பழந்தமிழ் இசை – இசைக்கருவிகள் – தோற்கருவிகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் 

பழந்தமிழ் இசை –  இசைக்கருவிகள் : தோற்கருவிகள் 
பறை, முரசு, மிருதங்கம், ஆகுளி, உறுமி மேளம், தவில், பம்பை, ஐம்முக முழவம், கஞ்சிரா, தமுக்கு, பேரிகை, மத்தளம், மண்மேளம், பெரும்பறை, பஞ்சறை, மேளம்.

1.பறை
பறைபறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆகிய மேளமாகும். ‘பறை’ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு’ எனப் பொருள்படும். பேசுவதை இசைக்கவல்ல தாளக்கருவி ‘பறை’ எனப்படுகின்றது. மலையாளத்தில் ‘பறைதல்’ என்பது ‘சொல்லுதல்’ என்ற பொருளில் இன்றும் வழங்கி வருவதை காணலாம்.

பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் ஒரு சொத்தாகும். இதனைத் தோலிசைக் கருவிகளின் தாய் எனலாம். தமிழினத்தின் தொன்மையான அடையாளமும் இதுதான். உழைக்கும் மக்களின் இசைக்களஞ்சியம், தமிழர் வாழ்வியலின் முகம் எனவும் வர்ணிக்கப்படுகின்றது.

ஓடும் இசையை ஒழுங்குபெற நிறுத்தி ஓர் அளவோடு…. சீரோடு….. ஒத்த அழகோடு நடக்க வைத்து…. இசைக்கே நடை கற்பிக்கும் ஒரு கருவி இது எனலாம். தமிழரிடையே பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் ‘தப்பு’ என்பதாகும். (தப்புத்தாளம் என்பதும் இதனடியாக வந்திருக்கலாம்). இத்தகைய இசைக்கருவி எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை.

கற்காலத்தின் முதல் தகவல் தொடர்புச் சாதனமாக இது இருந்து வந்துள்ளது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் ‘பறை’ பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு.

குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன.

‘பறை’ என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது எனத் தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோற்கருவிகளின் பொதுப் பெயராகப் பறை என்பது வழங்கபட்டுள்ளது.

தீட்டைப்பறை, தொண்டகச் சிறுபறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது. இவற்றினை மாற்றி மாற்றி அடிப்பதன் மூலம் புதிய மெட்டுக்கள், சொற்கட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி அடியென வைத்திருக்கின்றார்கள்.

சப்பரத்தடி, டப்பா அடி, பாடல் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல், மாரடித்தல், வாழ்த்து அடி என ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாறுகின்றன. எனினும் இசைக்கப்படும் இசைக்கருவி ஒன்றுதான்!

தப்பு கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது.

பறையில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு ஆகியன. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும்.

தப்பு கருவியினை இசைக்க இருவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இடது கையில் வைத்திருக்கும் குச்சி ‘சிம்புக்குச்சி’ மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும். இது ஒன்றே கால் அடி நீளமும் ஒரு செ.மீ. அகலமும் கொண்டது.

வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப் பட்டிருக்கும். இந்தக் குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும் இவற்றை அடித்து ஓசை எழுப்பப்படும்.

சிம்புக்குச்சி நீண்ட தடடையானதாகவும் அடிகுச்சி குட்டையாக பருத்ததாகவும் அமைந்திருக்கும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டைக்குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்ப்புறத்தில் இருந்து அடிப்பர்.

இடதுகையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியை பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிப்பர். குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது.

தப்பாட்டம்2 -thamil.co.ukவலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி.

பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி.

இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப் படுகின்றன.

பண்டைய இசைக்கருவிகள் சொற்கட்டு எனப்படும் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சொற்கட்டுகள் பல்வேறு வகைகளில் பெற்ற அனுபவம், முன்மாதிரிகளால் உருவானவை. வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டில், பறையடிப்பது தொடர்பான மெட்டுகள் எழுதி வைக்கப்படவில்லை. பறை இசைப்பவர்களின் கூர்ந்த கவனிப்பு, போலச் செய்தல், பயிற்சி, இசையின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

• டன்டனக்கு டனக்குனக்கு
• டன் டன் டன் டன்டனக்கு
• ரக்கட்ட ரக்கட்ட ரக்கட்ட
• ரண்டக்க ரண்டக்க ரண்டக்க என்ற வகையில் பறை இசைப்பதற்கான சொற்கட்டுகள் அமைகின்றன. சொற்கட்டுகள் அடிப்படை அடிகளைத்தான் சுட்டுகின்றனவே தவிர மொத்த மெட்டையும் சுட்டுவதில்லை. அதேநேரம் ஒரு அடிப்படை சொற்கட்டைக் கொண்டு, இசைப்பவர் தனது கற்பனைக்கு ஏற்ப புதிய இசைக்கோலங்களை உருவாக்கலாம்.

