தமிழனின் இசையும் அதன் கதையும் – தமிழிசையின் கூறுகள்- அறிமுகம்! : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம்
பழந்தமிழ் இசை – மூன்றாம் பாகம் – தமிழனின் இசையும் அதன் கதையும்!!

தமிழிசையின் கூறுகள் – அறிமுகம்!

சகோட யாழ்-thamil.co.uk“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.”
என்று முன்னோர் புகழுமாறு, உலகிலேயே முதன்முதல் இலக்கிய முறையாய்ப் பண்படுத்தப் பெற்றதும் இசை நாடகம் முதலிய பல அருங்கலை நூல்களெழுந்ததுமான தமிழே, தமிழ் மொழியேயாகும்!

ஆரியர் வருமுன்பே, கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னரே, குமரி நாட்டில் நீடித்து வழங்கிய தலைச்சங்கத் தமிழ் முத்தமிழாய் இருந்தது. தலைச்சங்கத்திறுதியில் செய்யப்பட்ட வழிநூலாகிய அகத்தியம் முத்தமிழிலக்கணம் ஆகியது.

பன்னூறாயிரம் ஆண்டுகள் நிலைபெற்றதும் மனிதன் தோன்றியதும் நாலாயிரம் ஆண்டுகட்குமுன் தென்பெருங்கடலில் அமிழ்ந்து போனதுமான குமரிநாடே (Lemuria) ஆதலின், தமிழே முதல் இசைமொழியாகும்.

தமிழரின் இசையுணர்ச்சி தலையாயது மட்டுமன்றி தனித்துவமானதும் ஆகும். அதனாலேயே இழவுக்கு அழுவதைக்கூட இசையோடு அழுவது என்பது தமிழ்ப்பெண்டிர் வழக்கமாயிற்று. தமிழர் இசையில் சிறந்திருந்ததினால்தான் இசையை மொழிப்பகுதியாக்கி இசைத்தமிழ் என்றனர். அதோடு நில்லாது, நாடகத்தையும் சேர்த்து முத்தமிழ் என வழங்கினர்.

இயற்றமிழின்றி இசைத்தமிழில்லை! இயற்றமிழும் இசைத்தமிழுமின்றி நாடகத்தமிழுமில்லை! ஆகவே, இயல் இசை நாடகம் மூன்றும் முறையே ஒருதமிழும் இருதமிழும் முத்தமிழுமாகும். இங்ஙனம் இசை நாடகக் கலைகளை மொழிப்பகுதியாக்கியமை வேறெந்த நாட்டிலுமில்லை. வேறெந்த மொழியிலும் இல்லை!

இசையென்னும் தனிச்சொல் இயல்பான ஓசையைக் குறித்து, பின்பு இனிய ஓசையாகிய பண்ணைக் குறித்தது. வடமொழியில் “கீதம்” (பாட்டு) என்னும் பெயர் “சம்” என்னும் முன்னொட்டுப்பெற்றுச் “சங்கீதம்” என்றாகி இசைக்கலையைக் குறிக்கலாயிற்று! இதனால், இசைத்தமிழ் முந்தினதென்றும் இயல்பானதென்றும் அறியலாம்.

இசைத்தமிழ் பற்றிய தொல்காப்பியச் சான்றுகள்
“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.” ….. (எழுத்து. 33)

“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.” ….. (அகத். 20)

“துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” ….(களவு. 1)

“பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்’’ ….. (கற்பு. 52)

“பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே” ….. (செய். 173)

தொல்காப்பியம் ஒரு இடைச்சங்க நூல். இதன் காலம் கி.மு. 2000. இஃது ஒரு வழிநூலாதலின் இதிற் கூறப்பட்டுள்ளவை யெல்லாம் தலைச்சங்க நூல்களிற் கூறப்பட்டவையே. இசை என்பது ஒலிகளாலான சத்தம், சந்தம் ஆகும். பலதரப்பட்ட இசை இலக்கண குறிப்புகள் பண்டைய காலத்திலிருந்து நம் வாழ்வு முறையில் கலந்து வந்திருக்கிறது. பாணர்கள், ஞானிகள், கதைசொல்லிகள் அனைவரும் இசையிலேயே செய்தி சொல்லி வந்திருக்கின்றனர்.

சங்கத்தமிழில் பரிபாடல், தொல்காப்பியம், குறுந்தொகை முதலே தமிழ் இசை பகுக்கப்பட்டு வந்திருக்கிறது. மாதவி பயன்படுத்திய யாழ் இசைக்கருவியில் 12 சுரங்களை இசைத்திருக்கிறார். சகோட யாழ் என்ற இதில் இரண்டு இசைத் தொகுதிகளை (Octaves) இசைக்க முடியும். சிலப்பதிகாரம் தமிழர் வாழ்ந்த அந்தக் காலகட்டத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது.

“இணைகிளை பகைநட் பென்றிந் நான்கி
னிசைபுணர் குறிநிலை யெய்த நோக்கி”
(சிலம்பு 202) இதில் சுர வகைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இணை – Harmony
கிளை – Branch
பகை – Enmity
நட்பு – Friendship

இசையமுதம் – தொடர் - 34இசைக்குரியவை சுரம், பண், தாளம், பாட்டு, கருவி என ஐந்துமாகும்.

சுரம் ஏழு வகைப்படும்.
1 – குரல்
2 – துத்தம்
3 – கைக்கிளை
4 – உழை
5 – இளி
6 – விளரி
7 – தாரம்

அவற்றை இசைமுறையிற் பயிலும்போது, முற்காலத்தில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழ் நெடில்களாலும், பிற்காலத்தில் ச ரி க ம ப த நி என்னும் எழுத்துகளாலும் குறித்தார்கள்.

ஏழுசுரத்தின் ஏற்ற முறைக்கு ஆரோசை என்றும், இறக்க முறைக்கு அமரோசை என்றும் பெயர். ச ப ஒழிந்த மற்ற ஐந்து சுரங்களும் அரைச்சுரம் முழுச்சுரம் எனத் தனித்தனி இரு நிலையாம். அரைச் சுரத்திற்கு ஆகணம் என்றும் முழுச் சுரத்திற்கு அந்தரம் என்றும் பெயர்.

எழுசுரக் கோவைக்கு, நிலை என்று பெயர். மக்கள் பாடஇயலும் மூன்று நிலைகட்கும் முறையே மெலிவு, சமன், வலிவு என்பன பெயராகும்.

பண்கள்; பண் (7 சுரம்), பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்), திறத்திறம் (4 சுரம்) என நாற்றிறத்தினவாகும்.

பெரும்பண்கள்; மருதம், குறிஞ்சி, செவ்வழி, பாலை என நான்கு. இவற்றுள் ஒவ்வொன்றும் -அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நந்நான்கு வேறுபாடு உடையது.

பண்களைப் பிறப்பிக்கும் முறை; ஆயப்பாலை, வட்டப் பாலை, முக்கோணப்பாலை, நாற்கோணப்பாலை என நால்வகைத்து.

பண்களின் பெயர்கள் எல்லாம் குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை எனத் தமிழ்ச் சொற்களாகவே இருந்தன.

பிங்கல நிகண்டில் 103 பண்கள் கூறப்பட்டுள்ளன. “நரப்படைவா னுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை உணரலாம்.

தாளம் கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளையுடையது. தாளத்திற்குப் பாணி யென்றும் பெயர்.

“அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதல் 16 மாத்திரையுடைய பார்வதிலோசனம் ஈறாக 41 தாளம் புறக்கூத்திற்குரிய” என்று அடியார்க்கு நல்லார் கூறுகிறார். இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள் தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வடமொழிப் பெயர்கள்.

இசைப்பாட்டுகள் தலைச்சங்க காலத்திலும் இடைச்சங்க காலத்திலும் எண்ணிறந்திருந்தன. அவை யாவும் இறந்தொழிந்தன. கடைச்சங்க நூல்களில் ஒன்றான பரிபாடல் இசைத் தமிழிலக்கியமே.

