இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள்

பூச்சி விரட்டி மருந்துகள்

பூச்சி விரட்டிகள் தயார் செய்தல்

உழவுத் தொழிலில் ஒரு சில பூச்சிகள் பயிர்களை அழித்து விடுகின்றது. இதனால் செயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபடுகிறது இதனால் நாம் உண்ணும் உணவும் மெல்ல நஞ்சாகி விட்டது மற்றும் இயற்கை வளம் முழுமையாக அழிக்கபட்டு வருகிறது. ஆனால் இயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் இயற்கை பூச்சி விரட்டி கையாளப்படுகிறது. இதனால் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக உள்ளது மற்றும் இயற்கை வளம் முழுமையாக பாதுகாத்து வரப்படுகிறது.

பூச்சிகளை விரட்டுவதற்கு சில இயற்கைக் கரைசல்கள் பயன்படுகின்றன. இவற்றில் உள்ள அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்டால் நம்மால் எந்த ஒரு சூழ்நிலையிலும் நல்ல பூச்சி விரட்டியை தயார் செய்து கொள்ள முடியும். பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது. அவற்றை விரட்டுவதே நோக்கம். இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரிங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.

பின்வரும் இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும்
1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள்-  ஆடுதொடா, நொச்சி போன்றவை
2. ஒடித்தால் பால் வரும் இலை தழைகள்- எருக்கு, ஊமத்தை போன்றவை
3. கசப்புச் சுவை மிக்க இலை தழைகள்- வேம்பு., சோற்றுக் கற்றாழை போன்றவை
4. உவர்ப்பு சுவை மிக்க இலை தழைகள்- காட்டாமணக்கு போன்றவை
5. கசப்பு உவர்ப்பு சுவைமிக்க விதைகள்- வேப்பங்கொட்டை. எட்டிக் கொட்டை
இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.

இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஓவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறிகின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும். சாணம். சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும். புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இன்னும் பூச்சிகள் தவறித் தின்றுவிட்டு வயிற்றுக்குள் தொல்லை ஏற்பட்டு இறந்துவிடுகின்றன. இதனால் முட்டை பொரிப்பது குறைச்து விடுகிறது. இனப்பெருக்கம் தடைப்பட்டு விடுகிறது. எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது. தப்பியவை ஊனமடைகின்றன. இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திக் சென்று விடுகின்றன.

மாதிரி
சோற்றுக் கற்றாழை அல்லது பிரண்டை
எருக்கு அல்லது ஊமத்தை
நொச்சி அல்லது பீச்சங்கு அல்லது சீதா இலை
வேம்பு அல்லது புங்கம்
உண்ணிச் செடி அல்லது காட்டாமணக்கு அல்லது ஆடாதொடை
மேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும் ஆக 10 கிலோ இலைகளுடன் முதலில் சொன்ன விதைகளில் எதாவது ஒன்றை 100- 200 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இவற்றை கலந்து ஊறல் முறையிலும் வேகல் முறையிலும் பூச்சி விரட்டிகள் தயாரிக்கலாம்.

ஊறல் முறை

இலைகளையும். விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்துக் கொண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முதல் 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கலந்து கூழாக மாறிவிடும். இவற்றை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்த பயிர்களில் அடிக்கலாம்.

மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை

மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்க தேவையான தாவரங்கள் கசப்புத் தன்மையுள்ள இலைகள் (வேம்பு) ஒடித்தால் பால் வரக்கூடிய இலைகள் (காட்டாமணக்கு) ஆடுதிங்காத இலைகள் (ஆடாதோடை) எருக்கு, நொச்சி, போன்ற இலைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ வீதம் எடுத்துக் கொள்ளவும். அவற்றை இடித்து சிறு துகள்களாக எடுத்துக் கொண்டு ஒரு பிளாஸ்டிக் டிம்மில் போட்டு ஒரு கிலோ இலைகளுக்கு ஒரு லிட்டர் கோமியம் என்ன விகிதத்தில் சேர்த்து நன்கு கலக்கி இலைகள் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 3 நாட்களில் இக்கரைசல் தயாராகும். இவற்றை தினமும் காலை, மாலையில் குச்சி வைத்து நன்கு கலக்கி விட வேண்டும். பிறகு வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் கலந்த பயிர்களில் தெளித்தால் பூச்சிகள் நம்முடைய வயலுக்கு வராது. இவற்றை பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம். செலவும் குறைவு பயிர் பாதுகாப்பாகும்.

