இந்துப்பு

பாறை உப்புகல்லுப்பு என்ற சோற்றுப்புக்குப் பதிலாக பாறை உப்பு ROCK SALT என்ற இந்துப்பை உபயோகப்படுத்தினால் பாதிப்புகளில் இருந்து தப்பலாம். இதை ஹிந்தியில் சிந்தா நமக்கு என்பார்கள். இந்த இந்துப்பு என்பதும் சோடியம் குளோரைடுதான். ஆனால் மற்ற சில உப்புக்களும் சரியான விகிதாசாரத்தில் உள்ளது. மேலும் இந்த உப்பில் இந்த அயோடின் போன்ற விஷ வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுவதில்லை.

கல்லுப்பு என்ற சோற்றுப்பு சோடியம் குளோரைடு என்ற வேதிப் பெயர் கொண்டது. இதை செந்தமிழில் அளம் என்பார்கள். முன்னாளில் சம்பளம் என்று தொழிளாளர்களுக்கு கொடுப்பது (சம்பு+அளம்=சம்பளம்) சம்பா என்ற நெல்லும் உப்பும்தான். எனவே இது லட்சுமி வாசம் செய்யும் பணமாகக் கருதப்பட்டது. எனவே செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் உப்பு, உறைமோர், விதை நெல், வசம்பு(பேர் சொல்லாதது), நிறை குடம்   போன்றவற்றை அறவே தர மாட்டார்கள். இது மட்டுமல்ல மாலை 6 மணிக்கு மேல் விளக்கு வைத்த பின் இவற்றைத் தர மாட்டார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உப்புடன், அயோடின் என்ற வேதிப் பொருளை கலக்க உப்பு நஞ்சாகிவிட்டது.

உப்பை சேர்க்காத பொருள்களே இல்லை. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். இன்று உப்புள்ள பண்டம் குப்பையிலே என்று சொல்லும் அளவுக்கு அயோடின் கலந்த உப்பின் கோர முகம் உள்ளது. அயோடின் சேர்க்கப்பட்ட உப்பால் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்பட்டு முக்கியமான நாளமில்லாச் சுரப்பியான தைராய்டு சுரக்கும் சுரப்பு நீர்களான T3 ,T4 ஆகியவை பாதிக்கப்பட்டு விளைவாக உடலின் முழு வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக உலவும் அவலத்தை நாம் வெகு சீக்கிரம் நாம் காணலாம். கண்கள் பிதுங்கி கழுத்தில் பெரும் கழலைக் கட்டியுடன் மக்களும், எதிர்கால சந்ததிகளும் அல்லாட வேண்டாம்.

இந்த இந்துப்பு பல மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த இந்துப்பு சேர்ந்த மருந்தால் குருடனும் பார்வை பெறவல்ல மருந்தொன்றை திருமூலர் வைத்திய சாகரத்தில் சொல்லி உள்ளார். அந்தப் பாடல்
இந்துப்பு திப்பிலி இயல் பீதரோகிணி
நந்திப்பூச் சாற்றில் நயந்து அரைத்திட
அந்தகன் கண்ணுக்கு அருந்ததி தோன்றிடும்
நந்தி நாதன் நயந்து உரைத்ததே. -திருமூலர் வைத்திய சாகரம்
இந்துப்பு, திப்பிலி,பீத ரோகிணி ஆகியவற்றை சமமாய் எடுத்து நந்தியாவட்டம் பூச்சாற்றில் அரைத்து கண்ணிலிட குருடன் கண்ணுக்கு அருந்ததி என்னும் நட்சத்திரம் தெரியும் என்று நந்திக்கு சிவன் கூறியுள்ளார்,என்பதே இதன் பொருள்.

இப்படி மிக உயர் தன்மையுள்ள இந்துப்பை சோற்றுப்பிற்கு பதிலாக உபயோகித்து வந்தால், உடலிலுள்ள துர் நீர்கள் எல்லாம் நீங்கி உடல் நலம் பெறும். காயசித்திக்கும், பத்தியத்திற்கும், காய கற்பத்திற்கும் ஏற்ற உப்பு இது. இதை உபயோகித்து, அயோடின் நஞ்சு கலந்த சோற்றுப்பை தவிர்த்து எல்லோரும் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

இந்தியாவில் உப்பு
“சைந்தவா” என்று அழைக்கப்படும் இந்துப்பு

.

