சொல் இலக்கணம் 4 : சிறீ சிறீஸ்கந்தராஜா

சொல்லிலக்கணம் – 17சொல்லிலக்கணம்

தொகைமொழி -பகுதி 1

தொல்காப்பியம்
(சொல்லதிகாரம் – எச்சவினை நூற்பா: 412)
“வேற்றுமைத் தொகையே, உவமத் தொகையே,
வினையின் தொகையே, பண்பின் தொகையே,
உம்மைத் தொகையே, அன்மொழித் தொகை, என்று
அவ் ஆறு’ என்ப- தொகைமொழி நிலையே”

தொல்காப்பியர் இவ்வாறு இலக்கணம் வகுக்கின்றார். இதனை நன்நூலாரும் ஏற்றுக்கொள்ளுகிறார்.

“வேற்றுமை வினைபண்பு உவமை உம்மை
அன்மொழி எனஅத் தொகைஆறு ஆகும்” (நன்னூல் – 362)

தொகைநிலைத் தொடர் 
வேற்றுமை , வினை, உவமை, முதலிய உருபுகள் நடுவே மறைந்து நிற்க, இரண்டு முதலிய சொற்கள் ஒரு சொல் தன்மையில் தொடர்வதாகும். அவை ஒரு சொல் போன்று பிளவுபடாது நின்று பொருள் தருவன. இவற்றையே “தொகை நிலைத் தொடர்கள்” அல்லது “தொகைமொழி” எனவும் அழைப்பர்.

தொகைநிலைத் தொடர் ஆறு வகை
1) வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்
2) வினைத் தொகைநிலைத் தொடர்
3) பண்புத் தொகைநிலைத் தொடர்
4) உவமைத் தொகைநிலைத் தொடர்
5) உம்மைத் தொகைநிலைத் தொடர்
6) அன்மொழித் தொகைநிலைத் தொடர்

இத்தொகைநிலைத் தொடர்கள் பின்வருமாறு அமையும் என வகுத்துக் காட்டுகிறார் நன்னூலார்.
“பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
முதலிய பொருளின் அவற்றின் உருபுஇடை
ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்துஒரு
மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல்” (நன்னூல்-361)

1) பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல் தொடரும்.
2) பெயர்ச்சொல்லோடு வினைச்சொல் தொடரும்.
3) வினைச்சொல்லோடு பெயர்ச்சொல் தொடரும்.
4) வினைச்சொல்லோடு வினைச்சொல் தொடராது.
5) இடை, உரிச் சொற்கள் தொடரா.
6) ஒரு சொல்லோடு மற்றொரு சொல், பொருள் புணர்ச்சியில் தொடரும்.
7) சொற்களுக்கு இடையே உருபுகள் மறைந்து வரும்.
8) இரண்டு முதலாகப் பல சொற்கள் தொடரும்.
9) பல சொற்கள் தொடரினும் ஒரு சொல்போல் விளங்கும்.
10) உருபோடு சொல்லும் மறைந்து வரும்.
11) தொகை என்னும் சொல் உருபு மறைதல் எனப் பொருள்படும்.

வேற்றுமைத் தொகை
வேற்றுமை ஆவன எட்டு வகைப்படும்.
1) முதல் வேற்றுமை
2) இரண்டாம் வேற்றுமை
3) மூன்றாம் வேற்றுமை
4) நான்காம் வேற்றுமை
5) ஐந்தாம் வேற்றுமை
6) ஆறாம் வேற்றுமை
7) ஏழாம் வேற்றுமை
8) எட்டாம் வேற்றுமை

இவற்றில் முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனப்படும்.
எட்டாம் வேற்றுமை, விளி வேற்றுமை எனப்படும்.

எழுவாய் வேற்றுமை, விளி வேற்றுமை இவை இரண்டிற்கும் உருபுகள் இல்லை.

ஏனைய ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உள்ளன. இவ் ஆறு வேற்றுமை உருபுகளும் வெளிப்பட்டு நின்றும் மறைந்து நின்றும் சொற்றொடரில் தம் பொருள் உணர்த்தும்.

உருபுகள் தோன்றாமல் மறைந்து நின்று சொற்றொடரில் பொருள் உணர்த்தும் தொடர்களே வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்கள் எனப்படும்.

வேற்றுமைகளும் அவற்றிற்குரிய உருபுகளும் வருமாறு.
1) இரண்டாம் வேற்றுமை – ஐ
2) மூன்றாம் வேற்றுமை – ஆல், ஆன், ஒடு, ஓடு
3) நான்காம் வேற்றுமை – கு
4) ஐந்தாம் வேற்றுமை – இன், இல்
5) ஆறாம் வேற்றுமை – அது, ஆது
6) ஏழாம் வேற்றுமை – கண்

தொகைநிலைத் தொடரில் இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறும் வேற்றுமைத் தொகைகளாகும்.

“இரண்டு முதலாம் இடைஆறு உருபும்
வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே” (நன்னூல் – 363)

இவ்வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், வேற்றுமை உருபு மட்டும் மறைந்து வருதல், வேற்றுமை உருபும் பயனும் சேர்ந்து மறைந்து வருதல் என இரண்டு வகைப்படும்.

