வாரத்தின் முதல் நாள் வியாழக்கிழமை! கடைசி நாள் வெள்ளிக்கிழமை!

வரியியல்வியாழபகவான் எனப்படும் தேவகுருவையே வாரத்தின் ஆரம்பமாகவும்; சுக்கிராச்சாரியார் எனப்படும் வெள்ளியையே வாரத்தின் கடைசியாகவும் கொண்டுதான், வாரத்தின் ஏழு நாட்களை வரிசைப்படுத்தினர்கள் பதினெண்சித்தர்கள்.

அதாவது மெய்யான இந்துமதப்படி வாரத்தின் ஏழு நாட்கள்
1. வியாழன் – தேவகுரு – வியாழபகவான் (Jupiter)
2. சனி – சனீசுவரன் – ( Saturn),
3. சூரியன் – ஞாயிறு – (Sun)
4. புதன் – புதனங்கிழவன் (Mercury),
5. செவ்வாய் – செவ்வாய்க்கிழவன் ( Mars)
6. திங்கள் – திங்களங்கிழவன் – சந்திரந் (Moon)
7. வெள்ளி – சுக்கிராச்சாரியார் – (Venus)
என்றிப்படித்தான், வாரத்தின் ஏழு நாட்கள் கணிக்கப்பட்டுக் கணக்கிடப்பட்டு வழக்காற்றில் இருந்திருக்கின்றன். இந்த வரிசைதான், மனிதனுடைய உள்ளங்கை அமைப்பை விளக்கும் ‘வரியியல்’ (The Palmistry) என்ற விஞ்ஞானத்தில் உள்ளது. அதாவது, கைரேகைப் பதிவு இலக்கணமும், விஞ்ஞானமும் இப்படியே உள்ளன.

மேற்படி வரியியல் விஞ்ஞான விளக்கத்தின் மூலம் பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதம் வாரத்தின் ஏழுநாட்களைத் தேவகுருவில், ‘வியாழக்கிழமை’ ஆரம்பித்து; அசுரகுருவில் ‘வெள்ளிக்கிழமை’ முடித்திருக்கும் பேருண்மையை அனைத்து துறையினரும், மதத்தினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!. ஆராய்ச்சி செய்யவேண்டும்! இந்தக் குழப்பத்தால் திருத்தத்தால், பிறாமணர் அடைந்த நன்மைகள் என்னென்ன? எவையெவை? எப்படியெப்படி? என்று முறையாகவும் முழுமையாகவும் ஆராய்ந்தால்தான்; பதினெண்சித்தர்களின், ‘சித்தர் நெறியான மெய்யான இந்துமதம்’ எப்படியெப்படிச் சிதைத்து சீரழிக்கப்பட்டுப் பிறாமணரின் பொய்யான ஹிந்துமதம் செழித்து வளர்க்கப்பட்டது என்ற பேருண்மை விளங்கிடும்.

வாரத்தின் ஏழுநாட்களும் ‘குரு’வையே முதலாகவும், முடிவாகவும் பெற்றிடுமாறு அமைக்கப்- பட்டதற்குத் தத்துவ விளக்கமும், சித்தாந்த விளக்கமும் விஞ்ஞானப்பூர்வமாக உண்டு. எனவேதான், பதினெண் சித்தர்கள் தங்களின் மெய்யான இந்துமதத்தில், ‘அனைத்தும் குருவழிகாண்க!’, ‘குருவில்லா வித்தை பாழ்!’, ‘குருவே திரு’, குருவும் திருவும் கருவாவர்’, குருவே எல்லாம்!’, ‘ குருவாழ்க!’, ‘குருவே துணை’, ‘குருவே வழி, விழி, வழிகாட்டி, வழிப்பயன்’, ‘குருவைப் பெற்றால் திருவைப் பெற்றிடலாம்’, ..என்று அனைத்துக்கும் குருவையே மூலமாக, முதலாக, உள்ளீடாக, உயிராக, உறுதுணையாக அமைத்துள்ளார்கள்.

ஒன்பது கோள்களிலும், ‘வியாழனும் வெள்ளியும் என்ன நிலையில் உள்ளனர்? என்பதைக் கணித்துவிட்டால் போதும்; மற்றவைகளை கணித்திடலாம் எளிதாக. வியாழனுக்கும் வெள்ளிக்கும் பூசைகள் செய்து பத்தி, சத்தி, சித்தி,.. அடைந்திட்டால்; மற்ற ஏழு பேரையும் துணையாகப் பெற்றுச் சிறக்க வாழ்ந்திடலாம்.

குருநிலையே ஒன்பது கோள்களின் இயக்கங்களையும் பயன்களையும் நிர்ணயிக்கும். இந்த இருவருக்கும் உரிய பூசாவிதிகள், அருளூறு பூசை மொழிகள். ஏராளம்! ஏராளம்!! ஏராளம்!!! ஆனால், தக்க குருவின் வழியாகத்தான் இருவரையும் வணங்கவேண்டும். அதாவது, குருவால் இட்டும், தொட்டும், சுட்டியும் விளக்கியருளி உதவினால்; மேற்படி வியாழனையும் வெள்ளியையும் சித்தி செய்துகொள்ளமுடியும்

-ஞானாச்சாரியார் ‘அன்பு சித்தர்’