களரி : மறைந்து போகாத போர்க்கலை

களரிப்பயிற்று-thamil.co.ukதமிழர் தற்காப்புக் கலை- களரிப்பயிற்று
Tamil Martial Arts – KaLarippayitru

களரிப்பயிற்று என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும். இது அடிமுறை என்றும் அழைக்கப்படும். இன்று இது கேரளாவிலும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த தமிழர் தற்காப்புக் கலைகளில் இதுவும் ஒன்று.

இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடகிய ஒரு முழுமையான கலையாகும்.

வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். களரி, வடக்கன் களரி, தெக்கன் களரி என இருவகைப்படும்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும் கேரளாவிலும் இக்கலை வடிவம் உள்ளது. களரி வீரர்கள் களரி நிகழ்வின் போது கடவுள், குரு, ஆயுதம், களம் ஆகியவற்றை வணங்கி பின் துவங்குவர். களரி கற்றுக் கொடுக்கும் ஆசான் அல்லது குரு மருத்துவம் தெரிந்தவராகவும் இருப்பார்.

மறைந்து போகாத போர்க்கலை களரி -இரா. வேணுகோபாலகிருஷ்ணன்

களரி 1 -thamil.co.ukபண்டைத் தமிழகத்தின் தற்காப்பு மற்றும் போர்க்கலைகளில் ஒன்று களரி. இந்தக் களரிக் கலை தற்போது கேரள மாநிலத்தில் பிரபலமாக உள்ளது. தமிழகத்தில் தென்கோடி மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் பயிலப்பட்டு வருகிறது.

களரி தமிழகத்தைச் சேர்ந்ததா, கேரளத்தைச் சேர்ந்ததா என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் ஆய்வாளர்களிடையே உள்ளன. இக்கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழில் உள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், தற்போது களரி அதிக அளவில் கேரளத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. அது பற்றிய நூல்கள் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பரவலாக உள்ளன.

இது மிகத் தொன்மையான கலை. இதன் தொடக்க காலத்தில் கேரளம் பண்டைய தமிழ்ச் சேர நாடாகவே இருந்ததால் இதைத் தமிழர் கலையென்று கூறுவதில் தவறில்லை.

நான்கு வேதங்களுக்கு உப வேதங்க உள்ளன. அத்தகைய உபவேதங்களில் யஜுர் வேதத்தின் உபவேதமான தனுர் வேதம் ஆயுதங்களைக் கையாளும் போர்க்கலைகளைச் சொல்கிறது. அதன் வழியில் வந்தது களரி என்று களரியின் பெருமை எடுத்துரைக்கப்படுகிறது.

களரி 2 -thamil.co.ukஇன்றைய காலகட்டத்தில் கராத்தே, குங்பூ, ஜூடோ என அயலகத் தற்காப்புக் கலைகள் நம் நாட்டில் பிரபலமடைந்து வருகின்றன. எனவே, நம் நாட்டுத் தற்காப்புக் கலைகளான வர்மம், சிலம்பம், களரி முதலியன புறக்கணிக்கப்பட்டு, வழக்கொழிந்து போகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

நம் நாட்டின் இத்தகைய பண்டைய கலைகள் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் ஓர் அங்கமான விவேகானந்தா பல்கலைக்கழகம் களரிக் கலையை அங்கு உடற்கல்விப் பட்டப்படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பாடமாகவும், வெளியிலிருந்து வந்து கற்போருக்கு ஒரு சான்றிதழ்க் கல்வியாகவும் கற்றுத் தருகிறது.

களரிக்கலை பற்றியும் பல்கலைக்கழகப் பாடம் பற்றியும் ஓம் சக்தி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் களரிக்கலை கற்றுத்தரும் உடற்கல்வித் துறை இணைப்பேராசிரியர் முனைவர் எஸ். சிவசங்கர் அவர்கள்  அளித்த பேட்டி-

களரி 3 -thamil.co.uk
*
  களரி ஏறத்தாழ 3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கலையாகும். இதனைப் புராண காலப் பரசுராமர் தோற்றுவித்ததாகவும், அகத்திய முனிவர் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் போர் வீரர்களுக்குப் போர்ப்பயிற்சியாகவும், நோய் நீக்கும் மருத்துவ முறையாகவும் கற்றுத் தரப்பட்டது. நாளடைவில் எல்லோரும் கற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

பரசுராமர் காலம் மிகவும் முற்பட்டதுதான் என்றாலும், களரி பற்றிய பாடல் ஒன்று அவர்தான் முதன் முதலாகக் களரியைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறது. இது வட கேரளத்தில்தான் மிகவும் பரவலாக உள்ளது. அங்கு நிறையக் களரி அகாடமிகள் உள்ளன. அவை மாநில அளவிலும், தேசிய அளவிலும் களரிப் போட்டிகளை நடத்துகின்றன.