எடுத்துக்காட்டுகள்
பால் குடித்தான்
-இரண்டாம் வேற்றுமைத் தொகை

பால் குடம்
-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

தலை வணங்கினான்
-மூன்றாம் வேற்றுமைத் தொகை

பொன் வளையல்
-மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

என் மகள்
-நான்காம் வேற்றுமைத் தொகை

குழந்தைப் பால்
-நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

ஊர் நீங்கினான்
-ஐந்தாம் வேற்றுமைத் தொகை

வாய்ப்பாட்டு
-ஐந்தாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன்தொக்க தொகை

நண்பன் வீடு
-ஆறாம் வேற்றுமைத் தொகை

மலைக் கோயில்
-ஏழாம் வேற்றுமை

தண்ணீர்ப் பாம்பு
-ஏழாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன் தொக்க தொகை

ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்;
உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை.

வினைத் தொகை
வினைத்தொகை என்பது, பெயரெச்சத் தொடராகும்.

பெயரெச்சமாக வரும் வினையில், பெயரெச்சத்தின் விகுதியும்,
காலம் காட்டும் இடைநிலையும் கெட்டு,
வினையின் முதல்நிலை மட்டும் நின்று
அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும். அதனால் வினைத்தொகையைக் காலம் கரந்த பெயரெச்சம் என்பர். கரந்த என்றால் மறைந்த என்று பொருள்படும்.

(எ-டு) வீசு தென்றல்
இத்தொடரை விரிக்கும்போது வீசிய தென்றல், வீசுகின்ற தென்றல், வீசும் தென்றல் என முக்காலத்திற்கும் பொருந்திவருவதைக் காணலாம்.இவ்வாறு வினைத்தொகை முக்காலமும் குறித்து வருவதனால் இவற்றை முக்கால வினைத் தொகைகள் என வகுத்தனர்.

வீசிய, வீசுகிற, வீசும் என்னும் பெயரெச்சங்களின் விகுதியும் காலமும் கெட்டு, வீசுதல் என்னும் தொழிலின் முதல்நிலையான வீசு என்பது மட்டும் நின்று, தென்றல் என்னும் பெயரொடு வந்து வினைத்தொகை ஆயிற்று.

சில வினைச் சொற்களின் வினைப் பகுதியான முதல் நிலை விகாரப்பட்டும் வினைத்தொகை வரும்.

(எ-டு) வருபுனல்
இவ்வினைத்தொகையில் “வா” என்னும் வினைப் பகுதியான முதல்நிலை “வரு” எனத் திரிந்து புனல் என்னும் பெயரோடு வந்தது.

“காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” (நன்னூல் – 364

பண்புத் தொகை
பண்புத் தொகை என்பது, “ஆகிய” என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப் பெயர் தொடர்வதாகும்.

பண்பு என்பது வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும். பண்பை உடையது எதுவோ அது பண்பிப்பொருள் எனக் கருதப்படும்.

“ஆகிய” என்பது, பண்புக்கும் பண்பிக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதற்காக வரும் ஒரு இடைச்சொல் ஆகும். இதனைப் பண்பு உருபு என்பர்.

(எ-டு)
செந்தாமரை – வண்ணப் பண்புத் தொகை
வட்ட நிலா – வடிவப் பண்புத் தொகை
முத்தமிழ் – அளவுப் பண்புத் தொகை
இன்சொல் – சுவைப் பண்புத் தொகை

இவற்றை விரிக்கும்போது,
செம்மையாகிய தாமரை,
வட்டமாகிய நிலா,
மூன்றாகிய தமிழ்,
இனிமையாகிய சொல் என விரியும்.

மேலே கூறிய எடுத்துக்காட்டுகளில் , “செந்தாமரை” என்பது செம்மை ஆகிய தாமரை என விரிகிறது.

“செம்மை” என்பது பண்பு; “ஆகிய” என்பது பண்பு உருபு; “தாமரை” என்பது பண்பி. இவ்வாறாக ஏனைய எடுத்துக்காட்டுக்களையும் பிரித்தறிந்து கொள்ளலாம்.

உவமைத் தொகை
உவமைத் தொகை என்பது, போல, புரைய, ஒப்ப, உறழ, அன்ன, இன்ன முதலிய உவமை உருபுகள் மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல் தொடர்வதாகும்.

(எ-டு.) பவளவாய்
இது பவளம் போலும் வாய் என விரியும்.
“பவளம்” என்பது உவமானம்;
“போலும்” என்பது உவமை உருபு;
“வாய்” என்பது உவமேயம்.
(உவமானம் – உவமையாகும் பொருள்; உவமேயம் – உவமிக்கப்படும் பொருள்.)

இவ்வுவமைத் தொகை வினை, பயன், மெய், உரு என்பன பற்றி வரும்.
(மெய் – வடிவம்; உரு – வண்ணம்.)
(எ-டு.)
புலி மனிதன் – வினையுவமைத் தொகை
மழைக்கை – பயனுவமைத் தொகை
துடியிடை – மெய்யுவமைத் தொகை
பவளவாய் – உருவுவமைத் தொகை

“உவம உருபிலது உவமத் தொகையே” (நன்னூல் – 366)

உம்மைத் தொகை
அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் “உம்மை”யாகிய உருபு மறைந்து நிற்பது உம்மைத் தொகை எனப்படும். அவ்வளவுகள் ஆவன; எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு ஆகும்.

எ-டு :
ஒன்றேகால் – எண்ணல் அளவை உம்மைத் தொகை
தொடியேகஃசு – எடுத்தல் அளவை உம்மைத் தொகை
மரக்கால் படி – முகத்தல் அளவை உம்மைத் தொகை
அடி அங்குலம் – நீட்டல் அளவை உம்மைத் தொகை

இவற்றை விரிக்கும் பொழுது,
ஒன்றும் காலும்,
தொடியும் கஃசும்,
மரக்காலும் படியும்,
அடியும் அங்குலமும் என விரியும்.

