அணியிலக்கணம் 10 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 35

அணியிலக்கணம் – தொடர்- 5931) புணர்நிலையணி

தண்டியலங்காரத்தில் முப்பத்தியொன்றாவதாகக் கூறப்படும் அணி, புணர்நிலையணி ஆகும். தண்டியலங்காரத்தில் சொல் பற்றிய அணிகள் சிலவும் இடம் பெறுகின்றன. அத்தகைய சொல் பற்றிய அணிகளில் புணர்நிலை அணியும் ஒன்று.

புணர்நிலை அணியின் இலக்கணம்
வினையாலும், பண்பாலும் இரண்டு பொருளுக்கு ஒரு சொல்லே முடிக்கும் சொல்லாகப் பொருந்துமாறு சொல்லுவது புணர்நிலை என்னும் அணி ஆகும்.
“வினை, பண்பு எனும்இவை இருபொருட்கு ஒன்றே புணர
மொழிவது புணர்நிலை ஆகும்”  (நூற்பா – 85)

புணர்நிலை அணி வினைப் புணர்நிலை, பண்புப் புணர்நிலை என இரண்டு வகைப்படும்.

வினைப் புணர்நிலை
கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு வினை பற்றிய சொல்லை முடிக்கும் சொல்லாக அமைத்துக் கூறுவது வினைப் புணர்நிலை எனப்படும்.
“வேண்டுருவம் கொண்டு, கருகி, வெளிபரந்து,
நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த, – ஆண்தகையோர்
மேவல் விரும்பும் பெருநசையால் மெல்ஆவி
காவல் புரிந்திருந்தோர் கண்”
(கருகி – கறுத்து ; முகில் – மேகம் ; நசை – காதல் ; ஆவி – உயிர்.)
ஆண்மை மிக்க தலைவரைச் சேர விரும்பிய பெருங்காதலாலே தம்முடைய மெல்லிய உயிர் போகாதபடி பாதுகாக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த தலைவியருடைய கண்கள், வேண்டிய உருவத்தைக் கொண்டு, கறுத்த நிறத்தை உடையதாய், வானம் எங்கும் பரந்து நீண்ட முகில்களுடனே நீரைப் பொழிந்தன.

இப்பாடலில் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு.  ஒன்று, கண்; மற்றொன்று, முகில்.

இவ்விரு பொருளுக்கும் பொதுவான ‘நீர் பொழிந்த’ என்னும் வினை பற்றிய ஒரு சொல்லையே முடிக்கும் சொல்லாக அமைத்திருத்தலின் இது, வினைப் புணர்நிலை ஆயிற்று.

பண்புப் புணர்நிலை
கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு குணம் (பண்பு) பற்றிய சொல்லை முடிக்கும் சொல்லாக அமைத்துக் கூறுவது பண்புப் புணர்நிலை எனப்படும்.
“பூங்காவில் புள்ஒடுங்கும் புன்மாலைப் போழ்துடனே, நீங்காத
வெம்மையவாய் நீண்டனவால், – தாம்காதல் வைக்கும்
துணைவர் வரும்அவதி பார்த்து ஆவி
உய்க்கும் தமியார் உயிர்”
(புள் -பறவைகள் ; அவதி – காலம்;)
தாம் அன்பு வைத்த துணைவர் வரும் காலத்தை எதிர்பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் மடவாருடைய உயிரானது, பூக்கள் நிறைந்த சோலையிலே பறவைகள் எல்லாம் தங்கள் கூடுகளுக்குச் சென்று ஒடுங்கிய புல்லிய மாலைப் பொழுதுடனே, நீங்காத துயரம் செய்து நீண்டு கொண்டிருந்தன.

இப்பாடலில் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு. ஒன்று, தமியார் உயிர்; மற்றொன்று, மாலைப் பொழுது.