*  களரி என்பது களோரிகா என்ற வட சொல்லிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு மையம் என்று பொருள். பயிற்று என்பது பயிற்றுவித்தல் அல்லது கற்பித்தல் ஆகும். இதன்படி, களரிப்பயிற்று என்பது பயிற்சி மையம் ஆகும். தமிழில் களரி என்றால் போர்ப்பயிற்சி செய்யுமிடம் எனப் பொருள் உள்ளது.

களரி -thamil.co.uk*  களரி ஒரு  தற்காப்புக்கலை, பண்டைய போர்க்கலை என இரண்டுமாகக் களரி உள்ளது. தற்காலத்தில் தற்காப்புக்காகவே களரி பயன்படுகிறது.

* பண்டைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் அரசர்களுக்கும், பின்னர் போர் வீரர்களுக்குமான பயிற்சியாகவே தொடக்கத்தில்இருந்தது. பிற்காலத்தில்தான் எல்லோரும் கற்றுக் கொள்ளும் கலையாக வளர்ந்துள்ளது.

*   நம் நாட்டில் கேரளத்தில்தான் அதிக அளவில் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ளது. இப்போது மலேசியா, சிங்கப்பூர் முதலான வெளிநாடுகளிலும் பரவி வருகிறது.

*  களரிக்கலை வடக்கன் களரி, தெற்கன் களரி என இரு வகைப்படுகிறது. கேரளத்தில் உள்ளது வடக்கன் களரி. தென் தமிழகத்தில் உள்ளது தெற்கன் களரி. இரண்டு முறைகளும் கலந்த மத்திய களரி என்பது சில இடங்களில் மூன்றாவதாக உள்ளது.

பயிற்சி செய்யும் இடத்தைப் பொறுத்து அங்கக்களரி, குழிக்களரி என்ற இருவகை உண்டு. அங்கக்களரி என்பது திறந்த வெளியில் சண்டைப்பயிற்சி நடைபெறும் இடமாகும். இது பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்கேற்ப ஓரளவு சரிவான களமாக இருக்கும். இதற்கு அளவு வரையறை இல்லை.

நாங்கள் கற்றுத் தருவது குழிக்களரி. இதற்குப் பயிற்சி செய்யும் களம் தரை மட்டத்திற்குக் கீழே 6 அடி ஆழத்திற்குக் குழி தோண்டப்பட்டுக் களம் அமைக்கப்பட்டிருக்கும். இதன் நீளம் 42 அடி. அகலம் 21 அடி. கீழிருந்து மேலாக அரங்கத்தின் உயரம் 21 அடி ஆகும். வேறு அளவுகளும் உள்ளன. ஆனால், நீளத்தில் பாதி அகலம் என்பதாக இருக்கும்.

*  களரிப் பயிற்சியில் நான்கு வகைப் பயிற்சிகள் உள்ளன. அவை மெய்த்தாரி, கோல்த்தாரி, அங்கதாரி, வெறுங்கைப் பிரயோகம் என்பனவாகும்.

குருவானவர் வாய்மொழியாகப் பாடல் வடிவில் செய்முறைகளைக் கட்டளையிடுவார். அவர் கூறுவதற்கேற்பப் பயிற்சி பெறுவோர் செயல்படுவர். குருவின் கட்டளையை வாய்த்தாரி என்பர்.

மெய்த்தாரி என்பது களரிப்பயிற்சியை நன்றாகச் செய்வதற்கேற்ற வகையில் உடலைப் பக்குவப் படுத்துவதற்கான பயிற்சி முறையாகும்.

கோல்த்தாரி என்பது சிலம்பம் போலக் கம்பினைக் கொண்டு செய்யும் பயிற்சியாகும்.

அங்கதாரி என்றால், ஆயுதங்களை வைத்துச் செய்யும் பயிற்சியாகும்.

வெறுங்கைப் பிரயோகம் என்பது ஆயுதங்களின்றிக் கை, கால்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யும் பயிற்சி முறையாகும்.

குதித்துப் பறந்து தாக்குவது வட்டன் திருப்பு எனப்படும். கைகளைப் பயன்படுத்தித் தாக்குவது பில்லதாங்கி எனப்படும்.

அரப்பக்கை என்பது உடலைக் கட்டுப்படுத்தி ஆயுதமில்லாமல் செய்யும் பயிற்சி.

முதன் முதலில் மாணவர்களுக்குக் கற்றுத்தருவது மெய்ப்பயிற்று என்பது. மேலும் உடலை ஒவ்வொரு வடிவில் வளைத்துப் பன்றி, யானை, சிங்கம், மீன், கோழி, பாம்பு, குதிரை, பூனை ஆகிய எட்டு வகையான உயிரினங்கள் போன்ற வடிவங்களில் நிற்பதாகும். இதைப் பழகிய பின்னர் வரிசையாக மற்ற பயிற்சிகள் கற்றுத்தரப்படும்.

