பழந்தமிழ் இசை- தமிழ் இசையின் வடிவங்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் 
பழந்தமிழ் இசை – இரண்டாம் பாகம்

தமிழ் இசையின் வடிவங்கள்
கலைவாணி“ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்”

கலைவாணியின் அருளோடு… “இசையமுதம்!” எனும் இந்த அற்புதமான இனிய தொடரை வழி நடத்திச் சென்று இனிதாக நிறைவேற்றி வைப்பேன் என்ற எண்ணத்தில் என்மீது அதிக நம்பிக்கை வைத்து என்னைத் தொடர்ந்து வருவதோடு எனக்கு ஆக்கம் ஊக்கமும் அளித்து வழிநடத்திச் செல்லும் உறவுகளுக்கு நான் இங்கே நன்றி கூறுகின்றேன். முதலாவது பாகத்தில் தமிழிசைக் கருவிகள் பற்றி விரிவாகப் பார்த்தோம். இரண்டாவது பாகத்தில் தமிழிசையின் வடிவங்கள் பற்றிப் பார்ப்போம்.

உயிரும் உடம்பும் போன்றது தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு. இசை என்பது அழகாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலியின் வடிவமாகும். வடமொழியில் இதனையே “நாதம்” என அழைப்பர்.

இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்றும் பொருள் உண்டு. மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் இசையால் பணியவைக்கின்ற ஓர் அரும்பெரும் சாதனம் இசையாகும். இசையை “சிரவண கலை” எனவும் அழைப்பர்.

படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. பழந்தமிழ் இசை என்பது மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும்.

சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகும். பழந்தமிழ் மக்கள் வேறுஇன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத்தொடங்கின.

இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.

முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்னும் மூன்றாகும். இதில் இயற்றமிழ் பண்ணோடு புணர்ந்து தாளத்தோடு நடைபெறும்போது அது இசைத்தமிழாக உருவெடுக்கிறது. அத்தகைய தமிழிசை, தமிழனின் வாழ்வியலோடு பண்டு முதல் பின்னிப் பிணைந்து வந்திருக்கிறது.

தமிழ் இசைவடிவங்களுட் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை ஆகும். நூற்றாண்டுகளினூடாக சீர்செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை. கிராமிய, உள்ளூர் இசை மரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருவனவாக உள்ளன.

இத்தகைய இசை மரபுகள் வருமாறு
1.கருநாடக இசை
2.கிராமிய இசை
3.பழந்தமிழ் இசை
4.இந்துஸ்தானி இசை

கருநாடக இசை
கருநாடக இசை அல்லது பண்ணிசை தென்னிந்திய இசையின் வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும்.

செம்மொழியில் ஏழிசை என:
குரல்,
துத்தம்,
கைக்கிளை,
உழை,
இளி,
விளரி,
தாரம் என தமிழ்மொழியில் அழைக்கப்பட்டதையே வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளைச் ‘ஸ்வரம்’ என்றழைத்தனர்.

கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது.
ஷட்ஜம்,
ரிஷபம்,
காந்தாரம்,
மத்திமம்,
பஞ்சமம்,
தைவதம்,
நிஷாதம் என்ற இவ்வேழு ஸ்வரங்களும் ஸ – ரி – க – ம – ப – த – நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

கிராமிய இசை
கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப்பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு.

பழந்தமிழ் இசை
பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசை எனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ்மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது.

இந்துஸ்தானி இசை
இந்துஸ்தானி இசை வட இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் சங்கீதப் பாரம்பரியமாகும். கருநாடக இசை போலவே இங்கும் தாளம், இராகம் முக்கியமான அங்கங்களாகும். வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும்.

13ம் நூற்றாண்டில் சாரங்கதேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும்.

தமிழிசை வடிவங்கள்
தமிழிசை
நாட்டுப்புற இசை
கர்நாடக இசை
மெல்லிசை
திரையிசை
தமிழ் ராப் இசை
தமிழ் பொப் இசை
துள்ளிசை
தமிழ் ராக் இசை
தமிழ் கலப்பிசை

நன்கு வளம் பெற்ற இசை தமிழிசை ஆகும். இது தமிழின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கின்றது. தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கியகூறு. இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி, இசைக்கு முன்னுரிமை தொன்றுதொட்டு தரப்பட்டது.

