தமிழிசைப்பண்கள் – முகவுரை : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! முகவுரை – தொடர் – 04

இரவிக்குட்டி கவி இளவரசன்தமிழ் இசை மரபை இருட்டடிப்பு செய்து பார்ப்பனியம் மற்றும் வடமொழி சார்ந்த கர்நாடக இசை மரபே தமிழகத்தின் செவ்வியல் இசை மரபு என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஒரு பொய்யானது மட்டுமல்ல விசமத்தனமான பிரச்சாரம் என்பதனை தஞ்சையை சேர்ந்த இசையறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே தகுந்த ஆதாரங்களோடு பதிவு செய்துள்ளார்.

1917ல் வெளியிடப்பட்ட அவரது “கருணாமிருத சாகரம்” என்னும் இசை ஆய்வு நூல் இவ்வுண்மையை ஆணித்தரமாக நிறுவுகிறது. இது மட்டுமன்றி திரு.மு.அருணாசலம் அவர்கள் எழுதிய “கருநாடக சங்கீதம்”, “தமிழிசை ஆதிமும்மூர்த்திகள்” என்ற நூலும் இசையறிஞர் தண்டபாணி அவர்களின் “திராவிட இசை” எனும் நூலும் மேலும் பல அறிஞர்களின் ஆய்வு நூல்களும் இந்த உண்மையை நிறுவிக் காட்டுகின்றன.

இசை மட்டுமல்ல கருவிகளும்
தமிழ் இசை வெறும் வாய்ப்பாட்டு மட்டுமல்ல. தமிழிசைக்குப் பயன்படும் இசைக்கருவிகள் கூட தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்குமே உரிமையாயிருக்கின்றது. இன்று இந்தியா முழுவதுக்கும் ஏன் உலக நாடுகளுக்கும் பரவியிருக்கின்றன. இவை யாவற்றுக்கும் அடிப்படையாக குழல், யாழ், முழவு என்னும் மூன்று கருவிகளே சான்றாக உள்ளன. இம்மூன்றும் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இடம் தமிழகமேயாகும்.

“தென்னிந்திய மக்கள் பற்பல நடனங்களிலும், வாய்ப்பாட்டிலும், வாத்திய சங்கீதத்திலும் தனிப்பட்ட கலையார்வம் காட்டுகிறார்கள். அவர்களின் கலைகளில் அழகும் மதுரமும் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. இவ்வாறு நுண்கலைகள் உலவும் நாடானது வடக்கே விந்திய மலையாலும் மற்ற மூன்று திசைகளில் கடலாலும் சூழப்பட்டுள்ளது” இவ்வாறு, பரதர் எழுதிய நாட்டிய சாத்திரம் (5ம் நூற்றாண்டு) கூறுகின்றது.

பண்டைக்காலத் தமிழகத்தில் பண் இசைப்போரை பாணர் என்றும் பெண்டிரைப் பாடினி என்றும் குறித்தனர்.இசைப் பாடல்களைப் பாடியவர்கள் இசைப்பாணர் என்றும் யாழ் இசைத்தவர் யாழ்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர். நடனமாடிய பெண்கள் விறலியர், கூத்தியர் என்று அழைக்கப்பட்டனர் என தமிழிலக்கிய நூல்கள் தெரிவிக்கின்றன. வடமொழியாளர் இசைபாடியதாகவோ நடனமாடியதாகவோ பழம் நூல்களில் குறிப்புகள் ஏதுமில்லை.

தமிழிசைப் பண்கள்
நிலத்தை உழுது பயிரிடும் போதும் உணவுக்காக நெல்லைக் குற்றும் போதும் சுமை சுமந்து செல்லும் போதும் களைப்பின்றி நடக்கவும் ஆணும் பெண்ணும் பாடினர். அறுவடையிட்டு பொங்கலிட்டு ஆண்களும் பெண்களும் அகமகிழ்ந்து ஆடிப்பாடினர். நெடுஞ்சாலையில் வண்டிப் பயணத்தின்போது தென்பாங்குப்பாட்டு (தெம்மாங்கு) பாடி பயமின்றிப் பயணம் செய்தனர்.

தொன்று தொட்டுப் பாடி வந்துள்ள தமிழ் இசைப்பாட்டு வகைகள் வருமாறு.
அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், சந்துகவரி, சாக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில் குரவை, குறத்தி, கூடல், கொச்சகச்சார்த்து, கோத்தும்பி, தோழிப்பாட்டு, சங்கு சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திகாப்பு, தெள்ளோளம், தோளேடக்கம், நிலைவரி, நையாண்டிளா, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுன்னம், மயங்கு திணை நிலைவரி, முகச்சார்த்து, வள்ளைப்பாட்டு, சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, கோலாட்டம், ஆனந்தக்களிப்பு, கீர்த்தனம் முதலியன.

நாடோடி இசைப்பாடல் வகைகள்
உழவுப்பாட்டு, ஓடப்பாட்டு, நலங்கு, ஆரத்தி, ஊஞ்சல், புதிர்ப்பாட்டு, பழமொழிப் பாட்டு, கோமாளிப்பாட்டு, ஏற்றப்பாட்டு, இறைவைப்பாட்டு, காவடிப்பாட்டு, கப்பற்பாட்டு, படையெழுச்சி, தாலாட்டு, கல்லுளிப்பாட்டு, பாவைப்பாட்டு, வைகறைப்பாட்டு, மறத்தியர் குறத்தியர் பாட்டுகள், பள்ளுப்பாட்டு, பலகடைப்பாட்டு, வள்ளைப்பாட்டு, பிள்ளைப்பாட்டு முதலியன. இவை அத்தனையும் எமது முப்பாட்டன் விட்டுச்சென்ற தமிழனின் சொத்துக்கள்!

