எள்ளுச்செடி

மூலிகையின் பெயர் – எள்ளுச்செடி
தாவரப்பெயர் SESAMUM INDICUM
தாவரக்குடும்பம் – PEDALIACEAE
பயன்தரும் பாகங்கள் – விதை, பூ, எண்ணெய் முதலியன.
வேதியல் சத்து – PROTEINS – GLOBULIN.

எள்ளுச்செடி-thamil.co.ukவளரியல்பு – எள்ளுச்செடி எல்லாவித மண்ணிலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு செடி. இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா. பின் உலகெங்கிலும் பரவிற்று. ஆதிகாலத்திலிருந்து எண்ணெய் வித்துக்களில் எள்ளின் விதைதான் முதலில் தோன்றியதாகச் சொல்வர். 5000 ஆண்டுகளுக்கு முந்தியது. சைனா மற்றும் இந்தியா உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் அதிகம் செய்தது.
சைனா, தென்கிழக்கு ஆசியா, அமரிக்கா, கனடா, நெதர்லேண்டு, துரிக்கி, பர்மா, சூடான், மெக்சிகோ, நைஜீரியா, வெனிஸ்சுலா, உகந்தா, எத்தோப்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் எள் பயிரிட ஆரம்பித்தன.

எள்ளுச்செடி சுமார் 50 முதல் 100 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. ஆப்பிரிக்காவில் 6 அடி உயரங்கூட வளரும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இது 4 – 14 செ.மீ. நீளம் இருக்கும். இது தும்ப இலையை ஒத்திருக்கும். ஆனால் கொஞ்சம் பெரிதாக இருக்கும். எள் செடி வெண்மையான பூக்களை விடும். ஆனால் ஆப்பிரிக்காவில் மஞ்சள், நீலம், ஊதா நிறங்களிலும் பூக்கள் விடும். இதன் பூக்கள் தன்மகரந்தச் சேர்க்கையாலும், மற்றும் தேனீக்கள், பறவைகளாலும் அயல் மகரந்தச் சேர்க்கையால் பூக்கள் காயாக வளரும். காய்கள் நீண்டிருக்கும். 2 – 8 செ.மீ.நீளம் இருக்கும்.

எள்-thamil.co.ukஒரு விதையில் சுமார் 100 விதைகள் இருக்கும். ஒரு விதையின் எடை சுமார் 20 -40 மில்லிகிராம் எடை இருக்கும். கருப்பாக மென்மையாக இருக்கும், வெள்ளை நிறத்திலும் எள் இருக்கும். இதை வியாபார நோக்கில் பயிர் செய்பவர்கள் வளமான மண்ணை நன்கு உழுது, உரமிட்டு பாத்திகள் அமைத்து எள்ளை மணலுடன் கலந்து விதைப்பார்கள். அதன்பின் தண்ணீர் விட்டு சில நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும். பின் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுவார்கள். பின் செடி ஒரு அடி வளர்வதற்குள் களை எடுப்பார்கள். பின் செடி வளர்ந்து மூன்று அல்லது நான்கு மாதத்தில் காய்கள் முற்றி பழுக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அவைகள் அறுவடை செய்து கல் மண் இல்லாத களத்தில் கொண்டு போய் காய்கள் மேல்நோக்கி இருக்கும்படி வைத்து வெய்யிலில் உலர வைப்பார்கள்.

காய்கள் நன்கு காய்ந்து மேல்முனையிலிருந்து வெடிக்க ஆரம்பிக்கும். அப்போது செடிகளை தலைகீழாக உலர்த்தி லேசாகத் தட்டினால் எள் களத்தில் விழ ஆரம்பிக்கும். அவ்வாறு விழுந்ததைச் சேகரித்து சுத்தம் செய்து மூட்டையாகக் கட்டுவார்கள். ஆனால் இது மானாவாரியாகவும் விளையும். தமிழ் நாட்டில் நெல் அறுவடைக்குப் பின் எள்ளை விதைத்து எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். எள் விதையை ஆட்டி எண்ணைய் எடுப்பார்கள் அதுதான் நல்லெண்ணெய் என்பது.

