ஆளி விதை Flax seed

மூலிகையின் பெயர் – ஆளிவிதை
தாவரவியல் பெயர் – LEPIDIUM SATIVUM
பயன்தரும் பாகங்கள் – இலை, பூ, விதை, வேர்
ஆளி.ஆளிஆளி பூ

இலை
செயல் – வெப்பமுண்டாக்கி  STIMULANT, சிறுநீர் பெருக்கி  DIURETIC
குணம் – உடலுக்கு வன்மை தரும், நீர்க்கட்டை உடைத்து நீரை வெளியேற்றும்

பூ
செயல் – உரமாக்கி  TONIC
குணம் – இளைத்த உடலுக்கு பலத்தை உண்டாக்கும். இனிப்பு பதார்த்தங்களின் மேல் இதனை  தூவி சாப்பிடலாம்.

ஆளி விதைவிதை
செயல் – உடல் தேற்றி ALTERATIVE
மலமிளக்கி APERIENT
காமம் பெருக்கி APHRODISIAC
அகட்டுவாய்வகற்றி CARMINATIVE
உள்ளழாற்றி DEMULCENT
சிறுநீர் பெருக்கி DIURETIC
ருதுவுண்டாக்கி EMMENAGOGUL
பால் பெருக்கி GALACTAGOGUE
குணம் – அசீரணம், சீதபேதி, மண்ணீரல் வீக்கம், வயிற்றுப் பொருமல், விக்கல் சருமரோகம், கபநோய், குசுமரோகம் (வெள்ளைபடுதல்) மூலம், பெண்களுக்கு பாலைச் சுரப்பிக்கும், ஆரம்ப கருவை கலைக்கும், நீரை வெளிப்படுத்தும் சுக்கில விருத்திக்கும், மலத்தை தள்ளும், உட்சூட்டை தணிக்கும்.

“வீக்கம் அதிவாந்தி னேனி வலி வாய்வுந்
தூக்கு நரம் பின்குத்தல் தொல்லழலை – ஒக்காளம்
மீளியருசி விதை வாதமும் போகும்
ஆளிவிதை தன்னால் அறி” – அகத்தியர் குணவாகடம்

மருத்துவ குணம் 
மேற்கண்ட குணங்களைப் பெற ஒருபங்கு விதைப் பொடிக்கு இருபது பங்கு நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராக்கி அல்லது ஒரு பங்கு விதைப் பொடிக்கு பத்துப்பங்கு குளிர்ந்த நீரில் வைத்தாகிலும் எடுத்த நீரை 100 ml to 150ml வீதம் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடித்துவரவும்.

ஒரு பங்கு பொடி செய்த விதையை எட்டுப் பங்கு நீரில் கொதிக்க வைத்து 50ml வீதம் அடிக்கடி குடித்து வர விக்கல் தீரும்.

விதையை பொடித்து பாலில் போட்டு சாப்பிட்டு வர தாய்மார்களுக்கு பாலைச் சுரப்பிக்கும்.

விதியின் சூரனத்தைச் பொடித்து அதன் சமளவு சீனி அல்லது கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர அஜீரண பேதி, சீதபேதி, அசீரணம் தீரும்.

இதே பொடியை ஒரு பங்குக்கு இரண்டு பங்கு நாட்டுச்சர்க்கரை பாகு செய்து அதில் பொடி போட்டு தேவையான் அளவு தேன் நெய் விட்டு கிளறி லேகியம் போல் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட்டு வர மேல் படி குணம் தரும், வயிற்றுப் பொருமல், பாலை சுரப்பிக்கும், சுக்கிலத்தைப் பேருக்கும் வெள்ளை படுதல், இடுப்புவலி தீரும்.

வாத வலிகளுக்கு எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து பத்துப் போடலாம்.

மேகப்படைகளுக்கு ஆசனக் கடுப்பிற்கு இதன் வேரை பற்றுப் போடலாம்.

மற்றும் மருத்துவர்கள் தாங்கள் அனுபவத்திற்கு ஏற்ப மற்ற மருந்துகளிலும் கலந்து கொடுக்கலாம். இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

 

ஆளி விதையும்… அதன் ஆழமான ஆரோக்கிய பலன்களும்

இந்த உலகத்திலேயே உள்ள மிகவும் சக்தி மிக்க உணவுகளில் ஒன்று என சிலர் இதை சொல்கிறார்கள். அதிலும் இந்த விதை இதய நோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து என்றும் சொல்கிறார்கள்.

