முள்ளங்கி

மூலிகையின் பெயர் – முள்ளங்கி
தாவரப் பெயர் – RAPHANUS
தாவரக் குடும்பப் பெயர் – BRASSICACEAE
பயன்தரும் பாகங்கள் – கிழங்கு, இலை மற்றும் விதை
வேறு பெயர்கள் – மூலகம், உள்ளங்கி.
வகைகள் -வெள்ளை முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி.

முள்ளங்கி கீரை

முள்ளங்கி-thamil.co.ukவளரியல்பு – மணற்பாங்கான இடத்திலும், வளமான மண்ணில் நன்கு வளரும். குளிர் காலத்தில் மலைப் பிரதேசங்களில் அதிக விளைச்சல் கொடுக்கும்.

முள்ளங்கி சமைத்துண்ணக்கூடிய கிழங்கினம். இதன் கிழங்குகள் முட்டை வடிவத்திலும்,  உருளை வடிவத்திலும், உருண்டை வடிவத்திலும் இருக்கும். கிழங்குகள் இளசாக இருக்கும் போதே பிடுங்கி உபயோகிக்க வேண்டும். முற்றினால் வெண்டாகிவிடும் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது.

இளசாக இருக்கும் போது செடியைப் பிடுங்கி கிழங்கைக் கழுவி விட்டுப் பச்சாயாகவே உப்பு காரம் போட்டுச் சாப்பிடுவார்கள், கடித்துத் தின்ன நன்றாக இருக்கும். இங்கு வெள்ளை முள்ளங்கிப் பயன்கள் கூறப்படுகின்றன. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றது.

மேட்டுப்பாத்தி அமைத்து மண்ணைப் பக்குவப்படுத்தி விதைகளைத்தூவி பின் 2 அங்குல மணல்போட்டு பூவாளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஈரம் அதிகம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சில நாட்களில் நாற்றுகள் வளர்ந்த பின் எடுத்துப் பார்களில் நடவேண்டும். அல்லது பார்களின் உச்சியிலும் விதை ஊன்றி முளைக்க வைக்கலாம். சுமார் 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முள்ளங்கி பிடுங்கும் தருணம் வந்து விடும். தமிழகமெங்கும் இது பயிரிடப்படுகிறது. விதை எடுக்க மட்டும் முற்ற விடுவார்கள்.

முள்ளங்கி--thamil.co.ukமருத்துவப்பயன்கள்
முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும், விதை காமம் பெருக்கும்.

சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.

முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.

இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டுவர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

‘வாதங்கரப்பான் வயிற்றெரிவு சூலை குடல்
வாதங்காசம் ஐயம் வன்தலைநோய்-மோதுநீர்க்
கோவை பன்னோய் பல் கிரந்தி குன்மம் இரைப்புக்கடுப்பு
சாவும் முள்ளங்கிக் கந்தத்தால்.’
என இதன் மருத்துவ குணத்தைக் கூறுகிறார் கும்பமுனி. இந்த முள்ளங்கியால் வாத நோய், நீர்வடியும் படையான கரப்பான், வயிற்றெரிச்சல், நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும் என்பது பாடல் கருத்தாகும்.

சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க மருத்துவ குணமுடையது.

இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.

இதன் விதையைக் குடிநீராக – கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாகும்.

முள்ளங்கி வெப்பத்தன்மையை உள்ளடக்கியது. அதே சமயம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கின்றது. ஆஸ்மா, மூச்சிரைப்பு, சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கபம் தோன்றும். அதனை முள்ளங்கி வெளியேற்றும். தொண்டைக்கட்டையும், மூக்கு– தொண்டை பகுதியில் ஏற்படும் தொற்று நோய்களையும் முள்ளங்கி குணப்படுத்தும். முள்ளங்கி சாறு 30 மில்லியுடன் சிறிது நீர் கலந்து, அரை சிட்டிகை மிளகு தூளும் சேர்த்து பருகினால் கபம் வெளியேறும்.

தொண்டை அழற்சியும் நீங்கும். முள்ளங்கி கல்லீரலுக்கு சிறந்த நண்பன். இதில் உள்ள கந்தக சத்துக்கள் பித்தநீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால் கொழுப்பு மற்றும் மா சத்துக்கள் நன்றாக ஜீரணமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது. இரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கப்படும். ரத்தத்தில் பிராணவாயுவும் அதிகமாகும். வயிற்று உப்புசம் ஏற்படும்போது பார்லி கஞ்சியுடன் 30 மிலி முள்ளங்கி சாறு 1/4 தேக்கரண்டி இந்துப்பு கலந்து பருகினால் உப்புசம் நீங்கும். ஜீரண தொந்தரவுகள் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் முள்ளங்கியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்க உதவுகின்றது. குடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கும் முள்ளங்கி மருந்தாகும். இதில் வைட்டமின்– ஈ சத்து அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சிறந்த கிருமி நாசினியாகவும், உடல் வலிகளை நீக்கும் சக்தி கொண்டதாகவும் முள்ளங்கி இருக்கிறது. புற்றுநோய் உள்ளவர்கள் முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். முள்ளங்கி, சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவுகிறது.

தினமும் 50 மிலி முள்ளங்கி சாற்றை சிறிது நீர் கலந்து சாப்பிட்டுவந்தால் சிறு நீரக கற்கள் வெளியேறும். சிறுநீரக தொற்றும் நீங்கும். இதில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரை அதிகப்படுத்தி வெளியேற்றும். அதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும். வீக்கம், உடல் வலியும் போகும். முள்ளங்கியில் போலிக் அசிட் உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கால் வீக்கம் மற்றும் கர்ப்ப காலத்தில் உண்டாகும் ரத்த அழுத்தம் நீங்கும். முள்ளங்கி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகின்றது. அதனால் சர்க்கரை நோய் இருப்பவர்கள் முள்ளங்கியை சாலட் செய்து சாப்பிடலாம். உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. இது சருமத்தை பொலிவாக்கி, இளமையை பாதுகாக்கவும் செய்யும்.

முள்ளங்கி சாப்ஸ் 

முள்ளங்கியை வழக்கம்போல் சமைக்காமல் இந்த புதுவகையான சாப்ஸ் போல் செய்தால் முள்ளங்கி பிடிக்காது என சொல்பவர்கள்கூட வேண்டுமென்று கேட்டு சாப்பிடுவார்கள்.

தேவையானவை:
முள்ளங்கி – 3
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 6 பல்
மிளகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

மிளகை வெறும் கடாயில் வறுக்கவும்.
அத்துடன் பாதி வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, மீதி வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தோல் நீக்கி, நறுக்கிய முள்ளங்கியை சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
பிறகு அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

-மூலிகைவளம்
-tamil.webdunia.com
-L Karthikeyan

தொகுப்பு – thamil.co.uk