இலுப்பை

இலுப்பை மரம்-thamil.co.ukமூலிகையின் பெயர்– இலுப்பை
வேறு பெயர்கள் – இருப்பை,குலிகம், மதூகம், வெண்ணை மரம், ஒமை
தாவரப்பெயர் – BASSIA LONGIFOLIA
தாவரக்குடும்பம் – SAPOTACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை முதலியன.

வளரியல்பு – இலுப்பை மரவகையைச் சேர்ந்தமரம். இது வண்டல் மண், மணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் தாயகம் இந்தியா. ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம், கேரளா, குஜராத், ஒரிசா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகக் காணப்படும். தஞ்சை, சேலம், வடஆற்காடு, மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் காணப்படுகின்றன. இது சுமார் 60 அடி உயரம் வரை கூட வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பழபழப்பாக இருக்கும். நீளம் 13 – 20 செ.மீ. இருக்கும், அகலம் 2.5 – 3.5 செ.மீ. இருக்கும். இலைநுனியில் கொத்தான நீண்ட இலைகளையும், கொத்துக் கொத்தான வெண்ணிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். தெய்வ விருட்சமாக சிவன், விஷ்ணு கோயில் களில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் பூக்கள் 2.5 – 5 செ.மீ. நீளமுடையது. பூக்கள் இனிக்கும்.

இலுப்பை காய்-thamil.co.ukஇதன் விதைகள் 2.5 – 5 செ.மீ. நீளமிருக்கும். இந்த மரத்தை ஆங்கிலத்தில் HONEY TREE & BUTTER TREE என்று சொல்வார்கள். டிசம்பர் ஜனவரி மாதத்தில் இலைகள் உதிர்ந்து விடும். இலுப்பை ஜனவரி,பிப்ரவரி, மார்ச்சு மாத த்தில் துளிர் விட ஆரம்பிக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூக்கள் பூக்கும். ஏப்ரல் மே ஜூனில் பழங்கள் விடும். ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்தில் 20 – 200 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதையை செக்கில் போட்டு ஆட்டினால் 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். தேங்காய்எண்ணெக்கும், நெய்யுக்கு பதிலாக அந்தக் காலத்தில் இதன் எண்ணையைப் பயன் படுத்தினார்கள். இதன் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக இருக்கும். இதை நாற்று முறையில் தயார் செய்ய உரமிட்டு பாத்திகள் அமைத்து முற்றிய விதைகளை 1.5 – 2.5 செ.மீ. ஆழத்தில் நடுவார்கள், ஈரம் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்க வேண்டும். பின் 15 நாட்களில் முளைக்கும். பின் பைகளில் போட்டு நிழலில் ஒரு வருடம் வளர்க்க வேண்டும். அதன் பின் வேண்டிய இடங்களில் நடலாம்.

இலுப்பை பூ-thamil.co.ukமருத்துவப் பயன்கள்

இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும் பசியுண்டாக்கும் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் காமம் பெருக்கும் தும்மலுண்டாக்கும். விதை நோய் நீக்கி உடல் தேற்றும் நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் மிகுக்கும். இதன் பட்டை காயம், தோல் நோயைக் குணமாக்கும், பிண்ணாக்கு வாந்தியுண்டாக்கும். இது தலைவலியைப் போக்கும். நீரிழிவைக் குணமாக்கும்.

‘பூவினால் பித்தசுரம், தாக ரோகம் நீங்கும், பித்தமும், பிரமையும் உண்டாகும்.

‘குன்றா விளுப்பையின் பூ கூர்மதுரம் வாசனையாஞ்
தின்றார் பயித்தியமுஞ் சேருங்கான் – மன்றளுருந்
தார்குழலே ! பித்தசுரம் தாக்க்ந் தணிந்துவிடும்
வார் தயக்க மெய்தும் வழுத்து  ‘ – அகத்தியர் குணவாகடம்

பூவைக் கசாயம் செய்து கொடுக்க தேக இளைப்பு நீங்கும் காய்ந்த பூவை வதக்கி விரை வீக்கங்களுக்கு ஒற்றிடமிட அவ்விடத்தில் வேர்வை தோன்றி வீக்கம் குறைந்து கொண்டே வரும்.
இதைக் கொண்டு சாராயம் செய்வதுண்டு.