எள்ளுமருத்தைக்கெடுக்கும் எறனலாந் திண்மைதரும்
உள்ளிலையைச் சேர்க்கும் உதிரத்தைத் – தள்ளுமிரு
கண்ணுக் கொளிகொடுக்குங் காசமுண்டாம் பித்தமுமாம்
பண்ணுக் கிடர்புரியும் பார்

எள்1 -thamil.co.ukஇது மருந்தின் செயல்பாட்டை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் நல்லெண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

எள்ளின் விதையில் உடலுக்குத் தேவையான கல்சியம், இரும்பு, விட்டமின் B1, விட்டமின் C உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. உடலுக்கு வன்மையும், குருதி பெருக்கையும் உண்டாக்கும். எள்விதை சிறு நீர் பெருக்கும். மாதவிலக்குத் தூண்டும், மலமிளக்கும், தாய்ப்பால் அதிகரிக்கும், உடலுரமாக்கும்.

எள்ளில் கருப்பு எள் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளுவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

எள் விதை-thamil.co.ukமருத்துவப்பயன்கள்
எள் செடியிலிருந்து உண்டாகும் விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் நல்ல மருத்துவ குணமுடையது. அதன் செய்கை மலமிளக்கி, உள்ளழலாற்றி, சிறுநீர் பெருக்கி செயலாற்றும். இதன் மருத்துவ குணம் அதிகம் ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் மருந்துகள் செய்ய துணை மருந்தாகப் பயன்படுகிறது.

இதில் மகனீசியம், காப்பர், கல்சியம் மற்றும் விட்டமின் B1, E, A போன்றவை உள்ளன. இது கப, பித்த, வாத, மூலநோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், அனிமியா, தோல் நோய்கள் குணப்படுத்த வல்லது.

அந்தக் காலத்தில் ஆண்கள் புதன் கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் இந்த எண்ணெய் தேய்த்து உலரவிட்டுப் பின் குளிப்பார்கள். பெண்கள் வெள்ளிக் கிழமை நாளில் இந்த எண்ணெயைத் தலை, உடம்புக்குத் தேய்த்துக் குளிப்பார்கள். சனி நீராடு என்ற பழமொழியும் உண்டு. இதன் நோக்கம் உடல் சூடு குறைக்க வேண்டியும், உடல் மென்மை பெற வேண்டியும் ஆகும்.

பாபிலோனியாவில் பெண்கள் இந்த எண்ணெயைத் தான் அழகு சாதனமாகவும் உடம்பை மசாஜ் செய்யவும் பயன் படுத்தியுள்ளார்கள்.

எள்2-thamil.co.ukஎள்ளில் இனிப்புச் சேர்த்து எள் உருண்டை செய்து ரோமானிய படைவீரர்கள் சக்திக்காகவும் பலத்திற்காகவும் சாப்பிட்டுள்ளார்கள்.

இந்த எண்ணெய் இறைவனுக்கு விளக்கு ஏற்றப் பயன்படுத்தி உள்ளார்கள். இறந்தவர்களின் மத சடங்குகளில் எள்ளைப் பயன்படுத்தி உள்ளார்கள். ரொட்டிக்கு மேல் எள்ளை வைப்பார்கள்.

மேலும் மெழுகுபத்தி, சோப்பு, பெயிண்ட், செண்ட், பூச்சிக் கொல்லி மருந்து செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் சமையலுக்கு இதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

கண் எரிச்சல் நீங்க
இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.. கண்ணில் சதா எரிச்சல் இருந்து கொண்டே இருந்தால், தேவையான அளவு எள்ளுப்பூவைக் கொண்டு வந்து, அதை ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இளஞ்சூடாக இருக்கும் போதே, இரவு படுக்கும் முன், அதை இரு கண்களையும் மூடிக் கொண்டு சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்துக்கொண்டு கட்டிக் கொண்டு உறங்கி, காலையில் எழுந்த பின் கட்டை அவிழ்த்து பூக்களை எடுத்து விட்டுக் கண்களைக் கழுவிக் கொள்ளவேண்டும். இந்த விதமாக மூன்று நாட்களுக்குக் கட்டினால் போதும். கண் எரிச்சல் மாறிவிடும்.

