பாலிதீன் பைகளால் புற்றுநோய் அபாயம்

பாலிதீன்-thamil.co.ukதிடப்பொருள்கள் வாங்க பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக்குகள் அடுத்தகட்டத்திற்கு தாவி தற்போது சூடான திரவப் பொருள்களை வாங்கி வரவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் உணவுப்பொருள்கள் வேதிவினையாகி புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

நம் அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருளாகி ஊடுருவி கிடக்கிறது. சிறிய தூக்கும் பைகள் முதல் சமையல் பாத்திரம், மருத்துவம், சுகாதாரம், மின்துறை என்று அனைத்திலும் இதன் தாக்கம் வீரியமாக இருக்கிறது. இருப்பினும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை. மறுசுழற்சி மூலம் தொடர்ந்து அவற்றை பல்வேறு ரூபங்களாக மாற்றி மாற்றி அதன் வீரியத்தன்மை வெகுவாய் குறைக்கப்படுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி, சேமித்து வைத்தல், விற்பனை உள்ளிட்ட அனைத்து கட்டத்திலும் இதற்கு தடை உண்டு. இருப்பினும் அரசு, அதிகாரிகளின் கடும் நடவடிக்கை இன்மையால் தொடர் ந்து இவை சந்தையில் வலம் வந்தபடி உள்ளன. எளிமையான பயன்பாடு, விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆரம்பத்தில் பொதுமக்களின் பார்வையை இந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஈர்க்கத் தொடங்கின. இதனால் துணிப்பை மெல்ல மெல்ல பயன்பாட்டில் இருந்து விலக துவங்கியது. கையை வீசி கொண்டு செல்லலாம். பொருட்களை வாங்கி வந்தபின் பிளாஸ்டிக் பையை தூக்கிப் போட்டு விடலாம் என்ற மனோநிலையில் நுகர்வோர் மத்தியில் புதிய கொள்முதல் கலாச்சாரத்தை ஏற்படுத்த துவங்கியது.

எனினும் இதன்பின்னால் உள்ள அபாயங்களை பலரும் உணரவில்லை. இவ்வாறு தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்குகள் அவ்வளவு எளிதில் மக்குவதில்லை. மண்ணில் பல ஆண்டுகளாக புதைந்தே கிடந்து மழைநீரை உட்புகாமல் செய்வதுடன், மண்ணின் உதிரித்தன்மையை பாதித்து காற்று ஊடுருவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

இதனால் மண்புழு உள்ளிட்டவைகளும் அழிய தொடங்கின. சிதறிக் கிடக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அழித்தாலும் அது சுற்றுச்சூழலுக்கு கேட்டையே விளைவிக்கிறது. எரிக்கும் போது, அதில் இருந்து வெளிவரும் டையாக்சின் காற்றுமண்டலத்தில் கலந்து விடுகிறது.

இதை சுவாசிப்பவர்களுக்கு தும்மல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. காற்றில் கலந்திருக்கும் டையாக்சினின் மீது மழை பொழியும் போது அவை அமில மழையாக தரையை தொட்டு பாதிப்பை தொடர்கிறது.

பொதுவாக மண்ணில் பல்வேறு விதைகள் சிதறி கிடக்கும். மழை நேரங்களில் இவை தழைத்தெழும். மழை காலங்களில் சிறு தாவரங்களான நாயுருவி, துளசி, குப்பை மேனி, தும்பை, திருநீற்றுப்பச்சை என்று பல்வேறு மூலிகைச் செடிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வளர்ந்து சுற்றுச்சூழலுக்கும், மனிதனுக்கும் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தின.

ஆனால் பிளாஸ்டிக் எரிப்பினால் மண்ணின் மேல் உள்ள மண்புழு மட்டுமல்லாது இதுபோன்ற விதைகளும் கருகுவதால் முன்பு போல மழைக்கு பிந்திய சிறுதாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இவ்வாறு புதைத்தாலும், எரித்தாலும் தன்சுபாவத்தை மாற்றி கொள்ளாமல் சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து கேடுவிளைவிக்கும் இந்த பிளாஸ்டிக்குகள் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

பாலிதீன் பை-thamil.co.ukதிடப்பொருள்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பிளாஸ்டிக்குகள் தற்போது திரவ பொருட்களையும் ஆட்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் உணவகங்களில் குழம்பு, ரசம் என்று பார்சல் செய்ய  பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகள் தற்போது இதை விட அதிகமாக தேனீர்  கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. கட்டட வேலைகள், தினக்கூலிகள் என்று தேனீரை மொத்தமாக வாங்கி பகிர்ந்து குடிக்கும் அத்தனை இடங்களிலும் இந்த முறை பரவலாகிவிட்டது.

தேனீரை  பார்சல் கட்டி தருவதற்காகவே பல்வேறு முன்னேற்பாடுகள் கடைகளில் செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள பாலிபுரோப்பின் அதிகசூட்டினால் உருகி உணவுப்பொருளுடன் கலக்கும். புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.

இருப்பினும் கையை வீசிக்கொண்டு சென்று பொருளை வாங்கி பழகிவிட்ட தற்போதைய நடைமுறை பாதிப்பையும் துரிதப்படுத்தி வருகிறது. தூக்குவாளி போன்ற பாத்திர விற்பனையும் குறைந்துவிட்டது.

சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த வில்லனை அரசு, அதிகாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் இணைந்து எதிர்கொள்வதன் மூலமே இதனை தடுக்க முடியும்.

பாலிதீன் பைகளால் புற்றுநோய், தோல் வியாதிகள் போன்றவை ஏற்படுகிறது. பூமி மாசுபடுகிறது. மழை நீர் பூமியில் உறிஞ்சப்படுவது தடைப்பட்டு நீர் மட்டம் பாதாளத்திற்கு செல்கிறது. நிறைய கால்நடைகள் இறக்கின்றன. சில விசதன்மையுடைய பாலை நமக்கு கொடுக்கின்றன. கழிவு நீர் சாக்கடைகள் அடைக்கப்பட்டு விச கொசுக்கள் உருவாக்கி மலேரியா போன்ற கொடிய நோய்கள் உருவாகிறது. கடலில் கொட்டப்படும் பாலிதீன் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்களும், பறவைகளும் உயிரை இழக்கின்றன.

இப்போது தெரிகிறதா, பாலிதீன் பைகள் அணுகுண்டை விட மிக மோசமான ஓன்று என. இதை நாம் பயன்படுத்தலாமா? நாம் இயற்கையை கெடுத்தோம் என்றால் நம் அடுத்த தலைமுறை வாழ வழியே இல்லாமல் போய்விடும். பூமியை நாம் காப்பாற்றினால், பூமி நம்மை காப்பாற்றும். மரம் நடுவோம்… பாலிதீன் பைகளை ஒழிப்போம் … இயற்கைக்கு எதிரான செயல்களை தடுப்போம்… பூமியை பாதுகாப்போம்… அனைவரும் வளமுடன் வாழ்வோம்…

-World Wide Tamil People