சின்னஞ்சிறு விதையின் புகழ் பல நூற்றாண்டுகளாகவே உயர்ந்து, வளர்ந்து, நீண்டு, விரிந்து சென்று கொண்டிருக்கிறது. அது என்ன விதை? கிமு. 3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பாபிலோனில் பயிரிடப்பட்டு வந்த ஆளி விதை தான் இவ்வளவு மருத்துவ பலன்கள் கொண்ட விதை. கி.பி. 8-ம் நூற்றாண்டில் ஆளி விதையின் ஆரோக்கிய பலன்களை அறிந்த சார்லெமாக்னே என்ற மன்னர், தனது குடிமக்கள் அனைவரும் ஆளி விதையை சாப்பிட வேண்டும் என சட்டம் இயற்றினார்! பதிமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இந்த பலன்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

ஆளி விதையில் ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானவை மூன்று குணங்கள்:

1.ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள்: இவை இதயத்திற்கு உகந்த நண்பனாக இருக்கும் அமிலங்கள் ஆகும். ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது. மீன் சாப்பிடாதவர்கள் இதனை அதற்கு பதிலாக சாப்பிடலாம்.

2.லிக்னான்ஸ் (Lignans): ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜன் எதிர்ப்பு குணங்கள் பிரசித்தி பெற்றவையாகும். பிற தாவர உணவுகளை விட 75 முதல் 800 மடங்குகள் அதிக அளவிலான லிக்னான்ஸ்கள் ஆளி விதையில் உள்ளன.

3.நார்ச்சத்து: ஆளி விதையில் கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. Magnesium, Phosphorous, Copper, Thiamine, Maganese and Dietary Fiber (நார் சத்து ) அதிக அளவில் இருக்கின்றது.

ஆளி விதையின் ஆழமான ஆரோக்கிய பலன்கள்

புற்றுநோய் எதிர்ப்பு
மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளி விதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

உடலில் உள்ள துடிப்பு மிக்க ஹார்மோன்களை தாக்கும் புற்றுநோய்கள் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு சாப்பிடும் மருந்தான டாமோக்ஸிபென்னின் (Tamoxifen) பாதையில் குறுக்கிடாமல் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் ஆளி விதையில் உள்ள லிக்னான்ஸ்கள் செயல்படுகின்றன.

இதயத்தின் நண்பன்
எரிச்சலை தவிர்த்தல் மற்றும் இதயத் துடிப்பை சமனப்படுத்துதல் போன்றவற்றை செய்யும் திறன் மிக்க மருந்தாக ஒமேகா-3 உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒமேகா-3 நிரம்பியுள்ள ஆளி விதைகள் தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்க்கின்றன. வெள்ளை அணுக்களை இரத்த நாளங்களின் உள் வளையங்களுடன் இணைத்து வைப்பதன் மூலம் தமனிகளில் கழிவுகள் சேருவதையும் ஒமேகா-3 தவிர்க்கிறது. இந்த ஒமேகா-3 ஆளி விதைகளில் பெருமளவு குவிந்துள்ளது.

நீரிழிவு
ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மேம்படுகிறது என்று முன்னோடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஹீமோகுளோபின் A1c ஆய்வுகளின் போது, இரத்தத்தில் 2 வகையான நீரிழிவு நோய்கள் கணடறியப்படுகின்றன)

எரிச்சலும், எதிர்ப்பும்
ஆளி விதையில் உள்ள ALA மற்றும் லிக்னான்ஸ் ஆகிய இரண்டு பொருட்களும் பர்கின்ஸன் நோய் (Parkinson’s Disease) மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுடன் வரக் கூடிய எரிச்சலை தவிர்க்கும் குணத்தை கொண்டுள்ளன. இந்த விதைகள் எரிச்சலைத் தூண்டக் கூடிய சில பொருட்கள் வெளிப்படுவதைத் தவிர்க்கின்றன என்று பிட்ஸ்பாட்ரிக் (Fitzpatrick) குறிப்பிடுகிறார்.

மனிதர்களுக்கு ஏற்படும் எரிச்சலை தவிர்க்கும் குணம் ALA-விற்கு உண்டு. மேலும், விலங்குகளின் மேல் செய்யப்பட்ட ஆய்வுகளில் ஆளி விதையின் லிக்னான்கள் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களின் அளவை குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

தமனிகளின் எரிச்சலை தவிர்ப்பதன் மூலம் அவற்றில் கழிவுகள் சேர்வது தவிர்க்கப்படுகிறது. இந்த வகையில் ஆளி விதைகள் மாரடைப்பு ஏற்படுவதையும், வலிப்பு ஏற்படுவதையும் தவிர்க்கும் அருமருந்தாக உள்ளது.

