அர்த்தம் நிறைந்த தாந்திரீய சைவமும் அர்த்தம் அற்ற இந்து மதமும் : சிவ மேனகை

தாந்திரீய சைவம்ஹிந்து, சிந்து, ஜிந்து,என்ற சொற்களை வேற்று இன தரகர்களிடம் கடன் பெற்று இந்து என்ற சொல்லை உருவாக்கி அதற்கு சிந்து வெளியையும் சிந்துநதியையும் சிந்துவெளி நாகரீகத்தையும் அங்கு கிடைத்த தொல்பொருள் சான்றுகளையும் ஆதாரம் காட்டி 5000 ஆண்டு வரலாறு கொண்ட ஒரு இனத்தவராக நாமே எம்மை மாற்றி இந்து மதம் என்ற சொல்லை நமது நெறியாக்கிக் கொண்டோம்.

நாம் சுமேரியருக்கும், சீனர்களுக்கும், கிரேக்கர்களுக்கும், எகிப்தியர்களுக்கும், ஸ்பானியர்களுக்கும், ரோமானியர்களுக்கும் பின்வந்த இனத்தவரா என்று கேட்டால் உடனே இல்லை என்று சொல்கின்றோம். ஏன் இல்லை இவர்களுக்கும் 5000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்புக்கள் ஆதாரங்கள் சான்றுகள் உண்டு. அப்படியானால் எமது தொன்மையை நாம் அவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இனம் என்று நிறுவ வேண்டும். அப்படி நிறுவவேண்டுமானால் 5000 ஆண்டு மட்டும் பாவனையில் உள்ள இந்துமதம் என்பதை வைத்து நிறுவ முடியுமா? ,இல்லை. அதற்கு முன்னரான உண்மை வரலாறுகளை தேடவேண்டும்.

வரலாறுகள் இனங்களை கொண்டும், அவர்கள் வாழ்ந்த இடங்களை கொண்டும், அரசாண்ட மன்னர்களை கொண்டும் அவர்கள் பின்பற்றிய நாகரீக நெறிகளை கொண்டுமே நிறுவப்படுகின்றது. அந்தவகையில் மாணிக்கவாசகர் சொன்ன ஒரு வாசகத்தை நினைவுக்கு கொண்டு வருகின்றேன். மாணிக்கவாசகர் தென்னாடுடைய சிவனே போற்றி… என்று தெளிவாக ஒரு கருத்தை ஆணித்தரமாக சொல்லி இருக்கின்றார். அவர் சொன்ன தென்னாடு எது..?. இந்தியாவுக்கு தென்னாடு தமிழ்நாடு மற்றும் இலங்கை. இன்று சிவன் தவம் செய்வதாக சொல்லப்படும் இமயமலை வடநாடு. அப்படியானால் மாணிக்கவாசகர் தவறாக சொல்லி விட்டாரா இல்லவே இல்லை அவர் சொன்னது மிகவும் சரியான கருத்து. மாணிக்கவாசகர் சொன்ன தென்னாடு குமரி கண்டம். இது குமரி மலையையும், குமரி ஆற்றையும், பிளிறு மலையையும், பிளிறு ஆற்றையும் அடிப்படையாக கொண்டு 7 பெரிய மாநிலமாக பிரிக்கப்பட்ட 49 குறுநில மன்னர்களை கொண்டு இயங்கிய கொண்ட நாடு. இங்கு முதன்மையாக போற்றப்பட்டவர் சிவன். இவரே சக்தி இன்றி சிவம் இல்லை என்ற தாய் தந்தை வழிபாட்டை முதன்மையாக கொண்ட தாந்திரீய சைவ நெறியை நிறுவி நடைமுறைபடுத்தியவர்.

குமரி கண்டம்-thamil.co.ukஇந்த நாட்டின் வரலாற்று தொன்மையை 21000 ஆண்டு வரை வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவினாலும் கற்பனை சாயம் பூசப்பட்டும் உண்மைகள் மறைக்கப் பட்டும் எழுதப்பட்ட புராண இதிகாச கதைகள் மூலமும் கடல் அழிவுகளில் ஆதார பூர்வமான நிறுவல்கள் மூலமும், பகுத்தறிவாளர்கள் உண்மையான ஒரு வரலாறும் அங்கு இருந்து இருக்கின்றது என்று வரையறுக்கும் காலம், இன்றைக்கு 11000/16000 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம். இந்த காலத்தில் இங்கு படிப்படியாக ஒரு நாகரீக வளர்சி பெற்ற இனம் வாழ்ந்து இருக்கின்றது. கிமு 9000 ஆண்டளவில் நடைபெற்றதாகக் கூறப்படும் முருகன் சூரன் போரை வைத்து இலங்கை என்று ஒருநாடு பிரித்து பேசப்படுவதால் இதற்கு சிலகாலத்துக்கு முன்னம் குமரிகண்டம் கடல்கோளால் அழிவுற்று இருக்கலாம்.