இதன் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும். இலைகள் எரிச்சல் தணிக்கும்.

கண் பார்வை தெளிவடைய

நாற்பது எள்ளுப்பூ, மிளகு ஒன்பது, அரிசித் திப்பிலி இருபது, சம்பங்கி மொக்கு இருபத்தைந்து இவைகளை வெய்யிலில் போட்டுச் சருகு போல காயவைத்து, உரலில் போட்டு இடித்து, துணியில் சலித்து ஒரு சுத்தமான சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை மிளகளவு தூளைக் கண்களில் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். மருந்தை கண்களில் போட்டவுடன் எரியும், கண்ணீர் வடிய விட்டால் கண் எரிச்சல் தணிந்து விடும். தொடர்ந்து ஏழு நாட்கள் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

தலைமுடி பாதுகாப்பு
ஒரு கைப்பிடியளவு எள்ளுச் செடியின் இலையை எடுத்து அளவான நீரில் 10-20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின் இறக்கி ஆறவைத்து, இலைகளை எடுத்து விட்டு அந்த நீரை தலைக்கு இட்டுத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் உதிர்வதும், இளநரை ஏற்படுவதும் தவிர்க்கலாம்.

இலைக் கொத்தை நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாகத் தடித்து காணப்படும். இதனைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு ஆகியவை தீரும். பெரியவர்களுக்கு நீர்க்கோவை, சிறுநீர்ப்பை அழற்சி, சொட்டுநீர் (சொட்டு சொட்டாக சிறுநீர் போதல் ) ஆகியவை தீரும்.

இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.

எள்ளுவின் இலையையும் வேரையும் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.

எள்ளை அரைத்துக் களிபோலக் கிளறி இளஞ்சூட்டில் கட்டிகளின் மீது பூசி வர பழுத்து உடையும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உணவுப் பொருளாக பயன்படுகிறது. இதன் பயன்கள் அளப்பறியது. அது பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

கருவுற்ற பெண்கள் எள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். எனவே எள்ளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த எள் கருக்கலைப்பு மருந்துகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. சுவாசக் கோளாறுகளை நீக்கும்.

(வெட்டுக் காயங்களில் நல்லெண்ணெய் பட்டால் தேவையற்ற சதை வளரும். அதனால் காயங்களில் நல்லெண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்)

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.

காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும், ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.

5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.

நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோல் கழன்று வெந்நிறமாகும்.

எள்ளை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இந்நேரம் தவிர்க்க வேண்டும். தினமும் பாகற்காய் உணவில் சேர்க்கலாம்.

-மூலிகைவளம்

கொள்ளையினிய எள்ளுப்பாகு

எள்ளுப்பாகு யாழ்ப்பாண மக்களின் தனித்துவமானதொரு உணவு வகையாகும். நன்றாகப் புடைத்த எள்ளை ஓரளவு கோது நீங்க கழுவியபின் எறிக்கும் சூரிய வெய்யிலில் காய விட்டு உரலில் போட்டு நன்றாக இடிக்கப்படும்.  இடிக்கப்பட்ட எள்ளுடன் சுத்தமான பனங்கட்டி மற்றும் மிளகு சீரகம் என்பனவும் சேர்த்து இடிக்கப்படும்.