கருவிகள்; தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, தாளக்கருவி (கஞ்சக்கருவி) என நான்கு.

தோற்கருவிகள்; “பேரிகை படகம் இடக்கை உடுக்கை மத்தளம் சல்லிகை கரடிகை திமிலை குடமுழா தக்கை கணப்பறை தமருகம் தண்ணுமை தடாரி அந்தரி முழவு மதி (சந்திர) வளையம் மொந்தை முரசு கண்விடுதூம்பு நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம் தகுணிச்சம் விரலேறு பாகம் துணையுறுப்பு (உபாங்கம்) நாழிகைப் பறை துடி பெரும்பறை” முதலியவாகப் பல்வகையாகும்.

இவை; அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாண்முழவு, காலைமுழவு, என எழு வகைப்படும். பாட்டுறுப்பு (கீதாங்கம்), கூத்துறுப்பு (நிருத்தாங்கம்), பொதுவுறுப்பு (உபயாங்கம்) என மூவகைப்படும்.

துளைக்கருவி; புல்லாங்குழல், நாகசுரம் முதலியன.

நரம்புக்கருவி பல்வகைத்து. பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு), செங்கோட்டியாழ் (7 நரம்பு) என்பன பெருவழக்கானவை. இவற்றுள் செங்கோட்டியாழே இப்போதுள்ள வீணையாகும். நரம்புக் கருவிகட்கெல்லாம் யாழ் என்பது பொதுப்பெயர். வீணை என்னும் பெயர் பிற்காலத்தது.

பழமலை (முதுகுன்றம்), மறைக்காடு முதலிய தமிழகத்து ஊர்ப்பெயர்கட்குப் பதிலாக விருத்தாசலம் வேதாரணியம் முதலிய வடமொழிப் பெயர்கள் வழங்குவது போன்றே, யாழ் என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக வீணை என்னும் வடசொல் வழங்கி வருகின்றது.

யாழ்கள் செங்கோடு (சிவப்புத்தண்டி), கருங்கோடு (கறுப்புத்தண்டி) என இருநிறத் தண்டிகளை உடையனவாயிருந்தன. செங்கோட்டையுடைய யாழ் செங்கோட்டி யாழ். “கருங்கோட்டுச் சீறியாழ்” எனப் புறப்பாட்டில் வருதல் காண்க.

ஆங்கிலத்தில் Fiddle எனப்படும் கின்னரி தமிழகத்தினின்று மேனாட்டிற்குச் சென்றதேயாகும். இதை மேனாட்டாரே ஒப்புக் கொள்கின்றனர். இஃது இராவணனால் மிகுதியாய்ப் பயிலப்பட்டதென்றும், அதனால் ‘இராவணாசுரம்’ எனப்பட்டதென்றும் ஆய்வாளர் கூறுவர்.

சிலர் மிடற்றையுங் கருவியாகக் கொண்டு கருவி ஐந்தென்பர். மிடறு = தொண்டை, வாய்ப்பாட்டுக் கருவி.

மேற்கூறிய கருவிகளையெல்லாம் தொன்றுதொட்டு உருவாக்கி இயக்கி வந்தவர்களும் தமிழர்களேயாவார். இத்தகையோர் பாணர், மேளக்காரர் (நட்டுவர்) என இரு வகுப்பினர் ஆவார்.

இசைத் தெய்வத்திற்கே மாதங்கி (பாடினி) என்ற பெயருண்டு.

பண்டைத் தமிழகத்தில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பாணரே ஆவார். பாணபத்திரர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் முதலிய யாழ்வேந்த ரெல்லாம் பாணரே.

பதினோராம் நூற்றாண்டில் தேவாரத்திற்கு இசைவகுத்தது திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மரபினரான ஒரு பெண்ணாவார். தொல்காப்பியர் காலத்திற்கு முன்னிருந்து வழங்கிவரும் பாணாற்றுப்படை கூத்தராற்றுப் படை முதலிய செய்யுள்களும் நூல்களும் பாணரின் இசைத் தலைமையைப் புலப்படுத்தும்.

தொடர் 35இசையானது ஒலிவடிவாய் வெளிப்படும் போது ஒருவனது மகிழ்ச்சி பெருக்கமாகின்றது. அம் மகிழ்ச்சியைத் தன் தாய்மொழிச் சொற்களால் அறிவிக்கின்றான் நாகரிக மனிதன். தாய் மொழியிற் போல வேறெந்த மொழியிலும் சிறப்பாக வெளிப்படுத்த முடியாது.

இசை உள்ளத்தை உருக்கும்தன்மை வாய்ந்ததாதலின், அதைக் கடவுள் வழிபாட்டிற்கும் ஊடல் தீர்ப்பிற்கும் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வருகின்றனர். விளங்காத மொழியில் கடவுளை வேண்டின் அஃது உளறுவது போலாவதோடு, கடவுளைக் கேலிசெய்து பழிப்பதுமாகின்றது.

இசையினால் பாடுவோர்க்கு மட்டுமன்றிக் கேட்போர்க்கும் இன்பம் விளைகின்றது. பருந்தும் நிழலும் போலப் பொருளும் பண்ணும் பொருந்தியிருக்கும் உயர்ந்த இசையைப் பண்பட்ட தமிழானால்தான் நுகர முடியுமே, தவிர வேறெவராலும் நுகரவே முடியாது.

மேனாட்டிசைக்கு அராகம் (ஆளத்தி), தாளம், சுரம் பாடல் என்ற மூன்றுமில்லை, மெட்டுகள் தாமுண்டு.

ஐரோப்பாவில் இத்தாலியே இசைக்குச் சிறந்தது. ஐரோப்பா முழுதும் வழங்குவது ரோம-கிரேக்க இசையேயாகும். அவ்விசையே பண்டைக் காலத்தில் இங்கிலாந்திற்குச் சென்றது. ஆங்கில இசைக் குறியீடுகளெல்லாம் இலத்தீன்-கிரேக்கச் சொற்களாகவே இருக்கின்றன.

அகத்தியம் (முத்தமிழ் நூல்), பரிபாடல் (தலைச்சங்க இலக்கியம்), பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், வரி, சிற்றிசை, பேரிசை, இந்திரகாளியம், தாளசமுத்திரம், தாளவகையோத்து, சச்சபுட வெண்பா, பஞ்சமரபு, பஞ்சபாரதீயம் முதலிய பண்டை இசைத்தமிழ் நூல்கள் அழிந்துபோயின.

முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம், கூத்தநூல், மதிவாணனார் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து (இலக்கியம்), சுத்தானந்தப் பிரகாசம், பரதம், பரதசேனாபதியம் முதலிய பண்டை நாடகத்தமிழ் நூல்களும் அழிந்துபோயின.

பரிபாடல், தேவாரம், நாலாயிரத் தெய்வப் பனுவல், திருப்புகழ் , தேவபாணி, வரிப்பாடல், குரவைப்பாடல், முத்துத்தாண்டவர் வேதநாயகம் பிள்ளை முதலியோர் கீர்த்தனைகள், சீகாழி அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனை, கோபால கிருட்டிண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து, வழிநடைப் பதங்கள், நொண்டிச் சிந்துகள், தில்லானா, தென்பாங்கு முதலிய பல இசைத்தமிழ் இலக்கியங்களும் பாடல்களும் மட்டும்தான் இன்று எமக்குக் கிடைக்கின்றன.

இந்திய தேசத்து இசைக்கே இசைத்தமிழ்தான் அடிப்படையாகும். முதலாவது இசைத்தமிழ் வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்டது.

கேள்வியைச் “ச்ருதி” என்றும் நிலையை “ஸ்தாய்” என்றும் மொழிபெயர்த்தனர். பண்களுக்கெல்லாம் தமிழ்ப்பெயரை நீக்கி ஆரியப்பெயரை இட்டுத் தமிழ்நாட்டிலும் வழங்கச் செய்தனர்.

