நெல்லிக்காய்

நெல்லிக்காய்-thamil.co.uk‘அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல் ‘நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என்று சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை.

தினம் ஒரு அப்பிள் சாப்பிட்டால், டொக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டொக்டரைத் தேடிப் போவதும் அப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான்.

அப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும். ஒரு நெல்லிக்காய் மூன்று அப்பிள்களுக்குச் சமம்.

நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விடயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான். ‘காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள்.

நெல்லிக்காயில் கல்சியம், விட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் விட்டமின் C இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் விட்டமின் C மிக அதிகம்.

ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் விட்டமின் C இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். விட்டமின் C அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.

தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது.

நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

நெல்லிக்காயில் கல்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.

நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்தி வந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.

நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும்.

கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.

கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

நெல்லிக்காய் சாறு 15 மி.லி(1மேசைக்கரண்டி) தேன் 15 மி.லி., எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.

மஞ்சளையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள்.

சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில் ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுப்பார்கள்.

இரத்தம் கலந்து சிறுநீர், சிறுநீர் கழியும் போது வரும் எரிச்சல் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை தேனில் கலந்து அரைத்துக் கொடுப்பார்கள்.

நெல்லிக்கனி விதையைப் பவுடராக்கி, அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து கொடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் கட்டுப்படும்.

தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதுவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

ஒரு மேசைக்கரண்டி நெல்லி சாறையும், அரை மேசைக்கரண்டி தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண்நோய் வராது.

நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.

ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய்பொடி, ஒரு தேக்கரண்டி நாவல்பழப் பொடி, ஒரு தேக்கரண்டி பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது.

உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.
(நெல்லி)அமலா கூந்தல் தைலம் கேடத்திற்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சி தரும்.

ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக் கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது.

நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம்.

ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற ‘சயவனபிராச லேகியம்’ அல்லது ‘நெல்லிக்காய் லேகியம்’ எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம்.

நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை தேக்கரண்டி) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

கடைகளில் “நிஷா ஆமலகி சூரணம்’ என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கிறது. உபயோகித்து சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.

நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள். தண்ணீர் இனிப்பாக மாறிவிடும்.

தேரையர் என்னும் சித்தர் கூறுவதையும் பார்க்கலாம்.
மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.

நெல்லிக்காய் வாழ்நாளை நீடிக்கச் செய்யும் ஒரு காயகல்ப மூலிகையாகும்.

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மூலிகைகளிலேயே அன்றாடம் சாப்பிட்டாலும், எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஒன்று தான் நெல்லிக்காய். அதிலும் தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அலாதி. சரி, இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்

கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடும்.

சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

முக்கியமாக தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தேனில் ஊறிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவகுணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

-meera tharshan
-sudar24.com

தொகுப்பு  – thamil.co.uk