ஆன்மீகமும் அறிவியலும் : சிவ மேனகை

அறிவியலும் ஆன்மீகமும்ஆன்மீகமும் அறிவியலும். ஒரு சிறு அலசல்.  

வானத்தில் இருந்து வெள்ளைப் பூக்களாக வெண் பனிதுளிகள் விழுந்து பூமியிலும் தாவரங்களிலும் கட்டிடங்களிலும் படிவதை இன்று காலையில் இருந்து சிந்தனையில் ஆழ்ந்து பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன்.

நேற்றுவரை வேற்று கிரகவாசிகள் பற்றிய கருத்துக்கள், ஆயுத முனையில் அடக்கி ஆளும் அரசுகளின் கட்டுகதை என்றே நம்பிக்கொண்டு இருந்தேன். லெமூரியா (குமரிகண்டம்), அத்லாண்டில் என்று இரு பழம்பெரும் கண்டங்கள் இருந்ததாக பலர் கருத்துக்கூறியும், அவற்றை ஆய்வு செய்வதற்கு உலக அரசுகள் வெளிப்படையாக முதன்மை கொடுக்காமல் இரகசிய ஆய்வுகளை செய்வதையும் எண்ணிப் பார்த்தேன். எதிரும் புதிரும் புதுமையும் நிறைந்த புராண இதிகாசங்களையும் வெறும் கற்பனை என்று பலமுறை வாதிட்ட எனது மனநிலையையும் புதிய பாதையில் சிந்திக்க தூண்டிப் பார்த்தேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வேற்று கிரகவாசிகள் கனடாவின் பகுதிகள், இங்கிலாந்தின் பகுதிகள், சில ஆசிய நாடுகளின் பகுதிகளுக்கு வந்து போனதாக பல முறைப்பாடுகள் பலரால் எழுப்பபட்டது. இவை ஆதாரம் அற்றவை என்று பலர் கருத்துக் கூறி மறுத்து இருக்கின்றார்கள். நானும் வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு பற்றிய ஒரு கவிதையில் உலகை ஏமாற்றும் அமெரிக்காவின் விஞ்ஞானத்தில் விளைந்த பட்டம் என்று கூறி இருந்தேன். அதேவேளை விண்ணுக்கும் மண்ணுக்கு நாதனாக நாம் வணங்கும் விநாயகன் பற்றிய சில பதிவுகளில் விநாயகன் விண்வெளி வீரன் என்ற கருத்தை சில சந்தர்ப்பங்களில் முன்வைத்து இருந்தேன். அதற்கு ஆதாரமாக புராணக் கதைகளில் வரும் விநாயகர் வானத்தில் இருந்து பறந்து வந்தவர் என்பதற்கு பல புராண சான்றுகளை முன்வைத்து இருந்தேன். விஜய் தொலைக்காட்சிகாரருக்கு இன்று விநாயகன் முருகனுக்கு தம்பி ஆகி இவர்களுக்கு சகோதரியும் சேர்ந்து இன்று வருவது புதுக்கதை…. ஆனால் அன்றே சிவனே கேட்டது இந்த பிள்ளையார் என்றது இதுவே புராண கதை…..

அவதார்வேற்று கிரகவாசிகள் உருவத்தில் எம்மைப்போல் இருக்கமாட்டார்கள் அவர்கள் எம்மை விட அதீத வளர்ச்சி அடைந்த மனிதர்கள். அவர்கள் ஒரு சிலரின் வரவால் தான் பூமியில் மனிதகுலம் தோன்றி இருக்கலாம் என்றவகையில் ஆராய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை நகர்த்துகின்றார்கள். இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் அவதார் போன்ற சில சினிமாப் படங்களையும் உலகில் சில நாடுகள் திரையிட்டு உள்ளது. முன்னொரு காலத்தில் எங்களை விட வளர்ச்சி அடைந்ததும் மிகப் பெரிய உருவங்களை உடையதும் ஆன டைனோசர்கள் வாழ்ந்தது பற்றிய கருத்துக்களும் இருக்கின்றது.