“ராகம்” என்பது அராகம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபேயாகும். சுரம் தாளம் பாணி என்பவையும் தமிழ்ச்சொற்களே. இந்துத்தானி இசை என்பது முற்றிலும் இசைத்தமிழின் திரிபே. இதனை மறுப்பதற்குமில்லை. மறைப்பதற்குமில்லை.

அக்பர் அவைக்களத்தில் தென்னாட்டு இசைத்தமிழ்வாணரும் இருந்திருக்கின்றனர். இந்துத்தானி இசையிலும் சுரம் தாளம் அராகம் என்பவற்றிற்குத் தென்னாட்டிசையில் இன்றும் வழங்கும் பெயர்களே வழங்கி வருகின்றன.

கருநாடக இசை இசைத்தமிழே. புரந்தரதாஸ் என்பவர் கன்னடத்தில் சில கீர்த்தனைகள் இயற்றினார். மகமதியர் தென்னாட்டிற்கு வந்தபோது திரவிட நாட்டில் தமிழரசர் வலிகுன்றிக் கருநாடக மன்னர் தலைமையாயிருந்ததால், திரவிட நாட்டைக் கருநாடகம் (கர்நாட்டக்) என்றும் திரவிட இசையாகிய தமிழிசையைக் கருநாடக சங்கீதம் என்றும் அழைத்தனர்.

கருநாடகம் என்னும் சொல்லும் கருநடம் (கன்னடம்) என்னும் மொழியும் தமிழின் திரிபே. ஆகவே, இசைத்தமிழே உருமாறியும் குறியீடு மாறியும் “இந்துத்தானி” மற்றும் “கருநாடக” இசைகளென வழங்கி வருகின்றது. இந்துத்தானி இசை, கருநாடக இசை, தெலுங்கிசை என்பவையெல்லாம் மொழியால் வேறுபட்டவையே அன்றி இசையால் வேறுபட்டவையல்ல.

அவற்றை எல்லாம் அந்தந்த மொழிப்பெயரால் “பாட்டு” என்று சொல்லுதலேயன்றி “இசை” யென்று அழைத்தல் பொருந்தாது. இசைத்தமிழ் ஒன்றே மொழி வேறுபாட்டால் வெவ்வேறு பெயர் பெற்று வழங்கிவருகின்றன என்பதனையும் அறிக.

இசை வேறு, பாட்டு மொழி வேறு. மலையாளத்தில் சில பாட்டுகளிருப்பதால் “மலையாள இசை” என ஒன்று ஏற்படுவதற்கு இல்லை. எனவே, இன்று தமிழ்நாட்டிலுள்ள இசை, கலையால் தமிழும், மொழியால் பிறிதுமாகி இருக்கின்றது என்பதறிக.

“பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.” (குறள். 573)

 

தொடர் - 36தாளம் அடித்தளமாக அமைய!
சுரங்கள் அணிவகுத்து நடைபோட!
பாடல் ஸ்தாயி மேலும் கீழும் பயணிக்க!
இசை என்னும் ஊர்வலம் இனிது நிறைவேறும்!!

பலதரப்பட்ட இசை இலக்கண குறிப்புகள் பண்டைய காலத்திலிருந்து நம் வாழ்வு முறையில் கலந்து வந்திருக்கிறது. சங்கத் தமிழில் பரிபாடல், தொல்காப்பியம், குறுந்தொகை முதலே தமிழ் இசை பகுக்கப்பட்டு வந்திருக்கிறது.

தமிழிசை நான்கு முக்கிய இலக்கண விதிகளுக்குள் பெரும்பாலும் அடங்கி விடுகின்றது.  அவையாவன சுரம், தாளம், சுருதி, ஸ்தாயி.

பொதுவாகவே நம் இந்திய இசை தனிச் சுரங்களால் ஆனவை. எந்த இசையையும் நாம் கேட்கும்போது இவை எதுவுமே தனித்து நிற்பதில்லை. இவற்றில் ஏதேனுமொன்றை நாம் தனியாக அவதானிக்கத் தொடங்கினால் ஏனையவற்றைச் சரியாகக் கவனிக்கத் தவறிவிடுவோம். இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கூட்டு விளைவே இசையின் முழுவடிமாகும்.

தமிழிசையின் கூறுகள் அல்லது அடிப்படைகள் எனும் வகையில் கீழ்வரும் உப தலைப்புகளின் கீழ் நோக்குவோம். இசை என்பது கடல் போன்றது. இதற்குக் கரையை வகுப்பது எனபதும் முடியாத காரியமாகும். எனவே இவ் உபபிரிவுகள் இசைபற்றி நாம் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்குமே தவிர முடிந்த முடிபானதுமல்ல என்பதனை முதலில் நாம் புரிந்து கொள்வோம்.

நாதம், சுருதி, ஸ்வரம், தாளம், லயம் ஆகிய பிரிவுகளின் கீழ் நாம் பயணிப்போம்.

செம்மொழியில் ஏழிசைகளாவன
1 – குரல்
2 – துத்தம்
3 – கைக்கிளை
4 – உழை
5 – இளி
6 – விளரி
7 – தாரம்
என அழைக்கப்பட்டதையே வடமொழிக்கலப்பு ஏற்பட்டபோது இவற்றை “சுரம்” என்று அழைத்தனர்

தமிழிசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன.
1 – ஷட்ஜம்
2 – ரிஷபம்
3 – காந்தாரம்
4 – மத்திமம்
5 – பஞ்சமம்
6 – தைவதம்
7 – நிஷாதம்
என்ற இவ்வேழு சுரங்களும் ச – ரி – க – ம – ப – த – நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு.

ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இந்த ஏழு சுரங்களிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெறமுடியும்.

இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே தமிழ் இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன.

1.நாதம் (ஒலி)
செவிக்கு இனிமை கொடுக்கும் ஒலி நாதம் எனப்படும். இசைக்கு மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும். நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து சுரமும், சுரத்திலிருந்து இராகமும் உண்டாகின்றது. நாதத்தில் இரு வகைகள் உண்டு அவையாவன;

ஆகத நாதம் : மனித முயற்சியினால் உண்டாக்கப்படும் நாதம் ஆகத நாதம் எனப்படும். நாம் கேட்கும் சங்கீதம், பாடும் சங்கீதம், வாத்தியங்களில்  வாசிக்கப்படும் சங்கீதம் முதலியவைகள் எல்லாம் ஆகத நாதத்தைச் சேர்ந்தவையாகும்.

ஆகத நாதம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்.
1. ப்ராணி சம்பவ நாதம் – (உயிருள்ள) தேகத்திலிருந்து உற்பத்தியாகும் நாதம்.   உ+ம்: வாய்ப்பாட்டு
2. அப்ராணி சம்பவ நாதம் –  வஸ்துகளாகிய வீணை போன்ற தந்தி வாத்தியங்களினின்று உற்பத்தியாகும் நாதம்.
3. உபய சம்பவ நாதம் – (உயிருள்ள) பிராணிகளின் சத்தத்தைக் கொண்டு மூங்கிலைப் போன்ற வஸ்துக்களில் உற்பத்தியாக்கப்படும் நாதம்.

கட்டைகளைக் கொண்டு செய்யப்பட்ட குழல், நாதசுவரம் போன்ற கருவிகளினின்று உண்டாக்கப்படும் நாதம் இதற்கு உதாரணமாகும்

அநாகத நாதம்
மனித முயற்சி இல்லாமல் இயற்கையாக உண்டாகும் நாதம் அநாகத நாதம் எனப்படும். இது யோகிகளாலும், சித்தர்களாலும் மட்டும் அறியக்கூடியது. தியாகராஜ சுவாமிகள் ஒரு சிறந்த நாத யோகி.

2.சுருதி (கேள்வி, அலகு)
சுருதிப்பெட்டி-thamil.co.ukபாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேடஒலியே சுருதி எனப்படும். இதுவே  இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும்.

நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் இசை அதாவது சுருதிதான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதியே இசைக்குப் பிரதானம் என்பதனால் இதனை மாதா எனவும் அழைக்கப்பர். சுருதி பஞ்சம சுருதி, மத்திம சுருதி என இரு வகைப்படும்.