தப்பாட்டம்1thamil.co.ukபறையானது மாட்டுத்தோலில் செய்யப்படுவதால் இசைக்க ஆரம்பிக்கும் முன் பறையடிப்பவர்கள் பறையைத் தீயில் காட்டுவார்கள். அது தோலில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி, தோலை இறுகச் செய்யும். தோல் உறுதியாகி, அடிக்கும் போது உயர் சுருதியில் நல்ல ஓசையை எழுப்பும்.

பறையோடு இணைக்கப்பட்ட தோலை இடதுப்பக்க கைக்குள் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும். பிடிக்க எளிதாக இருப்பதால் பறையை கையில் வைத்துக் கொண்டு நிற்கலாம், நடக்கலாம், நடனமும் ஆடலாம்.  அதிலிருந்துதான் பறையாட்டம் பிறந்தது.

பறை இசையில் பலவகை அடிகள் உண்டு. இவ்வாறு அடித்தலால் ஏற்படும் பறை இசைக்கேற்ப நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என ஆடும் கலை பறையாட்டம் எனப்படுகிறது

பறையின் வகைகள்
பறையின் இசையும், வடிவமும் நுணுக்கமாக வேறுபடுகிறது.  அவற்றில் முக்கியமானவை வருமாறு.

தோற்கருவிகள் பற்றி அடியார்க்கு நல்லார்
இசைப்பாட்டின் தாள அறுதியைப் புலப்படுத்தி இசை வளர்ச்சிக்குத் துணை நிற்பதுடன், கேட்போரது உள்ளத்தைக் கிளர்ச்சி செய்ய வைப்பன இத்தகைய தோற் கருவிகளாகும்.

பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர, வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசானம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை, என முப்பதுக்கு மேற்பட்ட பறைகளை இனம் காட்டுகின்றார்.

அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாள்முழவு, காலைமுழவு, எழுவை முழவுகள் பற்றியும் கூறுகின்றார்.

அகமுழவான உத்தமமான மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா என்றும், அகப்புறமுழவான மத்திம கருவியாகிய தண்ணுமை, தக்கை, தகுணிச்சம், முதலாயின என்றும், புறமுழவாவன அதமக் கருவியான கணப்பறை முதலாயின என்றும், பண்ணமை முழவாவன முரசு, நிசாளம், துடுமை, திமிலை என்னும் வீரமுழவு நான்கும் என்றும், அடியார்க்கு நல்லார் இத்தோற்கருவிகளை மிகவும் நுட்பமாகப் பகுத்துக் கூறியுள்ளார்.

தோற்கருவிகளில் இசை வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுவது மத்தளமாகும். கரம் கொண்டு வாசிக்கத் தக்கது மத்தளம் ஆகையினால் அதனை முதற்கருவி என்றும், இசை நிகழ்ச்சிக்கு இடையே வாசிக்கத்தக்கது சல்லிகை ஆதலினால் அதனை இடைக்கருவி என்றும், கடைக்கண் வாசித்தற்குரியது உடுக்கை ஆதலின் அதனைக் கடைக்கருவி என்றும் மேலும் கூறுவர்.

தேவராத் திருப்பதிகங்களில் இடக்கை, உடுக்கை, கத்தரிக்கை, கல்லவடம், கல்லலகு, கிணை, குடமுழா, கொக்கரை, கொடுகொட்டி, சல்லரி, தக்கை, தகுணிச்சம், தண்ணுமை, பறை, பிடவம், முழவு, மொந்தை, முரவம் ஆகிய தோற்கருவிகள் இசை நிகழ்ச்சிக்கும், ஆடலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே திருக்கோயில்களில் தேவாரத் திருப்பதிகங்களை விண்ணப்பம் செய்யும்பொழுது மத்தளம் முதலிய துணைக்கருவிகளுடன் பாடும் வழக்கம் மிகவும் தொன்மையுடையது என்பதும் அறிய முடிகிறது.

அரிப்பறை : அரித்தெழும் ஓசையையுடைய பறை. “அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே”. (சீவக சிந்தாமணி. 2688).

ஆறெறிப் பறை: வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை. “ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும்” (சிலப்பதிகாரம். 12, 40).

நெய்தற்பறை: நெய்தல் நிலத்துக்குரிய பறை. (திருக்குறள்-1115)

பம்பை : நெய்தனிலங்கட்குரிய பறை. (திவாகர நிகண்டு). “தழங்குரற் பம்பையிற் சாற்றி” (சீவக சிந்தாமணி.40).

கொடுகொட்டி : ஒரு வகைப்பறை “கொடுகொட்டி யாடலும்” (சிலப்பதிகாரம். 6,43), “குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க” (தேவாரம். 225, 2).

பறைத்தப்பட்டை, தண்ணம், தம்பட்டம், திடும், திண்டிமம், நாவாய்ப்பறை, திமிலை (சிலப்பதிகாரம். 3, 27, உரை)

முரசம், வெருப்பறை : போர்ப் பறைகள். “முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில்” (புறநானூறு. 288).

பூசற்றண்ணுமை : பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன்னூல்)

முருகியம் : குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம். பொ. 18, உரை.)

வீராணம் : ஒருவகைப் பெரிய பறை. “வீராணம் வெற்றிமுரசு” (திருப்புகழ். 264).