சில ஆய்வாளர்கள் கருத்துப்படி வேற்று கிரகவாசிகளின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் இந்த பூமியில் வாழும் அமெரிக்க மனிதர்களில் இருந்து நாம் ஆதிவாசிகள் என்று அழைக்கும் காட்டுவாசிகள் வரை அனைவரும் எதற்கும் தேவையற்ற அற்ப பிறவிகள் என்பது அவர்களது கருத்து. நாம் வளர்ச்சி அடையாத மனிதர்கள் என்பதால் அவர்கள் எம்மை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. எம்மில் சிலரை கடத்தி சென்று ஆய்வு செய்து அவர்கள் இவற்றை அறிந்து இருக்கலாம் என்று கூறுகின்றார்கள்.

முற்காலத்தில் நாம் இன்று வணங்கும் கடவுள்கள் அழகிய தேர்களில் வானத்தில் பவனி வந்தார்கள் என்று புராணக் கதைகளில் வருகின்றது. விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்துக்கு வேகமாக செல்லும் வல்லமை அவர்கள் பெற்று இருந்தார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றது. வானத்தில் தேவர்கள் அழகிய தேர்களில் பறந்து உலாவினார்கள். இன்று நாம் கோவில்களில் தெய்வங்களாக வணங்குபவர்களை அழகிய தேர்களில் வீதிஉலா கொண்டு வருகின்றோம். நாம் முதன் முதலில் விமானத்தை குபேரன் இராவணனுக்காக, மயன் தான் உருவாக்கினான் என்று வாதிடுகின்றோம். அதையும் இன்றைய அமேரிக்கா மறுத்து ஒலிவர் ரைட் வில்வர் ரைட்டை அதற்கு உரிமை கோர வைக்கின்றது.

அப்படியாயின் அழகிய வான ஊர்திகளில் கடவுள்கள், தேவர்கள் பயணம் செய்தார்கள் என்று சொல்வது அதீத கற்பனையா?.. ஏன் அப்படி கற்பனை செய்தார்கள் அல்லது உண்மையில் அவ்வாறான அன்றைய நிகழ்வுகளை எம்மவர்களுக்கு சொல்லி சென்றார்களா….. அறிவியலை ஆன்மீகத்தோடு இணைத்து பார்த்தால் வரலாறுகள் அழியாமல் இருக்கும் என்று எம் முன்னோர்கள் கருதி இருப்பார்களா… பின்வந்தவர்கள் மூட நம்பிகைகளை விதைத்து அறிவியலை அடைவு வைத்து அறுதியாக்கி விட்டார்களா….

சித்தர்கள்சிவன் முதல் அன்றைய தேவர்கள் சாகா வரம் பெற்றவர்கள் என்ற தகவல் பல இடங்களில் வருகின்றது. நாம் இவர்கள் பிரபஞ்ச சக்தியை பெற்று நீண்டகாலம் வாழ்ந்தவர்கள் என்று கருதுகின்றோம். மீன், பறவை, காட்டு விலங்கு, மனிதன் என உயிர்களுக்கு உயிர் வாழ்நாள் காலங்கள் வித்தியாசப்படுகின்றது. அந்த வகையில் இன்றைய பனி விழும் தேசங்களில் வாழும் பல விலங்குகள் பல மாதங்கள் உணவு எதையும் உண்ணாமல் உறங்கியே காலத்தை கடந்து உயிர் வாழ்கின்றது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து நிரூபித்து அவற்றின் இரத்த அணுக்களை வேறு விலங்குகளுக்கு செலுத்தி ஆய்வு செய்கின்றார்கள். நாமும் அன்றைய சித்தர்கள் ஞானிகள் உணவு உண்ணாமலே தியானத்தின் மூலம் பல ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று படிக்கின்றோம். இன்றும் பல இடங்களில் மலை சாரல்களில் எம் கண் முன்னே சில சித்தர்கள் இவ்வாறு வாழ்கின்றார்கள் என்று பலர் இன்றும் சாட்சி கூறுகின்றார்கள். அப்படியானால் மனிதனால் இறப்பை வென்று அல்லது பின்தள்ளி நீண்ட காலம் வாழ முடியுமா….இது இந்த பூமியிலேயே சாத்தியம் என்ற நிலை இருக்கின்றதா….