*  குழிக்களரிப் பயிற்சி அரங்கத்தின் சிறப்பம்சங்கள் : இந்தக் களத்தின் தென்மேற்கு மூலையில் கால் வட்ட வடிவில் ஏழு படிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு படியிலும் ஒரு கடவுள் இருப்பதாகக் கருதி வணங்கப்படும். இந்தப் படிக்கட்டுகள் பூத்தாரை அல்லது பூத்தாரா எனப்படும். அதற்கு அருகில் ஒரு சிறு மேடை அமைக்கப் பட்டிருக்கும். அது குருதாரை அல்லது குருதாரா எனப்படும்.

குழிக்குள் பயிற்சியாளர் இறங்கும் போது வலது காலை எடுத்து முன்வைத்து அந்தத் தரையை வணங்கிவிட்டு, பிறகு உள்ளே சென்று பூத்தாரையையும், குருதாரையையும் வணங்கி விட்டுத்தான் பயிற்சி தொடங்குவர். பயிற்சி முடிந்த பின்னும் இதேபோல வணங்கி விட்டுத் திரும்பிச் செல்லாமல் பின்னோக்கியே வந்து தரையைத் தொட்டு வணங்கிக் கொண்டு மேலே வரவேண்டும்.

பூத்தாரா எனப்படும் வழிபாட்டிடம் எல்லாப் பயிற்சியரங்குகளிலும் தென்மேற்கு மூலையில்தான் இருக்கும். காரணம், மேற்குத்திசை அமைதியைக் குறிக்கும். தெற்குத் திசை ஆற்றலைக் குறிக்கும். எனவே, அமைதி, ஆற்றல் இரண்டும் சேர்ந்த இடமாகத் தென்மேற்குத் திசையில் பூத்தாரா அமைக்கப்படுகிறது.

இதில் குருவானவர், மேற்குப்புறத்தில் கிழக்கு நோக்கி நின்று பயிற்றுவிப்பார். மாணவர்கள் மேற்கு நோக்கி நின்று பயில்வார். இது மாணவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காகச் செய்யப்படுவது.

பயிற்சி செய்யும் தரை நல்லெண்ணெயும் செம்மண்ணும் கலந்து அமைக்கப்பட்ட தரையாகும். களரியில் பயிற்சி பெறச் செல்பவர்கள், உடல் முழுதும் நல்லெண்ணெய் பூசிப் பயிற்சி பெறுவர். நல்லெண்ணெய் பூசுவது, உடலில் ஏற்படும் வலி, சுளுக்கு முதலியவற்றை நீக்குகிற மருத்துவமாகவும், சண்டைப் பயிற்சியில் எதிராளியின் பிடியிலிருந்து உருவிக்கொண்டு வருவதற்காகவும் பூசப்படுகிறது. இவர்களுக்கென்று கச்சா என்ற ஓர் உடையை நாங்கள் தருகிறோம். இது 1 அடி அகலமும், 18 முழம் நீளமும் உடையது.

*  நம்மிடம் 108 வர்மப் புள்ளிகள் உள்ளன (உடலில் 107, மற்றொன்று நோக்கு வர்மம்) இந்த இடங்களெல்லாம் களரிப் பயிற்சியின் போது பலம் பெறுகின்றன. இதனால், களரியை ஓர் உடற்பயிற்சியாகவும், மருத்துவமாகவும் பயன்படுத்துகின்றனர்.

*  களரிக்கும் கராத்தேவுக்கும் ஒற்றுமை கிடையாது. குங்பூ சண்டைப் பயிற்சிக்கும் களரிக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

*  களரி தொடர்பாகப் பல நூல்கள் மலையாளத்தில் உள்ளன. ஆங்கிலத்திலும் சில நூல்கள் உள்ளன. தமிழிலும் சில பழைய நூல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

*  களரியில் ஒற்றைக் கேடயம், இரட்டைக் கேடயம், ஈட்டி, கோடாரி, கதாயுதம், வாள், குறுவாள், வில் – அம்பு ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

ஆயுதப் பயிற்சியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். கேடயம், கோடாரி, கதாயுதம், வாள் முதலானவற்றை நம் கைகளில் பிடித்துப் பயன்படுத்தும் ஆயுதப்பயிற்சி அமுக்தம் எனப்படும்.

நம் கைகளிலிருந்து விடுபட்டுச் செல்லும் வில்-  அம்பு பயன்படுத்துவது முக்தம் எனப்படும்.