வஞ்சக எண்ணங்கள்
பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாரங்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட “சங்கீத ரத்னாகரம்” என்ற நூலே குறிப்பிடத்தக்க வடமொழியில் இயன்ற இசையிலக்கண நூலாகும். தமிழ்நாட்டில் வளர்ந்திருந்த இசையை நன்கு பயின்ற பின்னர் அந்நூல் இயற்றப்பட்டுள்ளது. அந்நூலில் சாரங்கதேவர் பின்வரும் தமிழ்ப்பண்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்தளம், காந்தாரப்பஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, நட்டபாடை, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி, தேவாரவர்த்தினி, காந்தாரம், குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி முதலியனவாகும்.

ஒன்பதாம் நூற்றாண்டில் மதங்க முனிவர் இயற்றிய “பிருகத தேசி” என்னும் நூலிலும் தமிழ்ப் பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 13ம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டிலேயே இசை இலக்கண நூல்கள் வடமொழியில் எழுதும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. நன்கு திட்டமிட்டு இசைத்துறைக் கலைச் சொற்களை வடமொழிச் சொற்களாகக் காட்ட ஆரியர் முற்பட்டனர். தமிழ்நாட்டில் பிறந்து தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்தும் ஆரியர் தாம் பயின்ற இசை முறைகளையும் இசையிலக்கணங்களையும் தமிழ் மொழியில் எழுதாது வஞ்சகமாய் வடமொழியிலேயே எழுதி வைத்தனர்.

17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராய் இருந்த கோவிந்த தீட்சிதர் “சங்கீத சுதா” என்னும் இசை நூலை வடமொழியில் இயற்றினார். இவருடைய இரண்டாவது மகன் வேங்கடமகி இராகங்களைப் புதியதொரு முறையில் வரிசைப்படுத்தி “சதித்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலை எழுதினார். தமிழ்நாட்டில் வழங்கி வந்துள்ள இசைமுறையை சில திரிபுகளுடன் அந்நூலில் எழுதி வைத்துள்ளார். எனினும் அதை தமிழில் எழுதாமல் வடமொழியிலேயே எழுதினார். இதில் இசைத்துறையில் வழக்கிலிருந்த தமிழ்சொற்களையும் இராகங்களின் தமிழ்ப்பெயர்களையும் பெரும் அளவில் இருட்டடிப்பு செய்துவிட்டார்.

இந்த ஆரிய இருட்டடிப்பு குறித்து இசைப்பேரறிஞர் மு.ஆபிரகாம் பன்டிதர் தனது கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “பூர்வம் தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும் அனுசரித்து பாடிவந்த 12,000 ஆதி இசைகளும் அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்படும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற்களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி வருகின்றன.

தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க நூல்களும், புராணங்களும், கட்டுக்கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்டபின் சமஸ்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்க தலைப்பட்டன. இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியம் இல்லை. இயல் இசை நாடகமென்னும் முத்தமிழில் உள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தை தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டு போனார்கள் என்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டிலிருந்தே இசைத்தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு எழுத நேரிட்டது”. கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஆரியர் தென்னிந்திய இசைமுறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்.

20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாட்டு நடனக்கலைக்குப் “பரத நாட்டியம்” என்று புதிய பெயரைச் சூட்டி அது நிலை பெற்றுவிட்டது போலவே சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழிசை முறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரிட்டு நிலை நிறுத்தியுள்ளனர். வஞ்சக எண்ணங்கள் தொடரும்…

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! முகவுரை – தொடர் – 05

தமிழிசைப்பண்கள்ச, ரி, க, ம, ப, நி
ஏழிசைக் குறீயீடு எழுத்துக்கள் சரிகமபதநி ஏழும் தமிழ் எழுத்துக்களே.

சுமார் 700 ஆன்டுகளுக்கு முன்பு வடமொழியில் “சங்கீத ரத்னாகரம்” எனும் இசை நூலை எழுதிய சாரங்கதேவர்தான் தமிழிசை முறையில் சரிகமபதநி என்னும் ஏழு தமிழ் குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களை வலிந்து கொடுத்து அந்த ஏழு சுரங்களும் வடமொழியிலிருந்து வந்தன எனும் பெரும்புரட்டை ஏற்படுத்தினர்.

தமிழ் ‘ச’ வுக்கும் பதிலாக வடமொழி ‘ஸ்’ வை வலிந்து திட்டமிட்டுப் பயன்படுத்தினார். இப்புரட்டினை, திரு. நாரயண சாஸ்திரிகள் வன்மையாக கண்டித்துள்ளார்.

கீர்த்தனைக்கு முன்னரே தேவாரப் பாடல்கள்
கீர்த்தனை வகை இசைப்பாடல்கள் தேவார காலத்தில் தோன்றின. கீர்த்தனத்தில் நிரவல் விருத்தி முதலிய இசையமைப்புகள் எல்லாம் தேவாரப் பாடல்களைக் கொண்டே அமைந்தவை.

தியாகையர் கீர்த்தனங்களின் இசையமைப்பானது தொடக்கத்தில் பெரும்பாலும் எளிமையாகவே இருந்தது. பின்னாளில் ஆங்காங்கு பாடிய இசை வல்லுனர்களே நூற்றுக்கணக்கான கீர்த்தனங்களின் இசையமைப்பில் விருத்திகளைப் புகுத்தி வளர்த்து வந்துள்ளனர்.

தியாகய்யரின் கீர்த்தனங்களை (கொச்சையான தெலுங்குப் பாடல்கள்) அவருடைய தெலுங்கு மொழி தெரியாமல் சங்கீத வித்துவான்கள் கற்று கச்சேரி செய்ய ஆரம்பித்த பிறகு மொழிக்கொலையும், சங்கீத கொலையும் விளைந்தன.

இதைக்கண்டு சுப்பிரமணிய பாரதியார் புலம்புவது பின்வருமாறு :
“இசைஞானமில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனைகளும் பாடுவோர் சங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இக்காலத்தில் சங்கீத வித்துவான்களிலே பலர் சங்கீதத்துக்கும் நவரசங்களே உயிர் என்பதை அறியாதவர்”

“முக்காலே மும்மாகாணி வித்துவான்களுக்கு இந்த கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும் விழுங்கியும் பாடுகிறார்கள்.  அர்த்தமே தெரியாதவர்களுக்கு ரசம் தெரிய நியாயமில்லை”

“நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது:

“வாதாபி கணபதிம்’ என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராம நீசமான மெருவரு’, ‘மரியாத காதுரா’, ‘வரமுசொசகி’,…. அய்யய்யோ, அய்யய்யோ ஒரே கதை. – பாரதியார் மேலும் எழுதிக் கொண்டே போகிறார்.

ஆதி மும்மூர்த்திகள்!
தியாகையர் (1767-1847),
சியாமா சாஸ்திரிகள் (1762-1827),
முத்துசாமி தீட்சிதர் (1776-1835) ஆகிய மூவருமே கருநாடக இசை மும்மூர்த்திகள் என்று போற்றப்படுகிறார்கள். இம்மூவரும் திருவாரூரில் பிறந்தவர்கள். இம்மூவருடைய சங்கீதமும் அன்னிய மொழிகளில் தான். பரந்துபட்ட மக்களுக்கு புரியாத மொழிப்பாடல்களே. ஆகையால் இவர்களுடைய சங்கீதம் வாழ்க்கையில் சமூகத்தில் மேல்நிலையில் உள்ளவர்களுக்கே உரியதாய் இருந்து வந்துள்ளது. இராமப்பிரமத்தின் புதல்வரான தியாகையர் தெலுங்கு நாட்டுக்குப் போனதில்லை. தெலுங்கு பாட்டைக் கேட்டதில்லை. கேட்டதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டுத்தான்.

தமிழ் இசை முறைகள், ஆறுகாலங்களிலும் நாதஸ்வர வாத்திய இசை, தேவார இசை அவ்வளவேயாகும். அவருக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த சங்கீத வித்துவான்களுடைய இசையையும் அவர் கேட்டிருந்தார். இவ்வாறு பெற்ற இசையறிவையே தெலுங்கு இசைப்பாடல்களாக இயற்றினார்.

தியாகையர் தல்லப்பாக்கம் அன்னமையாவிடமும் (1423-1503) புரந்தர தாசரிடமும் (1484-1564) இசை கற்றார் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். தியாகையரின் காலம் (1767-1847) மேற்கூறிய இருவரின் காலத்துகு மிகவும் பிற்பட்டதாகும்.

இம்மூர்த்திகளுக்கும் மிக முந்திய காலத்தில் தமிழிலேயே கீர்த்தனைகளை இயற்றி தமிழிசையை வளர்த்தவர் மூவராவார்.
சீர்காழி முத்துதாண்டவர்(1525-1625),
சீர்காழி அருணாசலக் கவிராயர் (1711-1779),
மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787) என்பவர்.
இவர்கள் கீர்த்தனங்களும் பதங்களும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை. தற்போதைய மும்மூர்த்திகளுக்கு முன்னோடிகளாவார். இன்றைய கருநாடக இசையில் கையாளப்பட்டுவரும் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் அமைப்புடைய கீர்த்தனை வடிவத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் முத்துத்தாண்டவரே.  வஞ்சக எண்ணங்கள் இன்னும் விரியும்…

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! முகவுரை – தொடர் – 06

முகவுரை - தொடர் - 06தமிழை முத்தமிழ் என்கின்றோம். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் இடைத்தமிழாய் உள்ளது இசைத்தமிழ் ஆகும்.

இனம், மொழி, நாடு கடந்து எல்லோரையும் ஈர்க்க வல்லதும் இசையாகும். இசைக்கு மொழியில்லாமல் இருக்கலாம். ஆனால் இசை தாய்மொழியோடு கலந்தால்தான் உயிர்ப்புப் பெறும்.

ஆதிக்க வாதிகளாகிய பார்ப்பனர்கள் ஏனைய துறைகளைப் போலவே இசைத் துறையிலும் எதிராகவே நின்றனர்.

“கர்நாடக இசையில் உள்ள அளவிற்குத் தமிழிசையில் பாடல்கள் இல்லை.

கர்நாடக இசை மும்மூர்த்திகள் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் ஏராளமான கீர்த்தனைகளை எழுதிக் குவித்துள்ளனர்.

அவற்றின் முன்னால் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட எவையுமே எதிர்நிற்க முடியாது” என்று அவர்கள் எக்காளமிட்டனர்.

இந்தப் பார்ப்பனப் பொய்யுரையை நம்பவும் அக்காலத்தில் தமிழ்ப்பாடகர்கள் இருந்தனர்.

அவர்களின் வருந்தத்தக்க நிலையை எண்ணிப் பாவேந்தர் பாரதிதாசன் வயிறெரிந்து பாடினார் :
“செந்தமிழில் இசைப்பாடல் இல்லையென்று
செப்புகின்றார் மான மின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல் பாழ்ங்கிணற்றில்
வீழ்ந்துயிரை மாய்த்த லின்றி
எந்தமிழில் இசையில்லை எந்தாய்க்கே உடையில்லை
என்ப துண்டோ?
உந்தமிழை அறிவீரோ? தமிழறிவும் உள்ளதுவோ
உங்கட் கெல்லாம்?

தமிழ் இசை மரபு
தமிழிசை மரபு திராவிடத் தென்னகம் முழுவதுமே பரவியிருந்த போதிலும் அதில் தமிழர்களின் பங்களிப்பே அதிகம் பரவலாக இருப்பதைக் காணலாம்.

புரந்தரதாசர்
1484ம் வருடம் அவர் பூனா மாவட்டத்தின் புரந்தர்கர் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவரது கீதங்கள் கீர்த்தனைகள் யாவும் கன்னடத்திலேயே இருந்தன. இசையில் இன்று வழக்கத்தில் இருக்கும் கர்நாடக மரபினை ஆராய்ந்து பார்த்தால், அதன் வரலாற்றின் ஆரம்ப இழைகள் புரந்தரதாசரிடமிருந்தே தொடங்குவதைக் காணலாம்.