இவ்விரு பொருளுக்கும் பொதுவான ‘நீண்டன’ என்னும் பண்பு பற்றிய ஒரு சொல்லையே முடிக்கும் சொல்லாக அமைத்திருத்தலின் இது, பண்புப் புணர்நிலை ஆயிற்று.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 36

அணியிலக்கணம் – தொடர்- 6032) பரிவருத்தனை அணி
தண்டியலங்காரத்தில் முப்பத்தியிரண்டாவதாகக் கூறப்படும் அணி,  பரிவருத்தனை அணி ஆகும். ஒரு பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைச் சொல்லுவது பரிவருத்தனை என்னும் அணி ஆகும்.
“பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே” (நூற்பா – 86)
பரிவருத்தனை – ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல்.இது மூவகைப்படும் என்று கூறுவாரும் உளர்.  அவை, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல், கொடுத்தது மிகையாய்க் கொண்டது குறைவாய் இருத்தல், கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்பன.
“காமனை வென்றோன் சடைமதியும் கங்கையும்
தாம நிழல்ஒன்று தாம்கொடுத்து, – நாமப்
பருவாள் அரவின் பணமணிகள் தோறும்
உரு ஆயிரம் பெற்றுள”
(காமன் – மன்மதன் ; காமனை வென்றோன்- சிவபெருமான் ; தாம- தம்முடைய ; நிழல்- உருவம், (எதிரொளிக்கும்) பிம்பம் ; நாமம்- அச்சம் ; வாள்- ஒளி; பணம் – படம்.)மன்மதனை வென்ற சிவபெருமானுடைய சடையில் தங்கியிருக்கும் பிறைமதியும், கங்கையும் தம்முடைய நிழல் (உருவம்) ஒன்றை மட்டும் தாம் கொடுத்து, அப்பெருமான் அணிந்த அச்சத்தைத் தரும் பாம்பின் படங்களில் பெரியதாய் இருக்கும் ஒளியினை உடைய மணிகள்தோறும், தத்தம் உருவம் எதிரொளிப்பதால் ஆயிரம் ஆயிரம் உருவங்களைப் பெற்றன.இப்பாடலில், பிறைமதியும், கங்கையும் ஒவ்வோர் உருவம் மட்டுமே கொடுத்து, ஆயிரம் ஆயிரம் உருவங்களைப் பெற்றன எனப் பரிமாறுதல் கூறப்பட்டிருத்தலின் இது பரிவரித்தனை அணி ஆயிற்று.இது, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவரித்தனை அணி.

இப்பாடல் மட்டுமே பரிவருத்தனை அணிக்குத் தண்டியலங்கார உரையில் சான்றாகக் காட்டப்படுகிறது.  தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இவ்வணி அமைந்திலங்குகிறது. சான்றாகத் திருக்குறளில் இருந்து ஒரு குறள்.
“சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து” (குறள், 1183)
இது, தலைவன் தன்னைப் பிரிந்தமையால் பசலையுற்று வருந்திய தலைவி புலம்பிக் கூறியதாக அமைந்தது.

காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இப்பாடலில் தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறை கொடாது சமமாய்ப் பரிவருத்தனை செய்யப் பெற்றிருத்தல் அறிந்து இன்புறற் குரியது.

இது, கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணி ஆகும்.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 37

அணியிலக்கணம் – தொடர்- 6133) வாழ்த்தணி

தண்டியலங்காரத்தில் முப்பத்திமூன்றாவதாகக் கூறப்படும் அணி, வாழ்த்தணி ஆகும். உலகில் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கூறுவதும் பாராட்டிக் கூறுவதும் இயல்பு. இவ்வாறு கூறுவதில் கூறுவார்க்கும் கேட்பார்க்கும் மகிழ்ச்சி சிறக்கிறது. மகிழ்ச்சி நிறைந்த உலகைக் காண்பதே கவிஞர்களின் நோக்கம்.  எனவே வாழ்த்திக் கூறும் மகிழ்ச்சிப் பொருளையே தனி ஓர் அணியாகத் தண்டி ஆசிரியர் கூறினார் எனலாம்.