பண்டைய பண் இசை, செவ்வியல் தமிழ் இசை, பக்தி இசை, நாட்டார்இசை, திரையிசை, சொல்லிசை எனத் தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உண்டு. வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.

இயல், இசை, நாடகம்-thamil.co.ukகிராமிய இசை வடிவங்கள்
கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப் பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு. நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலானவற்றை யார் எழுதினார்கள் என்று அறிதியிட்டுக் கூற முடியாது. காலம் காலமாக, வாய்மொழியாக, வாழ்கையின் பகுதியாக பாடப்பற்றனவே இந்த நாட்டுப்புறப் பாடல்கள். தொட்டில் முதல் சுடுகாடு வரை கிராமியப்பாடல்கள் பாடப்படுகின்றன.

கிராமியப்பாடல்கள் பலவகைப்படும்
ஒரு தாய் கருவுற்றால் நலுங்குப் பாட்டு,
குழந்தை பிறந்ததும் தாலாட்டுப் பாடல்,
சிறு வயதில் நிலாப்பாடல்,
இள வயதில் காதல் பாடல்,
திருமணத்திற்கு திருமணப் பாடல்,
மரணமடைந்தால் ஒப்பாரிப் பாடல் என்று தமிழனின் வாழ்வு பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றியிருந்திருக்கிறது.

ஒழுக்கப்பாட்டு, வேதாந்தப்பாட்டு, பழமொழிப்பாட்டு, இறைவணக்கப்பாட்டு, ஆரத்தி, ஊஞ்சல், மசக்கை, நோன்பு, சடங்கு முதலியவை குறிப்பிட்ட காலங்களில் பாடப்படுவன.

புதிர்ப்பாட்டு, கோமாளிப்பாட்டு, கும்மி, கோலாட்டம் முதலியவை ஓய்வுகாலங்களில் மன உற்சாகத்திற்காகப் பாடப்படுபவை.

உழவுப்பாட்டு, நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, தெம்மாங்கு முதலியவை வேலை செய்யும்போது பாடப்படுபவை.

மழைப்பாட்டு, பிரார்த்தனைப்பாட்டு, பூசாரிப்பாட்டு, புராணப்பாட்டு, விழாப்பாட்டு, என்பவை சில சந்தர்ப்பங்களுக்காகப் பாடப்படுபவை.

நிலத்தை உழுது பயிரிடும்போதும், உணவுக்காக நெல்லைக் குற்றும்போதும், சுமை சுமந்து செல்லும்போதும், களைப்பின்றி நடக்கவும் ஆணும் பெண்ணும் பாடினர். அறுவடையிட்டு பொங்கலிட்டு ஆண்களும் பெண்களும் அகமகிழ்ந்து ஆடிப்பாடினர். நெடுஞ்சாலையில் வண்டிப் பயணத்தின்போது தென்பாங்குப் (தெம்மாங்கு) பாட்டுபாடி பயமின்றிப் பயணம் செய்தனர்.

தொன்று தொட்டு பாடி வந்துள்ள தமிழ் இசைப்பாட்டு வகைகளில் சில
கானல்வரி, கிளிப்பாட்டு, குயில் குரவை, குறத்தி, கூடல், பல்லாண்டு, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பொற்சுன்னம், முகச்சார்த்து, வள்ளைப்பாட்டு, சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, கோலாட்டம், ஆனந்தக்களிப்பு, கீர்த்தனம் முதலியன.

நாடோடி இசைப்பாடல் வகைகள்
ஓடப்பாட்டு, காவடிப்பாட்டு, கப்பற்பாட்டு, படையெழுச்சி, கல்லுளிப்பாட்டு, பாவைப்பாட்டு, வைகறைப்பாட்டு, மறத்தியர் குறத்தியர் பாட்டுகள், பள்ளுப்பாட்டு முதலியன.

