அணியிலக்கணம் 7 : சிறீ சிறீஸ்கந்தராஜா

பொருளணியியல் - 21 அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 21

17) ஆர்வமொழியணி

தண்டியலங்காரத்தில் பதினேழவதாகக் கூறப்படும் அணி, ஆர்வமொழியணி ஆகும். இதுவும் ஒருவகையால் சொல் பற்றிய அணியே ஆகும். உள்ளத்தில் உள்ள ஆர்வத்தைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்திக் காட்டும் வகையில் அமைந்த அணி ஆகும்.

ஆர்வமொழி அணியின் இலக்கணம்
ஆர்வம் = அன்பு, மகிழ்ச்சி. உள்ளத்திலே தோன்றிய ஆர்வத்தை வெளிப்படுத்தும் சொற்கள் அதிகம் தோன்றும்படி சொல்லுவது ஆர்வமொழி அணி எனப்படும்.

”ஆர்வ மொழி மிகுப்பது ஆர்வ மொழியே’‘  (நூற்பா – 67)

“சொல்ல மொழிதளர்ந்து சோரும்; துணைமலர்த்தோள்
புல்ல இருதோள் புடைபெயரா; – மெல்ல
நினைவோம் எனில் நெஞ்சு இடம்போதாது; எம்பால்
வனைதாராய்! வந்ததற்கு மாறு”

(புல்ல – தழுவ ; புடைபெயரா = பக்கங்களில் நீளா ; வனைதாராய் = அழகிய மாலை அணிந்தவனே ; மாறு – கைம்மாறு.)

அழகிய மாலையை அணிந்தவனே! உனக்கு முன்னே நின்று மறுமொழி கூறுவதற்கு முயன்றால் எங்களுடைய சொற்கள் தடுமாறிச் சோர்வுபடுகின்றன; உன்னுடைய இரண்டு தோள்களைத் தழுவ முயன்றால் எங்களுடைய இரண்டு தோள்களும் பக்கங்களில் நீண்டு வளர்ந்தவை அல்ல; மெல்ல உன்னுடைய புகழை நினைப்போமாயின் எங்களுடைய உள்ளத்தில் அதற்கு இடம் போதாது; நீ எம் இருப்பிடம் நோக்கி வந்த உன்னுடைய இப்பெருமைக்கு யாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

இப்பாடலில், தலைவி தலைவன்பால் கொண்டுள்ள அன்பு மிகுதியை ‘மொழிதளர்ந்து சோரும், தோள் புடைபெயரா, நெஞ்சு இடம்போதாது’ என மிகுதியான ஆர்வமொழிகள் கொண்டு வெளிப்படுத்துவதால் இது ஆர்வமொழி அணி ஆயிற்று.

 

பொருளணியியல் - 22அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 22

18) சுவையணி

தண்டியலங்காரத்தில் பதினெட்டாவதாகக் கூறப்படும் அணி, சுவையணி ஆகும்.

சுவை = அச்சம், வியப்பு முதலிய மெய்ப்பாடுகளைக் குறிக்கின்றன. கவிஞர் பாடலில் தாம் கூறும் கருத்தினை எண்வகைச் சுவை தோன்றப் பாடுவதால் அப்பாடலில் பொருள் அழகு பெற்றுத் திகழ்கின்றது. இதுவே சுவை அணி ஆகும்.

சுவை அணியின் இலக்கணம்
உள்ளத்திலே நிகழும் உணர்வு வெளியிலே எட்டுவகைப்பட்ட மெய்ப்பாட்டினாலும் புலப்பட்டு விளங்கும். அவ்வாறு வெளிப்படுவதை எடுத்துரைப்பது சுவை என்னும் அணி ஆகும்.

“உள்நிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே” (நூற்பா – 68)

உண்ணிகழுந் தன்மை புறத்துப் புலனாய் விளங்க, எட்டு வகைப்பட்ட மெய்ப்பட்டானும் நடப்பது, சுவை என்னும் அலங்காரமாம்.