பஞ்சமாசத்தம் : சேகண்டி கைத்தாளம் காளம் என்றும், தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும், இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை.

சங்க காலம், சோழ, பாண்டிய அரசர்கள் காலத்தில் பறை இசைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அரசர்களது அறிவிப்புகளை மக்களுக்கு முரசு அறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபு.

ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேற்றவதற்கு, பெருகிவரும் புனலை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றி தோல்வியை அறிவிக்க, வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடை செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க, இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில் எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் ‘பறை’ இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.

கோயில் திருவிழாக்கள், மதச் சடங்குகளின்போது பறை இசைக்கப்படும். இதுதவிர, இறுதி ஊர்வலத்தின் போதும் பறை இசைக்கப்படுகிறது. சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு.

2. முழவு 

முழவு-thamil.co.ukஇலக்கியங்களும், கல்வெட்டுகளும் முழவு, தண்ணுமை, மத்தளம், இடக்கை, முரசு, பறை, குடமுழா முதலிய பல்வேறு தோலிசைக் கருவிகளைச் சுட்டுகின்றன. இவற்றுள், இசைக்கும் ஆடலுக்கும் பயன்படுத்தப்பட்ட கருவிகளுள், முழவு, தண்ணுமை, மத்தளம் ஆகிய கருவிகளைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாய் கிடைக்கின்றன.

இம் மூன்றில், முழவும், தண்ணுமையும் சங்க இலக்கியங்களிலேயே இடம் பெறுகின்றன. ‘முழவு’ என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இடம் பெருகிறது.

முழவு குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பிச் சுவைக்கும் கருவியாகும்.

3.தண்ணுமை (மிருதங்கம்– ‘இராஜ வாத்தியம்’)

தண்ணுமை-thamil.co.ukபண்டைத் தமிழர் பண்பாட்டில் தண்ணுமை மிகச் சிறந்த தாளவிசைக் கருவியாக விளங்கியுள்ளது. தண்ணுமை இனிய குரலையுடையது. அதைப் போர்க்களத்திலும் முழங்கியுள்ளனர். அந்த இசை முழக்கத்தைக் கேட்டுப் போர் வீரர்கள் வீறுகொண்டு வெற்றி வேட்கையுடன் போராடியுள்ளனர்.

தண்ணுமையிலிருந்து இன்றைய தாளவிசைக் கருவியான மிருதங்கம் சற்று சீர்திருத்திய அமைப்பில் உருவாகி இருக்க வேண்டும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

சிலப்பதிகார காலத்தில், தாளக் கருவிகளுள் “தண்ணுமை” தலைமைக் கருவியாய் விளங்கியது. சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளார் மிருதங்கத்தை, ‘தண்ணுமை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஈர்ந்தண் முழவு’, ‘மண்ணார் முழவு’, ‘முழவு மண் புலர’ போன்ற குறிப்புகள் முலம் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும், இம்மண் காலப்போக்கில் வரண்டு உதிர்ந்ததையும், உணர முடிகிறது.

பதிற்றுப்பத்து கூறும் “பண்ணமை முழவு”, சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் உரை கூறும் “இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்”, ஆகிய தொடர்கள் மூலம் பண்டைய காலத்திலேயே முழவிசைக் கருவிகளில் ஸ்ருதி சேர்க்கப்பட்டன என்றும் அறிய முடிகிறது.

இலக்கியங்களில் மத்தளம் என்ற சொல்லை முதன் முதலில் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகத்தில்தான் காணமுடிகிறது. சிலபெருமானின் ஆடலுக்கு ஏற்ற தாளக் கருவிகளுள் ஒன்றாக மத்தளம் இடம் பெறுகின்றது.

சோழர் காலக் கல்வெட்டுகளில் மத்தளம் முதன்மை இசைக் கருவியாய் விளங்கியதைக் குறிக்கின்றன. சோழர் காலச் சிற்பங்களிலும் அதிக அளவில் மத்தளம் என்ற இசைக்கருவிகள் காணக் கிடைக்கின்றன.

கோயில் சிற்பங்களை ஆழ்ந்து நோக்கின் ஆடலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளில் குடமுழவும், இடக்கையுமே அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக நடராஜர் சிற்பங்கள் உள்ள தொகுதிகளில், சிவபெருமானின் ஆட்டத்துக்கு ஏற்ப இசைக்கப்படும் கருவியாக குடமுழா இடம் பெறுகின்றது. மற்ற ஆடல் சிற்பங்களில் பக்கவாத்தியமாய் அதிகளவில் காணப்படும் இடக்கையே.

“நடுவில் குறுகியும், பக்கங்களில் பெருத்தும் காணப்படும் இக் கருவியின் வார்களை இழுத்தும் தளர்த்தியும், அதிலிருந்து எழுந்த ஒலியை கட்டுப்படுத்தியுள்ளனர்”, என்று இடக்கையைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இவை தவிர, நடுவில் அதிக குறுக்கம் இல்லாத கருவிகளும் நிறையவே காணக் கிடைக்கின்றன.

