புதையல் கொடுக்கும் பூவரசமரம்

பூவரசமரம்மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராணவாயுவை (ஒட்சிசன்) மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன்போல நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். இதயவடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது.

இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இரு வகைப்படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசின் காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப்பயன் கொண்டவை. அதுமட்டும்மல்ல இவற்றினால் செய்யப்படும் அலுமாரி (பீரோ), கட்டில் போன்ற பொருட்களுக்கும் தனிமதிப்புண்டு. அத்தகைய பூவரசு மரத்தை வணிகரீதியாக வளர்ப்பதைப்பற்றி பார்ப்போமா……!

ஏக்கருக்கு 1,200 மரங்கள். ஐந்தாம் ஆண்டு முதல் வருமானம். பராமரிப்புச் செலவு இல்லை.
இதய வடிவிலான இலைகள், மஞ்சள்நிற மலர்கள், அடர்ந்த நிழல், குளிர்ந்தகாற்று, இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள் இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் குச்சிகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள். அதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால், ‘கமலை’ ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.

பூவரசு பூஇப்படிப் பண்டைய காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக்கிடக்கும் பூவரசு, ‘நாட்டுத் தேக்கு’ என்று புகழப்படும் அளவுக்கு வலிமையான மரமும்கூட. அதனாலேயே இந்த மரங்களை வெட்டி, தூண்கள், ஜன்னல்கள், கதவுகள் என பயன்படுத்துவது தொடர்கிறது.

தேக்கு, குமிழ் போன்ற மரங்களுக்கான தேவை இருப்பதால், அவற்றை புதிது புதிதாக அதிக அளவில் வளர்த்தெடுக்கிறார்கள். ஆனால் அதேபோல பெரிய அளவில், பூவரசு மரத்தை புதிதாக உருவாக்கத் தவறிவிட்டதால், அவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம். இதன் மகத்துவத்தை அறிந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலானவர்கள் மட்டுமே பூவரசு வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்! அவர்களில் ஒருவர் இந்தியா, தஞ்சாவூர் மாவட்டம், புலவன்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன்.

ஓர் அதிகாலை நேரத்தில், தோட்டம் தேடிச் சென்றபோது, அன்போடு வரவேற்ற மாரியப்பன், ‘இப்போ என் தோட்டத்துல 25 பூவரசு மரங்கள் இருக்கு. எல்லாமே, இருபதுல இருந்து இருபத்தஞ்சு வயசுகுள்ளாற உள்ள மரங்கள். ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நல்லா வளந்த ஒரு மரத்தை வெட்டுவேன். ஆசாரிகளை வெச்சு, கட்டில், பீரோனு செய்து சுத்துவட்டாரத்துல வித்துடுவேன். தேக்கைவிட நல்ல நிறமா இருக்கும்கிறதால பூவரசுக்கு மரியாதை ஜாஸ்தி. இருபது, முப்பது வயசுருக்குற மரத்துல, ரெண்டு பீரோ (ஆறரையடி உயரம், நாலரையடி நீளம் இரண்டடி அகலம்) ஒரு கட்டில் (7 அடி நீளம் 5 அடி அகலம்) செய்யலாம். இந்த மரத்தை வளர்க்கறதும் ரொம்ப சுலபம்தான்’ என்றவர், பூவரசு மரத்தை சாகுபடி செய்யும் முறைகளை விளக்கினார். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.

குச்சி நடவு
பூவரசு அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை குச்சிகள் (போத்து) மூலமாக நடவு செய்வது சிறந்தது. குச்சிகளை, செங்குத்தாக நடவு செய்தால், மரம் வளர்ந்த பின் நிறைய பொந்துகள் உருவாகும். அதனால் படுக்கை முறையில் பதியன் போட்டால், இந்த பிரச்சினையைத் தவிர்க்கலாம். 6 அடி நீளம், அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இதில் முக்கால் பங்கு மணலையும், காய்ந்த சாணத்தையும் போட்டு, 6 அடி நீளம் கொண்ட பூவரசம் குச்சிகளை பதித்து, மண்ணால் மூடி, காற்றுப் போகாமல் மிதித்து, தண்ணீர் தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அடுத்த சில வாரங்களில், ஒரு குச்சியில் இருந்து பல துளிர்கள் வெடித்து வந்திருக்கும். குச்சியின் இரண்டு ஓரங்களிலும் உள்ள செழிப்பான துளிர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை கையால் ஒடித்து விட வேண்டும். அதன் பின் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. இப்போது மரத்துக்கு மரம், வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி இருக்கும். இதுபோல் பதியன் போட்டால், ஒரு ஏக்கர் நிலத்தில் 600 குச்சிகளைப் பதியன் செய்யலாம். மொத்தம் 1,200 மரங்கள் உருவாகும்.