பஞ்சம சுருதி- மத்திமஸ்தாயி ஸட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது பஞ்சம சுருதி எனப்படும். (ஸபஸ் எனப் பாடுவது).

மத்திம சுருதி- மத்திமஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது மத்திம சுருதி எனப்படும். (ஸமஸ் எனப் பாடுவது).

சாதாரணமாகப் பாட்டுக்கள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது.

நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாக சுருதி சேர்க்கும் பொழுது சா-பா-சா-பா என்ற முறையில் சேர்க்கிறோம்.

அனேகமான நாட்டார் பாடல்கள் மத்திம சுருதியில் தான் பாடப்படுகிறது.

நாம் பாடுவதற்கு மத்யஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்வதனால் அதனையே சுருதி என்கிறோம். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியை தாய் என்றும் லயத்தைப் தந்தை என்றும் சொல்வர். சுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

3.சுரம் (ஸ்வரம்)
இயற்கையாக இனிமையைக் கொடுக்கும் தொனி சுரம் எனப்படும். இசைக்கு ஆதாரமானவை இச்சுரங்கள் ஏழும் ஆகும். இவை சப்த ஸ்வரங்கள் எனவும் வழங்கப்படும். தமிழிசையில் ஸ்வரத்திற்கு கோவை எனப் பெயர் உண்டு. ஏழு ஸ்வரங்களும் அவற்றின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு அமையும்;
1 – குரல் – ஸட்ஜம் – ஸ – மயில்
2 – துத்தம் – ரிஷபம் – ரி – ரிஷபம்
3 – கைக்கிளை – காந்தாரம் – க – ஆடு
4 – உழை – மத்திமம் – ம – கிரெளஞ்சம்
5 – இளி – பஞ்சமம் – ப – கோகிலம் (குயில்)
6 – விளரி – தைவதம் – த – குதிரை
7 – தாரம் – நிஷாதம் – நி – யானை

சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். இது கோவை அல்லது தாது என்றும் அழைக்கப்படும். இயற்கையாகவே இனிமையைத் தருவது.

சுருதி என்ற அடி நிலையிலிருந்தே சுரம் என்ற நாதப்படிகள் தோன்றியுள்ளன. இவைகள் இசைமுறைகளை விளக்கமாயும், தெளிவாய்ப் பாடவும், வாசிக்கவும் துணை புரிகின்றன.

தேர்ந்து கூட்டும் சுரங்களில் இருந்து இராகங்கள் பிறக்கின்றன. ஒவ்வொரு இராகமும் அல்லது பண்ணும் சில குறிப்பிட்ட சுரங்களினால் அழகுணர்வுடன் பின்னப்பட்ட ஓர் அமைப்பாகும். இயற்கை ஒலிகள் ஏழாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மிருகங்கள் மற்றும் பறவைகளின் குரல்களில் இருந்து இனம் காணப்பட்டது என்று இந்திய இசை நூல்கள் தெரிவிக்கின்றன. இவையே இசைக்கு ஆதாரமாயுள்ள சப்தசுரங்கள் ஆகும்.

ஸ ரி க ம ப த நி – இதனை சப்தகம் என்று அழைப்பர்.
ஸ ரி க ம ப த நி ஸ் – இதனை அஷ்டகம் என்று அழைப்பர்.

துணை சுரங்கள்

சப்தசுரங்கள் ஏழும் தனது இயற்கையான சுர நிலகளில் இருந்து சற்றே உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்த சுரங்களின் துணை சுரங்களாகின்றன. இவற்றை பிரகிருதி, விக்ருதி பேதங்கள் என்பார்கள். ஷட்ஜமம், பஞ்சமம் இரண்டும் பேதமில்லாதவை. மற்றைய ஐந்தும் பேதமுடையவை. இவற்றின் விபரங்களைக் கீழே காண்க.

ஷட்ஜமம் (1)
ஸ – ஷட்ஜமம்

ரிஷபம் (3)
ரி1 – சுத்த ரிஷபம்
ரி2 – சதுஸ்ருதி ரிஷபம்
ரி3 – ஷட்ஸ்ருதி ரிஷபம்

காந்தாரம் (3)
க1 – சாதாரண காந்தாரம்
க2 – அந்தர காந்தாரம்
க3 – சுத்த காந்தாரம்

மத்யமம் (2)
ம1 – சுத்த மத்யமம்
ம2 – ப்ரதி மத்யமம்

பஞ்சமம் (1)
ப – பஞ்சமம்

தைவதம் (3)
த1 – சுத்த தைவதம்
த2 – சதுஸ்ருதி தைவதம்
த3 – ஷட்ஸ்ருதி தைவதம்

நிஷாதம் (3)
நி1 – கைஷகி நிஷாதம்
நி2 – காகலி நிஷாதம்
நி3 – சுத்த நிஷாதம்

இவற்றுள் இயற்கையாக உள்ள சுரநிலைகள் பன்னிரண்டே ஆகும். சில சுரங்களை வேறு சுரங்களாக நினைத்துக் கொண்டு அதாவது அந்த ஸ்தானத்தில் பாடுதல் கருநாடக சுர வகைக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு அம்சமாகும்.

ரி3 = க1
க3 = ரி2
த3 = நி1
நி3 = த2
மொத்தமாக துணைச்சுரங்களோடு பதினாறு ஆகின்றன.

1. ஷட்ஜம் : ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் சுரம் ஷட்ஜ்அம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் – ஆறு)

2. ரிஷபம் : இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.

3. காந்தாரம் : காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.

4. மத்திமம் : ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.

5. பஞ்சமம் ; ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச-ஐந்து)

6. தைவதம் : தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.

7. நிஷாதம் : ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.

சுரநிலைகளின் சிறப்பு அம்சங்கள்

பண்டிதர் ஆபிரகாம்

பண்டிதர் ஆபிரகாம்

ஏழு சுரங்கள் இருப்பதும் அவற்றின் விபரங்களும் நாம் அறிவோம்.
ஸ – ஷட்ஜம்
ரி – ரிஷபம்
க – காந்தாரம்
ம – மத்யமம்
ப – பஞ்சமம்
த – தைவதம்
நி – நிஷாதம்
இந்த ஒவ்வொரு சுரமும் ஒரு ஒலியமைப்பே ஆகும். இவற்றிற்கு தனித்தனி அலைவரிசைகள் உண்டு. இதேபோல் பண்டைய காலத்தில் தமிழிசையிலும் இதற்கான சமமான ஒலி அலைவரிசைகளை பகுத்துள்ளனர்.

சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் இந்நரம்புகளின் மாத்திரைகள் வருமாறு:
“குரறுத்த நான்கு கிளைமூன் றிரண்டாங்
குரையா வுழையிளி நான்கு-விரையா
விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்
களரிசேர் கண்ணுற் றவர்”

தாரத்து உழை பிறக்கும்;
உழையிற் குரல் பிறக்கும்;
குரலுள் இளி பிறக்கும்;
இளியுள் துத்தம் பிறக்கும்;
துத்தத்துள் விளரி பிறக்கும்;
விளரியுட் கைக்கிளை பிறக்கும்

இவற்றுள் முதலிற்றோன்றிய நரம்பு தாரம். இவை விரிப்பிற் பின்வருமாறு பெருகும் என்பதைக் காண்க.
குரலுக்கு 4 அலகும்,
துத்தத்துக்கு 4 அலகும்,
கைக்கிளைக்கு 3 அலகும்,
உழைக்கு 2 அலகும்,
இளிக்கு 4 அலகும்,
விளரிக்கு 3 அலகும்,
தாரத்திற்கு 2 அலகுமாக மொத்தம் 22 அலகு என்று சொல்லுகின்றார்.

இந்த ஏழு சுரங்களில் ஸ, ப ஆகிய இரண்டும் ப்ருக்ருதி ஸ்வரங்கள் எனக் கூறப்படும். அதாவது இவை மாறுதல் இல்லாத சுரங்களாகும். ஸ மற்றும் ப சுரங்கள் முழுமையான சுரங்கள் என்பது தெளிவு. இதன் அலைவரிசையில் சற்று கீழோ, அல்லது மேலோ மாறுதல் இருக்கும் போது அடுத்த சுரத்திற்குத் தாவிவிடும்.