கர்நாடக சங்கீதக் கல்வியின் முதல் நிலையில் அதன் தொடக்கமான சரளி வரிசை, ஜண்டை வரிசை, ஸ்வரப் பயிற்சி ஆகிய அனைத்துமே புரந்தரதாசரின் ஆக்கங்கள்தான்.

இந்துஸ்தானி சங்கீதம் போலல்லாது கர்நாடக சங்கீதம் கீர்த்தனைகளைச் சார்ந்ததாக இருப்பதால், கிருதி அல்லது கீர்த்தனை ஒரு இராகத்தின் சொல் வடிவமாகி, இராகத்தின் பாவமும் லட்சணமும் கிருதிகள் மூலமே பாதுகாக்கப்பட்டு சீடர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.

இசையைக் கற்பித்தல் காலம் காலமாக வாய் வழியாகவே குருகுல முறையில் நடந்து வந்துள்ளது. இவை அனைத்துக்கும் கர்நாடக சங்கீதம் புரந்தரதாசருக்குக் கடமைப்பட்டுள்ளது. ஒரு கன்னடக்காரரான இவருக்கு தமிழ்மரபின் சூழலில் என்ன பங்கு இருக்கமுடியும். இதை அறிய நாம் வரலாற்றின் பின்நோக்கிய பக்கங்களுக்குப் போகவேண்டும்.

புரந்தரதாசர் தமிழ் இலக்கிய வரலாற்றில் (கி.பி.100 – 200) சங்ககால “பாணர்” ‘பொருணர்” மரபில் வருகிறார் என்பதைக் காணமுடிகிறது.

தமிழிசை மரபு தமிழ்ப் பண்பாட்டின் தனித்த விளைபொருள் ஆகும்.

வீடுகளில் பொங்கி வழிந்து, ஒவ்வொரு சாலையிலும், நாட்டின் பரந்த வெளியெங்கும் வழிந்தோடி, இறுதியில் அரசரின் மாளிகையில் உச்சத்தை அடைந்தது, தமிழ்க் கவிதையும் மற்றும் அதன் ஒப்பற்ற இசைமரபுமாகும்.

18ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மையத்தில் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி என்ற மாபெரும் இசை வல்லுனர்களின் வடிவில், கீர்த்தனை மரபு அதன் சாதனையின் உச்சத்தையும் மகிமையையும் அடைந்திருப்பதைக் காணலாம்.

தியாகராஜர் அவரது தாய்மொழியான தெலுங்கிலும், முத்துஸ்வாமி தீக்ஷிதர் தமிழராயினும் சமஸ்கிருதத்திலும் அவர்களது கீர்த்தனங்களைப் படைத்திருக்கிறார்கள்.

பாணரும், பொருனரும், விரலியரும்
சங்க இலக்கியங்களில் (கி.பி.100-200) நிறைந்து காணப்படுபவர்கள் நம் மனதை மிகவும் கவர்ந்து ஆட்கொண்டவர்கள் பாணரும், பொருனரும், விரலியரும் ஆவார். அவர்கள் ஒவ்வொரு ஊர் ஊராக, நாடு முழுதும் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் வழியெங்கும் காணப்படும் நாடோடிகள் ஆயினர். சங்க இலக்கியங்கள் இவர்களது நாடோடி வாழ்க்கையும் பாடல்களையுமே சிறப்பிக்கின்றன. இந்த நாடோடிக் கவிகளுடைய வாழ்க்கை பற்றிய பல விபரங்கள் பெருவாரியான சங்க இலக்கிய நூல்களில் பெருமளவில் காணப்படுகின்றன.

இதுமட்டுமன்றி “ஆற்றுப்படை” என்றொரு தனிப்பட்ட வகை இலக்கியமும் பரிணமித்து, அது சங்க இலக்கியத் தொகுப்புகளில் கணிசமான பகுதிகளில் பதிவாகி உள்ளன. பல நூற்றாண்டுகளாக, தமிழர் வாழ்க்கையிலும் , சமூகத்திலும் இக்கவிகள் மற்றும் நடனக் கலைஞர்களுக்கு இருந்த மகிமையும், அவற்றின் பரவலான இருப்பிற்கும் இவ்விலக்கியங்கள்தான் சாட்சியங்களாகின்றன.

தமிழ்நாட்டினூடே அவர்கள் அலைந்து திரிகையில் ஒரு பாணர்கூட்டம் இன்னொரு பாணர் கூட்டத்தைச் சந்திப்பார்கள். இச்சந்திப்புகள் மூலம் ஒவ்வொரு குழுவும் மற்றவரின் இசைக்கருவிகள் பற்றியும், அக்கலைஞர்களின் இசைப் பண்புகள் பற்றியும் அறிந்துகொள்வார்கள்.

இந்த மரபு சங்ககாலத்துக்கும் மிக முன்னையதாக இருந்திருக்க வேண்டும். சங்ககாலத்திலேயே நன்கறியப்பட்ட இலக்கிய வடிவமாகமாக ஆற்றுப்படை எனும் இலக்கிய வடிவம் அமைந்திருப்பது இவ் இலக்கியத்தின் பழமையை சாட்சிப்படுத்தும்.

கி.மு 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கண நூலாகிய தொல்காப்பியம் ஆற்றுப்படையை இச்சொற்களில் விவரிக்கிறது:
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடை ஆட்சியுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கறிவுறி இச்
சென்று பயனெதிரச்சொன்ன பக்கமும்”

நடனத்தில் தேர்ச்சியுள்ளவர்கள், வாய்ப்பாட்டில் சிறப்புத் திறமையுடையவர், யாழ் (முற்காலத்தியவீணை) இசைவல்லுனர்கள் ஆகியோர் ஒரு கொடை வள்ளலின் உதவியை நாடலாம்.