கீழே உள்ளவை தமிழ் நாட்டுப்புறக் கலைகளில் இன்னமும் வழக்கிலுள்ளவை. இவைகளில் பெரும்பாலானவை நிகழ்த்தப்படும்போது இசையோடு சேர்ந்து பாடலும் கேட்பவர் மனம்கவரும் வகையில் பாடப்படும்.

ஒயிலாட்டம்
கோலாட்டம்
கரகாட்டம்
காவடி ஆட்டம்
கும்மி
வில்லுப்பாட்டு
தெருக் கூத்து
பாவைக் கூத்து (பொம்மலாட்டம்)
பொய்க்கால் குதிரை ஆட்டம்
மயிலாட்டம்
உறியடி விளையாட்டு (கண்ணன் விளையாட்டு)
குறவன் குறத்தியாட்டம்

பழந்தமிழ் இசை- தமிழ் இசையின் வடிவங்கள்

நாட்டார் பாடல்கள்
நாட்டார் பாடல்கள்-thamil.co.ukநாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலானவற்றை யார் எழுதினார்கள் என்று அறிதியிட்டுக் கூற முடியாது. காலம் காலமாக, வாய்மொழியாக, வாழ்கையின் பகுதியாக பாடப்பட்டு வந்தவையே இந்தப் நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும்.

இன்று எமக்கு எழுத்தில் கிடைப்பவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், அதற்குப் பின்பும் சில அறிஞர்களின் அயராத உழைப்பினால் ஆவணப்படுத்தப்பட்வை ஆகும்.

நாட்டார் பாடல்களைப் பற்றி பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் நா.வானமாமலை அவர்களின் ஆய்வு குறிப்பிடத்தக்கதாகும். அவர் தொகுத்த நாட்டார் பாடல்களை தமிழர் நாட்டுப் பாடல்கள் என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.

தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும்.

சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மக்களிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம்.

சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்களின் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப் பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன.

பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டு தமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.

நாட்டுப்பாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்தியுள்ளார்.

இவருக்கு முன்னதாக கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றுக்கான நாட்டுப்பாடல்களை இயற்றியுள்ளனர்.

பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும். மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவை இயற்றப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்.

தாலாட்டுப் பாடல்
தமிழ் இசையின் வடிவங்கள் -thamil.co.ukகுழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு ஆகும். நாட்டார் பாடல் வகைகளில் தாலாட்டு முதன்மை பெறுகிறது.

வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன.

தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடும் அவர்களின் உணர்வுகளோடும் பின்னிப் பிணைந்திருப்பதனால் சிறப்புப் பெறுகின்றன. இவை மிகவும் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்மறந்து தூங்குகின்றது.

“தால்” என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் என வழங்கலாயிற்று. ஒரு தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுகிறாள்.

ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும். தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் இனிய சந்தங்களாக அமைகின்றன.

நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு.

குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருட்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் மிக அற்புதமான உவமை, உருவக அணிகள் கையாளப்படுகின்றன.

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்

தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்

அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்

மாமன் அடித்தானோ
மல்லிகைப்பூச் செண்டாலே

அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே

பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் இந்த அற்புதமான நாட்டுப்புற இசைவடிவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை வீட்டு இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்கும் தமிழிசையால் அமுதூட்டி தாய் தாலாட்டுகிறாள்.

காட்டு வெள்ளம்போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள், பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத்தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக் கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர்.

சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருவது தவிர்க்க முடியாததாகின்றது!

காதல் பாடல்கள்
காதல் பாடல்கள் -thamil.co.ukமண்ணின் மணம் கமழும், மனத்தைக் கொள்ளை கொள்ளும் நாட்டார் பாடல்களில், காதல் பாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

நால்வகை நிலத்திற்கேற்ப நால்வகைத் தொழில்கள் நிகழ்ந்தன. வேட்டைத்தொழில், மேச்சல் தொழில், உழவுத் தொழில், கடல் தொழில் ஆகும். தங்களின் கடும் உழைப்பினால் வரும் களைப்பினைப் போக்க ஆடிப் பாடினர்.