சுரஸ்தானத்தில் ஒரே ஒரு ச, ப மட்டுமே இடம்பெற முடியும். இந்த சுரங்களில் இருக்கும் அலைவரிசை அல்லது அசைவு எண்கள் (Frequency Hz) கீழே வருமாறு
ச – 240
நி – 256
க – 300
ம – 320
ப – 360
த – 384
நி – 450
ச் – 480

ஆரோகனம்- சுரங்கள் மற்றொன்றைவிட அதிகரித்துச் செல்லும்போது ஆரோகனம் என்று பெயர். தமிழிசையில் இதற்கு ஏறுநிரல் எனப் பெயர். ச ரி க ம ப த நி ச

அவரோகனம் – சுரங்கள் ஒன்றுக்கொன்று குறையும்போது அவரோகனம் என்று பெயர். தமிழிசையில் இதற்கு இறங்குநிரல் எனப் பெயர். ச நி த ப ம க ரி ச

இதுவே ஒரு சுரஸ்தானம் (Octave) ஆகும். இப்படி ஏற்ற இறக்கங்களோடு இருக்கும் சுரக் கோர்வையை ராகம் என்பர். பழந்தமிழ்ப்பண்களே இக்கால இந்திய இசையில் ‘இராகம்’ என்று சொல்லப்படுகிறது.

பண்களுக்கு உரிய இசை ஏழு என்றும், இவற்றை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைத்தனர். இவற்றை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் உயிர் நெட்டெழுத்து ஒலிகளால் இசைத்தனர்.

தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளைச் ‘சுரம்’ என்றனர். ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று ஆயின என்பதனையும் அறிவோம்.

இவற்றைப் பாடும்பொழுது முதலெழுத்துக்கள் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று பாடினர். (இவற்றின் முதலெழுத்துகளே ஸ, ரி, க, ம, ப, த, நி என வடமொழி ஆயிற்று).

பண்களின் எண்ணிக்கை
பண்கள் நூற்றுமூன்று எனக் கொண்டனர் பழந்தமிழர். பண்களுக்கு உரிய இசை ஏழு என்றால், நூற்றுமூன்று பண்கள் எவ்வாறு ஆயின?

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று ஆரோசையிலும், தாரம், விளரி, இளி, உழை, கைக்கிளை, துத்தம், குரல் என அமரோசையிலும் ஏழு இசையும் அமைந்தால் அது “பண்” எனப்படும்.

கருநாடக இசையின் ஆரோகணம் அவரோகணம் என்பது தான் ஆரோசை அமரோசை ஆகும். இவ்வாறு ஆரோகண அவரோகணத்தில் ஏழு சுரங்களும் முறையே அமைந்தால் கருநாடக இசையில் இது “சம்பூர்ண இராகம்” எனப்படும்.

ஏழிசையில் ஆறு இசை கொண்டவை “பண்ணியல்” எனப்படும். (கருநாடக இசையில் இது “ஷாடவ இராகம்” எனப்படும்).

ஏழிசையில் ஐந்திசை கொண்டது “திறம்” எனப்படும். (கருநாடக இசையில் இது “ஒளடவ” இராகம் எனப்படும்).

ஏழிசைகளையும் பழந்தமிழர் இவ்வாறு வகுத்துக்கொண்டனர். பின்னர் அவற்றைப் பின்வருமாறு பகுத்துக் கொண்டனர்.
பண் வகைகள் – (சம்பூர்ண இராகம்) – 17
பண்ணியல்கள் – (ஷாடவ இராகம்) – 70
திறங்கள் – (ஒளடவ இராகம்) – 12
திறத்திறங்கள் – (சுராந்தரம்) – 04
மொத்தம் – 103

பஞ்சமரபு நூலின் ஆசிரியர் அறிவனார் இந்த விளக்கத்தை ஒரு வெண்பாவில் தருகிறார்.
பண்ணோர் பதினேழாம் பண்ணியல் பத்தேழாம்
எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப – நண்ணிய
நாலாந் திறத்திற மோர் நான்கு முளப்படப்
பாலாய பண் நூற்று மூன்று.

சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள் காணப் பெறுகின்றன. ஆம்பல் பண், காஞ்சிப் பண், குறிஞ்சிப் பண், நைவளம் போன்ற பண்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஆம்பல்பண் : ஆம்பல் என்பது ஒருவகைப் பண்ணாகும். இப்பண்ணைப் பற்றிய செய்திகள் நற்றிணை (123 : 10), ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222) ஆகிய பாடல்களில் காணப் பெறுகின்றன. கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர். தட்டை, தண்ணுமை போன்ற இசைக்கருவிகளுடன் மாலைக் காலத்தில் இசைத்து மகிழ்கின்றனர்.

காஞ்சிப்பண் : காஞ்சிப் பண் துயருறும் மக்களின் துயரம் போக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புண் பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் வருத்தம் தீர இப்பண்ணினைப் பாடிய குறிப்பு, புறநானூறு 296-யில் காணப்பெறுகிறது.

குறிஞ்சிப் பண் : மலையுறை தெய்வங்களை மகிழ்விக்க, கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியதாக மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.

நைவளம் : நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு (146), சிறுபாணாற்றுப்படை (36-38), பரிபாடல் (18-20-21) வரிகளில் குறிப்புகள் உள.

இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

4.தாளம்
தாளம் thami.co.ukதாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர்.

பாட்டின் கால அளவை சேர்த்து கையினால் அல்லது வேறு கருவிகளினால் தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை, அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது.

காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்.

ஏழு வகையான தாளங்கள்
1. துருவ தாளம்
2. மட்டிய தாளம்
3. ரூபக தாளம்
4. ஜம்பை தாளம்
5. திரிபுடை தாளம்
6. அட தாளம்
7. ஏக தாளம்
ஒவ்வொரு தாளத்தையும் மேலும் ஐந்து உபபிரிவுகளாகப் பிரித்தனர். திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம். எனவே முப்பத்தைந்து தாள வகைகள் நம் தென்னக இசை மரபின் பயின்று வந்திருக்கின்றன.

நாடிகள்
தாளங்களின் அமைப்பு நாடிகள் அல்லது பிராணன் என்று சொல்லப்படும் 10 கூறுகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. பத்து நாடிகள் பின்வருமாறு:
காலம்
மார்க்கம்
கிரியை
உறுப்பு
எடுப்பு
ஜாதி
களை
லயம்
யதி
பிரஸ்தாரம்

தாள உறுப்புக்கள்
தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன:
லகு (|)
அனுதிருதம் (U)
திருதம் (O)
குரு (8)
புளுதம் (1/8)
காகபாதம் (+)

லகு (|) என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்துவரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதேகையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம கால அளவுகளைக் கொண்டன. இக் காலஅளவு ஒரு அட்சரம் எனப்படும்.

வெவ்வேறான விரலெண்ணிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வகையான “லகு”க்கள் உள்ளன.
1. திச்ர லகு – ஒரு தட்டும், இரண்டு விரலெண்ணிக்கைகளும் – 3 அட்சரங்கள்
2. சதுச்ர லகு – ஒரு தட்டும், மூன்று விரலெண்ணிக்கைகளும் – 4 அட்சரங்கள்
3. கண்ட லகு – ஒரு தட்டும், நான்கு விரலெண்ணிக்கைகளும் – 5 அட்சரங்கள்
4. மிச்ர லகு – ஒரு தட்டும், ஆறு விரலெண்ணிக்கைகளும் – 7 அட்சரங்கள்
5. சங்கீர்ண லகு – ஒரு தட்டும், எட்டு விரலெண்ணிக்கைகளும் – 9 அட்சரங்கள்

அனுதிருதம் (U) ஒரு தட்டை மட்டும் கொண்டது. லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.