பின் பிறரையும் அவரிடம் புகலைடைய வழிகாட்டலாம். கலை இப்படித்தான் செழித்து வந்துள்ளது. இத்தகைய கொடைப் பெருக்கை விவரிப்பது ஆற்றுப்படை.” ஆகவே இப்பாணர்களும், கூத்து நடனக் கலைஞர்களும், தொல்காப்பிய காலத்துக்கு முன்பே இருந்தது மட்டுமன்றி அவர்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் புகழுடன் இருந்தனர்.

சங்கீதப் பிதாமகன் ஸ்ரீ புரந்தரதாசரைப் பற்றி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம். தமிழிசை மரபு இன்னும் விரியும்….

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! முகவுரை – தொடர் – 07

முகவுரை - தொடர் - 07ஆறாம் நூற்றாண்டில், பக்தி இயக்கத்தின் ஆழ்வார்கள் நாயன்மார்கள் என்னும் உருவில் இந்த நாடோடி பாடல்களின் மரபு மீண்டும் ஒரு வடித்தில் வெளிப்படுகின்றது. கவிதையும் இசையும் இணைந்த ஒரு வெள்ளப்பெருக்கு, தமிழ் படைப்புலகில் பிறப்பெடுத்தது. இன்று வரையில் மீறப்படாத ஒரு உயர்வும் சிறப்பும், இந்தியத்துணைக் கண்டத்திலேயே இதற்கு இணையானதாக வேறெதுவும் காணப்படவில்லை.

பல நூற்றாண்டுகள் நீண்ட இந்த படைப்புத்திறனில் விளைந்த கவிதையும் இசையும் இணைந்த பிரம்மாண்ட எழுச்சியினால் இந்திய துணைக்கண்டம் முழுதுமே அதிர்ந்தது.ரவீந்திரநாத் தாகூர் வரையில் அந்தப் பக்திப் பிரவாகம் பெருகி வழிந்தது. இலக்கிய ஆய்வாளர்கள் 12ம் நூற்றாண்டையே பக்தி இயக்கம் முடிவடைந்த காலம் என அடையாளப் படுத்துகின்றனர். ஆனால் அது இருபதாம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்து பாரதி வரையில் அதன் தாக்கம் வியாபித்துள்ளதைக் காணலாம்.

பக்தியும் கவிதையும் அதற்கு முற்பட்ட சங்க காலத்தின் இருவகை இலக்கியங்களின் இணைவாகும். ஒன்று இசையும் கவிதையும் கருப்பொருளின் அடிப்படையிலானவை. இவையே சங்க இலக்கியங்களில் அகம் புறம் என்றும் அறியப்பட்டுள்ளன.அக இலக்கியங்கள் பக்தி இலக்கியங்களாகப் பரிணாமம் பெற்றன.

“அவன்” என்ற இடத்தில் கடவுளும், “அவள்” என்ற இடத்தில் பக்தனும் (கவிஞனும்) இடம் பெற்றனர். இத்தகைய உணர்ச்சிப் பிரவாகம் இசையாகி வீடுகள், தெருக்கள், கோவில்கள் என்று எங்கும் புகுந்து பாய்ந்தது. இது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமேயான இசையோ கவிதையோ அல்ல.

பக்தி இயக்க காலக் கவிதையும் இசையோடு இணைந்த கவிதையும் எல்லா தரத்து மக்களையும் ஒரு மயக்க நிலையில் வசப்படுத்தின. இவை எல்லாம் இருந்த போதிலும், அன்று அதிகம் புழக்கத்திலிருந்த இசைபற்றி நமக்கு எதுவும் அதிக அளவிலான விபரங்கள் தெரியவில்லை.

சைவத் துறவிகளான தேவார நால்வரின் தேவாரப் பாடல்கள் மட்டுமே எமக்குக் கிடைக்கின்றன.அவை பெரும்பாலும் மோகன ராகத்திலேயே பாடப்பட்டுள்ளன. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் (வைணவ ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்கள்) ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட ராகத்தில் பாடப்பட்டிருக்கின்றன என்பதனையும் அறிய முடிகிறது.

சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம்.இந்தக்காவியம் இலக்கியத்தில் ஒரு முக்கியமான மைற்கல்லாக இருப்பதோடு மட்டுமன்றித் தமிழ் இசையின் அற்புதமான விபரங்கள் மற்றும் தோற்றம் பற்றிய ஒரு முழுமையான ஆதார நூலுமாகும். இதன் காலம் பற்றிப் பல மாறுபட்ட கருத்துகள் இருப்பினும் இதனை நாம் 5ம் நூற்றாண்டுக்கான ஓர் வரலாற்றுப் பதிவு என்றளவில் ஏற்றுக்கொள்ளலாம்.இது பக்தி இயக்கம் ஆரம்பித்த காலமும் இதுவே ஆகும்.சிலப்பதிகாரத்தில் தான் அக்காலத்து இசையின் முறை, இலக்கணம் பற்றிய விரிவான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

இசை மட்டுமன்றி நாட்டியம், நாடக நடைமுறைகள் பற்றியும் கூட பல இடங்களில் விரிவான விவரங்கள் கிடைக்கின்றன. பல்வேறுபட்ட பண்கள் இசைக் கருவிகளின் வகைகள், அவற்றின் குணங்கள், கிரகபேதங்கள் (ஒருராகத்திலிருந்து, இன்னொரு ராகத்திற்கு ஒரே இசையில் மாறுவது), ஒரு இலட்சிய நடனக் கலைஞர் அல்லது பாடகரின் இலட்சணங்கள், நல்ல நடன இசை குருவின் குணங்கள், அன்று பண் என்ற பெயரில் உபயோகத்திலிருந்த இராகங்களின் பெயர்கள் போன்ற பல விபரங்கள் எமக்குக் கிடைக்கின்றன.

