடு செப்பேடுகள் தெரிவிக்கின்றது. தங்களுக்குள் சண்டை இட்டுக் கொண்ட சோழன் சேரன் பாண்டியன் கூட பகையை மறந்து வந்து போற்றிய இடம்.
1902931_238493346355983_1205983263_n

எல்லையில் இருக்கும் காளியை வணங்கியே சிவ வழிபாடு என்பது ஐதீகம். ரன்னர் பர்ஸ்ட் அல்லவா!!.பெண் என்பவள் ஒரு சக்தி அவள் வஞ்சிக்கப்பட தவறாய் பயன்படுத்தப்பட அவள் அழிக்கும் சக்தியாவாள். நியூட்டன் மூன்றாம் விதியின் உருவகம் நீலி கதை. பெண் திருப்பி பழிவாங்குவாள் என்ற பயம் தரும் விஷயமில்லை நீலி.தவறெனில் கண்டிக்காமல் துணை நிற்பவர்களையும் காலம் தண்டிக்கும் என்ற பாடம்.சத்தியம் சக்கரைப்பொங்கல் என அள்ளிச் சாப்பிடுவர்களுக்கு இந்த 70 வேளாளர்கள் நகைப்புப் பொருள்.நீங்கள் யாராய் இருப்பினும் உங்கள் தேடல் எதுவாயிருப்பினும் ஒருமுறை திருவாலங்காடு வாருங்கள் நீலி யார் என்று தேடுங்கள் எந்த பெண்ணுக்கும்/உயிருக்கும் நான் அறிந்தோ அறியாமலோ தீங்கு செய்ய மாட்டேன் என்று சாட்சி பூதேஸ்வர் முன் உறுதி கொள்ளுங்கள். கண்ணீரை துடைக்க கரம் நீட்டுங்கள். பெண்கள் கண்ணீர் அமிலம். அது அடாது செய்பவர்களை அழிக்கும் ஆனால் கண்ணீரை பரிகசிக்கும் நீலி உங்களுடன் இருப்பாள்.இரண்டாயிரம் ஆண்டு கடந்து தன் இருப்பை புருஷவதம் என்ற அய்யன் நாவல் மூலம் வெளிப்படுத்திய அந்த நீலி இனி உங்கள் சத்தியத்தால் இன்னும் மகிழட்டுமே.நம் மண்ணின் மூன்று மன்னர்கள் வணங்கிய இடத்தை நம் சத்தியம் நிரப்பட்டும்.

FB- உறையூரில் தாமரை