திருதம் (O) இரண்டு அட்சர காலம் கொண்ட தாள உறுப்பு. ஒரு தட்டும், ஒரு வீச்சும் கொண்டது. வீச்சு என்பது தட்டிய பின் கையைத் தட்டிய இடத்திலிருந்து தூக்கி உள்ளங்கை மேல் நோக்கும் படி வீசுவதாகும். கையைத் திருப்பிப் புறங்கையால் தொடையில் அல்லது மற்றொருக் கைகையில் தட்டுவதும் உண்டு.

குரு (8)

புளுதம் (1/8)

காகபாதம் (+)

ஏழு தாளங்கள் : துருவ தாளம், மட்டிய தாளம், ரூபக தாளம், ஜம்பை தாளம், திரிபுடை தாளம், அட தாளம், ஏக தாளம்.

1. துருவ தாளம்
துருவ தாளம் என்பது கர்நாடக இசையில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு தாள வகைகளுள் ஒன்று. இத்தாள வகையில் லகு, திருதம், லகு, லகு என்னும் ஒழுங்கில் உறுப்புக்கள் அமைந்துள்ளன.

துருவ தாள வகைகள்
திஸ்ரசாதி துருவ தாளம்
சதுஸ்ரசாதி துருவ தாளம்
கண்டசாதி துருவ தாளம்
மிஸ்ரசாதி துருவ தாளம்
சங்கீர்ணசாதி துருவ தாளம்

உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது “லகு”.  விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில் திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு என ஐந்து வேறுபாடுகள் உள்ளன.

லகுவில் ஏற்படக்கூடிய இவ்வைந்து வேறுபாடுகளினால், துருவ தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன. இவை சாதிகள் எனப்படுகின்றன. இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:
1. திஸ்ரசாதி துருவ தாளம்
2. சதுஸ்ரசாதி துருவதாளம்
3. கண்டசாதி துருவ தாளம்
4. மிஸ்ரசாதி துருவ தாளம்
5. சங்கீர்ணசாதி துருவ தாளம்

திஸ்ரசாதி துருவ தாளம் : இத்தாளம் “மணி” எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)

சதுஸ்ரசாதி துருவ தாளம் : இத்தாளத்துக்கு “சிறீகரம்” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)

கண்டசாதி துருவ தாளம் : இது “பிராமணம்” எனப்படும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)

மிஸ்ரசாதி துருவ தாளம் : இதற்கு “பூர்ணம்” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)

சங்கீர்ணசாதி துருவ தாளம் : இதற்கு “புவனம்” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)

2. மட்டிய தாளம்
மட்டிய தாளம் என்பது கர்நாடக இசையில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு தாள வகைகளுள் ஒன்று. இத்தாள வகையில், லகு, திருதம், லகு என்னும் ஒழுங்கில் உறுப்புக்கள் அமைந்துள்ளன.

உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது “லகு”. விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில் திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு என ஐந்து வேறுபாடுகள் உள்ளன.

மட்டியதாள வகைகள்
லகுவில் ஏற்படக்கூடிய ஐந்து வேறுபாடுகளினால், மட்டிய தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன. இவை சாதிகள் எனப்படுகின்றன. இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:
1. திஸ்ரசாதி மட்டிய தாளம்
2. சதுஸ்ரசாதி மட்டிய தாளம்
3. கண்டசாதி மட்டிய தாளம்
4. மிஸ்ரசாதி மட்டிய தாளம்
5. சங்கீர்ணசாதி மட்டிய தாளம்

திஸ்ரசாதி மட்டிய தாளம் : இத்தாளம் “சரம்” எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)
துருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)

சதுஸ்ரசாதி மட்டிய தாளம் : இத்தாளத்துக்கு “சாமம்” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)

கண்டசாதி மட்டிய தாளம் : இது “உதயம்” எனப்படும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)

மிஸ்ரசாதி மட்டிய தாளம் : இதற்கு “உத்தீர்ணம்” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)

சங்கீர்ணசாதி மட்டிய தாளம் : இதற்கு “ராவ” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)

3. ரூபக தாளம்
ரூபக தாளம் என்பது கர்நாடக இசையில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு தாள வகைகளுள் ஒன்று. இத்தாள வகையில், திருதம், லகு என்னும் ஒழுங்கில் உறுப்புக்கள் அமைந்துள்ளன.

உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது “லகு”. விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில் திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு என ஐந்து வேறுபாடுகள் உள்ளன.

ரூபகதாள வகைகள்
லகுவில் ஏற்படக்கூடிய ஐந்து வேறுபாடுகளினால், ரூபக தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன. இவை சாதிகள் எனப்படுகின்றன. இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:
1. திஸ்ரசாதி ரூபக தாளம்
2. சதுஸ்ரசாதி ரூபக தாளம்
3. கண்டசாதி ரூபக தாளம்
4. மிஸ்ரசாதி ரூபக தாளம்
5. சங்கீர்ணசாதி ரூபக தாளம்

திஸ்ரசாதி ரூபக தாளம் : இத்தாளம் “சக்கரம்” எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)

சதுஸ்ரசாதி ரூபக தாளம் : இத்தாளத்துக்கு “பதி” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
ருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)
பெரும்பாலான இடங்களில் ஆறு அலகுகள் கொண்ட சதுஸ்ரசாதி ரூபக தாளத்தையே ரூபக தாளம் என்று அழைக்கின்றனர்.

கண்டசாதி ரூபக தாளம் : இது “இராச” எனப்படும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)

மிஸ்ரசாதி ரூபக தாளம் : இதற்கு “குல” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)

சங்கீர்ணசாதி ரூபக தாளம் : இதற்கு “பிந்து” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)

4. ஜம்பை தாளம்
ஜம்பை தாளம் என்பது கர்நாடக இசையில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு தாள வகைகளுள் ஒன்று. இத்தாள வகையில்  லகு,  அனுதிருதம், திருதம் என்னும் ஒழுங்கில் உறுப்புக்கள் அமைந்துள்ளன. உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது “லகு”.

விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில் திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு, என ஐந்து வேறுபாடுகள் உள்ளன.

ஜம்பைதாள வகைகள்
லகுவில் ஏற்படக்கூடிய ஐந்து வேறுபாடுகளினால், ஜம்பை தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன. இவை சாதிகள் எனப்படுகின்றன. இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:
1. திஸ்ரசாதி ஜம்பை தாளம்
2. சதுஸ்ரசாதி ஜம்பை தாளம்
3. கண்டசாதி ஜம்பை தாளம்
4. மிஸ்ரசாதி ஜம்பை தாளம்
5. சங்கீர்ணசாதி ஜம்பை தாளம்

திஸ்ரசாதி ஜம்பை தாளம் :இத்தாளம் “கதம்பம்” எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)
அனுத்திருதம் (ஒரு தட்டு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

சதுஸ்ரசாதி ஜம்பை தாளம் : இத்தாளத்துக்கு “மதுரம்” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)
அனுத்திருதம் (ஒரு தட்டு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

கண்டசாதி ஜம்பை தாளம் : இது “சானம்” எனப்படும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)
அனுத்திருதம் (ஒரு தட்டு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

மிஸ்ரசாதி ஜம்பை தாளம் : இதற்கு “சுரம்” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)
அனுத்திருதம் (ஒரு தட்டு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
பெரும்பாலான இடங்களில் பத்து அலகுகள் கொண்ட மிஸ்ரசாதி ஜம்பை தாளத்தையே ஜம்பை தாளம் என்று அழைக்கின்றனர்.

சங்கீர்ணசாதி ஜம்பை தாளம் : இதற்கு “கதம்” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
அனுத்திருதம் (ஒரு தட்டு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

5. திரிபுடை தாளம்
திரிபுடை தாளம் என்பது கர்நாடக இசையில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு தாள வகைகளுள் ஒன்று. இத்தாள வகையில், லகு, திருதம், திருதம் என்னும் ஒழுங்கில் உறுப்புக்கள் அமைந்துள்ளன.

உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது “லகு”. விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில், திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு என ஐந்து வேறுபாடுகள் உள்ளன.

திரிபுடைதாள வகைகள்
லகுவில் ஏற்படக்கூடிய ஐந்து வேறுபாடுகளினால், திரிபுடை தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன. இவை சாதிகள் எனப்படுகின்றன.  இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:
1. திஸ்ரசாதி திரிபுடை தாளம்
2. சதுஸ்ரசாதி திரிபுடை தாளம்
3. கண்டசாதி திரிபுடை தாளம்
4. மிஸ்ரசாதி திரிபுடை தாளம்
5. சங்கீர்ணசாதி திரிபுடை தாளம்

திஸ்ரசாதி திரிபுடை தாளம் : இத்தாளம் “சங்கம்” எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
பெரும்பாலான இடங்களில், ஏழு அலகுகள் கொண்ட திஸ்ரசாதி திரிபுடை தாளத்தையே திரிபுடை தாளம் என்று அழைக்கின்றனர்.

சதுஸ்ரசாதி திரிபுடை தாளம் : இத்தாளத்துக்கு “ஆதி” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

கண்டசாதி திரிபுடை தாளம் : இது “துஸ்காரா” எனப்படும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

மிஸ்ரசாதி திரிபுடை தாளம் : இதற்கு “லீலா” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

சங்கீர்ணசாதி திரிபுடை தாளம் : இதற்கு “போகம்” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

6. அட தாளம்
அட தாளம் என்பது கர்நாடக இசையில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு தாள வகைகளுள் ஒன்று. இத்தாள வகையில், லகு, லகு, திருதம், திருதம் என்னும் ஒழுங்கில் உறுப்புக்கள் அமைந்துள்ளன.உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது “லகு”.  விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம்.இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில், திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு என ஐந்து வேறுபாடுகள் உள்ளன.

லகுவில் ஏற்படக்கூடிய ஐந்து வேறுபாடுகளினால், அட தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன.  இவை சாதிகள் எனப்படுகின்றன.  இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:
1. திஸ்ரசாதி அட தாளம்
2. சதுஸ்ரசாதி அட தாளம்
3. கண்டசாதி அட தாளம்
4. மிஸ்ரசாதி அட தாளம்
5. சங்கீர்ணசாதி அட தாளம்

திஸ்ரசாதி அட தாளம் : இத்தாளம் “குப்தா” எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

சதுஸ்ரசாதி அட தாளம் : இத்தாளத்துக்கு “லேகா” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

கண்டசாதி அட தாளம் : இது “விதாலா” எனப்படும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

மிஸ்ரசாதி அட தாளம் : இதற்கு “லோயா” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

சங்கீர்ணசாதி அட தாளம் : இதற்கு “திரா” என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)

7. ஏக தாளம்
ஏக தாளம் என்பது கர்நாடக இசையில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு தாள வகைகளுள் ஒன்று. இத்தாள வகையில் லகு என்னும் உறுப்பு அமைந்துள்ளது. உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது “லகு”.விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில், திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு என ஐந்து வேறுபாடுகள் உள்ளன.

ஏகதாள வகைகள்
லகுவில் ஏற்படக்கூடிய ஐந்து வேறுபாடுகளினால், ஏக தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன.  இவை சாதிகள் எனப்படுகின்றன.  இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:
1. திஸ்ரசாதி ஏக தாளம்
2. சதுஸ்ரசாதி ஏக தாளம்
3. கண்டசாதி ஏக தாளம்
4. மிஸ்ரசாதி ஏக தாளம்
5. சங்கீர்ணசாதி ஏக தாளம்

திஸ்ரசாதி ஏக தாளம் : இத்தாளம் “சுதா” எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)

சதுஸ்ரசாதி ஏக தாளம் : இத்தாளத்துக்கு மான என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)

கண்டசாதி ஏக தாளம் : இது ராதா எனப்படும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)

மிஸ்ரசாதி ஏக தாளம் : இதற்கு ராகா என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)

சங்கீர்ணசாதி ஏக தாளம் : இதற்கு வசு என்று பெயர்.  இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்;
சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)

ஆதிதாளம்
தாளம் இசையை நேரப் பகுப்பின்படி பிரிக்கும் ஒரு விதிமுறையாகும்.  இசையின் நகர்தல் எனும் இயக்கத்தை  மிகவும் நுட்பமாகச் சித்தரிப்பது தாளம் ஆகும். இந்த தாள அமைப்பை பலவித வேகங்களுக்கு உட்படுத்தும்போதுதான் நமக்கு பல வடிவங்களிலும், உணர்வுகளிலும் இசை கிடைக்கின்றது.

ஆதிதாளம் உங்களில் பலருக்கு போடத்தெரிந்திருக்கும். உள்ளங்கையால் தொடையில் செல்லமாக ஒரு தட்டு பிறகு சுண்டுவிரலில் தொடங்கி மூன்று விரல்களை கட்டைவிரலால் தொட்டு எண்ணிக் கொள்ளுங்கள். தொடையில் ஒருதட்டு + 3 விரல் எண்ணிக்கை = 4. அடுத்து மீண்டும் தொடையில் உள்ளங்கையால் தட்டு. அடுத்து திருப்பிப்போட்டு புறங்கையால் தொடையில் தட்டு.

இது ஒரு 1 + 1 = 2 எண்ணிக்கை. இப்போது மொத்தமாக 4+2+2=8 எண்ணிக்கை பூர்த்தியாக, ஆதி தாளத்தை ஒரு ஆவர்த்தம் போட்டுமுடிகிறது என்று பொருள். மொத்தம் 8 அக்‌ஷரம் உள்ள இத்தாளத்தை ஒரு வேகத்தில் செய்தால் ஒரு “களை” யில் தாளம் போடுகிறோம் என்றும் பொருள்படும்.

இரண்டு அக்‌ஷரத்தின் நடுவில் உள்ள கால அளவை வேறுபடுத்தினால் களை மாறும்.  பாட்டின் ‘களை’யும் (விறு விறு, இழுவை) மாறும். பாட்டு முடிகிறவரை தொடர்ந்து இப்படி தொடை-கை கால அளவு கணக்கை செய்து கொண்டே போகவேண்டும்.

ஸ்வர-ராகத்தின் (பாட்டின்) கூடவே லயம் வருகிறது என்று பொருள். மேலும் ஆதிதாளத்தை, அதன் நுட்பத்தைச் சற்று விரிவாக நோக்குவோம். ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பர்.  சதுர் போல சதுஸ்ரம் என்றாலும் நான்கு.

திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்ற ஜாதி வகையில் சதுஸ்ரம்.

திரிபுடை (த்ரிபுடம்) தாளத்தின் பெயர். (ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று ஏழு வகை). அலங்காரம் 35 இருக்கிறது.  ஒவ்வொன்றும் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு தாள வகையில். அனைத்தும் சதுஸ்ர நடையில்.

இந்த 35 தாளங்களிலும், பஞ்ச (5) நடைகளை அமைக்கலாம்.பஞ்ச நடைகளின் பெயர்களும் திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்பதுவே. இதனால் 35 x 5 = 175 வகை தாளங்கள் செய்யமுடியும் என்றும் கூறலாம்.
அதேபோல், தனியே ஆதிதாளம் அடுத்து,  சாப்பு தாளங்களான கண்டசாப்பு, மிஸ்ரசாப்பு, சங்கீர்னசாப்பு என்றும் இருக்கிறது. அதேபோல், முன்னர் குறிப்பிட்டபடி, நம் தாளங்கள் அனைத்திலும் லகு துருதம் இரண்டும் அங்கங்களாக அநேகமாக இருக்கும்.
பல தாளங்களில் அனுத்ருதம், ப்ளிதம், காக்கபாதம், குரு போன்ற பல அங்கங்களும் வரும். பல வித்தியாசங்கள், எளிமையான சட்டத்திற்கு கட்டுப்படாதவைகள் இருக்கிறது. இவ்வாறாக. நம் தாள வகைகள் நூற்றுக்கணக்கில் வரும். எதில் வேண்டுமானாலும் பல்லவி (கீர்த்தனை, பாடல்) அமைக்கலாம்.

