இலங்கை எப்பொழுது எவ்வாறு உருவாகியது!

lemuria-thamil.co.ukஇலங்கை என்ற தீவு நாடு எப்பொழுது எவ்வாறு உருவாகியது- சிவமேனகை

இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்படும் இலங்கை இன்று உலகம் விரும்பும் மிகப்பெரிய சொத்தாகவும் இருக்கிறது. இந்த அனைவரும் விரும்பும் சொத்தான முத்தான எமது இலங்கை என்ற தீவு நாடு எப்பொழுது உருவானது என்பது பற்றி உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை உறுதியான ஆதார தகவல்கள் இருப்பதாக யான் அறியவில்லை. கடல் அழிவில் இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடானது என்றும். குமரிக்கண்ட கடல் அழிவின் பொழுது பல புதிய தனித்தனி நாடுகள் உருவான பொழுது இலங்கை என்றொரு தீவு நாடு உருவானது என்றும் தகவல்கள் பல வரலாற்று ஆசிரியர்களால் கூறப்பட்டு உள்ளது. அது எப்பொழுது நடைபெற்றது என்பதை ஆய்ந்து அறிந்து உறுதிப்படுத்துவது ஒரு மிக கடினமான பணியாக இருந்தாலும் அறிவுக்கு எட்டியவகையில் ஆய்வு செய்து நிறுவவேண்டியது ஒரு கடமையாகவே இருக்கிறது.

ஒரு வரலாற்றை ஆய்வு செய்து உறுதிப்படுத்துவதற்கு ஆதார ரீதியான சான்றுகள் முக்கியம். ஆனால் ஆதிகால வரலாறுகளுக்கு ஆதாரங்களை தேடுவது சுலபமான விடயம் அல்ல. பல வழிகளில் தேடினால் சிறு துரும்பான ஒரு விடயம் கிடைக்கும். அதை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தால் ஓரளவு திருப்தியான பதில் கிடைக்கும் அதை எதிர்காலம் மேலும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர்க்கமான முடிவுகளை முன்வைப்பார்கள்.

தொன்மையான வரலாற்றை அறிய வரலாற்றை தேடும் பொழுது அறிவியல் ரீதியாக முதலில் குறிப்புக்களை எழுதி கண்டுபிடிப்புக்களை செய்து கருத்துக்களை முன்வைத்தவர்கள் என்று பார்க்கும் பொழுது கிரேக்க தத்துவ மேதைகள் முதன்மை பெறுகின்றார்கள். யான் அறிந்தவரையில் கடல் அழிவுகள் பற்றி முதலில் எழுத்துவடிவில் கருத்துக்களை கதைகளாகவும் குறிப்புக்களாகவும் எழுதிவைத்தவர்கள் அவர்களே. பின்வந்த வரலாற்று ஆசிரியர்கள் ஆதார பூர்வமாக நிறுவும் கருத்துக்களை இவர்கள் கருத்தாக வைத்தே நிறுவி இருக்கின்றார்கள்.

நாம் முதல் தோன்றிய மொழி தமிழ் அதனால் முதலில் தோன்றிய நூல்கள் அகத்தியம், தொல்காப்பியம், புராணம், இதிகாசம், சங்க நூல்கள் என ஒரு நூல்வரிசையை அடுக்குகின்றோம். இவை பழமையான வரலாற்றை சித்தரிக்கும் வகையில் வரலாறுகளாக எழுந்த நூல்களாக இருக்கலாம். தமிழ் முதல் தோன்றிய மொழி என்பதில் கூட சரியானது. ஆனால் இந்த நூல்கள் எழுதப்பட்ட காலம் கிரேக்க தத்துவ மேதைகள் குறிப்புக்கள் எழுதப்பட்ட காலத்துக்கு பிந்தியதாகவே இருக்கிறது என்பது பலரால் நிறுவப்படும் விடயம். எமது நூல்கள் எழுதிய காலம் பிந்தியதாக இருப்பதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. நாம் தமிழ்மொழியை எழுத முதலில் பயன்படுத்திய நாகரி எழுத்தை சமஸ்கிருதத்துக்கு இன்று விட்டு கொடுத்துவிட்டு அது வடமொழி என்று இன்று நாம் சொல்வதாகும். நாம் இன்று தமிழை எழுதும் நெடுங்கணக்கு எழுத்துவடிவம் பிற்காலத்தில் உருவானதால் எமது நூல்களின் காலமும் பிற்காலத்தை இடம் பிடித்து உள்ளது. அநேகமான எமது மூல நூல்கள் வடமொழி என்று நாம் சொல்லும் எமது முன்னைய நாகரி எழுத்து வடிவத்தில் இருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.