அயோடைஸ்டு சால்ட்- அதாவது அயோடின் கலந்த உப்பு. இதைத்தான் நாம் உணவு சமைக்க பயன்படுத்தி வருகிறோம். கடலில் இருந்து எடுக்கப்பட்டு பின் தொழிற்சாலைகளில் வைத்து அயோடின் என்ற திரவம் கலக்கப்பட்டு வரும் இந்த உப்பு தான் நமது உடலுக்கு உகந்ததா? நிச்சயமாக இது நூறு சதவீதம் சரியென்று சொல்லி விட முடியாது. இதில் இந்துப்பு (Halite or Rock Salt)தான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் சொல்கின்றன. ஆக..இனி இந்துப்பை பற்றி பார்க்கும் முன்பு பொதுவாக உப்பு பற்றிய செய்திகளை இங்கு தருகிறேன்.

உப்பு வந்த கதை
மனிதனுக்கு உப்பு என்ற ஒன்றை தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்க மாட்டான் என்கிறார்கள் மனித பரிணமாத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள். அதாவது மனிதன் சாப்பிட கிடைத்த தானியங்களுடன் சேர்த்துக் கொள்ள தேவையான உப்பு எங்கெல்லாம் கிடைத்ததோ, அங்கெல்லாம் புதிய மனித குழுக்கள் தங்கி மனித குடியேற்றங்கள் உருவாகியிருக்கின்றன. கடற்கரையில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் உப்பை அடிப்படையாக கொண்டவை என்கிறார்கள். இப்படி உப்புக்கு பெரிய வரலாறு இருக்கிறது.

உப்பு இல்லாமல் உணவுகள் இருக்க முடியாது என்பது உண்மை. உப்பை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் பயன்படுத்தி வந்ததாக சான்றுகள் இருக்கின்றன. எகிப்திய நாடு ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் செல்வாக்கு பெற்ற நாடாக விளங்கியிருக்கிறது. காரணம், எகிப்தியர்கள் சகாரா பாலைவனத்திலிருந்த உப்பை வெட்டி எடுத்து ஒட்டகத்தின் மேல் ஏற்றி வந்து சுற்றியுள்ள நாடுகளுக்கு எல்லாம் விற்பனை செய்து செல்வத்தை ஈட்டியிருக்கிறார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட The Book Of Job என்ற நூலில் உப்பை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பைபிளில் உப்பை பற்றி 30 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உப்பை நேர்மைக்கும், நீதிக்கும் ஒரு அடையாள சின்னமாக அதில் குறிக்கப்படுகிறது. இந்துக்களிடம் கூட சத்தியத்தை உறுதி செய்ய உப்பின் மேல் சத்தியம் பெறும் வழக்கம் இருக்கிறது. இப்படி பல நாடுகளிலும் உப்புக்கு இருக்கும் வரலாற்றை பல நூறு பக்கங்களுக்கு சொல்லிக் கொண்டே போகலாம். நாம் இந்தியாவில் கிடைக்கும் உப்பையும், குறிப்பாக இந்துப்பு பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் உப்பு
இந்தியாவில் உப்புத் தொழில் மிகத்தொன்மையானது. கி.மு நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மெளரியரின் அமைச்சரவையில் இருந்த கெளடியல்யர் அர்த்த சாஸ்திரத்தை எழுதி புகழ் பெற்றார். இவருக்கு சாணக்கியர் என்ற பெயரும் உண்டு. இந்த நூலில் இந்தியாவில் கிடைக்கும் பல வகை உப்புக்களை பற்றி அவர் எழுதியிருக்கிறார். நாம் இங்கு சொல்ல வந்த “சைந்தவா” என்று அழைக்கப்படும் இந்துப்பு சிந்து மாகாணத்தில் கிடைப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

இது தவிர, “சமுத்ரா” அதாவது கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு, “உத்பேஜா” அல்லது உப்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும் ஒரு உப்பு, “ரோமகா” உறைந்து படிவங்களாக கிடக்கும் உப்பு, “ஒளத்பிதா” என்று ஒரு உப்பு. இப்படி 5 வகை உப்புகள் இந்திய நாட்டில் கிடைப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த உப்பானது பாறை போலவும், படிகங்களாகவும் பூமியின் மேற்பரப்பிலும், அதற்கடியிலும் இருந்து வந்துள்ளது. பூமியின் ஆழத்தில் இருக்கும் இந்த இந்துப்பை எடுக்க, சுரங்கம் தோண்டி கரிச்சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பது போல் எடுத்து மேலே கொண்டு வருவார்கள். இந்தியாவில் இமாலய பிரதேசத்தில் மன்டி என்ற இடத்தில் இந்துப்பு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சில இடங்களில் கிடைத்தாலும் இந்துப்பு பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.

