நினைவாற்றல் தரும் வல்லாரை கீரை

வல்லாரை-thamil.co.ukநம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம். சித்தர்களாலும், தமிழ் வைத்தியர்களாலும் மகா ஒளடதி வல்லாரை என்றழைக்கப்படும் மகா சிறந்த மூலிகையாகும்.

வல்லாரை கண்டீரோ. அதன் மகத்துவம் புரிந்தீரோ – மூளை
வல்லாரெல்லாம் சொல்லிச் சொல்லி உண்ணும்
வல்லமை யுணவு இவ்வல்லாரை தானன்றோ.

நம் தமிழ் சித்தர்கள் பலர் அவர்களின் பாடல்களில் வல்லாரை ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது என்றும் அதன் சிறப்புகளையும் தெரிவித்துள்ளனர். வல்லாரை ஒரு மிக சிறந்த இரத்த விருத்தி மூலிகை. இது நரம்புகளை பலப்படுத்தி ஞாபகசக்தியை அதிகரிக்கிறது. மூளைக்கு நல்ல பலத்தை கொடுக்கிறது. தலையிடி, தலை சோர்வு, மூளை அயர்ச்சி போன்றவைகளை இது குணமாக்குகிறது.

வல்லமை மிக்க கீரை. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, உயிர்சத்து A, உயிர்சத்து C மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவேதான், இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே “வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழி ஏற்பட்டது.

வல்லாரை கீரை-thamil.co.ukBotanical name : Centella asiatica
common name :centella and gotu kola

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் – அமினோ அமிலங்கள், சென்டிலிக் சென்டோயிக், அமிலங்கள், கரோடின், ஹைட்ரோ காட்டிலின், வெல்லிரைன், பிரமினோசைடு, விட்டமின் B1, B2 மற்றும் விட்டமின் C, டேனிக் அமிலம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது.

அவரை விதை வடிவமுடைய இலைகளைக் கொண்ட வல்லாரை ஏழு பிரதான நரம்பமைப்பைக் கொண்டது. இதன் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் உடையவை.

வல்லாரையின் மருத்துவ பயன்கள்

நினைவாற்றல் பெருக
இத்தாவரத்தினை சக்தி அளிக்கும் டானிக் மற்றும் நினைவாற்றலையும் கவனத்தையும் ஈடுபாட்டினையும் அதிகரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

காலை வேளையில் வல்லாரையை பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட ஞாபகசக்தி பெருகும். வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பு 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்த்து தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும். அல்லது 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

காய்ச்சலுக்கு
வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும். இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.

சிறுநீர் பெருக்கி
சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது. ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

வல்லாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

பல், ஈறு பாதுகாப்புக்கு
வல்லாரை இலைகள், மா இலைகள், கொய்யா இலைகள், கிராம்பு, நல்லமிளகு, உப்பு சேர்த்து செய்யப்படும் பற்பொடி பல், ஈறுகளை பாதுகாக்கும்.

வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.

திக்குவாய் குணமாக
தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும். திக்குவாய் குணமாகும்.

இரத்த விருத்தி
வல்லாரை இரத்த விருத்தியை தந்து நரம்புகளைப் பலம் பெறச் செய்கிறது. இரத்தசோகையைப் போக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இரத்தக்குழாய்களை நெகிழ்வடையச் செய்கிறது. இது கொல்லஜென் என்னும் புரதம் தோன்றவும், புதிய இரத்தக் குழாய் உருவாதலையும் துரிதப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது.

மனநோய்கள் மறைய
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.

உடல்புண் குணமாக
வாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வாய்ப்புண்ணால் அவதிப்படுகிறவர்கள் காலையும் மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில்போட்டு நன்கு மென்றுதின்றால் வியப்பூட்டும் விதத்தில் வாய்ப்புண் மறைந்து விடும்.

இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும். பசுமை இலைகள் குழந்தைகளின் வயிற்று போக்கினை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

உடல் சோர்வு நீங்கும். உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது.

பாக்டீரியாக்களை அழிக்கும், காயங்களை குணப்படுத்தும். புண்கள் குணமடையும் போது  இழையங்களை சரிசெய்ய ஆக்ஸிகரண எதிர்ப் பொருள்களின் அளவு அதிகரிக்கச் செய்கிறது.

பெங்கால் புலிகளுக்கு ஒரு பழக்கம் உள்ளது. அவை காயமடைந்தால் வல்லாரை வளர்ந்திருக்கும் பகுதிக்குச் சென்று வல்லாரை இலைகளை கடித்து விட்டு நாக்கால் காயத்தின் மீது நக்குமாம். அப்போது அதன் காயம் விரைவில் குணமடைந்து விடுமாம். இதனால் வல்லாரைக்கு புலிப்புல் என்ற பெயரும் உண்டு.

யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும். லெப்ரசி leprosy, யானைக்கால் நோய் போன்றவற்றை குணப்படுத்தும் எண்ணெய்களிலும் வல்லாரை பயன்படுத்தப் படுகிறது.

பார்வை
வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும். காலை வேளையில் ஒரு கைப்பிடியளவு கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.

மூட்டுவலியைப் போக்குகிறது. தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு நல்ல மருந்தாகிறது.

தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகவும், கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.

இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும் இதிலுள்ள ஏஸியாடிக்கோசைடு asiaticoside என்னும் பொருள் புண்கள் ஆறுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

வல்லாரை இலையை முறைப்படி எண்ணையாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும். எண்ணெய் முடி வளர்தலை ஊக்குவிக்கிறது.

வல்லாரை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக் கூடாது. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது. இக் கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

-tamilcloud.com
-viyapu.com

தொகுப்பு – thamil.co.uk