ஆடாதோடை

ஆடாதோடை-thamil.co.ukமூலிகையின் பெயர் ஆடாதோடை
தாவரப் பெயர்கள்- Adatoda Vasica Nees
குடும்பம் – Acanthaceae

வளரும் தன்மைஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

பயன்படும் உறுப்புகள்- இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

மருத்துவப் பயன்கள் 

ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை (இழுப்பு நோய்) அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், இரத்தக் கொதிப்பு, இரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வர சீதபேதி, இரத்தபேதி குணமடையும்.

ஆடாதோடைஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும்.

ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும்.

கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.

காய கற்ப மூலிகை ஆடாதோடை

மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள்.  அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள். இந்த  வகையில் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல காய கற்ப மூலிகையான ஆடாதோடை பற்றித் தெரிந்து கொள்வோம்.

இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.

ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது.  இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர்.  இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.  மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.

ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும்.  எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது.  கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்.  இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.

அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள்.  இது உடனடி நிவாரணமாகும்.

மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும்.  இது சுவாசக் காற்றை உள்வாங்கி  அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.  நுரையீரல் நன்கு செயல்பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும்.  இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது.  இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.

ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.  சளித் தொல்லை அணுகாது.  நுரையீரல் பலம்பெறும்.  மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும்.  நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.

ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும்  தொண்டைப் புகைச்சல் குணமாகும்.

ஆடாதோடை இலை, தூதுவளை,  துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 கரண்டி பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தும்மல், இருமல், சுவாச காச நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல்வளம் கிடைக்கும்.

ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால் நெஞ்சுச்சளி அறவே நீங்கும்.

ஆடாதோடை இலை     – 2,  வெற்றிலை – 2,  மிளகு – 5, சுக்கு – 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்.

இண்டு, இசங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, கஷாயம் செய்து அருந்தி வந்தால், ஈளை, இழுப்பு, இருமல், சுவாசகாசம், போன்றவை குணமாகும்.

காயவைத்த ஆடாதோடையிலை – 5, அதிமதுரம்-2 கிராம்,  திப்பிலி-1 கிராம், தாளிச பத்திரி – 1 கிராம், சிற்றரத்தை 1/4 கிராம் எடுத்து  இடித்து பொடியாக்கி அதனை 500 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து அது 200 மி.லி.யாக வரும்போது இறக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி நீங்கும்.  கோழை வெளியேறும்.  இரைப்பு நீங்கும்.

கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன்  வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் கிளி பொட்டலமாகக்  கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்.

ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இண்டு இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் மண்டைக்குத்து, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை நீங்கும்.  இந்த பொடியை தேனில் கலந்துகூட அருந்தலாம்.

ஆடாதோடை பூ-thamil.co.ukசுவாச காசம்

மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் சுவாச காச நோய் என்னும் இரைப்பு நோயும் ஒன்று. இந்த நோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அலர்ஜியும் ஒரு காரணம்.

இரைப்பு நோயின் அறிகுறிகள்
மார்பை இறுக்கியது போன்ற வலியுடனான வேதனை உருவாகும்.
மூச்சை உள்ளிழுக்கவும், வெளியிடவும் முடியாமல் திணறல் உண்டாகும்.
மூச்சு விடும்போது மெல்லிய சப்தம் உண்டாகும்.

இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை துன்புறுத்தும் சுவாச காச நோயைபோக்க பயன்படும் எண்ணிலடங்கா மூலிகைகளைப் பற்றி சித்தர்கள் அன்றே கண்டறிந்து கூறியுள்ளனர். அவற்றில் இரண்டு மூலிகைகளைப் பற்றி காண்போம்.

1.ஆடாதோடை

ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்-நாடின
மிகுத்தெழுந்த சந்நிபதின் மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி
– அகத்தியர் குணபாடம்

ஆடாதோடையை வாசை என்றும் அழைப்பார்கள். இது செடி வகையைச் சார்ந்தது.தென்னிந்தியா முழுவதும் மற்றும் வங்க தேசம் இலங்கையிலும் அதிகம்வளர்கிறது. மா இலையைப் போல தோற்றமளிக்கும். இதன் இலை, பூ, பட்டை, வேர், அனைத்தும் மருத்துவக் குணங்கள் கொண்டது .

ஆடாதோடை இலையின் சாறு 10 முதல் 20 துளி வரை எடுத்து தேனுடன் கலந்து கொடுக்க, இருமல், இரைப்பு, இளைப்பு போன்ற நோய்கள் தீரும்.

பட்டை
ஆடாதோடையின் பட்டையை பொடிசெய்து தேனில் கலந்து கொடுக்க சுரம், இரைப்பு ஆகியவை நீங்கும்.

வேர்

காசமொடு மந்தங்க கதித்தபித் தங்கொடுஞ்சு
வாசங் கழுத்து வளமுதனோய் – கூசியே
ஓடாதி ராதிங் கொருநாளு மொண்டொடியே
ஆடாதோடைத்தூருக் கஞ்சி
ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் நீரில் கொதிக்க வைத்துஅதனுடன் திப்பிலி பொடி கலந்து காலை மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் இரத்தக் கொதிப்பு மூச்சிரைப்பு இருமல் சுவாச காச நோய்கள் குணமாகும்.

ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர், சுக்கு, கொள்ளு இவற்றை சம அளவு எடுத்து குடிநீராக்கி அதில் அல்லிக் கிழங்கின் பொடியைச் சேர்த்து கொடுத்தால் இரைப்பு, இருமல் நீங்கும்.

2.அரத்தை

தொண்டையிற் கட்டுங் கபத்தைச் தூரத் துரத்திவிடும்
பண்டைச்சீ தத்தைப் பறக்கடிக்கும்-கெண்டை விழி
மின்னே ! கரப்பனைவே றாக்கும் பசிகொடுக்கும்
சொன்னோம் அரத்தைச் சுகம்
– அகத்தியர் குணபாடம்

அரத்தையில் சிற்றரத்தை, பேரரத்தை என இருவகைகள் உள்ளன. இவை இந்தியாமுழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதன் வேர் அதிக மருத்துவக் குணம்கொண்டது. இன்றும் நம் கிராமங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்க்கப்படும் செடி வகைகளில் இதுவும் ஒன்று.

இவை இரண்டின் வேர்கள் கோழையகற்றும் தன்மை கொண்டவை.

இதன் குணம்: நெஞ்சுக்கோழை, ஈளை, இருமல், நாள்பட்ட ஐயம், கரப்பான்,மார்பு நோய், வீக்கம், பல்நோய் இவற்றைப் போக்கும். நன்கு பசியைத்தூண்டும்.

சிற்றரத்தை வேரின் சிறுதுண்டை வாயிலிட்டுச் சுவைக்க தொண்டையிற் கட்டும் கோழை, இருமல், வாந்தி, இரைப்பு தணியும்.

அரத்தை பொடியை தேனுடன் கலந்து கொடுத்தாலும், அரத்தையை நன்கு இடித்துவெந்நீரில் போடடு ஊறவைத்து வடிகட்டி தேனில் கொடுத்தால் நாட்பட்ட கபம்,காசம் நீங்கும்.

அரத்தை, அதிமதுரம், தாளிசம், திப்பிலி வகைக்கு ஒரு வராகன் எடை எடுத்துநீர்விட்டு அரைத்து கால் ஆழாக்கு அளவு நீரில் கலக்கி பொங்கவிட்டு வடித்துசிறிது தேன் சேர்த்துக் கொடுக்க, இருமல், கோழைக்கட்டு சீதளம் நீங்கும்.

-மூலிகை வளம்
-nakkheeran.in