மேலும் இப் பூவிலிருந்து சர்க்கரை எடுக்கலாம் இதைச் சர்க்கரைக்குப் பதிலாக உபயோகிக்கலாம். இதைச் சுத்தப் படுத்தி கல்க்கண்டுக்குச் சமமாக செய்து மருந்துகளில் உபயோகிக்கலாம். இக் காரணம் கொண்டே “ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூச் சர்க்கரை “ என்ற பழமொழியும் வழங்குகிறது.

சர்க்கரை அல்லது வெல்லப்பாகில் பூவைச் சேர்த்து உருண்டை செய்து ஏழைகள் உணவாக உண்பார்கள். இப் பூ வின் சாற்றில் இரும்பு சுத்தியாகும்.

ஒரு தாலாட்டுப் பாட்டு
‘பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டி கட்டி
பவளக்கால் தொட்டியிலே
பாலகனே நீயுறங்கு…’
இது போல் செய்தால் தாயிக்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பது நம்பிக்கை.

செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். இது குல தெய்வத்திற்கு உகந்தது.

பூவை அரைத்து வீக்கங்களின் மீது பற்றிட வீக்கங்கள் குறையும்.

இலுப்பைப் பூ 50 கிராம் அரை லிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகக் காச்சி வடிகட்டிக் காலை மட்டும் ஓரிரு மாதங்கள் சாப்பிட்டு வர மதுமேகம், நீரிழிவு குணமாகும்.

10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர தாது பெருகும் காச்சல் தாகம் குறையும்.

வித்து (விதை)
குணம் – இலுப்பை விதை அந்தர வாயுவையும், விடத்தையும் போக்கும்
“ இலுப்பை விதையந்திர வாய் விற்கும் விடத்திற்கும்
அலுப்பை யுன்டாக்கியகற்றும் “ – அகத்தியர் குணவாகடம்
மருத்துவ குணம் – வித்தின் மீதுள்ள ஓட்டை நீக்கி, உட்பருப்பை நசுக்கி வதக்கி ஒற்றிடமிட மேற்கண்டவை விலகும்.

இலுப்பை நெய் – விதியின் ஓட்டைப் போக்கி இடித்துப் பிட்டாவியலாய் அவித்து சூட்டுடன் ஆலையில்லிட்டு ஆட்டி எடுக்க நூற்றுக்கு முப்பது பங்கு நெய் தேறும் இதற்கு இலுப்பை நெய் என்றும் திப்பிக்கு இலுப்பை புண்ணாக்கு என்றும் பெயர்.

‘கரப்பானடருங் கடி சிரங்கு புண்ணும்
உரப்பா மிடுப்பு வலிப்யோடுங் – கரப்பான்
பாகு மொழி மாதே ! பல முண்டாந் துற்பலம்
தேக்கு மிளுப்பையி நெய்க்கே’  – அகத்தியர் குணவாகடம்

இதனால் கரப்பான், சிரங்கு புண் உண்டாகும் ஆனால் இடுப்பு வாதம் துர்பலம் நீங்கும் நெய்யை வெதுப்பி இடுப்பு வாதத்திற்கு தேய்த்துவர அவ்வாதம் விலகும் உடல் பலக்கும்.

இது வெகு துரிதத்தில் காரலேடுத்துப் போவதால் உப்புக் கட்டும் தைலங்களில் சேர்ப்பது இல்லை.

ஏழைகள் இதில் சிற்றுண்டி செய்து உண்பார்கள். சேற்று புண்ணிற்கு பூசலாம் விளக்கு எரிக்கவும் பயன்படும். இதில் நாகத்தை உருகிச் சாய்க்கச் சுத்தியாகும்

இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரத் தாய்ப் பால் சுரப்பு மிகும்.

இலுப்பை பிண்ணாக்கு 
சுவை – கைப்பு, துவர்ப்பு,

வீரியம் – வெப்பம்,

பிரிவு – கார்ப்பு
செயல் – தொற்றுப் புழுவகற்றி – disinfectant
புழுக் கொல்லி –  anthelmintic
வாந்தியுண்டாக்கி – emetic
இலுப்பை பிண்ணாக்கு கடுவன்,புண், கரப்பான், பீஜவீக்கம், திரி தோஷம், எண்ணெய்ச் சிக்கு ஆகியவற்றைப் போக்கும்.

‘போதிதிக் கடுவனொடு புண்ணாங் கரப்பானும் போம்
வித்தைப்பு தொடமிவை விராவாம் – மெத்தனவே
எண்ணெய்க் கசிவுகளு மேகு மிளுப்பை விதைப்
பின்னாக்குக் கென்றறியப் பேசு’ –  அகத்தியர் குணவாகடம்

இதைச் சுட்டு தேங்காய் எண்ணையுடன் கலந்து பூசக் கடுவன் புண் கரப்பான் போகும். இதைப் புகைக்க வீட்டில் உள்ள புழு பூச்சு எலிகள் வீட்டை விட்டுஅகலும்.

இப் பிண்ணாக்குடன் மாட்டுக் குளம்புச் சீவல், குதிரைக் குளம்பு சீவல், பன்றிப் புடை சேர்த்து புகைக்க உண்டாகும் புகையை மூலத்திற்குக் காட்ட மூலரோகம் குணப்படும்.

பின்னாக்கைப் பொடித்து மூக்கிலிட நாசியில் நீர் பாய்ந்து தும்மளுண்டாகு திரி தோட்டம் நீங்கும். (தும்மல் ஏற்படும். தலைவலி குறையும்.) இப் பொடியை வறுத்து போதுமான சூட்டுடன் ஒற்றிடமிட பீஜ வீக்கம் குறையும் மற்ற வாத வீக்கங்களுக்கு இவ்வாறே செய்யலாம்.

தலையில் எண்ணெய்ச் சிகை போக்க இதை உபயோகிக்கலாம். அரைத்து தண்ணீரில் கலக்கி கொடுக்க வாந்தி யுண்டாக்கி ஊமத்தங்காய் தின்றவர்களுக்கு கொடுத்து வாந்தி உண்டாக்கி விசத்தை முறிக்கலாம்.

மரப்பட்டை 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டுக் கால் லிட்டராக்க் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வர மது மேகம் தீரும். மேக வாயுவைக் கண்டிக்கும், நீரிழிவும் குணமாகும்.

பச்சைப் பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து உடம்பில் தடவி வைத்திருந்து குழிக்கச் சொறி சிரங்குகள் ஆறும்.

இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடுசெய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

10 கிராம் பிண்ணாக்கை நீர் விட்டரைத்து 50 மி.லி நீரில் கலக்குத் தற்கொல்க்காக நஞ்சு உண்டவர்களுக்குக் கொடுக்க வாந்தியாகி நச்சுப் பொருள் வெளியாகும்.

பிண்ணாக்கு, வேப்பம்பட்டை, பூவரசம் பட்டை சமனளவு கருக்கி அந்த எடைக்குக் கார்போக அரிசியும் மஞ்சளும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பிக் குழந்தைகளுக்குக் காணும் மண்டைக் கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவற்றிக்குத் தடவ ஆறும்.

பிண்ணாக்கை அரைத்துக் குழப்பி அனலில் வைத்து கழியாகக் கிளறி இளஞ்சூட்டில் கட்டி வர விதை வீக்கம் 4,5 தடவைகளில் தீரும்.

கப்பல் கட்டவும், இரயில் தண்டவாள ரீப்பர் கட்டை செய்யவும், தேர் செய்யவும் மற்றும் விறகாவும் மரம் பயன் படுகிறது.

-மூலிகைவளம்