சாதாரண (கடல்) உப்பின் நன்மையும், கெடுதலும்
இந்துப்பு பற்றி எனக்கு தெரிந்த சித்த மருத்துவர்களிடம் நான் கேட்டு தெரிந்துள்ளதை விட “தினமணி” ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையை இங்கு தருகிறேன்.

கேள்வி: என் வீட்டு சமையலில் உப்பை சரியான அளவில் சேர்ப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எனக்கு அதன் அளவு போதாது என்று கூறி அதிகமான உப்பு போட்டு சாப்பிடுகிறேன். இது எனக்கு கேட்டை விளைவிக்குமா?- ராஜேந்திரன், புதுச்சேரி.

பதில்: தண்ணீரிலிருந்து தான் சுவை தோன்றுகிறது. அது முதலில் தனிப்பட்ட முறையில் அறியப்படாத ஒரு பொருள். வருடம் என்ற காலம், ஆறு பருவங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாலும் பஞ்சமகா பூதங்களான நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகியவற்றின் குணங்களின் ஏற்றத்தாழ்வினாலும் சுவை என்பது இனிப்பு முதலான ஆறு தனித்த சுவையாக தோற்றம் அடைகிறது.

நீர் மற்றும் நெருப்பின் அதிக சேர்க்கையினால் ஏற்படும் சுவை உப்பு, உப்புச்சுவை உமிழ்நீரை பெருக செய்யும் தன்மை கொண்டது. உணவிற்கு சுவையூட்டுகிறது. அதிக சேர்க்கை தொண்டையையும், தாடைகளையும் எரிக்கிறது. உங்களை பொறுத்த வரை உப்புச்சுவையிலுள்ள நீர் மற்றும் நெருப்பின் தேவை, உடலின் ஏதோ ஒரு பகுதியின் தேய்மானத்தை ஈடுகட்டுவதற்காக அதன் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது.

உப்பு சரியான அளவில் சேர்க்கும் போது, பசித்தீயை தூண்டுகிறது. நாக்கிலுள்ள ருசி கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது. உண்ட உணவை சீரணிக்க உதவுகிறது. வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது. குடல் முழுவதும் எண்ணெய் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது.

வியர்வை கோளங்களை சுறுசுறுப்புடன் இயங்க செய்கிறது. குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது. உடல் முழுவதும் விரைவில் பரந்து பரவும் திறன் உடையது. உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளை சுத்தப்படுத்திவிடும். ஊடுருவும் தன்மையும், சூடான வீரியமும் உள்ள உப்புச்சுவையின் நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் இந்த உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் தலைவழுக்கை, நாவறட்சி,உடல் எரிச்சல், வீக்கம், இசிவு எனும் கைகால்களில் உண்டாகும் வலிப்பு நோய், பித்தம் ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பித்த நோய் போன்றவை உருவாகும்.இவை எல்லாம் சாதாரண உப்பில் உண்டாகும் கேடுகள்.

மனிதன் பயன்படுத்த தக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.

இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
ஆண்மையை வளர்ப்பது.
மனதிற்கு நல்லது.
வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.
இலேசானது.
சிறிதளவு உஷ்ணமுள்ளது.
கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது. ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும். எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் பயன்படுத்துங்கள். இன்றைக்கு அயோடின் கலந்த உப்பின் தேவையும் உடலுக்கு தேவை என்பதால் அத்துடன் இந்துப்பையும் வாங்கி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். – இப்படி அவர் பதிலளித்திருக்கிறார்.

ஆகவே நண்பர்களே, இனி இந்துப்பை வாங்கி பயன்படுத்துவோம். உடலுக்கு மிகவும் நல்லது. எந்த கெடுதலும் இல்லை. சாதாரண சமையல் உப்பில் கிடைக்கும் சுவை இதிலும் கிடைக்கும். கால். கை வீக்கம் தோன்றினால் டாக்டர்கள், “உப்பை குறைங்க” என்பார்கள். அப்படி ஒரு பிரச்சினை இந்துப்பில் வருவதில்லை.

-Meera Tharshan