இங்கு சாத்தியம் இல்லாவிட்டாலும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கிரகங்கள் இருப்பதாக 1995 கண்டு பிடித்தார்கள் அதற்கு பின் பல நூறு நட்சத்திர தொகுதி இருப்பதாக கண்டு பிடித்தார்கள். அங்கு மனிதர்கள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். அவர்கள் யார் இறப்பை வென்ற மனிதர்களா… ஆய்வாளர்கள் கூறுவது போல எம்மைவிட பல ஆயிரம் மடங்கு அதீத வளர்சி அடைந்த மாந்தர்களா… என பல்வேறு கேள்விகள் வருகின்றது… இவற்றுக்கு விடைகள் எங்கு இருக்கிறது இல்லை இனிதான் கண்டு பிடிக்க போகின்றார்களா…

கிசாவின் பெரிய பிரமிடுஎழுதப்பட்ட குறிப்புகள் அழிந்துவிட்டது என்றாலும் கட்டப்பட்ட கட்டிடங்கள் சில இன்றும் இருக்கிறது. எம்முன்னோர்களின் கட்டிட கலை வளர்சியை ஒப்பீடு செய்து பாருங்கள். மிகப்பெரிய பாரிய கட்டிடங்களை எவ்வாறு கட்டினார்கள்? பல தொன் எடையுடைய கற்களை இன்றைய இலத்திரனியல் இயந்திரங்கள் இல்லாத அன்றைய காலத்தில் எவ்வாறு நகர்த்தினார்கள்? உலகில் கட்டப்பட்ட ஆதிகால கட்டிடங்களில் காலத்தால் முந்தியது என்று கருதி இன்னும் நாம் பார்க்க கூடிய வகையில் நிமிர்ந்து நிற்பது கிசாவின் பெரிய பிரமிடு. இது கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்று குறிப்புக்களில் அறியப்படும் ஆண்டு கி மு 2560. அதாவது இன்றைக்கு 4573 ஆண்டுகளுக்கு முன்னம். இந்த பிரமிட் அண்ணளவாக 7 மில்லியன் தொன் எடை உடையதாகவும் 2.3 மில்லியன் (23இலட்சம்) கற்களால் பூமத்திய ரேகையின் மைய புள்ளியில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த பிரமிட்டை இன்றைய நவீன வசதிகள் இல்லை என்று நாம் கருதும் அந்த காலத்தில் எவ்வாறு கட்டி இருப்பார்கள். பூமியின் மைய புள்ளியை எந்த கருவி கொண்டு அன்று சரியாக கணித்தார்கள்.

உலகெங்கும் இதுபோன்றதும் சிறியதும் ஆக 200 பிரமிட்டுக்கள் கட்டி இருக்கின்றார்கள். பிரமிட்டுக்கள் கட்டப்பட்ட வரலாற்று குறிப்புக்களில் வானத்து தேவர்களின் உதவியோடு கட்டியதாக குறிப்பிட்டு உள்ளார்கள். யார் அந்த வானத்து தேவர்கள். நமது புராணங்கள் கூறும் அடுத்தவன் மனைவிமீது ஆசைப்பட்டு திரிந்த இந்திரன் குழுவினரா… இல்லை அதி நவீன வசதிகள் கொண்ட மனிதர்களாக இன்றைய ஆய்வாளர்கள் கருத்தும் வேற்று கிரக வாசிகளா…. தமிழ் அறிவியல் ஆளர்களின் கருத்துப்படி சில மேலைத்தேச ஆய்வாளர்களும் ஒப்புக்கொண்ட ஆய்வுகளின் படியும் மயன் இனத்தவர்களால் இந்த கட்டிடங்கள் கட்டபட்டு இருக்கலாம் என்று வலுவான கருத்துக்களை முன் வைக்கின்றார்கள்.