பனங்கட்டி எள்ளுடன் சேர்ந்ததும் எண்ணெய் கசியத் தொடங்கும். அவ்வேளையில் இனிய வாசனை எழத்தொடங்கும். பின்னர் எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டு உருண்டைகளாக பிடிக்கப்பட்டும். இவ்வுருண்டைகள் தம் உறவினரிடையே பரிமாறப்படும். இனிய சுவைமிகுந்த, மிகுந்த சத்து நிறைந்த இவ்வுணவு நீண்டநாட்கள் பழுதடையாமல் இருக்கக்கூடியது. யாழ்ப்பாண மக்களின் விருந்தோம்பல் பண்பில் இதுவும் ஒரு சிறந்த உணவாகும்!

எள்ளுப்பாகு இலங்கை மக்களிடையே மிகவும் பிரபல்யமான ஓர் உணவு வகையாகும். இதை இலங்கையில் பெரியபிள்ளையான(வயதிற்குவந்த (ருதுவான))குழந்தைகளுக்கு சத்துமிக்க உணவாக எள்ளுப்பாகு கொடுக்கப்படும். அத்துடன் இதை நெஞ்சுதிடமாக(தையரியமாக) இருப்பதற்கும் கொடுப்பார்கள்.

கறுப்பு எள்ளு அதிகமான மருத்துவப் பண்புகளை கொண்டது. அத்துடன் கறுப்பு எள்ளில்அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள எள்ளின் வகைகளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்து உள்ளது.

எள்ளுப்பாகு

1.தேவையானபொருட்கள்
துப்பரவாக்கிய எள்ளு 250 கிராம்
இடித்தரித்தசீனி – 150 கிராம்
நெய் – ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய்த்தூள் – ஒரு தேக்கரண்டி

அடுப்பில் தாட்சியை வைத்து  சூடாக்கி அதில் எள்ளை போட்டு மெல்லிய பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். வறுத்த  எள்ளை உரலில் இட்டு சீனியும் சேர்த்து  இடிக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் நெய்யை விட்டு சூடாக்கவும். சூடான நெய்யை இடித்த கலவையில் ஊற்றி ஏலக்காய்த்தூளும் சேர்த்து இடித்து ஓரளவு பெரிய உருண்டைகளாக பிடிக்கவும்.  சுத்தமான சுவையான சத்தான எள்ளுப்பாகு தயார்.

2.தேவையான பொருட்கள்
எள்ளு 500 கிராம்
சீனி உங்கள் விருப்புக்கு ஏற்றவாறு (500 கிராம்)
உழுத்தம்மா 200 கிராம் 

முதலில் ஒரு மிக்சியில் பாதி எள்ளை இட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள் நன்றாக அரைபட்டபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு மீதி எள்ளையும் முன்பு அரைத்தது போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் . பின் உழுத்தம்மா சீனி அரைத்த எள்ளு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளுங்கள். மீண்டும் மிக்சியில் நீங்கள் கலந்த கலவையை நன்றாக அரைபடக்கூடிய அளவு போட்டு சிறிதுநேரம் நன்றாக கலந்து கொள்ளுமாறு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாற்றையும் அரைத்து முடித்தபின் நன்றாக கொதித்த வெந்நீரை கலவையினுள் விட்டுக் கொள்ளுங்கள் கலவையை களி போன்றவரும் வரை வெந்நீர் சேருங்கள். கொஞ்சம் கூடினால் சிறிது நேரம் விட்டுவிட்டால் இறுக்கமாக வந்துவிடும். பின் உங்களுக்கு விரும்பிய அளவில் உருண்டைகளாக செய்து கொள்ளுங்கள். நீங்கள் உருண்டைகளை இறுக்கமாக பிடிக்கும்போது அதிலிருந்து எண்ணை வரும் .

எள்சங்க இலக்கியத்தில் எள்

எள் (Sesamum Indicum) ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு (இதில் இருந்து எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்). எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனபப்டுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

மருந்துப் பண்புகள்
கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.

இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.

எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை இலேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூலநோய் குறையும்.

தோலில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.

நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அணுகாது.

கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.

வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.

எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.

தமிழில் சங்க காலம் முதலே எள் பற்றிய குறிப்புகள் உண்டு. எள் பற்றிய வினைச் சொற்கள், பெயர்ச் சொற்கள், பழமொழிகள் ஆகியவற்றைப் பார்க்கையில் தமிழர்களின் வாழ்வில் எள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டறக்கலந்த ஒரு பண்டம் என்பதும் புலனாகிறது. கீழே விவரங்களைக் காண்க:

எள்ளல்= கேலி செய்தல், மட்டம் தட்டுதல்
எள்ளி நகையாடுதல்= நகைப்புரியவனாக்குதல், அவமானப்படுத்தல்
எள் அளவும் சந்தேகம் இல்லை= ஒரு துளியும் சந்தேகம் இல்லை
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை= மிகவும் மலிவான பொருள்
கூட்டத்தில் எள் போட இடம் இல்லை= நெருக்கமான கூட்டம், கொஞ்சமும் இதம் இல்லை. அவ்வளவு கூட்டம்! எள்ளுப் போட்டால் எண்ணெய் ஆகிவிடும்!= எள் நசுக்கப்படு எண்ணை வெளியேறும்.

சங்க இலக்கியத்தில் எள்
அகம்-71, கலி-35-23, குறுந்த்- 112, புற—174, 246, 313, 321, மலை-562.. இதுதவிர, எள்ள, எள்ளப்படு, எள்ளல், எள்ளலன், எள்ளலான், எள்ளார், எள்ளி, எள்ளிய, எள்ளினும், எள்ளீயும், எள்ளு, எள்ளுக, எள்ளுதல், எள்ளுநர், எள்ளுபு, எள்ளும், எள்ளுமார், எள்ளுவாய், எள்ளுற்று என்று பல வினை சொற்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் இருப்பதால் எள் என்பது இந்தியாவில் தோன்றி வெளிநாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பது என் முடிவு. எள் என்பதில் இருந்தே எளிய, எளிமை முதலியன வந்ததா என்பதும் ஆய்வுக்குரிய விஷயங்கள். திருவள்ளுவரும் 281, 470, 1298 முதலிய குறள்களில் எள்ளைப் பயன்படுத்துகிறார்.

புறநானூற்றில் எள் துவையல்
பூதப் பாண்டியன் இறந்தவுடன் கணவனின் சிதைத் தீயில் பாய்ந்து உடன்கட்டை ஏறமுயன்ற கோப்பெருந்தேவியை (மஹா ராணியை) சான்றோர்கள் தடுத்து நிறுத்தமுயன்றனர். இதனால் மிகவும் கோபம் அடைந்த தேவியார் ஒரு அழகான பாட்டைப் பாடி அவர்களை நிந்தித்துவிட்டு தீயில் பாய்ந்தார். அந்தப் பாட்டில் “என்னை நெய் இல்லாத தண்ணீரில் ஊறவைத்த சோறும், புளிச்ச கீரையும், எள்ளுத் துவையலும் சாப்பிடும் பெண் என்று நினைத்து விட்டீர்களா?” என்று சாடுகிறார். இதிலிருந்து அக்கால உணவுப் பழக்கங்களும் தெரியவருகிறது.

சூடாமணி நிகண்டு எள், நூ, எண் ஆகிய மூன்று பெயர்களை எள்ளுக்குத் தருகிறது. எள் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த எல்லா வினைச் சொற்களும் மட்டமான பொருளிலேயே (எ.கா. எள்ளி நகையாடுதல்) வரும். ஆனால் எள்ளின் மகிமை தெரிந்த பின்னர் இனிமேல் எள்ளை மதிப்புடன் நடத்துவோம்!!

• படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.

• காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும், ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.

• 5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.

• இரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து தடவினால் விரைவில் குணமடையும்.

• நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோல் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இந்நேரம் தவிர்க்க வேண்டும். தினமும் கற்காய் உணவில் சேர்க்கலாம்.

-நான்காம் தமிழ்ச் சங்கம்