தெம்மாங்கு பாடித் தேன்மாரி சொரிந்தனர். ஆட்டமும் பாட்டமும் இசையோடு நிகழ்ந்தன. இப்பாடல்கள் கிராமங்கள் தோறும் தோன்றின.

பாட்டாளி மக்கள் பாடுபட்டுத் தேடித்தந்த சொத்துக்களில் நாடோடி இலக்கியங்களும் ஒன்று. இத்தகைய நாடோடி இலக்கியத்தை தமிழ்ச் சமூகம் அறிந்து போற்ற இப்போதுதான் முயன்று வருகிறது. மேலைத் தேசங்களில் அவை நூல்வடிவங்கள் பெற்றுமுள்ளன.

இளங்கோ அடிகள் தமது செந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் நாடோடிப்பாடல்களின் சாயலில் பல கவிகள் தந்துள்ளார்.  மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் பல நாட்டுப் பாடல்களின் மெட்டுக்கள் தொனிக்கின்றது.

கதைகள், இசைப்பாடல்கள், கவிதைகள், பழமொழிகள், விடுகதைகள் அல்லது நொடிகள், தாலாட்டுக்கள், கும்மிப் பாடல்கள், ஊஞ்சல் பாடல்கள், கப்பற்பாட்டுக்கள், பாலர் விளையாட்டுப் பாடல்கள்.. இன்னும் பல இவ்வகையினுள் அடக்கம்.

பாரதியாரும் இவ்வகைப் பாடல்களில் மனதைப் பறிகொடுத்திருக்கின்றார்.
“மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன்…”

“ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்”

“நெல்லிடிக்கும் கோற்றொடியார் குக்குவெனக்
கொஞ்சும் ஒலியினிலும்”

“பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்”

“வட்டமிட்டுப் பெண்கள்
வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர்
கூட்டமுதப் பாட்டினிலும்

நாட்டினிலும் காட்டினிலும்
நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப்
பறிகொடுத்தேன் பாவியேன்”
இந்தக் கிராமிய மெட்டுக்களில் பாரதியும் தன்மனதைப் பறிகொடுத்திருக்கின்றார்.

தண்ணீர் அள்ளப் போகும்போதும், தோட்டத்தில் நடமாடும் போதும், தாய் தந்தையர் வீட்டில் இல்லாத சமயங்களிலும், வெற்றிலை பாக்குத் தேடிக் கேட்கும்போதும், காதலர் சந்திப்பார், காதல் மொழிகள் பேசுவர். தெருநீளம் மறுகி மறுகி மான் வெருட்சி காட்டி நடக்கின்றாள் தலைவி. அவள் வருகைக்காக நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றான் தலைவன்.
“அன்புக் களஞ்சியமே
அழகொழுகும் சித்திரமே
கற்புக்கணிகலமே உன்னைக்
காணவென்று காத்திருந்தேன்”

தலைவியின் கண்கள் மட்டுமே பேசின. ஆனால் வாயடைத்திருந்தது. அவளின் திருவாய் மலரச் செய்வதே தலைவனின் நோக்கம்.
“வாழைப்பழமே
வலது கையிற் சக்கரையே
ஏலங் கராம்பே உன்னை
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்

மாமி மகளே
மருதங்கிளி வங்கிசமே
ஏலங் கராம்பே உன்னை
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்”

தலைவியைப் பேச வைக்க இப்படிப்பல மாயங்கள் செய்கின்றான்.வெறும் முறுவலன்றிப் பேச்சேதும் வருவதாயில்லை. தலைவனுக்கோ நாவும் வறண்டுவிட்டது. அவளும் தண்ணீர்தானும் கொடுத்தாளுமில்லை. தலைவன் இன்னொரு ஜாலம் செய்கின்றான். அவளது பொட்டழகையும் சட்டையினழகையும் பாடுகின்றான்.
“சட்டை போட்டுப் பொட்டுடெழுதி
தண்ணி கொண்டு போறவளே
சட்டை போட்ட கையாலே
கொஞ்சம் தண்ணீர்தா கண்மணியே”

இது உண்மையான தாகமல்ல. தன்னுடன் கதைபழக வந்த தாகம் என்று தலைவியறிவாள். தெருவில் பழகுவதை அவள் விரும்பவில்லை.
“ஓடையிலே போற தண்ணி
தும்பி விழும் தூசி விழும்
வீட்டுக்கு வாங்க மச்சான்
வெந்த தண்ணி நான் தருவேன்”
இவ்வாறு மறுப்புரைத்து மெல்ல நடைபோட்டு அசைந்து போகின்றாள்.

