வாழையிலையின் பயன்பாடு

வாழை-thamil.co.ukதமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு. சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை. இதனை தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள்.

வாழை இலை என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஞாபகத்தில வருவது சாப்பாடு. இதனை நாம் பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும். வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும்போது அதில் ஒருவித வாசம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம்.

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்கவைத்தால் அதில் உள்ள பச்சைத்தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும்.

புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டிவர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண்மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக் குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலை ஒரு கிருமிநாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாழையிலையில் உணவு  உண்பவர்கள் நோயின்றி நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளறி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும். குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன. எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எறிந்து விடலாம். எல்லோருக்கும் சுலபம். விலையும் குறைவு.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள். அம்முறைப்படி நாம் உணவு உண்டு, வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம்.  அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

-Meera Tharshan