பீர்க்கங்காய் – இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்

பீர்க்கன் காய்-thamil.co.ukபீர்க்கங்காய் Ridge Gourd வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு. உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம்.

பழுத்த பிறகு தான், முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும்! சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன.

இதுவும் ஒரு டானிக் காய்கறிதான். 100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கல்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச்சத்து 1.6 மி.கிராமும், விட்டமின் A 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும் உள்ளன.

நார்ச்சத்து, A, B, C விட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.


பீர்க்கன்காய்-thamil.co.ukமுற்றிய பீர்க்கன் காயை மட்டும் சமைத்துண்பதால் கிடைக்கும் நன்மைகள்

பீர்க்கங்காய் மித வெப்பமான சீதோஷ்ண நிலையில் வளரக் கூடிய ஓர் கொடி வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இந்திய விவசாய சமூகம் கண்டுபிடித்துள்ள ‘பூசா கஸ்தார்’ என்னும் ரகம் மிகவும் உயர்வானது. தமிழ்நாட்டில்தான் அதி நீள உயர் ரகம் பீர்க்கு என்னும் ஓர் ரகம் பயிரிடப்படுகிறது. இவ்வகைக் காய்கள் 70 முதல் 90 செ.மீ. வரை நீளமானவையாகவும் 200 கிராம் எடை கொண்டனவாயும் இருக்கின்றன. காய்கள் பச்சை நிறத்திலும் காணப்படும்.

100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான். எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய மாச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும். இதன் பொருட்டே பீர்க்கன் கொடியின் இலைகள், வேர், விதைகள் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையாய்த் திகழ்கின்றன.

 பீர்க்கங்காய் ஓர் மலமிளக்கியாக மட்டுமின்றி வயிற்றைக் கழியச் செய்வதாகவும் விளங்குகிறது. சிறுநீரைப் பெருக்கிச் சீராக வெளித்தள்ள வைப்பது, வீக்கங்களைக் கரைக்க உதவுகிறது.

சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.

பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.

பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.

இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.

கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான். கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைக் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும்.

தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!