இயற்கை மூலிகை பூச்சி விரட்டி தயார் செய்வதற்காக ஆடு திங்காத தழைகள், ஒடித்தால் பால் வரக்கூடிய இலைகள், கசப்பு தன்மையுள்ள இலைகள் ( ஆட தோடை, வேப்பிலை, எருக்கம் இலை, காட்டாமணக்கு, ஆவாரம் இலை, நொச்சி இலை இவைகளில் தலா 5 வகையான இலைகளில் தேர்வு செய்து ஒவ்வொரு தலைகளிலும் 2 கிலோ வீதம் சேகரித்து அவற்றை இடித்து இலைகள் மூழ்கும் அளவு ( மாட்டு சிறு நீர் ) கோமியம் ஊற்றி வைக்க வேண்டும். பிறகு தினமும் நன்றாக 3 வேளையும் குச்சியை வச்சு எதிர் எதிர் திசையில் சுமார் 15 முறை நல்லா கலக்கி விட, 3 நாட்களில் இவை தயாராகிவிடும். 10 நாள் கழித்து 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் (500 மில்லி) இந்த மருந்தை கலந்து இதுகூட காதிசோப்பு இல்லாட்டி சோறு வடிச்ச கஞ்சி கலந்து பயிருக்கு தெளிக்க வேண்டும்.

இது பூச்சி கொல்லி அல்ல, பூச்சி விரட்டியாகதான் இந்த தாவரக் கரைசல் வேலை செய்யும். இதன் நாற்றம் தாங்கமுடியாமல்  பூச்சியெல்லாம் ஓடிப்போயிடும்.

இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள் இவை:

தசகவ்யா
பீஜாமிர்தம்
அக்னி அஸ்திரம்
பிரம்மாஸ்திரம்
மண்பானை செடித்தைலம்
அரப்பு மோர் கரைசல்
வேம்பு புங்கன் கரைசல்
நீம் அஸ்திரா
சுக்கு அஸ்திரா
சோற்றுக்கற்றாழை பூச்சிவிரட்டி
வேப்பங்கொட்டை பூச்சிவிரட்டி
மஞ்சள் கரைசல்
இஞ்சி கரைசல்
இஞ்சி,பூண்டு,மிளகாய் கரைசல்
துளசி இலை கரைசல்
பப்பாளி இலை கரைசல்
வசம்பு– பூச்சிவிரட்டி
பொன்னீம் பூச்சிவிரட்டி
ஒட்டு திரவம்
விளக்குப் பொறி
இனக்கவர்ச்சி பொறி
ஒட்டும் பொறி

தசகவ்யா
தசகவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால் பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது. இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

தசகவ்யா தயாரிக்கும் முறை

தசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய்களையும்விரட்டக்கூடிய ஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக் கொள்ளவேண்டும். அவைகளானவை.
ஆடாதொடை (Adhatoda vasaca)1 kg.
ஊமத்தை (Datyra metal) 1 kg.
நொச்சி (Vetex negundo) 1 kg.
வெள்ளை எருக்கு (Calotropis gigantea) 1 kg.
வேப்பிலை (Azadirachta indica) 1 kg.
மேலே கூறிய தழைகளையும் பசுவின் கோமியத்தையும் 1 : 1.5 என்ற விகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக் தொட்டியில் ஊறவைக்க வேண்டும். 11 நாட்கள் கழித்து தழைதனை தனியாகப் பிரித்தெடுத்து விட்டு சாறுதனை தசகவ்யா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

தயாரித்த சாறுகளை பஞ்ணகவ்யாவில் 1:3 என்ற விகிதத்தில் கலந்து 25 நாட்களிக்கு வைத்திருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை கிளறிவிட வேண்டும். 25 நாட்களுக்குப் பிறகு 3 சதவீதக் கரைசலைத் தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

பயன்கள்
1. தசகவ்யா தெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து பயன்களையும் பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.
2. பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி,சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது.
3. தசகவ்யா தெளிப்பதால் காய்கறிப் பயிர்கள், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
4. தசகவ்யா கரைசலை தெளிப்பதால், மாவுப்பூச்சி உள்ளிட்ட எந்தப்பூச்சி, வண்டின் தாக்குதலும் கிடையாது

பீஜாமிர்தம் தயாரிக்க தேவையான பொருட்கள்

தண்ணீர் 20 லிட்டர்,
பசு மாட்டு சாணி 5 கிலோ,
கோமியம் 5 லிட்டர்,
சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்,
மண் ஒரு கைப்பிடி அளவு.