ஏனைய தொகைநிலைத் தொடர்களில் காணப்படாத ஒரு தனிச் சிறப்பு இந்த உம்மைத் தொகைக்கு உண்டு.

மற்ற தொகைநிலைத் தொடர்களில் உருபு இரண்டு சொற்களுக்கு இடையில் மட்டுமே மறைந்து வரும்.

உம்மைத் தொகையிலோ இரண்டு சொற்களுக்கு இடையிலும் இரண்டாம் சொல்லின் இறுதியிலும் “உம்” என்னும் உருபு மறைந்து வருவதாகும்.

“எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனும் நான்கு அளவையுள் உம்மிலது அத்தொகை” (நன்னூல்- 368)

அன்ப்மொழித் தொகை
அன்மொழி என்பது அல் + மொழி எனப் பிரியும்.
“அல்” என்பதற்கு அல்லாத என்பது பொருள்.
“மொழி” என்றால் சொல் என்று பொருள்.

ஒரு தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதனால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பெயர் பெறுகிறது.

இது, வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத் தொடர்மொழிகளுக்கு உரிய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிறசொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தலாகும்.

அன்மொழித் தொகை ஐந்து வகை
1) வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
2) வினைத்தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை
3) பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
4) உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
5) உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

1)வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகை முதல் ஏழாம் வேற்றுமைத் தொகை வரை சேர்த்து ஆறு வகைப்படும்.

(எ-டு) பூங்குழல் வந்தாள்
பூங்குழல் என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர் ஆகும்.
‘பூவையுடைய குழலை உடையாள்’ என விரியும்போது, இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்தஅன்மொழித் தொகை ஆகிறது.

(எ-டு) பொற்றொடி வந்தாள்
பொற்றொடி என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைநிலைத் தொடர் ஆகும்.

‘பொன்னாலாகிய தொடியினை உடையாள்’ என விரியும்போது மூன்றாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) கவியிலக்கணம்
கவியிலக்கணம் என்னும் நான்காம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர் ஆகும்.

‘கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட நூல்’ என விரியும்போது, நான்காம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) பொற்றாலி
பொற்றாலி என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர் ஆகும்.

‘பொன்னின் ஆகிய தாலியினை உடையாள்’ என விரியும்போது, ஐந்தாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) கிள்ளிகுடி
கிள்ளிகுடி என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர் ஆகும்.

‘கிள்ளியினது குடியிருக்கும் ஊர்’ என விரியும் போது, ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) கீழ் வயிற்றுக் கழலை
கீழ் வயிற்றுக் கழலை என்னும் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை நிலைத் தொடர் ஆகும்.

‘கீழ் வயிற்றின் கண் எழுந்த கழலையைப் போன்றவன்’ என விரியும்போது, ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

2)வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) தாழ்குழல் பேசினாள்
தாழ்குழல் என்னும் வினைத்தொகை, ‘தாழ்ந்த குழலினை உடையாள்’ என விரியும்போது, வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

3)பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) கருங்குழல்
கருங்குழல் என்னும் பண்புத் தொகைநிலைத் தொடர் ‘கருமையாகிய குழலினை உடையாள்’ என விரியும்போது, பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

4)உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) தேன்மொழி
தேன்மொழி என்னும் உவமைத் தொகைநிலைத் தொடர் ‘தேன் போன்ற மொழியை உடையாள்’ என விரியும்போது, உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

5)உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) உயிர்மெய்
உயிர்மெய் என்னும் உம்மைத் தொகைநிலைத் தொடர் ‘உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த எழுத்து’ என விரியும்போது, உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

“ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி” (நன்னூல்-369)

சொல்லிலக்கணம் – 18

 

 

தொகைமொழி – பகுதி  2

 

தொகைநிலைத் தொடர்கள் பொருள் சிறக்கும் இடம்

“முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி
எனும்நான்கு இடத்தும் சிறக்கும் தொகைப் பொருள் ” (நன்னூல்-370)

தொகைநிலைத் தொடர் மொழிகளில் இரண்டு சொற்கள் ஒரு சொல் நடையவாய் நிற்கும். அவ்விரண்டு சொற்களில் எச்சொல்லில் பொருள் சிறக்கும் என அறிவது அவசியமாகிறது.

தொகைநிலையாய் வரும் இரு சொற்களில் முதலில் நிற்கும் சொல்லை முன்மொழி என்றும் இரண்டாவது நிற்கும் சொல்லைப் பின்மொழி என்றும் குறிப்பிடுவர்.

தொகைநிலைத் தொடர்களில் எம்மொழியில் பொருள் சிறக்கும் என்பதை நான்கு வகையாக நன்னூலார் வகுத்துக் கூறுகிறார்.
1) முன்மொழியில் பொருள் சிறத்தல்
2) பின்மொழியில் பொருள் சிறத்தல்
3) அனைத்து மொழிகளிலும் பொருள் சிறத்தல்
4) புறமொழிகளில் பொருள் சிறத்தல்

1)முன்மொழியில் பொருள் சிறத்தல்
வேற்றுமைத் தொகை, பண்புத் தொகை, வினைத்தொகை, உவமைத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்குமானால் அம்முன்மொழிகளில் பொருள் சிறக்கும்.
(எ-டு.)
வேங்கைப்பூ – வேற்றுமைத் தொகை
வெண்டாமரை- பண்புத் தொகை
ஆடுபாம்பு – வினைத் தொகை
வேற்கண் – உவமைத் தொகை

முதலாவது தொடர் ஆறாம் வேற்றுமைத் தொகையாகும். பல வகைப் பூக்களில் தன் இனம் விலக்கி வேங்கை மரத்தின் பூவை மட்டும் குறிப்பதால் முன்மொழியில் பொருள் சிறக்கிறது.