வரலாற்று பதிவுகளில் வரும் மூன்றாவது மிக பெரிய கடல் அழிவாக கருதப்படுவது இன்றைக்கு அண்ணளவாக 5000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளை கருதுகின்றார்கள். இதை இந்தியர்கள் சிந்துவெளி கடல்கோள் என்று அழைகின்றார்கள். இந்தக் காலத்தில்தான் மாயன் இனத்தவர்கள் எஞ்சிய குமரிக்கண்ட பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்தார்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள். மேலை தேச ஆய்வாளர்கள் அத்லாந்திக் என்ற இன்னொரு கண்டம் இருந்ததாகவும் அதிலும் மாயன் இனத்தவர்களே வாழ்ந்தார்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள். இன்றைய மத்திய அமெரிக்க மாயன் இனத்தவர்களின் கலண்டர் தொடங்கும் நாள் கி மு 3114 ஆவணி 11, என்றும் நமது இந்தியர்கள் கலியுகம் தொடங்கும் நாள் 3102 மாசி 17 என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள். இரண்டுக்கும் 12 வருட குறுகிய இடைவெளியே இருக்கிறது. எனவே அவர்கள் இந்த காலத்தில் ஏற்பட்ட கடல் மற்றும் உள்நாட்டு அரசர்களின் போர் போன்ற காரணங்களால் வெளியேறி மாயன் இனத்தவர்கள் உலகெங்கும் பரந்து வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அவர்கள் கட்டிடகலைகள் வான சாஸ்திர கருத்துக்கள் இலங்கை இந்தியாவிலும் எகிப்து போன்ற நாடுகளிலும் மெஸ்சிகோ போன்ற மத்திய அமேரிக்க நாடுகளிலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே இருந்து இருக்கிறது. இதற்கு சான்றாக மெஸ்சிகோவில் உள்ள பிரமிட்டுகளும் கட்டிடங்களும் எகிப்தில் உள்ள பிரமிட்டுகளும் சான்று பகர்கின்றன. இந்தியாவிலும் இவ்வாறான கட்டிடங்கள் இருந்து கடல் அழிவால் அழிந்து இருக்கலாம். பிற்காலத்தில் எழுந்த கோவில்கள் சில ஒற்றுமைகளை கொண்டு இருக்கிறது

வேற்று கிரக வாசிகள் பற்றிய கருத்துக்கள் ஆய்வுகள் தொடர்கின்ற அதேவேளை அதே நேரத்தில் லெமூரியா, அத்லாந்திக் கண்ட கடலில் மூழ்கிய நாடுகள் பற்றியும் துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் பல நூறு விடை காண முடியாத வினாக்களுக்கு விடை காணலாம்.

தந்தை பெரியார் பாணியில் புராணகள் இதிகாசங்களை கொளுத்த வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தாமல் அவற்றுக்குள் புதைந்து இருக்கும் உண்மைகளை பெளத்தறிவு ரீதியாக வெளி கொண்டு வர வேண்டும். எம் மூதாதையர்கள் மூடர்கள் அல்ல எம்மை விட பல மடங்கு அறிவு படைத்தவர்கள். இன்றைய ஐ போனில் உள்ள பல விடயங்கள் மாயனது குறிப்புக்களில் இருந்து பெறப்பட்டவை என்று ஒரு கட்டுரையில் வாசித்தேன். இன்னொன்று உலகில் இன்று யார் பணக்காரர் என்பதில் மெஸ்சிகர்களுக்கும் இந்தியர்களுக்கும் பில்கேட்சுக்கும் தான் போட்டி அதனால் அவர்கள் வளர்சிக்கு அவர்கள் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களும் ஒன்றாகவும் இருக்கலாம்.

எம் மூதாதையான திருமூலர் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னம் அணுவைப் பற்றி அன்றே எழுதிவைத்தார் (அவரும் தனது மகனுக்கு மயன் என்று பெயர் வைத்தார் என்றும் ஒரு குறிப்பு சொல்கின்றது). திருமூலர் அணுவை பற்றி எழுதியதை மூலமாக வைத்து திருக்குறளிலும் வள்ளுவர் எழுதி வைத்தார். அதைத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னம் ஜெனீவா பிரான்ஸ், எல்லையில் அந்நாட்டு அரசுகள் நிலத்துக்கு கீழ் அகழ்ந்து பார்த்து நிரூபித்தது.

எனவே புராணங்கள் இதிகாசங்களில் உள்ள மூட கருத்துக்களை எதிர்க்கும் அதேவேளை அதில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்ய வேண்டும். சித்தர்கள் ஞானிகள் எழுதிவைத்த குறிப்புக்களை உண்மை என்ற கோணத்தில் ஆய்வுசெய்து உறுதிப்படுத்த வேண்டும். எனவே ஆன்மீகத்தையும் அறிவியலோடு சம்பந்தப்படுத்தி அந்த உண்மைகளை அகிலத்தில் அனைவருக்கும் பயன்படும் வழிவகை செய்ய வேண்டும் என்ற வகையில் அலசலும் அலம்பலுமாக சில சிந்திக்கத்தக்க கருத்துக்களை முன்வைத்து செல்கின்றேன் என்ற மன நிறைவில் விடை பெறுகின்றேன்… நன்றி வணக்கம்.

சிவ மேனகை
Jan 30, 2014