தயாரிக்கும் முறை
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டு சாணி 5 கிலோ,கோமியம் 5 லிட்டர்,சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்,மண் ஒரு கைப்பிடி அளவு. இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இதுதான் பீஜாமிர்தம்

பீஜாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?
விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

பீஜாமிர்தம் நன்மை என்ன?
1.வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.
2 எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

அக்னி அஸ்திரம் தயாரிக்க தேவையான பொருட்கள்

புகையிலை அரை கிலோ,
பச்சை மிளகாய் அரை கிலோ,
வேம்பு இலை 5 கிலோ பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர் மற்றும் மண்பானை.

தயாரிக்கும் முறை
பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர்,புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது ) போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும். இறக்கியபிறகு, பனையின் வாயில் துனியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?
100 லிட்டர் நீரில், 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தல் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.

அக்னி அஸ்திர நன்மைகள் என்ன?
1. பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.
2. எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

பிரம்மாஸ்திரம் தயாரிக்க தேவையான பொருட்கள்

நொச்சி இலை 10 கிலோ
வேப்பம் இலை 3 கிலோ,
புளியம் இலை 2 கிலோ, 1
0 லிட்டர் கோமியம் மற்றும் மண்பானை.

தயாரிக்கும் முறை
நொச்சி இலை 10 கிலோ, வேப்பம் இலை 3 கிலோ, புளியம் இலை 2 கிலோ. இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும்.

பிரம்மாஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?
100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1 ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம்.

பிரம்மாஸ்திரம் நன்மைகள் என்ன?
1.அசுவனி மற்றும் பூஞ்சாண் நோய்களை கட்டுப்படுத்தும்.
2 எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

மண்பானை செடித்தைலம்  தயாரிக்க தேவையான பொருட்கள்

வேம்பு இலை 50 கிராம்
எருக்கு இலை 50 கிராம்
நொச்சி இலை 50 கிராம்
பொடி செய்த பயறுவகைகள் (ஏதேனும் ஒரு பயறு) 50 கிராம்
தயிர் அல்லது அடர்த்தியான மோர் 1 லிட்டர்
தண்ணீர் 1.5 லிட்டர்

தயாரிக்கும் முறை:​
முதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும். பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும். இவ்வாறு 15-20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.

அரப்பு மோர் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்

அரப்பு இலை(அ) உசிலை மர இலை-2 கிலோ.
புளித்த மோர்-5 லிட்டர்.
மண்பானை.

தயாரிக்கும் முறை
நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானையில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும்.

அரப்பு மோர் கரைசல் எப்படி பயன்படுத்துவது?

ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.

அரப்பு மோர் கரைசல் நன்மைகள் என்ன?
அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.

குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.

அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.

அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.

வேம்பு புங்கன் கரைசல் தேவையான பொருட்கள்

வேப்பெண்ணை ஒரு லிட்டர் புங்கன் எண்ணை ஒரு லிட்டர் கோமியம் (பழையது) பத்து லிட்டர் காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.

நீம் அஸ்திரா

தேவையான பொருட்கள்
நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ
நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர்
வேப்பங்குச்சிகள் மற்றும் வேப்ப இலை 10 கிலோ

தயாரிப்பு முறை:
இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.

சுக்கு அஸ்திரா எப்படி தயாரிப்பது?

சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கும் ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல்

பூண்டு ஒரு கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.

இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும். இதன்மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும். இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

 

பசு மாட்டுச் சிறுநீரை எத்தனை நாட்கள் வரை சேமிக்கலாம்?

‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. பசுமாட்டுச் சிறுநீரை  100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்கு காலதாமதமாக பயன்படுத்துகிறோமோ… அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும். ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ… அவ்வளவு விரைவாக பயன்படுத்தி விடவும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்தி விடுங்கள். இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும். பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.’’

-ஜீரோபட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர்