வாழும் நாட்டின் சூழ்நிலைக்கேற்ப உடலும் மாற்றம் பெறுகின்றது

ஒருவன் எந்த நாட்டில் எந்தச் சூழ்நிலையில் வாழ்கின்றானோ, அதற்கேற்றாற் போல அவன் உடலும் மாற்றம் பெறுகின்றது.

புண்ணியம் தேடிக் கொள்ளுதல். ‘ கடவுள் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவன் யாரையாவது இறைதூதர்களாக அவ்வப்போது அனுப்பிக் கொண்டேயிருப்பான். அப்படி அனுப்பட்ட சில இறைதூதர்கள் அவ்வப்போது நம் கண்களில் பட்டுவிடுவார்கள். பட்டுவிட்டால் நாம் புண்ணியவான்கள். ஏதாவதொருவிதத்தில் அவர்களுக்கு உதவி நாமும் புண்ணியம் தேடிக் கொள்ளலாம். ஒருவன் எந்த நாட்டில் எந்தச் சூழ்நிலையில் வாழ்கின்றானோ, அதற்கேற்றாற் போல அவன் உடலும் மாற்றம் பெறுகின்றது. இது இயற்கை உருவாக்கிய பொதுவான விதி. ஆனால் ஒருவன் எங்கு வாழ்ந்தாலும் அவனிடம் உள்ள ஆதார பயமென்பது ‘அப்பாற்பட்ட ஏதோவொன்று இருக்கின்றது’ என்பதாக அவன் மனம் நம்பத் தொடங்குகின்றது. அப்போது தான் ஆன்மீகம் விஸ்வரூபம் எடுக்கின்றது. வணங்கும் பொருட்கள் மாறலாம். வழிபாட்டுத் தன்மை கூட வேறுபட்டதாக இருக்கலாம். ஆனாலும் அவனுக்குள் இருக்கும் ஆதார பயம் மட்டும் சாவின் கடைசி நொடி வரைக்கும் தொடருகின்றது.

ஒரு மனிதனின் பயம் விலக அவன் பார்க்கும் பார்வைகள் ரொம்பவே முக்கியம். ஒன்றைப்பற்றி அறியாத போது தான் ஆதங்கம் அதிகமாக உருவாகின்றது. இந்த ஆதங்கம் தான் காலப்போக்கில் ஒவ்வொரு மனிதர்களுக்குக் கழிவிரக்கத்தை உருவாக்கி ஏக்கத்தை மட்டும் சுமந்து வாழும் மனிதர்களாக மாற்றி விடுகின்றது. அவனின் சக்தியை அவனால் உணர முடியாத போது எளிதாக “எல்லாமே விதிக்குள் அடக்கம்” என்பதான யோசனையில் போய் முடிந்து விடுகின்றது. முயற்சித்தேன் கைகூடவில்லை’ என்பதற்கும் ‘விதியிருந்தால் அது நடக்கும்’ என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் ஆன்மீகத்தின் ஆதார பலத்தைப் பற்றி உணர முடியும். “உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும் ஆசை வைக்காதே” என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச் சொல்கின்றது.

ஒரு வேளை அப்படியே மனித இனம் யோசித்திருந்தால் மின்சாரம் இல்லாத வாழ்க்கை அமைந்திருக்கும். சீரியல் பைத்தியமாக இருக்காளே என்று சம்சாரத்தைத் திட்ட வேண்டிய அவசியம் வந்திருக்காது. கணினியை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்தக் ‘கடவுள் ஆராய்ச்சி’ தொடங்கியிருக்காது. இந்த வரிகளை வாசித்திருக்க முடியாது. கல்வியறிவு வளர்ந்திருக்காது. ‘கண்டவர் விண்டிலர்’ என்ற சொல்லும் போதே “அதெல்லாம் சரிப்பா அதுக்குக் கொஞ்சம் அர்த்தத்தையும் சொல்லிட்டு போ” என்கிற தைரியம் பிறந்திருக்காது.

மனிதர்களின் ஆசைகள் ஒவ்வொரு சமயத்திலும் அவனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. உழைக்கத் தொடங்கினார்கள். தோல்விக்கு நாமே காரணம் என்று உணர்ந்து மேலும் உழைத்துக் கொண்டே இருந்தார்கள். ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்து வர மொத்த சமூகத்தின் வேகமும் நாலு கால் பாய்ச்சலில் பயணிக்கத் தொடங்கியது.