இரண்டாவது தொடரில் பல வகைத் தாமரைகளில் ஓர் வகையை மட்டும் குறித்துத் தாமரைப் பூவின் ஏனைய இனங்களை விலக்கியமையால் முன் மொழியில் பொருள் சிறக்கிறது.

இவ்வாறே வினைத்தொகை, உவமைத் தொகைகளிலும் முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால் அம்மொழிகளில் பொருள் சிறந்தது.

2)பின்மொழியில் பொருள் சிறத்தல்
வேற்றுமைத் தொகை, பண்புத் தொகைகளிலே, முன் மொழிகள் இனம் விலக்காமல் நிற்கும்பொது பின் மொழிகளில் பொருள் சிறக்கும்.
(எ-டு)
கண்ணிமை – வேற்றுமைத் தொகை
செஞ்ஞாயிறு – பண்புத் தொகை
இவ்வெடுத்துக் காட்டுகளில் வந்துள்ள இமை, ஞாயிறு என்பன இனம் இல்லாதனவாகும்.

இருந்தும் கண் என்பதும், செம்மை என்பதும் இனத்திலிருந்து பிரித்துக் காட்டுதலின்றி, வெறும் அடைமொழியாய் வந்துள்ளன. இதனால் இத்தொடர்களில் பின்மொழியில் பொருள் சிறந்து நிற்கிறது

3)அனைத்து மொழிகளிலும் பொருள் சிறத்தல்
உம்மைத் தொகைகளில் அனைத்து மொழிகளிலும் இனம் விலக்கலும், விலக்காமையுமின்றித் தொகைச் சொற்கள் நிற்றலால், அவ்வனைத்து மொழிகளிலும் பொருள் சிறந்து நிற்கிறது.
(எ-டு)
இராப்பகல்
கபில பரணர்

4)புறமொழிகளில் பொருள் சிறத்தல்
அன்மொழித் தொகைகளில் சொல்லுவோனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருள் மேல் செல்லாது, இவ்விரு மொழியும் அல்லாத அயலாக நிற்கும் புறமொழி மேல் செல்வதால், அப்புறமொழி மேல் பொருள் சிறந்தது.
(எ-டு)
பொற்றொடி
உயிர்மெய்

பொற்றொடி என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை ‘பொன்னால் ஆகிய தொடியை உடையாள்’ என்னும் பொருளிலும், உயிர்மெய் என்னும் உம்மைத் தொகை ‘உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து’ என்னும் பொருளிலும் அன்மொழித் தொகைகளாக வந்துள்ளன.

உடையாள், எழுத்து என்பனவற்றின் மேல் பொருள் சிறத்தலால் புறமொழியின் மேல் பொருள் சிறந்தது.

தொகைநிலைத் தொடர்கள் பல பொருள்படுதல்
“தொக்குழி மயங்குந இரண்டு முதலேழ்
எல்லைப் பொருளின் மயங்கும் என்ப” 
(நன்னூல் – 373)

ஒரு சில தொகைமொழித் தொடர்கள் ஒரு பொருளை மட்டுமே குறித்து வருமானால் பொருள் மயக்கம் ஏற்படாது.மொழிச்சூழலாலும், விரித்துப் பொருள் காண்போரின் பொருள் கொள்ளும் நிலையினாலும் பலபொருளாகிப் பொருள் மயக்கமும் ஏற்படுகிறது.

இவ்வாறு தொகையை விரித்துப் பொருள் கொள்ளும்போது, கீழ் எல்லையாக இரண்டு பொருளும், மேல் எல்லையாக ஏழு பொருள் வகையிலும் தொகைநிலைத் தொடர், பொருள் மயங்க நிற்கும் எனலாம்.
(எ-டு)
“தெய்வ வணக்கம்” (இரண்டு பொருள் – மயக்கம்)
1) தெய்வத்தை வணங்கும் வணக்கம்
– இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகை.
2) தெய்வத்திற்கு வணங்கும் வணக்கம்
– மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

“தற்சேர்ந்தார்” (மூன்று பொருள் – மயக்கம்)
1) தன்னைச் சேர்ந்தார்
– இரண்டாம் வேற்றுமைத் தொகை
2) தன்னொடு சேர்ந்தார்
– மூன்றாம் வேற்றுமைத் தொகை
3) தன்கண் சேர்ந்தார்
– ஏழாம் வேற்றுமைத் தொகை

“சொல்லிலக்கணம்” (நான்கு பொருள் – மயக்கம்)
1) சொல்லினது இலக்கணம்
– ஆறாம் வேற்றுமைத் தொகை
2) சொல்லுக்கு இலக்கணம
– நான்காம் வேற்றுமைத் தொகை
3) சொல்லின்கண் இலக்கணம்
– ஏழாம் வேற்றுமைத் தொகை
4) சொல்லினது இலக்கணம் சொன்ன நூல்
௦ அன்மொழித் தொகை

“பொன்மணி” (ஐந்து பொருள் – மயக்கம்)
1) பொன்னலாகிய மணி
– மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(கருவிப் பொருள்)
2) பொன்னாகிய மணி
– பண்புத் தொகை
3) பொன்னின்கண் மணி
– ஏழாம் வேற்றுமைத் தொகை
4) பொன்னோடு சேர்ந்த மணி
– மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (உடனிகழ்ச்சிப் பொருள்)
5) பொன்னும் மணியும்
– உம்மைத் தொகை