கையால் முழக்கியதோடன்றி, குணில் என்ற வளைந்த குச்சியாலும் இவ்வாத்தியத்தை முழக்கியிருப்பதை சிற்பங்கள் உணர்த்துகின்றன. ஒரு முகப் பறைகளுள் ஒன்றாக அறியப்படும் இக் கருவி பல்லவர் காலம் தொட்டு, பல்வேறு சிற்பத் தொகுதிகளில் காணக் கிடைக்கின்றது.

தண்ணுமைக்கும், மத்தளத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. சங்க இலக்கியங்கள் சுட்டும் தண்னுமைதான் காலப் போக்கில் மத்தளமானது. “தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே” என்ற சிலப்பதிகார வரிகள் மூலம் தண்ணுமை, முழவு வேறானவை எனவும் அறிய முடிகிறது.

தோலால் போர்த்தி, வாரால் இணைக்கப்பட்டு சுருதியுடன் சேர்த்து இசைக்கக் கூடிய கருவி தண்ணுமை ஆகும். சங்க காலத்தில் சிறப்புற்றிருந்த தண்ணுமை தான் பிற்காலத்தில் “மிருதங்கம்” என வழங்கலாயிற்று. மிருதங்கம் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தது என்று கொள்வதற்கு ஆதாரமில்லை. ஒருவேளை அதன் வடிவத்தில் கொஞ்சம் மாறுதலைக் கொண்டு வந்திருக்கலாம். நாகசுரமும் தவிலும், மராட்டியர் தஞ்சை வந்த காலத்தில் முக்கிய கருவிகளாக இருந்தன எனக்கூறினார்.

“ஹரிகதை” மராட்டியர்களிடமிருந்து தஞ்சைக்கு வந்த கலை வடிவமெனில், ஹரிகதைக்கு பக்கவாத்தியமாய் விளங்கிய மிருதங்கமும் அங்கிருந்துதான் வந்ததென்ற கருத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை.

ஆலயச் சிற்பங்களைப் பார்க்கும்போது இந்நாளில் மிருதங்கம் என்று நாம் குறிக்கும் கருவியின் வடிவிலேயே பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்த இசைக்கருவி இருந்திருப்பதும் தெரிய வருகிறது.

வரலாற்றாய்வாளர்கள் இரு பக்கம் முழக்கும் கருவிகள் அனைத்தையுமே “மத்தளம்” என்ற பொதுச் சொல்லில் அடக்கிவிடுகின்றனர்.

அளவிலும், அமைப்பிலும் வேறுபடும் கருவிகளைப் பலவற்றை நம் கோயில் சிற்பங்கள் சித்தரிக்கின்றன. இந்தச் சிற்பத்தில் உள்ள இந்தக் கருவி, நடுவில் பெருத்தும், முனைகளில் சிறுத்தும், இரு புறங்களை வார் கொண்டு இணைத்தும் காணப்படுகிறது.

இன்று கச்சேரிகளில் வாசிக்கப்படும் மிருதங்கத்தும் இந்தச் சிற்பத்தில் உள்ள கருவிக்கும் வித்தியாசம் காண்பது கடினம். இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன.

மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரிதும் வளர்ச்சி அடைந்திருந்தன. இந்த அறிமுகத்தோடு இன்றைய மிருதங்கம் என்ற இசைக்கருவி பற்றி நோக்குவோம்.

‘மிருத் + அங்கம்’ என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு “மண்ணை அங்கமாகக் கொண்டது” என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும்.

தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர். வலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும்.

கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் சுருதி வாத்தியம் ஆகிறது. அதாவது பாடகரின் சுருதியிலேயே மிருதங்கத்தின் சுருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு.

தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் சுருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது.

கடம் போன்ற வாத்யங்களுக்கும் சுருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ‘இராஜ வாத்தியம்’ என்றும் அழைப்பதுண்டு.

பரதநாட்டியத்தின் முக்கியமான தாளக் கருவி மிருதங்கம். இக்கருவி இசை நட்டுவனாரின் நட்டுவாங்கத்திற்குப் பக்க பலமாக இருக்கும். உறுதுணையாகவும் இருக்கும். நாட்டியச் சொற்கட்டுகளை மிருதங்கத்தில் அருமையாக வாசிக்கலாம். பாதங்களின் தாள வேலைப்பாடுகளை நட்டுவாங்கத்தோடு இணைந்து வாசித்து ஆடலுக்கு ஏற்றம் தரும் கருவி மிருதங்கமாகும்.

அலாரிப்பு, ஜதிசுரம், வர்ணம், தில்லானா ஆகியவை சொற்கட்டுகள் நிறைந்த உருப்படிகள். மிருதங்கக் கருவியாளரின் லயப் பிடிப்பான வாசிப்பு ஆடுபவருக்குப் பெரும் துணையாக விளங்கும்.

30 வகை தோல் கருவிகளில் 14 மென்மையானவையும், 12 வன்மையானதாகவும் 4 இடைநிலையானவை ஆகும். இந்த நான்கில் மிகச்சிறந்ததாக மத்தளத்தை கூறி மத்தளமும், மிருதங்கமும் வாசிக்கும் முறைகளில் ஒன்றாக இருப்பினும், மிருதங்கத்தை விட ஓசை அதிகமாக மத்தளம் இருந்துள்ளது. ஆனால், மிருதங்கம் மிக மென்மையாக இருந்ததால், இதனையே அதிகம் விரும்பி வாசிக்க ஆரம்பித்தனர், அதுவும் வடஇந்தியாவில் அக்பரின் அவையில் பெரிய அளவில் இடம் பெற்றதும் இந்த வாத்தியமாகும். இத்தனை பெருமை வாய்ந்தது மிருதங்கம் ஆகும்.

4.ஆகுளி 
ஆகுளி -thamil.co.ukஆகுளி (Aguli) என்பது ஒருவகைச் சிறுபறையாகும். இந்தத் தாளவிசைக்கருவி முழவுக்கு இணையாகவும் துணையாகவும் அமையும். துடி, கொம்பு, ஆகுளி இவை மூன்றும் ஐவகை நிலங்களில் குறிஞ்சித்திணைக்குரிய  இசைக்கருவியாகக் குறிப்பிடப் படுகின்றன.

வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும்
கொல்லெறி குத்தென் றார்த்துக் குழுமிய வோசையன்றிச்
சில்லரித் துடியுங் கொம்புஞ் சிறுகணா குளியுங்கூடிக்
கல்லெனு மொலியின் மேலுங் கறங்கிசை யருவியெங்கும்” – பெரிய புராணம்

வெல்லும் படையும், தறுகண்மையும், கூடிய சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் எங்கும் கொல், எறி, குத்து, என்றும் ஆரவாரித்துக் கூடுதலால் எழும் ஓசைகளேயல்லாமல், சிலவாய பரல்களையுடைய உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய ஆகுளியும் (சிறுபறையும்) சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக்குச் சத்தித்து ஓடும் அருவிகள் அங்கே எங்கும் உள்ளன  என்பது இதன் பொருளாகும்.

ஆகுளி, சிறுகணாகுளி எனக் குறிப்பிடப்படுகின்றது. எனவே துடியினைவிட ஆகுளி சிறிய முகமுள்ளன என அறியலாம். இக்கருவிகள் குறிஞ்சி நிலக்குறவர்களின் வேட்டையின் போதும் பாட்டுக்களிலும், குறிஞ்சி நிலத் திருவிழாக்களிலும் பயன்பட்டன.

“கோடு முன்பொ லிக்க வுங்கு றுங்க ணாகு ளிக்குலம்
மாடு சென்றி சைப்ப வும்ம ருங்கு பம்பை கொட்டவுஞ்
சேடு கொண்ட கைவி ளிச்சி றந்த வோசை செல்லவுங்
காடு கொண்டெழுந்த வேடு கைவ ளைந்து சென்றதே” – பெரிய புராணம்

வேடர்கள் வேட்டையாடும் போது எல்லாப் பக்கங்களிலும், சுற்றிலும் முற்றுகையிட்டாற் போல் வளைந்து சூழ்ந்து. கொம்பு, ஆகுளி, பம்பை, கைவிளி என்றிவற்றின் ஓசைகளுடன் சூழ்ந்து சென்றனர். பெரிய ஓசைகளுடன் சூழ்தலால் முழை புதர் முதலிய மறைவிடங்களிற் பதுங்கியிருக்கும் விலங்குகள் பயந்து வெளிப்பட்டு ஓடும்போது அவற்றை வேட்டையாடுவர். ஓடுவதனால் அடிச்சுவடுகண்டு அதற்குத் தக்கவாறு செய்வர். இது வேட்டையில் முதல் செய்தொழில்களில் ஒன்று. இதனை விலங்கு எழுப்புதல் என்பர்.

“நல்யாழ், ஆகுளி, பதலையடு சுருக்கிச்,
செல்லா மோதில் சில்வளை விறலி”

“பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:
எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின் என்று” – புறநானூறு

மலைபடுகடாம் எனும் நூலில் பழந்தமிழரின் பத்து இசைக்கருவிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை, முழவு, ஆகுளி, பாண்டில், கொட்டு, தூம்பு, குழல், அரி, தட்டை, எல்லரி, பதலை (தவில்) ஆகியவையாகும்.

“திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவோடு ஆகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்
மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு
கண்ணிடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்….”

இவை எல்லாம் தமிழனின் இசைக் கருவிகள்!!

5. உறுமி மேளம்
உறுமி மேளம்உறுமி மேளம் ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது.

உறுமி மேளம் இரண்டு முகங்கள் உடைய, இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர்.

இன்று, மலேசியாவில் உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி மேளக் குழுக்கள் உள்ளன.