உலகம் தோற்றம், வடிவம், கோள்கள், நட்சத்திரங்கள், கண்டங்கள், கடல்கள், நாடுகள் என்பன பற்றி இன்றைய உலகம் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களை முதலில் வெளிவிட்டவர்கள் கிரேக்கர்கள். இவர்கள் கருத்துக்களை அடிப்படையாக வைத்தே பிற்காலத்தவர்கள் பல விஞ்ஞான கண்டு பிடிப்புக்களை கண்டுபிடித்தும் பல வானியல் புவியியல் விடயங்களை உறுதிப்படுத்தியும் இருக்கின்றார்கள். இதை இன்றைய வல்லரசு நாட்டு ஆய்வாளர்கள் கூட மறுக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றேன்.

உலகில் ஏற்பட்ட கடல் அழிவுகள் பற்றி நம்பத்தகும் கருத்துக்களை முதன் முதலில் கூறியவர்களும் கிரேக்கர்கள் தான். அவர்களில் சாக்கிரட்டீஸ் மாணவனான பிளேட்டோ என்ற தத்துவமேதை (கி மு 427/கி மு 347 காலப்பகுதியில் வாழ்ந்தவர்) கூறிய கருத்தை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட அத்திலாந்து சரித்திரம், லொஸ்ட் ஒப் லெமூரியா போன்ற நூல்களில் நாம் இன்று வரலாற்றுக்கு எடுக்க கூடிய அத்லாந்திக், லெமூரியா (குமரி கண்டம்) கண்டங்களை அழித்து நாடுகளை உருவாக்கிய முதலாவது கடல் அழிவு எப்பொழுது ஏற்பட்டது என்ற தகவல் உள்ளது.

The lost lemuria-thamil.co.uk1898 இல் அத்திலாந்து சமுத்திரம் என்ற ஆய்வு நூல் எழுதிய மேலைத்தேச ஆய்வாளர் பெர்டினண்ட் கித்டேல் குறிப்பிட்டுள்ள கருத்தின்படி 11481 ஆண்டுகளுக்கு முன்னம் மிகப்பெரிய கடல் அழிவு வந்தது அந்த கடல் அழிவின் பின்னரே பல நாடுகள் புதிதாக உருவாகியது என்று அவர் கருத்தொன்றை முன்வைத்து சென்று இருக்கின்றார். இதே கருத்தை பேரறிஞர் எலியட் என்பவரும் lost lemuria /லொஸ்ட் லெமுரியா /என்ற நூலில் மேற்கோள் காட்டி இருக்கின்றார். எனவே இரண்டும் சமகாலத்தில் ஏற்பட்ட ஒரே மிக பெரும் கடல் அழிவாக கருதப்படுகின்றது.

அத்திலாந்து சமுத்திரம் எழுதியவரின் கருத்தின்படி எனது கணிப்பு இன்றைக்கு (2013).. 11596 வருடங்களுக்கு முன்னம் அந்த கடல் அழிவு வந்ததாயின் அதுவே இன்றைக்கு சர்சைக்கு உரிய விடயமாக இருக்கும் முற்காலத்தில் இருந்ததாக பல ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தும் இரு பெரும் கண்டங்களான அத்லாந்திக் மற்றும் குமரிகண்ட கடல் அழிவாக கருத இடமுண்டு. இந்த கடல் அழிவில் இந்த கண்டங்களில் பெரும் பகுதி கடலில் மூழ்கி போக உலகில் பல புதிய சிறிய நாடுகள் தோன்றியதாக கூறப்படுகின்றது. அவ்வாறே இலங்கையும் இந்தியாவும் குமரி கண்டத்தில் இருந்து தனியாக பிரிந்தது என்று கருதப்படுகின்றது. அதாவது கி மு 9583 இல் இலங்கையும் இந்தியாவும் குமரி கண்ட பகுதிகளின் அழிவின் பின்னர் பிரிந்தது என்று ஒரு கருத்தை முன்வைக்கலாம். இந்த கடல் அழிவின் பொழுது குமரி கண்டத்தில் இருந்த 49 நாடுகள் கடலில் மூழ்கியதாக தேவநேய பாவாணர் கூறுகின்றார்.

