சித்திரை பௌர்ணமி : சிவமேனகை

சித்திரா பௌர்ணமிசித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிவரும் நாள் சித்திரை பௌர்ணமி தினம் ஆகும். 27 நட்சத்திரங்களில் பதினாங்காவது நட்சத்திரமாக இருக்கும் சித்திரை நட்சத்திரத்துக்கு அண்மையில் சந்திரன் இன்றைய நாளில் இருப்பார். இந்த நாளில் அன்றைய குமரி நாட்டில் சூரிய அஸ்தமனத்தையும் சந்திரோ உதயத்தையும் ஒரே நேரத்தில் காணலாம் என்ற குறிப்பு புராணங்களில் இருக்கிறது. இன்று கன்னியாகுமரியில் இருந்து பார்க்கும்பொழுது இந்த கருத்து இன்றும் உண்மை என்று நிரூபிக்கப்படுகின்றதாம்.

சித்திரை பௌர்ணமி தினம் அம்பிகை வழிபாட்டுக்கு உரிய தினமாக கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் அம்பிகையை தரிசித்து நல்வாழ்வு பெறலாம் என்று சான்றோர்கள் கூறுவர். உலகமாதா சதி தேவியாகிய தாட்சாயணி தட்ஷன் யாககுண்டத்தில் விழுந்து தனது உயிரை மாய்க்க அந்த நாளில் அங்கு யாகத்தில் கலந்து கொண்ட அனைத்து தேவர்களும் முனிவர்களும் தாங்கள் பெரும் பாவம் செய்துவிட்டோம் என்று விஷ்ணுவிடம் பிராயசித்தம் கேட்க, விஸ்ணு சிவன் கையில் இருந்த தாட்ஷாயனியின் உடலை தன் சுதர்சன சக்கரத்தால் 108 துண்டங்களாக்க, அவை பூமியில் விழுந்த இடங்களில் தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து சக்தி பீடங்களை உருவாக்கினார்கள். அவற்றில் 64 சக்தி பீடங்கள் எம்மவர்களால் அடையாளம் காணப்பட்டு இன்று சக்தி பீடங்களில் 51 பீடங்களே இருக்கும் இடங்களோடான ஆதார சான்றுகளுடன் இருக்கின்றன. முனிவர்களும் தேவர்களும் முதல் சக்தி பீடத்தை சரஸ்வதி நதி கரையில் உருவாக்கி அந்த நதியில் மூழ்கி நீராடி தங்கள் பாவங்களை போக்கி அம்பிகையை வழிபட்டார்கள். இந்த நாள் சித்திரை பௌர்ணமி நாளாக புராணங்களில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் புராண கதைகளில் இந்த நாளிலேயே மனிதனில் பிறப்பு இறப்பு காலங்களை கணிக்கும் சித்திர புத்திரன் பிறந்ததாகவும் புராண கதைகள் இருக்கிறது. இந்திரன் தனது பிரமகத்தி தோஷம் நீங்க தென்னாட்டில் மரங்கள் நிறைந்த சோலையான ஒரு இடத்தில் சுயம்பாய் தோன்றிய அம்மை அப்பருக்கு விஸ்வகர்மாவை கொண்டு கோவில் எடுத்து அங்கு இருந்த புண்ணிய தீர்த்தத்தில் மூழ்கி சித்திரை பௌர்ணமி நாளில் வழிபட்டதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகின்றது.

சூரிய சந்திரர்களின் தொடர்பையும் புராண கதைகளையும் விஞ்ஞான ரீதியிலும் சில விடயங்களை பார்க்கும் பொழுது பிரபஞ்ச வெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தையே கணித்து சாத்திரத்தில் திதி என்கின்றோம். இதில் அமாவாசையில் சூரியனும் சந்திரனும் ஒரே இடத்தில் அதாவது 0 பாகையில் இருப்பதால் அந்த நாளை பித்ருகாரகன் அதாவது பிதாவை நிர்ணயிப்பவன் ஆகிய சூரியனுக்கும், அந்த அமாவாசையில் இருந்து ஒவ்வெரு நாளும் 12 பாகை நகர்ந்து 15வது நாள் நேர்கோட்டில் மறுபக்கத்தில் 180 பாகையில் இருக்கும் நாளை மத்ருகாரகன் அதாவது மாதாவை நிர்ணயிப்பவர் ஆகிய சந்திரனுக்கும் தர்ப்பனம் செய்கின்றோம். அதனால் இந்த பௌர்ணமி தினம் எம்மையெல்லாம் இந்த பூமிக்கு கொண்டுவந்து வளர்த்து பாதுகாத்து நல்வழிபடுத்தும் மாதாவுக்கு உரிய தினமாக அவர் மறைந்த பின்பும் அவரது நீங்காத நினைவுகளை மனதில் சுமந்து இந்த நாளில் அம்பாள் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்தமாடி விரதம் இருந்து வழிபட்டு அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற வணங்கும் நாளாக பௌர்ணமி தினம் இருக்கிறது .

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்றும், வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும், ஆனியில் மூல நட்சத்திரத்திலும், ஆடியில் உத்திராட நட்சத்திரத்திலும், ஆவணியில் அவிட்ட நட்சத்திரத்திலும், புரட்டாசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், ஐப்பசியில் அசுவினி நட்சத்திரத்திலும், கார்த்திகையில் கிருத்திகையிலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், தையில் பூசத்தன்றும், மாசியில் மாசி மகத்தன்றும், பங்குனியில் உத்திரத்தன்றும் பொதுவாக பௌர்ணமி தினம் வரும். ஓரிரு மாதங்களில் ஒருநாள் முன், பின்னாகவும் இந்த நாள் வரும். இந்த நாட்களில் விரதம் இருந்து அம்பிகையை வழிபடுவது சால சிறந்ததாகும்.  – நன்றி.

-சிவமேனகை