வாழ்த்து அணியின் இலக்கணம்
இன்ன தன்மையை உடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவிஞர் தாம் கருதியதைச் சிறப்பித்துக் கூறுதல் வாழ்த்து என்னும் அணி ஆகும்.
“இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்
முன்னியது கிளத்தல் வாழ்த்துஎன மொழிப”  (நூற்பா – 87)
(முன்னியது – கருதியது ;  கிளத்தல் – விதந்து கூறுதல் அஃதாவது சிறப்பித்துக் கூறுதல்.)

“மூவாத் தமிழ்பயந்த முன்நூல் முனிவாழி!
ஆவாழி! வாழி அருமறையோர்! – காவிரிநாட்டு
அண்ணல் அனபாயன் வாழி! அவன்குடைக்கீழ்
மண்உலகில் வாழி மழை!”
(மூவா – அழியாத ; முன் நூல் – பழைமையான நூல்கள் ; முனி – அகத்திய முனிவர் ; ஆ – பசு; அண்ணல் – தலைவன்.)

அழியாத தமிழ் தோற்றுவித்த பழைமையான நூல்களைக் கற்றுணர்ந்த அகத்திய முனிவர் வாழ்க!

பசுக்கள் வாழ்க!

அரிய வேதங்களைக் (தமிழ் மறைகளைக்) கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்க!

காவிரியாறு பாய்கின்ற சோழ நாட்டுத் தலைவனாகிய அனபாயன் வாழ்க!

அவனுடைய அரசாட்சிக்கு உட்பட்ட இவ்வுலகில் மழை வாழ்க!

இப்பாடலில், அனபாய சோழன் வாழ்க எனவும், அவனுடைய நாட்டிற்கு இன்றியமையாதனவும் நன்மை பயப்பனவும் ஆகிய அகத்திய முனிவர், பசுக்கள், அந்தணர்கள், மழை என்ற அனைத்தும் வாழ்க எனவும் வாழ்த்திக் கூறியமையால் இது வாழ்த்து அணி ஆயிற்று.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 38

அணியிலக்கணம் – தொடர்- 6234) சங்கீரணவணி

தண்டியலங்காரத்தில் முப்பத்திநான்காவதாகக் கூறப்படும் அணி, சங்கீரணவணி ஆகும்.

ஒரு பாடலில் ஓர் அணி மட்டுமே பயின்று வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  பெரும்பாலும் ஓர் அணி அமையுமாறே பாடல் கவிஞர்களால் பாடப்படுகிறது. சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் அமையுமாறும் கவிஞர்கள் பாடலைப் புனைவது உண்டு.

இவ்வாறு ஒரு பாடலில் பல அணிகள் கலந்து வரும்போது அப்பாடலின் பொருள், அழகு மிக்குத் திகழக் காணலாம். இதனால் பல அணிகள் கலந்து வருவதையே தனி ஓர் அணியாகக் கூறினர் அணி இலக்கண நூலார்.

சங்கீரண அணியின் இலக்கணம்
மேலே கூறப்பட்ட தன்மை முதலான அணிகள் பலவும் தம்முள்ளே கலந்து ஓரிடத்திலே வருமாறு சொல்லப்படுவது சங்கீரணம் (கலப்பு) அணி ஆகும்.

“மொழியப் பட்ட அணிபல தம்முள்
தழுவ உரைப்பது சங்கீ ரணமே” (நூற்பா – 88)
சங்கீரணம் என்பதற்குக் கலப்பு என்று பொருள்.
(மொழியப்பட்ட அணி – தன்மை அணி முதல் வாழ்த்து அணி வரை கூறப்பட்ட முப்பத்து மூன்று அணிகள்.)

“தண்துறைநீர் நின்ற தவத்தால் அளிமருவு
புண்டரிகம் நின்வதனம் போன்றதால்; – உண்டோ?
பயின்றார் உளம்பருகும் பால்மொழியாய்! பார்மேல்
முயன்றால் முடியாப் பொருள்”
(அளி – வண்டு, கருணை ; புண்டரிகம் – தாமரை ; வதனம் – முகம் ; பார் – உலகம்.)