பராமரிப்பு தேவையில்லை
நடவு செய்த ஆறு மாதங்களுக்குப் பின் தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. ஆண்டுக்கு ஒருமுறை மரங்களை கவாத்து செய்யவேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. 5 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மரத்தை விட்டு, ஒரு மரத்தை வெட்டி விற்பனை செய்யலாம். இப்படி 600 மரங்களை வெட்டலாம். அடுத்த ஐந்து ஆண்டுகள் (நடவு செய்த 10-ம் ஆண்டில்) கழித்து ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்ற கணக்கில் 300 மரங்களை வெட்டலாம். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து (நடவு செய்த 15-ம் ஆண்டில்) மீதி மரங்கள் நன்கு பெருத்திருக்கும், அப்போது அவற்றை வெட்டலாம்.

நிறைவாக வருமானம் பற்றி விவரித்த மாரியப்பன், ‘அஞ்சாம் வருஷம் வெட்டுறப்போ ஒரு மரத்துக்கு ஆயிரம் ரூபாய் விலை கிடைக்கும். 600 மரங்கள் மூலமா 6 லட்ச ரூபாயும்; பத்தாம் வருஷம் வெட்டுறப்போ, மரத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம், 300 மரங்களுக்கு 9 லட்ச ரூபாயும்; 15-ம் வருஷத்துல மிச்சமிருக்குற 300 மரங்கள் மூலமா மரம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் 15 லட்ச ரூபாயும் வருமானமா கிடைக்கும். மொத்தத்துல 15 வருஷத்துல 30 லட்சம் ரூபாய் வருமானம் பார்த்துட முடியும்’ என்றார்.

மதிப்புக்கூட்டினால் அதிக லாபம்
மரமாக விற்காமல் நாமே கட்டில், அலுமாரி செய்து விற்கும்போது கூடுதல் இலாபம் கிடைக்கும். சாதாரணமாக ஒரு அலுமாரி 30 ஆயிரம் ரூபாய்க்கும், கட்டில் 12 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகும். 20, 25 வருடங்களான மரத்தில் இரண்டு அலுமாரி, ஒரு கட்டில் செய்யலாம். இதன்படி பாக்கும்போது ஒரு மரத்தில் இருந்தே, 72 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் வெட்டுக் கூலி, அறுப்புக் கூலி, இழைப்புக் கூலி, ஆசாரிக் கூலி, தாழ்ப்பாள் மாதிரியான உதிரி சாமான்கள் எல்லாம் சேர்த்து 28 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவானாலும், ஒரு மரத்தில் இருந்து 44 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.

மரத்தை அறுத்து துண்டு போட்டு, இழைச்சும் விக்கலாம். இருபதில் இருந்து முப்பது வயதுள்ள மரத்தில் சராசரியாக 25 கன அடிக்கு மரத்துண்டுகள் கிடைக்கும். ஒரு கன அடிக்கு சராசரியாக 1 200 ரூபாய் விலை கிடைக்கும். ஒரு மரத்தில் இருந்து செலவெல்லாம் போக, 22 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்.

வீழ்ந்தாலும் வளரும்
‘இந்த மரம் புயல் அடித்தால்கூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாய்ந்தாலும் நிமிர்த்திவிட்டால், திரும்பவும் வேகமாக தழைத்துவிடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமாக இருந்தால் புயலில் கீழே சாய்ந்துவிட்டால் மறுபடியும் பிழைக்காது. ஒவ்வொரு வருடமும் கவாத்து செய்கின்ற கிளைகளை குச்சியாகவும் விற்கலாம். அதுவும் நன்றாக விற்பனையாகும். பதியன் போடுவதற்கும் குச்சிகளை வாங்குவார்கள். விவசாயிகள் மனதுவைத்தால், அதிகளவு பிராணவாயுவை உற்பத்தி செய்கின்ற பூவரசு மரங்களை நடுவதன்மூலம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, தங்களையும் வளமாக்கிக்கொள்ள முடியும்’ என்றார் மாரியப்பன்.

-வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

பூவரசு தொடகொள்ளர்பான வேறு பதிவுகள்
தொழுநோயை குணமாக்கும் பூவரசு