“மர வேலி” (ஆறு பொருள் – மயக்கம்)
1) மரத்தைக் காக்கும் வேலி
– இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
2) மரத்தாலாகிய வேலி
– மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
3) மரத்திற்கு வேலி
– நான்காம் வேற்றுமைத் தொகை
4) மரத்தினது வேலி
– ஆறாம் வேற்றுமைத் தொகை
5) மரத்தின் புறத்தில் வேலி
– ஏழாம் வேற்றுமைத் தொகை
6) மரமாகிய வேலி
– பண்புத் தொகை

“சொற்பொருள்” (ஏழு பொருள் – மயக்கம்)
1) சொல்லால் அறியப்படும் பொருள
– மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
2) சொல்லினது பொருள்
– ஆறாம் வேற்றுமைத் தொகை
3) சொல்லுக்குப் பொருள்
– நான்காம் வேற்றுமைத் தொகை
4) சொல்லின் கண் பொருள்
– ஏழாம் வேற்றுமைத் தொகை
5) சொல்லும் பொருளும்
– உம்மைத் தொகை
6) சொல்லாகிய பொருள்
– பண்புத் தொகை
7) சொல்லானது பொருள்
– எழுவாய்த் தொடர்

{தொகைநிலைத் தொடர்கள் மற்றும் அவற்றின் உப உட்பிரிவுகள் பற்றியும் அவை எப்பொருள்களில் வரும் என்பது பற்றியும் விரிவாகப் பார்த்தோம்.

தொகைநிலைத் தொடர்கள் முன்மொழியில் பொருள் சிறப்பன, பின்மொழியில் பொருள் சிறப்பன, அனைத்து மொழிகளிலும் பொருள் சிறப்பன, புறமொழியில் பொருள் சிறப்பன என நான்கு வகைப்படும்.

தொகைநிலைத் தொடர்மொழிகளை விரித்துப் பொருள் கொண்டால் இரண்டு முதல் ஏழு பொருள் வேறுபாடுகளைத் தரும் என்பதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.}

சொல்லிலக்கணம் – 19சொல்லிலக்கணம்

தொகாநிலைத்தொடர்
தொகாநிலைத் தொடர்களின் வகைகள் பற்றியும் அவற்றின் விளக்கங்கள் பற்றியும் இங்கே பார்ப்போம். தொகாநிலைத் தொடர்கள் இரு வகைப்படும். 1.வேற்றுமைத் தொடர், 2.அல்வழித் தொடர் ஆகும்.

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும். அல்வழித் தொகாநிலைத் தொடர்கள் எட்டு வகைப்படும்.

தொகாநிலைத் தொடர் என்பது, சொற்கள், வேற்றுமை, அல்வழிப் பொருளில், உருபுகள் இருந்து மறையாமலும், உருபுகளே இல்லாமலும் தொடரும் தொடராகும்.

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் என்பது, வேற்றுமைக்கு உரிய உருபுகள் மறையாமல் வெளிப்பட்டுத் தொடரும் தொடராகும்.

அல்வழித் தொகாநிலைத் தொடர் என்பது; அல்வழிக்கு உரிய தொகைகளான வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை ஆகியன நீங்கலாக, தமக்கெனத் தனி உருபுகள் இல்லாத ஏனைய தொகாநிலைத் தொடர்கள் தொடரும் தொடராகும்.

தொகாநிலைத் தொடர் ஒன்பது வகை
(1) வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
(2) எழுவாய்த் தொடர்
(3) விளித் தொடர்
(4) வினைமுற்றுத் தொடர்
(5) பெயரெச்சத் தொடர்
(6) வினையெச்சத் தொடர்
(7) இடைச் சொற்றொடர்
(8) உரிச் சொற்றொடர்
(9) அடுக்குத் தொடர்

வேற்றுமைத் தொடர்களில்; உருபு விரிந்தவிடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடராகும்.

வினைத்தொகை விரிந்தவிடத்து பெயரெச்சத் தொடராகும்.

பண்புத்தொகையும் உம்மைத்தொகையும் விரிந்தவிடத்து இடைச் சொற்றொடராகும்.

உவமைத் தொகைவிரிந்தவிடத்து முன்னது இடைச் சொற்றொடராகும்,
பின்னது இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினையெச்சத் தொடராகும்.

அன்மொழித் தொகை விரிந்தவிடத்து வேற்றுமை முதலிய தொகாநிலைத் தொடராகும்.

சான்றுகள்
வேற்றுமைத் தொடர்களில், உருபு விரிந்தவிடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடராகும்.
“பால் குடித்தான்”
வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்.
“பாலைக் குடித்தான்”
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.
வினைத்தொகை விரிந்தவிடத்து பெயரெச்சத் தொடராகும்.
“வாழ் மனை”
வினைத் தொகை.
“வாழ்ந்த மனை”
“வாழ்கிற மனை”
“வாழும் மனை”
பெயரெச்சத் தொடர்.

பண்புத்தொகையும் உம்மைத்தொகையும் விரிந்தவிடத்து இடைச் சொற்றொடராகும்.
“செந்தமிழ்”
பண்புத்தொகை.
“செம்மை ஆகிய தமிழ்”
இடைச் சொற்றொடர்.

“பால் பழம்”
உம்மைத் தொகை.
“பாலும் பழமும்”
இடைச் சொற்றொடர்.

உவமைத் தொகைவிரிந்தவிடத்து முன்னது இடைச் சொற்றொடராகும்,
பின்னது இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினையெச்சத் தொடராகும்.
“தாமரைக் கண்”
உவமைத் தொகை.
“தாமரை போன்ற கண்”
உவமை விரி.
“தாமரை போன்ற”
இடைச் சொற்றொடர்
“போன்ற கண்”
இடைச் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சத்தொடர்.