இரண்டும் சேர்ந்தது முக்தாமுக்தம் எனப்படும். ஈட்டி இதற்கு எடுத்துக்காட்டு. ஈட்டியைக் கைகளில் வைத்துக் கொண்டும் தாக்கலாம், குறிபார்த்து எறிந்தும் தாக்கலாம்.

*  களரிப் பயிற்சியில் உடலிலுள்ள எல்லாத் தசைகளும் இயக்கப்படுகின்றன. இப்பயிற்சியின் மூலம் உடல் இலேசானதாக ஆகிறது. எனவே, துப்பாக்கிக் குண்டுகள் வரும் வேகத்தை விட அதி விரைவாகச் செயல்பட முடியும். இதனால் களரி கற்றவர்கள் துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலிலிருந்து எளிதாகத் தப்பிக்க முடியும்.

 

விவேகானந்தா பல்கலைக்கழகத்தில்  2010 இல்தான்  களரிப்பயிற்சி தொடங்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவரும், களரிப்பயிற்சி குருக்கள் பரம்பரையைச் சேர்ந்தவருமான திரு. கிருஷ்ணன்தாசிக் குருக்கள் என்பவர்தான் முதலில் இங்கு கற்பித்தார். தற்போது அவர் வெளிநாடுகளில் கற்பித்து வருகிறார். ஆனால் இதைச் சான்றிதழ்ப் படிப்பாகத் தொடங்கியது 2012-இல்தான்.இதுவரை கல்லூரி மாணவர்கள் 100 பேர்களும், வெளியாட்கள் 100 பேர்களுமாக 200 பேர் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

பொதுவாக 6 வயதுக்கு மேற்பட்டவர்கள் களரி கற்றுக் கொள்ளலாம். சான்றிதழ் படிப்பிற்குக் கட்டணம் ரூ. 3 000 ஆகும். குறைந்த பட்சக் கல்வித் தகுதி 10ஆம் வகுப்புத் தேர்ச்சி என வைத்திருக்கிறோம்.

8 வார காலம் இதைக் கற்றுக் கொள்ளும் கால அளவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில் 100 மணி நேரப் பயிற்சியில் 60 மணி நேரம் செயல்முறைப் பயிற்சியும், 40 மணி நேரம் பாடநூல் படிப்பும் இருக்கும். இது முடிந்த பின் எழுத்து மற்றும் செயல்முறைத் தேர்வுகள் நடைபெறும். பாடங்கள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இருக்கும். கல்லூரி மாணவர்களுக்கு காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் வெளியாட்களுக்கு காலை 5.30 முதல் 8 மணி வரையிலும் பயிற்சி தரப்படுகிறது. இதுவே மாலை நேரப்பயிற்சி என்றால் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பயிற்சி நடைபெறும். வார இறுதி நாள் வகுப்புகளும் உண்டு. இங்கு ஆண்களுக்கு மட்டும் கற்றுத்தரப் படுகிறது.

களரி சண்டைப்பயிற்சியைப் பெற்றவர்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தி அடுத்தவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க அவர்களுக்கு  மனப்பக்குவம் கற்றுத் தரப்படுகிறது. இந்தக் கலையைக் கற்றுத் தரும் பயிற்சியைத் தொடங்கும் போதே அவர்களிடம் இதைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க சத்தியப்பிரமாண உறுதிமொழி பெற்றுக் கொண்டுதான் பயிற்சியைத் தொடங்குகிறோம்.

களரியை அழிவிலிருந்து தடுக்கத்தான் விவேகானந்தா பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதன்முறையாகக் களரிப் பயிற்சியைச் சான்றிதழ் படிப்பாகத் தொடங்கியுள்ளது. உடற்கல்விப் பட்டப்படிப்புப் படிக்கும் மாணவர்களைக் களரி தொடர்பான ஆராய்ச்சிகள் செய்ய வைத்து அதற்கு வழிகாட்டி வருகிறோம். மேலும் அவர்களுக்குப் பாடத்திட்டத்துடன் ஒரு செய்முறைப் பயிற்சியாகவும் கற்பித்து வருகிறோம். களரி இங்கு கற்றுத் தருவதைப் பற்றிக் கேள்விப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களும், மற்றவர்களும் பயில்கிறார்கள். படித்தவர்கள் மட்டுமல்ல, கட்டட வேலை செய்யும் தொழிலாளி கூடப் பயில்கிறார்.

களரியில் பொதுவான உடற்பயிற்சிப் பலனும் யோகாவினால் கிடைக்கும் பலனும் சேர்ந்து கிடைக்கும் என்று கூறுகிறார் திரு. சிவசங்கர். விவேகானந்தா பல்கலைக்கழகத்தால் களரி காக்கப்படும் என நம்பலாம். திரு. சிவசங்கர் அவர்களின் தொடர்பு எண் : 9994623937.

-omsakthionline.com