குரல் (ஷட்ஜம் – ஸ)
துத்தம் (ரிஷபம் – ரி)
கைக்கிளை (காந்தாரம் – க)
உழை (மத்யமம் – ம)
இளி (பஞ்சமம் – ப)
விளரி (தைவதம் – த)
தாரம் (நிஷாதம் – நி)

இவற்றின் தமிழ்ப் பெயர்கள் யாவும் சமஸ்கிருத மூலத்திலிருந்து பெற்று, தமிழ்ப்படுத்தப்பட்டவை அல்ல.தமிழர்கள் தாமே இவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்தினர் என்பதற்கு சான்றுகள் ஏதும் தேவையில்லை. 13ம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்குநல்லார் எழுதியுள்ள உரை அக்காலத்தில் தமிழ்பதங்கள் உபயோகத்திலிருந்ததற்கு சான்றளிக்கிறது. ஆனால் அத்தமிழ்ப் பதங்களின் இடத்தை சமஸ்கிருதப் பதங்கள் எடுத்துக்கொண்டு விட்டன என்பதே உண்மையாகும். சுருதிகள் 22 வகைப்பட்டன அவை “மாத்திரை”, “அலகு” போன்ற பதங்களால் அறியப்பட்டன.

இத்துணைக்கண்டம் முழுவதிலுமே இசையின் கட்டமைப்பும் இலக்கணமும் ஒன்று போலவே இருந்தன. தமிழ்ப்பதங்கள் பல காலத்துக்கு வழக்கில் இருந்துள்ளன. ஏனைய கலாச்சாரங்களின் பாதிப்புகளும் இருந்தன என்பதனையும் இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார். இரண்டுவிதமான மரபுகள் பற்றிப் பேசுகிறார்.
ஒன்று வம்புறு மரபு (தமிழ் நாட்டுக்கு வெளியிலிருந்து வந்த புதுமரபு)
இன்னொன்று தொன்றுபடு மரபு (தமிழ் நாட்டின் பாரம்பரிய செவ்வியல் மரபு).

இதிலிருந்து சங்க காலத்தில் பல யாழ்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு ராகத்தை மட்டும் இசைப்பதற்காக வடிவமைக்கப் பட்டிருந்தது என்பதை நாம் அறியலாம். இது காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தந்திகளை பயன்படுத்தி பலவகைகளில் இயங்கககூடிய வீணையின் வடிவமைப்புக்கு வழி வகுத்தது.

இன்றைய வீணை “சர்வராக” வீணையாகும். இந்திய இசைமுறைகளை முதன் முதலில் வரையறுத்துத் தொகுத்தது பரதரின் நாட்டிய சாஸ்திரமாகும் (கி.மு.500). சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் பரதரின் நாட்டிய சாஸ்திரத்துக்கு நிறையக் கடன்பட்டிருக்கின்றார்.

அதேபோல் அவர் பரதரிடமிருந்து எடுத்தவற்றில் ஏற்ற மாற்றங்களைச் செய்தார் என்பதும் உறுதியாகின்றது. அவரது படைப்பு மரபார்ந்த இசை, நடனங்கள் மட்டுமன்றி நாட்டார் கலைகள், நடனங்கள் பற்றியும் விபரங்களும் அடங்கிய ஓர் அற்புதமான கருவூலமாகும்.

சிலப்பதிகாரம் பற்றிய உரை நூல்களிலிருந்து, சிலப்பதிகார காலத்தில் பஞ்ச பாரதீயம், பரத சேனாபதீயம் போன்ற இசை பற்றிய நூல்கள் தமிழில் இருந்தன என்றும் அறிகின்றோம். இவற்றை நாம் இன்று இழந்துவிட்டோம். ஆனால் உரையாசிரியர்கள் இவற்றிலிருந்து மேற்கோள் காட்டும் பகுதிகள் மட்டுமே எமக்குக் கிடைக்கின்றன.

பரதரின் நாட்டிய சாஸ்திரத்துக்குப் பின்னர், இந்திய மொத்த துணைக் கண்டத்திலும் இசை, நடனம், நாடகம் பற்றிய விபரங்கள் கிடைக்கும் ஒரே படைப்பு தென்னிந்தியாவில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் மட்டுமேயாகும்.

இளங்கோ பரதருக்குக் கடன்பட்டிருப்பதை நாம் ஏற்றுகொள்வதைப் போலவே 13ம் நூற்றாண்டில் சாரங்கதேவர் எழுதிய “சங்கீத ரத்னாகரம்” சிலப்பதிகாரத்துக்குப் பட்டுள்ள கடனையும் நாம் ஏற்றுகொண்டே ஆகவேண்டும்.

சாரங்கதேவர், தேவராயரின் அரசவையில் பணி புரிந்தவர், அவர் காஷ்மீரத்திலிருந்து வந்தவராவர். அலாவுத்தீன் கில்ஜி மதுரை வரையிலான படையெடுப்பு முடிந்து திரும்புகையில் தன்னுடன் தென்னிந்திய இசைக் கலைஞர்களை வடக்குக்கே அழைத்துச் சென்றான் என வராலறு சொல்லுகின்றது. அவனது அவையில் நிறைய இசைக் கலைஞர்கள் இருந்தனர் என்பதும் அதே வரலாறு அங்கீகரிக்கும் உண்மையுமாகும்.

சிலப்பதிகார காலத்திலிருந்து 13ம் நூற்றாண்டின் உரையாசிரியர்கள் எழுதிய உரை நூல்கள் வரையில் தமிழில் இசை பற்றிய நூல்கள் பல இருந்தன. அவையாவும் இன்று கிடைக்காவிடினும் உரையாசிரியர்களின் உரைக்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

தமிழிசை மரபு இன்னும் விரியும்

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! – முகவுரை – தொடர் – 08

முகவுரை - தொடர் - 08வடக்கில் இசையின் வளர்ச்சி பற்றிய தகவல்கள் எதுவும் பெரிதாக எமக்குத் தெரியவரவில்லை. பண்டைய இந்தியாவின் இசை எப்படி இருந்திருக்கக்கூடும் என்பது பற்றி ஓரளவிற்கேனும் அறிய வேண்டுமென்றால் அதுகூடக் கர்நாடக இசையில் தான் கிடைக்கும் என்று முடிவு செய்வதில் தவறேதுமில்லை.

