இயற்கை வேளாண்மையும் பசுமை அங்காடியும்

இயற்கை வேளாண்மை-THAMIL.CO.UK

வேளாண்மை நமது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. சுமார் 1960ம் ஆண்டில் வேளாண்மை இடுபொருட்களை மிகக் குறைவாக இடப்பட்டதால் வேளாண்மை உற்பத்தியும் மிகக் குறைவாகவே காணப்பட்டது. இதன் விளைவாக பசுமைப் புரட்சி 1966ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இப்பசுமை புரட்சியின் நோக்கம் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவதே ஆகும். இதன் பொருட்டு இரசாயன உரங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரக விதைகள் மூலம் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தினர். இதன் விளைவாக 1990ம் ஆண்டு முதல் மண் வளமும், இயற்கை வளமும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.

இயற்கை வேளாண்மை
நம் மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக்காக்கும் பொருட்டு இயற்கை வேளாண்மையை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்த இயற்கை வளங்களில் நமது எதிர்கால சந்ததியினருக்கும் பங்கு மற்றும் உரிமை உண்டு. அதற்கேற்ப இயற்கை வேளாண்மையினை கடைபிடிப்பது குறித்து தற்போது விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து, இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தலாம்.

இயற்கை வேளாண்மை எதிர்நோக்கும் சவால்கள்
1. இயற்கை வேளாண்மை மூலம் அனைவருக்கும் போதுமான தானியங்களை உற்பத்தி செய்ய முடியுமா?
2. இயற்கை வேளாண்மை மூலம் இயற்கைக்கு ஏதேனும் நன்மை உள்ளதா?
3. இயற்கை வேளாண்மை மூலம் தரமான உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய முடியுமா?
4. அனைத்து விவசாயிக்கும் செவ்வனே பயிர் செய்யும் வகையில் இயற்கை உரங்களை வழங்க முடியுமா?

இவ்விவாதத்திற்கு கண்டறியப்பட்ட பதில்கள்
1. இயற்கை வேளாண்மையில் தரமான விதை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மையை கடைபிடிப்பதன் மூலம் வேளாண் உற்பத்தியை போதுமான அளவு அதிகரிக்க முடியும்.
2. இயற்கை வேளாண்மையில் இயற்கை உரங்களான மண்புழு உரம், கால்நடை எருக்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதால் இரசாயன உரங்களின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. இதன் மூலம் இயற்கை வளம் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது.
3. இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களின் பயன்பட்டு மிகக் குறைவு. ஆகையால் இயற்கை வேளாண்மையில் உருவாக்கப்படும் பொருட்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும்.
4. கால்நடை உரங்கள், மரத்தடியில் இருக்கும் உதிர்ந்த இலைகள், மட்கிய குப்பைகள் ஆகியவற்றை சரியான முறையில் சேகரித்து உபயோகித்தால் அனைத்து விவசாயிக்கும் செவ்வனே பயிர் செய்யும் வகையில் இயற்கை உரங்கள் வழங்க முடியும்.

இயற்கை வேளாண்மைக்கு பொருத்தமான பயிர்கள்
நெல், கோதுமை, மக்காச்சோளம், பருப்பு வகைகள், கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரும்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், தேயிலை, வாழை, சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரி, வெள்ளரி போன்ற பயிர்கள் இயற்கை வேளாண்மைக்கு பொருத்தமானவை.

இயற்கை வேளாண்மையில் உருவாக்கப்படும் விளைபொருட்கள் அதிக சத்துள்ளதாகவும், தரம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இவ்விளைப் பொருட்களின் மதிப்பை உயர்த்தும் பொருட்டும், அதன் தரத்தை வேறுபடுத்தி காட்டுவதற்காகவும் இவ்விளை பொருட்கள் யாவும் பசுமை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன.

பசுமை அங்காடிகள்
மக்களிடம் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடும், இரசாயன உரங்களின் பயன்பாடு பற்றிய எண்ணங்களை மாற்றுவதும், நகரவாசிகளுக்கு இயற்கை வேளாண்மையால் உருவாக்கப்படும் பொருட்கள் கிடைக்கச் செய்யவும் பசுமை அங்காடிகளின் முக்கிய நோக்கங்களாகும்.

தற்பொழுது பசுமை அங்காடிகள் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் சிறப்பாக செயலாற்றி, மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளது.

பசுமை அங்காடியின் நன்மைகள்
* இப்பசுமை அங்காடியில் விவசாயிகள் நேரடியாக தங்களது இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யலாம்.
* இப்பசுமை அங்காடியில் இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகளின் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கின்றது.
* நகரவாசிகள் மற்றும் பல நுகர்வோர்கள் தங்களது தேவைகளை நேரடியாக விவசாயிகளிடம் கூறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பசுமை அங்காடியின் குறைபாடுகள்
இப்பசுமை அங்காடியின் குறைபாடுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரிடமும் காணப்படுகின்றது.

உற்பத்தியாளர்கள் தொடர்பான குறைகள்
1. இயற்கை வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்கள் மிக குறைவாகவே இருக்கின்றனர்.
2. சில உற்பத்தியாளர்கள் சிறு விவசாயிகளாக இருப்பதால், இயற்கை வேளாண் உற்பத்தி மிக குறைவாகவே காணப்படுகின்றது.
3. அனைத்து உற்பத்தியாளர்களும் ஒரே வகையான விளைப் பொருட்களையே உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மற்றவகைப் பயிர்களுக்கான தேவை அதிகரிக்கின்றது.
4. இடைத்தரகர்கள் இயற்கை வேளாண் பொருட்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. மற்ற சாதாரண விளை பொருட்களை போலவே இதனையும் கருதுகின்றனர்.

நுகர்வோர்கள் தொடர்பான குறைகள்
1. நுகர்வோர்கள் பெரும்பாலும் பசுமை அங்காடி பற்றி விழிப்புணர்வு இல்லாமல் காணப்படுகின்றனர்.
2. நுகர்வோர்கள் தங்களின் அனைத்துத் தேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

இன்று இரசாயன உரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்கள் மண் வளத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும் சீர்குலை ய செய்கிறது. ஆகையால் இயற்கை வேளாண்மையை கடைபிடிப்பதன் மூலம் இயற்கை வளத்தையும், மக்கள் நலனையும் பேணி காக்கமுடியும். அதுமட்டுமில்லாமல், இயற்கை வேளாண்மையால் உருவாக்கப்படும் விளைபொருட்கள் பசுமை அங்காடியில் விற்கப்படுவதால், இப்பொருட்கள் நியாயமான விலை பெறுகின்றன. நுகர்வோரின் தேவையை உற்பத்தியாளர்கள் நேரடியாக அறிவதோடு, நகரவாசிகளுக்கும் இயற்கை வேளாண்மை பொருட்களின் நன்மைகள் சென்றடைகின்றன.

-வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்