நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி

உயிர்வேலிநிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!
இயற்கை வேளாண்மையில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான யுக்தி  நிலம், உலராமல் இருக்க உயிர்வேலி!. காற்று அது போகும் இடத்தில் இருக்கின்ற ஈரத்தையெல்லாம் உறிஞ்சிவிட்டு நிலத்தை உலரவைத்துவிட்டுப் போய்விடும். காற்று ஈரத்தை எடுத்துக்கொண்டு போகாமல் தடுப்பதுதான் உயிர் வேலி வேளாண்மை.

சவுண்டல், அகத்தி, கிளரிசிடியா, நொச்சி மாதிரியான பயிர்களை வேலிப்பயிராக நட்டு, உயிர்வேலி அமைக்கவேண்டும். வேலியோரமாக வளந்து நிற்கின்ற மரங்கள் காற்றின் வேகத்தைத் தடுத்து நிலத்தில் இருக்கின்ற ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். உயிர்வேலியை மழைக்காலத்தில் நட்டால் நன்றாக வேர் பிடிக்கும். பின்னர் எந்த வறட்சியிலும் காய்ந்து போகாது.

தோட்டத்திற்கு ஒரு நல்ல வேலி மிகவும் அவசியம். உயிர் வேலியே மற்ற வேலிகளைவிட சிக்கனமானதாகும். வறட்சி எதிர்ப்புத்திறன், விதையின் மூலம் சுலபமான பயிர் பெருக்கம், விரைவான வளர்ச்சி, அடர்த்தியான இலைகள், கடும் காற்றிற்கு தாங்கும் திறனுடன் இருக்கும் செடிகள் உயிர் வேலிக்கு ஏற்றவையாகும்.

காற்றுத் தடுப்புக்கு தோட்டத்தைச் சுற்றிலும் பல வரிசைகளில் நடப்பட்டு காற்றின் வேகத்தை குறைப்பதால் காற்று அதிகமாக வீசும் பகுதிகளில் காற்றுத் தடுப்பு வேலியானது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுவாக காற்றுத் தடுப்பு வேலி உயரத்தைவிட நான்கு மடங்கு தூரம் திறம்பட செயல்படும்.

வேலிமசால், கிளுவை போன்றவற்றை உயிர் வேலியாக அமைப்பதன் மூலம் அவற்றை கவாத்து செய்யும் போது கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்.

 

-பசுமை விகடன் & தோட்டகலை துறை.