அணியின் வகைகள்
“அவைதாம்
வீரம் அச்சம் இழிப்பொடு வியப்பே
காமம் அவலம் உருத்திரம் நகையே” (நூற்பா – 69)

மேற்கூறிய எண்வகைப்பட்ட மெய்ப்பாடாவன வீரமும், அச்சமும், இழிப்பும், வியப்பும், காமமும், அவலமும், உருத்திரமும், நகையுமாம்.

வீரம்
“சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்ந்திட் டுயர்துலைதான் ஏறினான் – நேர்ந்த
கொடைவீர மோ? மெய்ந் நிறைகுறையா வன்கட்
படைவீர மோ? சென்னி பண்பு”

தன்கண் சரண்புக்க புறவினது வாரம் தனது தசையை அறுத்திட்டும், தசைநிறை போதாதற்குத் தானும் துலாத்தலை ஏறிய இது, தனது கொடையின் வெற்றியோ ? மெய்யொழுக்கம் குன்றாத வன்கண்மையுடைய படையின் வெற்றியோ ? என ஆராய்வார்க்கு இவையிரண்டும் அன்று ; சோழன் தனது தன்மை இருந்தபடி.

கல்வி, தறுகண், புகழ், கொடை ஆகிய நான்கும்பற்றி வீரம் பிறக்கும் என்பர் தொல்காப்பியர். இப்பாடல் கொடை வீரம்பற்றி வந்ததாகும். வாரம்-எடைக்காக.

அச்சம்
“கைநெரிந்து வெய்துயிர்ப்பக் கால்தளர்ந்து மெய்ப்பனிப்ப
மையரிக்கண் நீர்ததும்ப வாய்புலர்ந்தாள் – தையல்
சினவேல் விடலையாற் கையிழந்த செங்கட்
புனவேழம் மேல்வந்த போது”

(வெய்துயிர்ப்ப = பெருமூச்சுவிட்டு; பனிப்ப = நடுங்க ; தையல் = தலைவி; விடலை = தலைவன் ; கை இழந்த = துதிக்கையை இழந்த ; புனவேழம் = காட்டு யானை.)

சினம் பொருந்திய வேற்படையை யுடைய வீரனால் துதிக்கையை இழந்த சிவந்த கண்களை யுடைய காட்டுயானை தன் முன்னே வந்தபொழுது, ஒரு பெண், தன் கைகளை நெரித்துக்கொண்டு, பெருமுச்சு எறிய, கால் தளர்ந்து, உடல் நடுங்க, மைதீட்டிய செவ்வரி பரந்த கண்களில் நீர் ததும்ப, வாய் உலர்ந்தாள் என்பதாம்.

அணங்கு, விலங்கு, கள்வர், இறை ஆகிய நான்கானும் அச்சம் பிறக்கும் என்பர் தொல்காப்பியர். இப்பாடற்கண் யானையாகிய விலங்கு காரணமாகப் பிறந்த அச்சத்தைக் கூறுதலின், இது அச்சமாயிற்று.

இழிப்பு
“உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும்
குடரும் கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய்
பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி
கருநடரைச் சீறுங் களம்”

கொழுங்குருதி – நிணக்குருதி. பெற்றி – தன்மை. கிள்ளி – சோழன்.
வெற்றியைத் தரும் போரினைச் செய்யும் சோழன் கருநாடக அரசர்களைச் சினந்து தாக்கிய போர்க்களமானது, உடைந்த தலைகளையும், மூளைகளையும், கொழுப்பையும், தசைத் திரளையும், எலும்பையும் , குடலையும், செழித்த இரத்த வெள்ளம் இழுக்க, நெருங்கிய பேய்கள் பெருங் கூத்தாடும் தன்மையை உடையது என்பதாம்

இழிப்பு – அருவருப்பு. இதனை இளிவரல் என்றும், அது மூப்பு, பிணி, வருத்தம், மென்மை ஆகிய நான்கினிடமாகப் பிறக்கும் என்றும், தொல்காப்பியர் கூறுவர். இப்பாடற்கண் போர்க்களத்திலுள்ள உடைதலை, ஊன் முதலியவைகளைக் கூறுமுகத்தான் அருவருப்புச் சுவை தோன்றலின், இது இழிப்பாயிற்று.