மண்ணீரலின் வீக்கத்தை தணிக்க வல்லது. இருமலைப் போக்க வல்லது. ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டுதல் நோயைத் தணிக்க வல்லது. பீர்க்கங்காயின் விதைகள் வாந்தியைத் தூண்டக் கூடியது. சளியை உடைத்துக் கரைத்து வெளித்தள்ளக் கூடியது. ஹோமியோபதி மருத்துவத்தில் இதன் சாறு வலப் பாட்டீரல் மற்றும் இடப்பாட்டீரல் ஆகிய வற்றில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் உணவுப் பாதையின் உட்புறப் பூச்சு போல விளங்கும் மென் தசைகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைப் போக்கு வதற்கும் பீர்க்கங்காய் சாறு பயன்படுத்தப்படுகின்றது.
மத்திய சித்த ஆயுர்வேதக் கழகம் பீர்க்கங்காயின் இலைச் சாறு, காய்ச் சாறு, வேர்ச் சாறு இவற்றை 10 முதல் 20 மி.லி. வரையில் ஒரு வேளைக்கான மருந்தாக உட்கொள்ளலாம் எனப் பரிந்துரை செய்கின்றது. இதுமட்டுமின்றி பீர்க்கங் காய் உள்ளழலாற்றி (டிமல்சன்ட்) ஆகவும் சிறுநீர்ப் பெருக்கி ஆகவும் சத்துள்ள உணவாகவும் பயன்படுகின்றது. பீர்க்கங்காய் ஓர் சத்தான உணவாவது மட்டுமன்றி அதில் நிறைய நார்சத்து பொதிந்துள்ளது. விட்டமின் பி2, விட்டமின் சி, கரோட்டின், நியாசின், இரும்புச்சத்து, சிறிதளவு அயோடின் மற்றும் புளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது.
பீர்க்கங்காய் இனிப்புச் சுவை யுடைது என்பதும் மட்டுமின்றி எளிதில் சீரணமாகக் கூடியது. உடலுக்குக் குளிர்ச்சி தர வல்லது. குறைந்த அளவு எரி சக்தி கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிக உகந்த உணவாகின்றது. பீர்க்கங்காய் மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு ஓர் நல்ல உபகரணமாக உதவுகின்றது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் இதற்கோர் முக்கிய காரணமாகும்.
பீர்க்கங்காயின் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கும் மருந்தாக உதவுகின்றது. பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த பீர்க்கங்காயின் விதை மற்றும் சதைப் பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும் இயற்கை மருந்தாக அமைகின்றது. பீர்க்கங்காயை நன்கு உலர்த்திப் பொடித்து சலித்து வைத்துக் கொண்டு மூக்குப் பொடி போல மூக்கிலிட்டு உறிஞ்சுவதால் மஞ்சள் காமாலை நோய் மறையும் என ஆயுர் வேதம் குறிப்பிடுகின்றது. பீர்க்கங்காயில் ரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடிய வேதிப் பொருட்களும் மிகுந்துள்ளன. இதனால் ரத்தம் சுத்தமாவதோடு கெட்டுப் போன ஈரலைச் சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்பட உதவுகின்றது.
மது அருந்துவோர்களுக்கு மது வினால் ஏற்பட்ட குருதிக்கேடு, சீர்படுத்தப்படும் வகையில் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பீர்க்கங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் நல்ல மருந்தாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் சில குறிப்பிடும் படியான பெப்டைட்ஸ் என்னும் வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. இவை இன்சுலின் ஆல்கலாய்ட்ஸ் சோரன்டின் என்பனவாகும். இவ்வேதிப் பொரு-ட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் சிறுநீரில் உள்ள சர்க் கரை அளவையும் குறைக்க உதவுகின்றன.
பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும் மருந்தாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி மூல நோய்க்கும் ஓர் முக்கிய மருந்தாக விளங்குகிறது. பீர்க்கங்காயின் முற்றிய காய்ந்த நிலை நிறைய கூடு போன்ற நார்ப் பகுதியைப் பெற்றுள்ளது. இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பது என்பது பன்னெடுங் காலமாகப் பழக்கத்தில் உள்ளது. இப்படிக் குளிப்பதால் தோலின் மேற்பகுதியில் உள்ள இறந்து போன மேற்புறச் செல்கள் அத்தனையும் துடைத்து சுத்தப்படுத்தப்பட்டு தோல் ஆரோக்கியத்தையும் மென்மையையும், பளபளப்பான தன்மையையும் அடைகின்றது.
பீர்க்கங்காயில் உள்ள ரத்தத்தைப் தூய்மை செய்யக் கூடிய வேதிப்பொருள்களால் தோலின் மேலுள்ள முகப் பருக்கள் ஆகியன விரைவில் குணமாக ஏதுவாகின்றது. உடலின் மேலுள்ள துர்நாற்றத் தையும் போக்க வல்ல மருத்துவ குணத்தைப் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது. பீர்க்கங்காயை அன்றாடமோ அல்லது அடிக்கடியோ மற்ற காய்கறிகளோடு சமைத்து உணவாக உண்பதால் நோய் எதிர்ப்பு- சக்தியைத் தர வல்லதாக விளங்குகிறது.
பீர்க்கங்காயில் புதைந்து இருக்கும் அதிக அளவிலான பீட்டா கெரோட்டின் என்னும் வேதிப்பொருள் கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. பீர்க்கங்காயின் புதிய சாற்றை ஓரிரு சொட்டுக்கள் கண்களில் விடுவதால் கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் மண் கொட்டியது போன்ற உறுத்தல் ஆகிய குற்றங்கள் குணமாகும்.
பீர்க்கங்காய் மருந்தாகும் விதம் :
* ஒரு குவளை பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி அந்தி சந்தி என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை என்னும் நோய் மறைந்து போகும்.
* பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் உடனடியாக ரத்தக் கசிவைப் போக்கிக் காயத்தை ஆறச் செய்யும் பணியைச் செய்கின்றது.
* பீர்க்கங்காய் ஒன்றைத் துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர்விட்டு அடுப்பேற்றி நன்றாகக் கொதிக்க வைத்து அதனோடு சுவைக்காகப் போதிய உப்பிட்டு அன்றாடம் காலை, மாலை என இரு வேளை பருகி வருதலால் வயிற்றினுள் பல்கிப் பெருகித் துன்பம் தருகின்ற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.
* பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அரை டம்ளர் சாறுடன் போதிய சர்க்கரை சேர்த்து தினம் இருவேளை குடித்து வருதலால் ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டுதல் குணமாகும்.
* பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து- சேர்த்து தொழு நோய் எனப்படும் தோல் நோயின் மேலே பூசி வருதலால் தொழு நோய்ப் புண்கள் விரைவில் ஆறும்.
* பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில் வைத்து நன்றாக உலர்ந்த பின் இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வருவதால் இளநரை என்பது- தடை செய்யப்படுவதோடு தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.
* பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியைச் சேகரித்து- நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை வெருகடி அளவுக்கு எடுத்து உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும். பீர்க்கங் கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர்விட்டு சுத்திகரித்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளுக்கு சாப்பிட்டு வருதலால் சீதபேதி குணமாகும். வயிற்றுக் கடுப்பும் தணியும்.
* பீர்க்கங் கொடியின் இலை யைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நாட்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறிவிடும்.
* பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத் துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிகட்டிகள் குணமாகும்.
* பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து உடன் சர்க்கரையோ தேனோ சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்து வருவதால் பித்த மேலீட்டால் வந்த காய்ச்சல் தணிந்து போகும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கம் கரைந்து போகும்.
* பீர்க்கங்காய்ச் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வருதலால் அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்னும் சத்தும் கிடைக்கப் பெற்று கண்பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும்.
* பீர்க்கங்காய் பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தைப் பெற்றிருந்தாலும் மானுடர்க்கு உதவும் பல்வேறு மகத்தான மருத்துவ குணங்களைப் பெற்று கண்கள், ஈரல்கள், தோல், சிறுநீரகம், இரையறை ஆகிய உறுப்புகள் ஆரோக்கியமாகவும், சீராகவும் இயங்க உதவுகிறது என்பதை அனைவரும் மனதில் இறுத்திப் பயன்பெறுவோம்.

-உணவே மருந்து
-இயற்கை மருத்துவம்