தலைவலிக்கு உடனடி இயற்கை வைத்தியம்

தலைவலி-thamil.co.ukதலைவலி தீர பத்து ஆலோசனைகள்

‘ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி. தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். கீழ்க்கண்ட எளிய வழிகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள். தலைவலி உங்கள் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காது.
1. கண்ணுக்கும் தலைவலிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கண்ணுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் போது தலைவலி வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கண்ணின் பார்வை குறைவு படும்போது கண் மருத்துவரை அணுகி கண்ணாடி போட்டுக் கொள்வது முக்கியமானது.

2. படுத்துக் கொண்டு படிக்காதீர்கள், பயணத்தின் போது படிக்காதீர்கள், மிக அதிக வெளிச்சம் – மிகக் குறைந்த வெளிச்சம் ஆகிய சூழலில் படிக்காதீர்கள், மிகச் சிறிய எழுத்துரு கொண்ட புத்தகங்களைப் படிக்காதீர்கள், தெளிவான எழுத்துக்களற்ற ஒளியச்சுப் பிரதிகளைப் படிக்காதீர்கள். இவை எல்லாமே கண்ணை அதிக அழுத்தத்திற்குள் தள்ளி தலைவலிக்கு அழைப்பு விடுக்கும்.

தொலைக்காட்சி பார்க்கும்போதோ, கணினியில் வேலை செய்யும்போதோ அறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். இருட்டறையில் இவற்றைச் செய்வது கண்ணை மிகவும் பலவீனப்படுத்தும். அதிக வெளிச்சமானவற்றை நேரடியாய்ப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3. கண்ணுக்கு அதிக வேலை கொடுக்கும் பணியெனில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கண்ணுக்கு ஓய்வு கொடுங்கள். காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தினால் அதை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை இருபது வினாடிகள் இருபது அடி தொலைவிலுள்ள பொருளைப் பாருங்கள். கண்ணின் மேல் வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி வைத்து கண்ணை இதப்படுத்துங்கள்.

கண்ணுக்கு பயிற்சி கொடுங்கள். கருவிழிகளை மேல், கீழ், இடம், வலம் என எல்லைகளுக்கு அசைத்தும், மூக்கை நோக்கிக் குவித்தும் பயிற்சி கொடுங்கள். இவையெல்லாம் கண்ணை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். தலைவலி வரும் வாய்ப்பும் குறையும்.

4. கண்ணைப் போலவே, பல்லும் தலைவலிக்கு காரணகர்த்தாவாகி விடும் வாய்ப்பு உண்டு. உங்கள் பல்லை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் சரியில்லாமல் இருந்தால் உடனே அதற்குரிய மருத்துவம் செய்யுங்கள்.

அடுத்தபடியாக காதைக் கவனியுங்கள். அதிக சத்தம் தலைவலிக்கு துணைவன். அதிக சத்தத்தை தவிர்க்க வேண்டும். சத்தமான சூழலில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் சத்தம் கேட்காதபடி காதில் எதையாவது மாட்டிக் கொள்தல் உசிதம்.

5. சரியான நேரத்தில் உண்ணுங்கள். ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். சிலருக்கு தயிர் சாதம் சாப்பிட்ட உடன் தலைவலி வரும் எனில் அதை விட்டு விடுங்கள். நிறைய கரட் சாப்பிடுங்கள். கண்ணுக்கு அது மிகவும் நல்லது. அதிலுள்ள விட்டமின் A கண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

caffeine- காஃபைன் மூலக்கூறுகளை விலக்கி விடவேண்டும். கோப்பி, குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவற்றில் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கும் தலைவலிக்கும் தொடர்பு இருக்கிறது என்பது வியப்பூட்டும் செய்தி. உடலில் தேவையான அளவு தண்ணீர் இல்லாமல் போகும் போது தலைவலி வெகுண்டெழுகிறது.

6. புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும். புகை மூளையில் மெல்லிய துளைகள் வழியே பயணிக்கும். தலைவலியை தருவிக்கும் முக்கிய காரணியாக புகையின் நிக்கோட்டின் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல தூசு கூட தலை வலி வருவிக்க வல்லது. எனவே சுத்தமான இடங்களில் நடமாட முயலுங்கள். வீட்டை தூய்மையாக வைத்திருங்கள்.

வாசனைப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையையும் தலைவலியையும் உண்டாக்கும். ஏதேனும் வாசனை உங்களை அசெளகரியப் படுத்துவதாய் நீங்கள் உணர்ந்தால் அதை நிச்சயமாய் விலக்கி விடுங்கள்.

7. தலைவலி வருமோ, வருமோ என கவலைப்படாதீர்கள். தலைவலியைக் குறித்தே நினைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பது உளவியல் உண்மை.

கவலை தலைவலியின் நெருங்கிய தோழன். கவலை வந்தால் கூடவே தலைவலியும் தோழனைப் பார்க்க வந்து விடும். எனவே மனதையும், உடலையும் இயல்பாக, இறுக்கமற்று வைத்திருங்கள். உங்களை எரிச்சலடையச் செய்யும் நிகழ்வுகளையோ, மனிதர்களையோ தவிருங்கள். யோகா, தியானம் போன்றவற்றைப் பின்பற்றலாம்.

8. இருக்கையில் நேராக அமராமல் இருப்பது கூட தலைவலியை தருவிக்க வல்லது. எனவே இருக்கையில் அமரும் போது சரியான முறையில் அமருங்கள்.

நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணிவதும், இதமான நிறங்களிலுள்ள ஆடைகளை அணிவதும் கூட தலைவலியைத் தவிர்க்க உதவும். வீட்டிலும் கூட அடர் நிறங்களைத் தவிர்த்து இதமான நிறங்களை சுவர்களுக்குப் பூசுவது சிறப்பானது.

9. அதிக வெயிலிலோ, அதிக மழையிலோ அலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பருவத்தின் முதல் மழை காற்றின் மாசோடு கலந்து தரையிறங்கும். அதை தலையில் வாங்காதீர்கள்.

சரியான தூக்க முறையைக் கடைபிடியுங்கள். அளவான தூக்கம் அவசியமானது. அதிக தூக்கமோ, குறைந்த தூக்கமோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

10. தூய்மையாய் இருங்கள். நன்றாக குளியுங்கள். குளித்தபின் தலையை நன்றாகத் துவட்டி விடுங்கள். அதற்காக டிரையர் -dryer வாங்கி உபயோகிப்பதைத் தவிருங்கள்.

ஆவி பிடித்தல் சைனஸ் போன்ற தலைவலிகளுக்கு சிறந்தது. மூச்சுப்பாதையை தெளிவாக்கி தலைவலியை தவிர்க்க அது உதவும். தினமும் ஒருமுறை ஆவி பிடிப்பது அத்தகையோருக்கு ஆசுவாசம் தரும்.

இந்த சிறு சிறு வழிகளைக் கடைபிடித்தால் தலைவலி வரும் வாய்ப்புகளை பெருமளவுக்குக் குறைக்க முடியும்.

 

தலைவலி-thamil.co.ukதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி இயற்கை வைத்தியம்

தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம். அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறையில் குணமாக்குங்கள்.

கிராம்பும் உப்பும் கலந்த கலவை
கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு
ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ்
தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

சூடான பால் அருந்துதல்
சூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

பட்டையை அரைத்துத் தடவுதல்
தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல்
சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

சந்தனத்தை அரைத்துத் தடவுதல்
சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல்
நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல்
சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

கால்களை வெந்நீரில் வைத்திருத்தல்
ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும். சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வரவேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல்
காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல்
தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல்
தலைவலி உடனடியாக நீங்க சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையை அரைத்துத் தடவுதல்
வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல்
தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்துவிட வேண்டும். இதற்குப் பதிலாக, விட்டமின் சி, விட்டமின் டி, விட்டமின் பி12, புரதம், கல்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியிலிருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நன்றாக தூங்குதல்
பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாததுதான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும்.

மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.இவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்

தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்

சுக்கை எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு உரசி நெற்றிப்பொட்டில் கனமாக பத்துப் போட வேண்டும். கொஞ்சம் தகதகவென்று எரியும். சிறிது நேரத்தில் தலைவலி பறந்துபோகும்.
கற்பூரவள்ளி இலையை எடுத்து சாறு பிழிந்து, அதனுடன் கொஞ்சம் நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கலக்கி நெற்றுப்பொட்டில் பத்து போட்டால் தலை வலி சரியாகும்.

நான்கு மிளகை தண்ணீர் விட்டு அரைத்து, கொஞ்சம் கற்பூரத்தூளை சேர்த்து நெற்றியில் பத்து போட்டால் தலைவலி சரியாகும்.

சிலருக்கு சைனஸ் காரணமாக தலைவலி வரும். அவர்கள் இரவில் தூங்கும்பொழுது தலையணையில் நொச்சி இலையை வைத்து தூங்கினால் நாளடைவில் தலைவலி சரியாகும். நொச்சி இலை சாறு எடுத்து, நல்லெண்ணெய் விட்டு நன்றாகக் காய்ச்சி, சூடு ஆறியதும் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் வெந்நீரில் குளிக்க வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று இரண்டு மாதம் வரைக்கும் செய்தால் சைனஸ் சரியாகும். தலைவலியும் சரியாகும்.

பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால், உடல் சூட்டால் உண்டாகும் தலைவலி நீங்கும்.

வெள்ளை எள்ளை எருமைப்பால் விட்டு அரைத்து, முன் நெற்றியில் பத்துப் போட்டு சூரியன் உதிக்கும்போது வரும் வெளிச்சத்தில் காட்டி வந்தால் ஒன்றைத் தலை வலி மூன்றே நாளில் சரியாகும்.

கொத்தமல்லிச் சாறில் சுக்கை இழைத்து நெற்றில் பற்றுப்போட்டால் தலைபாரம், தலைவலி குணமாகும்.

கொத்தமல்லிச் சாறை சந்தனப்பொடி குழைத்து பற்றுப் போட்டால் பித்தத்தால் ஏற்படும் தலைவலி சரியாகும். கொத்தமல்லியோடு சந்தனம், நெல்லி வற்றல் சேர்த்து தண்ணீரில் ஊற வைத்துக் குடித்தால் தலைசுற்றல் குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரையை மிளகு, சோம்பு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான தலை வலியும் தீரும்.

தூதுவளைக் கீரை (ஒரு கைப்பிடி) வெற்றிலை (ஒரு கைப்பிடி) சுக்குப்பொடி (25 கிராம்) மஞ்சள் (25 கிராம்) ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, பட்டாணி அளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இதில் ஒரு மாத்திரையை உள்ளுக்குச் சாப்பிட்டு, ஒரு மாத்திரையை வெந்நீரல் கரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால், தலைவலி, தலைபாரம், சைனஸ் போன்றவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

கொடிப்பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதைத் தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.

நல்வேளைக் கீரையை அரைத்து தலையில் வைத்துக் கட்டினால், நெடுநாள் தொல்லைதரும் தலைவலி குணமாகும்.

-களஞ்சியம்
-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
-பாட்டி வைத்தியம்