வியப்பு
“முத்தரும்பிச் செம்பொன் முறிததைந்து பைந்துகிரின்
தொத்தலர்ந்து பல்கலனுஞ் சூழ்ந்தொளிரும் – கொத்தினதாம்
பொன்னேர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன்
தன்னேர் பொழியுந் தரு”

பொன்னையும், அழகிய மணிகளையும் அலைத்துக்கொடு வருகின்ற பொலிவுடைய காவிரி நாடனுக்கு உவமையாகச் சொல்லப்பட்ட கற்பகத்தரு, முத்தமாகிய அரும்பை அரும்பிச் சிவந்த பொன் முறியாய தளிரினாலே செறிந்த பச்சைத் துகிராகிய கொத்துக்களை உடைத்தாய்ப் பலவகைப்பட்ட ஆபரணங்களால் சூழப்பட்டு விளங்கிய பணைகளை உடைத்தாய் இருக்கும்.

தரு – கற்பகத்தரு.

முன்னர்க் காணப்படாததொன்றைக் காணுங்கால் ஏற்படும் உள்ள மகிழ்ச்சியே வியப்பாகும் . இது புதுமை, பெருமை , சிறுமை, ஆக்கம் ஆகிய நான்கும் பற்றிப் பிறக்கும் என்பர் தொல்காப்பியர்.

இப்பாடற்கண் கற்பகத் தருவில் முத்தரும்புதல், செம்பொன் முறிததைதல், பைந்துகிரின் தொத்தலர்தல், பல்கலனும் சூழ்ந்தொளிர்தல், ஆகியன இருப்பதாகக் கூறலின், இது இதுவரை காணாத புதுமைபற்றிப் பிறந்த வியப்பாயிற்று.

காமம்
“திங்கள் நுதல்வியர்க்கும் வாய்துடிக்கும் கண்சிவக்கும்
அங்கைத் தளிர்நடுங்கும் சொல்லசையும் – கொங்கை
பொருகாலும் ஊடிப் புடைபெயருங் காலும்
இருகாலும் ஒக்கும் இவர்க்கு”

(திங்கள் = பிறை நிலவு; நுதல் = நெற்றி ; அங்கை = அழகிய கைகள் ; அசையும் = தடுமாறும் ; பொருகாலும் = தழுவும் போதும் ; புடைபெயரும் காலும் = விலகும் போதும்)

கொங்கைகள் என் மீது அழுந்துமாறு என்னைத் தழுவிய பொழுதும், என்பால் ஊடல் கொண்டு என்னிடத்தினின்றும் நீக்கியபொழுதும் இவர்க்கு, எட்டாம் பிறையை யொத்த நெற்றி வியர்க்கும், வாய் துடிக்கும், கண்சிவக்கும், அழகிய கைகளாகிய தளிர்கள் நடுங்கும் சொல் தடுமாறும் என்பதாம்.

காமச் சுவையைத் தொல்காப்பியர் உவகை என்ற பெயரால் குறிப்பர். இது செல்வம், அறிவு, புணர்ச்சி, விளையாட்டு ஆகிய நான்கும் பற்றிப் பிறக்கும் என்பர்.

இப்பாடல் ஒரு தலைமகன், தன் தலைவியின்மாட்டுள்ள காதற் களிப்புப் புலப்படக் கூறியதாகும். ‘ஊடல், உணர்தல், புணர்தல் இவை காமம் கூடியார்ப் பெற்ற பயன்’ ஆதலின் இவ்விரு நிகழ்ச்சியும் காமம் பற்றிய தாயிற்று.

அவலம்
“கழல்சேர்ந்த தாள்விடலை காதலிமெய் தீண்டும்
அழல்சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான் – குழல்சேர்ந்த
தாமந் தரியா(து) அசையுந் தளிர்மேனி
ஈமந் தரிக்குமோ வென்று”

“வீரக்கழலைக் கோத்த காலினையுடைய விடலையானவன், தன்னுடைய மனைவியின் மெய்யை எரிக்கும் அழலைச் சேர்ந்து, தன்னுடைய நெஞ்சம் வருந்தினான்,’ குழலிடத்துப் பொருந்தின மாலையைப் பொறாது தளருந் தளிர் போலும் மேனியானது ஈமத்து எரியைப் பொறுக்கவற்றோ ? ‘ என்று.

இதனைத் தொல்காப்பியர் அழுகை எனக் குறிப்பிடுவர். இது இளிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய நான்கும் பற்றிப் பிறக்கும் என்பர். இப்பாடல் தலைவியை இழந்த தலைவனின் அவலத்தைப் பெரிதும் விளக்குதலின், இது இழவுபற்றிய அவலமாயிற்று.

உருத்திரம்
“கைபிசையா வாய்மடியா கண்சிவவா வெய்துயிரா
மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான் – வெய்யபோர்த்
தார்வேய்ந்த தோளான் மகளைத் தருகென்று
போர்வேந்தன் தூதிசைத்த போது”

வேய்தல் – சூடல் , தூது – தூதன் . இசைத்தல் – சொல்லல்.

கொடிய போரில் வாகை சூடிய தோளினையுடைய மன்னன் ஒருவனின் மகளைத் தனக்குத் தருமாறு பகை மன்னன் ஒருவன்தூது விடுக்க, அவனைக் கண்டதும் தன் கைகளைப் பிசைந்து, வாயை மடித்துக் கண்சிவந்து வெவ்விய பெருமூச்செறிந்து உடல் நடக்குற்று வியர்த்துச் சினந்து போர்புரியவும் ஆயத்தமானான் என்பதாம்.

இதனைத் தொல்காப்பியர் வெகுளி என்பர். இது உறுப்பறை, குடிகோள், அலை, கொலை ஆகிய நான்கும் பற்றிப் பிறக்கும் என்பர்.

அரசன் ஒருவன் தன் மகளைத் தகுதியற்ற அரசன் ஒருவன் கேட்க, அது பொழுது அவனுக்கு எழுந்த வெகுளியை இப்பாடல் விவரித்தலின், இது குடிகோள் பற்றிய உருத்திரமாயிற்று.

நகை
“நாண்போலும் தன்மனைக்குத் தான்சேறல் இந்நின்ற
பாண்போலும் வெவ்வழலிற் பாய்வதூஉம் – காண்தோழி !
கைத்தலங் கண்ணாக் களவுகாண் பான்ஒருவன்
பொய்த்தலைமுன் னீட்டியற்றும் போந்து”

பாண் – பாணன். காண் தோழி என்றது கேட்பாயாக தோழி என்றவாறு. சேறல் – வருதல்.

தோழி! இதனைக் காண்பாயாக! தன் இல்லத்திற்குத் தான் வருவதும் நம் தலைவனுக்கு நாணம் போலும்.

நாம் அவர் வரவை மறுப்பின், அவர் தீயிற் பாய்வர் என இப்பாணனை சொல்வதும் இடத்திற்கேற்ப இவனுரைக்கும் கற்பனை போலும். தலைமகன் நேரில் தான் வாராது இப்பாணன் வரவிட்டது, கைகளையே கண்ணாகக் கொண்டு இரவில் களவு புரிவான் ஒருவன், தான் நுழைவதற்கு முன்னே பொய்த்தலையை நீட்டுவது போலாம் என்பதாம்.

இது தலைமகனது புறத்தொழுக்கங் கண்டு வருந்திய தலைவி, அவனால் அனுப்பப்பட்ட பாணனை நினைந்து தோழியிடம் நகையாடிக் கூறியதாகும்.

இச்சுவையைத் தொல்காப்பியர் நகை என்று குறிப்பிடுவர். இது எள்ளல், இளமை, பேதைமை, மடன் ஆகிய நான்கும்பற்றிப் பிறக்கும் என்பர்.

இது தலைமகனையும் அவனால் அனுப்பப்பட்ட பாணனையும் ஒருங்கு எள்ளி நகையாடுதலின், இது எள்ளல் பற்றி வந்த நகையாயிற்று.

 

 பொருளணியியல் - 23அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 23

19) தன்மேம்பாட்டுரையணி

தண்டியலங்காரத்தில் பத்தொன்பதாவதாகக் கூறப்படும் அணி, தன்மேம்பாட்டுரையணி ஆகும். ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து சொல்லுவது தன்மேம்பாட்டு உரை என்னும் அணியாகும். புகழ்தல் = தன் மேம்பாடு தோன்றச் சொல்லுதல்.

“தான்தன் புகழ்வது தன்மேம் பாட்டு உரை” (நூற்பா – 70)

“எஞ்சினார் இல்லை எனக்கு எதிரா இன்னுயிர்கொண்டு
அஞ்சினார் அஞ்சாது போய் அகல்க – வெஞ்சமத்துப்
பேராதவர் ஆகத்து அன்றிப் பிறர்முதுகில்
சாரா என் கையில் சரம்”

(வெஞ்சமம் – கொடிய போர் ; பேராதவர் – புறமுதுகு காட்டி ஓடாதவர்கள் ; ஆகம் – மார்பு ; சரம் – அம்பு.)

கொடிய போரில் எனக்கு எதிராக நின்று போர் செய்து, தமது இனிய உயிரைக் காப்பாற்றிக்கொண்டு பிழைத்து மிஞ்சியவர் ஒருவரும் இல்லை. ஆகவே அஞ்சியவர்கள் விலகிப் போவதற்குச் சிறிதும் அஞ்சாமல் விலகிச் செல்க. என் கையால் செலுத்தப்படும் அம்புகள் புறம் காட்டி ஓடாதவர்களின் மார்பில் பாயுமே அல்லாமல் புறம் காட்டி ஓடுபவர்களின் முதுகில் பாயமாட்டா.

இப்பாடலில், வீரன் ஒருவன் பகைவர் படைகளுக்கு முன் நின்று தன் ஆண்மைத் திறத்தைத் தானே புகழ்ந்து உரைக்கிறான்.ஆகவே இது தன்மேம்பாட்டு உரை அணி ஆயிற்று.

இவ்வாறு வீரன் ஒருவன் தன்னுடைய ஆண்மையைத் தானே புகழ்ந்து கூறுவது புறப்பொருள் இலக்கணத்தில் ‘நெடுமொழி கூறல்’ என்றும், ‘நெடுமொழி வஞ்சி’ என்று கூறப்படுகிறது


பொருளணியியல் - 24அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 24

20) பரியாயவணி

தண்டியலங்காரத்தில் இருபதாவதாகக் கூறப்படும் அணி, பரியாயவணி ஆகும். தான் கருதியதைக் கூறாது, அப்பொருள் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது பரியாயம் என்னும் அணி ஆகும்.

“கருதியது கிளவாது அப்பொருள் தோன்றப்
பிறிதுஒன்று உரைப்பது பரியா யம்மே” (நூற்பா – 71)

(பரியாயம் – ஒன்றுக்குப் பதிலாக, சாமர்த்தியமாக வேறொன்றைச் சொல்லல்)

“மின் நிகராம் மாதே! விரைச்சாந்து உடன்புணர்ந்து
நின் நிகராம் மாதவிக்கண் நின்று அருள் நீ; – தன் நிகராம்
செந்தீ வரமலரும் செங்காந்தள் போதுடனே
இந்தீ வரம்கொணர்வல் யான்”

(மின் = மின்னல்; விரை = நறுமணம் ; சாந்து = சந்தனமரம் ; மாதவி = குருக்கத்திக் கொடி ; போது = மலர் ; இந்தீவரம் = குவளை மலர்.)

மின்னலை ஒத்த மாதே! நறுமணம் கமழும் சந்தன மரத்தில் படர்ந்து, உனக்கு நிகராகி நிற்கின்ற இக் குருக்கத்திக் கொடியின் கீழே நீ நிற்பாயாக.

தனக்கு நிகரான சிவந்த தீயின் ஒளி தெரியும்படி மலர்ந்த சிவந்த காந்தள் மலருடனே, குவளை மலரையும் யான் சென்று பறித்து வருகிறேன்’ என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகக் குறிப்பிட்ட பகற்குறி இடத்தில் தலைவியைக் கொண்டுவந்து நிறுத்துகின்றாள் தோழி. அப்போது தான் அங்கே நிற்பது அவர்கள் இன்பத்துக்குத் தடையாகும் என்று அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லக் கருதுகிறாள்.

அதனை நேரடியாகக் கூறாமல், ‘காந்தள் மலரையும் குவளை மலரையும் பறித்து வரும் வரை நீ இங்கே குருக்கத்திக் கொடியின் கீழே இருப்பாயாக’ என்று சாமர்த்தியமாக வேறு ஒன்றைக் கூறியதால் இப்பாடல் பரியாய அணி ஆயிற்று.

பரியாய அணியின் இலக்கணத்தைப் பார்க்கும்போது அதுவும் ஒட்டு அணியும் ஒற்றுமை உடையன போலத் தோன்றும்.

தான் கருதிய கருத்தை மறைத்தலில் பரியாய அணிக்கும் ஒட்டு அணிக்கும் வேற்றுமை இல்லை.

எனினும், ஒட்டு அணி தான் கருதிய கருத்தினைக் கூறாது அதனோடு உவமையாகக் கூடிய ஒத்த கருத்தைக் கூறுவது, பரியாய அணி தான் கருதிய கருத்தினைக் கூறாது அதற்கு வேறான பிறிதொரு கருத்தைக் கூறுவது. இத்தகைய வேற்றுமையுள்ளமையினால் இவை வேறாயின.

 

பொருளணியியல் - 25அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 25

21) சமாயிதவணி
தண்டியலங்காரத்தில் இருபத்தியொன்றாவதாகக் கூறப்படும் அணி, சமாயிதவணி ஆகும். முன்பு ஒரு பயனை விரும்பி ஒரு செயல் செய்யப் படுகிறது, ஆனால் அப்பயன் கிட்டவில்லை. பின்னர் அச்செயலால் அல்லாமல், வேறொரு செயலால் அப்பயன் தானே கிட்டுவதாகக் கூறி முடிப்பது சமாகிதம் என்னும் அணி ஆகும்.

“முந்துதான் முயல்வுறூஉம் தொழில்பயன் பிறிதுஒன்று
தந்ததா முடிப்பது சமாகிதம் ஆகும்” (நூற்பா – 72)

“அருவியம் குன்றம் அரக்கன் பெயர்ப்ப,
வெருவிய வெற்பு அரையன் பாவை – பெருமான்
அணி ஆகம் ஆரத் தழுவினாள், தான்முன்
தணியாத ஊடல் தணிந்து”

(குன்றம் = கயிலை மலை ; அரக்கன் = இராவணன் ; வெருவிய = அஞ்சிய ; வெற்பு = மலை ; அரையன் = அரசன் ; பாவை = பார்வதி ; பெருமான் = சிவபெருமான் ; ஆகம் – மார்பு.)

பார்வதி, கங்கை காரணமாகச் சிவபெருமானிடம் ஊடல் கொண்டாள். சிவன் எவ்வளவோ முயன்றும் அவளுடைய ஊடல் தணியாதிருந்தது. அந்நேரத்தில் அருவி பாயும் கயிலை மலையை இராவணன் பெயர்த்து எடுத்தான். அதனால் ஏற்பட்ட நடுக்கத்தினால் அஞ்சிய பார்வதி தான் முன்பு தணியாத ஊடல் தணிந்து சிவபெருமானுடைய அழகிய மார்பினை ஆரத் தழுவிக் கொண்டாள்.

இப்பாடலில் சிவபெருமான் முன்னதாக முயன்ற செயல் பார்வதி தன்மீது கொண்ட ஊடலைத் தணிவித்தல். அத்தொழிலினது பயன் பார்வதி ஊடல் தணிதல் ஆகும்.

ஆனால் இப்பயன் சிவபெருமான் முயன்ற தொழிலால் கிடைக்கவில்லை.  அப்பயன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தலாகிய வேறு ஒரு காரணத்தால் கிடைத்ததாகக் கூறப்பட்டிருத்தலின் இது சமாயித அணி ஆயிற்று.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 45-49
சிறீ சிறீஸ்கந்தராஜா
01/08/2013 – 03/08/2013

தொகுப்பு – thamil.co.uk