இதுவே புராணங்கள் கூறும் ஊழி காலத்தில் ஏற்பட்ட பெரும் கடல் அழிவு என்றும் நாம் கூறலாம். இன்றைய யதார்த்த வாதிகளும் ஆன்மீக கருத்துக்களை எதிர்பவர்களும் புராணங்கள் இதிகாசங்கள் முழுமையான புனைவுகள் என்று கடினமான எதிர்கருத்துக்களை முன்வைக்கும் அதே வேளை நாசா விஞ்ஞானிகளும் மேலைத்தேச ஆய்வாளர்களும் புராணங்களை தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து அதில் உள்ள கருத்துக்களை ஆய்வு செய்கின்றார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

புராண இதிகாச வரலாறுகளை பலர் மறுப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது உலகம் தோன்றிய காலத்தில் இன்று நாம் வாழும் காலம் வரை காலங்களை வகுத்தவர்கள் அவற்றை 4 யுகங்களாக வகுத்து இருக்கின்றார்கள். அதில் இன்று நாம் வாழும் யுகம் 432000 ஆண்டுகள் கொண்ட கலியுகம் என்றும் கிருஷ்ணர் வாழ்ந்த இறுதிகாலதுக்கு அண்மையான மகாபாரத வரலாற்று காலம் வரையான காலம் 864000 ஆண்டுகள் கொண்ட துவாபர யுகம் என்றும் அதற்கு முற்பட்ட இராமன் இராவணன் குபேரன் வாழ்ந்த இராமாயண இதிகாசகாலமான 1296000 ஆண்டுகள் கொண்ட காலம் திரேதா யுகம் என்றும் அதற்கு முற்பட்ட கந்தபுராண மற்றும் பல புராண வரலாறு நிகழ்ந்த காலம் 1728000 ஆண்டுகள் கொண்ட கிருத யுகம் என்றும் வரலாறுகளில் எழுதி இருக்கின்றார்கள்.

இந்த இலட்சகணக்கில் கால கணிப்பு கொண்ட காலங்களில் யுகங்களில் இந்த வரலாறுகள் நிகழ்ந்தது என்றால் நம்புவது மிகவும் கடினமான விடயம் தான். அதுவும் அவ்வாறு நடந்ததாக கதை செவிவழியாக பேணப்பட்டு கி மு 300 நூற்றாண்டுக்கு பின்னர்தான் நூல்வடிவம் பெற்றது என்றால் எவ்வளவோ மாறுதல் நடை பெற்று இருக்கும் என்பதால் இன்றைய எம்மவர்கள் முழுமையான புனைவுகள் என்று சொல்வது சரி போன்று தோன்றும். அதனால் இந்த கால கணிப்பு பிழை என்று சொல்ல எனக்கு உரிமையோ அதை சரியாக கணித்து நிறுவும் திறனோ இல்லாமல் இருப்பதால் இந்த காலத்தை கணித்த முறை வித்தியாசமாக இருக்கும் என்ற கருத்தை முன்வைகின்றேன். அதாவது இதில் குறிப்பிடும் 1 ஆண்டு கணக்கானது நாம் இன்று ஆண்டை கணிப்பிடும் 12 மாதங்களை கொண்ட 365 நாள் 15 நாடி 31 வினாடி 15 தற்பரை என்ற அளவை கொண்டு கணிக்கபட்டதாக தெரியவில்லை. ஏதோ ஒரு குறைந்த அளவு புதிய முறை கொண்டு கணிக்கப்பட்டதாக இருக்கலாம்.

இலங்கை என்ற நாடு உருவாக்கம் பற்றி புராண வரலாற்றில் வரும் கருத்து முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் சண்டை நடந்ததாகவும் அதில் மேரு மலையின் சிகரம் வாயுபகவானால் பெயர்க்கபட்டு கடலில் வீசப்பட்டதாகவும் கடலில் வீசப்பட்ட இடத்தில் இலங்கை தோன்றியதாகவும் புராணம் கூறுகின்றது. பெளத்தறிவு ரீதியாக எனது பார்வையில் சிந்தித்து பார்கையில் வாயு பகவான் காற்றோடு சம்பந்த பட்டவர் , ஆதி சேஷன் நாகலோகத்து கடலோடு சம்பந்தபட்டவர். எனவே காற்றும் கடலும் அகோர தாண்டவம் ஆடி குமரி கண்டத்தில் இருந்த மகாமேரு மலை பெயர்க்கப்பட்டு தண்ணீரில் மூழ்கிய பகுதியின் மிச்சம் இலங்கை என்ற புதிய தீவு நாடு. மகேந்திர மலை, மணி மலை என்பன மிகப்பெரிய மகா மேரு மலையின் தொடர் மலையின் சிகரங்களாக கருதப்படுகின்றது. புராணங்கள் கூறும் தென் கைலாயம் என்பதும் இலங்கை தான் என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்று. எனவே இந்த நிகழ்வு நடந்தது ஆய்வாளர்கள் குறிப்பிடும் கூற்றுப்படி எனது (2013) கணிப்பில் இன்றைக்கு கி மு 9583 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு என்ற கருத்தை முன்வைக்கலாம்.