அணைந்தாருடைய உள்ளத்தை வவ்வும் பால் போன்ற இனிய சொல்லை உடைய தலைவியே!

குளிர்ந்த நீர்த் துறையிலே நின்று செய்த தவத்தினால் வண்டுகள் பொருந்திய தாமரை, கருணை பொருந்திய நின் முகம் போன்ற தோற்றம் உடையதாயிற்று.

இவ்வுலகில் முயற்சி செய்தால் அடைய முடியாத பொருள் எதுவும் இல்லை.

இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி, ஏது அணி, சிலேடை அணி, உவமை அணி, வேற்றுப்பொருள் வைப்பு அணி, சுவை அணி என்னும் ஆறு அணிகள் கலந்து வந்தள்ளன.

“தண்துறைநீர் நின்ற தவம்”  என்பதில் தற்குறிப்பேற்ற அணி அமைந்துள்ளது.

தாமரை நீரின் மேல் மலர்ந்து நிற்பது இயல்பாக நிகழ்கின்ற ஒன்று. ஆனால் கவிஞர் தலைவியின் முகத்தைப் போலத் தோற்றம் பெறுவதற்காகத் தாமரை தண்ணீரில் நின்று தவம் செய்தது போல உள்ளது எனத் தம்முடைய குறிப்பை ஏற்றிக் கூறினமையால் தற்குறிப்பேற்றம் ஆயிற்று.“தவத்தால்” என்பதில் ஏது அணி அமைந்துள்ளது.  ஏதேனும் ஒரு பொருள் திறத்து இதனால் இது நிகழ்ந்தது என்று காரணத்தைச் சிறப்பாக எடுத்துச் சொல்வது ஏது என்னும் அணி ஆகும்.

தாமரை மலரானது நீரில் நின்று செய்த தவத்தாலேயே தலைவியின் முகத்தைப் போன்ற தோற்றம் பெற்றது என்று கூறப்பட்டதால் ஏது அணி ஆயிற்று.

“அளிமருவு” என்பதில் சிலேடை அணி அமைந்துள்ளது.  இத்தொடர் தாமரைக்கும் தலைவிக்கும் சிலேடையாக அமைக்கப்பட்டுள்ளது.

இத்தொடரானது தாமரையின் மேல் செல்லுங்கால் ‘ “வண்டுகள் பொருந்திய”என்றும்,  முகத்தின் மேல் செல்லுங்கால்,  “கருணை பொருந்திய”என்றும் இருவகைப் பொருள்படும்.  (அளி – வண்டு, கருணை.)

“புண்டரிகம் நின்வதனம் போன்றது” என்பதில் உவமை அணி அமைந்துள்ளது.  இது பண்பு உவமை ஆகும்.

“பார்மேல் முயன்றால் முடியாப் பொருள் உண்டோ?” என்பதில் வேற்றுப்பொருள் வைப்பு அணி அமைந்துள்ளது.

இப்பாடலில், ‘தாமரை நீரிலே நின்று தவம் செய்து தலைவியின் முகத்தைப் போன்ற தோற்றத்தைப் பெற்றது’ என்று கூறியிருப்பது சிறப்புப் பொருள் ஆகும்.  இச் சிறப்புப் பொருளை, ‘உலகத்தில் முயற்சி செய்தால் அடைய முடியாத பொருள் எதுவும் இல்லை’ என்ற பொதுப்பொருள் கொண்டு முடித்துக் கூறியமையால் வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று.

“பயின்றார் உளம்பருகும் பால்மொழியாய்” என்பதில் சுவை அணி அமைந்துள்ளது.

இவ்வாறாக இப்பாடலில் ஆறு அணிகள் கலந்து வந்திருப்பதால் இது சங்கீரண அல்லது கலப்பு அணி ஆயிற்று.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 39

அணியிலக்கணம் – தொடர்- 6335) பாவிகவணி

 தண்டியலங்காரம் பொருளணியியலில் கூறப்படும் கடைசி அணி, முப்பத்தைந்தாவது அணி இதுவாகும்.  இதுகாறும் நாம் பார்த்த முப்பத்து நான்கு அணிகளும் தனிநிலைச் செய்யுளில் (ஒரு தனிப்பாடலில்) அமையுமாறு தண்டி ஆசிரியரால் கூறப்பட்டவை ஆகும்.