இந்துஸ்தானி இசை அராபிய, பாரசீக பாதிப்புகளுக்குட்பட்டு அவற்றைத் தன்னுள் சேர்த்துக் கொண்டு வளர்ந்துள்ளது.

தெற்கு அந்நிய படையெடுப்புகளின் குறுக்கீடற்ற அமைதியான சரித்திரத்தை உடையதாக இருந்ததால், அதன் பாரம்பரிய செல்வங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

வட இந்தியா, சமஸ்கிருத பாரம்பரியம் தன்னில் கொண்டிருந்த தத்துவம், சமயம் துறைகளில் தான் படைத்திருந்த செல்வங்களைத் திரும்பப் பெற, தெற்கையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

தெற்கும் வடஇந்தியாவின் பண்டையப் பெருமையை கணிசமான அளவில் வடக்குக்குத் திருப்பிக் கொடுத்துள்ளது.பண்டைய காலத்திலிருந்து இன்று வரை தென்னிந்திய இசையின் அறுபடாத மரபின் தொடர்ச்சியைக் காப்பாற்றிக் கொண்டு வளர்ந்து வந்துள்ளது.

பரதரின் நாட்டிய சாஸ்திரம் வடக்கில் பிரபலமாகும் முன்பே, தெற்கின் மூலையிலிருந்த தமிழர்கள் அதன் அடிப்படையில் பல உரை நூல்களை எழுதியிருந்தனர். இத்தகைய செழிப்பான படைப்புகளிலிருந்தும் விபரங்களை உள் வாங்கி இளங்கோ ஒரு மகாகாவியத்தைப் படைக்க, அது தன் முதன்மைச் சிறப்பை 18 நூற்றாண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

சாரங்கதேவர் தன் சங்கீத ரத்னாகராவில் “ரூபக ஆலத்தி” என்ற பெயரில் விளக்குவது இளங்கோவின் “பண்ணாலத்தி” என்பதேயாகும். கிருதியின் ஒரு வரியை விஸ்தாரமாகப் பாடும் ‘சாகித்ய நிரவல்’ என்று உத்தியின் ஆரம்ப முயற்சிதான் இது.

பரதருக்குப்பின் ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்குப்பின் சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகராவில் தான் இசை பற்றிய ஆய்வு முழுமையாய் கையாளப் பட்டிருப்பதைக் கையாளப்பட்டிருக்கிறது.

துணைக்கண்டம் முழுவதிலும் ஒரே இசைமரபுதான் இருந்தது.

இசை அளவைகளை (scale) ஏழுஸ்வரங்களாகவும், 12 ஸ்வர ஸ்தானங்களாகவும், அவற்றை மீண்டும் கால்தொனிகளாகவும் பிரிப்பது என சாரங்கதேவர் நிறுவியது அனைத்தும் இளங்கோவுக்கும் தெரிந்திருந்தது. இவை ஒரு சாதாரண தரத்திலுள்ள கர்நாடக இசைப்பாடகரின் நிகழ்ச்சியில் கூடப் பார்க்கலாம்.

மாதங்கரின் ப்ருஹத்தேசி முப்பது கிரம ராகங்களைப் பட்டியலிடுகின்றது. இவற்றில் தேவாரப் பண்கள் சிலவும் அடக்கம்.

சிலப்பதிகாரம் 103 பண்களைப் பட்டியலிட்டது. சிலப்பதிகாரம், தேவாரப் பாடல்கள் மற்றும் திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றின் இராகங்களின் வடிவங்கள் பற்றிப் விரிவாகப் பேசுகின்றது.

செவ்வியல் இசை மற்றும் கவிதையின் இணைவு, செவ்வியல் கலை மற்றும் நாட்டார் கலையின் இணைவு, இவற்றுடன் பொதுமக்களிடையே தமிழிசை மரபு வாழ்ந்து வந்துள்ளது. 12ம் நூற்றாண்டு வரை, 1500 ஆண்டுகள் அறுபடாமல் நீடித்த பாரம்பரியம் இதுவாகும்.

நாயன்மார்களின் பாடல்கள் (தேவாரம்) ஆழ்வார்களின் பாடல்கள் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) ஆகியவை திரட்டப்பட்டு அன்றைய இசைப்பாணியில் மெட்டமைக்கப் பட்டிருந்தன. இவற்றைச் செய்தவர்கள் கி.பி. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாதமுனிகள் ஆழ்வார்களுக்கும், மற்றும் நம்பியாண்டார் நம்பி தேவாரப் பாடல்களுக்குமாவர். இவை கோவில்களில் பாடப்பட்டபோது இவற்றுக்கு நடனம் ஆடினர். கோவில்கள் கற்றலுக்கும் கலைக்குமான மையங்கள் ஆகியிருந்தன.

1940ஆண்டுகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்றபோது சைவக் கோவில்களில் ஓதுவார்கள் மூலம்தான் நாயன்மார்கள் காலத்தில் எத்தகைய இசை நடைமுறைகளிலிருந்தன என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஓதுவார்களின் பாடல் முறைகள், சிலப்பதிகாரத்தில் கிடைக்கும் விபரங்கள் இவற்றோடு அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையிலிருந்துதான் சிலப்பதிகாரத்தில் காணப்படும் ராகங்களின் இன்றைய இணை இராகங்களையும் அறிய முடிந்துள்ளது.

சங்கநூல்கள் முப்பதுக்கும் மேற்பட்ட தாள வாத்தியங்களைக் குறிப்பிடுகின்றன. காலம் காலமாய் கவிதையும் இன்னிசையும் இணைந்த ஓர் இலக்கியமரபில், லயத்துக்கும் இலக்கிய வெளிப்பாடு வேண்டியிருந்தது. அது 16ம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழில் கிடைத்துள்ளது.

