உறக்கத்தில் கொல்லும் Sleep Apnea

Sleep Apnea-thamil.co.uk

உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)

சாதாரணமாக மனிதன் ஒருவன் சுவாசிக்கும் போது, அவன் வாயின் மூலமாகவும், மூக்கின் மூலமாகவும் காற்றை உள்ளே எடுத்து வெளியே விடுகிறான். இந்த மூச்சுக் காற்று சுவாசப் பையை அடையும். மூக்கு, வாய், தொண்டை ஆகியவற்றினூடாகக் காற்றுச் செல்லும் குழாய் போன்ற அமைப்பை பாரிங்ஸ் (Pharynx) என்றழைப்பார்கள்.

விழித்திருக்கும் நிலையில், நாம் சுவாசிக்கும் காற்று எந்தத் தடையுமில்லாமல், ஒட்சிசனுடன் சுவாசப் பையை அடைகிறது. ஆனால் நித்திரை கொள்ளும் போது, தொண்டைக் குழாய்ப் பகுதியில் இருக்கும் சவ்வுகள் வளர்ந்திருக்கும் நிலையிலும், உள்நாக்கு என்று சொல்லப்படும் டான்சில்ஸ் (Tonsils) பெரிதாக வளர்ந்த நிலையிலும், இந்தச் சுவாசக் காற்றுச் செல்லும் பாதை குறுகியதாக அடைபட்டிருக்கும். இந்தக் குறுகிய பகுதியினூடாக மூச்சுக் காற்றுச் செல்லும் வேளையில்தான், மனிதன் குறட்டை விடும் செயல்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.

சாதாரணமாக ஒரு சுகதேகி நித்திரை செய்யும் போது, நூறு சதவீதம் ஒட்சிசன், மூச்சுக் காற்றினூடாக உள்ளே செல்லும். ஆனால், மேலே சொல்லப்பட்ட காரணங்களினால் குறட்டை விடுபவர்களுக்கு அதை விட மிகக்குறைந்த சதவீதத்திலேயே ஒட்சிசன் உடலை அடையும். உணவுச் சமிபாட்டுக்கும், உடல் தொழிற்பாட்டுக்கும் இந்த ஒட்சிசன் மிகவும் முக்கியமானது. ஒட்சிசன் இரத்தத்தில் குறையும் போது, சமிபாடு மந்தமாக நடைபெறுவதால், சமிபாடடையாத உணவுகள் கொழுப்பாகச் சேமிக்கப்பட ஆரம்பிக்கும். இதனால் உடலின் எடை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். அத்துடன் உடலில் மிகவும் சோர்வான நிலையில் எப்போதும் காணப்படும். ஸ்லீப் அப்னியாவின் ஆரம்ப நிலையாக இதைக் கருதலாம்.

ஆனால், இதைவிடக் கடுமையான ஸ்லீப் அப்னியாவும் உண்டு. இதை Obstructive Sleep Apnea என்பார்கள். சிலர் நித்திரை கொள்ளும் போது, அவர்களின் நாக்கு, வாய் போன்ற உறுப்புகள் சற்றே கீழ் நோக்கி அழுத்தப்படும். அப்போது, இந்தப் பாரிங்ஸ் என்னும் குழாய் முற்றாக நெருக்கப்பட்டு, மூடப்பட்டுவும்.  சிறிதளவேனும் மூச்சுக் காற்று உள்ளே செல்ல முடியாதவாறு அது அடைபட்டுக் கொள்கிறது. இப்படி முற்றாக மூச்சுக் காற்று உள்ளே வராமல் அடைபட்டு இருப்பதால், நாம் சுவாசிப்பதை பல நொடிகளுக்கு நிறுத்திவிடுகிறோம். சுவாசிக்காமல் மனிதன் உயிர் வாழ முடியாது அல்லவா? சுவாசப்பைக்கு ஆக்ஸிசன் வரவில்லை என்றதும், அந்தச் செய்தி மூளைக்கு அனுப்பப்படுகிறது. அப்போது மூளை நம்மை நித்திரையிலிருந்து எழுப்பி விடுகிறது. ஆனாலும் நாம் உறக்கத்தில் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளுவோம். இப்படி நித்திரை கொள்ளும் போது, மூச்சுக் காற்றுக்காக நம்மை எழுப்பிவிடும் செயல், பல நூறு தடவைகள் நடைபெறும். நானூறு தடவைகளுக்கு மேலே நடைபெறுவது என்பதெல்லாம் சாதாரணம்.