ஹாட் ஃப்ளாஷ் (Hot Flashes)
2007-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில், மாதவிடாயின் இறுதி பருவத்தில் உள்ள பெண்கள், தினமும் 2 தேக்கரண்டிகள் ஆளி விதையை உணவு, பழரசம் அல்லது தயிரில் கலந்து சாப்பிடுவதன் மூலம் தங்கள் உடலில் உள்ள ஹாட் ஃப்ளாஷ்களை (Hot Flashes) குறைத்திட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையில் சுமார் 57% அளவிற்கு ஹாட் ஃப்ளாஷ்களை குறைத்திட முடியும். இந்த வகையான பலன்களை குறைந்தபட்சம் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்களிலோ பெண்கள் அடைந்து, ஆச்சரியப்படும் சூழலை ஆளி விதை உருவாக்கும்.

 

ஆளி விதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால் மூன்று நன்மைகள் உறுதியாக உண்டு. முதலில் இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன.

இந்த மூன்று சத்துகளும் முதலில் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.

இந்த லிக்னன்ஸ் இருப்பதால் ஆளிவிதை உடலில் சேர்ந்ததுமே உயர் இரத்த அழுத்தமும், இதய நோய்களும் உடனே குணமாக ஆரம்பிக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் காரணிகள் எங்கே இருந்தாலும் லிக்னன்ஸ் அதைக் கரைத்து வெளியேற்றி விடுகிறது. பரிசோதனைச் சாலையில், விலங்குகளுக்கு 7 வாரங்கள் தினமும் ஆளிவிதை கொடுத்ததில் 50% மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கி குணமாகியிருந்ததை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.

மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது.

மீனில் கிடைக்கும் அதே தரத்துடன் ஒமேகா-3 இந்த விதைகள் மூலம் எளிதில் கிடைப்பதால் நரம்பின் நுண்ணறைகள் மிகவும் பலம் பெறுகின்றன. இதனால் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு மன இறுக்கமோ அ ல்லது ஞாபக சக்தி குறைபாடோ வராது. மூளையின் ஞாபகசக்தி கலங்கள் சுருங்காமல் பார்த்துக் கொள்வதில் இந்த விதை முதலிடத்தில் இருக்கிறது.

அதிக சக்தியும் அதிகக் கொழுப்பும் உள்ள இந்த அரிய உணவை, சுண்டலாகச் சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலையும் வேண்டாம். இதயத்திற்கும் மூளைக்கும் நன்மை தரும் கொழுப்புதான் இவை. அதிக சக்தியால் குறைவான உணவையே உண்போம். காராமணி, கொண்டைக்கடலை போல் அதிகப் பசியையும் இந்த ஆளி விதை கட்டுப்படுத்துகிறது. கடைகளில் ஃப்ளாக்ஸ் சீட், லின்சீட், அல்ஸி என்ற பெயர்களில் இந்த விதை விற்பனையாகிறது.

கொலஸ்டிரால், சக்கரையின் அளவினை அதிகம் குறைக்க உதவுக்கின்றது.

மலச்சிக்கல் குறைய (ஆளி விதை)–  2 மேசைக்கரண்டி ஆளி விதை எண்ணெயை எடுத்து அதிகமான தண்ணீரில் கலந்து மதியம், இரவு சாப்பாட்டிற்கு பிறகு குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

கோழைக்கட்டு குறைய‌ – ஆளி விதை மற்றும் எள்ளை தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து 1 தேக்கரண்டி அளவு பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கோழைக்கட்டு, மூச்சுக்குழலழற்சி ஆகியவை குறையும்.

ஆளிவிதையினை எப்பொழுதும் அப்படியே சாப்பிட கூடாது. அதனை முழுவதாக அப்படியே சாப்பிட்டால், அது ஜீரணம் ஆகாமல் அப்படியே வெளியேறிவிடும். அதனை சாப்பிட பலனும் கிடையாது. அதனால், கண்டிப்பாக அதனை பொடித்து தான் சாப்பிடுவது நல்லது.

இனி இதனை கொண்டு உணவு வகைகள் எவ்வாறு உண்டாக்குவது என்று பார்ப்போம்..!!

ஆளிவிதை சாதம்

தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம் -2 கப்
Flax Seeds பொடி செய்ய :
ஆளிவிதை – 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 மேசைக்கரண்டி
தனியா – 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தே.கரண்ட
உப்பு – 1/2 தே.கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு – 3 பல் தோலுடன் (வறுக்க வேண்டாம்)
(குறிப்பு : இதில் காய்ந்த மிளகாயினை நீக்கி சிறிது மிளகினை சேர்த்து அரைத்து கொள்ளலாம்.)