குமரிகண்டம் அழிவுற்ற பின்னரும் இராவணன் ஆண்ட கி.மு 6700 காலப்பகுதியில் தாந்திரீய சைவத்தின் அருவுருவ வழிபாட்டில் தாய் தந்தையர் இணைந்த நிலை வடிவமான சிவலிங்க வழிபாட்டை வழிபாடு செய்தார்கள். இந்த காலத்திலேயே, இராவணன் மயனின் தொழிநுட்ப அறிவோடு ஈழத்திலும் குபேரனால் மயனின் உதவியோடு அழகாபுரியிலும் சிவாலயங்கள் கட்டப்பட்டது. இந்த அழகாபுரி என்பது தமிழ்நாடா இல்லை மௌரிசியஸ்சா என்று இன்னும் முடிவாக சொல்ல முடியவில்லை, ஆய்வுகள் தொடர்கின்றது.

திருகேதீஸ்வரம்

திருகேதீஸ்வரம்

நயினை நாகபூசணி அம்மன்

நயினை நாகபூசணி அம்மன்

நாகர்கள், இந்திரன் போன்றவர்கள் சக்தி ஆலயங்கள் அமைத்து வழிபாடு செய்தார்கள். இந்த ஆலயங்களில் இன்றும் இருக்கும் எனக்குத் தெரிந்த இரண்டு ஆலயங்கள் ஒன்று மன்னார் மாதோட்டத்தில் உள்ள திருகேதீஸ்வரம். இது மயனால் கட்டப்பட்டது. அடுத்தது நயினை நாகபூசணி அம்மன் ஆலயம். இது நாகர்கள் இராவணன் மகன் இந்திரஜித்துவிடம் இருந்து தன்னை காப்பாற்றியதற்காக கைமாறாக இந்திரனால் தேவசிற்பி விஸ்வகர்மாவை வைத்து கட்டி கொடுத்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். இதில் நயினை நாகபூசணி அம்மன் ஆலய கருவறையில் இருக்கும் ஐந்து தலை நாகசிலை 8000 ஆண்டுக்கு மேலாக பழமை வாய்ந்தது என்று தற்கால ஆய்வாளர்களும் உறுதியாக தெரிவிக்கின்றார்கள்.  எனவே சத்தியும் சிவமும் இணைந்த தாந்திரீய சைவம் இன்றும் நயினாதீவில் இருக்கின்றது. சமகாலத்தில் முருகனையும் மக்கள் வணங்கினார்கள். சமகாலத்தில் இயற்கை வழிபாட்டோடு ஒன்றியிருந்த மக்கள் சூரியனையும் வணங்கினார்கள். கணபதி வழிபாடு பற்றிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் புராணக்கதைகளில் கணபதியைப் பற்றிய கதைகள் வருவதால் கணபதி வழிபாடும் இருந்திருக்கலாம். இவை அனைத்தும் தாந்திரீய சைவ நெறிக்குள்ளேயே வழிபடும் தெய்வங்களாக இருந்திருக்கின்றது.

வடநாட்டில் இருந்து வந்த இராமன் தமிழ்நாட்டில் வலிமையாக இருந்த வாலியை வஞ்சகமாக கொன்று தமிழ் நாட்டவர்கள் உதவியை துரோக வழியில் பெற்று சிவதாசன் இராவணனை கொன்று தாந்திரீய சைவத்தையும் சிதைப்பதற்கு ஆரம்ப புள்ளியை வைத்தான். அவனுடன் சாபமாக தொற்றி கொண்ட பிரம்மகத்தி தோஷத்தையும் சிவலிங்கம் அமைத்து சாந்தி செய்து விலக்கிக் கொண்டான். இவன் காலத்துக்குப் பின்னரே இமய மலையில் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்து மக்கள் வணங்கினார்கள். எனவே இமயமலையில் சிவலிங்க வழிபாடு செய்யப்பட்ட காலம் கி மு 6700 பிற்பட்ட காலத்திலேயே ஆகும்.

வடநாட்டில் இராமன் ஆட்சி முடிந்து இராமன் இறந்த பின்னர் தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டு இராமனையும் தெய்வமாக ஏற்று கொண்டார்கள். வெல்பவன் சொல்வது வேதம், வேதத்தில் ஆணவம் கொண்ட கொல்பவன் தெய்வம் என்ற சொல்லுக்கு மக்கள் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. இது துவாரக யுகத்திலும் தொடந்து கலியுகத்தின் ஆரம்பத்தில் 40 இலட்சம் மக்கள் இறக்கக் காரணமாக இருந்த மகாபாரத கிருஷ்ணரையும் இணைத்து தெய்வம் ஆக்கினார்கள். ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத கிருஸ்ணர், இராமன் முதல் ஆதிசேடன் என்ற நாகபாம்பின் மீது பள்ளி கொள்ளும் இலட்சுமி நாயகன் திருமாலையும் இணைத்து தசாவதாரம் ஆக்கி கீதோபதேசம் புனைந்து தெய்வநிலை கொடுத்தார்கள். இந்தக் காலத்திலேயே அதாவது இன்றைக்கு 5000 ஆண்டுக்கு முன்னம், வேதவியாசரை வைத்து வென்றவர்கள் அனைவரையும் தேவர்களாக வர்ணித்து, வேதங்களை தொகுத்தார்கள். தோற்றவர்களை அரக்கர்களாகவும் அசுரர்களாகவும் ஆரம்பத்தில் வர்ணித்தார்கள். பின்னர் வர்ண பாகுபாடுகளை புகுத்தி உயர்வு தாழ்வுகளை ஏற்படுத்தினார்கள். தேவலோகத்து முகவர் நாரதரை கருபொருளாக வைத்து பார்வதி பரமேஸ்வரன் குடும்பம் ஒன்றை உருவாக்கி ஒரு மாம்பழத்தை கொடுத்து முருகனும் பிள்ளையாரும் சண்டை பிடித்து வெளியேறியதாக புனைகதையும் எழுதினார்கள். இவற்றை எல்லாம் வைத்து பிரிவினைகளை தோற்றுவித்தார்கள். தசாவதாரத்துக்கு விஸ்ணு என்று ஒரு புனை பெயர் கொடுத்தவர்கள் அவரை தெய்வமாக மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்பதற்காக வைஸ்ணவம் என்று ஒரு தனிநெறியை உருவாக்கினார்கள்.

இந்தகாலத்தில் சிந்துவெளி கடல்கோள் உருவாகி மக்களிடையே பெரும் அழிவுகள் ஏற்பட்டது. துன்பத்தில் இருக்கும் மக்களை இலகுவாக மனமாற்றம் செய்யலாம் என்று சிந்தித்த வடநாட்டவர்கள் தாந்திரீய சைவத்தை; சைவம், சாக்தம் சௌரம், சௌமாரம்,காணபத்தியம், வைஷ்ணவம் என்று பாகம் பிரித்து 6 துண்டாக்கி அதில் ஒன்றாக வைணவத்தையும் இணைத்து கொண்டார்கள். இதற்கு பொதுவான பெயராக சிந்து ஆதாவது இந்து என்ற சொல்லை பயன்படுத்தி இந்துமதம் என்று பெயரிட்டார்கள்.

எனவே இந்து மதம் என்பது இல்லாத ஒரு மாயை. தாந்திரீய சைவத்தை இல்லாமல் செய்ய வந்த இல்லாத ஒரு சொல். அடுத்து தசாவதாரத்திலும் விஸ்ணு என்ற பெயர் எங்கும் பாவனைக்கு வரவில்லை. எனவே விஸ்ணு என்பதும் ஒரு புனைவு. விஷ்ணுவை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இந்து மதம் என்பதும் தமிழனை பொறுத்தவரையில் எந்த ஒரு அர்த்தமும் அற்ற சொல்.

தாய் தந்த உண்மையான நெறி………. தாந்திரிய சைவம்… சத்தி இன்றி சிவம் இல்லை…… அன்னை தந்தை வழிபாடு….. உண்மையான உயர்ந்த நெறி இது ஒன்று தான்……  இது மதங்களை கடந்து மனிதத்தை நேசித்த நெறி.

இன்று இந்துமதம் என்ற மாயையால் 6 துண்டாக துண்டாடபட்டு இல்லாமல் போய்கொண்டு இருக்கின்றது. இன்றைய நிலையில் தாந்திரிய சைவத்தை நெறிப்படுத்திய தென்னாட்டை ஆண்ட சிவன் வந்து சொன்னாலும் நாம் திருந்த போவதில்லை…… மேன்மையான சைவநீதியை யாரும் புரிந்து கொள்ள போவதில்லை……….. மேன்மை கொல் நீசர்களை விலக்குக உலகம் எல்லாம்……….. நன்றியுடன் ,சிவமேனகை.

சிவ மேனகை
11 June 2013