சீன, அரபு மொழிகளில் திருக்குறள்

திருக்குறள்-thamil.co.ukசீன மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தமிழ் அறிஞர்கள் தமிழில் எழுதிய அறிவுரைகள், கவிதைகள் போன்றவற்றை உலகிலேயே அதிகமாக பேசப்படும் மொழிகளில் மொழிபெயர்ப்பதை தமிழக அரசு கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், பாரதியார், பாரதிதாசனின் கவிதைகள் மற்றும் புகழ்பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம், சீனம், அரபி மொழிகள் மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான அறிவிப்பு 2011-12ஆம் ஆண்டு சட்டப்பேரவை ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து அதற்கான அரசாணை உடனே பிறப்பிக்கப்பட்டு அவற்றை மொழியாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. சீன மொழியில் இதற்கான தகுதியுள்ள நபராக சீனக் கவிஞர் யூஷி தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்த திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு யூஷி அதை சீன மொழியில் மொழியாக்கம் செய்தார்.

தற்போது அந்த சீன திருக்குறள் புத்தகம் அச்சிடப்பட்டு, வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் அணிந்துரை பெறப்பட்டதும் அது வெளியிடப்படும். ஒரே புத்தகத்தில் தமிழ், ஆங்கிலம், சீன மொழிகளில் திருக்குறளை படிக்கலாம்.

அதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியாரின் பாடல்களையும் ஆங்கிலத்தில் இருந்து யூஷி சீன மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். அதுவும் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

திருக்குறள் மற்றும் பாரதியார் பாடல்களை அரபி மொழியில் மொழியாக்கம் செய்யும் பணியில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர் நியமிக்கப்பட்டனர். தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நூல்களும் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளன.

இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த புத்தகங்கள் வெளியிடப்படலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளால், தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் பெருமையை உலகின் மற்ற மக்களும் தெரிந்துகொள்ள இது வழிவகை செய்யும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு முதற்கட்டமாக ரூ.41.70 லட்சம் ஒப்பளிக்கப்பட்டது. இதை அச்சிட்டு வெளியிடும் பணியை தமிழ் வளர்ச்சி இயக்ககம் மேற்கொண்டுள்ளது.

இதுபோல பாரதிதாசனின் பாடல்களும் இந்த மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளது. வரும் ஆண்டில் இதுவும் வெளியிடப்பட்டு, தமிழ் மொழியின் பெருமை உலகுக்கு காட்டப்படும்.