நவராத்திரி விரத மகிமை

நவராத்திரி-thamil.co.ukநவம் என்பது ஒன்பதாகும். புரட்டாசி மாதப் பிரதமை தொடங்கி நவமி வரை வரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி விரத காலமாகும். அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

*முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் வேண்டியும்,

*அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும்,

*கடைசி மூன்று நாட்கள் ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

புரட்டாசி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.

புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன் வித்யாகாரகன் என்று அழைக்கப்படுகிறான். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய இந்த புதனின் பார்வை மிகவும் முக்கியமானது. எனவே தான் இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது மிகவும் சிறந்தது என கருதுகின்றனர்..

நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பது தான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் முக்கிய தத்துவம் ஆகும். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பது உறுதியாகும்.

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.

சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.  இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.

இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.

அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.  துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

(பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் கொடுப்பது வழக்கம்..!)

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.