“தண்ணிக் குடமெடுத்து
தனிவழியே போற கண்ணே!
தண்ணிக் குடத்தினுள்ளே
தளும்புதடி என்மனசு”
தலைவியிடம் தொடர்ந்து வீடு செல்லும் வழிதேடுகின்றான்.

“சுற்றிவர வேலி
சுழலவர முள்வேலி
எங்கும் ஒரே வேலி
நான் எங்காலே வந்திடட்டும்?”
தலைவியும் வழி சொல்லி வைக்கின்றாள்

“வெத்திலையைக் கைப்பிடித்து
வெறும் பிளவை வாயிற்போட்டு
சுண்ணாம்பு தேடி நீங்க
சுற்றி வாங்க மச்சானே”

அதைவிடுத்து தலைவியைத் தான் விரும்பும் இடத்துக்கு அழைக்கின்றான்.
“அக்கரையிற் கொக்கே
அணில்கோதா மாம்பழமே
இக்கரைக்கு வந்தியென்றால்
இனிச்சகனி நான் தருவேன்”

இவ்வாறாக நாட்டுப் பாடல்களில் ஓசையும் இனிமையும் இசையும் மலிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் ஆவணப்படுத்தி அடுத்த சந்ததிக்கு கையளிக்க வேண்டியது மொழியையும் இனத்தையும் நேசிக்கும் எமது கடப்பாடாகும்.

வில்லுப்பாட்டு
வில்லுப்பாட்டுமண்ணின் மணம் கமழும், மனத்தைக் கொள்ளை கொள்ளும், நாட்டார் பாடல்களில்  காதல் பாடல்கள் பற்றிப் பார்த்தோம்.

தங்களின் கடும் உழைப்பினால் வரும் களைப்பினைப் போக்க ஆடிப் பாடினர். தெம்மாங்கு பாடித் தேன்மாரி சொரிந்தனர். ஆட்டமும் பாட்டமும் இசையோடு நிகழ்ந்தன. பாட்டாளி மக்கள் பாடுபட்டுத் தேடித்தந்த சொத்துக்களில் வில்லுப்பாட்டும் ஒன்று.

தந்தனதோம் என்று……
இசை
பல்லவி
தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட……
வில்லினில் பாட…..

வந்தெழுந்து காத்தருள்வாய்
கணபதியே
வந்தெழுந்து காத்தருள்வாய்

வந்தனங்கள் செய்து மகிழ்ந்தோம்….
ஆமா…
வந்தனங்கள் செய்து மகிழ்ந்தோம்….

தானதந்தத்தோடு ஏழு சந்தங்களும் தாளத்தோடு…
தானதந்தத்தோடு ஏழு சந்தங்களும் தாளத்தோடு…

பானபம்பை ஊரு மிட்டக்கை துதும்பி ஓடு..
பானபம்பை ஊரு மிட்டக்கை துதும்பி ஓடு..

அத்தனையும் மேளத்தோடே
அத்தனையும் மேளத்தோடே

ஒரு வாத்தியம் ஆயுதமாகும் விந்தை!!
வில்லுப்பாட்டுநீண்டு செல்லும் வில், அதன் இரு முனைகளிலும் தளர்வாகக் இணைக்கப்பட்ட நூல் நரம்பு. அதில் அழகாகக் கோக்கப்பட்ட மணிகள். அந்த வில் தரையில் கிடத்தப்பட்டிருக்கிறது. அதன் நடுப்பகுதி பக்கவாட்டில் பெண்கள் இருவர் அடுத்தடுத்து அமர்ந்திருக்கின்றனர். வில்லின் கடைக்கோடியில் ஒரு குடத்துடன் ஒருவர். இவர்களுக்குப் பின்னணியில் சில கலைஞர்கள்… சட்டெனக் காதில் பாய்கிறது கம்பீரக் குரல்…

“தந்தனத்தோம் என்று சொல்லியே,
வில்லினில் பாட…” என ஒருவர் தொடங்க, மற்றவர்கள் “ஆமாம்..!’ என்று ஆரம்பிக்கும்போதே அரங்கில் உற்சாகம் பொங்குகிறது.

