புளியமரம்

மூலிகையின் பெயர் –  புளி
வேறு பெயர்கள்  அமிலம், சிந்தூரம், சிந்தகம், சஞ்சீவகரணி
குடும்பம்  Caesalpinioidaeae
தாவரவியல் பெயர் – Tamarindus indica L.

புளியமரம்-thamil.co.ukஇதன் தாயகம் இந்தியா என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் இம்மரத்தின் தாயகம் வெப்ப மண்டல ஆப்பிரிக்காவாக இருக்கும் எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் காடுகளில் தானாக வளரும். சாலை ஓரங்களில் இம்மரத்தை வளர்ப்பதும் உண்டு. ஆனால் தென்னை, மா, பலா, முந்திரி போன்ற மரங்களைப் போல் இம்மரத்தைப் பெரும் எண்ணிக்கையில் வளர்ப்பதில்லை.

புளியமரம் பெரும்பாலும் நட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரே காய்த்துப் பயன்தரத் தொடங்குகிறது. இது 100 ஆண்டுகளுக்கு மேலும் வளரும். புளியமரம் 25 மீட்டர் உயரம் வளரும். 8-10 மீட்டர் சுற்றளவைக் கொண்டிருக்கும். இம்மரம் உறுதியானது. இதன் பக்கக் கிளைகள் பரவிக் காணப்படும். இவை எளிதில் முறிவதில்லை.

புளியமரத்தின் இலை, பூ, பிஞ்சு, பழம், ஓடு, விதை, பருப்பு, மரம் முதலியவை நன்கு பயனாகின்றன. புளியமரம் உறுதியானது. மரவேலை செய்யக் கடினமானது. சக்கரம், கொட்டாப்புளி, உலக்கை, செக்கு, உரல், கரும்பலகை முதலியவற்றைச் செய்ய இது பயன்படுகிறது. எரிதிறன் 4909 கிலோ கலோரி ஆகும். புளியமரத்தைப் பிளந்து விறகாக எரிக்கலாம். துப்பாக்கிக்கு உரிய வெடிமருந்துத் தயாரிப்பில் சிகிகரி பயனாகிறது. மரப்பட்டையில் 7% மடனின் உள்ளது. பட்டையிலிருந்து கோந்து வடியும். புளியமரத்தைக் காற்றுத் தடைக்காக வளர்க்கலாம். இதனை வளர்த்தால் மண் அரிப்பு உண்டாகாது.

புளியம் இலைபுளியம் இலையைக் கொண்டு பட்டுத்துணிகளுக்குப் பச்சை நிறச் சாயம் தோய்க்கலாம். புளியம் இலையுடன் அவுரி நீலத்தைச் சேர்த்தால் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம் கிடைக்கும்.

வீக்கம் கரையப் புளிய இலையை வதக்கிச் சூடு பொறுக்குமளவில் ஒற்றடம் கொடுத்த பின் கட்டுவதுண்டு.

புளியம் இலை, வேப்பிலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி அந்நீரைக் கொண்டு புண்களைக் கழுவ ஆறாதப் புண்கள் விரைவில் குணமாகும்.

பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தீரும். புளியம் பிஞ்சுகளைச் சிறுசிறு துண்டுகளாக்கி உப்பில் ஊறவைத்து உண்பதுண்டு.

புளியம் பழங்களின் சுவை மரத்தின் வகைக்கு ஏற்பவும், விளையும் நிலப்பகுதிக்கு ஏற்பவும் இனிப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கும். புளி விதைப் பொடியைத் துணித்தொழிற்சாலையில் பயன்படுத்துவர்.

ஜாம், ஜெல்லி, மார்மலேட் முதலியவற்றிற்குரிய ஜெல்லோஸ் தயாரிக்க இது உதவுகிறது. விதை புரதம் நிறைந்தது. இப்புரதத்தில் புரோலமின், குளுட்டெலின், ஆல்புமின் ஆகியவை உள்ளன.

புளிய விதை எண்ணெயைக் கொண்டு வர்ணங்கள் வார்னிஷ் இவற்றைத் தயாரிக்கலாம். விளக்கு எரிக்கலாம்.

புளி-புளியம் பருப்பிலிருந்து தயாரித்த பசையைக் கொண்டு பலகைகள் ஒட்டப்படுகின்றன. சிமெண்டைப் போல இது கெட்டியாக ஒட்டும்.

கசப்பான விதைத்தோல் வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைப் போக்கும். விதையிலிருந்து அரைத்த பசையைக் கொப்புளங்களுக்குத் தடவலாம்.

கொட்டையினால் கழிச்சல், புண், நீர்க்கடுப்பு, வெள்ளை ஆகியவை போகும்.

புளியைக் கொண்டு பித்தளை, செம்பு பாத்திரங்களையும், இசைக் கருவிகளையும் துலக்கினால் அழுக்கு நீங்கி பளபளப்பான தோற்றம் கிட்டும். வெள்ளி நகை, பாத்திரங்கள் ஆகியவற்றிற்கும் வணிகர்கள் புளியைப் பயன்படுத்துவர்.

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர், சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

 

புளி இலைஇரத்தத்தை சுத்தப்படுத்தும் புளியம் இலை

புளி நமது உணவு முறையில் ஒரு முக்கியமான பொருளாகும். புளியம் பழம் ஒன்றுதான் புளி மரத்தில் கிடைக்கும் பலன் என நாம் என்னுகிறோம். புளி இலையும் சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது. இது வயிற்றை சுத்தப்படுத்தி கிருமிநாசிகளை அளிக்கிறது. புளி இலை ஒரு ஆயுர்வேத மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இரைப்பை பிரச்சனை, சமிபாட்டுப் பிரச்சனை போன்றவற்றை தீர்த்து இதயத்துடிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

புளி ஒரு மென்மையான மலமிளக்கியாக செயல்படுகிறது. புளியை மாலை வேளையில் சிறிது புளியாகாரம் செய்து சாப்பிடுவதனால் குடல் இயக்கங்களை மேம்படுத்தலாம். புளி பித்த நீரால் ஏற்பட்ட கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

புளி இலைகளை மூலிகை தேநீர் செய்து குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம். புளி உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைத்து ஆரோக்கியமான இதயத்தை ஊக்குவிப்பதற்கு உதவுகிறது.

நீர்த்த புளிசாறு தொண்டையில் ஏற்படும் புண்ணை குணமாக்குகிறது.

புளி இலைகள் காபி தண்ணீரில் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை மற்றும் புண்களை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

புளி இலை சேர்த்த கோப்பி குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அளிக்கிறது. விட்டமின் C பற்றாக்குறையை புளிபழம் சரி செய்கிறது. முக்கியமாக தோலில் ஏற்படும் அழற்சியை குணமாக்கும்.

ஆக்ஸிஜனேற்றத்திற்கு நல்ல ஆதாரமாக இருப்பது புளி, ஆதலால் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு உதவி புரிகிறது. மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

புளியன் கொழுந்தை பக்குவபடுத்தி உணவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். புளியன்கொழுந்தை தேவையான அளவு எடுத்து அத்துடன் பருப்பு சேர்த்து கூட்டு போன்று செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

புளியங்கொழுந்தை பச்சையாக சாப்பிட்டால் கண் தொடர்பான பிணிகள் அகலும்.

பாண்டு ரோகத்தை குணமாக்கும் சக்தியும் உண்டு. உள்வெளி ரணங்களை குணமாக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

-hemamenan.blogspot.co.uk
-Dinakaran

தொகுப்பு – thamil.co.uk