உறுமி மேளக் குழுக்கள் (மலேசியா)
சிறீ கருமாரியம்மன் – உறுமி மேளம்
ஜெ சக்தி சங்கிலிக் கறுப்பன் – உறுமி மேளம்
சங்கமம் – உறுமி மேளம்
ஓம் முருகா – உறுமி மேளம்
சிறீ நாக கன்னி – உறுமி மேளம்
வெற்றி வேல் – உறுமி மேளம்
சிறீ துர்க்கை அம்ம – உறுமி மேளம்
உருத்திர சக்தி & திருசூலி – உறுமி மேளம்
சிறீ மகாசக்தி – உறுமி மேளம்

“காட்டில் வாழும் மீசைக்காரா, வேட்டையாட வருவாயா”
“எலெலோ, எலெலோ, ஆண்டாண்டு காலமம்மா”

6. தவில்
தவில்.தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் ஒரு தாள இசைக் கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம்.

விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், ஒரு பக்கம் மறு பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும்.

தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். சிறிய பக்கத்தில் ‘Portia’ மரத்தால் செய்யப்பட்ட குச்சியினாலும் பெரிய பக்கத்தை விரல்களாலும் முழக்குவர். விரல்களில் கவசங்கள் அணிந்திருப்பார்கள்.

பெரும்பாலான தவில் கலைஞர்கள் சிறிய பக்கத்தை வலது கையால் குச்சி கொண்டும் பெரிய பக்கத்தை இடது கையால் கவசம் அணிந்த விரல்களைக் கொண்டும் முழக்குவர். எனினும், இடது கையால் குச்சியையும் வலது கையால் விரல்களையும் பயன்படுத்தும் கலைஞர்களும் இருக்கிறார்கள்.

தவிலின் உருளை வடிவிலான பகுதி பலா மரத்தினால் செய்யப்படுகிறது. இதன் சிறிய பக்கத்தில் இருக்கும் தோல் வளந்தலை என்று கூறப்படும். இது எருமைக்கன்றின் தோலால் செய்யப்படுகிறது. இதன் பெரிய பக்கத்தில் உள்ள தோல் தொப்பி என்று வழங்கப்படுகிறது. இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது.

இந்த தோலை தாங்கிப் பிடிக்கும் வளையங்கள் இரு பக்கமும் உண்டு. அவை மூங்கிலால் செய்யப்பட்டது. அந்த வளையங்கள் விரைவாக உடைவதால் இப்போது உருக்கு உலோகத்தால் செய்யப்படுகிறது. தோல் கயிறு கொண்டு கட்டப்பட்ட பகுதிகள் இப்போது உருக்கு உலோகத்தால் செய்யப்படும் ஆணிகள் கொண்டு முடுக்கி விடப்படுகிறது.

தவிலின் உருளை வடிவின் வெளிப்புறத்தில் உருக்கு உலோகத்தால் செய்யப்பட்ட வளையங்கள் இரண்டு பொருத்தப்படுகிறது. அவற்றில் 22 துளைகள் உள்ளன ஒவ்வொன்றிலும் 11 துளைகள் இருக்கும்.

ஒன்று சிறிய பக்க தோலைத் தாங்கி பிடித்து இருக்கும் மற்றொன்று பெரிய பக்கத் தோலைப் பிடித்து இருக்கும். இதனால் அவற்றில் எதாவது ஒரு பக்கம் கிழிந்து விட்டால் எளிதில் மாற்ற முடியும். முன்னர் இரண்டு பக்கமும் தோல் கயிற்றால் இணைக்கப்பட்டதால் ஒரு பக்கம் கிழிந்தாலும் இரண்டு பக்கத்தையும் கழற்றி பின் சரி செய்யும் முறை இருந்தது.

தவில் வாசிப்பதற்கு அடிப்படை இசையாவன:
1. த தி தொம் நம் ஜம்
2. த தி தொம் நம் கி ட ஜம்

தவில் வாத்தியம் எப்போது உருவானது, எப்போது பாவனைக்கு வந்தது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. ஆனால் 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் 12 இடங்களில் தவில் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. “செந்தவில் சங்குடனே முழங்க” – திருப்புகழ் – 652. “தவில் முரசு பறை திமிலை” – திருப்புகழ் – 559

மேலும் புராணங்கள், இதிகாசங்களில் டின்டிமம் என்னும் ஒரு தாள வாத்தியம் பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் குச்சியாலும் மறுபக்கம் கையாலும் முழக்கப்படும் பறை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல்நிலையத்தில் உள்ள நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

கருநாடக இசைக் கச்சேரிகளில் பிரதான பாடகர்தான் முதலில் தொடங்குவார். பக்கவாத்தியம் பின்தொடரும். வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களின் தனிக்கச்சேரியிலும் அந்தந்த வாத்தியங்கள் தான் தொடங்கும்.

நாதசுவரக் கச்சேரிகளில் நாதசுவரம் தான் பிரதான வாத்தியம், தவில் பக்கவாத்தியம். ஆனால் நாதசுவரக் கச்சேரி தொடங்கும்போது தவில் வாசிப்போடு தான் தொடங்கும். இது தவில் வாத்தியத்தின் தனிச் சிறப்பாகும்.

7.முரசு
முரசுநமது முன்னோர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதை பலர் அறியும் விதமாகப் பறைசாற்றிச் செய்வார்கள். ‘பறை அடித்தல்’ அல்லது ‘முரசு கொட்டுதல்’ என்று அதற்கு பெயர். தோற்கருவிகளுள் மிகவும் பெருமை வாய்ந்தது முரசமாகும். இத்தகைய முரசம் பலவகைப்படும்.