இறைவணக்கம், விருத்தம், வருபொருள் உரைத்தல் எனப் பல்வேறு பரிமாணங்களில் புராணக் கதையை அழகான பாடல் வரிகள் மூலம் எடுத்துச் சொல்லுகிறார் பெண்மணிகளில் ஒருவர்.

சரித்திரக் கதைகளையும், புராணக் கதைகளையும் வில்லின் துணைகொண்டு பக்கவாத்தியக் கலைஞர்களின் உதவியுடன் பாட்டு வடிவில் எடுத்துக் கூறுகிறார்கள் இந்தக் கிராமியக் கலைஞர்கள்!

மொழியே தெரியாத பிறநாட்டினரும் இந்த விநோத இசையின் முழக்கம் கேட்டும், பாடல் வரிகளின் அதிர்வு கேட்டும் அதிசயித்துப் போகின்றனர்!!

பாடல் வரிகளைத் தெளிவாகப் பாடியும், ஆங்காங்கே கதை மாந்தர்களைச் சிலாகித்தும் தேவைக்கேற்ற உணர்ச்சியுடன் பாடல்களாவும், பேச்சாகவும் எடுத்துரைக்கும் விதம் அக்கதையைக் கேட்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. தவிர, குடம், உடுக்கை, தாளம், தபேலா, ஹார்மோனியம் போன்ற பக்கவாத்தியங்களும் இக்கலையின் இசைக்கு மெருகூட்டுகின்றன.

ஆதிமனிதனின் வேட்டை ஆயுதமான வில் இன்றைக்கு இசைக் கலைக்கான வாத்தியமாகிவிட்டது!. ஆயுதத்தைக் கலையாக்கியது தமிழனின் சிறப்புக்களில் ஒன்று!!

“வில்லிணை இசையில் ஓர் வீரவரலாறு!”கணபதி காப்பு
வில்லுப்பாட்டு-thamil.co.ukதந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட… வில்லினில் பாட…
வந்தெழுந்து காத்தருள்வாய் – கணபதியே
வந்தெழுந்து காத்தருள்வாய்!

வந்தனங்கள் பல தந்தோம் – நாங்களிங்கு
வந்தனங்கள் பல தந்தோம்
வந்து எமை இரட்சித்தருள்வாய் – கணபதியே
வந்து எமை இரட்சித்தருள்வாய்!

கலைமகள் துதி
முக்கனிகள் பால்பழங்கள் – அம்மா
முத்தமிழின் சுவைகள் தந்தோம்!
முன்னெழுந்து வந்தருள்வாய் – அம்மா
முதல் வணக்கம் நாங்கள் தந்தோம்!

செய்த பிழை நாமறியோம் – தாயே!
நாங்கள் இங்கு
செய்யும் பிழை நீ பொறுப்பாய்!!

அவையடக்கம்
பாட்டறியோம் பொருளறியோம் – நாங்கள் இங்கு
பாடும் வகை நாமறியோம்!
எடறியோம் எழுத்தறியோம் – நாங்கள் ஏதும்
எழுதும் வகை நாமறியோம்!

பாடுபொருள்
வில்லெடுத்துப் பாடவந்தோம் – உங்கள்
வீர வரலாறு தன்னை
நல்ல சொல்லெடுத்துப் பாடவந்தோம் – நீங்கள்
சொர்க்க வாசல் திறந்து வாரீர்!!

நாட்டு வளம் மக்கள் நலம்
எந்தாய் நாடே! என்தமிழ் மண்ணே!!
நின்திசை வணங்குகிறேன்!
உன் புண்ணிய பூமி என்கால் படவே
செய்வேன் தவம் கோடி!!