ஆதி தாளத்தை விளக்க லகு, த்ருதம் இரண்டு அங்கங்களாகப் பிரிக்கலாம். தாளத்தின் அங்கமான லகு, த்ருதத்தையும் துண்டங்களாக உடைக்கமுடியும். அப்படி உடைத்தால் அட்ஷரங்களாக வந்துவிழும். அட்ஷரம் தாளத்தின் உப-கால இடைவெளிக் குறியீடு.

இக்குறியீட்டை எட்டு முறை சமகால இடைவெளிவிட்டு தொடையில் கையால் தட்டினால் ஒரு ஆவர்த்தம் (சுற்று) போடுகிறோம் என்று பொருள்.

அட்ஷரங்களையும் மேலும் உடைக்கலாம். மாத்திரைகளாக வரும்.  மாத்திரை என்றால் உச்சரிப்பின் ஒரு கால அளவு.

தாளத்தின் த்ருதம் எப்போதும் 2 அட்ஷரம் கொண்டது (தொடையில் உள்ளங்கையையும் புறங்கையையும் அடுத்தடுத்து தட்டும் இரண்டு அக்‌ஷரம்).

X = லகு, அட்ஷர மதிப்பு மாறும்.

ஒவ்வொரு தாளத்திலும் சில பல லகுக்களும் த்ருதங்களும் இருக்கலாம்.  கூட்டினால் வருவது தாளத்தின் மொத்த அட்ஷரங்கள்.  இதை வைத்து ஒரு வர்த்தத்திற்கு அந்த தாளம் போடப்படும் நேரம் நிச்சயமாகும்.

திரிபுடை தாளத்தின் இலக்கணம் ஒரு லகு இரண்டு த்ருதம். அதாவது X 2 2. இதில் X மட்டும் 1, 3, 4, 5, 7, 9 என்று இருக்கலாம்.

இந்த “X = எண்கள்” விதி அனைத்து தாளத்தின் லகுவிற்கும் பொருந்தும்.

2 நான்கில் பாதி (2+2)
8 இரு நான்குகள் (4+4)
6 இரு மூன்றுகள் (3+3)

X=3 ஆக இருந்தால் திஸ்ரம் என்று பெயர்.

அதாவது, X, 2, 2 என்பது X=3, 2, 2 என்று வந்தால் அத்தாளத்தின் பெயர் திஸ்ர ஜாதி திரிபுடை தாளம்.

அதைப்போல X = 4 என்பது சதுஸ்ரம், அதனால் சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம். இதுதான் ஆதி தாளத்தின் விதியாகும்.

சதுஸ்ரம் அடுத்து
X = 5 கண்டம்,
X = 7 மிஸ்ரம்,
X = 9 சங்கீர்னம்.

பின்னால் இருமுறை 2, அதாவது இரண்டு த்ருதம் வருவதால் திரிபுடை தாளம்.

ஆதி தாளம் ஒரு ஆவர்த்தத்திற்கு 8 அக்‌ஷரங்கள். ஒரு களை சவுக்கத்தில் போட்டால், 8 மாத்திரைகளே. இரண்டு களை சவுக்கத்தில் போட்டாலும் அதே 8 அக்‌ஷரங்கள்தான். ஆனால் இரண்டு அக்‌ஷரங்களுக்கிடையே உள்ள இடைவெளி 2 மாத்திரைகளாக நீண்டு, ஒரு ஆவர்த்தத்தில் மொத்தம் 16 மாத்திரைகள் ஆகிவிடும்.

இரண்டு களையில் ஒரு ஆவர்த்தம் போடப்படும் அதே ஆதி தாளம், ஒரு களையில் ஒரு ஆவர்த்தம் போடும் அதே ஆதிதாளத்தின் நேர அளவை காட்டிலும் இரண்டும் மடங்கு நீண்டு இருக்கும்.

நடை என்பது ஒரு அடிப்படை வேகம். ஆனால் ஒரு தாளத்தின் இரு அடுத்தடுத்த அக்‌ஷரத்திற்கிடையே அமையும். மேலே தாள வகைகளின் பெயர்களில் வருவது போல், பஞ்ச நடைகள் உள்ளன. அவையாவன திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்னம்.

ஒரு தாளத்தில், இவை முறையே 3, 4, 5, 7, 9 என்று இரண்டு அக்‌ஷரங்களுக்கு இடையே உள்ள காலத்தை நிர்ணயிக்கும்.  ஒரே கால இடைவேளைகளை இப்படி பிரிப்பதால் பாட்டின் நடையை சுலபமாக மாற்றலாம்.

கவனிக்கவும், தாளம் அதே தான். நடை தான் வித்தியாசம்.  அதாவது, மேலே விளக்கிய ஆதி தாளத்தை இந்த பஞ்ச நடைகளிலும் போடலாம்.

5.லயம்
லயம்பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதேபோல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை. லயம் தாளத்தின் காலப் பிரமாணத்தை நிர்ணயிக்கும் அம்சம் ஆகும். அதாவது பாட்டின் காலப் பிரமாணத்திற்கேற்றவாறு சம அளவான வேகத்தில் தாளத்தின் அட்சரங்கள் விழுதலைக் குறிக்கும்.

தாளத்தை ஒரே காலப் பிரமாணத்திற்கமைய நடத்திச் செல்லுவது லயமாகும். சங்கீதத்தில் லயம் பிரதானமான இடத்தை வகிப்பதனால் இது “பிதா” எனப்படுகிறது.

லயம் மூன்று வகைப்படும். அவையாவன விளம்பித லயம், மத்திம லயம், துரித லயம்

விளம்பித லயம் ஆறுதலாகத் (சௌக்கமாக) தாளம் போடுவதையும் துரித லயம் வேகமாகத் தாளம் போடுவதையும் குறிக்கும். இவை ஒவ்வொன்றும் மேலும் மும்மூன்றாகப் பிரிக்கப்பட்டு நுணுக்கமாகக் கணிக்கப்படுகின்றன.

விளம்பித விளம்பித லயம்
விளம்பித மத்திம லயம்
விளம்பித துரித லயம்
மத்திம விளம்பித லயம்
மத்திம மத்திம லயம்
மத்திம துரித லயம்
துரித விளம்பித லயம்
துரித மத்திம லயம்
துரித துரித லயம்

மேளகர்த்தா ராகங்கள்
அடிப்படையில் ஸ்வர வரிசையின் பல வடிவப் பிணைப்புகளே மேளகர்த்தா ராகங்களாகும். எல்லாவிதமான ராகங்களும் ஜன்ய (தாய்) ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஹிந்துஸ்தானி இசை பாணியில் இதை ‘தாட்’ எனக் கூறுவர். இந்த ‘தாட்’ களிலிருந்து பலவிதமான ராக அமைப்புக்களை ஹிந்துஸ்தானி இசை பெற்றுள்ளது எனலாம். மொத்தம் பத்துவகையான “தாட்”களே ஹிந்துஸ்தானி இசையில் பயின்று வருகின்றன.

கர்நாடக இசையில் 72 தாய் ராகங்கள் (மேளகர்த்தா ராகங்கள்) இருக்கின்றன.இந்த மேளகர்த்தா ராகங்களின் சூத்திரத்தை அறியுமுன், சில அடிப்படை மூலக்கூறுகளை நாம் நோக்க வேண்டும்.

ஸ்வர வரிசைகளில் ஏன் ஏழு ஸ்வரங்கள் மட்டுமே இருக்கின்றன என்பது இன்றும் பல இசை வல்லுனர்களைக் குழப்பியபடியே உள்ளன. இந்த மேளகர்த்தா ராகங்களின் சூத்திரங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் : தொடர் 33 – 43
சிறீ சிறீஸ்கந்தராஜா
01/11/2014 -05/12/2014

தொகுப்பு – thamil.co.uk