மரபுவழிக் கூற்றின்படி, அது 13000 பாடல்களின் வெள்ளப்பெருக்கு, அவற்றில் ஒரு சிறுபகுதியே இப்போது எஞ்சியுள்ளது. தத்துவார்த்த விளக்கம், மனதை மயக்கும் கவித்துவம் மற்றும் சந்த ஒலிகள் ஆகிய இவை எல்லாம் இணைந்ததோர் அற்புதக் கலவை அதுவாகும்.

சாரங்கதேவரின் “சங்கீதரத்னாகரா”விலிருந்து வேங்கடமஹியின் “சதுர்தண்டிப்ரகாசிகா” (1660) வரை சுருக்கமா நோக்குவோமாக. வேங்கடமஹியின் தந்தை கோவிந்த தீக்ஷிதர் ஒரு நிர்வாகி, இசைக்கலைஞர், இசை ஆராய்ச்சியாளரும் ஆவார்.

இவர் ரகுநாத நாயக்கரின் அரசவையில் எழுபது வருடங்கள் அமைச்சராக இருந்தார். சங்கீதசுதா என்ற நூலை இயற்றினார். அது சங்கீதரத்னாகராவை நெருக்கமாய் பின்பற்றிய நூல். கோவிந்த தீக்ஷிதரின் மகன் வேங்கடமஹியின் ஆய்வு நூல்தான் ஒரு மைல்கல்.

முறைப்படுத்தப்பட்ட விஞ்ஞான முறையில் இசையைத் தெளிவாக விவரித்ததுடன், கர்நாடக இசையைப் பற்றிய விவரங்களை விரிவாகக் கையாண்டு, அதற்குப் பின் பல நூற்றாண்டுகளுக்கு, இன்று வரை அதன் வளர்ச்சிப் பாதையை வழிநடத்தி வந்துள்ளது.

கர்நாடக இசையைப் பொறுத்த மட்டில், இசை ஆய்வாளர்களுக்கு அது ஒரு வேதாகமம் போன்றது. திருஷ்டமுள்ள சிலருக்கே வாய்க்கக் கூடியதென்றாலும், தலைமுறை தலைமுறையாய்க் கைமாறி வந்துள்ளது.

வேங்கடமஹியின் பூரணமான கோட்பாட்டமைப்பு எழுத்து வடிவத்தில் எதுவும் இல்லாதபோதிலும் செவிவழியாகவே சிதைவில்லாமல் உட்கிரகிக்கப்பட்டுள்ளது. 1934ல் பனை ஓலைச் சுவடிகளிலிருந்து அது அச்சு வடிவாக்கப்பட்டபோது, ஒற்றை ஓலைச்சுவடிப் பிரதிமட்டுமே இதற்காகக் கிடைத்தது. ஆனால் தென்தீபகர்ப்பம் முழுவதுமே வாய்வழிக் கல்வியால் வேங்கடமஹியின் கோட்பாடுகளைத் தொடர்ந்திருந்தது.

அவரது காலம் வரையில் கர்நாடக இசையில் நிகழ்ந்திருந்த வளர்ச்சியுடன் வேங்கடமஹிக்கு சாரங்கதேவர் மாதங்கர் இவர்களின் எழுத்துக்கள் மட்டுமன்றி புரந்தரதாசரின் ஆயிரக்கணக்கான பாடல்களும் கிடைத்தன. மரபுப்படி அவர் 403,000 பாடல்கள் எழுதியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அவர் தன்னுடைய காலத்தில் அறியப்பட்டிருந்த இராகங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அவற்றை வகைகளாகப் பிரித்து மாதங்கரும் சாரங்கதேவரும் வகைப்படுத்தியிருந்த இராகங்களிலிருந்து 72 மேளகர்த்தா ராகங்கள் என்றும் பின் அவை ஒவ்வொன்றின் கீழும் ஜன்ய இராகங்கள் என்றும் ஒரு வடிவமைப்பை வெளிக்கொணர்ந்தார்.

இது அதுவரை அறியப்பட்டு பாடப்பட்ட ராகங்களுக்கான பொது அடித்தளத்தை ஏற்படுத்தியதுடன், புது ராகங்களுக்கான இலக்கணங்களையும் வரையறைத்துக் கொடுத்துள்ளார். “நான் பரிந்துரைத்திருக்கும் 72 மேளங்களும் என்னுடைய படைப்பூக்கத்தில் விளைந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டுமே அவற்றுக்கான காரணம் அல்ல. அப்படி இருக்குமாயின் அது புத்திக்கூர்மையின் விரயம். ந்த வடிவமைப்பு முற்றிலுமாய் இன்றே, இப்போதே செயல் படுத்தத்தக்கது என்று நான் சொல்லவில்லை.

அது தற்போது புழக்கத்திலிருக்கும் சில இராகங்களை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது என்பது உண்மை. நான் இதை கடந்தகால, இன்றைய, வருங்கால இராகங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு மாடம் உள்ள ஒரு தேன்கூடு வடிவில் அமைத்திருக்கிறேன். 12 ஸ்வர ஸ்தானங்களுக்கும் பொதுவான அங்கீகாரம் இருக்கிறது. வர்ணங்களின் எண்ணிக்கை 51, மேளங்கள் 72, அதற்கு மேலும் இல்லை குறைவும் இல்லை”

அவர்காலத்தில் அறியப்படும் இராகங்கள், மறக்கப்பட்ட கடந்தகால இராகங்கள் மற்றும் வருங்காலத்தில் உருவாக்கப்படும் இராகங்கள் அனைத்துக்குமான தேன்கூடு வடிவப் பெட்டியை வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றார்.

தமிழிசைப்பண்கள் : தொடர் 04-08
சிறீ சிறீஸ்கந்தராஜா
14/02/2016 – 11/03/2016

தொகுப்பு – thamil.co.uk