தாளித்து கொள்ள
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு, கடலை பருப்பு, கருவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை
பொடி செய்து கொள்ள
முதலில் ஆளிவிதை, தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு என ஒவ்வொரு பொருட்களாக தனி தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.

பிறகு காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், புளி என்று ஒவ்வொன்றாக மற்ற பொருட்களையும் சேர்த்து வறுத்து வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

மிக்ஸியில் முதலில் தனியா போட்டு பொடிக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாயினை சேர்த்து பொடிக்கவும்.

அத்துடன் கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு, கடுகு, வெந்தயம் சேர்த்து பொடிக்கவும்.

பிறகு ஆளிவிதை, புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடித்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து 1-2 முறை Pulse Modeயில் இத்துடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்,

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு பொடியினை சேர்த்து கிளறவும். சுவையான சத்தான சாதம் ரெடி.

குறிப்பு 
புளியினை கடாயில் வறுப்பதால் சூட்டில் சிறிது இளகிவிடும். மிக்ஸியில் போட்டு அரைக்கும் பொழுது ஈஸியாக இருக்கும்.

ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக தான் வறுக்க வேண்டும். அதே மாதிரி அரைக்கும் பொழுதும் தனி தனியாக அரைத்தால் ரொம்ப சூப்பராக இருக்கும்.

இந்த பொடியினை இட்லி, தோசையுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

அதிகம் பொடி செய்து கொள்வதாக இருந்தால், இதே மாதிரி செய்து வைத்து கொள்ளலாம். அப்படி செய்யும் பொழுது புளியினை சேர்க்க வேண்டாம்.

ஆளி விதை இட்டலி பொடி

தேவையானவை
ஆளி விதை – 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் – சிறு கட்டி
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா – தலா 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணெய் -1/4தேக்கரண்டி

செய்முறை
பெருங்காயம், மிளகாய் தவிர அனைத்தையும் வெரும் கடாயில் வறுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து, பின் மிளகாயை வறுக்கவும்.

அனைத்தையும் ஆறியதும் ஒன்றாக உப்பு சேர்த்து அரைக்கவும்.இந்த பொடியை உருளை,வாழைக்காய் வறுக்கும் போது இந்த பொடியை தூவி வறுக்கலாம்.

ஆளி விதை உருண்டைஆளி விதை உருண்டை

தேவையானவை
1/2 கப் ஆளி விதை
1/2 கப் பொட்டு கடலை
2 தேக்கரண்டி எள்
2 ஏலக்காய்
4 கிராம்பு
1 சிறிய துண்டு ஜாதிக்காய் மற்றும் ஜாதி பத்திரி
1/2 கப் வெல்லம்
4 பாதாம் பருப்பு, செதுக்கி வைக்கவும்
8 முந்திரி பருப்பு
4 பதப்படுத்திய அத்தி பழம்

செய்முறை
ஆளி விதையை வெறும் வாணலியில் படபடவென பொரியும் வரை வறுத்து எடுக்கவும். எள்ளையும் அதே போல படபடவென பொரியும் வரை வறுக்கவும். பொட்டுகடலையையும் நன்கு வறுத்தெடுக்கவும்.

முந்திரியை சிவக்க வெறும் வாணலியில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக உடைத்து வைக்கவும். அத்தியையும் சிறு துண்டுகளாக்கவும்.

மிக்சியில் ஆளி விதை, எள், ஏலக்காய், ஜாதிக்காய் மற்றும் ஜாதி பத்திரியை பொடித்து எடுக்கவும். பிறகு பொட்டுக்கடலை பொடித்து எடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடித்தது, துண்டுகளாக்கிய பருப்பு மற்றும் அத்தியை எடுத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை கல்லினால் நசுக்கி சேர்க்கவும். கைகளினால் நன்கு கலந்து விடவும். இப்போது தேன் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். ஒரு காற்று புகா பாத்திரத்தில் அடுக்கி வைக்கவும். ஒரு வார காலத்திற்கு சேமித்து வைத்து சுவைக்கலாம். மிக மிக அருமையான மணமிக்க ஆளி விதை உருண்டை தயார்.

-உணவே மருந்து
-ஆரோக்கியமான வாழ்வு
-mannaisamayal.blogspot.co.uk

தொகுப்பு  – thamil.co.uk