எங்கள் தமிழ் ஈழமண்ணே! – நாங்கள்
இன்று உந்தன் தாள்பணிந்தோம்!

மங்காத வளம் கொழிக்கும் – எங்கும்
வானுயர வாழ்விருக்கும்!

கார்வளமும் செழித்திருக்கும் – எங்கும்
கடல்வளமும் மலிந்திருக்கும்!

நீர்வளமும் நிறைந்திருக்கும் – எங்கும்
நெல்வயல்கள் விளைந்திருக்கும்!

அன்போடு பாசம் பொங்க – நல்ல
அறிவோடு அறமும் பொங்க!

பண்பாடும் மாறவில்லை – நல்ல
பழந்தமிழர் நாங்களன்றோ!

மக்கள் நாம் வாடுகிறோம் – எங்கள்
மன்னர்களைத் தேடுகின்றோம்!

பூத்தூவி வாழ்த்துகிறோம்! – உங்கள்
பொன்னடிகள் போற்றுகிறோம்!!

வானம் என்றும் பொய்த்ததில்லை – உங்கள்
வரலாறும் பிழைத்ததில்லை!!

உங்களைப் பாடாது ஒரு காவியம் உண்டோ?
உங்களை எழுதாது ஒரு சரித்திரம் உண்டோ?

எங்களின் தேசம் தமிழீழம்
என்பதை நீயும் தினம் பாடு!!
(எங்களின் தேசம்….)
(எங்களின் தேசம்….)

பொங்கிடும் வளங்கள் புதுப்புது யுகங்கள்
பூமியில் படைப்போம் புதியவர் நாங்கள்!!
(எங்களின் தேசம்….)
(எங்களின் தேசம்….)

உரிமைகள் பெறுவோம் ஓரினம் ஆவோம்
உலகினில் நாங்கள் உயர்ந்திட வாழ்வோம்!!
(எங்களின் தேசம்….)
(எங்களின் தேசம்….)

உயிர்களை இழந்தோம் உறவுகள் பிரிந்தோம்
தாயகம் காணும் தமிழினம் நாங்கள்!!
(எங்களின் தேசம்….)
(எங்களின் தேசம்….)

களம்பல வென்றோம் காவியம் படைத்தோம்!
கடல்நிலம் எங்கும் படைபலம் கொண்டோம்!!
(எங்களின் தேசம்….)
(எங்களின் தேசம்….)

சாதனை செய்வோம் சான்றுகள் படைப்போம்!
சிங்களம் வென்றே செந்தமிழ் காப்போம்!!
(எங்களின் தேசம்….)
(எங்களின் தேசம்….)

புதியதோர் தலைமுறை நாங்கள்!!
பூமியில் படைப்போம் யுகங்கள்!!
(எங்களின் தேசம்….)
(எங்களின் தேசம்….)

செங்களமாடிய செவ்வரி வேங்கைகள்
சிந்திய குருதியில் சிவந்திடும் ஈழம்!!
(எங்களின் தேசம்….)
(எங்களின் தேசம்….)

மங்களம் 
மங்களம்… மங்களம்… மங்களம்…
அன்பருக்கும்… நண்பருக்கும்… உங்களுக்கும்…
மங்களம்… மங்களம்… மங்களம்…

எங்கள் கதை கேட்க வந்த உங்களுக்கு…
மங்களம்… மங்களம்… மங்களம்…
மங்களம்… மங்களம்… மங்களம்…

இத்தகைய அற்புதமான இசையை தமிழன் இன்னும் மறந்துவிடவில்லை!! மறந்துவிடவும் முடிவதில்லை!! வட்டாரத் தமிழ்.. பழகு தமிழுக்கேற்ப இதன் சுவையும் இரசனையும் வேறுபடலாம்… மாறுபடலாம்!! ஆனாலும் அதன் இலக்கணம் மாறுவதற்கில்லை!!

இசைத்தமிழ் வரலாறு- இசையமுதம் : தொடர்  27- 32
சிறீ சிறீஸ்கந்தராஜா
27/06/2014 – 19/09/2014

தொகுப்பு : thamil.co.uk