பாவிக அணியோ, தொடர்நிலைச் செய்யுள் என்று கூறப்படும் ஒரு பெரிய காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தையோ, நீதியையோ பற்றியதாகக் கூறப்படுகிறது.

பாவிக அணியின் இலக்கணம்
பாவிகம் என்று சொல்லப்படுவது, காப்பியமாகிய தொடர்நிலைச் செய்யுளில் கவிஞரால் கருதிச் செய்யப்படுவதோர் குணம் ஆகும்.

இதனைத் தண்டி ஆசிரியர்,

“பாவிகம் என்பது காப்பியப் பண்பே” (நூற்பா – 90)
கவிஞரால் கருதிக் கூறப்படும் காப்பியப் பண்பு, தொடர்நிலைச் செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது அல்லாமல், தனித்து ஒரு பாட்டால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது என்று தண்டியலங்கார உரை இவ்வணி அமையும் இயல்பு பற்றிக் குறிப்பிடுகிறது.  எனவே ஏனைய முப்பத்து நான்கு அணிகளும் ஒரு பாடலில் கொள்ளப்படும் என்பது புலனாகும்.தண்டியலங்கார உரையில் பாவிக அணிக்குச் சான்றாக, இராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் ஆகிய காப்பியங்கள் முழுவதும் வைத்து நோக்கிக் கொள்ளப்படும் பண்புகள் மிக அழகாகவும் சுருக்கமாகவும் கூறப்படுகின்றன.
“பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப;
பொறையில் சிறந்த கவசம் இல்லை;
வாய்மையில் கடியது ஓர் வாளி இல்லை”“பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப” என்பதற்குப் பொருள், ‘பிறன் மனைவியை விரும்புவோர் சுற்றத்தொடும் கெடுவர்’ என்பதாகும்.  இஃது இராமாயணத்தால் உணரப்படும்.“பொறையில் சிறந்த கவசம் இல்லை” என்பதற்குப் பொருள், ‘பொறுமையைக் காட்டிலும் சிறப்புற்ற பாதுகாப்பு இல்லை’ என்பதாகும்.  இது பாரதத்தால் உணரப்படும்.

“வாய்மையில் கடியது ஓர் வாளி இல்லை” என்பதற்குப் பொருள், ‘வாய்மையைக் காட்டிலும் துன்பத்தை அழிக்கத்தக்க கூர்மை உடையதோர் அம்பு இல்லை’ என்பதாகும்.  இஃது அரிச்சந்திர புராணத்தால் உணரப்படும்.

தண்டமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் ஊடாடி நிற்கும் காப்பியப் பண்புகளை இளங்கோவடிகள் மிக அழகாகப் பதிகத்தில்,
“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்று கூறுகிறார்.

பாவிக அணிக்கு இளங்கோவடிகள் கூறுவதும் நல்ல சான்றாக ஆன்றோரால் கொள்ளப்படுகின்றது.

பொருளணியியலின் இறுதி அணியாகக் கூறப்படும் பாவிக அணியோ, தொடர்நிலைச் செய்யுள் என்று கூறப்படும் ஒரு பெரிய காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தைப் பற்றியதாகக் கூறப்படுகிறது.

இராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் மற்றும் சிலப்பதிகாரம் ஆகிய கதை தழுவிய காப்பிய நூல்களில் பாவிக அணி சிறப்பாக அமைந்துள்ளமையைக் காணலாம்.

அணியிலக்கணம்- தண்டியலங்காரம் : தொடர் 59-63
சிறீ சிறீஸ்கந்தராஜா
10/08/2013 – 12/08/2013

தொகுப்பு – thamil.co.uk