அன்மொழித் தொகை விரிந்தவிடத்து வேற்றுமை முதலிய தொகாநிலைத் தொடராகும்
“கார்குழல்”
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
“கார் போன்ற குழலை உடைய பெண்”
உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
பெண் என்னும் முதல் கொண்டு முடிந்தது.

“முற்றுஈர் எச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறுஉருபு இடைஉரி அடுக்குஇவை தொகாநிலை” (நன்னூல் : 374)

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
உருபுகள் பெற்றுவரும் வேற்றுமைகள் இரண்டு முதல் ஏழு வரை மொத்தம் ஆறு என அறிவோம். இந்த ஆறு வேற்றுமைகளின் உருபுகள் வெளிப்பட நின்று தொடரும் தொடர் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் எனப்படும்.

சான்றுகள்
“பாடத்தைப் படித்தான்”
இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்.

“கத்தியால் குத்தினான்”
மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

“மகளுக்குக் கொடுத்தான்”
நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

“ஏணியில் இறங்கினான்”
ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

“நண்பனது வீடு”
ஆறாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

“வான்கண் நிலா”
ஏழாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

வினைமுற்றுத் தொடர்
வினைமுற்று என்பது ஓர் எழுவாயின் செயல் நிலையைக் காட்டி வாக்கியத்தை முடிக்கும் சொல்லாக அமையும்.

சான்று
“கம்பன் பாடினான்”.
இவ்வாக்கியத்தில் ‘பாடினான்’ என்னும் வினைக்குக் காரணமான பெயர் ‘கம்பன்’. எனவே கம்பன் என்பது இவ்வாக்கியத்தின் எழுவாய்.

கம்பன் செய்த செயலைக் குறிப்பிடும் வினைச்சொல் ‘பாடினான்’ என்பது. இது வினைப் பயனிலை என்றும் வினைமுற்று என்றும் அழைக்கப்படும்.

வாக்கியத்தின் இறுதியில் இடம்பெற வேண்டிய வினைமுற்று முதலில் இடம்பெற்று ஆறு வகைப் பெயரையும் கொண்டு முடியும். இது வினைமுற்றுத் தொடர் எனப்படும்.

“செய்வாள் அவள்”
பொருட்பெயர் கொண்டு முடிந்தது

“குளிர்கிறது நிலம்”
இடப்பெயர் கொண்டு முடிந்தது.

“வந்தது கார்”
காலப் பெயர் கொண்டு முடிந்தது.

“வணங்கியது கை”
சினைப் பெயர் கொண்டு முடிந்தது.

“சிறந்தது நன்மை”
பண்புப் பெயர் கொண்டு முடிந்தது.

“உயர்ந்தது வாழ்க்கை”
தொழில் பெயர் கொண்டு முடிந்தது.

‘பொதுவியல்பு ஆறையும் தோற்றிப் பொருட்பெயர்
முதல்அறு பெயர்அலது ஏற்பில முற்றே’ 
(நன்னூல் : 323)

வினைமுற்று இரு வகை

1) தெரிநிலை வினைமுற்று
2) குறிப்பு வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் ஆறையோ அவற்றில் சில, பலவற்றையோ காட்டும். மேலே எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்ட வினைமுற்றுகள் யாவும் தெரிநிலை வினைமுற்றுகள் என்பதை அறியலாம்.

‘செய்பவன் கருவி நிலம்செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே’ 
(நன்னூல் : 320)

குறிப்பு வினைமுற்று என்பது, வினைமுதல், கருவி, இடம், செயல் காலம், செயப்படுபொருள் என்னும் ஆறில் செய்பவனை மட்டும் காட்டும். இதுவும் பொருட்பெயர் முதலிய ஆறையும் கொண்டு முடியும்.

“நல்லன் அவன்”
பொருட்பெயர் கொண்டு முடிந்தது.

“நல்லது நிலம்”
இடப்பெயர் கொண்டு முடிந்தது.

“நல்லது கார்”
காலப்பெயர் கொண்டு முடிந்தது.

“நல்லது கண்”
சினைப்பெயர் கொண்டு முடிந்தது.

“நல்லது வெண்மை”
பண்புப்பெயர் கொண்டு முடிந்தது.

“நல்லது பணிவு”
தொழில்பெயர் கொண்டு முடிந்தது

‘பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே’ 
(நன்னூல் : 321)

எச்சத் தொடர்
பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் தொடர் எச்சத் தொடர் ஆகும்.இஃது இரு வகைப்படும்.

பெயரெச்சத் தொடர்
எச்சம் என்பது ‘முற்றுப்பெறாத வினைச்சொல்’ ஆகும். முடிக்கும் சொல்லாகப் பெயரைப் பெற்றுவரும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். எச்சமும் பெயரும் சேர்ந்த தொடர், பெயரெச்சத் தொடர் எனப்படும்.
– செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் வாய்பாட்டில் வரும்.
– இறந்தகாலம் (செய்த), நிகழ்காலம் (செய்கின்ற), எதிர்காலம் (செய்யும்) என்னும் முக்காலத்தையும் காட்டும்.
– செயலைக் காட்டும்.
– செயலுக்குரிய வினைமுதலின் பால் என்ன என்பதைக்காட்டாது
– வினைமுற்றால் அறியப்பெறும் வினைமுதல், கருவி, இடம், செயப்படுபொருள் ஆகியவற்றைக் காட்டாது.
– ஆறுவகைப் பெயர்களையும் கொண்டு முடியும்.

