வருவாய் கொடுக்கும் சந்தன மரம்

சந்தன மரம்-thamil.co.uk“ஒரு ஏக்கரில் சந்தன மரம் வளர்த்தால், 15வது ஆண்டில், குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்” என, தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) பசவராஜூ தெரிவித்தார்.

வனத்தில் மரம் வெட்ட தடை விதித்துள்ளதால், வனமரங்களை நம்பியிருந்த தொழிற்சாலைகள், பொதுமக்களுக்கு, தேவைக்கேற்ப மரங்கள் கிடைப்பதில்லை. சுற்றுச்சூழலால் புவி வெப்பமடைவதை தடுக்கவும், மக்களின் மரத்தேவையை பூர்த்தி செய்யவும், வனத்திற்கு வெளியே, தனியார் நிலத்தில் மரம் வளர்க்கும் திட்டத்தை, தமிழக அரசு துவங்கியுள்ளது.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் நிதியுதவியுடன், தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் 2019 வரையிலும், எட்டாண்டு திட்டத்தின் மூலம், தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வறட்சி, பாசன வசதியுள்ள பகுதிகளில் வளரக்கூடிய மரங்கள் பற்றிய ஆராய்ச்சியில், வனத்துறை ஈடுபட்டுள்ளது. தனியார் நிலத்தில், மரம் வளர்க்கும் திட்டம் மூலம், 10 கோடி மரக்கன்றுகள் 1.43 லட்சம் ஹெக்டர் பரப்பில், வரும் ஐந்தாண்டுகளில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தில், 30 மாவட்டங்களில் தரிசு நிலம் அதிகமுள்ள ஐந்தாயிரம் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தரிசு நிலங்களில் மரங்களை தொகுப்பாகவும், பாசன நிலத்தில் வரப்பு ஓரங்களிலும், வளர்க்க வேண்டும். இந்த திட்டத்தில், வனத்துறை ஆராய்ச்சிப் பணிகள் 2,163 ஹெக்டர் பரப்பில் 5.55 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகின்றன.

நெடுநாள் மற்றும் மத்திய கால மரங்கள், எரி மரங்கள், வேளாண் வானிலை, மூங்கில், உயிர் உரம், மர வர்த்தகம், மரம் சாரா வன உற்பத்தி தொடர்பாக ஆராய்ச்சி பணிகள் நடக்கவுள்ளன. விவசாயிகள் சவுக்கு, கத்தி சவுக்கு, யூகலிப்டஸ் போன்ற குறுகிய கால மரங்களையும், தேக்கு, பெருமரம், மலை வேம்பு, மூங்கில், ஈட்டி, வாகை மற்றும் வேம்பு போன்ற நீண்ட கால மரங்களையும், புங்கன், பூச்சான், இலுப்பை, கடுக்காய் மற்றும் நெல்லி போன்ற மரம் சாரா வனப்பொருட்கள் தரும் மரப்பயிர்களை சாகுபடி செய்யலாம்.

வனமரங்களில் விலை உயர்ந்த மரமான, சந்தன மரத்தை, விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். ஒரு ஏக்கரில், 15 ஆண்டுக்கு, சந்தன மரம் வளர்த்தால் குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். சந்தன மரம் சோப்பு, ஊதுவர்த்தி, மருந்துகள் தயாரிக்க பயன்படுவதால், மவுசு குறையாத மரமாக உள்ளது.

15 ஆண்டுகளில் 40 செ.மீ., சுற்றளவுக்கு வளர்ந் ததும், விற்பனை செய்யலாம். சந்தனமரம் ஒட்டுண்ணி வகையை சேர்ந்ததால், தனியாக வளராது. அதனால், சந்தன மரத்தின் அருகில் எலுமிச்சை, வாகை போன்ற மரங்களை, வளர்க்க வேண்டும். அந்த மரத்தின் வேர்களில் இருந்து சத்தை எடுத்து, சந்தன மரங்கள் வளரும். ஊடுபயிர் எலுமிச்சை மூலம், நிரந்தர வருவாய் கிடைக்கும். சந்தன மரத்தின் வருவாயை போனாசாக பெறலாம்.