கி மு 9583 இல் உருவாகி சூரன் ராவணன் ஆண்ட இலங்கையில் சிறு தீவுகள் இருந்ததாக வரலாற்று குறிப்புக்கள் இல்லை. இலங்கையின் வரலாற்றை தமிழில் முதல் முதலில் கந்த புராண வரலாற்று குறிப்பில் தான் அறியப்படுகின்றது. பலர் இவை கற்பனை என்று வாதிட்டாலும், கந்த புராணத்தை ஆய்வு செய்து விளக்கவுரைகள் எழுதிய தமிழ் பண்டிதர்கள் அந்த கதையில் பல உண்மைகள் இருப்பதாகவே இதுவரை கருத்து கூறி இருக்கின்றார்கள். அந்தவகையில் அவர்கள் கருத்துபடி கந்தபுராண வரலாறு நடந்ததாக கருதப்படும் காலம் அண்ணளவாக, கி மு 9000 ஆக இருக்கலாம் என்று பண்டிதமணி சின்னதம்பி, பண்டிதமணி கணபதிபிள்ளை, பண்டிதர் ஸ்ரீலஸ்ரீ செந்திநாதையர் போன்றவர்கள் தங்கள் வரலாற்று குறிப்புக்களில் கூறி இருக்கின்றார்கள். இலங்கை என்று ஒரு தனி நாடும் முதன் முதலில் கந்த புராண வரலாறு நடந்ததாக கூறப்படும் காலத்தில் தான் வருகின்றது .

சூரன் அரசாண்டதாக கூறப்படும் இலங்கையின் தலை நகராக மகேந்திர மலை தான் குறிப்பிடப்படுகின்றது. சூரன் காலத்தின் பின்னரும் ஒரு கடல் அழிவு ஏற்பட்டதாக சில இடங்களில் வரலாறு வருகின்றது. அது மிக பெரிய அழிவுகளை தந்ததாக கருத முடியவில்லை. ஏனென்றால் சூரனுக்கு சில 1000 வருடங்களுக்கு பின்னர் அரசாண்டதாக கருதப்படும் இராவணன் ஆண்ட இடமும் மகேந்திர மலை என்றே கூறப்படுகின்றது. அதற்கு அம்பாந்தோட்டைக்கு கீழ் பகுதி கடலில் சின்ன ராவணன் கோட்டை பெரிய ராவணன் கோட்டை என்று இரு கோட்டை இருப்பதாக இன்றும் எம்மவர்கள் இரு கடல் மேட்டுப்பகுதியை வரலாற்று சான்று கூறுகின்றார்கள்.

வரலாறுகளில் வரும் முதல் கடல் அழிவாக அத்திலாந்து சரித்திர ஆசிரியரும் லொஸ்ட் லெமூரியா ஆசிரியரும் கருதும் இன்றைய (2013) எனது கணிப்பின் படி11596 வருடங்களுக்கு முன்னர் அதாவது கி மு 9583 ஆண்டளவில் இலங்கை உருவாகியதாக கருதுகின்றேன். (இந்த தகவல் அத்திலாந்து சரித்திரம் எழுதிய 1898 ம் ஆண்டில் அவர் எழுதிய 11481 ஆண்டுக்கு முன் என்ற கால கணிப்பில் இருந்து கணிக்கபட்ட கால அளவாகும். அவர் தகவல் பெற்றது தத்துவமேதை பிளேட்டோ குறிப்பில் இருந்து என குறிப்பிட்டு உள்ளார் ) இந்த கால அளவை எம்மவர்கள் புராண வரலாறு நடந்ததாக கருதிய காலத்துடன் ஒப்பிடும் பொழுது அண்ணளவாக சரியாக வருகின்றது. ஆனால் அன்று உருவாகிய இலங்கை இன்றைய எமது இலங்கையை விட 7 மடங்கு பெரிய பரப்பளவை கொண்டது என்ற கருத்தும் இருக்கிறது. அது பின் வந்த மூன்று மிக பெரும் கடல் அழிவுகளோடும் அவற்றின் பாதிப்புகளோடும் பார்க்கும் பொழுது உண்மை என்று நம்பலாம். அவை பற்றி அந்த கால நிகழ்வின் வரலாற்று ஓட்டத்தில் விரிவாக பார்ப்போம்…