சான்று
“படித்த இளைஞன்”
எச்சம் பொருட்பெயர் கொண்டு முடிந்தது.

“பார்த்த ஊர்”
எச்சம் இடப்பெயர் கொண்டு முடிந்தது.

“கடந்த தை”
எச்சம் காலப்பெயர் கொண்டு முடிந்தது.

“முறிந்த கால்”
எச்சம் சினைப்பெயர் கொண்டு முடிந்தது.

“சுவைத்த இனிப்பு”
எச்சம் பண்புப்பெயர் கொண்டு முடிந்தது.

“முடிந்த தேர்தல்”
எச்சம் தொழிற்பெயர் கொண்டு முடிந்தது.

“செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டில்
காலமும் செயலும் தோன்றிப் பாலொடு
செய்வது ஆதி அறுபொருள் பெயரும்
எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே” (நன்னூல் : 340)

வினையெச்சத் தொடர்
வினையைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும். எச்சம் வினைகொண்டு முடியும்போது அது வினையெச்சத் தொடர் ஆகிறது.

வினையெச்சம்
– தொழிலையும் காலத்தையும் காட்டும்.
– செயலுக்குரிய வினைமுதலின் பால் என்ன என்பதைக்காட்டாது
– செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்னும் இறந்தகால வாய்பாட்டில் வரும்.
– செய என்னும் நிகழ்கால வாய்பாட்டில் வரும்.
– செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்னும் எதிர்கால வாய்பாட்டில் வரும்.
– வினையைக் கொண்டு முடியும்.

சான்று
“படித்து வந்தான்”
இவற்றுள், படித்து என்பது, படித்தல் என்னும் தொழிலும், இறந்த காலமும் காட்டி, அத்தொழிலை நிகழ்த்தும் வினைமுதலின் பால் என்ன என்பதைக் காட்டாமல் வினைச்சொல்லை முடிக்கும் சொல்லாகப் பெற்று வந்துள்ளது.

‘தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே.’ 
(நன்னூல் : 342)

எழுவாய்த் தொடரும், விளித்தொடரும்
முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் கொண்ட தொடர்களை முறையே எழுவாய்த் தொடர் என்றும், விளித்தொடர் என்றும் கூறுவர்.

எழுவாய்த் தொடர்
எட்டு வேற்றுமைகளில் முதல் வேற்றுமை எனப்படுவது எழுவாய் வேற்றுமை, வேற்றுமைகளுக்குரிய ஐ முதலிய உருபுகள் ஏற்காமல், திரிபில்லாத பெயராய் விளங்குவது எழுவாய் வேற்றுமையாகும்.

இது வினை, வினா, பெயர் ஆகியவற்றைப் பயனிலையாகப் பெற்று எழுவாய்த் தொடராக வரும்.

பெயர் மட்டும் தனித்து வரும்பொழுது எழுவாய் ஆகாது. பெயர் தனக்குரிய பயனிலையைக் கொண்டு முடியும் பொழுதே அது எழுவாய் என்னும் தகுதி பெறும் என்பது அறிக.

சான்று
“பாரதிதாசன் பாடினார்”
“பாரதி வாழ்க”

இத்தொடர்களில் ‘பாரதிதாசன்’ ‘பாரதி’ என்னும் எழுவாய்கள் முறையே ‘பாடினார்’, ‘வாழ்க’ என்னும் வினைமுற்றுகளைப் பயனிலையாகப் பெற்று முடிந்தன.

“காந்தி தலைவர்”
“இவர் பெரியார்”
‘இத்தொடர்களில் ‘காந்தி’, ‘இவர்’ என்னும் எழுவாய்கள், முறையே ‘தலைவர்’, பெரியார்’ என்னும் பெயர்களைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தன.

“அவன் யார்?”
“மலர் யாது?”
இத்தொடர்களில் ‘அவன்’, ‘மலர்’ என்னும் எழுவாய்கள், முறையே ‘யார்’, ‘யாது’ என்னும் வினாப்பெயர்களைப் பயனிலையாகக்கொண்டு முடிந்தன.’

மேலே காட்டிய எழுவாய்ப் பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காமலும், தம் பெயரில் எவ்வித் திரிபும் இல்லாமலும் பயனிலைகளைப் பெற்று வந்துள்ளமை காண்க.

விளித் தொடர்
எட்டாம் வேற்றுமை, ‘விளி வேற்றுமை’ எனப்படும். இவ்விளி வேற்றுமையினுடைய உருபுகள், படர்க்கைப் பெயரின் ஈற்றில் மிகுதலும், திரிதலும், கெடுதலும், இயல்பாதலும், ஈற்றயல் எழுத்துத் திரிதலுமாம். இது ஏவல் வினையைக் கொண்டு முடியும். விளியும் ஏவல்வினையும் சேர்ந்த தொடர் விளித் தொடர் எனப்படும்.

விளி வேற்றுமையின் உருபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை, முன்னிலையில் அழைக்கப்படும் (விளிக்கப்படும்) பொருளாக வேறுபடுத்தும்.அப்படி வேறுபட்ட விளிக்கப்படும் பொருளே இவ்வுருபுகளின் பொருளாகும்.