கொடை முரசு: தான தர்மங்கள் செய்வதை அறிவிப்பது.
மணமுரசு : மங்கல காரியமான மணம் புரிதலை தெரிவிப்பது.
வெற்றிமுரசு : அரசன் போரில் வெற்றி பெற்றதை அறிவிக்கும் முரசு.
வேள்வி முரசு : மந்திர வேள்விகள் செய்யும் பொழுது ஒலிக்கும் முரசு.
காவல் முரசு : காவலர்கள் காவல் செய்யும் பொழுது அடிக்கும் முரசு.
வெற்றிமுரசு : போரில் தோல்வியுற்ற பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டி, முரசமாகச் செய்து வெற்றி முழக்கம் செய்வது வீரமுரசமாகும்.

புலியோடு போராடி, அதனைத் தன் கூர்ங்கோட்டால் குத்திக் கொன்று, கொம்பில் மண்ணுடன் பாய்ந்து சென்று உயிர் விட்ட இடபதத்தின் மயிர் சீவாத தோலைப் போர்த்துச் செய்யப்படுவது மயிர்க்கண் முரசம் என்று நூல்கள் கூறும். இதுவும் வீரமுரசத்தின் பாற்படும்.

பண்டைத் தமிழரசர் இம்முரசினைத் தெய்வத் தன்மையுடையதாகப் போற்றி வந்தனர். இதனை மலர் பரப்பிய கட்டிலில் வைத்துச் சிறப்புச் செய்வர். இதனை நாளும் இசை முழக்கத்துடன் நீர்த்துறைக்கு எடுத்துச் சென்று நீராட்டி, மாலை சூட்டி அலங்கரித்து வழிபாடு செய்வர்.

போர்க்களத்தில் வீரவெறியூட்டும் தோற் கருவிகள் பல இருந்தன. அவற்றுள் சில பறையும், பம்பையும், தடாரியும், முழவும், முருடும், கரடிகையும், திண்டியுமாம். இவ்விசைக் கருவிகள் யாவும் சேர்ந்து முழுங்கும்போது வீரரது தலை சுழலும், நரம்புகள் முறுக்கேறும். போர்வெறி கொண்டு செருக்களம் நோக்குவர். ‘செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி நின்றாள் மறக்குடியிற் பிறந்த மகள்’ என்று புறநானூறு கூறுவதால் போர் முரசின் இயல்பை அறியலாகும்.

தியாக முரசு : இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு இதுவாகும்.

நியாய முரசு : நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)

8. பம்பை
பம்பை-thamil.co.ukபலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.

பம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.

திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப்படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி கதைப் பாடல்களை பாடுகின்றனர். மேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது.

9. பஞ்சமுக வாத்தியம்
பஞ்சமுக வாத்தியம் .பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

குடபஞ்சமுகி எனும் பஞ்சமுகவாத்தியம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் சோழ மண்டலத்தில் மட்டுமே தோன்றிய தாளக் கருவியாகும். சோழர்கள் காலத்தில் இருந்த இந்த தாளக்கருவி இன்று அருகி மறைந்து விட்டது. இது பெரும்பாலும் கோவில்களில் நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் போது இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. திருவாரூர் கோவிலில் உள்ள பஞ்சமுக வாத்தியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பஞ்சமுக வாத்தியத்தின் ஒரு முகம் பாம்பு சுற்றியது போல் உள்ளது. மற்றொன்று ஸ்வஸதிக போன்ற வடிவில் அமைந்துள்ளது. வேறொரு முகம் தாமரைப்பூ வடிவிலுள்ளது. பிரிதொன்று எவ்வித அடையாளமின்றி உள்ளது. நடுவில் உள்ள ஐந்தாவது முகம் பெரியதாக இருக்கிறது. பஞ்ச முகங்கள் மான் தோலால்  இழுத்துக் கட்டப்பட்டிருக்கும்.

ஐந்து முகங்கள் கொண்ட அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும்.

பஞ்சமுக வாத்தியம் சக்கரம் இணைக்கப்பட்டு இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும். இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த இசைக்கருவியில் ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும், ஐந்திலும் சேர்ந்து அடிக்கும் போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும். இது போன்ற தோல் இசைக்கருவியினை வாசிக்க பயிற்சி தேவைப்படுகிறது. இசை நுணுக்கங்களும் உண்டு. பெரும்பாலும் தேர்ச்சிபெற்ற கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கின்றார்கள். இதன் பயன்பாடு மிகவும் அருகி வருகிறது.

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் : தொடர் 13 – 19
சிறீ சிறீஸ்கந்தராஜா
26/04/2014 – 03/05/2014

10.கஞ்சிரா
கஞ்சிராபண்டைய சிறுபறையே இன்று கஞ்சிரா Kanjira என்று அழைக்கப்படுகிறது. இது ஓர் ஒருமுக வாத்தியம். உடும்புத் தோலினால் செய்யப்படும் இசைக்கருவியாகும். தாளம் கொட்டும் தோல் இசைக்கருவிகளில் மிகப் பழமையானது இச்சிறுபறையே. சிறுபறையின் குடும்பத்தில், பறை, தப்பு, டேப்பு என்றெல்லாம் எண்ணிலடங்கா தோல்கருவிகள் காலந்தோறும் உருவாகியுள்ளன.