எந்த விஞ்ஞானிகளும் கடவுளைப் பற்றி யோசிக்கவில்லை என்பதை விட அதனைப் பற்றி நினைத்துப் பார்க்க நேரமும் இருக்கவில்லை. லட்சக்கணக்கான சிந்தனைகளின் செயல்பாடுகளின் இன்று உலகம் முழுக்க உள்ள 700 மில்லியன் ஜனத்தொகையை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. பல வசதிகளைத் தந்துள்ளது. ‘வாழ்க்கை என்பது அழகானது’ என்பதை உணரவும் வைத்துள்ளது.

அழியப் போகும் உடம்பை நினைப்பதை விடச் சேர்த்து விடத் துடிக்கும் சொத்தின் மேல் பற்றுதல் உருவாகி உள்ளது. படபடப்பு என்பது இயல்பான குணமாக மாறியுள்ளது. அறநெறிகள் அவசியமில்லை என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. பாவமன்னிப்பு மூலம் சமன் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது. நாம் வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக்கு நாகரிகம் கற்றுத் தந்துள்ளது. இளிச்சவாய்த்தனமாக இருக்காதே என்று அறிவுரை சொல்லும் அளவிற்கு மாறியுள்ளது.

ஆன்மீகத்தைப் பற்றி அதன் மொத்த கூறுகளைப் பற்றி அதன் தன்மைகளைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? போன்ற ஆராய்ச்சி கூடத் தேவையில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் வணங்கித்தான் தீர வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்க அவர் அரசியல்வாதி அல்ல.

சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் அவர் கேட்கவில்லை. இந்த உடையில் தான் வரவேண்டும் என்று சொல்வதற்கு அவர் தனியார் கல்விக்கூடம் நடத்தும் நபர் அல்ல. அண்டா நிறைய பாலைக் கொண்டு ஊற்றினாலும், அல்வா போன்ற பட்சணங்களை படைத்தாலும் அவர் மயங்க அமைதிப்படை நாயகன் அல்ல. உங்கள் பாவக் கணக்கை பட்டியலிட மடிக்கணினி ஏதும் வைத்திருப்பதாக தெரியவில்லை.

ஆனால் உங்கள் மனதில் ஓவ்வொன்றுக்கும் தொடக்கம் இருப்பதைப் போல முடிவும் உண்டு என்பதையும், எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்பதையாவது புரிந்திருக்க தெரிய வேண்டும். குறிப்பாக உங்களை நீங்களே அறிந்திருக்க வேண்டும். உங்களின் அளவற்ற சக்தியை உணரத் தெரிந்திருக்க வேண்டும்.

“முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்” என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். அப்படியே கிடைக்காத போதும் கூட என் கடமையை சரியாகத் தான் செய்துள்ளேன் என்ற சுய நிர்ணயத்தில் கம்பீரமாக வாழ கற்று இருக்க வேண்டும். குறிப்பாக மெய்யியல் ஆன்மீகத்தையாவது புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஒவ்வொருவரும் தனது ஒரு நாள் வாழ்க்கையை எத்தனை பேர்கள் உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்தச் சமயத்தில் யோசித்துப் பாருங்களேன். இரவில் தூங்கத் தொடங்கும் வரையிலும் தான் உங்கள் ஆசை, காமம், குரோதம், வன்மம், பொறாமை, எரிச்சல் போன்றவர்கள் பங்காளிகளாகப் பல் இளித்துக் கொண்டு உங்களுடன் தான் இருக்கின்றார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் உங்களின் உயிர் எங்கே இருக்கும்? அந்தரத்திலா? ஆள் அரவமற்ற இடத்திலா?

காலையில் விழிப்பு வந்தால் மட்டுமே நீங்கள் உயிருடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். பாதித் தூக்கத்திலே பரதேசம் போனவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றோம் தானே? ஆனால் நாம் தினந்தோறும் பயத்துடன் தான் படுக்கச் செல்கின்றோமா? அடுத்த நாள் ஆட்டையைப் போடும் கணக்கோடு தானே தூங்கச் செல்கின்றோம்.

இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள்.உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். அதை உங்களால் உணரத் தெரியாவிட்டால் ஆன்மீகத்தின் மீது தவறல்ல. நீங்கள் வளர்த்துக் கொண்டுள்ள தகுதியற்ற ஆசையே காரணமென்பதை உணர்ந்து கொள்ளவும். எல்லாமே ஏதோவொரு வகையில் தொடர்பு தான். தேடிப்பபாருங்க. நீங்க தான் இந்த பயணத்தை தொடக்கத்தில் இருந்து வாசிக்கத் தொடங்க வேண்டும்.

நன்றி -ஜோதிஜி திருப்பூர்-
சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars