மல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்

மல்லிகை பூமல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப் பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிபுழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும். ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பித்தத்தை தணித்து சீராக்கும்.

தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.  மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகைப் பூ.

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
உலர்ந்த மல்லிகைப்பூ – 5 கிராம்
கறிவேப்பிலை -10 இலை — எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

மல்லிகையின் இலையை வாயிலிட்டு மெல்ல, வாய்ப்புண் தீரும். இலையை நெய்யில் வறுத்து பின் ஒற்றடமிட தொண்டை நோய் தீரும்.

இலைச்சாறு அல்லது இலையிலிருந்து எடுக்கும் எண்ணெய் காது நோய்க்கு நல்லது. இலைச்சாறு,காலாணியை நீக்கும்.

மல்லிகை வேர்த்தூளையும், வசம்புத்தூளையும் பழச்சாறு கலந்து பூச தோல் நோய்கள் தீரும்.

-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
-ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.