ஒரு தவில் கலைஞரும் மிருதங்க வித்வானும் செய்யும் தாள முழக்குகளை மிக எளிதாக ஒரு கஞ்சிராக்கலைஞர் செய்து காட்டுவார். மிருதங்கம், தவில் பயில்வோர் முதலில் கஞ்சிரா பழகுவதே சிறந்தது. இன்றைய நாட்களில் அரங்கிசை என்ற செவ்வியல் இசையில் உடன் வாசிக்கப்படும் உயர்வைப் பண்டைய சிறுபறை என்ற கஞ்சிரா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. -unmaionline.com

11.தமுக்கு
தமுக்குதமுக்கு என்பது தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் அரசாங்கம், நீதிமன்றம், கோயில்கள் போன்றவற்றின் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு அடிக்கும் ஒரு இசைக்கருவியாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.- விக்கிப்பீடியா

 

12.பேரிகை
பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக்கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்த இசைக்கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகில் பேரிகையை வைத்து முழக்குவர். அதன் பின்பு சொல்ல வேண்டிய தகவல் தெரிவிக்கப்படும். இப்படி அறிவிப்பவர்கள் வள்ளுவர்கள் எனப்பட்டனர். போரில் வெற்றி பெற்றமைக்கு அடையாளமாகவும் இக்கருவியைப் பயன்படுத்தி இருப்பதை
“ஜய பேரிகை கொட்டடா-
கொட்டடா கொட்டடா” -என்ற பாரதியார் பாடல் மூலம் அறிய முடிகிறது.-விக்கிப்பீடியா

13.மத்தளம்
தோலக்இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ் பெற்றது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இந்த மத்தளம். பலகையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். மத்தளத்தின் சுருதியை மாற்ற இரண்டு மத்தளத் தலைகளை (drumheads) இணைக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும். இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது. -விக்கிப்பீடியா

14.மண்மேளம்
மண்மேளம் என்பது தோல் கருவி வகை தமிழர் இசைக்கருவி. இது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட ஒரு கருவி. பொதுவாக ஒரு பக்கம் கையாலும் மறுபக்கம் குச்சியாலும் வாசிப்பர்.-விக்கிப்பீடியா

தொகுப்பு – thamil.co.uk

15.கைம்முரசு இணை (இருமுக முழவு – தபேலா)
தபேலாஇந்த இசைக்கருவி பழந்தமிழிசைக்கு உரியனவல்ல. அண்மையில் இதன் பயன்பாடு தமிழில் மிகவும் அதிகரித்து உள்ளமையினால் இது பற்றியும் பேச வேண்டியதாகின்றது.

பக்திப்பாடல், மெல்லிசைப்பாடல், பஜனைப் பாடல்களுக்கும் கைம்முரசு இணை பக்கவாத்தியமாக வாசிக்கப்படுகிறது.  இந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான தாள வாத்தியம். (தபேலா அல்லது தப்லா) இதுவாகும். கடந்த 200 ஆண்டுகளிலேயே கைம்முரசு இணை பிரபல்யம் அடைந்துள்ளது.

கச்சேரியின் பிரதான பாடகர் அல்லது வாத்தியக்கருவியை இசைப்பவர் கைம்முரசு இணை ஜதிகளை (டேக்காக்களை) அனுசரித்தே பாட அல்லது வாத்தியத்தை இசைக்க வேண்டும்.

கைம்முரசு இணை இரண்டு பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது “பயான்” என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது “தயான்” என்றும் அழைக்கப்படும்.

பயான் மண்ணாலோ செம்பாலோ ஆக்கப்படும். தயான் மரத்தினால் ஆக்கப்பட்டு இருக்கும். இரண்டினதும் மேற்பாகம் தோலினால் மூடப்பட்டிருக்கும். உருளை வடிவான மரத்துண்டுகள் கைம்முரசு இணையில் பொருத்தப்பட்டிருக்கும். இத்துண்டுகளை மேலேயும் கீழேயும் நகர்த்துவதன் மூலம் சுருதியைக் கூட்டிக் குறைக்கலாம்.

தபேலா ஒரு அடி முதல் 15 அங்குலம் வரை நீளம் உள்ளது. பயான் ஒன்று அல்லது இரண்டு தயானை விடக் குறைவானது ஆகும். மிருதங்கத்தைப் போன்று மாவும், தண்ணீரும் கலந்த பாயாவில் பூசப்படும். இப்பச்சை நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும்.

கைம்முரசு இணை வாசிப்பதில் வெவ்வேறு பாணிகள் உண்டு. இப்பாணிகள் Pur Va Baj, Dilli Baj, Ajrara Baj போன்றனவாகும்.

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் : தொடர் – 20
சிறீ சிறீஸ்கந்தராஜா
17/05/2014

தொகுப்பு – thamil.co.uk