ஒரு முழு இரவுத் தூக்கத்தின் போது, நானூறு தடவைகளுக்கு மேல் நாம் தூக்கத்திலிருந்து எழுந்து மீண்டும் தூங்கினால், உண்மையில் அது ஒரு முழுமையான தூக்கமாக இருக்க முடியாது. அதை ஒரு விழிப்பு நிலையென்றே சொல்லலாம். ஆனாலும் தூங்கிக் கொண்டிருப்பதாக நாம் நினைப்பதுதான் வேதனை. இதனால் விடிந்து எழுந்ததும் அந்த நாள் முழுவதும் நித்திரைக் கலக்கத்துடனே இருந்து கொள்வோம். எந்த இடத்திலும் அந்த நேரத்திலும் தூங்க ஆரம்பிப்போம். அமெரிக்காவில் அதிகப்படியான கார் விபத்துகளுக்கு இந்த ஸ்லீப் அப்னியாவும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. காரில் செல்லும் போது, நித்திரை கொள்வதால்தான் அதிக விபத்துகள் அங்கே நடக்கின்றன.

சுவாசம் தடைப்பட்டு ஒட்சிசன் சுவாசப் பைக்குச் செல்லாமல் விடும் போது மூளைக்குச் செய்தி போகின்றது என்று பார்த்தோமல்லவா? அந்தக் கணங்களில் மூளையில் சிறிய மின்னல் போன்ற அதிர்ச்சித் தாக்குதல் எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்கும். இந்த மின்னதிர்ச்சி பல காலம் தொடர்ச்சியாக ஏற்படும் நிலையில், திடீரென ஒருநாள் அது பக்கவாத நோய்க்கு அழைத்துச் சென்று விடுகின்றது. அதுபோல, ஒட்சிசன் குறைந்த இரத்தோட்டத்தின் காரணத்தினால், சீரற்ற இதயத் துடிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதுவும் என்றாவது ஒருநாள் மரணத்துக்கு இட்டுச் செல்கிறது. ஒருவர் அதிகமாகக் குறட்டை விடுவதும், அதிகாலையில் எழுந்ததும் தலையிடி போன்ற உணர்வு இருப்பதும், பகல் நேரத்தில் நித்திரை கொள்ள விரும்புவதும், மிகவும் சோர்வாக இருப்பதும், உடல் எடை அதிகரித்துச் செல்வதும், உடன் கோபமடையும் தன்மையுடையவராக இருப்பதும், கவனக் குறைவுகள் ஏற்படுவதும் இந்த நோயின் முக்கிய அடையாளங்களாக கருதப்படுகின்றன.

ஸ்லீப் அப்னியாவைக் கவனிக்காமல் விட்டுவிடுவதால், உயர் இரத்த அழுத்த நோய், இதயக் கோளாறுகள், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, ஊட்டம் குறைந்த இரத்தம், பக்கவாதம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உருவாகலாம். இதன் அதிகபட்ச முடிவாக இறப்பும் ஏற்படலாம். ஆனால், இதைச் சரியாக கவனித்து அதற்குரிய வைத்தியத்தைச் செய்து வருபவர்கள் என்றும் சுகதேகியாக வாழலாம்.

பொருளாதார வசதிகள் உள்ள நாடுகளான மேற்குலக நாடுகளில், ஸ்லீப் அப்னியா நோய் உள்ளவர்களுக்கென, காற்றை செலுத்திக் கொண்டே இருக்கும் சிறிய பெட்டி போன்ற கருவியைக் கொடுகின்றனர். இந்தக் கருவியை CPAP (Continuous Positive Airway Presure) என்று சொல்வார்கள். இந்தக் கருவியுடன் இணைக்கப்பட்ட ஒரு மாஸ்க்கைப் (Mask) பொருத்தியபடியே ஸ்லீப் அப்னியா நோயுள்ளவர்கள் எப்போதும் உறங்க வேண்டும். தொடர்ச்சியாகக் காற்று அந்தக் கருவிமூலம் கிடைப்பதால், மூச்சுத் தடைப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தக் கருவி ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும் கொண்ட மிகச் சிறிய கருவியாகும். இதை வீட்டில் வைத்தே பயன்படுத்தலாம். இதன் மூலம் எத்தனையோ இறப்புகளையும், பக்கவாத தாக்குதல்களையும் தடுத்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற வசதியற்ற நாடுகளில் வசிப்பவர்கள், உடனடியாகத் தங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு வழி செய்தே ஆகவேண்டும். அத்துடன் புகைத்தல், மதுவருந்துதல் பழக்கம் இருந்தால் உடன் நிறுத்திவிட வேண்டும். நித்திரை செய்யும் போது, எப்போதும் பக்கவாட்டிலேயே சரிந்து படுக்க வேண்டும். முடிந்தால், டான்ஸில்ஸ் போன்றவற்றை சத்திரசிகிச்சை மூலமாக நீக்கி மூச்சுக் காற்று வர வழி வகை செய்யலாம்.

இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மக்களிடையே கொஞ்சமும் இல்லாததால், நான் சொன்னதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த நோய் பற்றி இணையத்தின் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ அறிந்து கொள்ளும் போது நிச்சயம் அதிர்ச்சியே காத்திருக்கும். இந்த நோயைப் பற்றிய அறியாமையினாலும், அலட்சியத்தினாலும் நம் உறவுகளில் பலரை நாம் இழந்திருக்கிறோம் என்பதைக் கூட நாம் அறிந்து கொள்ளவில்லை என்பதுதான் நிஜம். இனியாவது விழித்துக் கொள்வோம்.

தற்போது குறட்டை வியாதியான ஸ்லீப் அப்னியாவுக்கு பலவகை சிகிச்சைகள் இருக்கின்றன. சுவாச மண்டலத்தில் ஏற்படும் காற்று அடைப்பை சரி செய்தாலே குறட்டை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

• முதலில் நோயாளியின் உடல் எடை இருக்க வேண்டிய அளவுக்கு குறைக்கப்பட வேண்டும்.
• புகைபிடித்தல், மது அருந்துதல் இவை நிறுத்தப்பட வேண்டும்.
• குறட்டை விடுபவர்கள் பக்கவாட்டில் படுத்தால் குறட்டை விடுவது குறையும் அல்லது நிற்கும். மல்லாந்து படுக்கமாலிருக்க, முதுகில் சிறிய பந்து அல்லது, துணி முடிச்சு, சிறு தலையணை, போன்றவற்றை முதுகில் கட்டிக் கொண்டு தூங்கினால் மல்லாந்து படுக்க முடியாது.
• தூக்கத்தின் போது அணிந்து கொள்ள முகமூடி (Mask) ஒன்று கொடுக்கப்படுகிறது. இதனால் அடைப்பின்றி ஒட்சிசன் சுவாசிக்கப்படுகிறது.
• அறுவை சிகிச்சையால் அடினாய்ட், டான்சில், மூக்கு, தொண்டை, நாக்கு சதைகள் சரி செய்யப்படுகின்றன.

மல்லாந்து படுப்பதால் குறட்டை ஏன் அதிகமாகின்றது?
நாம் தூங்கும்போது நாக்கு, தொண்டை, மேலண்ணம் போன்ற வாய்சதைகள் இறுக்கம் குறைந்து தளர்ந்து விடுகின்றன. மல்லாந்து படுத்தால் புவி ஈர்ப்பு சக்தியால், இந்த சதைகள், டான்ஸில்ஸ் இவையெல்லாம் பின்னோக்கி ஈர்க்கப்படுகின்றன. பின்னோக்கி சரியும் போது இந்த தசைகள் சுவாசக் குழாயை அழுத்துவதால் அதில் காற்றுத்தடை உண்டாகி, குறட்டை சப்தம் எழும்புகிறது.

• தலையணைகளை உயர்த்திக் கொள்வதால் குறட்டையை குறைக்கலாம்.

• தொண்டை, நாக்குகளுக்கான பிரத்யேக பயிற்சிகள், பிராணாயாமம் போன்ற சுவாசப்பயிற்சிகள் பலன்தரும். தாடைப் பயிற்சிகளும் உதவலாம்.

• கொதிக்கும் நீரின் நீராவியை மூக்கால் இழுப்பது, எளிய ஆனால் பலன்தரும் சிகிச்சை. கொதிக்கும் நீரில் மார்ஜோரம், (Origanum Majorana – mint family) போன்ற மூலிகைகளையும் போட்டு, நீராவியையும் சேர்த்து இழுத்தால் நல்ல பலன் தெரியும். மூக்கடைப்பு நீங்குவதால் சுவாசம் சரிவர இயங்கும். குறட்டையும் குறையும்.

• தொண்டை, மூக்கில் நுண் துளிகளாக தெளிக்க செய்யும் சாதனத்தால், (Aerosol spray) புதினாவிலிருந்து கிடைக்கும் பெப்பர் மின்ட் (Pepper mint) எண்ணெய்யை ‘ஸ்ப்ரே’ செய்து கொள்ளலாம்.

• சிறிதளவு சூட்டில் ‘பிரம்மி’ (Bacopa Monnieri.) நெய்யை 4-5 துளிகள், மூக்கில் விட்டுக் கொள்ளலாம். (படுக்கும்முன்)

• தேன் சேர்த்த இஞ்சி சாற்றை படுக்கும்முன் குடிக்கலாம்.

• அஜீரணத்தால், விருந்து உணவுகளாலும் சில சமயம் குறட்டை உண்டாகும். புதினா தயாரிப்புகளான பெப்பர் மினட், ஸ்பியர் பின்ட், அல்லது புதினா காப்சூல்களால் அஜீரணத்தை போக்கிக் கொண்டால், குறட்டை குறையும்.

-ராஜ்சிவா
-amanushyam