ஐந்து வகை நமஸ்காரங்கள்

நமஸ்காரங்கள்நமஸ்காரங்கள் ஏகாங்கம், திவியாங்கம், திரியாங்கம், பஞ்சாங்கம், அஷ்டாங்கம் என ஐந்து வகைப்படும். உடலுறுப்புக்கு அங்கம் என்று பொருள்.

ஏகாங்க நமஸ்காரம் என்பது தலையாகிய உறுப்பை மட்டும் தாழ்த்தி வணங்குதலாகும்.

திரியாங்க நமஸ்காரம் என்பது தலையின் மீது இரண்டு கைகளையும் குவித்து வணங்குதலாகும்.

இரு கைகள், முழந்தாள் இரண்டு, தலை ஆகிய ஐந்து அங்கங்களும் நிலத்தில் பதிய வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும்.

அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, இரு கைகள், இரு செவிகள், இரண்டு முழந்தாள், மார்பு என எட்டு அங்கங்களும் நிலத்தில் பதிய வணங்குவது ஆகும்.

தலை, இரு கரங்கள், இரு முழந்தாள், மார்பு என ஆறு அங்கங்கள் நிலத்தில் படுமாறு வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

ஆடவர் அஷ்டாங்க நமஸ்காரத்தையும், பெண்டிர் பஞ்சாங்க நமஸ்காரத்தையும் செய்தல் வேண்டும். ஏகாங்க, திவியாங்க, திரியாங்க நமஸ்காரங்கள் ஆடவர், பெண்டிர் ஆகிய இருபாலர்க்கும் பொதுவாகும்.

பஞ்சாங்க நமஸ்காரம், அஷ்டாங்க நமஸ்காரம் செய்யும்போது மூன்று ஐந்து ஏழு, ஒன்பது அல்லது பன்னிரண்டு தரம் செய்தல் வேண்டும். ஒரு தரம், இருதரம் செய்தல் குற்றமாகும்.

நமஸ்காரம் செய்யும்போது கிழக்கேனும் வடக்கேனும் கால் நீட்டலாகாது. மேற்கேனும் தெற்கேனும் கால் நீட்டல் வேண்டும்.

அஷ்டாங்க நமஸ்காரம் செய்யும்போது முன்னர் சிரசை வைத்து மார்பு பூமியில் படும்படி வலதுகையை முன்னும் இடதுகையை பின்னும் நேரே நீட்டி பின்னர் அம்முறையை மடக்கி வலத்தோலும் இடத்தோலும் தரையில் பொருந்தும்படி கைகைளை இடுப்பை நோக்க நீட்டி, வலது காதை முன்னும் பின்னும் இடது காதை பின்னும் பூமியில் தோயும்படி நமஸ்காரம் செய்தல் வேண்டும்.

விநாயகரை ஒருமுறையும், முருகனை மூன்று முறையும் சிவபெருமானை மூன்று முறை அல்லது ஐந்து, ஏழு, ஒன்பது, பதினைந்து, இருபத்தொன்று, முறைகளும், உமா தேவியரையும் திருமாலையும் நான்கு முறையும், சூரியனை இரண்டு முறையும், மற்றைய கடவுளை மூன்று முறையும், சக்திகளை நான்கு முறையும் வலம் வருதல் வேண்டும்.

பிராகாரத்தை வலம் வருதல் போகத்தையும், இடம் வருதல் மோட்சத்தையும் வலம் இடம் வருதல் போக மோட்சத்தையும் தரும் என ஆன்றோர் கூறுவர்.

தொகுப்பு – thamil.co.uk