சான்று
“கம்பனே, கேளாய்”
கம்பன் என்பதன் ஈறு ஏகாரம் பெற்று வந்துள்ளது. (மிகுதல்)

“தம்பீ, கேளாய்”
தம்பி என்பதன் ஈறு ஈகாரமாயிற்று. (திரிதல்)

“செல்வ, கேளாய்”
செல்வன் என்பதன் ஈறு போயிற்று. (கெடுதல்)

“அம்மா கேளாய்” (இயல்பு)

“முருகா கேளாய்”
முருகன் என்பதன் ஈற்று எழுத்துக் கெட்டு ஈற்றயல் எழுத்து க – கா ஆயிற்று (அயல் திரிதல்)

“எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்புஅயல்
திரிபும் ஆம்பொருள் படர்க்கை யோரைத்
தன்முக மாகத் தான்அழைப் பதுவே” 
(நன்னூல் : 303)

இடைச் சொற்றொடர்
இடைச்சொல் என்பது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் அற்றது; பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொல்லாகும்.

இஃது ஒன்பது வகைப்படும். அவையாவன:
(1) வேற்றுமை உருபுகள் – ஐ, ஆல் முதலியன
தேனைக் குடித்தான் (தேன்+ஐ)
(2) விகுதி உருபுகள் – ஆன், ஆள் முதலியன
நடந்தான் (நட+த்+த்+ஆன்)
(3) இடைநிலை உருபுகள் – ப், வ், த் முதலியன
நடந்தாள் – (நட+த்+த்+ஆள்)
(4) சாரியை உருபுகள் – அன், அத்து முதலியன
மரத்தை (மரம்+அத்து+ஐ)
(5) உவம உருபுகள் – போல, புரைய முதலியன
புலி போலப் பாய்ந்தான் (போல)
(6) தம்பொருள் உணர்த்துவன – அ (சுட்டு), ஆ (வினா) முதலியன
அப்பொருள் – அ+பொருள் (சுட்டு)
அவனா – அவன்+ஆ (வினா)
(7) ஒலிக் குறிப்பு முதலிய பொருள் உணர்த்துவன – ஓ ஓ, ஐயோ
முதலியன
ஐயோ! ஐயோ!
(8) (செய்யுளில்) இசைநிறையாய் வருவன
“ஏஎ இவளொருத்தி…”
(9) அசைநிலையாய் வருவன
“மற்று என்னை ஆள்க”

இசைநிறை என்பது, வேறுபொருள் உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து நிற்பது.

அசைநிலை என்பது, வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச் சொல்லோடும் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது.

உவம உருபுகளாயும் ஒலிக்குறிப்பாயும், செய்யுளில் இசைநிறையாயும் அசைநிலையாயும் வரும் இடைச்சொற்களைத் தொடர்ந்து வரும் தொடர்கள் இடைச் சொற்றொடர் எனப்படும்.

இவையேயன்றி என, மற்று முதலிய இடைச்சொற்களைத் தொடர்வனவும் இடைச் சொற்றொடர் எனப்படும்.

உரிச் சொற்றொடர்
உரிச்சொற்கள் பெயர் அல்லது வினைச்சொற்களுக்கு அடையாய் நின்று தொடர வருவது உரிச்சொற்றொடர் எனப்படும். (உரிச்சொல்லைப் பற்றிய செய்திகள் முந்தைய பாடத்தில் கூறப்பட்டன. அவற்றை நினைவு கொள்க.)
– இசையும் குறிப்பும் பண்பும் ஆகிய பல்வேறுபட்ட குணங்களை உணர்த்தும் பெயராய் வரும்.
– பல சொல் ஒரு பண்பையும், ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தும்.
– பெயர், வினைகளை விட்டு நீங்காது அவற்றிற்கு அடையாய் வரும்.
– செய்யுளுக்கு உரியனவாய் வரும்.

இசை, ஓசை, குறிப்பு என்பன மனத்தினால் உணரப்படுவன. பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுவது.

சால, உறு, தவ, நனி, கூர், கழி – மிகுதி என்னும் ஒரு குணம் குறித்தது.
கடி – காப்பு, கூர்மை, நாற்றம், அச்சம் முதலிய பல குணம் குறித்தது.

தடக்கை – பெயர்க்கு அடையாக வந்தது.
நனி வருந்தினான் – வினைக்கு அடையாக வந்தது.

“வாரணம் பொருத மார்பு” – இதில் வாரணம் என்பது யானையைக் குறித்துச் செய்யுளில் வழங்கி வந்துள்ள சொல் ஆகும்.

“பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்” 
(நன்னூல் : 442)

முடிவுரை
தொகாநிலைத் தொடர்கள் பற்றியும் அவற்றின் பிரிவுகள் மற்றும் உபபிரிவுகள் பற்றியும் இங்கே விரிவாக பதியபட்டுள்ளது. இலக்கணம் கற்கும் மாணவர்களை நோக்காகக் கொண்டு மட்டுமல்ல. தமிழ் ஆர்வலர்களுக்கும் இது பயனுள்ள பதிவாகும் என்பது எமது கருத்தாகும்.

உங்களைப் போன்றே… உங்களில் ஒருவன்தான் நானும்.. என்னையும் ஒரு மாணக்கனாக ஏற்று பிழை பொறுத்து தலையில் குட்டி வழிநடுத்துமாறு மொழிவல்லோரையும் இலக்கண நூல்வல்ல ஆசிரியப் பெருமக்களையும் இங்கே பணிவாக வேண்டுகிறேன்.

சொல்லிலக்கணம் முற்றுப் பெறுகின்றது. அடுத்து பொருளிலக்கணம் என்ற தொடரில் மீண்டும் சந்திப்போம்!


சொல்லிலக்கணம் : தொடர் 17-19

சிறீ சிறீஸ்கந்தராஜா
20/04/2013 -10/05/2013

தொகுப்பு – thamil.co.uk